என்ன செய்தால் அவள் தனிமை தீருமோ என்றிருந்தாள் தமயந்தி. வெகுநாள் கழித்து மறந்தே போய்விட்டது என்று நினைத்த தனிமை உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கி அவளை இம்சித்தது.
கல்லூரியில் சிரஞ்சீவி அவளை பேச வைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தான்.
சிரஞ்சீவி “தம்தம் இங்க பாரேன்”
தமயந்தி “கொஞ்ச நேரம் சும்மா இரேன். என்ன என் போக்குல விடுங்க ப்ளீஸ்”
சிரஞ்சீவி “சரி இந்தப்பக்கம் திரும்பு”
தமயந்தி அவர்கள் இடம் விட்டு வேறு பக்கம் உட்கார எழுந்தாள். சிரஞ்சீவி அவளுடனே அவனும் எந்திரிக்கவும் இவள் எரிச்சல் ஆனாள்.
இவர்கள் இருவரின் சலசலப்பு வகுப்பிற்குள் நுழைந்த சுஷ்மாவிற்கு தென்பட்டது.
சுஷ்மா கிண்டலாக “என்ன லாஸ்ட் ரோ ஒரே சத்தமா இருக்கு”
சிரஞ்சீவி “பேசுற ஒருத்தியும் பேசாம இருக்கா எங்கிருந்து மேம் சத்தம் வரும்”
சுஷ்மா சிரித்துக்கொண்டே “ஒரு இடத்துல உட்காருங்க தமயந்தி” என்றவள் அன்றைய வகுப்பிற்கு ஐந்து பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு பிசினஸ் ப்ரபோசல் தயார் செய்து எடுத்து வரணும். மதியம் மூன்று மணிக்கு அதை ப்ரெசென்ட் செய்யவேண்டும். அதற்க்கு இருபத்தைந்து மார்க் கொடுக்கப்படும் என்றாள்.
வகுப்பில் எல்லோருமே இப்போது சலசலக்க மாலதி பின்னாடி திரும்பி அருணை பார்த்து “அருண் நான் உன் டீம்” என்றாள்.
சிரஞ்சீவி சத்தமாக “நாங்க மூணுபேரும் தமயந்தி டீம்” என்றான்.
மாலதி தமயந்தியை பார்க்க தமயந்தி “நான் பூர்ணிமா டீம்” என்று பூர்ணிமாவை கைகாட்ட பூர்ணிமாவோ கண்களை கைகளை விரிக்க…
சுஷ்மா நடந்ததை எல்லாம் கவனித்துவிட்டு “பெட்டர் அவங்க அவங்க பக்கத்துல இருக்கவங்களோடவே டீம் சேர்ந்துக்கோங்க” என்றார்.
இவர்கள் ஐவரில் தமயந்தி தான் டீம் கேப்டன் என்று முடிவு செய்தனர்.
பிசினஸ் பிளான், அதை எப்படி எழுதவேண்டுமென்றும் எப்படி இருக்க வேண்டும் என்று சுஷ்மா டீம் டீமாக அவர்கள் மேஜை பக்கமே சென்று சொல்லிக் கொடுத்தபின் கடைசியாக தமயந்தி பக்கம் வந்து நின்றவள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு செல்ல, சிறிது நேரத்தில் மேஜைமீது இருந்த சுஷ்மாவின் போனுக்கு வரிசையாக மெசேஜ் வரும் சத்தம் கேட்டது. திரையில் அடுத்தடுத்து
“அன்பே”
“ ஆருயிரே”
“கண்ணே”
“கண்மணியே”
“மிஸ் யூ”
“மெசேஜுக்கு ரிப்ளை பண்ணுங்க மிஸ்”
என்று வர. திரையில் தெரிவதை பார்த்து தமயந்தி அதிர,அருண் சிரஞ்சீவியின் கன்னத்தை திருப்பி தொலைபேசி திரையை காட்டினான்.
“ இப்போ தெரியுதா இவங்க யாருன்னு” கேட்டான்.
வாட்சப் மெசேஜ் அதில் அனுப்புவது யார் என்று அவர்கள் போட்டோ தெரியும் அல்லவா அப்படி ஒரு முகம் தெரிந்தது.
