அறையின் கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு ருத்ரமூர்த்தி புருவம் சுருக்கி ‘யாரது இந்நேரத்தில்?’ என்ற சிந்தனைவயத்தோடு கதவை திறப்பதற்காக எழுந்தான்.
அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்திரநிலாவும் கதவு தட்டும் இரைச்சலில் பெண்ணவளின் மெல்லிய சரீரம் தூக்கிவாரிப்போட நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்து மிரட்சியுடன் திருதிருவென விழித்தாள்.
மனையாள் அதிவிரைவாக எழும் சத்தம் கேட்டு வாசல் நோக்கி சென்ற ருத்ரா வேகமாக இவள் புறம் திரும்பியவன்,அவள் அமர்ந்திருந்த அலங்கோல தோற்றம் கண்டு திடுக்கிட்டான்.
சட்டென்று சுதாரித்த ருத்ரமூர்த்திக்கு ஆண்மைக்குரிய உணர்ச்சி சுரப்பிகள் சுரப்பதற்கு பதிலாக தேமெங்கும் தீயாய் தகிக்க அவ்விடத்தை சினமே ஆக்ரமித்திருந்தது.
ஏனெனில் புடவை அணிந்து பெரிதாக பழக்கமிராதவளிற்கு அவள் எழுந்து அமர்ந்த வேகத்தில் விலகியிருந்த உடையின் வழியாக தெரிந்த வெண்ணிற இடையையும் பெண்ணின் அங்க லாவண்யங்களையும் கண்டு எரிச்சல் தோன்ற “ஊப்” என பெருமூச்சுடன் மீண்டும் அவளிடம் திரும்பி வந்து முகத்திற்கு நேராக விரல் சொடக்கிட்டான்.
அதில் கவனம் களைந்து மருண்டு அவனை ஏறிட்டு பார்த்தவளிடம் கண்ணாலே அவளின் உடையை சுட்டி காட்டி இழுத்து விடும்படி கட்டளையிட,பாதி உறக்கத்தில் எழுந்ததினாலோ அல்லது கதவு தட்டும் ஓசையினால் உண்டான அச்சத்தில் வெலவெலத்து போனதாலோ அவன் கூறுவதில் சிந்தை ஆட்படாமல் “வாட் மாமா?” என அவளை புரியாமல் வினவ வைத்தது.
அதற்குள் “ஐயா…ஐயா” என்று முத்துவின் குரலும் அவசரமாக ஒலிப்பதை கண்டு,
மனையாளிடம் விவாதம் செய்து தெளிவுப்படுத்தவதற்கான நேரமில்லாதவன் கீழே குனிந்து போர்வையை விரித்து அவளின் மேனியை முழுவதும் மறைக்கும் வகையில் போர்த்திவிட்டவன் “படு” என்ற ஒற்றை வார்த்தையோடு அவளை அழுத்தமாக ஒரு முறை பார்த்துவிட்டு கதவை நோக்கி சென்றான்.
பல நாட்களாக மனையாட்டியின் முகத்தை கூட ஏறெடுத்து பார்த்திராத கண்ணாளன் இன்றோ மற்றவரின் முன்பு தன்னவளின் மானம் காக்கும் பொருட்டு அவன் செய்த இந்த செயல் அவளின் இதயத்தை உருகி கரைய வைத்திருந்தது.
அதனால் செல்லும் அவனின் பறந்து விரிந்திருந்த முதுகுப்புறத்தின் வழியாக துளையிட்டு ஆடவனின் இதயத்தை ஊடுரூவும் காதல் பார்வையோடு இதழ்பிரித்து நன்றாக புன்னகைத்தவளின் விழிகள் இரண்டும் தீடிரென்று விரிய “மாமா ஷர்ட்” என்று கூக்குரலிட்டு கணவனின் கவனம் கவர்ந்தாள்.
அதன்பிறகே இரவில் சட்டையின்றி உறங்கும் வழக்கத்தில் அவசரத்தில் அதே வெற்றுடம்புடன் வெளியே செல்வதை அறிந்து வேகமாக பாவையவளின் புறம் திரும்பினான்.
