வேகமாய் அந்த ஸ்டார் ஹோட்டல் விட்டு வெளியே வந்த தமயந்தி அழுகையோடே பூமி வீட்டுக்கு நடந்தே சென்றாள்.
தமயந்தியை பார்த்த பூமிகா அதிர்ந்தாள். அதிலும் தோழி “எனக்குப் போக வேற இடம் தெரியல”சொல்லி அழும்போது இவளுக்கு கதி கலங்கியது. அதற்குள் புவனுக்கு விஷயம் சென்றிருக்க பூமியும் அழைத்து தமயந்தி வந்திருக்கும் நிலையை சொல்ல புவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
தமயந்தியோ புவனை பார்த்து “நான் என்னமோ நெனச்சுட்டேன் நீங்க எல்லாம் என்னை உங்க ஃபன்க்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருந்திருக்கீங்க…நான்தான் பைத்தியம் உங்களை எல்லாம் நம்பினேன்” என்றெல்லாம் பேச… அதே நேரம் அங்கே சிரஞ்சீவியும் அருணும் வந்து சேர்ந்தார்கள்.
அருண் “தமயந்தி ப்ளீஸ் நான் பேசுறது கேளு” என்று கத்த பூமிகா அறையை விட்டு தமயந்தி வெளியே வரவேயில்லை. பூமிகா வெளியே வந்தவள் “அருண் அண்ணா என்ன பண்ணிங்க தமயந்திய அவ ஏன் இப்படி இருக்கா” என்று கேட்க
அறையில் தமயந்தி புவனிடம் “ப்ளீஸ் எனக்கு அவன பாக்கவே இஷ்டம் இல்ல எனக்கு உங்க யாரையும் பார்க்கவே பிடிக்கலை ப்ளீஸ் என்ன இப்படி தனியா விடுங்க… ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
புவன் நடு கூடத்திற்கு வந்தவன் அருணிடம் “வேணாம் மச்சான் பேச இஷ்டம் இல்லை சொல்றா டைம் கொடு” என்றான்
அருணால் புவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை கத்தி தீர்த்தான் “அது எப்படி என்கிட்ட பேச முடியாம போகும். என் கிட்ட பேசினா தானே எந்த ஒரு சொல்யூஷனும் கிடைக்கும். அது எப்படி ரூம்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டு இப்படி பேசாம வாட்டி வதைக்கலாம் வெளிய வா தமயந்தி”
அருண் கத்தி தீர்த்ததில் வெளியே வந்தவள் தமயந்தி “ நான்? நான் உன்னை வதைக்கிறேனா நீ தான் என்னை கஷ்டப் படுத்துற… எனக்கு அசிங்கமா இருக்கு… உன்ன எதிர்த்து உன் கூடயே போட்டி போட்டு கம்பெனி வளர்த்து உன் கையில கொடுக்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டிருக்கேன்… ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே… ஏன் நான் என்ன சர்கஸ் மங்கி போல தெரிஞ்சேன சொல்லாம சிரிச்சிட்டே இருந்தியோ” கேட்டவளுக்கு முகம் கண்ணெல்லாம் சிவந்திருந்தது. கோபத்தில் நடுங்கினாள்
அருணுக்கு அவள் கோபத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இந்த சந்திப்பும் இப்படியாக இது நடக்ககூடும் என்று அவன் கணிக்கும் முன் நடந்துவிட்ட நிகழ்வு அது. என்ன சொல்வது எப்படி சொல்வதென எதுவும் அவனுக்கு பிடிபடவில்லை. முந்தைய நாள் உன்னை முத்தமிடும் நேரம் அசிஸ்டன்ட் அழைத்து மீட்டிங்க்கு கேட்டான் ஒத்துக்கொண்டேன் கடைசியில் அது இந்த மீட்டிங் என்று தெளிவாக சொல்ல சூழல் ஏதுவாக இல்லை. ஆனாலும் முயற்சி செய்தான் “நேத்து சாயந்திரம்…” என்று தொடங்கியிருப்பான் தமயந்தி தொப்பென தரையில் விழுந்தவள் “என்கிட்ட இருந்தது என் மனசு மட்டும்தான் அருண். நான் எதையுமே இது இப்படித்தான்ன்னு ஏத்துகிற ஆளு என்னிக்குமே என் ஆசையை மனசு குள்ள கூட பெருசா சொல்லிக்கமாட்டேன். ஆனா என்னை முன்னேயும் போக விடாம நகரவும் முடியாம செய்றது நீ மட்டும்தான். எனக்கு தெரியுது நான் என்னைக்குமே உங்க லெவலுக்கு வரமுடியாதுன்னு அதை இப்படி அசிங்கப்படுத்தித்தான் சொல்லணுமா” கேட்டு அழுதாள்.
