தமயந்தி வரிசையாக இன்டர்வியூ கொடுக்க கொடுக்க தேர்வாகாமல் போக போக அவள் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது.
பூமிகா “அஞ்சு தானடி போயிருக்கு இன்னும் நாலு இருக்கு கண்டிப்பா செலெக்ட் ஆகுவ பாரு”
தமயந்தி “பேங்க் மட்டுமே போதாது போலயே.நான் பேசாம சாஃட்வேர் கம்பெனியில் அட்டென்ட் பண்றேன்னு போய் பேர் குடுத்துட்டு வரவா. எனக்கென்னமோ நான் மத்த கம்பெனி எல்லாமும் பார்க்கணும் தோணுது”
பூமிகா “சரி அதை செய்யலாம் பயப்படாத டீ”
கல்லூரி பிளேஸ்மென்ட் ஆபிசர் “ தமயந்தி நீங்க என்டர்டைன்மென்ட் பீல்டும் ட்ரை பண்ணலாமே. இந்த முறை இரண்டு சினிமா ப்ரொடக்ஷன் கம்பெனி வந்துருக்கு. பாலிவுட் கம்பெனி வேற… பேஷன், பத்திரிக்கை நிறுவனங்கள் மற்றும் டிவி சேனல்ஸ்லலாம் நல்ல எதிர்காலம் இருக்கும்.நீங்க வேற மாடலிங்கும் பண்ணுற ஆள்தானே சும்மா ஒரு ட்ரை கொடுத்து பாருங்க” என்றார்.
தமயந்தி யோசிக்க பூமிகா “சும்மா பேர் குடுடி இன்டர்வியூ கொடுக்கிறதாவது பிராக்டிஸ் ஆகும்ல ”
தமயந்தி அப்போதும் தயங்க அங்கே வந்த சிரஞ்சீவி “பேர் கொடு தம்ஸ், பீல்டு பத்தி நாலு வார்த்தை நான் சொல்லி தரேன். அதுலேயே சமாளிச்சு வேலை வாங்கிடலாம். பாலிவுட் வேற, நீயும் நார்த்லதானே வேலை வேணும் சொல்லிட்டு இருக்க”
தமயந்திக்கு அப்போதும் தடுமாற்றமாக இருக்கவும் பிளேஸ்மென்ட் ஆபிசர் மேலும் விளக்கமாக “இரண்டு சினிமா கம்பெனிகளும் அவங்க கம்பெனியில செலக்ட் ஆயிட்டாலும் மத்த கம்பெனி இன்டர்வியூ அட்டென்ட் பண்ணலாம்ன்னு சொல்லிருக்காங்க அதனால நீங்க சும்மா இன்டர்வியூ குடுங்க பாத்துக்கலாம்” என்று தைரியமூட்டினார்.
மேலும் அடுத்து வந்த நிதி நிறுவன இன்டர்வியூவும் கடைசிவரை சென்று தேராமல் போக தமயந்தி உடைந்தே போனாள். அதெப்படி கடைசிவரை போய் நன்றாக செய்தும் அவளை வேண்டாம் என்கிறார்கள்?! ஆச்சரியமானது.
இனி நிதி மேலாண்மை நிறுவனங்களுக்கு அவள் வெளியே தான் முயற்சி செய்ய வேண்டும் என்ற நிலை உண்டானது. மற்ற மென்பொருள் நிறுவனங்களும் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளும் அடுத்து வேலை வாய்ப்பு கொடுக்க பட்டியலில் இருந்தன. தமயந்தி அவைகளைப் பற்றி தீவிரமாக விவரங்களை சேகரித்து தெரிந்துக் கொண்டு தயாராக தொடங்கினாள்.
மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் இன்டெர்வியூ ஒன்றில் இரண்டு ரவுண்டு இன்டர்வியூ முடித்து மூன்றாவது ரவுண்டில் பெர்சனல் இன்டெர்வியூவில் கலந்துகொள்ள அறை வாசலில் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
இரண்டு ஆண்கள்,இரண்டு பெண்கள் என நான்கு பேரில் யாரோ ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்ற நிலை இருந்தது.தமயந்திக்கு பயத்தில் பதட்டத்தில் பேச்சு வராமல் தொண்டை வறண்டு கொண்டிருந்தது.
