கணவன் இருந்தும் தனிமையில் வாடிய சந்திரநிலாவிற்கு துணை நிற்கும் விதமாக தன் பெயரை அழைத்த நபரின் குரலை வைத்தே அவர்கள் ‘யார்?’ என்பதை அடையாளம் கண்டுகொண்டவளின் முகம் பளீரிட்டது.
சட்டென்று தலையை திருப்பி அவர்களை பார்த்தவளின் கண்கள் இரண்டும் அவ்விடத்தில் நின்றிருந்த முகில்நிலாவையும் அவளது கணவன் ஞான மூர்த்தியையும் கண்டதும் ஆச்சரியத்தில் பெரிதாக விரிய,
தனக்காக நெடுதூரத்திலிருந்து பயணம் செய்து வந்திருந்த தன் இரட்டையின் பாசத்தில் நெகிழ்ந்த சந்திரநிலாவின் விழிகள் பனிக்க “முகில்..” என பரவசத்துடன் அழைத்தப்படி அவளை தாவி அணைத்துக்கொண்டாள்.
“என்க்காக வந்தியா?” என கேட்கும் போது அவளின் குரல் கரகரத்தது.
முகில்நிலாவும் அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டு “அதெப்படி எங்க அக்காவை தனியா விடமுடியும்…அதான் நான் வந்துட்டேனில்லை…இனிமேல் நீ அழக்கூடாது…அமைதியா இரு…ஓகே” என அவளிற்கு சமாதானம் கூறியவளின் விழிகள் இரண்டும் ருத்ரமூர்த்தியை பார்த்து யோசனையில் சுருங்கியிருந்தது.
ஏனெனில் ருத்ரமூர்த்தியை பற்றி நன்கு அறிந்த முகில்நிலாவிற்கு ‘இந்த முடிவில் இவ்வளவு உறுதியாக மாமன் இருக்கிறான் என்றால்,நிச்சயம் தவறு செய்தது சந்திரநிலாவாக தான் இருக்கும்’ என்ற எண்ணம் முதன்முதலாக அவளது நெஞ்சில் வேரூன்ற தொடங்கியது.
ஆயினும்,தன் சகோதரியை யாரிடமும் விட்டுக்கொடுக்க மனமில்லாதவளாய் ‘நிலா நான் உனக்காக என்றும் எப்போதும் துணை நிற்பேன்’ என மானசீகமாக உறுதிமொழி அளித்தவளின் தீர்க்கம்,சந்திரநிலா செய்த பிழைகளை பற்றி அறிய நேர்ந்தாலும் நீடித்து இருக்குமா?
இதனை யாவும் அறியாமல் அவர்களின் அருகே சற்றே அரண்டு போய் நின்றிருந்த ஞானமூர்த்தியின் கண்கள் சகோதரிகளையும் தனது உடன் பிறந்த சகோதரனான ருத்ரமூர்த்தியையும் மாறி மாறி பார்த்ததிருந்தது.
ஆம்,முகில்நிலா திருமணம் செய்திருப்பது,ருத்ரமூர்த்தியின் ஒரே தம்பியான ஞானமூர்த்தியை தான்.
ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டையர்களை தான் சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்திருந்தார்கள்.
அத்தோடு,வேலாம்மாளின் ஒரே சகோதரன் தான் சந்திரநிலா மற்றும் முகில்நிலாவின் தந்தை ராஜசேகர்.
சொந்தத்தில் பெண் கொடுத்து பெண் எடுப்பது போல் வேலாம்மாளை ருத்ரமூர்த்தியின் தந்தையான கனக ரத்தினத்திற்கு கட்டிக்கொடுத்தவர்கள்,அவரின் ஒரே தங்கையான சித்திரை நிலாவை தான் ராஜசேகருக்கு மணமுடித்து கொடுத்திருந்தார்கள்.
ராஜசேகர் அன்றைய ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதாம் காலக்கட்டத்திலே நன்றாக படித்து பொறியியலில் பட்டம் பெற்ற இளம் பட்டதாரி.
அதனால் சென்னையில் உள்ள மிகப்பெரிய கல்லூரி ஒன்றில் மென்பொருள் பொறியியல் பாடத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணிப்புரிந்து வந்தார்.
