மாதவனை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவன் பேசியதை ஒப்புதல் வாக்குமூலமாக வாங்கிக் கொண்டனர். மேலும் பதினைந்து நாட்கள் அவனை சிறையில் வைத்து விட்டு, பிறகு மீண்டும் விசாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
குடும்பத்தினர் யாரும் மாதவனை பார்க்க அரசேந்திரன் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வைத்து மிருதுளாவை மட்டும் மாதவனிடம் அழைத்துச் சென்றான் அரசன்.
கையில் விலங்கோடு சிறை செல்வதற்கு தயாராக இருந்த வாகனத்தில் மாதவன் அமர்ந்து இருந்தான்.
“அழாத மிருது.. மூச்சு வாங்கும்” என்று அவன் பதற, “என்ன இதெல்லாம்? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கண்ணீரோடு கேட்டாள்.
மாதவன் பதில் சொல்லாமல் பார்க்க, “என்னை ஏன் டாக்டருக்கு படிக்க வேணாம்னு சொன்னீங்கனு எனக்குத் தெரியும். ஆனா இப்ப நான் முடிவு பண்ணிட்டேன். நான் மெடிசன் தான் படிப்பேன்.” என்று உறுதியாக கூறினாள்.
“மிருது..”
“ம்ஹும்.. எனக்கு கஷ்டமா இருக்கு. உங்க கைய பிடிச்சுட்டு என் அண்ணன்ன விட்ருங்கனு அழனும் போல இருக்கு..” என்று தேம்பியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அரசனை திரும்பிப் பார்த்தாள்.
“என் அண்ணன அடிக்காதீங்க ப்ளீஸ். எனக்காக பண்ணிட்டார். பாவம்” என்று கெஞ்ச, அரசனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
மாதவனை தான் முறைத்துப்பார்த்தான்.
“நீ அழாத மிருது. போ அம்மா கூட இரு” என்று மாதவன் கூறியதும், தலையசைத்து விட்டு திரும்பிச் சென்றாள்.
அரசேந்திரன் ஒன்றும் பேசாமல் திரும்பி நிற்க, “அரசன்..” என்று அழைத்தான்.
அரசன் கேள்வியாக பார்க்க, “வைசு…” என்று இழுத்தான்.
சட்டென அரசனின் முகம் மாறி விட்டது. காவலர்கள் மாதவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட, அரசேந்திரன் வேறு வேலையை பார்க்கச் சென்றான்.
பிரகாசத்தின் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. முரளிதரன் ஒரு பக்கம் மாட்டிக் கொள்ள, தோண்டத்தோண்ட குற்ற எண்ணிக்கை குவிந்தது.
சில அரசியல்வாதிகள் கைதாகினர். பெரும்புள்ளிகளும் சிலர் கைதாக, செய்தி ஊரெல்லாம் பரவியது. இந்த செய்தியில் ஒரு சாதாரண மருத்துவனான மாதவனை கண்டு கொள்ள யாருமே இல்லை.
பிரகாசத்தின் மருத்துவமனை உரிமம் பறிக்கப்பட்டது. அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினர். அதோடு அந்த மருத்துவமனை தற்காலிகமாக அரசாங்கத்தால் மூடப்பட்டது. அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த எல்லோருமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பிரகாசத்துக்கும் முரளிதரனுக்கும் உதவியாக இருந்த எல்லோரும் கைது செய்யப்பட, அந்த ஊரே பரபரப்பானது. மருத்துவமனையில் இருந்த ஆதாரங்கள் ஒன்று திரட்டப்பட, அரசேந்திரனுக்கு நிற்கவும் நேரமில்லை.
பிரகாசத்தின் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் ஒன்று சேர்க்கும் வேலை நடந்தது. மொத்தத்தில் தவறுகள் எல்லாம் தோண்டி எடுக்கப்பட, முரளிதரன் பிரகாசத்தின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.
