பரபரப்பாக அந்த காவல் நிலையம் இயங்க ஆரம்பித்தது. ஆளாளுக்கு பேசியபடி தங்களது வேலையில் ஈடு பட்டிருக்க, எந்த சத்தமும் பாதிக்காமல் மாதவன் சிறைக்குள் அமர்ந்து இருந்தான்.
காலை மடக்கி அமர்ந்து கைகளை கோர்த்து தலைக்குப்பின்னால் வைத்து குனிந்தபடி அமர்ந்து இருந்தான். நேற்று மாலை அவனை அழைத்து வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறான்.
அவனோடு உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒருவன் நேற்று வெளியேற்றப்பட, மாதவனை தனிமை சூழ்ந்து கொண்டது.
“வா” என்க எழுந்து வெளியே வந்தான். அவனை விசாரனை அறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு நாற்காலியில் அமரச் சொல்லி கையில் விலங்கு மாட்டினர். அதை நாற்காலியோடு சேர்த்து மாட்டி விட, மாதவன் அந்த விலங்கை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவனது முகத்தில் கோபமோ பிடிப்பட்ட குற்ற உணர்வோ இல்லை. வேதனை. நிறைய வேதனை மட்டுமே நிரம்பி இருந்தது. அந்த வேதனையை தாங்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவன் முன்னால் ஒரு தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டது. அதை எடுக்கத்தோன்றாமல் அதையும் வெறித்துப் பார்த்தான். நேற்றும் தண்ணீர் மட்டுமே கொடுத்தனர். இப்போது அந்த தண்ணீரை அவன் தொடவில்லை.
என்னவோ விரக்தி நிலைக்குச் சென்றது போல் இருந்தான். அப்போது யாரோ முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர, பார்வை திரும்பியது.
முதலில் சரியாகத்தான் பார்க்கிறோமா? என்ற சந்தேகம் எழ, கண்ணை சுருக்கி பார்த்தான். உணர்வுகளற்ற முகத்துடன் அரசேந்திரன் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்து மாதவன் அதிர, அரசன் அவனையும் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலையும் பார்த்தான்.
‘அரசனா? இவனா என்னை…?’ என்று யோசித்தவனுக்கு, ஒரு நொடி வேதனை எல்லாம் மறைந்து ஆவேசம் வந்தது.
‘துரோகி.. கூட பழகிட்டே என்னை வாட்ச் பண்ணிருக்கான். துரோகி’ என்று மாதவனின் மனம் வேறு பக்கம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.
“டாக்டர் மாதவன்..?” என்ற அரசனின் அழைப்புக்கு பதில் சொல்லாமல் வெறித்தான்.
அரசனின் முகத்தில் உணர்வே இல்லை. கல்லைப்போன்று இருந்தது.
மாதவன் அரசனை வெறித்துப் பார்க்க, “இன்னும் ரெண்டு மணி நேரத்துல உங்கள கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும். அங்க உங்கள குற்றவாளியா கூட்டிட்டுப்போறதா? இல்லையானு இப்ப நீங்க சொல்லுறத வச்சு தான் முடிவு பண்ணனும்” என்று அரசன் அழுத்தமாக சொன்னான்.
மாதவனை அடிக்கவோ துன்புறுத்தவோ அரசன் விடவில்லை. அப்படி ஆரம்பித்து இருந்தால் நேற்றே மாதவனிடமிருந்து விசயத்தை வாங்கி இருப்பார்கள். என்னவோ அரசன் அவனை எதுவும் செய்யக்கூடாது என்று கூறி இருந்தான்.
அதனால் தான், அவன் இன்னும் நேற்று கைது செய்யும் போது இருந்த அதே நிலையில் இருந்தான். மாதவனுக்குத் தான் அது எதுவும் விளங்கவில்லை. அரசன் தன்னை பின் தொடர்ந்து வேண்டுமென்றே இதில் மாட்டி விட்டதாகத் தோன்றியது.
அந்த கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், அவன் இப்போது ஒரு காவலன். அவனிடம் விசயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும்.
மாதவன் ஒரு நீண்ட பெரு மூச்சோடு தண்ணீரை மீண்டும் குடித்து விட்டு, சொல்ல ஆரம்பித்தான்.
“மூணு.. மூணு வருசத்துக்கு முன்னாடி.. என் சிஸ்டர் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதி முடிச்சத கொண்டாட ட்ரிப் அரேன்ஜ் பண்ணோம்” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
உடனே செருமிக் கொண்டு, “சென்னைய சுத்திப் பார்க்க ப்ளான் போட்டோம்” என்றான்.
“நீங்க சென்னையில தான வொர்க் பண்ணுறீங்க?”
