மது நிர்மலமான முகத்தோடு அமர்ந்து இருந்தாள். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்த அழுத்தம் எல்லாம் அழுகையாய் வெளியேறின பின்பு மனம் அமைதி கண்டது.
அவளின் கைகளை தன் கைக்குள் வைத்து அமர்ந்திருந்தான் அவள் கணவன். பொது இடம், யாருக்கும் காட்சி பொருள் ஆகா முடியாது அல்லவா. இருவர் மனமும் அலையடித்தது.
என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியா வலி அவளது. ஆனால், தன் நிலை உரைக்க வேண்டும் தானே. கரிகாலன் மெதுவாக பேச தொடங்கினான்.
“மதும்மா… நீ, என்னை இவ்வளவு தேடுவன்னு நான் நினைக்கவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து உனக்கு பிடிக்காத வாழ்க்கை. எங்க வீடு, உனக்கு கொஞ்சமும் செட் ஆகல…” என்று கரிகாலன் தொடங்க
மறுமொழி கூற மனம் வேண்டிய போதும், அவன் முழுதாக முடிக்கட்டும் என்று அமைதி காத்தாள். அவன் பக்க நிலையையும் விளக்க வேண்டும் தானே…
“எங்க வீட்டு ஆட்கள் கூட, நீ நெருங்க நினைக்கவே இல்லை, ஒதுங்கியே இருந்த… அவங்களும் உன்னை தள்ளி தான் வச்சாங்க…” என்றவன் அவள் முகம் பார்த்தான்.
“எனக்கு தெரியாதா விசயத்தை சொல்றீங்க கரிகாலன். புதுசா இருக்கு…” என்று அவனை முறைத்த வண்ணம் மது சொல்ல.
தலை குனிந்தான். எல்லா வீட்டிலும் குடும்ப உரசல் வர தானே செய்யும். அவள் அதை கேட்கவும் இல்லையே. அவள் கேட்டது, ஒரு கணவனாக எனக்கு ஏன் நிற்க வில்லை என்பதை தான்.
அவள் விளக்கம் கேட்கும் வகையை புரிந்து கொண்டான். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.
ஒரு பெருமூச்சு விட்டவன். பின் மெதுவாக, “ உனக்கு , என்னை பிடிக்கவே இல்லையே மது. உன்னோட பிடித்தத்த நான் உணரவே இல்லை மது. கல்யாணத்துக்கு முந்தி உன்னை, நான் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. உன்னை தான் கல்யாணம் செஞ்சுக்க போறோம்ன்னு ஆனா பின்னும், மனசுல சஞ்சலம் தான். இது எல்லாம் சரியா வருமான்னு ஒரு நினைப்பு. உன் கழுத்துல தாலி கட்டுன பின்னாடி தான் நீ, என் மனசுல நின்ன… என் மனைவி, என் எதிர்காலம், சுக துக்கம் எல்லாம் சமம்ன்னு தான் என்னோட உன் வாழ்க்கைய இணைச்சேன். ஆனா” என்று ஆரம்பித்தவன் கொஞ்சம் தயங்கினான்.
புரியாமல் கணவன் முகம் பார்த்தாள் மது. அவளின் கடந்த காலத்தை இழுக்காமல், காயப்படுத்தாமல் சொல்ல, வார்த்தையை தேடினான்.
“ நான் யோசிச்ச மாதிரி உன்னை நினைச்சது தான் தப்பு மது. எதிர்பாராத கல்யாணம் தான், பெரிய அளவுல ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லை. ஆனா, கல்யாணத்துக்கு பின்னாடி மாற்றத்தை எதிர்பார்த்தேன் மது. என்னோட மனைவின்னு உம் மேல எனக்கு இருந்த ஈடுபாடு, எம் மேல உனக்கு இல்லான்னு காணவும், பெருசா ஏமாந்த உணர்வு மது. அதை எப்படி சொல்ல… நான், உன்னை பாதிக்கவே இல்லை. எனக்கான உணர்வு உன்கிட்ட இல்லைன்னு தான் தோணிச்சு. உனக்கு நான் ஒரு பொருட்டே இல்லை. ஊர் முன்னுக்கு கல்யாணம் ஆச்சான்னு கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் தான் நான், அடிப்படை ஒண்ணுமே இல்லைன்னு தான் நினைச்சேன். உன்கிட்ட காணவும் செஞ்சேன். உங்க வீட்டுக்கு விருந்துக்கு போன நாள் தொட்டு தான், உம் மனசுல எனக்கான இடம் என்னன்னு தெரிஞ்சது. எல்லா தம்பதிகள் மாதிரி எதார்த்த வாழ்க்கை நமக்கு சகஜமா அமையாதுன்னு புரிஞ்சு போச்சு…” என்று சொன்னவன். மேலும் தயங்கினான்,
“உம் மனசுல நான் இல்லையே மது. எனக்கான உன் ஏக்கத்தை ஒரு நாளும் உன்கிட்ட நான் கண்டது இல்லை. பிடித்தமில்லாத ஒரு முகத்தை தான் பார்த்திருக்கேன்…” என்றான் நிமிராமல்.
