அவனை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். சிறு வயது என்றால் மிக மிக சிறிய வயதில் அவனை பார்த்தது. அந்த நினைவுகளில் அவளது முகம் மலர்ந்தது.
இருவரும் படித்த பள்ளி, ஆரம்ப பள்ளியிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் தனியார் பள்ளி. அதில் அரசேந்திரன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.
பள்ளிப்பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில் தான் அவள் ஏறினாள். எங்கும் பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுற்றி முற்றி பார்த்தபடி அரசன் அருகே சென்று அமர்ந்து விட்டாள்.
தன் நண்பனை தவிர யாரையும் அருகே அமர விடாத அரசேந்திரன், அவளை துரத்தி விடுவதற்காக திரும்பினான்.
கொழுக் மொழுக் குழந்தையாக, தன் குட்டி முடியில் இரட்டை குதிரை வாலை போட்டுக் கொண்டு, பையை பிடித்தபடி பேருந்தை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் வைசாலி.
“ஓய்.. என்ன இங்க உட்கார்ந்து இருக்க?” என்று அரசன் கேட்டதும், அவன் பக்கம் திரும்பியவளின் முட்டைக்கண் அவனை அதிர வைத்தது.
“முட்டக்கண்ணி” என்று வம்பிழுக்க, “என் பேரு முட்டக்கண்ணி இல்ல சாலி” என்றாள்.
அது அவன் காதில் “லாலி” என்று விழுந்து வைத்தது.
“லாலியா?” என்று கேட்டவன் வாயில் கை வைத்து கிண்டலாக சிரிக்க, “லாலி இல்ல சாலி வைசாலி” என்று மிடுக்காக கூறினாள்.
“உனக்கு லாலி தான் நல்லா இருக்கு. ஆமா என்ன க்ளாஸ்?”
“யூகேஜி”
“அப்ப எல்கேஜி படிக்கலயா?”
“அது எங்க ஊருல படிச்சேன்.”
“உங்க ஊருல யூகேஜி ஸ்கூல் கட்டலயா?”
“என் அப்பா இங்க தான் வேலை பார்க்குறாரு. அதான் இங்க வந்து ஸ்கூல் படிக்கலாம்னு வந்தோம்”
நீளமாக நிறுத்தி நிறுத்தி அவள் பேச, அரசன் பொறுமையாக கேட்டுக் கொண்டான்.
“உன் பேரென்ன?”
“அரசேந்திரன்”
அவன் பெயர் புரியாமல் வைசாலி முழிக்க, “அரசன்” என்றான்.
“அரசன் சோப்பா?” என்று வைசாலி இப்போது சிரிக்க, அரசேந்திரன் முறைக்க வேண்டியிருந்தது.
“அரசன் சோப்பு உங்க சோப்பா?” என்று கேட்டு வைக்க, “இல்ல.. என் பேரு அரசன் மீன்ஸ் கிங். சோப்பு இல்ல” என்று பல்லைக்கடித்தான் எட்டு வயது மாணவன்.
“கிங்கா? சரி” என்று திரும்பிக் கொண்டாள்.
அடுத்த சில நிறுத்தத்தில் ஏறிய அரசனின் நண்பன், அவனருகே இருந்த வைசாலியை பார்த்து முறைத்தான்.
“நான் தான் இங்க உட்காருவேன். எந்திரி” என்று அவன் கத்த, “நான் தான் ஃபர்ஸ்ட் வந்தேன்” என்று வைசாலி அசராமல் கூறினாள்.
அவன் வேகமாக அரசனை முறைத்தான். துரத்தி விடாமல் இருக்கானே?
“நீ போய் முன்னாடி உட்காருடா. இது புது பாப்பா ஸ்கூல்க்கு” என்று அரசன் கூறும் போதே, அவர்களை பேருந்தில் கவனித்துக் கொள்ள இருக்கும் ஆள் வந்து விட்டார்.
“ஏன் நிக்கிற? போய் உட்காரு” என்று அதட்டவும், அரசனையும் வைசாலியையும் முறைத்து விட்டு முன்னால் சென்று விட்டான்.
“இது உன் ஃப்ரண்ட்டா?”
“ஆமா.”
வைசாலி தலையை ஆட்ட, அரசன் பேசிக் கொண்டே இருந்தான். வைசாலியும் பேசினாள். பள்ளி வரும் வரை பேசிக் கொண்டு தான் இருந்தனர். முதன் முதலில் சந்திப்பவர்கள் என்ற தயக்கமெல்லாம் அந்த குழந்தைகளுக்கு இல்லை. இருவரும் நன்றாக பேசும் அறிவாளிக் குழந்தைகள். அதனால் எதையாவது பேசியபடியே பயணித்தனர். இடையிடையே கிண்டல் சிரிப்பும் கோபமும் வேறு வந்தது. அன்று பள்ளியில் இறங்கும் போதே இருவரும் நன்கு தெரிந்தவர்களாக மாறி விட்டனர்.
