தாயில்லாத பிள்ளையான சந்திரநிலாவிற்கு அவரது செயல் சுகமாக இருக்க,நன்றாக சாய்ந்து சிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியோடு கண்மூடிய மருமகளின் சிறுப்பிள்ளைதனமான செயலில் அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அத்தோடு அவரது விழிகளோ மருமகளை ஆராய்ச்சியுடன் தழுவ செய்தது.
வெள்ளை நிற அழகிய சருமம்,மயில் தோகை போல் விரிந்திருந்த கூந்தலை இப்பொழுதெல்லாம் ஒரு சிறிய நொய்லி வளையத்திற்குள் அடைத்து வைத்திருந்தாள்.
இருப்பினும்,அவளது அடர்த்தியான கார்மேக கூந்தல் அதற்குள் அடங்காமல் அவளின் நெற்றியின் முன்பு விழுந்து காரிகையின் அழகிய மதிமுகத்தை மறைக்கும்.
அதை ஒற்றை கையால் கோதிவிடும் அழகிற்கு இந்த உலகமே சமர்ப்பணம்.
அத்தோடு நிலாவின் மறு விம்பமாய் பெண்மகளின் மதிமுகம் பளிச்சிட்டாலும்,அதில் ஒரு குழந்தைத்தனம் தாண்டவமாடியது.
குழந்தை மனம் மாறாத குமரியவள்.
காரிகையின் இதழை விட பெண்ணவளின் மை தீட்டிய விழிகள் அதிகம் பேசும் .
புடவை முந்தானையை ஒற்றையாக வைத்து இரவிக்கையோடு பின் செய்திருப்பவள்,வீட்டு வேலைகள் செய்யும் நேரங்களில் எல்லாம் அதனை மேம்போக்காக மற்றொரு மடிப்பு எடுத்து கைமுட்டி வரை இருக்கும் படி இழுத்து இடையில் சொருகிக்கொண்டு வீட்டில் உலா வரும் மருமகளின் உருவம் மனக்கண்ணில் தோன்ற ‘இம்புட்டு அம்சமாவும் குணமாவும் இருக்கிற பொண்ணை வேணாம்னு சொல்ல எம் மவனுக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்கு’ என பெருமூச்சை விட்டார் வேலாம்மாள்.
அத்தோடு கண்மூடியிருந்த மருமகளிடம் “அம்மாடி…நீயும் தானே காலையிலிருந்து பச்சை தண்ணீ பல்லிலே படாமல் இருக்கே…வா நீயும் வந்து இரண்டு வாயி அள்ளி சாப்பிடு” என்றப்படி அவருக்கு அருகிலே ஒரு இலையை போட போக,
அவளோ சட்டென்று கண்ணை திறந்து “அத்தே…அதெல்லாம் வி(வே)ணாம்…எனக்கு பசியில்லை” என இமை சுருக்கி மறுத்தவளை முறைத்த பெரியவர்,
“பின்னாடி புள்ள பெக்கும் போது தெம்பு வேணாமா?ஒழுங்கா சாப்பிடு கண்ணு” என்றவுடன் அவளின் முகம் சுருங்கி பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆயினும்,மாமியாரின் கூற்றுப்படி ‘தனக்கு குழந்தை உண்டாகினால் ஒரு வேளை மாமா என்னை ஏற்றுக்கொள்வாரா?’ என்று ஏடாக்கூடமாகவும் யோசிக்கவும் செய்தது.
அதனை மூளையில் ஓரிடத்தில் குறிப்பெடுத்து தற்சமயம் அதனை ஒதுக்கிய பெண்மகள் மாமியாரிடம் “ஆ” என சலுகையுடன் குட்டி செப்பு இதழை திறந்தாள்.
அதனை கண்டு புன்னகைத்த அந்த மாமியாரும் அவளிற்கு ஒரு தாயாய் மாறி ஊட்டிவிட தொடங்கினார்.
தன் வீட்டிற்கு வரும் மருமகளை தேளாய் கொட்டும் மாமியாருக்கும் மத்தியில் வேலாம்மாள் சந்திரநிலாவை தன் சேயாய் அரவணைக்கும் அபூர்வ தாயாய் இருந்தார்.