“என்னாச்சு?” என்றவனின் குரலில் பதட்டமில்லையென்றால் பரபரப்பும் யோசனையும் மிகுந்து இருந்தது.
“தெரியலைங்க ஐயா…யாரு கிட்டக்க போனாலும் அவங்க மேலே ஒரே தாவா தாவுதுங்க…இல்லைனா காலை தூக்கி ஒரு எத்து விடுதுங்க…அதேன் உங்களை எழுப்ப வேண்டியதா போயிடுச்சு…மன்னிச்சுக்கிடுங்க” என்றான் அவனை எழுப்பி வந்த சங்கடமும் லட்சுமிக்கு என்னாவாகிற்றோ என்ற தவிப்பும் நிறைந்த குரலில்.
வேகநடையுடன் மாளிகையின் பின்புறத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தவன்,அவன் கூறுவதை கேட்டு சட்டென்று ஒரு நொடி தன் நடையை நிறுத்தி ‘அவளா இப்படி?’ என்பது போல் இமைகள் இடுங்க அவனை சந்தேகத்துடன் ஆழ்ந்து பார்க்க,
அவனும் தான் கூறுவதை நம்பாமல் வசைப்பாடிவிடுவானோ என்று தோன்றிய மிரட்சியுடன் பாவமாக தலையசைத்து “ஆமாங்க…அது மேலே உசுரே வைச்சிருக்கிற ஆத்தாவையே இந்நேரத்துக்கு கீழே தள்ளிவூட்டிருக்கும்ய்யா…அம்புட்டு வெறியோடு இருக்குதுங்க” என படபடவென விளக்கம் கூறவும்,
அவனை கூரிய விழிகளால் கூர்ந்து நோக்கியவன் “சரி வாங்க” என்றான் நம்பாத பாவனையுடன்.
ஏனெனில் இரவில் லட்சுமியை பார்த்தப்போது அமைதியின் சொரூபமாய் தன் நெஞ்சோடு தலைவைத்து குழைந்த குழந்தை இப்போது ஆக்ரோஷமாய் நடந்து கொள்கிறது என்று கூறியதால் அவனால் அதனை சட்டென்று எளிதாக ஏற்க இயலவில்லை.
அதனால் ‘என்னவா இருக்கும்’ என்றெண்ணியப்படியே மாளிகையின் பின்புறத்தை நோக்கி தன் செம்பு காப்பை பின்னிற்கு தள்ளி கைமுஷ்டியை இறுக்கி ஒரு புயலை போல் நடந்து சென்றான்.
விளக்கின் வெளிச்சத்தில் அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் மாட்டு கொட்டகையின் முன்பு சிறு கூச்சலுடன் நிரம்பியிருப்பதையும் லட்சுமி “மாஆஆஆ” என சற்றே கிளிர்ச்சியுடன் அடிவயிற்றை தூக்கிக்கொண்டு கத்துவதையும் கண்டு ஓரளவு விஷயத்தை யூகித்துவிட்டான் ருத்ரமூர்த்தி.
அதனால் அவனிற்குள்ளும் இப்போது சிறிது பதட்டம் அதிகரித்தாலும் அதனை முகத்தின் வழியே வெளிக்காட்டாமல் தன் வேக நடைக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் ஓடி வந்த முத்துவை பக்கவாட்டாக திரும்பி பார்த்து “வெரசா ஓடிப்போய் விளக்கெண்ணெய் எடுத்திட்டு வாங்கண்ணே” என ஆணைப்பிறப்பித்தவன்,
லட்சுமியை சுற்றி கூடியிருந்த கூட்டத்தை கண்டு எரிச்சலோடு “இங்க என்ன கண்காட்சியா நடக்குது…முதல்ல எல்லாரும் உள்ளே போங்க” என்று மாளிகையே கிடுகிடுக்கும் வகையில் பெரும் அதட்டல் ஒன்று போடவும்,
வேலையாட்களுக்கு தேகம் தூக்கிவாரிப்போட “இதோ ஐயா” என அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஏனெனில் அவனின் குரல் எப்பொழுதாவது அவனது சினம் உச்சத்தை தொடுக்கையில் மட்டுமே ஓங்கி ஒலிக்கும்.அந்நேரத்தில் அவனின் முன்பு நிற்கும் ஆட்களிடம் வாயை விட கரங்கள் சற்றே அதிகம் பேசும் என்பதால் அவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பதறிப்போய் அவ்விடத்திலிருந்து விரைந்து சென்றிருந்தனர்.