அந்நேரம் அங்கே ஓடோடி வந்தாள் பூமிகா.
அங்கே அந்நேரம் பூமிகாவை பார்த்து ஆச்சரியமான தமயந்தி “நீ என்னடி இங்க” என்று கேட்டவள் பூமியின் முகத்தில் தெரியும் வேதனை நிறைந்த பாவத்தை பார்த்து “ஆண்ட்டிக்கு எதுவும் இல்லல்ல” என்று கேட்டாள்.
பூமிகா “அம்மாவுக்கு எதுவும் இல்லை தம்மு ஆனா நீ இப்பவே உங்க அம்மா கிட்ட பேசு”
தமயந்தி “இருடி இன்டெர்வியூல பேசிட்டு வந்து பேசுறேன்”
“ப்ச் தம்மு நீ ஊருக்கு கிளம்பனும் இப்ப பேசு தம்மு” என்றாள் பூமிகா அழுகையை அடக்கிக்கொண்டு.
பூமிகா பேச்சில் தமயந்திக்கு எதுவோ இதயத்தில் இடித்து வெடித்தது போல ஒரு வலி பிறந்தது.
பூமிகா “இத பாத்துக்கலாம் தம்மு நீ முதல்ல கிளம்பு” என்றாள்
தமயந்திக்கு அவள் உள்ளுணர்வு எதுவோ பெரிதாக நடந்திருக்கிறது என்கிறது. ஆனால் அது என்ன என்று கேட்க பயமாக இருக்கிறது. பித்து பிடித்தது போல் நின்றவள் “ஏன்” என்று கேட்டாள்.
பூமி அழுதுக்கொண்டே “ப்ளீஸ் உங்க அம்மாகிட்ட பேசு” என்று அவள் கைபேசியை கொடுக்க.
கைபேசியில் பேசிய தமயந்திக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.தமயந்தியின் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார்.
தமையந்தி ஊருக்கு போய் தந்தையை பார்க்கும்போது ஐஸ் பாக்ஸில் படுத்திருந்த தந்தை முகம் அவரது முகமாகவே இல்லை, வீங்கி போய் கருத்து போயிருந்தது. “என் அப்பா இப்படியா இருப்பாரு இது என் அப்பாவே இல்ல” என்று உடைந்து அழுதாள். கடைசியாக ‘நாம் எல்லோரும் குடும்பமாய் சேர்ந்து வாழலாம் என்று கேட்டாரே ஏன் இப்படி’ என்ற கேள்வியே நின்றது மனதில்.
கண்களில் நீர் தானாக வழிந்து கொண்டே இருந்தது. தாயும் தங்கையும் உடைந்து இருக்க அடுத்து என்ன செய்வது என்றே அறியாத நிலை. தாய்மாமன் மட்டுமே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு உதவிக்கு இருந்தார்.
விசாரித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
ஏன் இப்படி நடந்தது என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
தாயின் முகத்தில் தெரியும் உணர்ச்சியற்ற நிலைக்கு பொருளும் புரிபடவில்லை.
காலமும் நிற்கவில்லை,ஓடியது.
மூன்றாவது நாள் கும்பலாக ஆட்களை கூட்டிக்கொண்டு வந்த பெண்ணொருத்தி “அவர் இத்தனை வருஷம் என் கூடத்தான் வாழ்ந்துருக்காரு அவருக்கு வர காசுல எனக்கும் பங்கு இருக்கு” என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
தமயந்திக்கு அதிர்ச்சியானது.
தமயந்தியின் அம்மா எதையும் கண்டுகொள்ளாமல் “இன்னும் எவளாம் வரப்போறா தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டு தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டார்.
தமயந்தின் தாய் மாமன் தான் “இன்னும் பத்து நாள் கழிச்சு வா அப்போ பஞ்சாயத்து பாத்துக்கலாம்” என்று விரட்டி அனுப்பினார்.
கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சி கொடுக்கும் தகவல்களாக வந்து கொண்டே இருந்தது. ‘அவர் கடன் இவ்வளவு கொடுக்கவேண்டும் ’என வரிசையாக ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். கணக்கு செய்து பார்த்தபோது எண்பது லட்சம் கடன் என்று தெரியவந்தது. தமயந்திக்கு தலைசுற்றியது. சின்ன வயதிலிருந்து தந்தை வீட்டுக்கு செய்தது மிகவும் கம்மி. அடிக்கடி வீட்டுக்கு வரும்போது மகள்கள் கைகளில் காசை திணித்து ‘பண்டம் வாங்கி சாப்புடுடா எங்கண்ணு’ என்பார். அதுக்கே அம்மா நீ ஒன்னும் என் புள்ளைக்கு காசு கொடுக்க வேண்டாம் என்று கையில் திணித்த காசை பிடுங்கி எறிவாள். ஒரு கட்டத்த்தில் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்பது புரிந்தது. அதற்கு மேல் தாயிடம் அப்பாவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க தைரியம் இல்லாமல் தமயந்தி நோண்டாமல் விடவும் இன்று எண்பது லட்சம் கடன் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவர் பேங்க் வேலையில் இருந்தும் எல்ஐசியிலிருந்தும் வந்த காசு பாதி கடனை கூட அடைக்க உதவாது என்பது இன்னும் கவலையாக இருந்தது.
தாயோ “செத்தாலும் என் நிம்மதிய அள்ளி எடுத்துட்டு போயிருக்கான் பாரேன்” என்று மிகவும் எரிச்சலாக சொன்னாள்.
திரும்பவும் பஞ்சாயத்துக்கு வந்த பெண்ணை பார்த்த தமயந்தி தந்தை மேலிருக்கும் கோபத்தை அவள் மீது காட்டினாள்.
“இவ்வளவு கடன் ஆகிருக்கு. ஒருநாளும் எனக்கு தெரிஞ்சு எங்கப்பா எங்க படிப்புக்கோ எங்க சாப்பாட்டுக்கோ செலவு செஞ்சு நாங்க பார்க்கல. அவர் உங்ககூட தான் வாழ்ந்தார்ன்னா அதை உங்களுக்குத்தான் செலவு செஞ்சிருப்பார். அப்போ நீங்களே அடைங்க. அதுலயும் எங்க கூட அவர் இருந்த காலமும் ரொம்ப கம்மி, பேசுன காலமும் ரொம்ப கம்மி அதனால நீங்க கொடுத்த அழுத்தத்துலதான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிருக்காரு. சொல்லுங்க ஏன் எங்க அப்பா செத்தார்ன்னு சொல்லுங்க காசு, பணம் சொத்து பத்தியெல்லாம் அப்பறம் பேசலாம்” என்று கோபமாக ஆரம்பித்தாலும் அழுதுக்கொண்டே கேட்டாள்.
வந்த பெண்ணோ அசராமல் “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எனக்கு பத்து லட்சம் கொடுத்தே ஆகணும் நீங்க. அவர்க்கு ஆக்கிப்போட்ட கைக்கு நன்றியை கொஞ்சமாச்சும் காட்டுங்க. இப்படியெல்லாம் என்னைப்போல அப்பாவி பெண் சாபம் வாங்கிக்காதீங்க ” என்று முந்தானையில் மூக்கை பிழிந்துகொண்டு பேசினாள். அவளுடன் வந்தவர்கள் எல்லாம் இப்படியெல்லாம் பண்ணாதீங்கம்மா என்று கூட்டமாக பேசிக்கொண்டு வீட்டின் கேட் தாண்டி வீட்டிற்குள் வர எத்தனிக்க…
எரிச்சல் ஆன தமயந்தி கையில் கிடைத்த கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு “ஏன்டா ரெண்டு பொண்ணுங்களை வெச்சிட்டு காட்டுக்கு நடுல குளுர்லயும் மழைலயும் கஷ்டப்பட்ட எங்கம்மா அப்பாவி இல்ல… இவ அப்பாவியா? எவளாவது காசு பணம் கேட்டு இந்தப்பக்கம் வந்தீங்க… அவ்வளவுதான்… இங்க எவன் கிட்ட பணம் இருக்கு எல்லாம் கடன் தான் இருக்கு வேணும்ன்னா கடன் கட்ட உன்கிட்ட இருக்கிறத கொடுத்துட்டு போ. இல்ல தகராறு பண்ண ரெடின்னா சொல்லு நான் போலீஸ கூப்பிட்டு கேஸ் போடுறேன். கிளம்பு கிளம்பு கிளம்புங்கடா பண பிசாசுகளா ” என்று அரக்கி போல கத்தி தீர்த்தாள்.
