மூவர் கூட்டணி இரவு சோர்வாக வீடு வந்து சேர்ந்தது. கூடத்தில் ஒரு பக்கம் டிவி ஓடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் கபிலன் கையில் க்ளாஸ் இருந்தாலும் போன் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
மூவரையும் பார்த்து நிலைமை தெரியாமல் “அம்பிகா மவ ஊருக்கு போறா நம்மாள் தான் ஒருத்தன் கூட்டிட்டு போய் விட்டு வரான் ”என்று பூமி ஊருக்கு போகும் தகவலை சொன்னார்.
அருண் “என்ன விஷயமாம்”
“ஏதோ பாட்டு கத்துக்க போகுதாம். என்னா அடம் மத்தியானம். அவ வண்டியில தான் போவேன்னு சமாதானம் செய்யவே முடியல”
அருண் “ஓ” என்று யோசித்தான்
கபிலன் “அம்மாவுக்கும் பொண்ணுக்கும் பேச்சுவார்த்தை இல்லை போல, என்னடா காதல் மன்னா உனக்கு ஏதாவது தெரியுமா”
பதிலே வரவில்லை.
மற்றவர் இருவரும் அறைக்கு செல்ல
அருண் கபிலன் அருகில் வந்தவன் “அதிகம் குடிக்காதீங்க” என்று அவர் கையில் இருக்கும் கிளாசை பிடுங்கினான்.
கபிலன் “டேய் டேய் டேய்” என்று பதறினார்
அருண் “மூச். போய் தூங்குங்க” அதிகாரம் செய்தான்.
“ தூக்கம் வராதுடா தம்பி”
“ அதெல்லாம் வரும் மாத்திரை போட்டு தூங்குங்க”
அந்த இரவின் கணம் தாளமுடியாமல் இருந்தது எல்லோருக்கும்.
அடுத்த நாள் காலை தமயந்திக்கு தலைவலி சரியாகுவேனா என்றது.
எதுவோ அவளை அழுத்தி மண்ணுக்குள் தள்ளிவிடுவது போல ஒரு அழுத்தம். முந்தின நாள் பூமியின் அழுகை, அடம், சோகம் எல்லாம் இவளையும் தாக்கி இருந்தது.
தூங்காத கண்கள்,தூக்கத்தை அடக்கி படம் பார்த்தது, வெயிலில் அலைந்தது எல்லாம் சேர்ந்துக்கொள்ள மனம் குதப்பிவிட்ட குளம் போல இருந்தது.அந்த குழம்பிய மனதுடனே கல்லூரி வந்து மூவரையும் பார்க்க அவர்கள் நடை, உடை, பாவனை எதுவுமே அவளை ஆச்சரியப்படுத்தவில்லை.
இன்ஜினியரிங் படிக்க இருந்தவளை அதெல்லாம் ‘வேஸ்ட்’ என்று சொல்லி பி.காம் சேர்த்தார்கள். காமெர்ஸ் புரிந்துகொண்டு வருவதற்குள் அவளே ‘ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்’ என்ற வெறியில் எம்.பி.ஏ என்ற சூனியத்தை அவளுக்கு வைத்துக்கொண்டாள்.
படிப்பும் சரி, கூட இருப்பவர்களும் சரி அவளைப் போல இல்லை. இரண்டுமே ஏதோ எட்டா கனி எட்டி பிடித்துக்கொண்டு நிற்பது போல இருக்கிறது.
பூமி இல்லாத முதல் நாளே இப்படி சோர்ந்துவிட்டாளே!
அவள் இல்லாமல் எப்படி முப்பது நாள் கழிக்க போகிறாள் இவள்!
