ருத்ரமூர்த்தி தங்களுக்கு உரிமையான அரிசி ஆலையின் உள்ளே நுழைந்தான்.
நெற்பயிர்களிலிருந்து உமியையும் அரிசியையும் தனியாக பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் இருக்கும் பகுதியை நோக்கி செல்லும் போது,அவ்விடத்தில் சுமார் 80க்கும் அதிகமானோர் பணிப்புரிந்துக்கொண்டிருந்திருந்தனர்.
நேர்க்கொண்ட பார்வையோடு நடந்து வந்து கொண்டிருந்த தங்களது முதலாளியை கண்டவுடன் அந்த ஆட்கள் “ஐயா வணக்கமுங்க” என இருகரம் குவித்து பணிவுடன் வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஆடவனோ தனது வேக நடையை சிறிதும் குறைக்காமல் சிறு தலையசைப்புடன் அவனது அறை நோக்கி சென்றான்.
உள்ளே நுழைவதற்கு முன்பாக வேலன் என்னும் ஒரு இளைஞனை கண்ணாலே தன்னருகே வரும் படி கட்டளையிட்டவன்,அவனிடம் ஒரு வேலையை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு தனது கைசட்டையை முட்டி வரை மடித்துவிட்டவாறே சுற்றிலும் பார்வையை அலையவிட்டான்.
அவனது தேடுதல் முற்றுப்பெற்றுதற்கு அடையாளமாய் இமைகள் இடுங்க “மாரிமுத்து அண்ணே…என் அறைக்கு வாங்க” என்று அவன் அழைக்கும் விதமே ஏதோ விபரீதத்தை அங்கிருப்பவர்களுக்கு உணர்த்தியது.
அந்த மாரிமுத்துவிற்கோ தேகமெல்லாம் வியர்க்க தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறியவர் முகத்தை அழுந்த துடைத்து தோளில் போட்டவாறு ‘ஐயா என்னாத்துக்கு கூப்பிடறாருன்னு தெரியலையே’ என குழப்பத்துடனே மற்றவர்களை திரும்பி பார்த்தப்படியே கதவை திறந்து உள்ளே சென்றார்.
அவர் கதவை சாற்றிய நொடி நேரத்தில் ‘என்ன’ என்று உணர்வதற்கு முன்பே அவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டிருந்தான் ருத்ரமூர்த்தி.
அதில் குப்பென்று வாயிலிருந்து இரத்தம் வர “ஐயாஆஆஆ” என அதிர்ச்சியோடு வாயை பொத்தியப்படி அவனை நிமிர்ந்து நோக்க,
அடிப்பட்ட வேங்கையின் சீற்றத்தோடு அவரை தன் கனல் விழிகளால் உறுத்து விழித்தவன் ‘இந்த அடி எதுக்கென்று உனக்கே தெரியுமே?’ என்பது போல் பார்த்திருந்தான்.
அவரோ அச்சத்தோடு ‘தெரியாது’ என்பது போல் தலையசைக்கப்போனவர்,அவன் மீண்டும் அடிக்க தன் முரட்டு கரத்தை ஓங்கவும் உட்சபட்ச வலியில் “ஐயாஆ தெரி…தெ..ரியுமுங்க” என திக்கி திணறி பதில் அளித்தவரின் இதழ் கிழிந்து குருதி கசிந்தது.
அதனை கொஞ்சமும் இரக்கமின்றி அழுத்தமாக பார்த்த ருத்ரா ஒற்றை காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை இலேசாக தூக்கி மேசையின் மேல் தோரணையாக சாய்ந்து அமர்ந்தான்.
அத்தோடு அவரின் முன் சொடக்கிட்டு ஒற்றை விரல் நீட்டியவன் “இன்னொருக்கா எந்த பொண்ணுக்கிட்டயாவது சில்மிஷம் பண்ணறதை பார்த்தேன்…பார்க்கறே இடத்திலே வெட்டி மண்ணுக்குள்ள புதைச்சிடுவேன்…ஜாக்கிரதை” என கர்ஜனையோடு எச்சரித்தவன் ‘வெளிய போ’ என்பது போல் அதே விரலை அசைத்து ஆணை பிறப்பித்தான்.
அவரோ மனதில் தன்னை நொந்துக்கொண்டு கதவை திறக்கப்போன வேளையில் “பார்த்து உசுரு பத்திரம்” என்ற அவனது சீறலான வார்த்தை அவரின் செவியின் வழியாக நுழைந்து சர்வ அங்கத்தையும் நடுங்க வைத்திருந்தது.