சிரஞ்சீவி அந்த போட்டோவை உற்று பார்த்து சிரித்துகொண்டிருக்க
சுஷ்மா “சிரஞ்சீவி கிளாஸ்ல ஃபோன் யூஸ் பண்ணாதீங்க”
சிரஞ்சீவி “நான் இல்ல மேம், இது என் போன் இல்ல ” என்று கைபேசியை தூக்கி காட்டினான். அதிர்ந்தவள் ஓடி வந்து அவள் கைபேசியை பிடுங்கிக்கொண்டு “நான்சென்ஸ்” என்று திட்டிவிட்டு பதற்றமாக “ஓகே காய்ஸ் மூணு மணிக்கு பிரசன்டேஷன் கொடுக்கணும் ரெடி ஆகிடுங்க” அறிவித்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
புவன் ஆயாசமாக “பாவம் தேவா அண்ணா”
சிரஞ்சீவி தமயந்தியிடம் “பரவால்ல எங்க கூட பேசலைனாலும் சப்போர்ட்டாச்சும் பண்றியே”
தமயந்தி “எனக்கு மாலதியை பிடிக்காது”
நக்கலாக சிரித்தவன் சிரஞ்சீவி “பிடிக்கலன்னா ரியாக்ட் எல்லாம் பண்ணுமா இந்த ரோபோ”
அவனைப் பார்த்து முறைத்தவள் “அவ நிறைய என் ஃபிரெண்ட கஷ்டப்படுத்திருக்கா” என்றாள்
சிரஞ்சீவி “ஓ” என்று மட்டுமே சொல்ல
புவன் “அப்படி என்ன ஹர்ட் பண்ணா”
தமயந்தி மாலதி மீது இருக்கும் எரிச்சலில் “அவ பேசுறதே கடுப்பாகும். என்னமோ அவகிட்டதான் எல்லாம் இருக்கிற மாதிரி பேசுவா”
பூர்ணிமா “அப்படியா” என்ற ஆச்சரியப்பட
தமயந்தி “ஆமா அந்த காலேஜ்ல அவ இருக்கிற பக்கமே போகமாட்டேன்”
சிரஞ்சீவி “ஏன் பயமா”
தமயந்தி திரும்பவும் அவனை முறைத்து விட்டு “இல்ல மாலதிக்கு எப்பவும் அவதான் பெஸ்ட்ன்னு காமிச்சிக்கிட்டே இருக்கணும். யாரையாச்சும் கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கணும். நமக்கு அது கோவம் வரும். ஆனா அவங்க அப்பா ஏதோ பெரிய போலீஸ் ஆபீஸராம். நம்ம சக்திக்கு அவகூட எல்லாம் சண்டையும் போட முடியாது”
தமயந்தி சொல்வதைக் கேட்க மற்ற நால்வரும் புருவம் உயர்த்த
தமயந்தி தொடர்ந்தாள் “என் ஃபிரெண்ட் சொல்லுவா அவ பொறாமைல பொங்குற மாதிரி நாமளும் அவளை பார்த்து பொறாமைல பொங்கணும் நினைக்கிறா, அதுதான் இப்படி எல்லாம் செய்றா, கண்டுக்காதேன்னு சொல்லுவா அதனால கண்டுக்கமாட்டேன்” என்றாள்
புவன் திரும்பவும் பொறுமையாக “எப்படியெல்லாம் அவ உங்கள கஷ்டப்படுத்தியிருக்கா” கேட்டான்
தமயந்திக்கு மாலதி மீது இருந்த கோபத்திலோ பூமி இல்லாத தனிமையிலோ என்னவென்று தெரியாத உணர்வில் மனதில் உள்ளதை கொட்டினாள்
“அது எனக்கு தெளிவா தெரியாது என் ஃபிரண்டோட அப்பா அப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி இறந்து போயிருந்தாங்க. ஏதோ ஆக்ஸிடென்ட்ல தான் இறந்திருந்தாங்க போல, அது விசாரணைக்கு அவளும் அவங்க அம்மாவும் போலீஸ் ஸ்டேஷன்க்கு ஐ.ஜி ஆபீஸ்க்கு எல்லாம் போயிட்டு வருவாங்களா… அத மாலதி மட்டமா பேசுவா” என்று மேலோட்டமாக சொல்ல
அருண் “காலேஜ்ல கம்ப்ளைன்ட் பண்ணலையா நீங்க” அவள் கண்களை பார்த்து கேட்க
அவன் பார்வைக்கு தயங்கியவள் “இல்லை ஃபிரெண்டுக்கு அதை பத்தி வெளியில பேச இஷ்டம் இல்ல”
சிரஞ்சீவி “சோ அவள அவாய்ட் பண்ணிட்டு இருந்திருக்கீங்க” என்று கேட்க
தமயந்தி “ஆமா வேற என்ன பண்ண முடியும். கிளாஸ்ல எப்பவும் அவதான் ஃபர்ஸ்ட் வரணும்னு நினைப்பா ஆனா பூமி விட்டதே இல்ல. அவளும் வாலிபால் பிளேயர் தான் ஆனா அவளை ஸ்கோர் பண்ண நான் விட்டதில்ல…”
