அரசேந்திரன் வைசாலி வீட்டிலிருந்து கிளம்பி, நேராக ஆதிகேசவன் இருந்த மருத்துவமனைக்குச் சென்றான்.
கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, “வாங்கணா” என்றான் ஆதி.
அவனது முகத்தில் தெளிவும் தைரியமும் மீண்டு இருந்தது. அதை கவனித்தபடி அரசன் அவன் முன்னால் வந்து நின்றான்.
“எப்படி இருக்க ஆதி? ட்ரீட்மெண்ட் நல்லா போகுதா?”
“நல்லா போகுதுணா. உட்காருங்க.”
அரசன் அமர்ந்ததும், “இப்ப தான வந்துட்டுப்போனீங்க? ஏன் திரும்ப?” என்று ஆதி விசாரிக்க, அரசன் ஒரு நொடி அமைதிகாத்தான்.
“நீ சத்தியத்த மறக்கல தான?”
“அண்ணா.. நம்புறது கஷ்டமா இருக்கா?” என்று பாவமாக கேட்டவன், “நம்புங்கணா. பட்டு மேல சத்தியம் பண்ணிருக்கேன்ல..” என்று கெஞ்சினான்.
அவனுக்கும் அரசனை வருத்துவது கவலையாக இருந்தது. தனக்காக இப்படி இவர் துடிக்க வேண்டாம் என்று தோன்றியது.
அரசன் தலையாட்டும் போதே, நர்ஸ் உள்ளே வந்தார்.
ஆதிக்கு கொடுத்திருந்த மருந்துகளை எடுத்துப்பார்த்து எழுதி விட்டு அவர் நகரும் வரை, இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.
“ஆதி.. மனோகரிக்கு நடந்த ஆக்ஸிடென்ட் ஞாபகம் இருக்கா?” என்று அரசன் மெதுவாக ஆரம்பித்தான்.
ஆதியின் முகத்தில் சோகம் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்க, தலையசைத்தான். அந்த நாளை அவனால் மறக்க முடியுமா? (https://boxmining.com/)
அன்று ஆதிகேசவனுக்கும் மனோகரிக்கும் முதல் திருமண நாள். திருமணநாளை கொண்டாட வேண்டும் என்று, முதல்நாளே அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டான் ஆதி.
மனோகரி, திருமணநாளன்று திருச்சியில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப்போக வேண்டும் என்று கூறினாள். அந்த கோவில் அவரகளுக்கு ஸ்பெஷல். அங்கு தான் முதன் முதலில் மனோகரியை ஆதிகேசவன் சந்தித்தான். அந்த கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும் என்று மனோகரி கேட்டதும், ஆதி மறுக்கவில்லை.
பேருந்து வேண்டாம் காரில் போகலாம். வாடகைக்கு எடுக்கலாம் என்று முடிவாகியது. அதுவும் மனோகரியின் முடிவு தான். காதலித்து கரம் பிடித்த மனைவி கேட்டு, ஆதிகேசவன் எதையுமே மறுத்தது இல்லை. திருமணநாளன்று அவள் கேட்ட அத்தனைக்கும் சரியென்றான்.
வாடகை காரை நியமித்து, இராமநாதபுரத்திலிருந்து திருச்சி நோக்கி பயணித்தனர். இடையிடையே மனோகரி காரை நிறுத்தச் சொல்லி, இரண்டு முறை நடந்தாள். மூன்றாம் முறை தூக்கம் வருவதாக கூறி விட்டு பின் பக்கம் படுத்துக் கொள்ள, ஆதிகேசவன் ஓட்டுனர் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.
ஓட்டுனரோடு தூக்கம் வராமல் இருக்க பேசிக் கொண்டே செல்ல, திருச்சியை நெருங்கும் சமயம் தான் அது நடந்தது. எங்கிருந்து எது வந்து மோதியது என்றே ஆதிக்குத் தெரியாது. திடீரென கார் பலமான சத்தத்தோடு நசுங்கி கவிழ்ந்தது. பிறகு தான் தெரிந்தது. மோதியது ஒரு வேன் என்று.
