அருணுக்கு அவன் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது,ஆனால் அங்கே போகவே பிடிக்கவில்லை.கபிலன் சொன்னது போல சின்ன ப்ரொடக்ஷன் கம்பெனி என்றாலும் அதை நடத்துவதற்கு கூட காசு வேண்டும் அல்லவா. இப்போது அந்த பணத்தேவைக்கேனும் அவன் அந்த வீடு போயே ஆக வேண்டும். அந்தி சாயும் வேளை இரண்டே நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக்கொண்டு சென்றான்.
வெளியே இருந்து பார்க்க ‘ஏ.என்.ஆர் ஆர்கேட்’ பெரிய மாடமாளிகை போல் காட்சி அளிக்கும் உள்ளே கொடூரமான ‘பூத் பங்களா’ அது. அருண் தாத்தா, அருந்ததீயின் தந்தை இருந்தவரை தீபாவளி கொண்டாட்டம் போல உயிர்ப்புடன் இருந்தது. வீட்டை சுற்றி தோட்டமெல்லாம் பரிமாறிக்கப்பட்டு, கார்கள் நிறுத்தும் காரேஜ் எல்லாம் சுத்தமாக இருக்க பளீச் என்று ராஜா காலத்து அரண்மனை போல இருக்கும் வீடு. இப்போதோ உள்ளே சென்றால் அங்கங்கே தடுப்பு போட்டு பல பாகங்களாக பிரிந்து இருக்கும்.
மைசூர் அரண்மனை போல வீடு கட்டவேண்டுமென்று ஆசை ஆசையாக ஒரு ஏக்கர் நிலத்தில் தாத்தா கட்டிய வீடு. இருபதுக்கும் மேலான அறைகள், ஆயிரம் பேருக்கு சமைக்க தோதான சமையல் அறை, நூறு ஜன்னல், வீட்டின் பின்புறம் தேக்கும் தென்னையும் ஓங்கி வளர்ந்து கொடுக்கும் காற்றோட்டம், மாநகராட்சி பொல்யூஷனிலும் அவர்கள் வீட்டில் மட்டும் கிளிகளும் குயில்களும் கூவும். அப்படியான வீடு மழைத்தண்ணீர் பாசி அங்கங்கே படிந்து, செடிகொடி குப்பைகள் ஒழுங்காக சுத்தம் செய்யப்படாமல் ஒளி மங்கிப்போனது.
பெரிய ஹால் நடுவே இருக்கும் படி ஏறுவதற்கான வழியை விட்டு நடுகூடத்தை சோபா வைத்து மேஜைகள் வைத்து இரண்டு பாகமாய் கீழ் போர்ஷனை பிரித்து இருப்பார்கள். இரண்டு மாமன்களும் அவரவர் பாகம் என்று கீழ் பாகத்தை பிரித்திருக்க முதல் தளத்தில் மூன்றாம் மாமனின் மனைவியும் இவன் அம்மாவும் பிரித்திருக்கிறார்கள். அதற்கும் மேல் தளத்தில் இருக்கும் அறைகள் எல்லாம் கவனிக்கப்படாமல் தூசும், குப்பைகளும் நிறைந்து இருக்கிறது.
இவர்கள் பாகத்தில் மூன்று அறைகள் மற்றும் ஒரு சமையல் அறை இருக்கும். அருந்ததீ வீட்டில் காலை ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார். சமையல்காரி மெயின் கிட்சனில் சமைத்து இங்கே இவர்கள் பாகத்தில் இருக்கும் சமையல் அறையுடன் சேர்ந்திருக்கும் டைனிங் ஹாலில் பரிமாறுவார். அந்த சாப்பாட்டை கூட பிடிக்காமல் தான் அவன் சாப்பிடுவான்.
மூன்று சமையல் அறை இருக்கும் மாளிகையில் வீட்டில் வசிக்கும் பெண்கள் எல்லோரும் அவர்களுக்கு தெரிந்த அரசியல் எல்லாம் செய்வார்கள். ஆண்கள் இருவரும் பணம் சம்பாதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சொத்து எல்லாவற்றையும் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அருந்ததீயின் அண்ணன்கள் மூன்று பேருக்கும் பெண் வாரிசு மட்டுமே. அருந்ததீக்கு மட்டுமே ஆண் வாரிசு. முதல் மாமன் மதனகோபாலன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டும் ஆண் வாரிசு வேண்டும் என்று செய்யும் அக்கிரமங்கள் ஊர் அறிந்த ரகசியம்.மற்றவர் தன்னை கிண்டல் செய்யக் கூடாது என்று அவர் மனைவி வீட்டில் போடும் ஆட்டம் ரொம்பவும் அதிகம்.