அதன் பின் இதுவே தொடர்கதையானது. தினமும் அவனருகே வந்து அமர்ந்து விடுவாள் வைசாலி. மாலை திரும்பும் போதும் இதே நிலை தான். இருவரிடையே அழகான பெயரிடப்படாத நட்பு உருவானது.
அது அன்று மட்டுமல்ல அடுத்த ஆறு வருடமும் தொடர்ந்தது. அந்த பேருந்து பயணம் என்றுமே மறக்க முடியாத பயணம். ஆறு வருடங்கள் இருவரும் ஒன்றாகவே சென்று வருவார்கள். இடையில் யார் விடுமுறை எடுத்தாலும், வேறு யாரையும் அருகே அமர விட்டது இல்லை.
சிறுவயதில் கல்மிசமில்லாத நட்பு மிக மிக அழகானது. இருவரும் வயது வித்தியாசத்தை மறந்து பழகிய அந்த காலம் பொக்கிஷம் என்றே நினைத்தாள் வைசாலி.
பல நேரங்களில், வீட்டில் விளையாடி விட்டு பேருந்தில் வந்து படிப்பாள் வைசாலி. அதற்கெல்லாம் அரசனிடம் கொட்டும் வாங்கிக் கொள்வாள்.
ஆடி அசைந்து போகும் பேருந்திலும், தடுமாறாமல் எழுதுவாள். அரசன் தான் அவளை திட்டிக் கொண்டே இருப்பான். சில நேரம் பொறுத்துப்போய்விடுபவள், பல நேரம், “போடா அரசன் சோப்பு” என்று திட்டி விடுவாள்.
“போடா சொல்லுவியா? சொல்லுவியா?” என்று நன்றாக கொட்டி வைப்பான்.
இருவரும் சாதாரணமாக பேசுவதென்றால், “லாலி” என்றும் “கிங்” என்றும் தான் பேசுவார்கள்.
கோபம் வந்தால் மட்டும் லாலி, முட்டைக்கண்ணி ஆகிவிடுவாள். கிங், அரசன் சோப்பாகிவிடுவான்.
இப்போதும் அதை நினைத்ததும், வைசாலியின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.
முக்கால் மணிநேரம் பயணம். முழுவதுமே அவன் நினைவு பள்ளி நினைவு தான். வீடு வந்து சேர்ந்தவளை அக்கம் பக்கமிருந்தவர்கள் பார்த்தனர்.
“வாமா கல்யாணப்பொண்ணு. வர்ர நேரமா இது?”
“ஹாஸ்பிடல்ல இருந்து நேரா கிளம்பி இங்க தான் சித்தி வர்ரேன். இதுக்கும் முன்னாடியே வரலாம்னு ஆசை தான். ஆனா முடியலயே” என்று கை விரித்தவள் காரிலிருந்து தன் உடமைகளை கீழே எடுத்து வைத்தாள்.
“இப்ப தான் வர்ரீங்களா அக்கா?” என்று கேட்டபடி பக்கத்து வீட்டுப்பெண் வர, “ஆமாடா. அம்மா எங்க?” என்று கேட்டாள்.
“பூசாரிய எதுக்கோ பார்க்க போனவங்க. இன்னும் வரல. சாவி எங்க கிட்ட கொடுத்து கொடுக்க சொன்னாங்க” என்றவள் கதவை திறந்து விட, வைசாலி பெட்டிகளை உள்ளே தூக்கிச் சென்றாள்.
“இந்தாங்க கா. நான் கிளம்புறேன்” என்று ஓடி விட்டாள்.
வீட்டுக்குள் வந்து உடமைகளை ஓரமாக வைத்து விட்டு, குளிக்கச் சென்று விட்டாள்.
குளித்து முடித்து வந்தவள், அவளுக்கு நிச்சயத்திருக்கும் மாப்பிள்ளைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
மீண்டும் அரசனின் நினைவு வர, “ச்சே.. நம்பர் வாங்கி இருக்கலாம்” என்று சலிப்பாக நினைத்துக் கொண்டாள்.
திடீரென எதோ நினைவு வந்தவளாக, தன் அலமாரியின் பக்கம் சென்றாள். வீட்டுக்குள் இருந்த இரண்டு அலமாரிகளில் எதையோ தேட ஆரம்பித்தாள்.
பிறகு அலமாரிக்கு மேல் இருந்த பெட்டிகள் ஒன்றை எடுத்துத் திறந்து பார்த்தவள், உள்ளே இருந்த ஒரு பெட்டியை எடுத்தாள். அதில் இருந்தது எல்லாம் வரைவதற்காக அவள் பயன்படுத்திய பொருட்கள்.
சிறிய டப்பாவில் நான்கைந்து தூரிகைகள் இருந்தது. அது தன் முடியை இழந்து மொட்டையாக இருந்த போதும், பத்திரமாக வைத்திருந்தாள்.
அதில் ஒன்றை எடுத்தவளுக்கு கொடுத்தவனின் நினைவு தான். அரசன் கொடுத்தது.