அவனது தாயோ அருகில் வந்த மகனிடம் கலங்கிப்போய் “ஏய்யா ராசா…லட்சுமிக்கு என்னாச்சுன்னு தெரியலைய்யா” என அவனின் தோளை பிடித்தப்படி லட்சுமியை பார்த்து பரிதவிப்புடன் கூற,
அவனோ தாயின் கரங்களை ஆறுதலாக பிடித்து “ஆத்தா…எதுக்கு நீ இப்போ கலங்கிப்போய் நிக்கறவே…லட்சுமிக்கு ஒண்ணுமில்லை…நீ உள்ளற போய் நம்ப பட்டியிலிருந்து மாடசாமியை காளையனை கூட்டி வர சொல்லுங்க” என்றதற்கு பிறகே அவருக்கு விஷயம் ஓரளவு புரிப்பட்டது.
அதனை அறிந்தவரின் முகமோ நாணத்தில் சிவந்துவிட “ஏய்யா நீ இங்கினயே இரு…அவனை வெரசா காளையை கூட்டி வரச்சொல்லறேன்” மகனது முகத்தை பார்க்காமல் சங்கோஜத்துடன் பேசிவிட்டு சென்ற தாயை ஒரு முறை வித்தியாசமாய் பார்த்து தலையசைத்து இதழ்பிரித்தவன் தங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை போல் பாவிக்கும் லட்சுமியை நெருங்கினான்.
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கையில் அணிந்திருந்த செம்பு காப்பை அருகிலிருந்த திண்டில் கழற்றி வைத்துவிட்டு மீசையை முறுக்கியப்படி வேட்டையாடும் வீரனை போல் களத்தில் குதித்தான்.
தமையனை கண்டவுடன் “ம்மாஆஆ” என அவனின் மீதும் வெறிப்பிடித்து தாவிய லட்சுமியை முறுக்கேறிய புஜப்பலங்கள் கொண்டு ஒரே பிடியில் அடக்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தான்.
பல மடங்கு புஜப்பலங்கள் பொருந்திய திமிறும் ஏறுகளை கட்டுப்படுத்தி அடக்கியாளும் தீரம் பொருந்தியவனிற்கு மூன்று வயதே நிரம்பிய இந்த பசு மாட்டை அடக்கும் வித்தை அறியாமல் போனால் தான் ஆச்சரியமே!!
அதனால் ஒரே கிடுக்கு பிடியில் அதனை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து “லட்சுமி அண்ணன் தான்…அமைதியா இரு” என ஆதுரத்துடன் கூறி,அதன் முதுகை பரிவுடன் வருடிவிட்டான்.
சக மனிதர்கள் மேல் எந்த வித பந்தமும் இல்லாமல் காட்டும் அன்பு விலையுயர்ந்தது என்றால்,தன்னை உயிராய் நேசிக்கும் வாயில்லாத ஜீவனின் மீது காட்டும் அன்பிற்கு விலைமதிப்பே இல்லை.
ருத்ரமூர்த்தியும் அவனது குடும்பமும் அதற்கான மேலான ஒரு புனிதமான பந்தமாகவே லட்சுமியை கருதி அன்பு செலுத்தியிருந்தார்கள்.