அவரோ அவனது புறம் திரும்பாமலே பதட்டத்தோடு அங்கிருந்து தப்பித்தால் போதுமென வேகமாக வெளியேறினார்.
தவறு செய்பவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் சாந்தமூர்த்தியாக இருப்பவன்,பெயருக்கு ஏற்றது போல் ருத்ரமூர்த்தியாக மாறி ருத்ர தாண்டவம் ஆடிவிடுவான்.
அந்நேரத்தில் அவனது வார்த்தைகளை விட அவனது முறுக்கேறிய கரம் சற்று அதிகமாகவே பேசும்.
வேலையாட்களின் கரங்கள் தன் போலே வேலை செய்துக்கொண்டிருந்தாலும்,வெள்ளை திரைப்போட்டு மறைக்கப்பட்டிருந்த ருத்ரமூர்த்தியின் அறையின் மீதே கண்ணெல்லாம் இருந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த மாரிமுத்துவின் துண்டோ வாயையும் கன்னத்தையும் பொத்தியப்படி இருந்தது.
வீங்கியிருந்த உதடையும் வழிந்த உதிரத்தையும் கண்டு கேள்வி கேட்பவர்களிடம் பதில் கூறி தன்னை தாழ்த்திக்கொள்ள மனமின்றி அவசரமாக வெளியே செல்ல கிளம்பினார்.
ஆனால் அவரது கண்களே ஏதோ மிரட்சியுடன் விரிந்திருப்பதை அனைவருக்கும் எடுத்துரைக்க “மாரிமுத்து என்னாலே ஆச்சு?” என சிலர் அவரை சூழ்ந்துக்கொண்டு கேள்வி எழுப்பிய வேளையில் அறையின் கதவு படாரென்று திறக்கப்பட்டு வந்த ருத்ரமூர்த்தி கூட்டத்தை கண்டு தொண்டையை செருமியவுடன் கல்லெறிந்த காக்காய் கூட்டம் போல் சிதறி ஓடினார்கள்.
ஆடவனோ தன் கைமுஷ்டியை இறுக்கி ஒரு முறை மாரிமுத்துவை பார்த்தப்படி உதறியவன் “சுந்தரம் அண்ணாச்சி” என அவ்விடமே அதிர குரல் கொடுத்தவுடன்,
“சொல்லுங்க ஐயா” என பவ்யமாக தன் முன்னே கைகட்டி நின்ற ஐம்பது வயது மதிக்க தக்க பெரியவரை ஒரு முறை கூர்ந்து நோக்கியவன்,
“மாரிமுத்து அண்ணாவுக்கு இங்கின வேலை செய்ய இஷ்டமில்லையாம்…அதனாலே நம்மோட மாடு பண்ணையிலே சாணி அள்ளற வேலைக்கு ஆளு இல்லைன்னு போன வாரம் சொல்லிட்டு இருந்தீரு இல்லை…அங்கன அனுப்பி வைங்க” என மாரிமுத்துவை கண்ணால் உறுத்து விழித்தப்படி கூறினான்.
அவனது அந்த ஒற்றை பார்வையே மாரிமுத்துவை நடுங்க செய்ய,அதுவே அவர் இழிவான செயல் ஒன்றில் ஈடுப்பட்டு இருந்திருக்கிறார்.அதற்கான தண்டனை தான் இது என்று மக்களை யூகிக்க வைத்திருந்தது.
சட்டென்று சிகையை அழுந்தக்கோதி பார்வையை மாற்றி சுந்தரத்திடம் “அண்ணாச்சி பொழுது சாயந்த பொறவு நம்ப வூட்டுக்கு மண்டி கணக்கை எடுத்துக்கிட்டு வந்திடுங்க” என ஆணையிட்டதோடு தன் பொறுப்பு முடிந்தது போல் அவ்விடத்தை காலி செய்திருந்தான்.
அவனது செயலிற்கு என்றுமே யாரிடமும் விளக்கம் கூறி பழக்கமில்லை.தன் மனதிற்கு தோன்றும் விஷயங்களை மட்டுமே செயல்படுத்தும் ஆணவம் நிறைந்தவன்.
அதேநேரம் பணிச்சுமை பாம்பாய் கழுத்தை சுற்றிய போதும் ஒற்றையாளாய் மிகப்பெரிய சம்பிராஜ்ஜியம் அமைத்து இந்த ஊர் மக்களை கண்ணாலே கட்டியாளும் ஆளுமையானவனும் கூட!!
