சந்திரநிலாவின் அமைதி எதிரே பேசிக்கொண்டிருந்தவளின் நெஞ்சை படபடக்க வைக்க “நிலா இருக்கியா?” என,
“ஹும்” என்று மட்டும் பதில் வந்தது அவ்விடத்திலிருந்து.
‘புருஷனை மாதிரி இவளும் சரியான அழுத்தக்காரி…ஏதாவது சொல்லறாளா பாரு’ என திட்டிக்கொண்டே “நிலா” என அதட்டலாய் அழைக்கவும்,
சில நொடிகள் அறையிலிருந்த சுவற்றை வெறித்தவள் பின்பு “முகில் எனக்கு தட் விஷயம் பத்தி ஸ்பீக் பண்ண விருப்பமில்லை…அட் தி சேம் டைம் மாமா இதெல்லாம் வெளிய ஸ்பீக் பண்ணக்கூடாது ஸ்டீரிக்ட்டா சொல்லியிருக்கார்” என்றாள் சற்றே அழுத்தம் நிறைந்த குரலில்.
‘இதுலெல்லாம் ஒற்றுமையா இருந்து தொலைங்க…இருக்க வேண்டிய விஷயத்தில் இருக்காதீங்க…இவங்க சண்டையில் நமக்கு மூக்கு உடைஞ்சது தான் மிச்சம்’ இருவரையும் மனதிற்குள் வறுத்தெடுத்தவள் கடுப்புடனே “சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் தாயே…ஆனால் நான் சொல்லறதை மட்டும் பின்பற்றி மாமாவை இம்ப்ரஸ் பண்ணி இரண்டு நாளில் மாமாவே டைவர்ஸ் எல்லாம் எனக்கு வேணாம்… நீ தான் வேணும்னு சொல்லிடணும்” என வியாக்கியானம் பேசி தன்னால் முடிந்த சில அறிவுரைகளை மட்டும் இலவசமாக வழங்கியவள்,
“அம்மா தாயே…இதையாவது சரியா பண்ணி தொலை…ஏதாவது சொதப்பி வைச்ச ஊருக்கு கிளம்பி வந்து உன்னையும் மாமாவையும் வகுந்திடுவேன் வகுந்து” என செல்ல கோபத்துடன் மிரட்டினாள்.
அதில் சந்திரநிலா “நீ என்ன ரோக் மாதிரி பேசறே?” என இதழ்பொத்தி சிரிக்க,
“பின்ன உன்னையெல்லாம் அக்காவா வைச்சுக்கிட்டு சாந்தமா பேசினால் வேலைக்காகாது…பொறுக்கி மாதிரி தான் பேசணும்…வேற வழி” என தலையிலடித்து புலம்பினாலும் “தேவையில்லாமல் எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் நிம்மதியா சாப்பிட்டு தூங்கு…எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்…எப்போதும் உன் கூட நானும் அப்பாவும் பக்கப்பலமா இருப்போம்…ஓகே” என ஆறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டே வைத்தாள்.
சகோதரிகளின் அன்பு சில நேரம் சூரியனாய் சுட்டெரித்தாலும்,சில நேரங்களில் மதி நிலவாய் குளிர்ச்சியுடன் அணைத்துக்கொள்ளவும் செய்கிறது.
சகோதிரியிடம் பேசியதற்கு பிறகு அவளின் மனதிலிருந்த சஞ்சலங்கள் யாவும் விடைப்பெற்றிட,அவ்விடத்தில் ஒரு புது உத்வேகம் பிறக்க இதழில் பூத்த புன்னகையுடன் தெளிவான முகத்துடன் கீழே இறங்கி வந்தாள்.
வரவேற்பறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் கணவனும் அவர்களது தொழில் கணக்குக்களை பார்க்கும் சுந்தரமும் வெகு மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருப்பதை பார்த்தாள்.
இது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு என்பதால் அவரிடம் பேச நினைத்தாலும் வேலைக்கு இடையில் தொந்தரவு செய்தால் தன்னவனிற்கு பிடிக்காது என்றறிந்து தோளை உலுக்கிவிட்டு கணவன் முன்பு உணவருந்திய இடம் நோக்கி சென்றாள்.
அவள் நினைத்தது போலவே கணவன் உணவருந்திய இடத்தில் அவன் சாப்பிட்ட இலை எடுக்கப்படாமல் அவ்விடத்திலே இருப்பதை கண்டு எந்த வித முகச்சுழிப்புமின்றி அதனை எடுத்து குப்பை தொட்டியில் வீசிவிட்டு,புது இலையில் தனக்கான உணவை பரிமாறி சாப்பிட தொடங்கினாள்.