அவன் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பு கொடுத்தது.
ஒன்றாக ஒரே பேருந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள், ஏழாம் வருடத்தில் பிரிவை சந்தித்தனர். அரசன் ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைக்க, அந்த பள்ளியின் விதிமுறைகள் வேறு மாதிரி இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, பத்தாம் வகுப்பின் பாடங்களை சேர்த்து எடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். பத்தாம் வகுப்பின் பொதுத்தேர்வை எதிர் கொள்ள, அப்போதிலிருந்தே மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர்.
அரசன் வழக்கமாக செல்லும் நேரத்தை விட, ஒரு மணி நேரம் முன்னதாக வேறு பேருந்தில் பள்ளி செல்ல ஆரம்பித்தான். மாலையும் சிறப்பு வகுப்பு முடிந்து தாமதமாக வீடு சென்று சேர்ந்தான்.
இதில் முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது வைசாலி தான். அவனுடன் செல்லாமல் பேருந்தே பிடிக்காமல் போனது அவளுக்கு. ஆனாலும் வேறு வழியில்லை. சில மாதங்களில் வேறு நண்பர்களை பிடித்து விட்டாள்.
ஆனால், பள்ளியில் அரசனை பார்க்கும் போது புலம்பி விட்டாள்.
“நீ ஹோம் ஒர்க் சொல்லியே தரல. நான் ஃபெயிலாகிடுவேன்” என்று உதட்டை பிதுக்கி அழப்போனாள்.
அப்போது அரசன் தான் அவளை சமாதானம் செய்து வைத்தான். போகப்போக அரசன் இல்லாமல் சரியாக படித்துப்பழகிக் கொண்டாள்.
இதுவும் அரசனின் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வரும் போது முடிவுக்கு வந்தது. பொதுத்தேர்விற்கு முன்பு அவளை சந்தித்து இந்த பெட்டியைக் கொடுத்தான்.
“ஐ!” என்று வாங்கிக் கொண்டவள், “எதுக்கு?” என்று குழப்பமாக கேட்டாள்.
“பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சு நான் காலேஜ் போயிடுவேன்ல? எல்லாரும் பிரிய போறோம்னு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தோம். அப்புறம் ஸ்லாம் புக் எழுதுனோம். உன்னையும் இனி பார்க்க முடியாதுல? அதான் உனக்கு கிஃப்ட். நீ தான் நல்லா கிறுக்குவியே.. இத வச்சு இன்னும் நல்லா கிறுக்கு”
“அரசன் சோப்பு” என்று பல்லைக்கடித்தாலும், அந்த பரிசை ஏற்றுக் கொண்டாள்.
“உன் ஸ்லாம் புக் கொடு. நான் எழுதித் தர்ரேன்”
“க்ளாஸ்ல இருக்கு.. இரு எடுத்துட்டு வர்ரேன்” என்று ஓடிச் சென்று எடுத்து வந்து கொடுத்தான்.
என்ன எழுதுவதென்று தலையில் தட்டி யோசித்தவள், திடீரென எழுத ஆரம்பித்தாள்.
“நீ ரொம்ப ஸ்வீட் கிங். நல்ல மார்க் எடுத்து, நிறைய படிச்சு, சோப்பு கம்பெனி ஆரம்பிச்சு, எனக்கு நிறைய சோப் ஃப்ரியா கொடுக்கனும். ஆல்திபெஸ்ட். லாலி” என்று சுத்தமான ஆங்கிலத்தில் அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தாள்.
வாங்கிப்படித்தவன், அவள் தலையில் நறுக்கென கொட்டு வைத்தான்.
“உன்னை எழுதச்சொன்னா சோப்பு கம்பெனி வைக்கச் சொல்லுற? உனக்கு ஃப்ரியா வேற கொடுக்கனுமா? முட்டக்கண்ணி” என்று திட்ட, வைசாலி அவனை அடித்து விட்டு சிரித்துக் கொண்டே ஓடியிருந்தாள்.
அது தான் அவனிடம் கடைசியாக பேசியது. தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பின்னும், அவனை அவள் பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப்பிறகு இன்று தான் பார்க்கிறாள்.
அரசன் தன்னை உடனே கண்டு பிடித்ததை நினைத்து, மனதுக்குள் சந்தோசமாக இருந்தது.
“ச்சே.. நம்பர் வாங்கி இருக்கலாம்” என்று மீண்டும் ஒரு முறை தலையில் தட்டிக் கொண்டாள்.
அதே நேரம் அவனும் அதைத்தான் நினைத்தான்.
“லாலி நம்பர் வாங்கி இருக்கலாம். முட்டக்கண்ணி டாக்டர் ஆகியிருக்கா. பாராட்டி இருக்கலாம். நாலு வார்த்தை கூட பேசல ச்சே. பட் பார்த்தது ஹாப்பி” என்று சந்தோசப்பட்டுக் கொண்டான்.