ஆனால் அவன் ‘என்ன நினைக்கிறான்?’ என்ற உணர்ச்சிகளை அவனின் முகத்தில் ஒரு போதும் வெளிப்படுத்தாமல் எந்நேரமும் இறுகிய பாறாங்கல்லை போலவே வைத்திருப்பான்.
‘கல்லிற்குள் ஈரம்’ அவனிற்குள்ளும் சிறிது கருணை என்று உணர்வு இருக்கிறது என்பதை அவனது செயல்கள் மட்டுமே மற்றவரிடம் எடுத்துரைக்கும்.
சற்று முன்பு கூட,தன் தாயின் மீது அக்கறை கொண்ட தலைமகனாய் முதல் வேலையாக அவர்களது வீட்டிற்கு தான் நலமாக இருப்பதாக வேலன் மூலமாக செய்தி அனுப்பினான்.
ஏனென்றால்,அவன் ஏறு தழுவும் போட்டியில் கலந்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவனது தாய் தனக்காக வேண்டி உண்ணாநோன்பிருப்பதை நினைவில் வைத்தே தாயின் நலன் கருதி அதனை செய்திருந்தான்.
இதற்காக அவன் பலமுறை தாயை கண்டித்து பார்த்தும் அவர் புதல்வனிற்காக கடவுளை நாடி நீர் ஆகாரம் கூடயின்றி சரணடைந்து பிடிவாதத்துடன் இருப்பதினால் வேறுவழியின்றி அன்னையின் வழிக்கே அவரை விட்டுவிட்டான்.
ஆனால் தாயின் மேல் அவன் கொண்டிருக்கும் அக்கறையும் பாசமும் மனையாளின் மீது முற்றிலும் இல்லாதவனாய் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தியிருந்தான்.
அவனவளோ தன்னவனிற்காக ஏங்கும் தலைவியின் நிலையில் நெஞ்சம் அசுரவேகத்தில் துடிக்க வழி மேல் விழி வைத்து காத்திருந்தும்,அவனின் வருகையறியாமல் கண்களில் நீர் பூக்க பாவையவள் அமர்ந்திருந்தாள்.
ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் திகிலோடு கணவனிற்காக காத்திருந்த வேளையில் அவர்களது தொழிற்சாலையில் வேலை செய்யும் இளைஞன் தன்னுடைய மிதிவண்டியில் மூச்சிறைக்க வந்திறங்கினான்.
அவனை கண்டவுடன் ‘கண்டேன் சீதையை’ என்னும் பரவசத்துடன் நெஞ்சமெல்லாம் படபடக்க அவனருகே ஓடி வந்தவள் மிதிவண்டியின் கைப்பிடியில் ஒற்றை கரம் வைத்து “வேலா…வேலா…மாமா…மாமாவுக்கு வாட் ஹேப்பன்ட் டூ மாமா…ஹி இஸ் சேப் ஆர் நாட்?அவருக்கு ஒண்ணுமில்லையே…” என்று தமிழும் ஆங்கிலமும் குழப்பியடித்து அவள் கேட்கும் போதே அவளது குரல் நடுங்கிற்று.
ஆனால் சந்திரநிலாவின் முகத்திலிருந்த தவிப்பே அவனிற்கு அவளின் கேள்விக்கான அர்த்தத்தை கொடுக்க சின்ன சிரிப்புடன் “மதனி அமைதி…அமைதி…எதுக்கு இந்த பதட்டம்…ஐயா நல்லாயிருக்காங்க” என்று கூறியதற்கு பிறகே அவள் நெஞ்சில் கைவைத்து ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டாள்.
ஏனெனில் சந்திரநிலா கல்லூரி படிப்பு முழுவதும் லண்டன் மாநகரில் பயின்றுவிட்டு வந்திருந்த நவநாகரீக யுவதி.
தமிழ் கலாச்சாரங்களை முறையாக பின்பற்றும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,இப்போதும் அவளால் சரளமாக தமிழ் பேச இயலாது.
அத்தோடு மற்றைய நேரங்களில் நிறுத்தி நிதானமாக தமிழ் பேச முயலுபவள்.அளவுக்கு அதிகமான பதட்டமோ கோபமோ அழுகையோ வந்துவிட்டால் அவளது வாய் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் இடையே மாட்டிக்கொண்டு கெட்டு சீரழியும்.