சித்திரை நிலாவும் தன் கணவனோடு சென்னையில் தங்கி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால்,ஒரே ஒரு குறையாக அவர்களுக்கு திருமணம் நடந்தேறி பத்து வருடங்களை கடந்தும் குழந்தையின்றி ஒவ்வொரு கோவிலாய் வரம் வேண்டி ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஊரை சேர்ந்த பலரும் குழந்தை பேறு இல்லாத குறையை சுட்டிக்காட்டி அந்த தம்பதியினரை வார்த்தைகளால் வதைத்தப்போதும்,கனக ரத்தினமும் அவரது மனைவி வேலாம்மாளும் துணையாக இருந்து அவர்களை விட்டுக்கொடுக்காமல் ஆறுதல் கூறினார்கள்.
அப்படியான ஒரு சமயத்தில் புதிதாக நடைமுறைக்கு வந்திருந்த செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை பற்றி கேள்வியுற்று இந்தியாவிலே மிகப்பெரிய டெல்லி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையெடுத்து பிறந்த பிள்ளைகள் தான் சந்திரநிலாவும் முகில்நிலாவும்!!
தங்களது கருத்தரிப்பு சிகிச்சைக்காக வேண்டி,ராஜசேகரும் தனது பணியை டெல்லியில் மாற்றிக்கொண்ட நேரத்தில்,பிள்ளைகள் பிறந்த இரண்டு வருடத்திலே சித்திரை நிலா உடல்நிலை மோசமடைந்து இயற்கை எய்தினார்.
தன் காதல் மனைவி இறந்ததே பேரதிர்ச்சியென்றால் இரண்டு பெண் குழந்தைகளை ஒற்றையாளாய் வைத்துக்கொண்டு தவித்தவருக்கு வேலாம்மாளும் அவரது கணவன் கனக ரத்தினம் தான் ஆதரவு கரம் நீட்டினார்கள்.
அதனால் தன் வேலையை தஞ்சாவூருக்கு மாற்றிக்கொண்டு குழந்தைகளை தன் தமக்கையின் கவனிப்பில் விட்டவர், நிம்மதியுடன் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கினார்.
அப்போது கனக ரத்தினம் வேலாம்மாள் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.
அதில் முதல் இரண்டும் ஆண் மகவுகள்,இறுதியாக பிறந்த பெண்பிள்ளை பிறந்த சில நிமிடங்களிலே இறந்துவிட்டதால்,அவளின் நினைவாக கிடைத்த இந்த இரண்டு பொக்கிஷங்களை நெஞ்சில் வைத்து கண்ணின் இருமணி போல் அடைக்காத்து வளர்ந்தார் வேலாம்மாள்.
ஆனால் குழந்தைகளுக்கு பத்து வயதை கடந்த நேரத்தில் ராஜசேகருக்கு லண்டன் மாநகரில் ஒரு மிகப்பெரிய சம்பளத்துடன் வேலை கிடைத்தவுடன்,மகள்கள் இருவரின் படிப்பிற்காகவும் அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வெளிநாடு பறந்துவிட்டார் ராஜசேகர்.
அத்தோடு தமக்கை தங்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தியதின் விளைவால்,அவரின் உதிரத்தில் பிறந்த வாரிசுகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்ற சின்ன மனவருத்தம் கனகரத்தினத்தின் தாயாரின் மனதில் இருப்பதை அறிந்துக்கொண்டே இந்த தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் மேல் உயிரையே வைத்திருந்தவருக்கு தம்பியின் இந்த முடிவு பெரும் வேதனையை கொடுத்தாலும்,அவரின் கணவர் சமாதானம் செய்து தங்கள் மகன்களின் மேல் அவரை கவனம் செலுத்த வைத்தார்.
மீண்டும் அவர்களது வாழ்க்கை சீரான நிலையில்,அந்த நேரத்தில் தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கனகரத்தினம் காளையினால் தாக்கப்பட்டு உயிரை இழந்தார்.
குடும்பத்தின் அஸ்திவாரமே கவிழ்ந்த நிலையில் வேலாம்மாள் உடைந்து நொறுங்கிப்போனார்.
மகன் இறந்த துக்கத்தில் அவரது தாயாரும் மீளாதுயிலில் ஆட்கொண்டு விட,அடுத்தடுத்து நடந்த உயிரை உருக்கும் சம்மவத்தினால் வேலாம்மாள் இடிந்து மூலையில் முடங்கிவிட்டார்.