பிறந்ததிலிருந்து இவ்விடத்திலே வாழும் அந்த லட்சுமியும் தமையனாகிய ருத்ரமூர்த்தியின் பாசத்திற்கு கட்டுப்பட்டு அமைதியுற்றது.
தன் சகோதரியாய் எண்ணி அதன் துயர் போக்க ருத்ரமூர்த்தியின் அந்த சுகமான வருடலிற்கு அடிமையாகிய லட்சுமியும் அவனது தோள்பட்டையில் முகத்தை வைத்து சாதுவாக மாறி செல்லம் கொஞ்சும் காட்சியை தூரத்திலிருந்து பார்த்த முத்துவின் கண்கள் நிகழ்ந்தேறிய அதிசய நிகழ்வை கண்டு கண்கள் விரிந்தது.
முன்பு தங்களை கண்டு காளையின் சீற்றத்தோடு சீறிக்கொண்டு திமிறிய மாடு,இப்போது பதுவிசாக தங்களது முதலாளியிடம் குழையும் விதம் கண்டு ஆச்சரியத்தோடு எண்ணெய் அடங்கிய குப்பியோடு அவர்களை நெருங்கி கண்கள் பனிக்க “ஐயா” என்று விளித்தான்.
அவன் குரலின் பேதம் உணராமல் மாட்டை ஒரு கையால் பிடித்து மற்றொரு கரத்தை அவன் புறம் நீட்டி புருவ சுழிப்புடன் “ஓ வந்துட்டிங்களா முத்தேண்ணே…அதை தாங்க” என எண்ணெய் குப்பியை அவரிடமிருந்து வாங்கிய ருத்ரா லட்சுமியின் காதருகே குனிந்து எதையோ கிசுகிசுத்தவுடன்,அதற்கு ஏதோ புரிந்தது போல் தலையசைத்து வைத்தது.
அதனை சிறு சிரிப்புடன் பார்த்து ஒரு முறை தோளில் தட்டிக்கொடுத்த ருத்ரா முத்துவிடம் “முத்தேண்ணே காளையனை சீக்கிரம் கூட்டியாற சொல்லுங்க…கொஞ்ச நேரத்துக்கு வூட்டு பொம்பளைங்க யாரையும் இந்த பக்கம் வரவேண்டாம்னு சொல்லிட்டு போங்க” அவனையும் அவ்விடத்திலிருந்து கட்டளை பிறப்பித்து அனுப்பிவிட்டான்.
குப்பியை அருகிலிருந்த திண்ணையில் வைத்துவிட்டு ஒரு முறை லட்சுமியின் கண்களை பரிசோதித்தவன் அதன் கருவிழி பெரியதாக விரிந்திருப்பதையும்,உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதையும்,அவ்வப்போது அது தன் வாளை ஒதுக்கிவிட்டு கொண்டு இருப்பதையும் வைத்தே அவனிற்கு எழுபது சதவீதம் உண்மை புலப்பட்டுவிட்டது.
மேலும்,சிறிது சிறிதாக சில நிமிடங்களுக்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பதையும் அவனது கூறிய கண்கள் அளவெடுத்து கொண்டது.
தன் கரங்களை ஒரு முறை அருகிலிருந்த குழாயில் காட்டி நீரினால் சுத்தம் செய்துக்கொண்டு எண்ணெய் குப்பியுடன் லட்சுமியின் அருகே வந்தான்.
அங்கு அவனது மனையாளோ கணவன் கீழே சென்று வெகு நேரத்திற்கு பின்பும் அவன் மேலே வராததை அறிந்து ‘முத்து வந்து மாமாவை அழைச்சிட்டு போனாரு…என்னாச்சு?ஹவுஸில் ஏதும் பிராப்ளமா?’ என்ற யோசனையுனூடே அவசரமாக புடவை இழுத்து சரிச்செய்து இடை தாண்டி நீண்டிருந்த கார்மேக குழலை கொண்டையிட்டு நெற்றியில் பொட்டின்றி கீழே மானை போல் துள்ளி ஓடி வந்தாள்.