மதுக்கு புரிந்தது. அவன் எதை சொல்கிறான் என்று, பொய்யில்லை… உண்மை தான். ஆரம்பத்தில் அவனோடு, அந்த வீட்டோடு கொஞ்சமும் ஒட்ட முடியவில்லை. அதே போல் அவள் வீட்டிற்கு விருந்துக்கு அவன் வந்த போதும், கரிகாலனை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. புதிதான திருமணம் ஆன பெண்களின் வரையறைக்குள் மது வரவில்லை. புது பெண் பொலிவு, கணவனோடு ஈடுபாடு, அவன் தேவையை கவனிப்பது, ஒட்டி கொண்டு அலைவது இன்னும் பல உண்டு. இதில் எதிலும் மது அடங்க மாட்டாள். அவளை பொறுத்தவரை இது கட்டாய திருமணம் தான். அவளுக்கு கொஞ்ச நாள் தேவைப்பட்டது, எல்லாவற்றையும் ஜிரணிச்சு கடந்து வர…
“ஏன் கரிகாலன், நம்ம ரெண்டு பேருக்குமே இது ஒரு வகையில கட்டாய திருமணம் தான். கல்யாணத்துக்கு பின்னாடி உங்களுக்கு எம் மேல ஒரு ஃபீல் வந்த மாதிரி, எனக்கும் உங்க மேல வந்திருக்கலாம் இல்லையா… வரலைன்னு நீங்களா ஒரு முடிவு எடுத்து தான் இவ்வளவும் செஞ்சீங்களா?… நீங்க நல்லவர் தான், எனக்காக நிறைய அட்ஜஸ்ட் செஞ்சு போனீங்க, ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செஞ்சு குடுத்தீங்க.. இது எல்லாம் எம் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. ஆனா, அடுத்த கட்டத்துக்கு, தாம்பத்திய வாழ்க்கையை நெருங்க தான் முடியலை. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இருந்தா, எல்லாம் சரியா வரும்ன்னு தான் நினைச்சேன். உங்களை விட்டு விலக நான் நாள் கேட்கல கரிகாலன், உங்களை நெருங்க தான் நாள் கேட்டேன். அதை எனக்கு புரியவைக்க தெரியலை போல…” என்று கணவன் தவறுக்கு தன்னை காரணமாகி கொண்டாள்.
கரிகாலன் அமைதியாக அமர்ந்திருந்தான். இருவரும் பேசி தீர்த்து கொள்வது நல்லது தான், ஒளிவுமறைவின்றி இன்றே அனைத்தையும் பேசி புரிந்து கொள்வது தான் சரி. ஆனால், அது தன் மனைவியை காயப்படுத்த கூடாதே… எல்லோரையும் போல் தானும், அவளின் கடந்த கால வாழ்வை தோண்டுவதாக எண்ணி கொண்டாள். அவளை திருமணம் செய்ததன் அர்த்தமே மாறி விடும் அல்லவா… அவன் யோசிக்க மது புரிந்து கொண்டாள்.
அவளின் பதினேழு வயது முதல் கரிகாலனை தெரியும். நெருக்கம் என்று எல்லாம் சொல்ல முடியாவிட்டாலும், ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் அற்றவர்கள் கிடையாது. அவ்வளவு ஏன்… அவள் காதல் விவகாரம் கூட கரிகாலனுக்கு தெரியும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாமல், பார்வையில் கூட கண்ணியம் காத்தவன். அவனை பற்றி மதுக்கு தான் தெரியாது. ஆனால், அவளை பற்றி கரிகாலன் நன்கு அறிவான். அவளின் எதிர்பார்ப்பு, ஆசை, கனவு எல்லாம் தெரியும். அதற்கு கொஞ்சமும் பொருந்தாத தன் மீது ஈடுபாடு வராது என்பதை கல்யாணத்தின் பின் கண்டதால் தான் ஒதுங்கி கொண்டான். மொத்தமும் சேராத அவனோடு அவள் இணைந்தது விதி என்று அவன் எண்ணி இருக்க, அதை தாண்டி அவன் மேல் அவள் கொண்ட நேசம் நம்பமுடியாமல் அவனை திகைக்க செய்தது. ஆனால், அதற்கான விளக்கம் மது கொடுத்தாள்.
