தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தமிழ் பாரம்பரியமிக்க தொன்மை நகரம் தான் தஞ்சாவூர்.
இது தஞ்சை என சுருக்கமாக அழைக்கப்படுக்கிற நிலையில்,தஞ்சை என்ற சொல்லுக்கு ‘குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி’ என்று பொருள்.
ஏனெனில் அம்மாவட்டத்தை சுற்றிலும் உள்ள கிராமங்கள் யாவிலும் அழகிய பச்சையாடை போர்த்திய வயல் பரப்புகளும்,கூடவே தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்கள் அடங்கிய தோப்புகளும் நிறைந்ததிருந்தது.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களுக்கு முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் விளைவிக்கும் மாவட்டமாக தஞ்சாவூர் திகழ்கிறது.
அத்தோடு உலக பாரம்பரிய சின்னமாகவும்,உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது.
மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம்,தபேலா,தம்புரா போன்றவை இங்கு தான் தயாரிக்கபடுகின்றன.
தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.(புவிசார் குறியீடு என்பது 1999ம் ஆண்டு இந்திய அரசாங்கம் சில சிறப்பு வகைப் பொருட்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.அந்த பொருட்கள் அனைத்திற்கும் ஒரு குறியீடு கொடுத்து கௌரவப்படுத்தியது.
உதாரணம்: தஞ்சாவூர் விணை என்று பெயரில் வேறெங்கும் பொய்யாக தயாரித்து விற்கமுடியாது)
தஞ்சாவூர் களிமண் சார்ந்த பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதில் சிறந்து விளங்குவதோடு,அதிலும் இவர்களின் தலையாட்டி பொம்மைகள் உலக பிரசித்தப்பெற்ற ஒன்றாகும்.
இத்தகைய பல சிறப்புகள் கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவீரப்புத்திரம்(கற்பனை) என்ற ஊர் வீரத்திற்கு என்றே பெயர் பெற்றது.
அவர்களது குலத்தொழில் விவசாயம் மற்றும் குயத்தொழில் என்றாலும்,ஏறு தழுவுதல் அவர்களின் மரபு வழி வந்த வீர விளையாட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் ஏறு தழுவதலின் சொர்க்கப்பூமியாக திகழ்ந்தாலும்,பொங்கல் திருநாளை ஒட்டி இந்த போட்டி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நடைப்பெறுகிறது.
இந்த ஏறு தழுவதல் தமிழர்களின் வீர விளையாட்டு என்றப்போதிலும் இந்த திருவீரப்புத்திர ஊர் மக்களை பொறுத்தவரை அவர்கள் மண்ணின் கௌரவமே இதில் தான் அடங்கியிருக்கிறது என்பது போல் இதனை தங்களின் உயிர்மூச்சாகவே பின்பற்றுவார்கள்.
ஊரிலிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் சார்ப்பாகவும் இளைஞர்கள் களமிறங்கி தங்களின் வீரத்தினால் கட்டிளம் காளையை அடக்கி தங்கள் ஊரின் பெயரை நிலைநாட்டி காலம் காலமாக அவர்கள் ஊருக்கு இருக்கும் பெருமையை நீடித்து நிலைக்க வைத்துக்கொள்வார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் திருவீரப்புத்திரத்தில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டை காண்பதற்கு சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ள மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மைதானத்தை சுற்றிலும் கூடியிருந்தார்கள்.
மைதானத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையே மரத்தடுப்புகள் அமைத்திருந்தார்கள்.
இதில் 500 மாடு பிடி வீரர்கள் கலந்துக்கொண்டதோடு,500க்கும் மேற்பட்ட மஞ்சு விரட்டு காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு கொம்பு சீவி தயார் நிலையில் இருந்தது.
அந்த வீரர்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆடவர்கள் திருவீரப்புத்திர ஊரை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் தங்களுக்கு என்று வழங்கிய நீல நிற உடையுடன் காளையின் மீது பாய காத்திருக்கும் சிங்கங்களாய் மீசை முறுக்கி கர்ஜனையோடு காத்திருந்தார்கள்.
அவர்களுக்கு இணையான உக்கிரம் குறையாமல் நீண்ட கொம்புகள் வைத்த காளைகள் மைதானத்தை நோக்கி சீறி பாய உஷ்ண பெருமூச்சுடன் அனல் பறக்க தலையை சிலுப்பிக்கொண்டு தயாராக இருந்த நிலையில்,வாடி வாசலுக்கு சற்று வலதுப்புறமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்த விழாவை தலைமை தாங்க வந்திருந்த மாவட்ட ஆட்சியாளர் கொடி அசைத்து விளையாட்டு தொடங்குவதற்கு ஆயுத்தமாகினார்.