தமயந்தி பி.காம் படிக்க சேர்ந்த கல்லூரியிலும் யாருமே அவளை போல் இல்லை. கல்லூரி சேர்ந்த ஓரிரு நாட்களில் ‘யாருமே பேசமாட்டேங்குறாங்க, காலேஜ் பிடிக்கல’ என்று வீட்டில் சொல்லியதற்கு அவள் அம்மாவோ ‘படிக்கத்தானே போன படி’ என்றார். மேலும் இவள் ஏதேனும் சொல்லப்போனால் பொண்ணுங்க மட்டும் படிக்கிற காலேஜ்ல சேர்த்துவிட்டதுக்கே உனக்கு இப்படி இருக்கா என்று கேட்டார்கள். அமைதியாகிவிட்டாள். பொண்ணுங்க மட்டுமே என்றாலும் அவளை அங்கிருக்கும் போர்ட் பெஞ்சு டேபிள் போல கண்டுகொள்ளாமலே போவோரை இவள் என்னவென்று இழுத்துவைத்து பேசுவாள். இவள் முயன்று சிரித்தாலும் கூட, எப்போதும் தனிமையில் இருக்கும் பேச தயங்கும் பெண்ணை யாரும் சீண்டவும் இல்லை. வகுப்பில் கடைசி பெஞ்சில் தனியாக நோட்டுப் புத்தகங்களுடன் அமர்ந்திருப்பவள் பக்கத்தில் அவளைப் போலவே வந்து அமர்ந்தவள் பூமி மட்டும்தான். பூமிக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசம் பூமி மற்றவரை ஒதுக்கினாள் என்றால் மற்றவர்கள் தமயந்தியை ஒதுக்கினார்கள்.பூமியே ஓரிரு வார்த்தை பேசி நட்புக்கரம் நீட்ட தமயந்தி அதைப் பிடித்துக் கொண்டாள்.
அந்த கல்லூரியில் படிக்கவந்த நிறைய பேருக்கு பள்ளியில் இருந்தே நட்பு வட்டம் இருக்க, இவளை போல வெளியில் இருந்து வந்தவர்கள் சொற்பமே. அவர்களும் சுலபமாக மற்றவருடன் கலந்து விட இவளால் யாரிடமும் ஒன்ற முடியவில்லை.
பூமி ஒரு நாள் இவளிடம் டிக்கெட் ஒன்றை காட்டி “இந்த மியூசிக் ஷோ போகலாமா வரியா” என்று கேட்க இவள் “நான் அதெல்லாம் போனதில்லை” என்றாள். உடனே பூமி “அப்போ வேற எங்கே போகலாம் சொல்லு” என்று கேட்க இவள் “பீச் போலாமா” என்று கேட்க அன்று தொடங்கியது தோழிகள் இருவரின் ஊர் சுற்றல்.
தமயந்திக்கு காலேஜ் வாலிபால் டீம்மில் சென்டர் பிளேயர் இடம் கிடைக்க வாலிபால் கோர்ட்டில் பந்து எந்த திசையில் போனாலும் விடாமல் இவள் தடுத்து அடிக்கும் அடியில் மொத்த காலேஜுக்கும் அவள் மேல் மயக்கம் உண்டானது. அழகில், பணத்தில் குடும்பப் பெயரில் பளிச்சிடும் அழகிகள் மத்தியில் தனது திறமையில் மின்னினாள் தமயந்தி.கூடவே பூமியும் அவள் அம்மாவும் அவளை மெருகேற்ற அவளையும் அறியாமல் அழகானாள், அவளையும் அறியாமல் நிறைய பொறாமைகளை சம்பாத்தித்தாள்.
பூமிக்கு ஊர் சுற்ற பிடிக்கும் என்றால் தமயந்திக்கு காலாற நடந்து ஊரை சுற்ற பிடிக்கும். பூமிக்கு ஏதேனும் ஒரு கை வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். தமயந்திக்கு காசு பணம் வீட்டில் கேட்பது சங்கடம். இருவரும் வார இறுதி நாட்களில் அம்பிகாவின் ஆடிட்டிங் ஆபீஸில் சின்ன சின்ன அவர்களுக்கு தெரிந்த வேலைகள் பார்த்துக்கொடுக்க அம்பிகா இருவருக்கும் மாதம் சொற்ப பணம் ‘பாக்கெட் மனி’யாக கொடுத்தார்.