இரண்டாவது மாமன் ராமகோபாலனும் மூன்றாம் மாமன் சந்தானகோபாலனும் இரட்டைப்பிறவிகள். அதில் ராமகோபாலன் மட்டுமே உயிருடன் இருக்கிறார்.சந்தானகோபாலன் இறந்து விட்டார்,சந்தானகோபாலனின் மனைவி தனக்கான இடம் இந்த வீட்டில் இருக்கிறது என்று கட்டிக்கொள்ள போடும் ஆட்டம் மிகவும் பெரியது.
ராமகோபாலன் குடிக்கும் சூதாட்டத்திற்கும் அடிமை. அவரும் அவர் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். வேறு வீடு சென்றுவிட்டாலும் தினம் காலை அம்மா வீடு வரும் அக்கா அவள் தாயுடன் சேர்ந்து எப்படி சொத்தை எல்லாம் அவர்கள் பெயர்களுக்கு மாற்றலாம் என்று பேசிக்கொண்டே வீட்டில் கலவரம் தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அருந்ததீ வீட்டிற்கு செல்லமாய் வளர்ந்த மகள். கணவனுடன் இருக்க பிடிக்கவில்லை என்று எட்டு வயது மகனுடன் மகள் திரும்பவும் யோசிக்காமல் தந்தை ஏ.என்.ஆர் தியேர்ட்டர்ஸ் பார்த்துக்கொள்ள ஒப்படைத்தார். அருந்ததீ அசுர வேகத்தில் ஏ.என்.ஆர் தியேட்டர்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி அதை மால்களில் நிறுவி, தியேட்டர் காம்ப்ளக்ஸ் கட்டி ஊர் முழுக்க அதை திறம்பட நிர்வாகம் செய்து வருகிறார்.
மூன்றாவது மாமன்தான் அந்த குடும்பத்திலேயே புத்திசாலி. அவன் கொடுத்த ஐடியாவில் தான் அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன் மிகவும் லாபகரமாக ஓடியது.
நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த இவர்கள் தந்தை மகளின் திறமையையும் மூன்றாவது மகனின் பணம் செய்யும் திறமையையும் புகழ்ந்து பேச மற்ற இருவரும் பொறாமையில் பொங்க; திடீரென ஒரு நாள் மூன்றாவது மாமன் விபத்தில் இறந்துப்போனான்.
சந்தானகோபாலன் இறந்தபின் தாத்தாவும் படுத்த படுக்கையாகிவிட என் சொத்துக்கு வாரிசு ஆண் பிள்ளை அருண்தான் என்று சொல்லி மறைந்துவிட்டார். இதில் அருந்ததீ மகிழ்ச்சி அடைந்தவர் தானும் தன் மகனும் உசத்தி என்று வீட்டிற்கு வந்த மருமகள்களுக்கு மத்தியில் காட்டிக்கொள்ள அவர் பாட்டுக்கு ஒரு பக்கம் ஆடுவார்.
இத்தனை குடும்ப கலவரத்தில் உடைந்து போனது என்னவோ மூன்றாம் தலைமுறை வாரிசான இவனும் மூன்றாவது மாமனின் மகள் ஷிவானியும் தான். அவர்கள் இருவருக்குள் இருக்கும் அருவருப்பும், கசப்பான நினைவுகளும் வெளியே சொன்னால் இந்த உலகம் புரிந்துகொள்ளுமா என்றே தெரியாது.
ஷிவானி இந்த ஊரில் உள்ளவரை அந்த வீட்டில்தான் அவனும் இருந்தான்.ஷிவானி எம்.டி படிப்புக்கு டில்லி செல்லவும் இவன் கபிலன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
முதல் மாமன் மதனகோபாலன் வீட்டில் அவர்தான் எல்லாமே, அவர் மேல் எல்லோருக்கும் பயம் இருக்கவேண்டும் என்று வேலைக்காரர்களை அடிப்பார். அருந்ததீ மீது இருக்கும் வன்மத்தை அவன்மேல் காட்டுவர். நடுராத்திரியில் வீட்டில் கூடத்தில் யாரையேனும் அடிஅடியென்று அடிப்பார், உதைப்பார். சில நேரம் அவர் அராஜகத்திற்கு அவர் மனைவியும் பலியாவது உண்டு.
இரண்டாவது மாமனோ போதையின் தாக்கத்தில் இல்லாத சமயம் யாரை ஏமாற்றி காசு பறிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருப்பார், அப்படி போதையில் இருந்தால் சுற்றி இருக்கும் பெண்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுப்பார்.