தமயந்தியின் கோபமும் அவள் தாய்மாமனின் விரட்டலும் அந்நேரம் வேலை செய்தது.
“ஏன் ஏன்மா இப்படி எல்லாம் நடக்குது” கேட்டு அழுதாள் தமயந்தி
“அந்த மனுஷனுக்கு எப்பவும் சபல புத்திதான். அவன் கூட வாழ புடிக்காமதான் ஊர் ஊரா ட்ரான்ஸ்ஃபர் வாங்கி திரிஞ்சேன். கொஞ்ச நாள் முன்ன வயித்துல கேன்சர் வந்திருக்குன்னு சொல்லி பண்ணதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டார். நான் கண்டுக்கல” என்றார் அவர்
தமயந்தி அழுதுகொண்டே “ இதெல்லாம் முன்னாடியே ஏன்மா சொல்லல”
“என்னடி சொல்ல சொல்றீங்க. உங்களை ஊரை கண்டுக்காம இவ்ளோ தூரம் வளர்த்து கொண்டுவரவே ரொம்ப திண்டாடிட்டேன்.அந்தாள பத்தி எல்லாம் பேச உள்ளுக்குள்ள கசப்பு மட்டுமே தா இருக்கு. எதுக்கு எங்க அப்பாரு சொத்து குடுத்தார் நெனச்ச. இந்தாள் எதுக்கும் லாயிக்கு இல்லைன்னுதான் ” என்று தாயும் அவர் கண்டுகொள்ளாமல் விட்டதை சரியென பேச
“எத்தனை வாட்டி சொன்னேன். டிவோர்ஸ் வாங்கிருந்தா அவரோட கடன் இப்ப நாம கட்டுற மாதிரி ஆகாதேம்மா. இப்போ பாரு அக்கா எங்க போவா இல்ல நான்தான் எங்க போவேன் இந்த காசுக்கு” கேட்டாள் தங்கை
“ஏய் இந்த காசெல்லாம் அவர் வைத்தியத்துக்கு ஆனதுதான்டி. டிவோர்ஸ் பண்ண அப்பறம் உங்களுக்கு எப்படிடி கல்யாணம் பண்ணி வைப்பேன். ரெண்டு பொட்டபுள்ள வச்சிக்கிட்டு ஊரறிய வாழாவெட்டியா எப்படி இருக்கிறது சொல்லு ” கேட்டார் அம்மா. தமயந்திக்கு எப்போதும் நாம் ஏன் கோணலாகவே யோசிக்கிறோம் என்று கேள்வி எழும். இப்படிப்பட்டவர் மகளுக்கு வேறு எப்படி யோசிக்க வருமாம்!
ஆத்திரத்தில் செயல்பட முடியாமல் அமர்ந்தாள் தமயந்தி. ஆனால் கடன்காரர்களோ அவளை சும்மா விடாமல் நச்சரிக்க தொடங்கினார்கள்.
தமயந்திக்கு இக்கட்டில் மூளை வேகமாக வேலை பார்த்தது. தந்தை பணம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென வந்தவர்களிடம் ஆதாரம் கேட்டு சரிபார்த்து சின்ன கடன்களை எல்லாம் அம்மாவிடம் இருக்கும் சேமிப்பு, மற்றும் எல்.ஐ.சி பணம் வைத்து அடைத்தாள். சிலரிடம் ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரிவித்தாள். கடைசியில் இனி பணம் இல்லை என்று வரும்போது துணைக்கு இருந்த தாய்மாமன் அம்மாவிடம் “அப்பா உனக்கு கொடுத்த உன் பாகத்த எனக்கு வித்திரு” என்று இருந்த நிலத்தையும் அடிமட்ட விலைக்கு கேட்டார். விழித்துக்கொண்டாள் தமயந்தி. மனம் உடைந்து வலித்தாலும் “அதெல்லாம் முடியாது மாமா நான் வேற வழி பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து காசை கடன்காரர்களுக்கு கொடுத்து ஓரளவு அடைத்தாள்.