பூமிக்கு கூடை பின்னுவது தொடங்கி உள்ளனில் கை வேலை செய்வது, துணிகளுக்கு எம்ப்ராய்டரி செய்வது, துணியில் பெயிண்டிங் செய்து அதை சுடிதார் தைப்பது என்று ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பாள்.
பூமி செய்யும் கைவினைகளை அணிந்து பிரகடனப்படுத்துவது தான் தமையந்தியின் வேலை.
தமயந்திக்கு பிடித்த பாஸ்கெட் பால் விளையாடுவதற்கு ஓர் விளையாட்டு அகாடமி அறிமுகம் செய்தாள் பூமிகா.தமயந்தி விளையாடுவதை பார்த்த அந்த கோச் அவர் ஸ்போர்ட்ஸ் அகாடமிலேயே அவளுக்கு ஒரு பார்ட் டைம் ஜாப் போட்டு கொடுத்தார்.மாலை வேளை ஒருமணிநேரம் ஸ்கூல் பிள்ளைகளுக்கு பாஸ்கெட் பால் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் வகுப்பில் பி.காம் முடித்து அடுத்து என்ன செய்வது என்ற தலைப்பு வர வகுப்பில் அனைவரும் அவரவர் ஒவ்வொன்றை சொல்ல பூமி அவள் அப்பா அம்மாவை போல ஆடிட்டர் ஆகுவேன் என்றாள்.தமயந்திக்கோ வார இறுதியில் அடுக்கும் பைல்கள் மற்றும் அந்த ஆபிஸ் பார்த்தே ஆடிட்டர் ஆவது கஷ்டம் என்று தோன்றிவிட என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி உண்டானது.
இதற்கிடையில் அவர்கள் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் துறை சேர்ந்த பெண்ணொருத்தி தமயந்தியை அவர்கள் ஆரம்பிக்கவிருக்கும் ஆன்லைன் ஸ்டோருக்கு மாடலிங் செய்ய கேட்டாள் “நீ ஜஸ்ட் நாங்க கொடுக்கிற டிரஸ் ஒவ்வொண்ணும் போட்டு ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து நின்னா போதும் மேக்கப் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”
பூமியோ “எவ்ளோ பே பண்ணுவீங்க ” என்று கேட்க
அந்த ஃபேஷன் டிசைனிங் பெண் “ஆக்சுவலி எங்ககிட்ட இப்போ பெருசா பட்ஜெட் எல்லாம் இல்ல. போட்டோ ஷூட் அன்னிக்கு லஞ்ச், தமயந்தியை பிரிப்பர் செய்ய பார்லர் செலவு மட்டும்தான் எங்களால பார்த்துக்க முடியும் ஆனா கண்டிப்பா நாங்க ஸ்டோர் டெவெலப் ஆன பின்னாடி பே பண்றோம்” என்றாள்.
அவள் பேச்சை கேட்ட தமயந்தி சட்டென “சரி நான் செய்றேன்” என்று ஒத்துக் கொண்டாள்.
பூமி “நம்ம ஏதாச்சு பேமென்ட் வாங்கிருக்கணும் தம்மு”
தமயந்தி “பாவம்டி நாமதான் என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கோம். அவங்களாவது எதோ செய்றாங்கல்ல அதுக்கு நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்ல” என்றாள்
பூமி “அதுவும் சரிதான். நீ வேற என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்க உனக்கு இந்த மாடலிங் கிளிக் ஆகலாம்” என்றவள் தமயந்தியை ஸ்பா, மசாஜ், ஸ்கின் ட்ரீட்மென்ட் என்று அழைத்துச் சென்று ஒருவழி செய்துவிட்டாள்.