“ம்ம். அதுனால தான் அங்க வரச்சொன்னேன். ஊர் சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது கன்ட்ரோல் இல்லாம வந்த ஒரு கார் எங்க காரோட நேரடியா மோதிடுச்சு. அந்த கார்ல இருந்தவங்கள்ள ஒருத்தன் ஸ்பாட் அவுட். மத்தவனும் நாங்களும் துடிச்சுட்டு இருக்கும் போது…” நிறுத்தி அரசனை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் ஆரம்பித்தான்.
“அந்த பக்கமா வந்த ஒருத்தர்.. அதாவது எஸ்பி அரசேந்திரன் எங்கள காப்பாத்தி ஆம்புலென்ஸ கூப்பிட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்தாரு. அவரு கிட்ட நான் வேலை பார்க்குற ஹாஸ்பிடல் அட்ரஸ் கொடுத்ததோட மயங்கிட்டேன். அதுக்கப்புறம் அவர நான் பார்க்கவே இல்லை. அப்போ அவர் ஒரு போலீஸ்னு எனக்கு தெரியாது.”
அரசன் முகம் மாறாமல் மாதவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தான். வெளியே இருந்து இதை கவனித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தான், ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான்.
“எனக்கும் அம்மாவுக்கும் பெரிய அடி இல்ல. அப்பாவுக்கும் என் சிஸ்டருக்கும் பலமான அடி. அப்பாவுக்கு கால் எழும்பு முறிஞ்சு போச்சு. சிஸ்டருக்கு சின்ன வயசுல இருந்து மூச்சு பிரச்சனை இருக்கு. அது இந்த ஆக்ஸிடென்ல பெரிய பிரச்சனையா மாறிடுச்சு.”
சிறு வயதிலிருந்தே மிருதுளாவிற்கு சுவாசப்பிரப்பிச்சனை உண்டு. அதிகம் ஓடி ஆடி விளையாட மாட்டாள். மூச்சு வாங்கி மயங்கி விடுவாள். நிறைய மருந்துகளோடு தான் அவளது வாழ்க்கை பயணித்தது. மாதவன் அவளை எப்போதுமே பொத்தி பொத்தி பாதுகாப்பான். அவளை அழ விட மாட்டான். அதிகம் அழவும் கூடாது. அதிகம் சிரிக்கவும் கூடாது. இப்படி ஒரு வாழ்க்கையைத்தான் மிருதுளா பல காலம் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவள் இது வரை அதிகம் வெளி ஊருக்கு பயணித்தது இல்லை. பிடித்ததை எல்லாம் உண்டது இல்லை. அவள் வாழ்க்கை எப்போதும் திட்டமிட்ட கட்டுப்பாட்டுக்குள் தான் செல்லும்.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்ததும், மிருதுளா ஊரை சுற்ற விரும்பினாள். அவளது விருப்பத்திற்காக மாதவனும் சம்மதித்தான். சென்னையை தேர்ந்தெடுத்ததும் மிருதுளாவே தான். அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு, குடும்பமே அன்று சந்தோசமாக ஊர் சுற்றக் கிளம்பினர்.
அந்த பயணம் ஆரம்பித்தது போல் நல்லபடியாகவே முடியாமல், வேறு ஒருவனின் தவறில் மிகப்பெரிய விபத்தை சந்தித்தனர். மிருதுளாவின் மார்பு பகுதி அடிவாங்கி விட்டது. பிரச்சனை இல்லாதவர்களாக இருந்தால் அந்த விபத்திலிருந்து தேறியிருக்கலாம்.
ஆனால் மிருதுளாவால் தேற முடியவில்லை. அவளுக்கு நுரையிரலோடு இதயமும் அறுவைசிகிச்சை செய்து மாற்ற வேண்டிய கட்டாயம்.
“ரொம்ப தேடுனோம். கிடைக்கவே இல்ல. மிருதுளா இந்த மூணு வருசமா ஹாஸ்பிடல்ல தான் இருந்தா. மிருதுளா ப்ளட் க்ரூப் ரொம்ப ரேர். ஏபி பாசிடிவ்..”
ஆம்.. ஏபி பாசிடிவ் இரத்த வகையும் அரிதே. நெகடிவ் ரத்த வகைகள் காண்பது அறிதாக இருக்கலாம். ஆனால் சில பாசிடிவ் இரத்த வகைகளும் கிடைப்பது கடினம் தான். மிருதுளாவிற்கு இரத்தம் ஏற்றுவதற்கு அலைய வேண்டியிருந்தது.
இரத்தம் கிடைக்கவே அலையும் போது, அதே பிரிவில் உறுப்பு பெற எவ்வளவோ போராட வேண்டியிருந்தது. கிடைத்த இதயம் மற்றும் நுரையீரல் அவளுக்குப்பொருந்தவும் இல்லை.