மனோகரி பின்னால் படுத்திருக்க, கார் கவிழ்ந்ததில் தலை கார் கதவுகளுக்கிடையே மாட்டி, கண்ணாடிகள் மொத்தமும் அவளது தலை மோதிய வேகத்தில் சிதறி இருந்தது.
காரை ஓட்டி வந்த ஓட்டுன சீட் பெல்ட் போட்டதாலும், ஏர் பேக் இருந்ததாலும், காலில் பட்ட அடியோடு தப்பி விட்டார்.
ஆதி மறுபக்கம் அமர்ந்து இருந்ததால், கதவில் மோதிய தலையோடு மயக்கத்திற்குச் சென்று விட்டான்.
அரை மயக்கநிலை. யார் யாரோ பேசும் சத்தம் காதில் விழத்தான் செய்தது. அவனது மனம் பட்டு பட்டு என துடித்தது. வாய் விட்டு அழைக்க முடியவில்லை. யாரோ காரை தூக்கி அவனை தூக்குவது புரிந்தது. அதன் பிறகு எதுவுமே அவனுக்குத் தெரியாது.
மருத்துவமனை ஒன்றில் கண் விழிக்கும் போது தான் எல்லாம் நினைவு வந்தது. உடனே மனோகரியைத்தேடி ஓடினான். அவளுக்கு தலையில் பலமாக அடிபட்டு, அங்காங்கே இரத்தம் உறைந்திருந்திருப்பதாகக் கூறினர்.
உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். பதறி அடித்து வீட்டிற்கு அழைத்தான். அன்னையிடமும் நந்தகோபலானிடமும் விசயத்தைக் கூறினான்.
நந்தகோபாலன் உடனே கிளம்பி வர முடியாமல், டெல்லியில் இருந்தே பணத்தை முதலில் அனுப்பி வைத்தான். ஆதியின் அன்னை அடித்துப்பிடித்து அவரது அண்ணனோடு கிளம்பி வந்தார்.
அவர் வரும் முன்பே, பணத்தை கட்டி மனோகரிக்கு அறுவை சிகிச்சை ஆரம்பமாகி விட்டது. உயிரை பிடித்துக் கொண்டு, ஆதிகேசவன் தனியாக துக்கம் தாங்கமுடியாமல் அமர்ந்து இருந்தான்.
மனோகரியின் பெற்றோருக்கும் விசயம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கும், மருத்துவர் வெளியே வந்து மனோகரி பிழைக்கவில்லை என்று கூறவும் சரியாக இருந்தது.
கேட்ட நொடி ஆதிகேசவன் தரையில் அமர்ந்து விட்டான். கண் தாரைதாரையாக கண்ணீரை கொட்ட, “பட்டு” என்று தலையில் அடித்துக் கொண்டு அன்று அவன் கதறியது, யாராலும் மறக்க முடியாது.
அங்கு போவதும் வருவதுமாக இருந்த சிலர் கூட, அவனது கதறலை கண்டு பரிதாபட்டனர். அப்படி ஒரு கதறல் அவனிடம்.
முதல் திருமண நாள் மனைவியின் இறுதிநாளாக இருக்க, ஆதிகேசவன் தான் துடித்தான்.
போஸ்ட் மார்டம் முடிந்து உடலை கொடுக்க, அதை இரமநாதபுரத்துக்கு கொண்டு வந்து விட்டனர்.
முதலிலேயே ஊரில் விசயம் தெரிந்திருக்க, அவர்கள் வரும் முன்பே சொந்தங்கள் இறுதி காரியத்திற்கு தயாராகி இருந்தது. ஏற்கனவே பல முறை கத்தி பட்ட உடல். மேலும் வைத்திருக்க வேண்டாம் என்று, இராமநாதபுரம் வந்த ஒரு மணி நேரத்தில் மனோகரியை தகனம் செய்ய எடுத்துக் சென்றனர்.
நந்தகோபாலன் விமானத்தை பிடித்து வந்து இறங்கும் போது, மனோகரியின் உடல் தகனத்திற்கு தயாராகி விட்டது.
கையில் கொள்ளியோடு நின்றிருந்த தம்பியை பார்த்த நந்தகோபாலன் செத்தே விட்டான். காலையில் தான் வாழ்த்தி இருந்தான். திருமணநாளுக்காக. அன்றைய நாள் முடியும் முன், இப்படி ஒரு கோலத்தில் பார்க்க வேண்டுமா?