சிரஞ்சீவிக்கு கண்கள் கலங்கியது. புவன் “நீ நெனைக்கிற மாதிரி இல்ல தமயந்தி அருணுக்கு..” என்று தொடங்கவும் தமயந்தி “எனக்கு சத்தியமா தெம்பு இல்ல ப்ளீஸ் போதும் உங்க மேனிப்புலேஷன்.. இதனால உங்களுக்கு எல்லாம் என்ன சந்தோசம் கிடைக்க போகுதோ தெரியல நான் சொல்றேன் எனக்கு போதும் இதுக்கு மேல தோற்க என்கிட்டே எதுவுமே இல்ல ” என்றவள் அழுது அழுது ஓய்ந்து போனாள்
அருண் அவள் அழுகை சகியாது “சரி சொல்லு இப்ப நான் என்ன செய்யட்டும் நீ சொல்றத நான் செய்றேன்” கேட்டான்
தமயந்திக்கு அவன் கேட்ட விதம் அவள் எதோ ட்ராமா போடுவது போலவும் அவன் சமாதானம் செய்ய கஷ்டப்படுகிறான் போலவும் தெரிய… புரிந்தும்புரியாத மாதிரி பேசுபவன் தானே இவன்… இந்த நடிப்புக்கு குறைச்சல் இல்லை என கோபம் எகிற “ நீ என் கண்ணு முன்னாடியே வராத இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எரிந்து விழுந்தாள்.
அவள் கோபத்தில் அழுத்தம் உணர்ந்தவன் “சம்பந்தமில்லன்னு சொல்லாத நம்ம பேச வேண்டியது நிறைய இருக்கு ஆனா இப்போ நீ ரொம்ப எமோஷனலா இருக்க அதனால விட்டுட்டு போறேன்.கண்டிப்பா ஒரு நாள் வந்து உன்கிட்ட பேசுவேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
தமயந்தி திக்கு தெரியாத காட்டில் நிற்பது போல் நின்றாள்.
தமயந்தி கோபமும் அழுகையும் ஆத்திரமும் அடங்க ஒரு வாரம் எடுத்தது. கல்யாண் தமயந்தியை அழைத்து “நீ வேலைய இங்க கண்டினியூ பண்ணித்தான் ஆகணும் வேலைய விட்டு எல்லாம் நிக்க முடியாது, நின்னா ரெண்டு கோடி கட்டு” என்றார்
இயலாமையுடன் சேர்ந்த கோபம் திரும்பவும் அழுகையில் வெடித்தது.
எதிர்பாராத இந்த திருப்புமுனையில் அருண் உடைந்து போனான்.