சுற்றியிருந்த மக்களும் ஆரவார குரல்களை எழுப்பி வீரர்களை கரகோஷம் எழுப்பி ஊக்கப்படுத்தினார்கள்.
இந்நிலையில் மைதானத்தின் உள்ளே காளையின் மீது பாய்வதற்கு தயாராக இருந்த வீரர்களில் ஒருவன் மட்டும் தனித்து தெரிந்தான்.
மற்றைய வீரர்கள் அனைவரையும் உயரத்தில் குள்ளமாக்கி அபரிமிதமான உயரத்துடன்,மாநிற தேகம்,எதிரிகளை துளைத்தெடுக்கும் கத்திப்போன்ற கூரிய கண்கள்,முறுக்கிய அடர்ந்த மீசை,முரட்டுத்தனமான உடற்கட்டுடன்,முறுக்கேறிய புஜ பலங்களுடன் வெற்றிப்பெற வேண்டும் என்ற நெஞ்சுரத்துடன் விழியில் தீப்பொறி பறக்க காளைகளுக்கு இணையான ஆக்ரோஷத்துடன் இரண்டு கரங்களையும் விரித்து அவைகளுக்கே சவால் விடும் தீரனாய் நின்றிருந்தான் ருத்ரமூர்த்தி.
கீழே குனிந்து தன் கரம் கொண்டு மண்ணை அள்ளி இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து தேய்த்து கால்களை விரித்து வைத்து வேட்டையாடும் சீற்றத்துடன் தன்னுடைய ஊரை சேர்ந்த ஆட்களுக்கு கண்ணாலே தயாராக இருக்கும்படி ஆணைப்பிறப்பித்தான்.
ஆட்சியாளர் மீது ஒரு கண்ணும் வாடி வாசலில் இருக்கும் காளையின் மீது ஒரு கண்ணும் வைத்திருந்த ஆடவன்,ஆட்சியாளர் கொடி அசைத்த அடுத்த வினாடியே வாசலை உடைத்துக்கொண்டு 10 அடி உயரத்திற்கு மேலாக எம்பி திமிறிக்கொண்டு காளை வெளியே வந்தவுடன்,வாசலை நெருங்கி நின்றிருந்த தன் ஆட்களுக்கு கண்ணாலே எச்சரிக்கை செய்து விலகும் படி கூறியவுடன்,அவர்களது ஊர் ஆட்கள் சிலர் அந்த காளையனின் கொம்பிற்கு இரையாகாமல் மயிரிழையில் உயிர் தப்பித்தனர்.
‘கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்’ என்னும் பழமொழிகளுக்கு ஏற்ப முதலாவதாக வெளிவந்த அந்த ஒரு காளையே இருபதிற்கும் மேற்பட்ட ஆட்களை குத்தி காயப்படுத்தி மைதானத்தின் பரப்பளவை நோக்கி அசுரவேகத்தோடு ஓடியது.
காயம் பட்ட வீரர்களை களத்தில் இருந்த மருத்துவ குழுவை சேர்ந்த ஆட்கள் அழைத்து செல்ல மைதானத்திற்குள் நுழைந்தனர்.
காளை முன்னால் ஓடிய வேகம் கண்டு வீரர்களும் சுற்றியிருந்தவர்களும் ஆசுவாச பெருமூச்சு விடுவதற்குள்,திமிறிக்கொண்டு காளை மீண்டும் இவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஆவேசமாக துள்ளிக்கொண்டு வந்தது.
மண் புழுதி பறக்க அது திரும்பி வந்த வேகத்தில் இரண்டு உயிர்களையாவது பலிக்கொடுக்கும் என்று எண்ணியிருந்த சமயத்தில் அது விளையாட்டு வீரர்களை விடுத்து மருத்துவ சேவைப்புரியும் பணியாளர்களை நோக்கி பாய்ந்து வருவதை கண்டு,கூட்டத்திலிருந்த அத்தனை மக்களும் மிரட்சியில் கூச்சலிட தொடங்கினார்கள்.
ஆட்சியாளரும் பதட்டத்தில் எழுந்து மேடையின் முன் வந்து பதட்டத்துடன் நின்றிருக்க,வீரர்கள் சிலரும் அந்த காளையின் எண்ணம் உணர்ந்து அதை தடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்து அவர்கள் அதன் உடலின் உலுக்கினால் தூக்கி வீசப்பட்டார்கள்.