சொந்த பெரியப்பாக்களிடமிருந்து ஷிவானியை காப்பாற்றுவது தான் அருண் வேலை அந்த வீட்டில்.ஷிவானி வீட்டில் இருந்தால் அவனும் வீட்டில் இருப்பான். மூன்றாவது அத்தை கணவன் இறந்துவிட்டாலும் தானும் மகளும் நன்றாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவே அந்த வீட்டில் இருந்துக்கொண்டு ஷிவானியையும் அவளுக்கு விருப்பம் இல்லாதபடி எல்லாம் ஆட வைப்பார். அதிலும் அத்தை அவள் பாதுகாப்பின்மையை ஷிவானி தலையில் ஏற்றுவதும், ஷிவானி அவரை சமாதானப்படுத்த அவர் சொல்வது போலவே நடந்து கொள்வதும் கொடுமையிலும் கொடுமை. உண்மையில் வெள்ளிந்தியான பெண் உலகத்தின் பார்வையில் அடங்கா, ஆணவம் மிகுந்த அழகியாக வளம் வருவாள்.
அத்தைக்கு காசு கொடுத்தால்தான் அத்தை அருந்ததீக்கு வீட்டில் சப்போர்ட் செய்வாள், இல்லையென்றால் மற்ற இரு மருமகளுடன் சேர்ந்து அருந்ததீக்கு சாபம் விடுவார்.அருந்ததீ வீட்டில் சண்டை இல்லாமல் இருக்க வேண்டும், கூடவே தான் மட்டுமே உசத்தி என்று கட்டிக்கொள்ளவே தந்தை வழக்கத்தை தொடரகிறாள். வருடத்தில் நான்கு முறை அதாவது மூன்று மாதத்துக்கு ஒரு முறை வீட்டில் பெண்களுக்கு வியாபாரத்தில் வரும் லாபத்தில் கொஞ்சம் காசு அவர்கள் இஷ்டப்படி செலவழிக்க கொடுப்பார். சில சமயம் ஷிவானி, அருண் பங்கிற்கு கொஞ்சம் அதிகமாய் காசு கொடுப்பார்கள். அப்படியான பங்கு காசுகளை அவரவர் அக்கவுண்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். அருண் செலவுக்கு என்று அதிலிருந்து நிறைய பணம் எடுத்திருக்க ஷிவானியின் சேமிப்பு அப்படியே தொடாமலே இருக்கிறது.அந்த காசை இவன் ஷிவானியிடம் கடனாக கேட்க ஷிவானியோ அவளுக்கென்று நேரம் வரும்போது கேட்கும் போது கொடுக்க வேண்டும் என்று சொல்லி மொத்த காசை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறாள்.
அருண் காசு சேமித்து வைத்திருக்கும் வங்கி கார்ட் மற்றும் பாஸ்புக் எல்லாம் எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கும் சமயம் மதனகோபாலன் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். இவனை பார்த்ததும் “அடடே வாங்க மாப்ள ஊர் எல்லாம் மேஞ்சிட்டு வந்தச்சா” நக்கலாக கேட்டார். எப்போதும் போல ரத்தம் கொதித்தது.
அருண் முறைத்தான்.
“தொறந்த வீட்டுக்குள்ள நாய் எல்லாம் புகுந்து அட்டகாசம் பண்ணுது எங்க போனான் இந்த முருகேசன்” பேசிக்கொண்டே “டாய் யார்ரா அங்க” சத்தம்போட வேலைக்காரன் வந்து நிற்கவும் பளார் என்று அவன் கன்னத்தில் அடி விழுந்தது. அருணுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அருண் அவர்களை கடந்து போக எத்தனிக்க “உங்கொப்பன் இங்க திரும்ப வந்து கட விரிக்க பாக்குறான். இந்த முறை அவனை சும்மா விடறதா இல்ல. இனிஷியலுக்கு பேர் வேணும்ன்னா அவன காப்பாத்த பாரு” என்றார்.
எரிச்சல் மண்டியது.
“போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு விறுவிறுவென வெளியேறி வந்துவிட்டான்.
ஊரே தைரியசாலி என்று மெச்சி பேசும் அருந்ததீக்கு அண்ணன்கள் எது செய்தாலும் அது ‘சரி’. இதோ இப்போது நடந்ததை தாயிடம் இவன் போய் சொன்னால் “மாமா ஏதாச்சும் கோவத்துல இருந்திருப்பார் அருண்” என்று அதிகாரமாக சொல்லுவார். விட்டு வந்த கணவன் முன் வாழ்ந்து காட்ட அவர் போட்டுக்கொண்ட முகமூடிதான் அந்த “தைரியசாலி” முகமூடியும், ஆளுமையான புலிபோல் பாவனையும்; நிஜத்தில் அருந்ததீ ஒரு பூனை. வீட்டுக்கு அடங்கி இருக்கும் பூனை. மகனும் அப்படி இருக்கவேண்டும் என்று எண்ணும் பூனை.