எங்குமே நிம்மதி கிடைக்கவில்லை எதிலுமே மன சாந்தி அடையவில்லை. கடலோர பப் ஒன்றில் கடல் அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அருண்.தேவ் அங்கே வந்தவன் அவன் முகம் பார்த்து “என்னடா இங்க இருக்க உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எங்கே” விசாரித்தான்
அருண் தயங்காமல் ” சுஷ்மா மேடம் லண்டன்ல கிரீன்விச் யுனிவர்சிட்டியில் இருக்காங்க. உனக்கு அவங்க கிட்ட பேசணும்னா போன் நம்பர் கூட வாங்கி தரேன் பேசு” என்றான்
தேவ்க்கு துக்கம் தொண்டையை அடைத்தது ” என்ன இப்படி திடீர்ன்னு! தகவல் எல்லாம் சொல்ற”
அருண் “அவங்க அங்க வொர்க் பண்றது உங்க அப்பாக்கு தெரியும் அதனால போய் உங்க அப்பா கிட்ட கேளு ஏன் இப்படின்னு” என்றான்
தேவ் “வேணாம்டா என் உடம்பு இருக்கிற நிலைமைக்கும் நான் இருக்கிற நிலைமைக்கும் அவ என்கூட இருக்கிறத விட அவளுக்கு சந்தோஷமான இடத்துல இருந்தாலே போதும்” என்றான் சலிப்பாக.
அருண் கண்களில் நீர் தேங்க “என்னால் இந்த வலிய தாங்க முடியல ரொம்ப லோன்லியா இருக்கு. என்னிக்கோ ஒருநாள் அவளோட நான் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு நம்பிக்கையில என்னென்னமோ பண்ணிட்டு இருந்தேன். அதுவே அவளுக்கு என்ன பிடிக்கலையோன்னு சந்தேகம் வரப்போ எனக்கு வாழவே பிடிக்கல. உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம் அவங்க கிட்ட பேசிட்டு லைஃப்ல மூவ் ஆன் ஆகு” என்றான் அவன் மன காயங்களில் குருதி வழிய…
தேவ் “புரியுது” என்றவன் “தயவுசெஞ்சு என்னை போல உடம்ப கெடுத்துக்காத நான் ஆல்கஹால் அடிக்ட் ஆன மாதிரி நீயும் ஆகாத. போய் வேற ஏதாவது உருப்படியான வேலையை செய் உனக்கு சான்ஸ் கிடைக்கிறப்போ அவ கிட்ட போய் பேசு… ஒருநாள் எல்லாத்துக்குமே முடிவு வரும். ஹெல்த்த வேஸ்ட் பண்ணாத” அறிவுறுத்தினான்.
தமயந்தி திரும்பவும் ஸ்கை புரொடக்சன் சென்று வேலையில் அமர்ந்தாள். கொஞ்சமும் யோசிக்காமல் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் ‘கமிட்’ ஆகி நான்கு மாதம் வேறு எந்த படமும் தயாரிக்காமல் அந்த படத்திலேயே ஓட்டினார்கள். புதிய முயற்சிகளை ஊக்குவிப்பவள் எதையும் செவி கொடுத்து கேட்க கூட பிடிக்காமல் ஒதுக்கினாள். அத்தனை நாள் மெனக்கெட்டு வளர்த்த நிறுவனம் அவள் கண்டுகொள்ளாமல் விட்டாலும் சீராக செயலாற்றி லாபமே ஈட்டிக்கொடுத்தது.
அருண் தமயந்தி சொன்ன படத்தில் வில்லனாக நடிக்க அடுத்தடுத்து ‘வில்லன் ரோல்’ வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக வெளியே தெரிய தொடங்கினான். கூடவே மாமன்கள் அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷனை தொந்தரவு செய்ய கொஞ்சமும் யோசிக்காமல் இருவரையும் அவர்களுக்கு உரிய தக்க இடத்தில் நிறுத்தினான். ஒருவர் எப்போதோ செய்த குற்றத்திற்கு சிக்கி மூன்று வருட சிறை தண்டனைக்கு செல்ல இன்னொருவர் கோர்ட் கேசுக்கு பயந்து தலைமறைவானார்.
தமயந்தியுடனான பிரச்சனையில் கல்யாண் இன்னமும் வெறியேறிய நாய் போல நடந்துக்கொள்ள பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க சென்றவன் அருண் அவன் தந்தை வீட்டிலேயே தங்கவும் செய்தான். சிறுத்தைகள் தான் எப்போதும் தங்கள் புள்ளிகளை மாற்றிக் கொள்ளாதே! அருந்ததீயையும் அருணையும் சித்திரைவதை செய்துக்கொண்டிருந்தவர் தானே! அதே போலவே அவர் இரண்டாவது மனைவியும் மகள்களையும் விரட்டி விரட்டி தன் வக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்தார்.