புவன் “மேல மேல பொறாமைபட விட்டிருக்கீங்க”
தமயந்தி “ஹீஹீ அது மட்டும் தான் முடிஞ்சது. நான் என்ன பேட்மேன், சூப்பர்மேனா அப்படியே பெருசா சண்டை போட, தண்டனை எல்லாம் கொடுக்க ”
பூர்ணிமா “யூ ஆர் வொண்டர் வுமன் பேபி”
அருண் சிரித்துக்கொண்டே “ஆமா, இப்படியுமா இருப்பாங்கன்னு ஆச்சரியப்பட வைக்கும் விமன்” என்றான் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நேர்பார்வை பார்த்துக்கொண்டே
படபடப்பில் தமயந்தி “இந்த கதை எல்லாம் போதும். ப்ராஜெக்ட் ப்ரபோசல் ரெடி பண்ணலாம் வாங்க ”
சிரஞ்சீவி “எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல”
தமயந்தி “எல்லோரும் சேர்ந்து செஞ்சா தான் மார்க் கிடைக்கும்”
சிரஞ்சீவி “அப்போ நீ செய் நான் வேடிக்கை பார்க்கிறேன்”
மற்றவர்களும் எதுவும் சொல்லாமல் செய்யாமல் அவர்களுக்குள் கதைகளை பேச இவளுக்கோ மார்க் வேண்டுமே
தமயந்தி “ஏய் எல்லாரும் ஒர்க் பண்றாங்க நாமளும் ஏதாச்சும் செய்லாம் ஐடியா குடுங்க”
சிரஞ்சீவி “சாப்ட்டு சாயந்திரமா யோசிப்போமா”
தமயந்தி “மூணு மணிக்கு ப்ரெசென்ட் பண்ணனும்”
பதிலே வரவில்லை
தமயந்தி“ இல்லை, இதெல்லாம் எனக்கு செய்ய தெரியாது” இழுத்தாள்
சிரஞ்சீவி “ அப்போ இனி நல்லா பேசுவேன். இப்படி ஒதுங்கி போகமாட்டேன்னு சொல்லு”
தமயந்தி“இது என்ன லூசுத்தனமால்ல இருக்கு, நான் பேசிட்டு தானே இருக்கேன்”
சிரஞ்சீவி “யப்பப்பா இது தேவைக்கு பேசுறது. நான் எப்பவும் பேசுன்னு சொல்றேன். மூணு நாளா உன் முகத்தை பார்க்க முடியல. எந்நேரமும் ஒதுங்கி ஒதுங்கி தனியே போற. எப்படி யார் கூடவும் பேசாம உன்னால இருக்க முடியுது? இப்படி இருக்காத. கொஞ்சமாச்சும் பேசு. சிரி ”
தமயந்தி“சரி. பேசுறேன். ப்ரபோசல் ரெடி பண்ணலாமா ப்ளீஸ்” கேட்டாள்
சிரஞ்சீவி“குட் இப்ப உன்ன பத்தி சொல்லு”
தமயந்தி“ஐயோ… சரி.நான் தமையந்தி ஊர் கும்பகோணம் போதுமா”
சிரஞ்சீவி“அப்பா அம்மா?”
தமயந்தி“அம்மா கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் அப்பா பேங்க்ல ஒர்க் பண்றார் ஒரு தங்கச்சி படிச்சிட்டு இருக்கா போதுமா”
பூர்ணிமா “ஃபிரண்ட்ஸ்”
தமயந்தி “ஃபிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க பூமிகா, நித்யா, நிரஞ்சனா, நிவேதா, அப்புறம் வாலிபால் டீம்லே எல்லாரும் ஃபிரெண்ட்ஸ் தான்”
புவன் “அப்ப நாங்க எல்லாம்”
தமயந்தி “ ஐயோ அருண், புவன், சிரஞ்சீவி,பூர்ணிமா எல்லாம் எனக்கு பிரெண்ட்ஸ்.போதுமா”
பூர்ணிமா “ குட். பிடிச்ச கலர் சொல்லு”
தமயந்தி“ அப்படி எல்லாம் எதுவும் இல்லை எல்லாமே புடிச்ச கலர்தான்”
புவன் “ புடிச்ச சாப்பாடு சொல்லு”
தமயந்தி“எல்லாமே பிடிக்கும்”
சிரஞ்சீவி “ பிடிச்ச ஊரு”
தமயந்தி“ எங்க ஊரு” என்றாள் ஆசையாக
பூர்ணிமா “ சரி எதுக்கு சோகமா இருக்க”
தமயந்தி“தெரியாது. என் முகமே இப்படித்தான்”
அருண் “ சாப்பிட போலாம் லன்ச் டைம் ஆகிடுச்சு” சொல்லவும் எல்லோரும் எழவும்
தமயந்தி“அடப்பாவிகளா உங்கள எல்லாம்” எரிச்சல் ஆனாள்.