சந்திரநிலா இடது கைப்பழக்கம் உள்ளவள் என்பதால் அவள் அந்த கரத்தை உபயோகித்தால் கணவனிற்கு கோபம் வரும் என்பதற்காகவே பிரம்ம பிரயத்தனம் பட்டு வழக்கத்தை மாற்றி வலது கையை உபயோகிப்பாள்.
வயதில் பெரிய மனிதரை விட்டு சாப்பிடுவது சங்கடமாக இருக்கவே,அரைக்குறையாக வயிறு நிரம்பியவுடனே விரைந்து எழுந்து சென்று கரங்களை சுத்தம் செய்து வந்தாள்.
கணவன் தன்னை கடிந்தாலும் வாங்கிக்கொள்வோம் என்றெண்ணி வரவேற்பறை சென்றவள் அவரிடம் “சுந்தரம் அங்கிள் சாப்பிட்டு ஜாப் பாக்கலாம்…வாங்க” என வீட்டு தலைவியாய் உபசரித்தவளின் குரலில் ஆண்கள் இருவரும் தலையை உயர்த்தினார்கள்.
சுந்தரம் அவளை கண்டு சிரித்து “இல்ல கண்ணு…நான் சாப்பிட்டு தான் வூட்டிலிருந்தே வந்தேன்…நீ போய் சாப்பிடும்மா” என அவளிடம் மறுத்துவிட்டார்.
பேச்சுக்கள் அவரிடமிருந்தாலும் அவளது விழிகள் அவ்வப்போது கணவனை தழுவி மீண்டது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
“பரவா(யில்)லை அங்கிள்…குஞ்சமா சாப்பிடுங்க” என தலைச்சரித்து கையால் சிறியதாக என்பது போல் சைகை காட்டி விழி சுருக்கியவளை பார்ப்பதற்கு சிறுகுழந்தை போலவே இருந்தது.
அவளின் பாவனை கண்டு வாய்விட்டு சிரித்தவர் “இல்லைம்மா…இதுக்கு மேலே சாப்பிட வயித்துலே இடமில்லை கண்ணு…நீ கேட்டதே போதும்மா” என பணிவுடனே மறுத்தவரை கண்டு “இட்ஸ் ஓகே அங்கிள்” என்று தலையாட்டி ஒப்புக்கொண்டு,
“அடுத்த டைம் ஷ்யூரா சாப்பிடணும் அங்கிள்” என்று என விரல் நீட்டி ஆணையும் பிறப்பித்தவளிடம் “சரிம்மா” என தலையசைத்து வைத்தார் அந்த மனிதர்.
ருத்ரமூர்த்தியோ மனையாள் கீழிறங்கி வந்ததிலிருந்தே கவனித்து கொண்டிருந்தாலும் அவளை கண்டுக் கொள்ளாமல் கடமை தவறாத தொழிலதிபராய் பணியில் கவனம் செலுத்தியிருந்தான்.
ஆனால் அவள் தங்கள் அருகில் வருவதை சதங்கை மணியின் ஓசை வைத்து அறிந்தவனிற்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் உடலில் உக்கிரத்தை தோற்று வைக்க ‘இவள் எதுக்கு இங்கே வராள்?’ என கடுப்புடனே புருவம் நெரித்து அமர்ந்திருந்தான்.
ஆனால் அவள் அவர்கள் அருகில் வந்ததற்கான காரணம் அறிந்ததற்கு பிறகு வந்த சினமும் மாயமாய் மறைந்துவிட, தன்னவளை நிமிர்ந்து அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்ததோடு சுந்தரத்தின் பதிலை எதிர்நோக்கி அவரை பார்த்திருந்தான்.
அவர் ‘சாப்பாடு வேண்டாம்’ என உறுதியாக மறுத்துவிட்டதை கண்டு எதுவும் கூறாமல் மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினான்.
ஏனெனில் அவர் உள்ளே நுழைந்தப்போதே உணவருந்த அழைத்தற்கு ‘சாப்பிட்டேன்…வேணாமுங்க ஐயா’ என பதிலுரைத்திருந்தார்.
அதனால் அவரை கட்டாயம் செய்து உணவருந்த வற்புறுத்தாமல் தலைக்குனிந்து கோப்புகளை புரட்டி கொண்டிருந்தவனின் புருவங்கள் நெரிந்திருந்த விதமே அவன் தன் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டிருப்பதை பாவையவளிற்கு புரிய வைத்திருந்தது.
அதனால் சற்றே துணிச்சலுடன் அவனது உருவத்தை கண்ணால் நிரப்பிக்கொண்டிருந்தாள் சந்திரநிலா.