கணவனிற்கும் மனைவிக்கும் இடையே இல்லாத அந்நியோன்யம் மாமியாருக்கும் மருமகளிற்கும் இருந்து என்ன பயன்?
தன்னவன் கூறியது போலவே இரவில் மாமியாருக்கு உணவளித்து உறங்க சொன்னாள்.
‘நீயும் சாப்பிடும்மா’ என்று கூறியதற்கு “நானு மாமா கூட சாப்பிடறேன்” என்ற ஏக்கமாக கூறிய மருமகளை எண்ணி நெஞ்சம் கனத்தாலும் ‘நல்லது நடந்தால் சரி’ என்று ஒத்துக்கொண்டு ஏழு மணிக்கே படுக்கைக்கு சென்றுவிட்டார்.
கணவனிற்காக உணவுகள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து வாசலில் கொசுக்கடியில் அமர்ந்திருந்தாள் சந்திரநிலா.
எரிச்சலுடன் நாசி விடைக்க ‘ச்சை இந்த மஸ்கிட்டோ வேற…என் இய(ர)த்தம் எல்லாம் டிரின்க் பண்ணுது’ என கடுப்புடனே தன்னை கடித்த கொசுக்களை எல்லாம் அடித்துக்கொண்டே அமர்ந்திருந்த வேளையில் தூரத்தில் இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்த புல்லட்டின் ஒலியில் அவளது செவிகள் கூர்மையாக,தேகமெல்லாம் படபடக்க எழுந்து நின்றாள்.
வீட்டின் காவலுக்கு இருக்கும் ஒரு ஆள் கதவை திறந்தவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு கம்பீரமாக உள்ளே நுழைந்த கணவனை கண்டவளின் இதழ்கள் ‘வாவ்…வாட் ஆ மேன்’ என ரசனையுடன் கூறி பெரிதாக விரிந்தது.
இது சில நாட்களாக தினந்தோறும் நடக்கும் சம்பவம் என்பதால் தூரத்திலே மனையாளின் இருப்பை அறிந்த ருத்ரமூர்த்தி அவளை அழுத்தமாக பார்த்தப்படி வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி இறங்கினான்.
கையில் அணிந்திருந்த செம்பு காப்பை கைமுஷ்டியை இறுக்கி மேலேற்றி கசங்கிய வேட்டியை இழுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்த வேளையில் அவனை ஓடி சென்று கட்டியணைக்க துடித்த கரங்களை அடக்கிக்கொண்டு ‘மாமாஆஆஆ’ என ஆசையாக அழைப்பதற்கு முன்பே “ஐயாஆஆ வந்துட்டீங்களா?” என்று கேட்டப்படி வேலைக்கார ஆள் ஒருத்தன் அவளை தாண்டி படிகளில் இறங்கி ஓடினான்.
அதை கண்டு அவளின் முகம் சுருங்கி விட ‘இவருக்கு நான் வைப்பா?இல்ல இந்த முத்து வைப்பா?’ என நாசி விடைக்க அந்த மனிதரை முறைத்திருந்தாள்.
அதனை அறிந்தும் கண்டுக் கொள்ளாமல் பார்வையை அந்த வேலையாளிடம் திருப்பி “அண்ணே ஆத்தா எங்கே?” என வினவ,
“பாப்பா ஐயாவுக்கு சாப்பாடு பரிமாறலைங்களா?” என அந்த வேலையாளின் குரலில் கவனம் கலைந்தவள் கண்கள் மலர “யா…இதோ” என தலையசைத்து மானாய் துள்ளி ஓடியவளை பார்த்தவனிற்கு இரக்கம் சுரந்தது.
‘இம்புட்டு நல்ல பொண்ணை போய் நம்ப ஐயாவுக்கு புடிக்கலையே’ என புலம்பியவர் ‘பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு?’ என பயத்தோடு உள்ளே சென்றுவிட்டார்.
கை கால் கழுவிவிட்டு துவாலையில் முகத்தை துடைத்தவாறு கையில்லாத முண்டா பனியன் மற்றும் எளிமையான கதர் வேட்டியோடு உணவருந்த வந்தான்.
கணவன் வருவதற்கு முன்பே அவன் எப்போதும் உணவருந்தும் இடத்தில் சாப்பாடு பாத்திரங்களை பரத்தி வைத்திருந்தாள்.