அந்த சமயத்தில் தான் கொஞ்சமும் எந்த வித நிகழ்வினாலும் தளர்ந்து போகாமல் பதினெழு வயதே நிரம்பிய அவர்களது மூத்தமகனான ருத்ரமூர்த்தி குடும்பத்தை பொறுப்பேற்று தொழிலையும் தன் கையில் எடுத்து இரண்டையும் சிறப்பாக வழிநடத்தி சென்று அஸ்திவாரத்தை மண்ணிற்குள் வேரூன்றி போட்டு குடும்பத்தை நிலைநிறுத்தினான்.
அவனால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை என்றப்போதிலும்,தனது சகோதரனான ஞானமூர்த்தியின் தலையில் குடும்பம் மற்றும் தொழில் பாரத்தை ஏற்றாமல் அவனை மிகப்பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்திருந்தான்.
ராஜசேகர் லண்டன் மாநகரத்தில் தமக்கையின் கணவனின் இறப்பிற்கு கூட வரமுடியாத வகையில் அவ்விடத்திலே சூழ்நிலை கைதியாய் மாட்டிக்கொண்டார்.
இருப்பினும்,உடன்பிறந்தவளின் வேதனையை அறிந்து அலைப்பேசியின் வழியாக வேலாம்மாளிற்கு ஆறுதல் மட்டுமே கொடுத்து தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த சமயத்தில் நாட்கள் விரைந்தோடி அவரின் மகள்கள் இருவரும் பதினெட்டு வயதை கடந்த நிலையில் தன்னை போலவே படிப்பில் புத்திசாலியாக திகழ்ந்த சந்திரநிலாவை எண்ணி பெருமிதம் கொள்பவர்,படிப்பில் சற்றே பின்தங்கிய நிலையில் இருக்கும் முகில்நிலாவை எந்நேரமும் வார்த்தைகளால் வதைத்துக்கொண்டிருப்பார்.
ஆனால் முகில்நிலா அதனை ஒரு போதும் பெரியதாக எடுத்துக்கொண்டதும் இல்லை.
அச்சமயத்தில் தான் வேலாம்மாள் ஊர் திருவிழாவிற்காக இந்த குடும்பத்திற்கு அன்போடு அழைப்பு விடுக்க,மூவரும் வெகு வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்திறங்கினார்கள்.
சந்திரநிலாவிற்கு அந்த ஊரின் தட்பவெப்பநிலையும் சூழலும் முற்றிலும் ஒப்புக்கொள்ளவில்லை.
அத்தோடு மொழி வேறுப்பாடும் மற்றவர்களோடு அவளிற்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறுவதே ஏற்றத்தக்கதாக இருக்கும்.
அதனால் யாரோடும் நெருங்கி பழகாமல் ஓரடி இடைவெளியுடன் தள்ளியே இருந்தாள் சந்திரநிலா.
ஆனால் முகில்நிலாவோ அவளிற்கு நேரெதிராக வேலாம்மாளோடு நன்றாக ஒட்டிக்கொண்டதோடு அந்த ஊரோடு இறுகிய பிணைப்பையும் உருவாக்கிக்கொண்டாள்.
ஆரம்பத்தில் அவளிற்கும் மொழி வேறுபாடு பிரச்சனையாக இருந்தப்போதும் ஊரோடு ஒன்றி வாழும் அவளுடைய குணமும் கலகலப்பும் அவளை மற்றவர்களிடமிருந்து தள்ளி நிற்கவிடவில்லை.
இந்த ஊரின் வளங்கள் மிகவும் பிடித்ததோடு அவளது அத்தையான வேலாம்மாளையும் அவரது மகனான ஞானமூர்த்தியையும் அளவுக்கு அதிகமாக பிடித்ததின் விளைவால்,தந்தையிடம் இங்கிருந்தே அவள் கல்லூரி படிப்பை தொடர்வதாக தெரிவித்தாள்.
அவரோ முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தாலும் வேலாம்மாள் அவளை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள போவதாகவும்,அவள் இங்கிருந்தே படிக்கட்டும் என்று கூறியதினாலே வேறுவழியின்றி அவரும் ஒத்துக்கொண்டார்.
இதில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது சந்திரநிலா மட்டும் தான்.
கருப்பையிலிருந்து தன்னோடு ஒட்டி பிறந்த தங்கையை பிரிவது அவளிற்கு மிகுந்த வேதனையை கொடுத்தாலும் ஞான மூர்த்தியின் மீது அவள் வைத்திருக்கும் காதலை அறிந்து முகில்நிலாவின் மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுத்துவிட்டு லண்டன் புறப்பட்டு சென்றிருந்தாள் சந்திரநிலா.