மாதவன் வேலை பார்த்த மருத்துவமனை, பெரும் போராட்டத்திற்கு பிறகு தங்களது பெயரை வெளிவிடாமல் காப்பாற்றிக் கொண்டது. மாதவனை வேலையை விட்டு நீக்கி விட்டது. மிருதுளாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், கடைசியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவரையும் விடாமல், அத்தனை பேரையும் உள்ளே இழுத்து வந்து விசாரித்தனர்.
விசயம் தெரிந்தும், பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியவர்கள் எல்லோர் மீதும் வழக்கு பதிவானது. தெரியாதவர்கள் எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டார்கள்.
இதற்கு இடையில் பிரபாகரன் மகனை பார்க்க எவ்வளவோ முயற்சித்தார். வக்கீலை பிடித்து பேச வேண்டும். அதற்கு முன் மாதவனை பார்க்க வேண்டும். விசாரனை முடியும் வரை யாரும் மாதவனை பார்க்க முடியாது என்று இன்ஸ்பெக்டர் அவரை விடவே இல்லை.
ஜாமினில் மகனை வெளியே கொண்டு வர முடியுமா? என்று பார்க்க வக்கீல் கைவிரித்தார்.
“பிரச்சனை இப்போ ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு. இப்ப ஜாமின்னு இறங்குனா வேணும்னே அந்த இன்ஸ் பிரச்சனை பண்ணுவான். அவன பத்தி உங்களுக்குத்தெரியாது. விவகாரம் புடிச்சவன். எதுக்கும் கேட்டு பார்க்கலாம். ஆனா வராது. நம்பாதீங்க” என்று கூறி விட்டார்.
மாதவனை பார்க்கவும் முடியாமல் அவனை வெளியே எடுக்கவும் முடியாமல் குடும்பமே தவித்துப்போனது.
______
ஒரு வாரம் கடந்தது… ஊடகங்கள் முழுவதும் இந்த வழக்கை திரும்பத் திரும்ப பேசி தங்களது ஆதாயத்தை தேட ஆரம்பித்தனர். எந்த பக்கம் திரும்பினாலும் இந்த வழக்கு விபரங்கள் ஓடிக் கொண்டிருக்க, அதில் ஓரமாக மாதவனின் புகைப்படம் காட்சி அளித்தது.
தன் கையில் இருந்த குச்சியை பிடித்துக் கொண்டு நடந்து பழகிக் கொண்டிருந்த ஆதிகேசவன், அந்த தொலைகாட்சியை வெறித்துப் பார்த்தான். நடந்ததை எல்லாம் அரசேந்திரன் கூறி இருந்தான்.
மாதவன் மறைத்த விசயங்களையும் கூட அரசேந்திரன் கூறியிருக்க, ஆதிகேசவனுக்கு கோபமாக வந்தது.
“மாதவன் பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. என் தங்கச்சிய காப்பாத்தனும்னு சொல்லிருக்கார். அதுக்காக அவரோட தங்கச்சி பேர முதல்ல கொண்டு வந்ததோட, அதே ப்ளட் குரூப் இருக்க மனோகரிய பார்த்ததும் இந்த முடிவு எடுத்துட்டாங்க” என்று அரசேந்திரன் கூறும் போது, ஆதிகேசவனுக்கு மாதவனின் சட்டையை பிடித்து ஒரு அடியாவது வைக்க வேண்டும் போல் இருந்தது.
மொத்தம் ஏழு கோடி பணம். மனோகரிக்கும் அவளது வயிற்றில் வளர்ந்த சிசுவுக்கும் அவர்கள் வைத்த விலைமதிப்பு. ஏழு என்ன எழுபது கூட நான் சம்பாதித்துத் தருகிறேன். என் மனைவியையும் பிள்ளையையும் திருப்பிக் கொடு என்று மாதவனை கேட்க வேண்டும் என்ற ஆவேசம் வந்தது.
