தங்களது வீட்டின் பிரம்மாண்டமான தேக்கு மரத்தாலான படிக்கட்டின் வழியாக வெள்ளை நிற வேட்டி சட்டையில் ஆறடி உயரத்தில் ஆண்மையின் இலக்கணமாய் கம்பீரமாக இறங்கி வந்துக்கொண்டிருந்த தனது மகனை பூரிப்புடன் பார்ப்பதற்கு பதிலாக ஒரு வித கலக்கத்துடனே பார்த்திருந்தார் அவனது தாய் வேலாம்மாள்.
தாயின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் ‘எதற்கென்று’ அறிந்தவனாய் தன் கத்திப்போன்ற கூரிய விழிகளால் துளைத்தப்படி வந்த ருத்ரமூர்த்தியின் கண்களில் தெரிந்த கனல் கண்டு சட்டென்று கண்ணீரை உள்ளிழுத்த அவனது தாய் அடைத்த தொண்டையை செருமி “வாய்யா ராசா…சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாய்யா?” என வாஞ்சையுடன் வினவினார்.
அவனின் மனதில் தேங்கியிருக்கும் இறுக்கத்தை போலவே தானும் அழுத்தமானவன் என்பதற்கு ஏற்ப ஆடவனின் முகத்திலிருந்த உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தாயின் வார்த்தைகள் அவனது செவியில் விழாதது போல் தோன்றினாலும் தன் கரங்களை நீரினால் சுத்தம் செய்துக்கொண்டு தரையில் சம்மணமிட்டு உணவருந்துவதற்காக அமர்ந்தான்.
உடனே,தன் அறுபது வயதை பொருட்படுத்தாமல் வேகமாக விரைந்து சென்று வாழை இலையில் அவனிற்கான உணவை பரிமாறினார்.
உணவின் சுவை அறியாதவன் போல் இலையிலிருந்த அத்தனையும் வீணாக்காமல் அள்ளி சாப்பிட்டு விரைவாகவே எழுந்து சென்று கரங்களை சுத்தம் செய்துக்கொண்டு பருத்தி நூலாலான துண்டில் துடைத்தப்படி வெளியே வந்தவன்,தாயிடம் ஒரு தலையசைப்புடன் வெளியே புறப்பட ஆயுத்தமானான்.
அவனது வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்க்கவைப்பது,சிப்பிக்குள்ளிலிருந்த முத்தை வெளியே எடுப்பதை விட மிகுந்த சிரமமானது.
அவனை முதன்முறை பார்க்கும் யாவரும் அவனை வாய் பேசமுடியாதவன் என்றே எண்ணிக்கொள்ளும் அளவு அமைதியானவன்.
ஆனால் பல பேரிடர்களை உள்ளடக்கிய ஆழ்கடலை போல் ஆழமானவன் இந்த ருத்ரமூர்த்தி என்பதை அவனை நன்கு தெரிந்தவர் மட்டுமே அறிந்த நிஜம்.
பெயருக்கு ஏற்றாற் போன்று ஆக்ரோஷமானவன் என்றாலும் அதை அடக்கி ஆளும் மாயம் அறிந்த வித்தைக்காரனும் கூட!!
அதுவரை அவனது நடவடிக்கைகளை சமையலறையின் உள்ளிருந்து அவதானித்திருந்த மனையாளிற்கும் இன்றைய நாளை எண்ணி வேதனை நெஞ்சை புழுவாய் அரித்தது.
அவன் உணவருந்திவிட்டு வெளியே கிளம்புவதை அறிந்து அவசரமாக அவனின் முன்பு ஓடி வந்தவள் “மாமா நானும் உன்கூடவே வரேன்” என்றவுடன்,
அவளை மேலிருந்து கீழாக ஒருமுறை பார்த்திருந்தானே ஒழிய அவனது முகத்தில் எத்தகைய பாவமும் வெளிப்படவில்லை.
அதனால் அவளின் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிவிட்டு அவளை ‘வா’ என்றும்,’வரவேண்டாம்’ என்றும் வாயால் கூறாமல் பெண்ணவளை தாண்டி வண்டியை நோக்கி வேக நடையுடன் சென்றிருந்தான் ருத்ரமூர்த்தி.
அவனது அந்த பார்வையே ‘பின்னால் வா’ என்று அழைத்ததை அறிந்தவளாய் மாமியாரிடம் திரும்பி “அத்தை நான் போயிட்டு வரேன்” என்றாள் கரகரத்த குரலில்.
ஒரு முறை இதழ்கடித்து விடுவித்தவள் கண்ணீரோடு “இல்லை” என்று மட்டும் தலையசைத்துவிட்டு கணவன் பின்னோடு சென்றுவிட்டாள் சந்திரநிலா.
எந்த ஒரு தாயும் மகனும் மருமகளும் ஒன்றாக வெளியே செல்லும் போது சந்தோஷமாக வழியாக அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் ருத்ரமூர்த்தியின் அன்னையோ மகனும் மருமகளும் ஒன்றாக பயணிப்பதை எண்ணி பெரும் வேதனை கொண்டார்.
ஏனெனில் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக செல்லவிருப்பது,இல்லறத்தில் சிறந்து விளங்கும் எண்ணத்தோடு அல்லாமல் பிரிந்து செல்லும் மார்க்கம் தேடி நீதிமன்றத்தை நோக்கி பயணிக்கவிருப்பதே அந்த தாயிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்க வைத்திருந்தது.
ஆம்,இன்று அவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகப்போகும் நாள்.
அனைவரும் காதலை கல்யாணத்திலிருந்து ஆரம்பிப்பார்கள்.ஆனால் இவர்களது காதல் சற்றே வித்தியாசமாக விவாகரத்திலிருந்து தொடங்கப்போகிறது.