அருந்ததியை சிறுமைப்படுத்தவே அருணை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார் கல்யாண என்பது புரியவும் எளிமையாக அவருக்கும் தக்க தண்டனை ஏற்பாடு செய்தான். திடீரென ஒருநாள் மும்பையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று திவால் ஆனது, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் திவாலான நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கு வெளியாகி உரிமையாளரை கைது செய்தனர். ஸ்கை ப்ரொடக்ஷன் கொஞ்சமாக வரி விசாரணையில் ஆட்டம் கண்டு மீடியா வெளிச்சம் பட்டு எந்த வரி ஏய்ப்பும் இல்லையென தீர்ப்புடன் வலுவாக ஊன்றி நின்றது. உரிமையாளரை காட்டிலும் நிர்வாக இயக்குனரின் நேர்மையே ஸ்கை ப்ரொடக்ஷன் வெற்றிக்கு காரணம் என யூடியூப் செய்திகள் எல்லாம் தமயந்தி புகழ் பாடியது.
காலம் அதன் போக்கில் செல்ல தமயந்தியின் மனநிலை எல்லோருக்கும் சோகத்தை கொடுத்தாலும் அவளை உற்சாகப்படுத்த என்ன பாடுபட்டலும் யாராலும் முடியவில்லை.
பூமிகாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்ததும் அதை காண சென்றவள் ஒன்றரை வருடம் கழித்து அங்கே அருணை சந்தித்தாள். மூச்சடைத்தது ஆனாலும் சுதாரித்து நின்றாள். அருணுக்குமே அவளை போலவே உயிர் உடல் உலகம் எல்லாமே ஆட்டம் கண்டது.
பெரிய மகள் திருமணம் வேண்டாமென சொல்வதில் எரிச்சலானவர் தமயந்தியின் அம்மா அவள் தங்கைக்கு அவள் விரும்பும் பையன் வீட்டில் பேச சம்மதித்தார். கடகடவென கல்யாணம் வர வந்துவிட்டது. தமயந்தி தங்கைக்கு அவள் ஆசைப்பட்டது போல கடலோர ரிசார்ட்டில் ‘ட்ரீம் வெட்டிங்’ ஏற்பாடு செய்தாள். திருமணத்திற்கு புவன் பூமி சிரஞ்சீவி என எல்லோரும் ஜோடியாக வர வரவேற்பு நிகழ்ச்சி ஜொலித்தது. எதிர்பாரா விருந்தாளியாக நுழைந்தான் அருண்.
அதிர்ந்த தமயந்தியிடம் தங்கை “நாம கூப்பிட்டு தான் அவர் வந்திருக்கார்” என்றாள்
பூமிகா “இப்படி தினம் தினம் தூங்க முடியாம சாப்பிட முடியாம அழுதுட்டே இருக்குறதுக்கு பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு தூக்கிப்போட்டுட்டு வேற வேலையை பார்க்கலாம்” என்றாள்
அவள் தாயோ “நான் உன்கூட கடைசி வரை துணையா இருக்க முடியுமா என்ன! அந்த பையன் கூட பேசிப்பாரு புடிக்கலன்ன சொல்லு கொஞ்ச நாள் விட்டு வேற பக்கம் பார்க்கலாம்” என்றவர் நெஞ்சை நீவிக்கொண்டார். தமயந்திக்கு தாயின் செய்கை பயமுறுத்த அவரோ “எனக்கு திருப்தி வேணும், என் ரெண்டு பொண்ணுங்களும் ஜாம் ஜாம்ன்னு இருக்காங்கங்கிற நிம்மதி வேணும்… உனக்கு அவரை பிடிக்கும்ன்னு சொன்னாங்க அதனாலதான் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தார். பேச வார்த்தையின்றி நின்றாள் மகள்.