அத்தனையும் அடக்கிக் கொண்டவனுக்கு, இரத்த அழுத்தம் தான் உயர்ந்தது. அவனது மனநிலையை சாந்தப்படுத்தி உடலை தேற்றி என மருத்துவர்கள் ஒரு பக்கம் போராட, ஆதிகேசவன் மனதளவில் ஒரு போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தான்.
கால் முதலிலேயே சரியாகி இருக்க, இந்த ஒரு மாதத்தில் நடக்க பழகி இருந்தான். பதினைந்து நாட்கள் முடிந்து, இன்று மாதவனை மறு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்போவதாக அரசன் கூறியிருந்தான்.
அடுத்த விசாரணையில் ஆதிகேசவனும் வர வேண்டும் என்று கூறியிருக்க, அதைக்கேட்டுக் கொண்டவன் தான் தொலைகாட்சியில் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த செய்திகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மௌனமாக இருந்த கைபேசி மின்னலோடு இசைக்க, எடுத்துப் பார்த்தான். நந்தகோபாலனின் அழைப்பு.
பேச விருப்பமில்லை என்ற பிறகு நந்தகோபாலன் தம்பியை அழைக்கவே இல்லை. எல்லாவற்றையும் அரசனிடமே கேட்டுக் கொள்வான்.
“உனக்கு ஆக்ஸிடென்ட்னு மட்டும் தான் சொல்லியிருக்கோம். வேற எதையும் சொல்லல. அரசன் மனோ பத்தி சொன்னத எல்லாம் நேத்து தான் சொன்னேன். உடனே உன்னை பார்க்கனும்னு அம்மா கிளம்பிட்டாங்க. ட்ரையின்ல தான் வர்ராங்க. நாளைக்கு வந்துடுவாங்க”
“சாரி நந்து”
“விடுடா.. உன் நிலைமை எனக்கு புரியுது. அதுக்காக எங்கள எல்லாம் விட்டுட்டுப்போக பார்த்தல? இதுக்கு மன்னிக்கவே மாட்டேன் உன்னை”
ஆதிகேசவன் தொண்டை அடைக்க அமைதியாகி விட, “சரி விடு. அம்மா வந்ததும் எதுவும் சொல்லி வைக்காத. தாங்க மாட்டாங்க. நீ சரியாகிட்டு வர்ரனு அரசு சொன்னான். முழுசா சரியானதும் இங்க வரனும். புரியுதா?” என்று அதட்டினான்.
“ம்ம்”
“மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடுறியா? டாக்டர் என்ன சொல்லுறாங்க?” என்று அவனது நலத்தை விசாரித்தான்.
பேசி முடித்து வைக்கும் போது, ஆதியின் மனதில் இருந்த துக்கம் சற்று குறைந்து இருந்தது. அவனுக்குள் இருந்த தனிமை குறைந்து இருந்தது. இது வரை குற்ற உணர்ச்சியினால் குடும்பத்தை எதிர்கொள்ள தயங்கிக் கெண்டிருந்தான். ஆனால் குடும்பத்தினரின் ஆறுதல் மிக முக்கியமல்லவா? கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க ஆரம்பித்தனர்.
_______
மாதவனை பற்றி ஊரெல்லாம் விசயம் பரவியிருந்தது. அவன் மிருதுளாவிற்காக மனோகரியை பணம் கொடுத்துக் கொன்றதாக சொல்லிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் காதில் வாங்கியபடி மிருதுளா அமைதியாகவே இருந்தாள்.
அருந்ததியும் பிரபாகரனும் தான் கேட்பவர்களுக்கு பதில் சொல்லி நொந்து விட்டனர்.
அருந்ததி வேலை செய்யும் பள்ளியில் இருந்து, அவரை வேலையை விடச் சொன்னார்கள்.
“ஒரு கொலைகாரனோட அம்மா.. இவங்க புள்ளையவே ஒழுங்கா வளர்க்கல. இவங்க பாடம் நடத்தி.. உருப்புடும்” என்று சக ஆசிரியர்கள் பேசும் போது, அருந்ததியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“என் புள்ளைய பத்தி தெரியாம பேசாதீங்க?”