இந்த சாக்கடைக்குள் இருந்துகொண்டு வசந்ததிற்கு ஆசைப்படலாமா அவன் என்கிற கேள்விதான் அவனை எதிலிருந்தும் தள்ளி நிற்கவைக்கிறது. எதையும் வியப்பாக,ஆசையாக, தயக்கங்கள் இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் சிரித்துக்கொண்டே பார்க்கும் தமயந்தி அவனுக்கு தூரத்து வானின் நிலா. ரசிக்கலாம், ரசனையில் உள்ளுக்குள் கொஞ்சலாம், கவிதை எழுதலாம். அது போதும்! அவன் பக்கம் யார் இருந்தாலும் அவனை சுற்றியிருக்கும் சாத்தான் கூட்டம் அவர்களையும் விழுங்கும். வேண்டாம் அந்த கஷ்டம் வேண்டாம், அதுவும் தமயந்திக்கு அது வேண்டவே வேண்டாம். வெறுப்பும் விரக்தியும் உள்ளுக்குள் ஊறி கிடந்த நேரம் சட்டென சிறு ஒளியென காதல் மலர செய்தவள். அந்த காதல் ஒளி போதும் அவனுக்கு. காலம் கொஞ்சமேனும் அவன் மீது இரக்கம் காட்டினால்; இந்த சாத்தான் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி வைத்துவிட்டு அவள் கரம் பிடிக்கலாம் அவன். அதுவரை இந்த காதல் அவனுக்குள் அவனுக்கே தெரியாத இடத்தில மறைந்தே இருக்கட்டும்.அருணுக்கு எப்போதும் தெரிந்த விஷயம்தான், அவனுக்கு எதிர்காலம் சினிமா துறையில் தான். இப்போதே அவன் ப்ரொடக்ஷன் பயணத்தை தொடங்குவதும் நல்லதுதான். மாமன்கள் கொட்டத்தை அடக்கி வைத்துவிட்டு அவனை பெற்றவன் வரும் போது துரத்திவிட வசதியாக இருக்கும். அவன் மனம் அதன் போக்கில் திட்டம் தீட்டிக்கொண்டே போனது.
அடுத்த நாள் கல்லூரியில் தமயந்தி அழகாக தெரிந்தாள். கசப்பை மறக்கடிக்க உதவும் இனிப்பு இவள் தானா?! சிரஞ்சீவியும் பூர்ணிமாவும் பாடுபடுத்தியதில் பூமியை மறந்து இறுக்கம் தளர்ந்து பூர்ணிமாவுடன் சிரித்து பேசுவதும், சிரஞ்சீவி பேச்சு ஒவ்வொன்றுக்கும் எதிர்பேச்சு பேசிக்கொண்டு அவனை பாஸ்கெட் பால் மேட்ச் வைக்கலாமா யார் ஜெய்ப்பாங்க பார்ப்போமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். புவனும் சிரித்துக்கொண்டே வைக்கலாம் என்றான். யார் எந்த டீம் என்று பூர்ணிமா கேட்க அவனையும் அறியாமல் அவன் “நான் தமயந்தி டீம்” என்றான். தமயந்தி அவன் முகம் பார்த்து கண்கள் விரித்து அழகாய் சிரிக்க அதிகாலை பூ மலர்வது பார்க்க இபப்டித்தான் இருக்குமோ என்றெண்ணியவன் ரொம்பவும் கட்டுப்படுத்திக்கொண்டு அவளை பார்த்து சின்னதாக சிரித்தான்.
பூர்ணிமா “அப்போ நான் ஸ்கோர் எழுதுற ஆள். யார் ஜெயிக்கிறாங்க பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டே போக அருண் இவ்வுலகத்தில் இல்லை. அவன் காதலும் கற்பனையும் எங்கேயோ அழைத்து சென்றுக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் இதே தொல்லை, அவன் அவனாக இல்லை.
இயல்புநிலை திரும்பும் பொழுது சிரஞ்சீவி அவனை பார்த்து கோணவாய் சிரிப்பு சிரித்துவிட்டு “நான் ஜெய்ச்சா ரெண்டு நாள் ட்ரிப் எங்களோட வரணும் ஓகேவா” கேட்டான்.
அதிர்ந்தாள் தமயந்தி, “ம் சரி” என்றாள்.
தோற்கவும் ஆசை, வெற்றிக்கும் ஆசை!!
என்ன மனமோ இது!! மானங்கெட்டது…