அலை அலையான கேசம்,பல நாட்களாக சவரம் செய்யப்படாத தாடி,அடர்ந்த முறுக்கிய மீசை,கூரான நாசி,தீர்க்கமான இரண்டு கண்கள்,புன்னகைக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் அழுத்தமான உதடுகள்,இறுகிய தாடை,அவ்வப்போது மீசையை முறுக்கிவிட்ட நரம்போடிய கரங்கள்,கைமுஷ்டியை இறுக்கி செம்பு காப்பை பின்னால் தள்ளும் போது புடைத்து முறுக்கேறிய புஜங்கள் என ஆடவனிற்கு உரிய அனைத்தை அம்சங்களையும் அவனது கம்பீரமான செயலையும் ஒன்று விடாமல் ரசித்து பார்ந்திருந்தவளின் இதழ்கள் ஆச்சரியத்தில் பிளந்திருந்தது.
பெண்ணவளின் கள்ளப்பார்வையை அறிந்த ருத்ரமூர்த்தி தொண்டையை செருமவும்,சட்டென்று நிகழ்காலத்திற்கு வந்தவள் அச்சத்தோடு ‘காட்…நான் பார்த்ததை பார்த்திட்டாரா?’ என படபடப்புடன் கணவனை தலையை உயர்த்தி பார்க்க,அவனோ கடமையே கண்ணாக கோப்பிலே தலையை விட்டிருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
ஆனால் அடுத்த சில வினாடிகளிலே நேசம் வைத்த பெண்ணவளின் மனம் ‘என்னோடு பேசமாட்டாயா?’ என ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவனையே பார்த்திருக்க ‘நீ விலகியே இருந்தால் மாமாவும் விலகி தான் செல்வார்…அவர் உன்னை விலக்க நினைத்தாலும் நீ விலகிப்போகாதே’ என தனக்குள்ளே ஒரு வைராக்கியத்தை தத்தெடுத்தவள் ஆசுவாசமடைந்து “மாமா உங்கள்க்கு டிரின்க் எடுத்து வரட்டா?” என்று துணிச்சலை வரவழைத்து ஒரு எதிர்ப்பார்ப்புடன் வினவினாள்.
சுந்திரம் இருப்பதினால் கண்ணாளன் தன்னை உதாசீனம் செய்ய மாட்டான் என்று நம்பிக்கையில் காரிகை வினவ,
அவனோ பார்வையை மட்டும் உயர்த்தி ‘வேண்டாம்’ என்பது போல் கனல் தெறிக்க பார்க்க,அதில் நெஞ்சம் சில்லிட்டாலும் இதழை பிரித்து வலுக்கட்டாயமாக சிரித்து “எடுத்து வரட்டா…சரி மாமா” என தலையசைத்தவள்,
“அங்கிள் சோறு தான் நோ சொல்ட்டீங்க..மாமாக்கு இ..ன்ச் டீ செய்யறேன்…உங்கள்க்கும் செய்து வரேன்…அதை குடிக்கணும்…ஓகே வா?” என தட்டுமாறி ஒரு வழியாக தமிழில் பேசி முடித்தவளை பார்த்து “சரி கண்ணு” என சுந்தரம் அவளிற்கு சமையலின் மீது இருக்கும் அபார திறமை அறியாமல் தலையசைத்து வைத்திருந்தார்.
ஆனால் அவளை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த ருத்ரமூர்த்தியோ ‘ஒரு எலி தயார்’ என கேலியாய் சுந்தரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே குனிந்திருந்தான்.
சுந்தரத்திற்கு நீரிழிவு நோய் இருப்பதினால் அவரது வீட்டில் தேநீர்,கொட்டை வடிநீர் போன்ற இனிப்பான பானங்கள் தரப்படுவதில்லை.
அதனால் சந்திரநிலா ‘தேநீர் அருந்துக்கிறீர்களா?’ என்று கேட்கவும் ஆர்வமாக தலையசைத்து வைத்திருந்தார்.
சந்திரநிலா திருமணத்திற்கு முன்பாக இருந்தப்போதும் சரி,பின்பாக இருந்தப்போதும் சரி சமையலறையை எட்டி பார்த்திருக்கிறாளே தவிர சமையலில் இறங்கி உணவுகளை சமைத்ததில்லை.
இப்போது தனது கணவனை தன் பக்கம் ஈர்ப்பதற்காக ஒரு விபரீத விளையாட்டில் இறங்கியிருக்கும் பாவையவளின் செயலினால் பாதிக்கப்படயிருக்கும் அந்த அப்பாவி ஜீவனை ருத்ரமூர்த்தி நினைத்தால் மட்டுமே காக்க இயலும்.