வழக்கம்போல ஐவரும் அவரவர் சாப்பாட்டு தட்டுடன் மேஜை ஒன்றில் வந்து அமர்ந்தனர்.
சாப்பாட்டில் அன்று ஸ்வீட் ‘ட்ரை குலோப் ஜாமுன்’. தமயந்தி அதை எடுத்தவள் சிரஞ்சீவியை பார்த்து “வேணுமா” என்று கேட்டுவிட்டு வாயில் போட்டுக் கொண்டாள்.
சிரஞ்சீவி “ நான் டயட்ல இருக்கேன் ஸ்வீட் சாப்பிடமாட்டேன்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்
தமயந்தி “கேள்விப்பட்டனே உனக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு” அவளையும் அறியாமல் அவனை கிண்டல் செய்யும் பொருட்டு சொல்லிவிட அருண் சிரித்துக் கொண்டே தலையை இடமும் வலமும் அசைக்க
புவன் அவளையே பார்க்க
சிரஞ்சீவி “அப்படி என்ன கேள்விப்பட்ட”
தமயந்தி எக்காரணத்தைக் கொண்டும் பூமியை பற்றி இவர்களுடன் பேசக்கூடாது பூமிக்கும் இவர்களுக்கும் மத்தியில் நாம் இருக்கக் கூடாது என்ற முடிவில் இருந்தவள், தோழி இல்லாமல் இந்த ஊர் சலிப்பாக இருப்பதில் இவர்களிடம் புலம்ப தொடங்கிவிடுவோமோ என்ற பயத்தில் இருக்க..,சிரஞ்சீவி குரங்கு சரியாக குறி பார்த்து அம்பு எய்திவிட்டான்.
செய்த வினையை நினைத்து தலையில் அடித்துகொண்டவள் தமயந்தி லேசான குரலில் “உனக்கு ஸ்வீட் பிடிக்கும் கேள்விபட்டேன்”என்றாள்.
சிரஞ்சீவி “எனக்கு ஸ்வீட் வேணும்னா ஒன்னு பத்தாது கடையே வேணும்” என்றவன் கையை உயர்த்தி சொடக்கிட்டு ஒருவனை அழைத்து ஸ்வீட் பத்து எடுத்துட்டு வாங்க ஆணையிட்டான்.
அவனும் ஸ்வீட் கொண்டு வந்து கொடுக்கவும்
சிரஞ்சீவி “எடுத்துக்கோ.வேற என்ன வேணும் சொல்லு செய்லாம்” என்றான்
தமயந்தி அவனிடம் நக்கலாக “டெய்லி காலைல எட்டரை மணிக்கு எல்லாம் மெஸ் க்ளோஸ் பண்ணிடுறாங்க. ஒன்பதரை வரை திறந்து வைக்க சொன்னா லேட்டா வந்தா கூட சாப்பிடலாம்” என்றாள் .
புவன் “டன் செஞ்சிடலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
தமயந்திக்கு உள்ளுக்குள் ‘இவனுங்க என்ன இப்படி சீன் காட்டுறாங்க’ தோன்றிவிட குழப்பத்துடன் அருண் முகம் பார்த்தாள்
அருண் சிரித்த முகத்துடன் “சாப்பிட்டு வா ஒரு நல்ல ப்ராஜெக்ட் சொல்றேன் பிளான் பண்ணலாம்” என்றான்.