“ஆதி” என்ற நந்தகோபாலனின் குரல் கதற, ஆதி பார்வையை திருப்பி அண்ணனை பார்த்தான்.
கண்ணில் மளமளவென கண்ணீர் இறங்க, ஓடி வந்து தம்பியை கட்டிக் கொண்டான்.
”பட்டு.. போய்ட்டானா.. போய்ட்டா” என்ற ஆதிக்கும் தொண்டை கமறியது.
“வேணாம்டா.. நாம அடக்கம் பண்ணிடலாம். சின்ன பொண்ணுடா.. வேணாம்” என்று நந்தகோபாலன் எரிக்க தடை கூற, சொந்தபந்தம் அவனது பேச்சை கேட்காமல் அவனை தடுத்து விட்டு, ஆதியின் கையால் கொள்ளி வைக்க வைத்தது.
கொள்ளி வைத்த கையோடு ஆதி அங்கேயே நிற்க, எல்லோரும் அவனை பிடித்து இழுத்தனர். மரம் போல் நின்றிருந்தவனை நகர்த்தவே முடியவில்லை. கஷ்டப்பட்டு நகர்த்தி விட, ஆதி மயங்கி விழுந்தான்.
அவனை வீட்டுக்குத் தூக்கிச் சென்று மயக்கம் தெளிய வைத்து, அடுத்த சில நாட்கள் அவனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டனர்.
நந்தகோபாலனின் மனைவி வேறு நிறைமாத கர்பிணியாக இருந்தாள். அவள் அலையக்கூடாது என்று மருத்துவர் சொல்லி இருக்க, அவளும் ஒரு பக்கம் மனோகரியை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.
மனைவியை பார்க்க வந்த அவளது பெற்றோர்கள் பொறுப்பில் அவளை விட்டு விட்டு, நந்தகோபாலன் இரண்டு நாட்கள் தம்பியுடன் இருந்தான். ஆனால் அதற்கு மேல் இருக்க முடியாமல் கடமை அழைத்தது.
தம்பியை அன்னையின் பொறுப்பில் விட்டு விட்டுக் கிளம்பி விட்டான். நந்தகோபாலனுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தி வந்ததும், ஆதியின் அன்னையும் கிளம்ப வேண்டியிருந்தது.
ஆதி எங்கும் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, அவனை தனியே விட்டு விட்டுக் கிளம்பினர்.
நந்தகோபாலனின் மனைவி அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றிருந்தாள். அவளை எல்லோரும் கவனிக்க, ஆதிகேசவனை தனிமை தாக்கியது. பைத்தியம் போல் அலைந்தவன், நண்பனது காரை எடுத்துக் கொண்டு சென்றான்.
குடித்து விட்டு காரை ஓட்டி அது ஒரு மரத்தில் பலமாக மோத, “உன் கிட்ட வந்துடுறேன் பட்டு” என்று முணுமுணுத்தபடி மயங்கி விட்டான்.
அக்கம் பக்கமிருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறை உதவியில், ஆதியின் சொந்தங்களுக்கு செய்தி சேர, அவர்கள் நந்தகோபாலனிடம் கூறினர்.
அங்கிருந்த உடனே கிளம்ப முடியாமல் ஒரு வேலையில் மாட்டிக் கொண்டான் நந்தகோபாலன். தம்பியை கவனிக்க மனம் துடிக்க, என்ன செய்வதென்று யோசித்தான். அப்போது தான் அவனது நெருங்கிய நண்பன் அரசேந்திரனின் நினைவு வந்தது.
அவனிடம் விசயத்தைக்கூற, அரசன் ஓடி வந்து ஆதிகேசவனை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான். என்னென்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்து, ஆதிகேசவனின் உயிரை காப்பாற்றி வைத்தான்.
வேலை முடிந்து, வீட்டில் பொய் சொல்லி விட்டு ஆதியை பார்க்க ஓடி வந்தான் நந்தகோபாலன். மூன்று நாட்களாக கண் விழிப்பதும் மயங்குவதுமாக இருந்த ஆதி, நான்காம் நாள் கண் விழித்தான்.