சமையலறை சென்ற சந்திரநிலாவோ மாமியார் தேநீர் தயாரிக்கும் முறையை சில சமயம் பார்த்திருப்பதினால் அதனை நினைவில் வைத்து இஞ்சி,ஏலக்காய் அனைத்தையும் தட்டிப்போட்டு ஒரு அருமையான தேநீர் தயாரித்து அதனை இரண்டு குவளையில் ஊற்றி எடுத்து வந்தாள்.
அதில் ஒரே ஒரு குறை மட்டுமே!!
தேநீர் என்ற பெயருக்கு ஏற்றது போல் ஒரு பத்து தேக்கரண்டி தேநீர் தூளை மட்டுமே சற்றே அதிகமாக சேர்த்திருந்தாள்.
மேலும்,ஒரு விரல் அளவிலான இஞ்சியும்,பத்து ஏலக்காயும் கூடவே ஒரு பெரிய அளவு பனைவெல்லமும் சேர்த்து அதிசயமான தேநீர் ஒன்றை தயாரித்திருந்தாள்.
தட்டில் அதனை சுமந்து வருகையில் முதன்முறையாக சமையலில் யாரின் துணையுமின்றி ஒரு பானம் தயாரித்த பெருமிதம் பொங்கி வழிந்தது.
அவள் வருவதற்குள் சுந்தரத்தை தப்பிக்க வைப்பதற்காக “அண்ணாச்சி வேலை முடிஞ்சது புறப்படுங்க” என ருத்ரமூர்த்தி கூறி பார்த்தும்,
‘இனி கடவுள் விட்ட வழி’ என்றெண்ணி அவரை முழுதாக ஒரு முறை நோக்கிவிட்டு கோப்புகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்திருந்தான்.
அதற்குள் சந்திரநிலா கையில் தட்டுடன் அங்கே வந்தவள்,முதலில் கணவனை விடுத்து சுந்தரத்தின் கையில் கொடுத்தவுடன் நாக்கை ஒரு முறை உள்ளுக்குள்ளே சுழற்றி எச்சில் ஊற ஆவலாக “நன்றிம்மா” என கூறி குவளையை வாங்கியவரை ருத்ரமூர்த்தி ஆழ்ந்துப்பார்த்திருந்தானே தவிர எதுவும் கூறவில்லை.
“மாமா இந்தா உனக்கு டீ” என்றும் அவளை ஏறிட்டு பார்க்காதவனை விடாமல் “நான் இங்க டேபிள்ள வைக்கறேன்…நீ குடி” என அதனை சகஜமாக எடுத்துக்கொண்டு சுந்தரத்தின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை அறிவதற்காக விழிகள் விரிய அவரையே அவதானித்திருந்தாள்.
அவரோ குவளையில் இருக்கும் தேநீரை ஒரு முறை ஊதிவிட்டு வாயில் வைத்து ஒரு மிடறு அருந்தியவரின் முகம் விளக்கெண்ணெயை குடித்தது போல் அஷ்டக்கோணலாகிவிட தன்னையறியாமல் “த்தூ” என்று துப்பிவிட்டார்.
இதனை முன்பே அறிந்தவன் போன்று கோப்புகள் மொத்தமும் தன் கைகளுக்குள் வைத்திருந்தவனின் இதழில் சிறு கோடாய் புன்னகை தோன்றி மறைந்தது.
அவரின் செய்கையில் பெண்ணவளோ பதறிப்போய் “அவுச்…அங்கிள் சுட்டிருச்சா?” என்று கவலையோடு அப்பாவியாக வினவியவளிடம் எதையும் கூற இயலாமல் ருத்ரமூர்த்தியை ஒரு முறை பாவமாக பார்த்துவிட்டு இவளிடம் திரும்பியவர் “ஆமா” என தலையசைத்து வைத்தவர்,
மனதிற்குள் ‘அடப்பாவி பெண்ணே,இதுக்கு நீ நேராவே என்ற வூட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லியிருக்கலாம்…உலகத்திலே இதை விட ஒரு கேவலமான டீயை நான் வாழ்க்கையிலே குடிச்சதே இல்லை’ என புலம்பியவரால் அன்போடு தன்னிடம் பேசும் பெண்ணோடு எதையும் வெளிப்படுத்த முடியவில்லை.