கீழே இறங்கி வரவேற்பறைக்கு வந்தவள் ‘எங்கே யாரையும் காணும்?’ என அவளின் கயல் விழிகள் வீடு முழுவதும் பரபரப்புடன் அலசி ஆராய்ந்தது.
அனைவரும் முத்துவின் வாய்மொழியாக தகவலறிந்து தலைமகனின் கட்டளை சாசனத்திற்கு உடன்பட்டு தங்களது அறைக்குள்ளே முடங்கியிருந்தார்கள்.
இவ்விஷயமறியாத பேதை பெண்ணவளோ ‘பேக் சைடு இருப்பாங்களோ?’ என சிங்கத்தின் குகைக்குள்ளே மாட்டிக்கண்ட புள்ளி மானாய் ருத்ரமூர்த்தியிடம் தனித்து வசமாக சிக்கினாள்.
ஆடவன் அப்போது தான் முரண்டு பிடித்த லட்சுமியை அடக்கி எண்ணெய் குப்பி கொண்டு அதன் முரட்டு தேகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டான்.
அதில் வழிந்திருந்த வழவழப்பான திரவம் வைத்தே இது சினை பருவத்திற்கான அறிகுறி என்று நூறு சதவீதம் கண்டறிந்திருந்த ருத்ரா தலையை உயர்த்துவதற்கும் மனையாளின் சதங்கையின் ஓசை செவியை துளைப்பதற்கும் சரியாக இருந்தது.
அவளின் வருகை அறிந்து அவனது புருவம் ஒரே ஒரு நொடி சுருங்கி விரிந்தது என்றால்,சடுதியில் ‘வீட்டு பொம்பளைங்க யாரையும் இங்க வரவேணாம்னு சொல்லியும் இங்கே வருகிறாள் என்றால் என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்’ என ஆத்திரம் உச்சந்தலைக்கு எகிறியது.
ஏற்கனவே லட்சுமியின் சினை அறிகுறி உறுதி செய்யப்பட்டதில் கலவையான உணர்ச்சிகளோடு இருந்தவனிற்கு,தான் போட்டிருந்த ஆணையின் விலங்கை உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்த அந்த காரிகையின் மீது சீற்றம் அதிகரிக்க,பெண்ணவளின் கன்னம் சிவக்க வைக்க அவனது கரங்கள் பரபரத்தது.
ஆயினும்,பெண்களின் மீது கைவைக்கும் எந்தவொரு கணவனும் ஒரு ஆண்மகனே அல்ல என்ற தந்தையின் போதனை நினைவில் வர விழி மூடி கைமுஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இமை திறந்த வேளையில் “மாமா” என துள்ளி குதித்து அவனின் முன் நின்றிருந்தாள் சந்திரநிலா.
கைகளை பின்னால் கட்டி அவனது கையிலிருந்த எண்ணெய் குப்பியையும் அவனை தாண்டி முனகிக்கொண்டிருந்த லட்சுமியையும் ஒரு முறை எட்டி பார்த்தவள் “என்ன மாமா…லச்சுக்கு நாட் ஃபீலிங் வெல்லா?” என பாவமாக முகம் சுருக்கி கேட்டவளின் கண்கள் லட்சுமியை நினைத்து வருந்தியது.
அவளது கவலை கண்டு அவனது சினம் குறைந்தாலும் முழுமையாக நீங்காத சீற்றத்தை உள்ளடக்கிய குரலில் “ஆமா…நீ உள்ளாற போ” என்றான் சற்றே அழுத்தமான குரலில்.
அவளோ அவனது சினத்தை உணராதவளாய் “ஹோ காட்” என இதழ்குவித்தவள் பின்பு “மாமா லச்சுவை டாக்டர்கிட்ட செக் அப் கூட்டி போலாம்…அது பேஸே சரியில்லை…வெரி புவர்” என அவளது வாழ்வே நிலுவையில் இருக்க,இவளோ வாயில்லாத ஜீவனிற்காக பரிதாபம் கொண்டாள்.