நந்ததகோபாலன் பேச முயற்சிக்க, ஆதி காதில் வாங்கவே இல்லை. விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அரசன் தான் நண்பனை சமாதானம் செய்தான்.
நந்தகோபாலன் வரும் வரை, இது விபத்து என்று தான் நினைத்து இருந்தான் அரசன். நந்தகோபாலன் வந்து மனோகரியின் இறப்பு பற்றி சொல்லி நடந்ததை சொல்ல, ஆதியின் மீது அரசனுக்குக் கோபம் தான் வந்தது.
ஆதி கண் விழித்தபோது அரசன் திட்ட,, அப்போதும் ஆதி அசையவில்லை.
“நீ போ நந்து. அங்க பேபியோட விட்டுட்டு வந்துருக்க. நீ அங்க இரு. நான் இவன பார்த்துக்கிறேன்”
“உன் வேலைய விட்டுட்டு இவன் பின்னாடி அலைய முடியுமா? நான் இருக்கேன்”
“நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். வேலைய விட்டு அலையப்போறேன்னு சொல்லல. நீ போ. நான் பார்த்துக்கிறேன்” என்று நண்பனை அனுப்பி வைத்தான் அரசன்.
அதன் பிறகு, ஆதிக்கு இருபத்தி நான்கு மணிநேரமும் காவல் வைத்தான். மருத்துவர்கள் அவனை கண்காணித்தனர். அதோடு தற்கொலை முயற்சியை விட வேண்டி கவுன்செலிங் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கூட மனம் மாறாமல், ஆதி மீண்டும் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றான். அவனை கவனித்துக் கொண்டே இருப்பதால், அவனது முயற்சியை உடனே தடுத்து காப்பாற்றி விட்டனர். அதன் பிறகு ஆதியும் வாக்குக் கொடுத்து விட்டான்.
இத்தனையும் ஆதிகேசவனின் மனதில் தோன்றி மறைய, அவனது கண்கள் கலங்கி இருந்தது. சில நிமிடங்கள் இருவருமே மௌனம் சாதித்தனர்.
அரசன் முதலில் தெளிவாகி ஆதியை பார்த்தான்.
“ஆதி பீ ஸ்ட்ராங்க. நான் சொல்லுறத கேளு” என்றதும், ஆதிகேசவன் கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டான்.
“ஆதி… சாதாரணமா வந்த சந்தேகத்துல தான் அந்த ஆக்ஸிடென்ட் பத்தி விசாரிச்சேன். முதல்ல உன் அண்ணன் மேல இருக்க கோபத்துல, யாராவது பண்ணிருக்கலாம்னு தான் விசாரிக்க ஆரம்பிச்சேன். அந்த விசாரனை மனோகரிக்கு ஆப்ரேஷன் பண்ண டாக்டர் வரை போச்சு”
ஆதி புருவம் சுருங்க என்ன சொல்கிறான் என்று கவனித்துக் கொண்டிருந்தான்.
ஆதியின் கண்ணில் மீண்டும் கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது.
அன்று காலையில் மனோகரியிடம் திருமண நாள் பரிசு கேட்ட போது, கோவிலுக்குப்போனதும் தருவதாக சொன்னாள். அதன் அர்த்தம் இப்போது விளங்க, “அய்யோ!” என்று நெஞ்சைப்பிடித்தான்.
“பட்டு.. பட்டுவ உயிரோட போஸ்ட்மார்ட்டம் பண்ணி.. எங்க புள்ள.. அண்ணா.. அய்யோ பட்டு” என்று ஆதி கதற, அரசன் அவனை சமாதானம் செய்ய முடியாமல் திணறி விட்டான்.
ஆதி அரசனை கவனிக்காமல் துடித்துக் கொண்டே இருந்தான். திடீரென ஆவேசம் வந்தவனாக திரும்பினான்.
“அந்த டாக்டர்.. அவன் பிரகாசம் தான? எங்க இருக்கான்? நானே அவன கொன்னுடுறேன். எங்க இருக்கான்?” என்று கேட்டபடி ஆதி இறங்கப்போக, அரசன் அவனை சமாளிக்கப்போராடி, கடைசியாக நர்ஸ் வந்து மருத்துவரை அழைத்தாள்.