மகளின் சாதூரியத்தை தாய் மெச்சினாலும் “வட்டி கட்ட முடியாம போனா என்னடி ஆகும். உன் தங்கச்சி மேல படிக்க காசு வேணுமே அப்போ என்ன செய்றது” கேட்டு நின்றார்
தமயந்தி “நான் பார்த்துக்கறேன்ம்மா வேலை வாங்கிட்டேன்னா என்னால முடியும்”
“என்னவோ செய்ங்க” என்று சலித்துக்கொண்டு விலகி நடந்தார் தாய்.
“அக்கா நீ செய்வக்கா எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை பத்தி கவலைபடாத சரியா” தங்கை அக்காவை சமாதானப்படுத்த
“நீ என்னை நம்புற தானே” தமயந்தி கேட்டாள். அப்போது யாரேனும் அவளை தேற்ற வரமாட்டார்களா என்ற ஏக்கம் உச்சநிலையை அடைந்திருந்தது.
“ஐயோ அக்கா உன்னை நம்பாமலா? இப்போ நீ எடுத்த முடிவு அன்னிக்கு நீ சண்டை போட்ட விதமெல்லாம் பார்த்து நான் எவ்வளவு பெருமைபட்டேன் தெரியுமா… நீ எப்பவும் என் இன்ஸபிரேஷன்க்கா நாம இந்த கடன்ல இருந்து எல்லாம் ரெண்டே வருஷத்துல மீண்டு வந்துருவோம் பாரேன்” என்று தங்கை பேசவும் புத்துணர்வாக உணர்ந்தாள் தமயந்தி.
தமயந்திக்கு கல்லூரி பிளேஸ்மென்ட் ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது “ஏற்கனவே நிறைய மிஸ் பண்ணிட்டீங்க உடனே கிளம்பி வாங்க இல்லன்னா எங்களை குறை சொல்லக்கூடாது” என்று நிலைமையை எடுத்துச்சொன்னார்கள்.
தமயந்தி கல்லூரிக்கு போகும்போது வெறும் நான்கே நிறுவனங்களின் பணிக்கு அமர்த்தும் பட்டியல் மீதம் இருந்தன. ஒரு உணவு உற்பத்தி நிறுவனம், இரண்டு சினிமா துறை நிறுவனம் மற்றும் ஒரு ஷிப் கட்டும் நிறுவனம். கப்பல் கட்டும் நிறுவனமும் ஆண்கள் மட்டுமே வேண்டுமென சொல்லிவிட அங்கே தமயந்திக்கு ‘நோ என்ட்ரி’ ஆக மூன்றே நிறுவனங்கள் தான்.
பூமி புவனிடம் கண்கள் கலங்க “ப்ளீஸ் ஏதாச்சும் தம்முக்கு ஹெல்ப் பண்ணு” என்று கேட்டாள்
புவன் “கண்டிப்பா செய்வேன் அழாத” என்றவன் அவனால் முடிந்ததை வெளியே தேட தொடங்கினான்.
தமயந்திக்கு தேவையெல்லாம் மாதம் கை நிறைய சம்பளம் கொடுக்கும் ஒரு நிறுவனம் என்ற நிலை வந்தது. சிரஞ்சீவியின் வழிகாட்டுதலில் பாலிவுட் சினிமா நிறுவனம் இன்டர்வியூவில் பங்கேற்றாள்.அவர்களின் கேள்விகளோ நிறைய நிதி மேலாண்மை துறையிலேயே இருக்க தமயந்திக்கு பதில் சொல்வது சுலபமாக இருந்தது.
அவர்கள் சம்பளம் பற்றி கேட்கவும் தமயந்தி யோசிக்காமல் மாதத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் கேட்டாள். இன்டெர்வியூ எடுக்க மேலிடத்தில் பேசி வந்தவர் கூடி கலந்து பேசி மாதம் ஒண்ணே கால் லட்சம் கொடுக்க தயார் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அன்று எண்ணியதை விட அதிக சம்பள ஆஃபருடன் கல்லூரியை விட்டு வெளிவந்தாள் தமயந்தி.