பூர்ணிமா சாப்பிட்டு முடித்தவள் “தமயந்தி இந்த காலேஜ் லைஃப் எல்லாம் திரும்ப எப்பவும் வராதுடா, எல்லோருக்கும் பயம், கோபம், சீக்ரெட்ஸ் எல்லாம் இருக்கும். ஆனா மத்ததெல்லாம் மறந்து கொஞ்சம் வாழலாம் ஹாப்பியா. எது நடந்தாலும் சேர்ந்து இருக்கலாம் சரியா. நாம இனி ஃபிரெண்ட்ஸ் சரியா” கேட்டு இடது கையை நீட்டினாள். இப்படி, இப்படிதான் ஒருத்தி நட்பு கரம் நீட்டி அவளுக்கு ஆறுதலாக இருந்தாள். இதோ இன்னொருத்தி நீட்டுகிறாள். அவள் தனிமை அந்த கையை பிடிக்க சொன்னது. பிடித்தாள்.
ப்ராஜெக்ட் ப்ரபோசல் நன்றாக செய்தார்கள். தமயந்திக்கு திருப்தியாக இருந்தது. காலேஜிலுருந்து திரும்பி ஹாஸ்டலுக்கு செல்லும்போது மனதில் இருக்கும் பாரம் எல்லாம் குறைந்திருந்தது போல் ஓர் உணர்வு.
மாலை வீடு திரும்புகையில் காரில் பூர்ணிமா “அந்த பொண்ணு பாவம் மேன்.ஏன் அப்படி எல்லாம் நடந்துக்கிட்ட சிரண்”
சிரஞ்சீவி “பின்ன என்னக்கா இப்படி ஒதுங்கி போன நல்லாவா இருக்கு.அப்பறம் எப்படி இவங்கெல்லாம் பிஸ்னஸ் செய்வாங்களாம்”
பூர்ணிமா “நல்ல பொண்ணு மேன். அவ ஃபிரென்ட் மேல இருக்கிற உங்க கோபத்தை எல்லாம் அவ மேல காட்டாதீங்க”
புவன் “ஐயோ அக்கா அப்படியெல்லாம் இல்ல. சிரண் நிஜமாவே அக்கறையில தான் அப்படி நடந்துக்கிட்டான். கோபம்ன்னா கைல தான் பேசுவான்”
பூர்ணிமா “என்னமோ எனக்கு நல்ல ஃபிரெண்ட் கிடைக்க போறா. நீங்க உள்ள புகுந்து சொதப்புனீங்க. நாடு கடத்திருவேன் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவள் வீடு வரவும் இறங்கிக்கொண்டாள்.
புவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்தவன்
…
“ஓ”
…
“ குட்”
…
“ தேங்க் யூ தேங்க் யூ தேங்க் சோ மச் ” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அருண் அவனை சந்தேகமாக பார்த்தவன் “என்ன பண்ண” கேட்க
புவன் “போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலையே செய்யாம இருக்கிற ஆட்களை எல்லாம் பார்த்து கொஞ்சம் கவனிக்க சொன்னேன் வேற ஒன்னும் இல்ல” என்றான் .
சிரஞ்சீவி “இதுக்கு ஹோம் மினிஸ்ட்டர்க்கு கால் பண்ணியாடா” அதிர்ந்து கேட்க
புவன் “இல்ல அவர் பி.ஏக்கு சொன்னேன்”
அருண் “உங்க சித்தப்பாவுக்கு விஷயம் போனா” கேட்டான்
புவன் “போகட்டும் என்ன இப்போ”
சிரஞ்சீவி “அப்ப சரி. ஆனா விஷயம் என்னன்னு கூட முழுசா தெரியாம எதுக்குடா அவசர படற”
புவன் அருணை பார்த்து சிரித்துக்கொண்டே “நம்ம தம்ஸ்ஸ முதுகுல அடிக்குறா, இந்த பக்கம் அந்த பக்கம் குத்துறா கொடையுறா. சும்மா விட்டுற முடியுமா” என்றான்.
அருணுக்கு சலிப்பு தட்டியது. எப்பவும் பார்வையில் மட்டுமே பேசுபவள் மீது கோபம் வந்தது. அவன் யாரென்றே தெரியாமல் இருந்த காலத்திலேயே பேசியிருக்க வேண்டும், நெருங்கியிருக்க வேண்டும். பேசாமல் விட்டுவிட்டான். அவள் குணத்திற்கு இனி அவன் பக்கம் அவள் பார்ப்பது கூட அதிசயம்தான்.அதுவும் நல்லது செய்யும் பேர்வழியென சிரஞ்ஜீவி மிரட்டிய மிரட்டலுக்கு ஒரே அடியாக பேசாமல் இருந்துவிட்டால் என்ன ஆவது?
இதோ இன்னொருத்தன் அவன் கோபத்தை காட்டுகிறான்.