“அங்கிள் ஹரி ஃபெரியா கு…டிக்காதீங்க…மதுவா ஆற வைச்சு கு..டிங்க” என மழலை மொழி போல் அழகாக பேசுபவளின் மனம் புண்படுவதை விரும்பாமல் “ஹிஹிஹி சரிம்மா” என அசடு வழிய சிரித்தப்படி “நீ போ தாயி…நான் குடிச்சுக்கிறேன்” அவளை சங்கடமுறுத்தாமல் அனுப்பிவிட்டு அந்த தேநீரை கீழே ஊற்றிவிட திட்டம் தீட்டினார்.
“நோ அங்கிள்…நீங்க குடிங்க…நான் இருக்கேன்” என அவளோ தன் சமையலிற்கான மதிப்பெண் அறிந்துக் கொள்ளும் மாணவியாய் அன்பு தொல்லை செய்தாள்.
அவரது மறுப்பையும் அவளது அக்கறையும் கண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு அவனின் இதழோரம் சிரிப்பில் துடித்தது.
இருப்பினும்,அதனை அடக்கிக்கொண்டு மீசையை முறுக்கி விட்டு இதனை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான்.
சுந்தரம் வேறுவழியின்றி எச்சிலை விழுங்கி பாகற்காய் சாறை அருந்துவது போல் அதனோடு சண்டையிட தயாராகியவரை வதைத்தது போதும் என்று எண்ணி ஆபத்பாந்தவனாய் இடைப்புகுந்து காப்பாற்றினான் ருத்ரா.
சுந்தரமோ இதற்காகவே காத்திருந்தாற் போன்று அரக்க பரக்க எழுந்தவர் “இதோ கிளம்பிட்டேனுங்க ஐயா” என கையிலிருந்த தேநீரை அருந்தாமல் அப்படியே மேசையில் வைத்துவிட்டு “வரேன் கண்ணு” என அவளிடம் விடைப்பெற்று ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடிவிட்டார்.
அதில் முகம் சுருங்கி ‘உன்னால் தான் அவர் குடிக்கவில்லை’ என்று கணவனை குற்றஞ்சாட்டும் பார்வை வீசியவளை மேலிருந்து கீழாக ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த கோப்புகளை மூடிவிட்டு எழுந்துக்கொண்டான் ருத்ரா.
பின்பு எதையோ நினைத்தவனாக அந்த இரண்டு குவளை தேநீரையும் எடுத்து சென்று வீட்டிற்குள் தண்ணீர் செல்வதற்காக வைத்திருந்த ஓட்டை சல்லடையில் ஊற்றிவிட்டு குவளையை அருகிலிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு தன்னறை நோக்கி சென்றுவிட்டான்.
அதைக்கண்டு மனமுடைந்தாலும் உணவுப்பொருளை வீணாக்கிய கடுப்பில் ‘இந்த மாமாவுக்கு கொஞ்சமும் அறிவேயில்லை…நான் கஷ்டப்பட்டு முதல் முறை ஆசையாய் செய்து கொண்டு வந்ததை கீழே ஊற்றிட்டு போகுது’ என மனதிற்குள் வறுத்தெடுத்தப்படி அவளும் அவனின் பின்னோடு மேலே சென்றாள்.
இருவருக்குள்ளும் பிளவுகள் இருந்தாலும் இப்போதும் கணவன் மனைவி இருவரும் ஒரே அறையில் தான் உறங்குகின்றார்கள்.
இரவில் உறங்க போகும் போது விலகி படுத்திருந்தாலும் சில சமயங்களில் பாதி நித்திரையில் கணவனை ஒட்டி உரசிக்கொண்டு படுத்திருப்பாள் அவனின் மனைவி.
உடனடியாக எழுந்து அவளை தன்னிலிருந்து விலக்கப்படுக்க வைத்த பிறகே மீண்டும் உறக்கத்தை நாடுவான்.
இருப்பினும்,தன்னோடு படுக்க வேண்டாம் என்று ஒரு முறை கூட அவன் திருவாயை மலர்த்தி கூறியதில்லை என்பது தான் விந்தை.
இன்றும் அதேப்போல் உறக்கத்திலே உருண்டு தன் வெற்று முதுகோடு ஒட்டிப்படுத்தவளின் மேனியிலிருந்த சூடு அவனின் மீது பாய்வதற்கு பதிலாக சிலீரென்று உணர்வு ஆடவனை ஆக்கிரமித்தவுடன் பட்டென்று ருத்ரமூர்த்தியின் கண்கள் திறந்தது.
‘இவளை’ என எரிச்சலோடு கட்டிலில் எழுந்து அமர்ந்து அவளை நகர்த்த முனைந்த நேரத்தில் அவர்களது அறையின் கதவு படபடவென தட்டப்பட்டது.