உடற்பயிற்சி இல்லாமலே உரமேறிய பூஜங்களுடன் உருண்டு திரண்ட தசைக்கோளங்களுடன் நடந்து வந்தவனை சில வினாடிகள் கண் இமைக்காமல் ரசித்திருந்தவளை கடந்து தரையில் சம்மணமிட்டு அமர்ந்து முடியிருந்த இலையை விரித்தான் ஆடவன்.
அவனிற்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தப்போதும் தமிழரின் பாரம்பரியத்தை பின்பற்றி எப்போதும் வாழை இலையில் கீழே அமர்ந்து உண்டால் தான் மனமும் வயிறும் நிறைந்திருப்பதை போல் உணர்ந்தான்.
அவர்களது குடும்பத்தின் வழக்கமும் அதுவே என்பது போல் அனைவரும் அந்த கொள்கையை இன்று வரை பின்பற்றுகிறார்கள்.
பாத்திரத்தில் இருந்த சோற்றை கரண்டியால் அள்ளும் ஓசை கேட்டதற்கு பிறகே நிகழ்காலத்திற்கு வந்த நிலா “மாமா வெயிட்…வெயிட்…” என்றப்படி விரைந்து அவனருகே தரையில் அமர்ந்து கரண்டியில் பதிந்திருந்த கணவனது கரத்தின் மீது தன் கரம் வைத்து தடுத்தாள்.
“மாமா குடு…நான் ரைஸ் வைக்கிறேன்” என கேட்டவளை சில நொடிகள் அழுத்தமாக பார்த்த ருத்ரா,மற்றொரு கையை அவளின் முன்பு ‘வேண்டாம்’ என்பது போல் நீட்டி தடுத்தான்.
அதில் முகம் வாடி “மாமா பிளீஸ்” என இமை சுருக்கி கெஞ்சலாய் அவனை பார்க்க,
அவனோ அவளின் முகத்தின் மீதிருந்த பார்வையை அசைக்காமல் தயவு தாட்சண்யம் சிறிதுமின்றி தன் கரத்தின் மேல் இருந்த அவளின் கரத்தை தன் கரம் கொண்டு விலக்கியவன் ‘வேண்டாம்’ என நிற்சந்தையுடன் செயலினால் மறுத்துவிட்டான்.
அவனது அந்த பார்வை அவளிற்கு குளிரை ஏற்படுத்தியப்போதும் விடாமல் இமை தாழ்த்தி “மாமா” என்று மன்றாடும் குரலில் அழைத்தவுடன்,
அவனிற்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது.
இருப்பினும்,முகத்தில் அதனை காட்டாமல் சாப்பிடாமலே எழுந்துக்கொள்ள போனான்.
அதனை அறிந்தவளிற்கு நெஞ்சம் பிசைய பதறிப்போய் அவனை பார்த்து “நோ…நோ மாமா நீங்க ஈட்…நான் போறேன்” என இதழ்பிதுக்கி கண்கள் கலங்க கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் மேலிருக்கும் அறையை நோக்கி செல்வதை ஒரு முறை பார்வையால் அளவிட்டவனின் முகமோ எப்போதும் போல் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.
கண்ணை கையால் அழுந்தத்துடைத்துக்கொண்டே படியில் ஏறி செல்லும் அவளின் உருவம் மேலே ஒரு திருப்பத்தில் மறைந்தற்கு பிறகே உணவு உட்கொள்ள அமர்ந்தான் அந்த அழுத்தக்காரன்.
‘தன்னவன் பிரியும் முடிவை எடுத்திருந்தாலும் இறுதி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து தன் முடிவை மாற்றிக்கொள்வான்’ என்ற நம்பிக்கையில் இருந்தவளிற்கு, ஒவ்வொரு முறையும் அவனின் விலகலும் வெறுப்பும் அவளிற்குள் ஒட்டிக்கொண்டிருந்த அந்த சிறிது நம்பிக்கையையும் தவிடுப்பிடியாக்கி கொண்டிருப்பது அவளிற்கு ஒரு அச்சத்தையும் துயரத்தையும் கொடுத்து நெஞ்சில் பாரமேற்றியது.
‘பிழையென்று அறியாமல் நான் செய்த பிழை பொறுக்கமாட்டாயா மன்னவா?’