“தெரியாம எங்க பேசுறோம்? அதான் ஊரே சொல்லுதே”
“ஊரே சொன்னா அது உண்மையாகிடுமா? உங்களுக்கு தோனுறத எல்லாம் பேசாதீங்க. என் புள்ளய எப்படி வளர்த்துருக்கேன்னு எனக்குத் தெரியும். அவன் தப்பு பண்ணிருக்கான். அதுக்கு தண்டனை அனுபவிக்கிறான். அதுக்காக அவன கொலைகாரன்னு சொல்லுவீங்களா? நீங்க எல்லாரும் பெரிய உத்தமனுங்களா? இங்க வர்ரதுக்கு எத்தனை பேருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து வந்தீங்கனு உங்க மனசாட்சிய கேளுங்க”
ஆவேசமாகக் கேட்ட அருந்ததிக்கு பதில் சொல்ல முடியாமல் தங்களுக்குள் முணங்கிக் கொள்ள, அவர் வேலையை விட்டு விடுவதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டார்.
மகன் தவறிழைத்து விட்டான் என்று தெரிந்து மனம் நொந்தாலும், அவனை கொலைகாரன் என்ற போது அவரால் தாங்கவும் முடியவில்லை. அவனது தவறுக்கு தண்டனை அனுபவித்து விட்டு, திரும்பி வந்தால் போதும் என்ற நினைப்போடு நாட்களை கடத்த ஆரம்பித்தார்.
பிரபாகரனுக்கு இது போன்ற நேரடி தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. அதனால் அவர் அமைதியாகவே இருந்தார்.
வீட்டில் இருந்து மகளை அருந்ததி கவனித்துக் கொள்ள, மிருதுளாவோ மிக மிக அமைதியாக இருந்தாள்.
கடந்த மூன்று வருடமாக அதிகம் பேசக்கூட மாட்டாள். பேசவும் முடியாது. மனதில் நினைப்பதை எல்லாம் வாய் ஓயாமல் பேசி சிரிக்கும் வரம், அவளுக்கு கிடைக்கவே இல்லை. அறுவை சிகிச்சைக்குப்பிறகு தான் அவளால் ஓரளவு சிரிக்க முடிந்தது. இப்போது அந்த சிரிப்பு தொலைந்து போய் விட, மீண்டும் அமைதி உலகிற்கு திரும்பி இருந்தாள்.
மாதவன் சொன்ன படிப்பை படிக்க மறுத்து விட்டு, அவள் மருத்துவபடிப்புக்கு தேவையான வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“வேணாம்மா.. அது உனக்கு செட்டாகாது” என்று பெற்றவர்கள் மறுக்க, அவளது முகத்தின் விரக்தி சிரிப்பு.
“என்னால முடியும்மா. நம்புங்க. எனக்குத் தெரியும் அண்ணன் ஏன் வேணாம்னு சொன்னாருனு. வாழ்க்கை முழுக்க மருந்து மாத்திரையிலயே வாழுறேன். அதெல்லாம் இல்லாம நான் வாழனும்னு அண்ணா சொன்னப்போ நானும் கேட்டேன். ஆனா எனக்கு இது புடிச்சுருக்கு. மூணு வருசமா படிப்பு போச்சு. அதோட இந்த வருசமும் போகட்டும். ஆனா நான் மெடிசன் தான் படிப்பேன். கோச்சிங் சென்டர் பார்த்துருக்கேன். இங்க இல்ல. வெளிய தங்குற மாதிரி.”
“வெளிய தங்குறதா? வேணாம் மிருது.. உன்னால..”
“என்னால முடியும்”
திடமாக சொன்ன மகளை எப்படித்தடுக்க என்று அவர்களுக்கு புரியவில்லை. அவளை கைக்குள் வைத்து வளர்த்து விட்டனர். திடீரென தனியாக சென்று எப்படி சமாளிப்பாள்? என்று பயமாக இருந்தது.