அச்சமயம் நொடி நேரத்தில் சற்றும் எதிர்ப்பாராத வகையில் ருத்ரமூர்த்தி அந்த காளையின் முன்னே பாய்ந்து அதன் இரு கொம்புகளையும் பிடித்து அதனை அடுத்த அடி எடுத்து வைக்காமல் தடுத்து நிறுத்த முயன்றான்.
அதுவோ தன் நிதானத்தையெல்லாம் முன்பே இழந்தது போல் மூர்க்கத்தனமாக தன் கொம்பு கொண்டு அவனை தாக்க முயல,ஆடவனோ அது முன்னேறிய வேகம் கண்டு அதற்கு ஈடுக்கொடுக்க இயலாமல் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த இரத்தமும் முகத்தில் பாய கழுத்து நரம்புகள் புடைக்க காலை தரையில் ஊன்றி தனக்கு பலம் ஏற்றியவன்,மற்றைய வீரர்களிடம் கண்ணாலே அதன் திமிலை பிடித்து அடக்கு என்பது போல் கட்டளையிட,
ஒன்றிரண்டு நபர்கள் வந்து அடக்கியும் முடியாமல் சின்ன காயம் கொண்டு கீழே விழுந்து கிடந்த வீரர்களை பார்த்து நரம்புகள் புடைக்க முகம் சிவந்து “ஏய்…எழுந்து வந்து அவங்களுக்கு உதவிப்பண்ணுங்கஆஆஆ” என மக்களின் கூச்சலை மீறி ஒலிக்க முயன்றது அவனது கர்ஜனை குரல்.
அவன் எண்ணியது போலவே அது சிலரின் செவியில் விழுந்து அவர்களும் இவனுடன் இணைந்து ஏறின் மீதேறி தழுவி திமிலை பிடித்து தொங்கி முதல் காளையை இப்படியாக வெற்றி வாகை சூடினார்கள்.
ருத்ரமூர்த்திக்கு ஒற்றையாளாய் காளையின் திமிலை அடக்கியாளும் வல்லமையிருந்தப்போதிலும்,அவன் சற்று நகர்ந்தாலும் அது பணியாளர்களை காயப்படுத்தும் மார்க்கம் இருப்பதினாலே முன்னே நின்று அதன் வேகத்தை மட்டுப்படுத்தினான்.
அந்த காளையோடு விடாமல் போராடிய ருத்ரமூர்த்தியின் உடம்பில் இலேசான காயங்கள் ஏற்பட்டு இருந்தப்போதிலும் வீரம் விளைந்த மண்ணில் பிறந்தவனிற்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஆனால் கூடியிருந்த மக்கள் இவனது சாகசம் கண்டு பலத்த கரகோஷத்துடன் சீட்டியடித்து அவனை பாராட்டினார்கள்.
அவனோ அதற்கெல்லாம் வளைந்துக் கொடுக்காமல் ஒரு சிறிய தலையசைப்புடன் அடுத்த வேட்டைக்காக தயாராகியதை கண்டு ஆட்சியாளரே பெரும் வியப்படைந்தார்.
அருகிலிருந்த விழா குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் “யார் அந்த ஆள்?ரொம்ப தீயா இருக்கான்?” என விசாரிக்க,
அவரோ ஆட்சியாளரை சற்றே வித்தியாசமாக நோக்கி “சார் அவர் தான் இந்த ஊரு பிரசிடன்ட்…அதுமட்டுமில்லாமல் இந்த ஊரில் இருக்கிற பாதி சொத்துக்கள் அவங்க குடும்பத்தை சேர்ந்தது தான்…சொல்லப்போனால் ஒத்த மனுசனா பதினெட்டு வயசிலே ஒரு மடங்கா இருந்த சொத்தை அவரோட கடுமையான உழைப்பினால் மூன்று மடங்கா ஆக்கியிருக்கிறாரு…ருத்ரமூர்த்தி ஐயான்னு சொன்னாலே இந்த தஞ்சாவூருக்கே தெரியும்…அவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் ரொம்ப எளிமையானவர்…அமைதியானவர்…” என்றப்படி அவனது புகழாரம் பாட இன்றொரு நாள் போதாது என்பது போல் பேசிக்கொண்டே இருந்தவரின் வார்த்தைகளை அவரும் சுவாரசியமாக கேட்டுக்கொண்டே திடலிலும் ஒரு கண்ணை வைத்திருந்தார்.