கணவன் நன்றாக இருக்கிறான் என்றதற்கு பிறகே சிறியதாக இதழ்பிரித்து சிரித்தவளின் மான் விழி அழகாய் விரிய “தேங்க் யூ சோ மச் வேலா…உள்ளே வா” என அழைப்பு விடுக்க,
“இல்லை மதினி…ஐயா இப்போ தான் ஆலைக்கு வந்தாரு…வூட்டுலே பெரியம்மா சாமியே கெதியா கிடக்கும்…ஒரு எட்டு போய் விஷயத்தை சொல்லிப்புட்டு விரசா புறப்பட்டு வான்னு விரட்டிவுட்டாரு…லேட்டா போனாக்க ஐயா வையுவாங்க மதினி…நான் வரேன்” படபடவென விடயத்தை பகிர்ந்தவன் நொடியும் தாமதிக்காமல் ஆலையை நோக்கி புறப்பட்டிருந்தான்.
அவனிற்காக அவளும் காத்திருப்பதை அறிந்தும் தன்னை பற்றி ஒரு வார்த்தை கூறிவிடாத கணவனால் மனம் நொந்து அதே இடத்தில் நின்றிருந்தாள் சந்திரநிலா.
‘உனக்கு அப்படி நான் என்ன செய்தேன் மாமா?’ என கண்ணில் வலியோடு இதழ் கடித்து எங்கோ வெறித்திருந்தாள்.
அவர்களது இல்லம் சுற்றி பெரிய மதில் ஒன்று எழுப்பப்பட்டு சுற்றிலும் பசுமையான தோட்டத்துடன் நடுநாயகமாக வீற்றிருந்த ஒரு பழமை வாய்ந்த மாளிகை.
அந்த மாளிகையிலிருந்து நுழைவாயிலை அடைவதற்கே ஐந்து நிமிடங்கள் கடந்துவிடும்.
வேலன் மின்னல் வேகத்தில் ஒரே நிமிடத்தில் வாசல் வரை வந்துவிட்டவன்,சட்டென்று மிதிவண்டியை நிறுத்தி ஒற்றை காலை கீழே ஊன்றி தலையை மட்டும் திருப்பியவன் “மதனிஈஈஈஈ” என ஊருக்கே கேட்பது போல் உரக்க கூச்சலிட்டவனின் குரல் கேட்டு திடுக்கிட்டு அவன் புறம் பார்வையை பெண்ணவள் உயர்த்தினாள்.
அவனோ “ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்…அதையும் சொல்லாமே விட்டுப்புட்டனே ஐயா தூக்கிப்போட்டு மிதிப்பாங்க” என்றவுடன்,
‘ஒருவேளை தன்னை பற்றிய விடயமாக இருக்குமோ?’ என நெஞ்சம் பரபரக்க ஒரு எதிர்ப்பார்ப்புடன் ‘என்ன?’ என்பது போல் ஆவலாக பார்த்தவளிடம் “ஐயா இராவுக்கு தான் வூட்டுக்கு வருவாங்களாம்…அதனாலே அவுக அம்மைய சீக்கிரம் சாப்புட்டு உறங்க சொன்னாங்க” என்றவுடன் அவளிற்கு சப்பென்றானது.
ஏமாற்றம் தந்த வலியோடு ‘சரி’ என்று மட்டும் தலையசைத்தவுடன் “வரேன் மதினி” என இறக்கையில்லாமலே சிட்டாய் பறந்திருந்தான்.
தன் வேதனையிலே உழன்றவளிற்கு தன்னை போலவே மாமியாரும் உண்ணாமல் இருக்கிறார் என்பது நினைவில் எழுந்தவுடன்,சிறிது நேரத்திற்கு தன் துக்கத்தை தூக்கி தூரயெறிந்தவள் “ஆன்ட்டி” என்று கத்தியழைத்தப்படி மாளிகையின் முற்றத்திலிருந்த பிரம்மாண்டமான பத்து படிகளை வேகமாக கடந்து கொலுசு சத்தம் வீடெங்கும் சப்தமிக்க உள்ளே ஓடினாள்.
மூச்சிறைக்க பூஜையறையை நோக்கி ஓடியவளிற்கு புடவை கொசவம் வேறு அவளின் வேகத்தை தடுத்து தடுமாற வைத்தது.
திருமணத்திற்கு முன்பு வரை ஒரு நாள் கூட அவள் புடவை என்ற ஒன்று கட்டியதாக அவள் நினைவில் இருந்தது இல்லை.
ஆனால் கணவனிற்கு புடவையென்றால் இஷ்டம் என்பதை அறிந்தே இப்பொழுதெல்லாம் அவள் சேலை கட்டுகிறாள்.
ஆயினும்,அவனது கண்கள் ஒரு முறையும் அவளின் மேல் காதலாயின்றி ஆராய்ச்சியாக கூட படிந்ததில்லை.