போட்டோ ஷூட் ஓர் விடுமுறை நாளில் அந்த ஃபேஷன் டிசைனிங் செய்யும் பெண் வீட்டிலேயே நடந்தது. அழகான இரண்டடுக்கு வீட்டில் ஒரு அறையில் போட்டோ ஷூட்டிற்கு செட் எல்லாம் அமைத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் ஆடையும், அணிகலன்களும் புகைப்படம் எடுக்கும் பையனின் திறமையும் பூமியை கவர்ந்ததென்றால் தமயந்தியை கவர்ந்தது அந்த பெண்களின் அம்மாவும் அப்பாவும் தான்.மாடலிங் செய்ய தமயந்தியை அணுகியவள் தங்கை என்றாலும் அவளது அக்காவும் டிசைனர். அவள் படித்து முடித்துவிட்டு வீட்டில் டிசைனிங் செய்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் அவள் தைத்த கவுன்களை விற்க, விற்பனை சூடு பிடிக்கவும் தனியாக அவர்கள் டிசைன்களை விற்கவே வெப்சைட் செய்யப்போகிறார்கள். இவர்கள் பெற்றோர் இருவரும் பெரும் வாகன உற்பத்தி நிறுவனத்தின் டைரக்டர் மற்றும் வைஸ் பிரசிடெண்ட். பெண்களின் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கும் பெற்றோர் மீது ஓர் மரியாதை உண்டானது. இதில் தந்தையை காட்டிலும் தாய் பெரிய போஸ்டிங்கில் இருக்கிறார் என்று தெரிய வந்தபின் அந்த ஆன்டி எந்த அலட்டலும் இல்லாமல் இவர்களுக்கு சாப்பாடு பரிமாறியதை வியப்பாக பார்த்தாள். அவரோ தமயந்தியின் உயரத்தையும் அவள் அழகையும் புகழ்ந்தார். ஸ்கூல், காலேஜில் பிரின்சிபால் மேடம்களிடம் இருக்குமே ஓர் கம்பீரம் அது போல ஒரு கம்பீரம் இந்த ஆண்டியிடம். அந்த கம்பீரத்தை ரசிக்க ரசிக்க அவளையும் அறியாமல் கேட்டாள் “ஆன்ட்டி நீங்க என்ன படிச்சுருக்கீங்க”
அவர் “நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன்டா” என்றார்.
தமயந்திக்கு சட்டென்று ஒரு ஞானோதயம்.
அந்த போட்டோ ஷூட் முடிந்து பூமியின் வீட்டை அடைந்ததும்
தமயந்தி “பூமி நான் எம்.பி.ஏ படிக்கவா? நானும் அந்த ஆன்ட்டி மாதிரி தைரியமா கம்பீரமா இருக்கணும்”
பூமி “பண்ணு தம்மு”
தமயந்தி “எம்.பி.ஏ படிக்கணும்னா என்ன பண்ணனும்”
பூமி “பிஸ்னஸ் ஸ்கூல்ஸ்ல எம்.பி.ஏ படிச்சாதான் நல்ல வேல்யூ தம்மு. அங்க படிக்க என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கும்.அதை க்ராக் பண்ணனும். அங்க வாங்குற மார்க் பொறுத்து காலேஜ்ல கூப்பிட்டு இன்டர்வியூ வைப்பாங்க, அதுல செலக்ட் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் காலேஜ்ல நல்ல நல்ல பிளேஸ்மெண்ட்ஸ் எல்லாம் வரும் அதுல வேலை வாங்குனா லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்”
தமயந்தி “அப்போ எனக்கு அதுதான் வேணும்” முடிவு செய்தாள்.