அதற்குள் அடுத்தடுத்த காளைகள் மைதானத்திற்குள் நுழைந்து தங்களது பராக்கிரமத்தை காட்ட,ருத்ரமூர்த்தி தனியொருவனாக நின்று இளைஞர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி அவர்களது ஆதரவு கொண்டு அன்றைய நாளில் அனைத்து காளைகளையும் தோற்கடித்திருந்தான்.
இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டப்போதும் ஒரு உயிரை கூட போகவிடாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரையும் காப்பாற்ற வழிவகை செய்திருந்தான்.
இதற்கிடையில் அவன் பாசம் கூட்டி வளர்த்த அவனது மருதுவும் இந்த பந்தயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரில் அவனை கண்டுவிட்டால் குழையும் அவனது மருதுவிற்கோ மைதானத்தில் அவன் என்றுமே எதிரி மட்டும் தான்.
தன் எதிரில் இருப்பவர் யார் என்றெல்லாம் கவனியாமல் மதம் கொண்டு திமிறிக்கொண்டு வந்த அவனது காங்கேயன் காளையை அடக்குவதே அவனிற்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தது எனலாம்.
ஏனெனில்,அவனை அதிகம் காயப்படுத்திய காளைகளில் அதுவும் ஒன்று.
இதனையறிந்த ஆட்சியரே ‘என்னே! இவனது வீரம்’ என சிலாகித்துப்போய் தன்னை மீறி எழுந்து நின்று அவனிற்கு மரியாதை செலுத்தும் வகையில் பலத்த கரகோஷம் எழுப்பினார்.
முதல் நாள் அவனது ஊருக்கு கிடைத்த வெற்றியின் பலனாய் ஊர் மக்கள் அவனை தோளில் சுமந்து தூக்கி கொண்டாடி தீர்த்தப்போதும் அவனது முகத்தில் சிறியதாக ஒரு வெற்றி புன்னகை தோன்றி உடனடியாக மறைந்தும்விட்டது.
அவனது வெற்றியினால் உண்டான மகிழ்ச்சிக்கான ஆரவாரம் எப்போதும் அவ்வளவு தான்.
சில பெண்களோ “மாமா கலக்கிட்டே…” என கத்தி கூக்குரலிட,
வேறு சில பெண்களோ “அண்ணே!சூப்பருஊஊஊ…ருத்ரண்ணானா கொக்கனானா” என திடலே அதிர ஆர்ப்பரிக்க,
திருவீரப்புத்திர இளைஞர்களோ ஒருப்படி மேலே சென்று மற்ற ஊர் ஆண்களை ‘எப்படி?’ என்பது போல் நக்கலாய் பார்த்து பரிகாசம் செய்து வைக்க,
அதைக்கண்டு அவனை தோற்கடிக்க தங்களின் காளைகளுக்கு பலத்த தீவனம் கொடுத்து கொம்பு சீவி அழைத்து வந்திருந்த பக்கத்து ஊர்க்காரர்களுக்கு அவமானத்தில் முகம் கறுத்தாலும்,நாளைய பந்தயத்தில் நிச்சயம் அவனது உயிரை பறிப்போம் என்ற பழிவெறியுடன் வன்மத்துடன் அவனை முறைத்தார்கள்.
ருத்ரமூர்த்தியோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலேசாக இதழை பிதுக்கி அலட்சியம் காட்டியதோடு ‘உன்னால் எங்களின் இதை கூட பிடுங்க முடியாது…போடா’ என்பது போல் சிகையை அழுந்தக்கோதி சிமிக்கை காட்டி விட்டு திமிராக சென்றவனை கொல்லும் வெறி அதிகரித்தது.
ஏனெனில் இது திருவீரப்புத்திரத்திற்கும் சுற்றியிருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் உண்டான மான மரியாதை சம்மந்தப்பட்ட கௌரவம் அடங்கியிருப்பதாலே,இந்த போட்டியும் வெஞ்சினமும்!!
ஆட்சியாளர் போட்டி முடிந்ததற்கு பிறகு ஆடவனை தனியாக சந்தித்து “கங்கிராட்ஸ் மிஸ்டர் ருத்ரமூர்த்தி” என கைக்கொடுத்து வாழ்த்து கூற,
அவனோ சற்றே நிதானத்துடன் அவரை பார்த்து “மன்னிச்சுக்கோங்க…எனக்கு கைக்கொடுத்து பழக்கமில்லைங்க” என அழுத்தமான குரலில் உரைத்து தமிழர் பண்பாட்டின் அடையாளமாய் இரண்டு கரம் குவித்து ‘வணக்கம்’ தெரிவித்தான்.