“ கரிகாலன், நான் எட்டாவது படிக்கும் போது எனக்கு புடிச்ச நடிகர் யார் தெரியுமா? விஜய் தான். அப்ப டிவில போட்ட துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பார்த்து பயங்கர ஃபேன் ஆகிட்டேன். அதுக்கு அப்புறம் விஜயோட பிரியமானவளே படம் பார்த்துட்டு, கட்டுன விஜய் தான்னு இருந்தேன். அதை என் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னேனா, அப்ப தான் தெரிஞ்சது விஜய்க்கு கல்யாணம் ஆனது. ரொம்ப ஃபீல், ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை. அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்பு மேல ஒரு கிரஷ்…” என்று அவளின் கதையை கேட்டு அதிர்ந்து போனான் கரிகாலன்.
“நான் எட்டாவது படிக்கும் போது சக்திமான் தானே விளையாடினேன்….” அவன் மனம் குரல் கொடுத்தது.
மது தொடர்ந்தாள், “அப்புறம் ஸ்கூல் முடிச்சு காலேஜ் போன பின்னாடி நிழல் உருவத்தை விட்டு, நிஜ வாழ்க்கையில ஹீரோவா தேடுனேன். கட்டுப்பாடு இல்லா கனவும், இள வயதும், சுதந்திரமும் துணை சேர்க்க, எனக்கான ஹீரோவ தான் மனம் நாடுச்சு… இப்படியே தான் வாழ்க்கை போகும்ன்னு நம்பினேன்…” சற்று மெளனம் நிலவியது அவளிடம். வேடிக்கையாக ஆரம்பித்தாலும், உள் நுழையாமல் மேலோட்மாக தொடர்ந்தாலும், வலி நிஜம் அல்லவா…
“காலம் மாதிரி சிறந்த ஆசான் யாரும் இல்லை கரிகாலன். சினிமால ஒரே பாட்டுல எட்டு டிரஸ் மாத்தி போடுற மாதிரி, நிஜத்தில் பண்ண முடியாது. மனுசங்க குறை, நிறை உள்ளவங்க தான். நிழல்ல ரசிக்க மட்டும் தான் முடியும், நேசிச்சு வாழ முடியாதுன்னு புரிஞ்சு வரவே நாள் ஆகி போச்சு. என் எதிர்பார்ப்புக்கு தக்க நீங்க இல்லைன்னு நினைக்கிறீங்களா கரிகாலன். எனக்கு எதிர்பார்ப்பே இல்லை. என்னோட குறை, நிறையோடு நீங்க நேசிக்கும் போது, உங்களோட குறை, நிறைகளை நானும் நேசிக்கிறேன் கரிகாலன். உங்க குடும்பம் எனக்கு ஒரு விசயமே இல்லை. எனக்கு குறையெல்லாம், எம் புருசன் எனக்காக ஏன் பேசலைன்னு தான்…”என்றாள் தெளிவாக.
அவள் பக்க விளக்கம் மிக தெளிவு. கரிகாலன் மட்டுமே குழம்பி கொண்டது. அவள் கேள்வி நியாயம் தான். அதற்கு விளக்கம் சொல்லியே ஆகணும் கரிகாலன்.
மெல்ல சிரித்து கொண்டாள் மது. ஆண்கள் எந்த இடத்திலும் அவர்கள் தாய்மாரை விட்டு கொடுக்க மாட்டார்கள் போல…
“வறுமையான குடும்பம் தான் எங்களது, வறுமைன்னா சாப்பாட்டுக்கு கூட கஷ்டம் தான். அப்பா குடிகாரர், பாசம் இருக்கும். ஆனா, பொறுப்பு இருக்காது. அண்ணா, எப்பவும் வெளியவே தான் திரிவான், நான் தான் அம்மா கூடவே இருப்பேன். கூலி வேலை பார்த்து தான் எங்களை எல்லாம் வளத்தாங்க. அண்ணன், எட்டு கூட தாண்டல, தங்கச்சி, பத்து தான். அவங்க எல்லாம் காட்டு வேலைக்கு போனாலும், நான் படிப்பை விடாம தொடர்ந்தேன். அப்ப எங்க ஊர்ல, கவர்மென்ட் ஸ்கூல் இருந்தாலும், படிக்க வைக்கிறது பெருசு. அங்க எல்லாரும் குடும்ப கஷ்டத்துக்கு திருப்பூர் பனியன் கம்பெனி, பஞ்சு மில், முறுக்கு போடன்னு வெளி ஊருக்கு போனாலும், எங்கம்மா என்னை எங்கையும் அனுப்பல… அவன் படிக்கிறான், படிக்கட்டும். வீட்டுல