இவனோ ‘இன்னும் சற்று நேரத்தில் காளையன் வந்துவிடுவான்…இவளை வைத்து இங்கே என்ன செய்வது?’ என்ற எரிச்சலுடனே “பொலி காளை வந்திடும்…உள்ள போ” என்றவனின் குரல் இப்போது நன்றாகவே உயர்ந்திருந்தது.
அந்நேரம் அவளது மூளையில் ஏழரை சனி அமர்ந்திருப்பது அப்போது தெரியவில்லை.
கால தாமதமாக உணர்ந்தவளிற்கு மிஞ்சியது வலியும் வேதனையும் மட்டுமே!!
ஏனெனில் இமை சுருக்கி “வாட் இஸ் பொ…லி கலை?” என கன்னத்தில் ஒரு விரலை தட்டி சந்தேகம் கேட்டுக்கொண்டு அவ்விடத்திலே நின்றிருந்தாள்.
அதில் அவன் இழுத்து பிடித்திருந்த பொறுமையும் சினமும் கரையை உடைக்க காத்திருந்தது போல் அவனது முகம் அளவுக்கு மீறிய உஷ்ணத்தை அதிகப்படுத்தியிருந்தது.
இதுவே புரிந்துணர்வுடன் வாழும் தம்பதியனராய் இருந்திருந்தால் கணவன் மனையாளிற்கு தேவையான விளக்கத்தை கொடுத்து அவளை அங்கிருந்து அனுப்பியிருக்கக்கூடும்.
ஏனென்றால்,பொலிகாளை என்பது பசுக்களைச் சினையாக்கும் பொருட்டு வளர்க்கப்படும் காளை.
பொலிகாளை இருந்தால் தான் நிறைய நாட்டு இன கன்றுகளை உருவாக்க முடியும்.ஒரு பொலிகாளை என்பது நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருப்பதற்கு சமம்.
இதனை பற்றி நிதானமாக விளக்கி கூறும் சூழ்நிலையும் பக்குவமும் அவனிடத்தில் இல்லை.அதேநேரம் அதனை பற்றி வெளிப்படையாக கூறுவதற்கான சுமுகமான உறவும் அவர்களுக்கிடையே நிலவவில்லை.
மனையாளின் மீது பார்வையாலே தீயை உமிழ்ந்தவனின் உஷ்ணத்தை வெகு நேரத்திற்கு பிறகு உணர்ந்தவளிற்கு ‘எதுக்கு இவ்வளவு கோபம்?’ என தேகம் அச்சத்தில் நடுங்கியது.
அதில் சற்று முன்பிருந்த இயல்புநிலை மாறி அவளிற்கோ முகம் சுருங்கிவிட சோகமாக “லச்சுவை ஒன்ஸ் பாத்துட்டு போ..றன் மாமா” என கணவனின் சினத்தை உணர்ந்து அவனை தாண்டி விலகி செல்ல முடிவெடுத்திருந்தாள்.
அதற்குள் ஆட்களின் பேச்சு குரலும் கூடவே காளையனின் சீறலும் அவனது செவியை துளைத்தவுடன் ‘இவளை இங்கு கண்டால் அவர்கள் சங்கடம் கொள்வார்கள்’ என நினைத்தவனிற்கு அதுவரை இழுத்து பிடித்த ஆத்திரத்தை முற்றிலும் இழந்தவனாக லட்சுமியை பார்ப்பதற்கு அவனை தாண்டி செல்ல முயன்றவளின் கரத்தை வெடுக்கென்று பிடித்து இழுத்திருந்தான்.
அவன் இழுத்த வேகத்தில் எண்ணெய்யில் நிரம்பியிருந்த அவனது கரத்திலிருந்த அவள் கரம் நழுவி புடவை தடுக்கி கால் தடுமாறி பாவையவள் பொத்தென்று கீழே விழுந்திருந்தாள்.