ஆனால், மிருதுளா முடிவு செய்து கிளம்பியும் விட்டாள். அவளை கோச்சிங் சென்டர் ஹாஸ்டலில் விட்டு விட்டு, பெற்றவர்கள் மனமே இல்லாமல் கிளம்பினர்.
“எக்ஸாம் நல்லபடியா முடிச்சு கண்டிப்பா எம்.பி.பி.எஸ் படிப்பேன். அதுக்குள்ள அண்ணா வந்துட்டா நல்லா இருக்கும். அண்ணாவ பார்த்தா சொல்லிடுங்க. இங்கேயும் நான் பத்திரமா இருப்பேன்” என்று உறுதி கூறி, பெற்றவர்களை அனுப்பி வைத்தாள் மிருதுளா.
மாதவன் பயந்தது போல், மாத்திரை மருந்து வாடையே மிருதுளாவிற்கு வெறுத்து விட்டது தான். மாத்திரை போடச்சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு பிடிக்காத விசயத்தை செய்வது போல் முகத்தை சுழித்துக் கொண்டே போட்டுக் கொள்வாள். அவ்வளவு தூரம் மருந்து மாத்திரைகளை வெறுத்து இருந்தாள்.
ஆனால் கடந்த மூன்று வருடமாக மருத்துவமனையில் முழுமையாக தங்கி இருந்தாள். பெற்றோர்களையும் மாதவனையும் விட, மருத்துவர்களும் செவிலியர்களும் தான் உடன் இருந்தனர். அவர்களது வேலை பேச்சு எல்லாம் அவளை அதிகம் ஈர்த்து இருந்தது.
மருத்துவம் படிக்கும் ஆசையும் அப்போது தான் வந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கிளம்பி விட்டாள்.
அடி மனதில் பயம் இருந்தது. தன்னால் முடியாமல் போகுமோ? என்று. இது வரை குடும்பத்தை பிரிந்து ஒரு நாள் கூட அவள் இருந்தது இல்லை. இனி தனியாக இந்த உலகத்தை சமாளிக்க வேண்டும்.
அறையில் தனியாக அமர்ந்து, இதயத்தில் கை வைத்து அதன் துடிப்பை உணர்ந்தவளுக்கு கண்கலங்கி விட்டது.
மனோகரியை பற்றிக் கேட்டதிலிருந்து, இதயத்துடிப்பை உணர்ந்து கொண்டே இருக்கிறாள். இந்த இதயம் அத்தனை கனவுகளோடு வாழ்ந்ததோ? என்று நினைத்து நினைத்து நொந்து கொண்டே இருந்தாள்.
‘ஐம் சாரி. உங்க குடும்பத்துல இருந்து உங்கள பிரிச்சுட்டேன். ஆனா எனக்குள்ள உங்கள பத்திரமா பார்த்துப்பேன். ட்ரஸ்ட் மீ’ என்று இதயத்தில் கை வைத்து தனக்குள் பேசிக் கொண்டே இருந்தாள்.
உடலில்லாமல் அருவமாய் நின்ற மனோகரியிடம் பேசுகிறாளா? அல்லது இறந்தும் இறக்காமல் தனக்குள் துடித்துக் கொண்டிருக்கும் மனோகரியிடம் பேசுகிறாளா? அவளுக்கு மட்டுமே அதன் பதில் தெரியும்.
_______
எல்லோரது வாழ்வும் புதுப் புது திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்க, அரசேந்திரனும் அவனது திருப்பத்தை நோக்கி பல மாதங்களுக்குப்பிறகு சொந்த ஊரை பார்க்கக் கிளம்பி இருந்தான். இல்லை சொந்த ஊரில் இருக்கும் அவளைப்பார்க்கக் கிளம்பி இருந்தான் என்று கூற வேண்டுமோ?