மூன்று வருடம் முழுமையாக, ஒரு பொம்மை போன்று தான் மருத்துவமனையில் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
“ரொம்ப சிவியரா போயிட்டு இருக்கும் போது தான் பிரகாசம் டாக்டர் கிட்ட இருந்து எனக்கு கால் வந்தது. ஹார்ட் அண்ட் லங்ஸ் கிடைச்சுட்டதா. உடனே மிருதுளாவுக்கு ஆப்ரேஷன் பண்ணிட்டோம்.”
“இதுக்கும் அந்த நாலு கோடிக்கும் என்ன சம்பந்தம்?”
“அது.. அது..”
“பிரகாசம் எல்லாம் சொல்லிட்டாரு. கொடுத்த ட்ரீட்மெண்ட் அப்படி. உங்கள அப்படி ட்ரீட் பண்ண வேணாம்னு அமைதியா இருக்கோம். முழுசா சொல்லுவீங்க தானே?”
பார்வையை விலங்கிலிருந்து எடுத்து அரசனை பார்த்தான்.
“அது.. தப்பு தான்.”
“என்ன தப்பு?”
“மிருதுளாவுக்கு முன்னாடி லிஸ்ட்ல ரெண்டு பேரு இருக்கும் போதே, அந்த ஹார்ட் லங்க்ஸ மிருதுளாவுக்கு வைக்க முடிவு பண்ணோம். அதுக்கு தான் நாலு கோடி..”
“சோ.. முரளிதரன் கிட்ட பேரம் பேசி இருக்கீங்க. மிருதுளா பேர் முன்னாடி வர்ர மாதிரி செஞ்சு, அவங்களுக்கு ஆப்ரேஷன முடிச்சுருக்கீங்க”
மாதவன் தலையை மட்டும் அசைத்தான்.
“அப்போ கூட உங்களுக்கு டோனர பத்தி தெரியல? நீங்க விசாரிக்கல?”
“நிமிருங்க மாதவன். என்னை பாருங்க.” என்று அரசன் அதட்டினான்.
“உங்களுக்கு மனோகரி டெத் பத்தி தெரியும். அந்த பொண்ண கொன்னு தான் இதயம் மற்றும் நுரையீரல உங்க தங்கச்சிக்கு தூக்கி கொடுத்துருக்காங்கனு தெரியும். அதை மறைக்க தான் நீங்க பணம் கொடுத்துருக்கீங்க இல்ல?”
“இல்ல இல்ல.. நான் அதுக்காக பணம் கொடுக்கல. நான் லஞ்சம் கொடுத்தேன் தான். ஆனா அது மிருதுளாவுக்கு முதல்ல ஆப்ரேஷன் நடக்கனும்னு முரளிதரன் கிட்ட தான் கொடுத்தேன். அவர் மிருது பேர முதல்ல கொண்டு வந்து ஆப்ரேஷன் பண்ணி முடிச்சார். மத்தவங்களுக்கு அது பொருந்தலனு பொய் சொல்லி முடிச்சுட்டாங்க.”
மாதவன் பதில் சொல்லாமல் வெறித்தான். ஒரு மருத்துவனாக அவன் செய்த இரண்டாவது தவறு அது.
முதல் தவறு சுயநலமாக முதலில் தன் தங்கை சீராக வேண்டும் என்று நினைத்து லஞ்சம் கொடுத்தது. இரண்டாவது மனோகரி இறப்பில் நடந்த பித்தலாட்டத்தை அறிந்தும் எதுவும் செய்யாமல் விட்டது.
“சொல்லுங்க. இங்க சொல்லுறீங்களா? இல்ல கோர்ட்ல வச்சு உங்கள ரிமாண்ட்ல எடுத்து விசாரிக்கனுமா?”
அரசனின் முகத்தில் கோபம் அதிகரிக்க அதிகரிக்க, மாதவனுக்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது.
“ஆப்ரேஷன் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு தான் தெரியும். ஆனா.. வெளிய சொல்ல தைரியம் இல்ல. சொன்னா மிருதுளாவ உள்ள இழுப்பாங்களோனு..”
“நீயும் ஒரு டாக்டர் தான? ஒரு உயிரோட வேல்யூ தெரியும் தான? டாக்டருங்குறதால உயிர் உனக்கு டெய்லி விளையாடுற பொருளா மாறிடுச்சா? அந்த பொண்ணு ப்ரெக்னன்ட்டா இருந்துருக்கா. அதோட அவளுக்கு ஆப்ரேஷன் பண்ணி, உயிரோட இருக்கும் போதே இதயத்தையும் நுரையீரலையும் பிரிச்சு எடுத்துருக்காங்க.”
மாதவன் கேட்கக்கூட முடியாமல் முகத்தைத் திருப்பினான். அவனாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை.