அப்போதும் விடாமல் கணவனின் பூட்டிய இதய கதவின் சாளரத்தின் ஒரு பகுதியையாவது திறத்து மனதினோரத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே கண்ணனிற்கு விருப்பமான ஒவ்வொன்றையும் தவறாமல் செய்துக் கொண்டிருக்கும் மீரா அவள்.
சேலையை முழங்காலுக்கு மேலே வரை தூக்கிப்பிடித்து பூஜையறைக்கு “ஆன்ட்டிஈஈ” என்றப்படி அழைத்து வந்த மருமகளின் குரலிலும்,அவள் ஓடி வந்த வேகத்திலும் அச்சமடைந்த அந்த முதிய பெண்மணி “அம்மாடி…என் ராசாவுக்கு ஒண்ணுமில்லையே” தாயிற்கே உரிய பரிதவிப்புடன் நடுங்கிய கரத்துடன் தரையில் ஊன்றி எழ முயன்றார்.
அதைக்கண்டு பதறி “ஐய்யோ ஆன்ட்டி…வெயிட்” என்றப்படி அவர் அருகே ஓடி வந்து மாமியாரை தூக்கி நிறுத்தியவள் “ஆன்ட்டி எதுக்கு இவ்வளவு வேகம்…பொறா(று)மையா எழுங்க” என கடிந்து அவரை தன் கைவளைவிலே வைத்தாள்.
அவரோ அதனையெல்லாம் சட்டை செய்யாதவராக கண்ணில் நீர் நிறைய “ராசா நல்லாயிருக்கானா?” என மகனின் நலனிலே குறியாக இருக்க,
அவளோ இதழை சுழித்து ‘இந்த நேரத்தில் தான் இந்த இங்கிலிஷ் வரணுமா?’ என தன்னையே நொந்து தன் வாயிலே ஒரு அடி வைத்தவள் “ஆன்ட்டி” என அவரின் பின்னோடு சென்று அவரின் தோள் பிடித்து நிறுத்தினாள்.
மேலும்,வேலன் வந்தது தொடங்கி அவன் சென்றப்போது கூறியது வரை ஒன்றுவிடாமல் கூறியதற்கு பிறகே அந்த தாயுள்ளம் நிம்மதியடைந்தது.
அதன்பிறகே அவரின் நெஞ்சம் தன் மருமகளை நோக்கி திசை திரும்பியது.
என்ன முயன்றும் மருமகளின் குரலில் சிறிது இடர் இருப்பதை அறிந்த அந்த அனுபவமிக்க தாயுள்ளமும் அவை ‘எதற்காக?’ என்று அறிந்து அவளிற்காக வருந்தியவர் “அம்மாடி…எல்லாம் சரியாகிடும்மா” என பெண்ணவளின் கரம் பிடித்து அழுத்தி ஆறுதல் கூற,
அவளோ வலியை மறைத்து வலுக்கட்டாயமாக புன்னகைத்து “இட்ஸ் ஓகே ஆன்ட்டி…நீங்க வாங்க முதல்ல சாப்பாடுங்க…காலையிலிருந்து நீங்க பாஸ்டிங் இருக்கீங்க…இங்க உட்காருங்க” அவரை அமர வைத்து இலையில் உணவை பரிமாறினாள்.
“நிலா கண்ணு உன்கிட்ட எத்தனை முறை சொல்லறது?இந்த ஆன்டி கிண்டியெல்லாம் கூப்பிடாமல் அழகா அத்தைன்னு கூப்பிடுன்னு” என செல்லமாக கடிய,
“ஆன்ட்…” என ஆரம்பித்தவள் பின்பு நாக்கை கடித்து காதை பிடித்து “அத்தே சாரி” என முகம் சுருக்கி மன்னிப்பு வேண்டியவள்,
“நான் என்ன தான் மு(ய)ற்சி செய்தாலும் அப்போ அப்போ ஆன்ட்டி வந்திருச்சு…இல்ல வந்திடுது” தன் தவறை திருத்திக்கொண்டு தமிழ் பேச முனையும் மருமகளை கண்டவருக்கு பெருமிதமாக இருந்தது.
ஏனெனில் திருமணமாகிய புதியதில் அவளின் வாயிலிருந்து பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளே அதிக ஆதிக்கம் புரியும்.ஆனால் இப்போதெல்லாம் பெரும் முயற்சி செய்து தமிழில் பேசுவதற்கான காரணம் மகனின் மனதை மாற்றி அவனோடு இணைந்து வாழும் எண்ணத்தில் என்பதை அறிந்து அந்த தாயுள்ளம் வாஞ்சையுடன் அவளின் தலையை வருடியது.