அருண் பேசலாமா என்று கேட்கவும் ஒத்துக்கொண்டவள் அவனுடன் கடல் வரை நடந்துசென்றவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அலைக்கடலை வெறித்தவன் “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தமயந்தி ஐ ரியலி லவ் யூ” என்றான்
தமயந்தி நக்கலாக சிரித்தவள் “அதனால தான் என்ன முட்டாள் போல நடத்துனியா” கேட்டாள்
அருண் “நான் எப்பவும் அப்படி உன்னை நெனச்சுதும் இல்ல நடத்துனதும் இல்லம்மா” என்றான் உள்ளார தவிப்புடன்
தமயந்திக்கு அழுகை வந்துவிடுவது போல இருக்க அதை அடக்கிக்கொண்டு “நீ எப்பவும் உன் இஷ்டப்படி தான் நடந்துக்குவ, என்னையும் நடக்க வைப்ப, உன்ன பத்தி உண்மையா எனக்கு எதுவுமே தெரியாது ஆனா என்னை பத்தி உனக்கு எல்லாமே தெரியும் ஈஸியா என்னை உன் இஷ்டத்துக்கு மேனிபுலேட் பண்ணிடுவ… நெஜமாவே இதெல்லாம் நெனச்சா எனக்கு கோவமா வருது” என்றாள்
அருண் “எனக்கு ஷார்ப் சென்ஸ் தமயந்தி. என்னால ஒருத்தர் என்கிட்டே எதுக்கு பேசறாங்கன்னு உணர முடியும். என் இஷ்டத்துக்கு ஒருத்தர ஆட வைக்க முடியும். உண்மையா சொல்றேன் என்னிக்குமே அந்த அறிவையோ திறனையோ உன்கிட்ட நான் பயன்படுத்தியதே இல்ல. உனக்கு என் மேல எவ்வளவு ஈர்ப்பு இருக்கோ அத விட அதிகமா எனக்கு இருக்கு தமயந்தி” என்றவன் அவள் முகம் நோக்கி கைகள் நீட்ட விலகியவள் “இல்ல அருண் அந்த அட்ராக்ஷன் விஷயம் இல்ல, இங்க விஷயமே என் மனசும் ஆசையும் நானும் உன்னை நம்பி நம்பி ஏமாறுறதுதான்” என்றாள் கண்களில் நீர் வழிய
அருண் “சத்தியமா கண்ணம்மா உன்னை என்னிக்குமே நான் கஷ்டப்படுத்த நெனைச்சதே இல்லம்மா… உனக்கு என் நிலைமை சொன்ன புரியுமா தெரியல. எனக்கு நீ உன் உண்மையான அன்பு பாசம் காதல் எல்லாம் ரொம்ப பெரிய பொக்கிஷம். நான் கொஞ்சம் என் அப்பா அம்மா மாமனுங்க இஷ்டபடி நடக்கலன்னாலும் என் கூட இருக்கிறவங்களும் கஷ்டப்படற மாதிரி ஆகும். இதுல நீ என் பலவீனம்ன்னு தெரிஞ்சா போதும் உன்ன என்ன வேணாலும் செய்ய வாய்ப்பு இருக்கு. எனக்கு நீ என் கூட இருக்கிறதவிட உயிரோட இருக்கணும் அது எனக்கு பெருசா தெரிஞ்சது”
தமயந்திக்கு வார்த்தை வரவில்லை. அவள் துக்கம் கொஞ்சமும் குறையாமல் இருக்க கொஞ்சமும் அணையாமல் இருக்கும் அந்த கோபத்தை வெளியிட்டாள் “நீ அந்தாள் பையன்னு சொல்லாம விட்டது எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. அவனை தினம் திட்டின்னா தான் எனக்கு தூக்கமே வரும். அவனை போல சைக்கோ நான் பார்த்ததே இல்ல. அந்தாள் நாம எவ்வளவு பெருசா சாதிச்சாலும் அதை ரெண்டே நிமிஷத்துல ஒண்ணுமே இல்லாத விஷயமா பேசுவார். அப்படிப்பட்டவர் பையன்னு மறைச்சது நீயும் அவர போலன்னு எனக்கு நினைக்க நினைக்க என்னமோ மாதிரி இருக்கு… அன்னிக்கு முத்தம் கொடுக்குறப்ப கூடவா சொல்ல முடியாம போச்சு… நான் ரொம்ப பெரிய கனவெல்லாம் கண்டுட்டேன் ஆனா நீ என்னை உடைக்கவே பார்த்துருக்க” அழுதாள்