விழுந்த வேகத்தில் அவளின் கரத்தை தரையில் ஊன்றியதினால் “அம்மாஆஆஆ” என கத்திய பூஞ்சையவளின் பூப்போன்ற கரங்களில் மண்ணிலிருந்த கற்கள் குத்தி குருதி கசிந்தது.
அவளின் அலறல் சத்தத்தில் லட்சுமியும் சற்றே மிரண்டு “ம்மாஆ” என இரண்டு காலையும் முன்னோக்கி தூக்கியதில் ஆடவனின் கவனம் அதன் புறம் திசை திரும்பியிருந்தது.
அதுவரை இருந்த உஷ்ணத்தை துறந்து மென்மையான முகத்தை தத்தெடுத்தவன் “ஒண்ணுமில்லை…பயப்படாதே” என அந்த ஐந்தறிவு ஜீவனிற்கு வருடலுடன் ஆறுதல் கூறினான்.
மனையாளை கீழே தள்ளிவிடும் தன்முனைப்போடு அதனை செய்யவில்லை என்றப்போதிலும்,கையில் காயப்பட்டு அநாதரவான நிலையில் கீழே விழுந்து கிடந்த மனையாளை தொட்டு தூக்கும் உத்தேசம் சிறிதுமின்றி லட்சுமியின் மீதே முழு கவனத்தையும் செலுத்தியிருந்தான் ருத்ரமூர்த்தி.
அந்த வாயில்லாத ஜீவனின் மீது அவன் வைத்திருந்த அன்பை கண்ணுற்றவள்,ஒரு சக மனதியாய் ஒரு மனிதாபிமானத்துடன் கூட தனக்கு உதவி செய்ய கணவன் மறுத்தத்தற்கு பிறகே அவன் தன்னை எந்த அளவு வெறுக்கிறான் என்பதை பாவையவள் முதன்முறையாய் உணர்ந்தாள்.
இது நாட்கள் வரை தன்னவன் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வான் என்று நெஞ்சினோரம் துளிர்விட்டிருந்த அந்த சிறு நம்பிக்கையும் இந்த ஒரு அவமதிப்பால் தூள் தூளாகியதில் பெண்ணவளின் மனம் பெரும் சஞ்சலமடைந்தது.
பேச்சுக் குரல் தங்கள் அருகிலிருந்து வருவதை அறிந்து,அப்போதும் நேசம் குறையாத மனையாளாய் மற்றவரின் முன்பு கணவனை விட்டுக்கொடுக்க விரும்பாமல் வலியை இதழ்கடித்து பொறுத்து தரையில் கை ஊன்றி அவசரமாக எழுந்துக்கொண்டாள் சந்திரநிலா.
கண்ணீர் உடைப்பெடுத்துக்கொண்டு வெளியே வருவதற்காக காத்திருக்க,அதனை ஒரு விரலால் சுண்டி தூர எறிந்தவள்,புடவை முந்தானையை ஒற்றையாய் இழுத்துவிட்டு இடது கையில் இருந்த காயத்தை மற்றவரிடம் காட்டாமல் மறைத்திருந்தாள்.
தடுமாற்றத்துடன் கணவனை ஒரு முறை மனதில் தோன்றிய பெரும் ரணத்தோடு ‘என்னை மன்னித்து ஏற்க மாட்டாயா மாமா?’ என விரக்தியோடு பார்த்தவள்,முத்துவை கடக்கும் போது வரவழைத்த சிறு புன்னகையுடன் தட்டுத்தடுமாறி நடந்து சென்றாள்.
அவளிற்கோ அவளது கரத்தில் அடிப்பட்ட காயத்தினால் விளைந்த வேதனையை விட,கணவனது இந்த விலகலே உயிர் மரித்துப்போகும் ரணத்தை கொடுத்தது என்று கூறினால் மிகையாகாது.
ஆனால் ஆடவனோ மனையாள் உள்ளே செல்லும் வரையிலும் தலையை திருப்பாமல் தேகம் விறைக்க லட்சுமியை வெறித்தப்படி நின்றிருந்தான்.