மூவருமாக சேர்ந்து அவனை அடக்கினர். அவனுடைய இரத்த அழுத்தம் அதிகரித்திருக்க, மருந்து கொடுத்து தூங்க வைத்தனர்.
பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட, மருத்துவர் அரசனை கிளம்பச் சொல்லி விட்டார்.
“நாளைக்கு வாங்க சார். அவர் இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று கூறி விட, அரசனும் கிளம்பி விட்டான்.
அரசனும் விசயத்தை சொல்லலாமா என்று மருத்துவர்களல கேட்டுக் கொண்டு தான் சொல்லி இருந்தான். ஆதிகேசவன் சற்று தேறி வந்து கொண்டிருக்க இதைக்கேட்டு மறுபடியும் உடைந்து போவோனோ என்று அரசனுக்கு சந்தேகமாக இருந்தது. அதனால் முதலில் மருத்துவரிடம் பேசி விட்டு பிறகு ஆதியிடம் விசயத்தை கூறினான்.
இரவெல்லாம் தூக்கம் வராமல் ஆதி போராடிக் கொண்டிருந்தான். கடைசி நேரத்தில் மனோகரி எப்படித்துடித்து இருப்பாள் என்று நினைத்து நினைத்து நொந்து கொண்டான்.
தூக்க மருந்து கூட அவனை ஆழமான உறக்கத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. நேற்று வரை மனைவியை இழந்ததை நினைத்து துடித்துக் கொண்டிருந்தவன், இன்று உரு தெரியாமல் அழிந்த குழந்தையை நினைத்து துடித்தான்.
இரவெல்லாம் துடித்து விட்டு, காலையில் சிவந்த விழிகளுடன் அமர்ந்து இருந்தான். அரசன் வந்ததும், “என்ன பண்ணனும்?” என்று அமைதியாகக் கேட்டான்.
நேற்று இருந்த ஆக்ரோசம் இல்லை என்றாலும், கோபம் அப்படியே இருந்தது. அரசன் என்ன சொல்கிறான் என்று கேட்க நினைத்து இருந்தான்.
“அந்த பிரகாசம் யாரோ சொல்லி செஞ்சுருக்கான். சொன்னது யாருனு தெரியனும். இது யாருக்கு போட்ட ஸ்கெட்ச்? எப்படி மனோகரி மாட்டினா? எல்லாமே தெரியனும். நீ பிரகாசம் மேல கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு. அவன தூக்கிட்டு பின்னாடி யாரு இருக்கானு பார்க்கலாம்”
“ஓகே” என்றவன் அங்கேயே அரசன் கேட்டது போல் புகாரை எழுதிக் கொடுத்தான்.
“இனி நான் பார்த்துக்கிறேன். அவங்கள தண்டிக்கனும்னா நீ சரியாகனும் ஆதி. சீக்கிரம் சரியாகி வா”
“அவங்கள விட்டுறாதீங்கணா”
“விட மாட்டேன். இத திருச்சிக்கு அனுப்பி அவன தூக்க சொல்லுறேன். நானும் திருச்சி கிளம்புறேன். தைரியமா இரு.” என்று கூறி விட்டு அரசன் கிளம்பி விட்டான்.
திருச்சி சென்று சேரும் முன்பே, அங்கு இருந்த காவலதிகாரியின் மூலம் பிரகாசத்தை சத்தமில்லாமல் கைது செய்ய வைத்திருந்தான்.
பிரகாசத்தை, எந்த சந்தேகமும் இல்லாதபடி வெளியே வரவைத்து, கடத்துவது போல் தூக்கிக் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
அரசன் வந்து சேரும் வரை, பிரகாசம் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவரிடம் யாரும் எதுவும் பேசவில்லை. எதுவும் கேட்கவுமில்லை. அவர் கையிலிருந்த பொருட்கள் எல்லாம் பரிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
பிரகாசம் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி நான்கு மணி நேரம் அமர்ந்து இருந்தார். அவருக்கு எழுந்து சென்று யாரிடமும் பேசவும் யோசனையாக இருந்தது. கூடவே தான் ஒரு பெரிய மருத்துவன். தான் போய் மற்றவர்களிடம் வழிய சென்று பேசுவதா? என்ற தலைக்கனம் சேர்ந்து கொண்டது.