அருண் “எனக்கு அன்னிக்கு அங்க வந்துதான் தமயந்தி என் பேருக்கு மாத்த என்ன கூப்பிட்டிருக்காங்கன்னே தெரியும். உன்கிட்ட சொல்லவர்றப்பல்லாம் தயக்கம் தடுக்கும்.. கோச்சுக்கிட்டு போயிடுவியோ பயமா இருக்கும்”
தமயந்தி “ஹ்ஹ அருந்ததீ பிலிம் கார்ப்பரேஷன் அருணுக்கு பயமா அதுவும் என்ன பார்த்து பயமா என்னை நம்ப சொல்றியா” கேட்டாள்
அருண் “சத்தியமா எனக்கு நீ எங்க என்ன விட்டு போய்டுவியோன்னு பயம். அந்த பயத்தை எப்படி சொன்னா புரியும்ன்னு எனக்கு தெரியல கண்ணம்மா ஆனா நீதான் எனக்கு உயிர் உலகம் எல்லாமே”
திட்டவோ பேசவோ ஆயிரம் கோபம் உள்ளே குமைந்தாலும் நெஞ்சமோ “நீ விட்டுட்டு போயிட்டல்ல… எனக்கு நீ எவ்வளவு முக்கியம்ன்னு தெரிஞ்சுக்காமயே விட்டுட்டு போயிட்டல்ல” என்றே புலம்பியது
கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு தமயந்தி “அதெப்படி அருண் கல்யாண் ஒரு கேஸ்ல சிக்கி ஜெயிலுக்கு போயிட்டார் உங்க மாமாவும் ஜெயிலுக்கு போனார்? உன் தலையீடு இல்லாமலா இதெல்லாம் நடந்துச்சு”
அருண் “ஆமா அதெல்லாம் என் பிளான்தான்” என்று ஒத்துக்கொள்ளவும்
சட்டென அணைந்த கோபத்தை நினைத்து அவளுக்கே ஆச்சர்யம் தான்.
தமயந்தி “அப்போ நீ என்னையும் உன் இஷ்ட்டத்துக்கு ஆட வைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்” கேட்டாள்
அவளுடன் அவனை இணைத்து எதிர்காலம் எண்ணி கேள்வி கேட்கிறளே! மகிழ்ச்சியில் அருணுக்கு சிரிப்பு வந்தது “கண்டீப்பா மாட்டேன்மா… உன் இஷ்டப்படி நடந்துக்கறேன்… கல்யாணம் பண்ணிக்கலாம் இனி எதுவும் உன்கிட்ட நான் மறைக்க மாட்டேன்… ” என்றான் குழந்தையை சமாதானம் செய்வது போலே
அவன் சிரிப்பில் தமயந்திக்கு மனம் இளகியது “நிறைய திட்டனும் தோணுது ஆனா என் அம்மாவுக்கு நெஞ்சு வலி எல்லாம் வருது. உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன் ஆனா மன்னிக்கவெல்லாம் மனசு வரல”
உள்ளம் குதூகலிக்க சிரித்தான் அருண் “சரி கல்யாணம் பத்தி அம்மாக்களை பேச சொல்றேன். நான் என்ன பண்ணா மன்னிப்ப சொல்லு செய்றேன்”
தமயந்தி “தெரியல… ஆனா எனக்கு மனசே ஆறலை” என்றவள் விலகி நடந்து வந்துவிட்டாள்.
அருணுக்கு மகிழ்ச்சியில் சிரிப்பு அடங்கவேயில்லை. சிரித்துக்கொண்டே இருந்தான். அவனை உண்மையாக சிரிக்க வைக்க அவளால் மட்டுமே முடிகிறது…