முகில்நிலா தன்னுடன் இல்லாதது அவளிற்கு தன் உடம்பிலிருந்து ஓர் உறுப்பை இழந்தது போல் கொடூரமான ரணத்தை கொடுக்கவே செய்தது.
அன்னையில்லாத சகோதரிகளுக்கு ஒருவள் மற்றவளிற்கு தாய் என்ற உணர்வு அவர்களை அறியாமலே உள்ளுக்குள் தோன்றியிருந்தது.
அதனால் சில நாட்களுக்கு தாயான முகில்நிலாவை பிரிந்து துக்கத்தில் ஆழ்ந்திருந்தவளிற்கு தந்தையின் அன்பு கூட கசந்து வழிந்தது.
அதனை உணர்ந்த அந்த தந்தையுள்ளம் மகளிற்காக பரிதவித்து முகில்நிலாவிடம் சூழ்நிலை விவரிக்க வைத்தது.
முகில்நிலாவும் அதையே உணர்ந்தது போல் அவளின் கண்களும் கலங்கினாலும் இயல்பிலேயே சிறிது நெஞ்சுரம் கொண்டு பிறந்திருந்தவள் தன்னை சமாதானம் செய்துக்கொண்டு சந்திரநிலாவிடம் பேசி அவளையும் வழிக்கு கொண்டு வந்திருந்தாள்.
அத்தோடு அவள் கூறிய அந்த ஒரு வாக்கியம் சந்திரநிலாவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துப்போனது முகில்நிலாவே அறியாதது.
அது என்னவென்றால் ‘ஒன்றாக பிறந்திருந்தாலும் இருவருக்கும் தனித்தனி வாழ்க்கை இருக்கிறது…இறுதிவரை நம்மால் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழும் வாழ்க்கை சாத்தியப்படாது…பெண்களாக பிறப்பெடுத்தால் பிறந்த வீட்டை விட்டு ஒரு நாள் பிரிந்து தான் செல்ல வேண்டும்…அதனால் என் பிரிவை மறந்துவிட்டு உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த தொடங்கு’ என சந்திரநிலாவிற்கு புரியும் வகையில் சிறு குழந்தைக்கு கூறுவது போல் நிறுத்தி நிதானமாக நிதர்சனத்தை எடுத்துரைத்தாள்.
ஆனால் அவள் கூறிய மற்றைய அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டவளிற்கு ‘இறுதிவரை நம்மால் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழும் வாழ்க்கை சாத்தியப்படாது’ என்று கூறியதை மட்டும் நெஞ்சில் பதிய வைத்தவளிற்கு,
‘அது ஏன் முடியாது?அந்த வீட்டில் இன்னொரு ஆண் மகன் இருக்கிறானே?அவனை திருமணம் செய்துக்கொண்டால் முகிலோடு இறுதி வரை ஒன்றாக இருக்கலாமே?’ என்ற விபரீத எண்ணமும் தோன்றியதின் விளைவே ருத்ரமூர்த்தியுடனான அவளது திருமணம் என்பது தெரிந்தால் முகில்நிலா எவ்வாறு உணருவாள்?
சுருங்கக்கூறினால்,அதுநாட்கள் வரை ஒழுங்காக பேசியிராத ஒரு ஆண்மகனோடு சந்திரநிலாவின் வாழ்க்கையை முடிச்சிடுவதற்கு பிள்ளையார் சுழி போட்டது முகில்நிலாவே தான்.
விருப்பிமின்றி சகோதரியின் மீது வைத்திருந்த பாசத்தினால் உருவாகிய பந்தம் என்பதாலோ கணவன் மனைவி உறவு முறிவு வரை வந்துவிட்டிருந்தது.
ஆயினும்,அது மட்டுமே காரணமின்றி பெண்ணவள் செய்த பெரும் பிழை ஒன்று ருத்ரமூர்த்தியின் நெஞ்சத்தை கூறுப்போட்டதின் விளைவே விவாகரத்திற்கு முதன்மையான காரணம்.
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சில மெல்லிய உணர்வுகள் இருக்கும்.அந்த உணர்வுகளை காயப்படுத்தினால் கூட பொறுத்து கொள்பவர்கள்,அந்த உணர்வுகளுக்கு முற்றிலும் தகுதியில்லாத ஒருவரிடம் இருந்து விலகி செல்ல மட்டுமே எண்ணுவார்கள்.
அந்த முடிவை தான் தன் மனசாட்சியை கூட கொன்று புதைத்துவிட்டு எடுத்திருந்தான் ருத்ரமூர்த்தி.