“நீ கொடுத்த நாலு கோடி பணம் தான் அவங்கள மனோகரிய கொல்ல வச்சுருக்கு. இதுக்கு முன்னாடி எத்தனையோ பித்தலாட்டம் பண்ணவங்க, உன் பணத்து மேல ஆசை பட்டு கொலையே பண்ணிருக்காங்க. படிச்சு தான டாக்டர் ஆன நீ?”
“நோ.. நான் அந்த எண்ணத்துல கொடுக்கல.. ஆனா..”
“ஆனா என்ன? பணத்தக் கொடுத்து பேர முதல்ல வர வச்சதோட நின்னுட்டனு சொல்லாத. ஆப்ரேஷன் முடிஞ்சதும் எவ்வளவு பணம் கொடுத்த அவங்களுக்கு?”
மாதவன் மென்று விழுங்க, “சொல்லு” என்று அரசன் அதட்டினான்.
“மூணு..”
“வெட்கமா இல்ல? உன் குடும்பம் நல்லா இருக்கனும்னு நினைக்குறது தப்பு இல்ல. அடுத்தவன் குடும்பத்த அழிச்சுட்டு உன் தங்கச்சிய காப்பாத்தியிருக்க. என்னைக்காவது இது உன் தங்கச்சிக்கு தெரிய வந்தா தாங்குவானு நினைக்கிற?”
மாதவன் மீது அரசனுக்கு ஆத்திரமாக வந்தது. அவ்வளவு கோபத்தையும் காட்ட வேண்டும் போல் இருந்தது. அப்போதும் அடக்கிக் கொண்டு எழுந்தான்.
“நீ இங்க சொன்ன எதுவும் கோர்ட்ல மாறக்கூடாது. மாறுச்சு…? இது வரை உன் குடும்பத்த இழுக்கல. மாறுச்சுனா மிருதுளா கோர்ட்க்கு வர வேண்டியிருக்கும்” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு நடக்க, மாதவன் அதிர்ந்து போய் பார்த்தான்.
அதுவரை மாதவனின் பெரிய கவலையே குடும்பத்தினர் என்ன செய்கிறார்களோ என்று தான் இருந்தது. அரசனை துரோகியாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, சட்டென குற்ற உணர்வு தோன்றியது.
அன்றும் அரசன் இல்லை என்றால், நடு சாலையில் எவ்வளவு நேரம் கிடந்திருப்பார்கள் என்று தெரியாது. இன்றும் அரசன் அவனது குடும்பத்தை உள்ளே இழுக்காமல் வைத்திருக்கிறான்.
உள்ளம் முழுவதும் வலி பிறக்க, “அரசன்” என்று வேகமாக அழைத்தான்.
கதவருகே சென்றவன் திரும்பிப் பார்க்க, “ஐம் சாரி” என்று மன்னிப்பை வேண்டினான்.
“அவர் லஞ்சம் கொடுத்தது தப்பு தான். அதுக்கு அவருக்கு தண்டனை கிடைக்கனும் தான். ஆனா பிரகாசம் வேணும்னே மாதவன இழுத்து விட்டுருக்கான். இது வரை அந்த பிரகாசமும் முரளிதரனும் லஞ்சமே வாங்கினது இல்லனு சொல்ல முடியுமா? ஆனா எதுக்காகவோ மாதவன இழுத்து விட நினைக்கிறாங்க. இது மனோகரி கேஸ்க்காக மட்டுமா? வேற எதுவும் காரணம் இருக்கானு தெரியனும். பார்க்கலாம்.”
“உங்களுக்கு மாதவன் மேல நிறைய நம்பிக்கை.. இல்லையா சார்?”
அரசேந்திரன் பதில் சொல்லாமல் கிளம்பியிருந்தான். அந்த இன்ஸ்பெக்டருக்கு யோசனையாக இருந்தது.
பிரகாசத்தையும் முரளிதரனையும் பார்வையால் கூறு போடத்தயாராக இருந்த அரசேந்திரன், மாதவனிடம் யோசனையுடனே பேசினான். அதுவும் இன்ஸ்பெக்டரே எதிர்பார்க்காத ஒன்று, மாதவன் தரப்பில் ஒரு நியாயம் இருந்தது தான்.
அவனையும் பிரகாசம் முரளிதரன் போல குற்றவாளி என்றே நினைத்து இருந்தான். அவனை அரசேந்திரன் விசாரித்தது கூட பிடிக்கவில்லை. நன்றாக அடித்து உதைத்து விசயத்தை வாங்க நினைத்தான். அரசன் மாதவனுக்கு தனி கவனிப்புக் கொடுக்கிறானோ? என்ற சந்தேகம் மனதில் தோன்றியது.