அவரும் அதனை பெரிதாக கருதாமல் “இட்ஸ் ஓகே ருத்ரமூர்த்தி” என்று இருகரம் குவித்து பதில் வாழ்த்து தெரிவித்தவர் “இன்னைக்கு நீங்க தனியொருவனா நின்னு இந்த ஜல்லிக்கட்டில் சிறப்பா பங்கேற்று,பார்க்கும் பலரின் நெஞ்சை வென்றிட்டீங்க…வாழ்த்துக்கள்” என அவனை பாராட்டினார்.
முகத்தில் எந்த பெருமிதமுமின்றி மார்ப்பிற்கு குறுக்கே கைக்கட்டி “நான் தனியா ஒண்ணும் இதை செய்யலைங்க…என் பசங்க எனக்கு கடைசி வரை உறுதுணையா நின்னாங்க…நாங்கயெல்லாம் ஒண்ணா சேர்ந்து பெற்ற வெற்று தானுங்க” என்றான் சாதாரணமாக.
ஒரு சாதாரண சிறு விடயத்திற்கே ‘நான் தான் இதை செய்தேன்’ என இறுமாப்பு கொள்ளும் மனிதர்கள் வாழும் இந்த காலத்தில் எவ்வளவு பெரிய சாதனை செய்தப்போதும் எந்த கர்வமுமின்றி பேசியவனை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
ஒவ்வொரு முறையும் தன்னையறியாமலே பிரம்மிப்பூட்டும் அந்த மாமனிதனை கண்டு புன்னகைத்தவர் “யூ ஆர் சச் அ நைஸ் மேன் இன் தி வேர்ல்டு” என்று அவனை ஆங்கிலத்தில் பாராட்டி புகழ்ந்தவர்,
அதன்பிறகே தன் தவறை உணர்ந்து முகம் சுருங்க அவன் முகம் பார்க்க அதில் எந்த வித புரியாத பாவனையும் இல்லாமல் இருப்பதை கண்டு ‘என்ன நினைக்கிறான்’ என்றறியாமல் குழம்பியவர் “ருத்ரமூர்த்தி உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” என்று புருவம் சுருக்கி வினவ,
அவனோ நிமிர்ந்து அவரை தன் கூரிய விழிகளால் துளைத்தப்படி “வியாபாரத்துக்காக கொஞ்சமா கத்துக்கிட்டேங்க…ஆனால் சரளமாக பேச வராது” என்றான் தாழ்வுணர்ச்சி சிறிதுமின்றி.
அவனது அத்தகைய தன்னம்பிக்கையும் தன்னிடம் குழையாமல் நிமிர்ந்து நின்று பேசும் விதமும் அவரை கவர்ந்திழுக்க,தன் பெண்ணை அவனுக்கே திருமணம் செய்யும் முடிவை எடுத்தவர் “ருத்ரமூர்த்தி உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா?” என வயதை மீறிய ஆவலோடு வினவ,
“எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகிடுச்சுங்க” என்றான் முகத்தில் எந்த பாவனையுமின்றி.
அவனது பதில் அவரை ஏமாற்றமடைய வைத்தாலும் “ஓ…வாழ்த்துக்கள்” என மனமாற வாழ்த்தியவர் “எங்க உங்க மனைவி இங்க வரலையா?” என சுற்றும்முற்றும் பார்த்தப்படி வினவ,
“வீட்டு பொம்பளைங்க இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு அப்பாரு கட்டுப்பாடு போட்டிருக்காங்க…அவரு இல்லைனாலும் அதை நாங்களும் வழி வழியா பின்பற்றோமுங்க” என்றவுடன்,
“ஏன்?”
“பொம்பளைங்க மனசு இதெல்லாம் பார்த்தால் தாங்காதுங்க…சின்ன காயம் பட்டாவே என் ஆத்தாவெல்லாம் அழுக ஆரம்பிச்சிடுவாங்க…அதுவும் எங்க ஐயா…அதாங்க எங்க அப்பா இந்த ஜல்லிக்கட்டில் தானுங்க உயிரை வூட்டாரு…அதிலிருந்தே அம்மாருக்கு நான் இதிலே கலந்துக்கிறதே புடிக்கலைனாலும் என்னைய தடுக்கமாட்டாங்க…நானும் அவுக மனசு கஷ்டப்பட வேணாம்னு இங்கெல்லாம் வரவேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவனிடம்,
“உங்க மனைவியை கூட்டி வரலாமே?” என்று அவர் வினவினார்.