அடுத்து எம்.பி.ஏ படிக்க ஆசைப்படுவதாக வீட்டில் சொல்ல அவள் அம்மாவோ “உங்க அப்பனை போல நீயும் ஏமாத்துற பாத்தியா. ஒழுங்கா டிகிரி படிச்சிட்டு வா, இங்க துணி கடை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேர்த்து புதுசா ஒன்னு திறந்திருக்காங்க.பில்லிங்ல உட்கார்ந்தா இருபதாயிரம் ரூபாய் சம்பளம் தராங்க.கூடவே கரஸ்ல எம்காம், பி.எட் படி டீச்சராகலாம். இப்போல்லாம் பிளஸ்டூ டீச்சருங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்க தெரியுமா. அதுவும் லட்ச ரூபாய் சம்பளம்தான், வந்து அந்த வேலைய பாரு” மிரட்டினார்
தமயந்தி “சரிமா” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அவர் ப்ரைமரி ஸ்கூல் டீச்சர், அவளை ப்ளஸ்டூ டீச்சர் ஆக்க பார்க்கிறார். ஆனால் அவர் இரண்டாவது மகள் மட்டும் அவள் இஷ்டப்படி டாக்டருக்கு படிக்கலாம்.
அவள் அம்மா கணவனை வெறுக்கும் பயணத்தில் கூடவே இவளையும் சேர்த்து வெறுக்க தொடங்கிவிட்டார். அம்மா பிடிக்குமா? அப்பாவ பிடிக்குமா? கேள்வியில் அப்பா பிடிக்கும் என்று சொல்லிய மகள் அப்பா போலவே ஆகி விடுவாளோ என்ற பயத்தில் இருக்கிறார். இருந்துகொள்ளட்டும். அவள் அவளால் முடிவதை செய்யத்தான் போகிறாள்.
தமயந்தி நுழைவு தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்க சவால்கள் ஒவ்வொன்றும் புலப்படத் தொடங்கியது.ஒவ்வொன்றையும் எதிர்கொள்ளவும் ஒவ்வொரு விதத்தில் தயாரானாள். தேர்வுகளுக்கான கேள்விகளே புரிந்துகொள்ள கடினமாக இருக்க கோச்சிங் செல்ல தொடங்கினாள். அதற்கான பணம் சம்பாதிக்க பார்ட் டைம் வேலைகளுக்கு சென்றாள்.வேலை செய்வதெல்லாம் அவளுக்கு கடினமாக இல்லை. பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் இருந்தே ஏதேனும் ஒரு வேலை செய்துக்கொண்டுதான் இருக்கிறாள்.மாலதி போல அவள் அம்மா போல அவளை வார்த்தைகளில் நோகடிக்கும் சிலரால் சோர்ந்து போய்விடுவாள்.அப்போதெல்லாம் பூமிதான் அவளின் ‘பூஸ்டர்’.
பூமியின் ‘சியர் அப்’ செய்யும் விதம் விலையுயர்ந்ததாக இருந்தாலும் தோய்வடையச் செய்யும் காரணிகள் எல்லாம் சீக்கிரம் விரட்டிவிடும் வலிமை கொண்டதாக இருக்கும்.
தமயந்திக்கு சொற்பமே நண்பர்கள் என்றாலும் அவர்கள் அவள் முன்னேற்றம் விரும்புவர்களாகவே இருந்தார்கள், வாலிபால் டிமில், பேஷன் டிசைனர் அக்கா தங்கை, அவளை விதவிதமாக ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும் அந்த போட்டோகிராபர் பையன், அவள் கோச்சிங் சென்டரில் தலையில் கொட்டி கொட்டியே சொல்லிக்கொடுக்கும் அண்ணன்கள் எல்லோரும் “கமான் தமயந்தி உனக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் உறுதி” என்று சொல்லியே அவளுக்கு ஊக்கமளித்தனர்.