நான்கு மணி நேரம் கழித்து அரசன் வந்து சேர, அந்த காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பிரகாசத்தை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே இரண்டு நாற்காலி, மேசை தவிர எதுவும் இல்லை. பிரகாசத்தை ஒருபக்கம் அமர வைத்து விட்டு, தானும் அமர்ந்து கொண்டான்.
“சார்.. என்னை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? நான் யாரு தெரியுமா? சொசைட்டில என் ஸ்டேட்டஸ் தெரியுமா? நீங்க என்ன கடத்துற மாதிரி தூக்கிட்டு வந்துட்டீங்க? உங்களுக்கு எதுவும் சந்தேகம்னா என் லாயர் கிட்டப் பேசிருக்கனும். முதல்ல என் லாயர கூப்பிடுங்க. என் ஃபோன கொடுங்க. நான் பேசனும். என்ன கேஸ்னு டீடைல் கூட சொல்லாம எப்படி நீங்க கூட்டிட்டு வரலாம்? அரெஸ்ட் வாரண்ட் இருக்கா? எதுக்காக கூட்டிட்டு வந்தீங்கனு முதல்ல சொல்லுங்க”
பிரகாசம் பேசிக் கொண்டே போக, இன்ஸ்பெக்டர் வாயை திறக்கவே இல்லை. பிரகாசம் பேசியதை எல்லாம் கேட்டு விட்டு எழுந்து கொண்டான்.
“சார் சொல்லுங்க. நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க போயிட்டே இருக்கீங்க? நில்லுங்க சார்” என்று பிரகாசம் கத்தியதை பொருட் படுத்தாமல் வெளியேறி விட்டான்.
நேராக அரசனிடம் வந்தான்.
“இவன இன்னைக்கு நைட் விடுங்க. நாளைக்கு காலையில வாங்க. மொத்தத்தையும் வாங்கிடுறேன்” என்றதும் அரசன் தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.
ஒரு ஹோட்டலில் தங்கி உடை மாற்றிக் கொண்டான். அவன் இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த இன்ஸ்பெக்டர், கேட்டதை குற்றவாளியின் வயிற்றில் கையை விட்டு எடுத்துக் கொடுக்கும் திறமை உள்ளவன். ஆனால், அரசனுக்கு எல்லாம் உடனே தெரிந்தாக வேண்டும். ஆதியின் துடிப்பிற்கு காரணமான ஒவ்வொருவரையும் பல மடங்கு துடிக்க வைக்க வேண்டும்.
தன் யோசனையில் அமர்ந்து இருக்க, கைபேசி அதிர ஆரம்பித்தது.
அஞ்சனாவின் பெயரை பார்த்து விட்டு எடுத்தான்.
“என்ன?”
“ரொம்ப பிசியா?”
“ஏன்?”
“நாளைக்கு திருவிழா. இன்னும் கொஞ்ச நேரத்துல மொளைப்பாரி ஆரம்பிச்சுடும். வருவியானு கேட்க தான்”
அப்போது தான் அவனுக்கு திருவிழாவின் நினைவே வந்தது.
“ஸ்ஸ்..” என்று தலையை தேய்த்துக் கொண்டவன், “என்னால வர முடியாது அஞ்சு” என்றான்.
“ம்ம்.. அம்மா சொன்னாங்க கேட்காத வேலையில இருப்பான்னு. உங்க அத்தான் கூட சொன்னாரு. நான் தான் கேட்காம கூப்பிட்டேன். சரி வேலைய பாரு”
“அம்மா கோபப்படலயே?”
“இல்லடா.. எனக்கு தான் ஒரு மாதிரி இருக்கு”
“ஏன்?”
“போன வருசம் நீ போயிட்ட. இப்ப வரை வரல. ஒரு தடவ கொண்டாடாம விட்டா மூணு வருசம் கொண்டாட முடியாம போயிடும். அதான் இந்த தடவ நீ வரனும்னு தோனுச்சு”
“நான் ஊர்லயே இல்ல அஞ்சு. இருந்தா வந்து தலையவாச்சும் காட்டிருப்பேன்”
“சரி விடு. நீ வேலையைப்பாரு” என்று வைத்து விட்டாள்.