அதுவரை இருந்த சுமூக நிலை மறைய அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாத அந்த உணர்ச்சிகளற்ற அழுத்தக்காரன் “அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது…நேரமாச்சு நான் கிளம்பறேனுங்க” என இருகரம் குவித்து அவரிடமிருந்து பேச்சை கத்தரித்துவிட்டு கிளம்பிவிட்டான்.
சட்டென்று அவன் இவ்வாறு புறப்படவும் “என்னாச்சு?நான் எதுவும் தப்பா கேட்டேனா?” என அந்த விழா ஒருங்கிணைப்பாளரிடம் புரியாமல் வினவ,
அவரோ முகம் சுருங்கியவர் “சார் அவருக்கும் அவர் சம்சாரத்துக்கும் என்ன பிரச்சனைனு தெரியலைங்க?இரண்டு பேரும் விவாகரத்துக்கு எழுதி கொடுத்திருக்குங்க…ஆனால் அந்தப்புள்ளைக்கு துளியும் விருப்பமில்லைன்னு கேள்வி…அவங்க கேஸோட கடைசி சந்திப்பு கூட வெள்ளிக்கிழமை வரப்போகுது…அதுக்கு பொறவு இரண்டு பேரும் நிரந்தமா பிரிஞ்சிடுவாங்க” என ஆதங்கத்தோடு பெருமூச்சு விடவும் ஆட்சியாளர் அதிர்ந்துப்போனார்.
அமைதியின் திருவுருவமாய் காட்சியளிக்கும் ருத்ரமூர்த்திக்கு பின்னால் இருக்கும் இந்த ஆக்ரோஷ முகம் அவர் சற்றும் எதிர்ப்பாராதது.
சற்று நேரத்திற்கு முன்பு ‘என்னடா மனுசன் இவன்?’ என பெருமைகொண்டவர்,தற்போது ‘என்ன மனுசன்டா இவன்’ என எரிச்சலடையவும் செய்தார்.
அவரை பொறுத்தவரை மனைவியை எக்காரணத்திற்காகவும் விலக்கி வைக்க நினைக்கும் கணவன் என்றுமே ஒரு சிறந்த ஆண்மகன் அல்ல என்பது அவருடைய எண்ணமாய் இருந்தது.
ஆனால் அவரது எண்ணத்தின் நாயகனோ எதற்கும் அசைந்து கொடுக்காதவனாய் காமம்,காதல்,வெறுப்பு,சினம்,துக்கம்,சந்தோஷம் போன்ற எந்தவொரு உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன் என்று அவர் அறியாமல் போனார்.
ருத்ரமூர்த்தியோ தனக்கே உரிய மிடுக்குடன் வெள்ளை வேட்டி சட்டையுடன் கைகளை மடித்துவிட்டு அவனது புல்லட்டில் ஏறி தங்களுக்கு சொந்தமான தொழிற்சாலையை நோக்கி பயணித்திருந்தான்.
ஆனால் அவனுக்கு நேரெதிராக உணர்ச்சிகள் அனைத்தும் ஒன்றாய் பிரதிபலிக்கும் முகத்துடன் கணவனின் வருகையை எதிர்நோக்கி வாசலிலே காத்திருந்தாள் அவனது மனையாள் சந்திரநிலா.
மகன் ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறான் என்று தெரிந்தாலே அவனது தாய் வேலம்மாள் அவன் முழுமையாக எந்த வித காயமுமின்றி வீடு வந்து சேரும் வரை பூஜையறையிலிருந்து எழுந்துக்கொள்ள மாட்டார்.
அவருக்கு குறையாத பதட்டத்துடன் இதயமே வெளியே வந்து துடிக்கும் வகையில் நகத்தை கடித்தப்படி தன் தலைவனிற்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளின் உயிர் இறப்பின் விளம்பை தொட்டு தொட்டு மீண்டுக்கொண்டிருப்பதை பெண்மகள் மட்டுமே அறிவாள்.
இவ்வாறு உயிராயிருக்கும் சந்திரநிலாவை தான் தன்னிலிருந்து பிரிக்க நினைக்கிறான் நம் கதையின் நாயகன் ருத்ரமூர்த்தி.