பி.காம் மூன்றாம் ஆண்டு நிறைவடையும் நேரத்தில் ஒரு பெண்மணி தமயந்தியை அணுகி அவர்களின் புது ப்ராண்டிற்க்கு மாடலிங் செய்ய கேட்டார். இவளோ தேர்வு நேரத்தில் கவனசிதறல் வேண்டாம் என முடியாது என்று சொல்லிவிட்டாள். அந்த பெண்மணியும் நிலமை புரிந்துகொண்டு ‘கொஞ்ச நாள் காத்திருப்பேன்’ என்று சொல்லிவிட்டு சென்றார்.தமயந்தி நுழைவுதேர்வில் எடுத்த மதிப்பெண்ணுக்கு கிரேட் பிசினஸ் ஸ்கூல் இன்டர்வியூ வர அதில் பங்கேற்று ஸ்காலர்ஷிப்புடன் சேர்க்கை பெற்றுவிட்டாள். அவள் மதிப்பெண்ணுக்கு அவர்களால் டியூஷன் பீஸ் மட்டுமே குறைக்க முடியும் ஆனால் சாப்பாடு செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அவள் பீஸ் கட்டியே ஆக வேண்டும் என சொல்லிவிட்டார்கள். அதுவும் பீஸ் அடுத்த 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று சொல்லிவிட மாடலிங் அழைத்த பிராண்ட் மேனேஜர்க்கு அழைத்து மாடலிங் செய்ய ஒத்துக் கொண்டாள்.
‘ஏபி நார்மல்’ பிராண்ட், ‘அப்நார்மல்’ஆக இருப்பவர்கள் அதாவது ரொம்பவும் நெட்டையாக, ரொம்பவும் குண்டாக, இல்லை சராசரியை விட உயரம் குறைவாக இருப்பவர்கள், ஒல்லி தேகம் உடையவர்கள், அகலமான பாதம் கொண்டவர்கள் நீண்ட கைகள் என்று கொஞ்சம் வித்தியாசமானவர்களுக்கான பிரத்தியேக ஆடை அணிகலன்கள் மற்றும் அவர்களின் விளையாட்டு தேவைகளை விற்கும் கடை. இந்த கடை புதிதாக தொடங்கவுள்ள மால்’லில் வரப்போகிறது. அவர்களுக்கு மாடலிங் செய்ய ‘இன்டர்நேஷனல் ரன்வே மாடல்’ காட்டிலும் ‘அட! நம்ம ஊர் பொண்ணு’ என்று பார்க்க வைக்கும் முகம் தேவை. அந்த முகம் கொண்ட பெண் ஏதேனும் ஒரு வகையில் ‘அப்நார்மலாக’ இருக்கவும் வேண்டும்.இப்படி அவர்கள் தேவைக்கு ஏற்ற நம் நெட்டையான ஆள் தமயந்தி இருந்துவிட அந்த பிராண்ட் மேனேஜர் காத்திருப்பிற்கு பலன் கிடைத்தது.
அவர்கள் அவள் கேட்கும் பணத்தைக் கொடுக்கிறேன் என்று சொல்ல மாடலிங் செய்து கொடுத்தாள். நான்கு சீசன் இரண்டு வருட ஒப்பந்தம். அவள் எம்.பி.ஏ முடிக்கவும் அந்த ஒப்பந்த முடியவும் சரியாக இருக்கும். இரண்டாம் ஆண்டு பீஸ் கட்ட ஓரளவுக்கு பணம் நேர் செய்ய முடியும் என்றாலும் அவள் படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடத்தில் இருந்தால் மட்டும்தான் அடுத்த ஆண்டு கல்லூரி ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
இத்தனை இம்சைகளுக்கு மத்தியில் மனமோ கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்து கொண்டு கண்களில் மட்டுமே பேசுபவன் மீது படிகிறது. இல்லையென்றால் எப்போதும் ‘சியர் அப்’ செய்யும் பூமி ஓய்ந்து போனதை நினைத்து இன்னும் சோர்வாகிறது.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.