ஒருத்தனாவது படிச்சவனா இருக்கட்டும்ன்னு சொன்னாங்க. நான், அம்மாவோட ரொம்ப க்ளோஸ், காலம் போச்சு நானும் படிச்சு வேலைக்கு போய்ட்டேன். என்னோட நிலை உயர்ந்த மாதிரி ஒரு எண்ணம் அவங்களுக்கு, நிழல்ல நிக்குற நானும், வெயில நிக்கற அண்ணனுக்கும் வேறுபாடு பார்க்க ஆரம்பிச்சாங்க. அதுக்காக, எம் மேல பாசம் இல்லைன்னு சொல்ல முடியாது. நான் கவர்மென்ட் வேலை, நல்ல சம்பாத்தியம் இருக்க கூட பிறந்தவங்களுக்கு செஞ்சா என்ன… அது தான் அவங்க வாதம். எதிலும் ஒரு பங்கு அவங்களுக்கு கூட தான் போகும். நான் அதை பெருசா எடுத்தது கிடையாது. எல்லாம் தெரிஞ்சு தான் அடங்கி போவேன்.அதை அவங்களுக்கு சாதகமா எடுத்து, உன்னை காயப்படுத்துவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை மது. என்கிட்ட எதிர்பார்ப்பு அதிகம் இருக்குன்னு தான் நினைச்சேன். எம் மனைவின்றதுக்காக உன் கிட்டையும் எதிர்பார்ப்பாங்கன்னு நான் யோசிக்க மறந்துட்டேன் மது. உனக்கு, உங்க வீட்டுல கொடுக்குற சீர் மேல, அவங்களுக்கு என்ன ஈடுபாடு இருக்க போது, என் குடும்பத்துக்கு என்ன தேவையோ அதை நான் தான் செய்றேன்னே வேற என்ன… நீ, அவங்களுக்கு அடங்கி நடக்கல… அந்த கோபம் தான் போல, எல்லார் வீட்டிலும் நடக்கிறது தான. நான் உள்ள வந்தா தப்பா போகும்ன்னு தான் நினைச்சேன். இவ்வளவு நடக்கும்ன்னு எதிர்பார்க்கல…” என்று குற்ற உணர்வோடு கரிகாலன் சொல்ல.
“ இது மட்டும் தான் காரணமா கரிகாலன்…” என்ற மனைவியின் கேள்விக்கு.
இல்லை என்று தலையாட்டியவன், “எங்கம்மா கிட்ட ஒரு குணம் இருக்கு. ஆங்காரம், கோபம், நான் சொல்றது தான் உண்மை, அதை நீங்க ஏத்து தான் ஆகணும். நான் பெத்த பிள்ளை எம் பேச்சை தாண்ட கூடாதுன்னு நிறைய இருக்கு. அவங்க கை விட்டு போற மாதிரி இருந்தா, ரொம்பவும் அழுது, முடங்கி, தற்கொலை செஞ்சுகுவாங்க. இதுக்கு முன்ன அஞ்சு முறை செஞ்சுருக்காங்க…” என்று கரிகாலன் சொல்ல.
அதிர்ந்து போனவள். “என்ன சொல்றீங்க கரிகாலன். உங்கம்மாவா , பார்த்தா அப்படி தெரியலையே… யாரையும் மிரட்டி, உருட்டுவாங்க. அவங்களா தற்கொலை செஞ்சுபாங்கன்னு பயப்படுறீங்க. நம்பவே முடியலை கரிகாலன்” என்ற அதிர்ச்சியாக சொன்னாள் மது.
மனித வாழ்வில் ஏதேனும் ஒரு கணத்தில், இந்த வாழ்வே வேண்டாம் முடித்து கொள்வோம் என்று எண்ணம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எல்லோரும் கடந்து வந்திருப்போம். தன்னாலே சாவு வராத என்ற ஏக்கம் வரும் அளவுக்கு வாழ்க்கை வலி நிறைந்ததாக சில நேரம் தோன்றும். தானும் அப்படி தான். காதலில் தோற்று நிக்கும் போது சாக துணிந்த மனம். இன்று கல்யாண வாழ்வில் பல சிக்கல், அவமானம் கண்ட போதும் சரி செய்ய தானே நினைத்தது. ஏதோ ஒரு தடவை வாழ்வை முடித்து கொள்ளும் எண்ணம் வந்தால், ஒவ்வொரு முறையுமா தோன்றும். இது என்ன ஒரு வகை மிரட்டலா…
ஆம் என்று தான் சொன்னான் கரிகாலன். “வசந்தி கல்யாணம் பேசும் போது என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை. அப்ப தான் இடம் வாங்குன புதுசு. கை காசு முழுசும் போட்டு தான் வாங்குனேன். அதனால் தான் வசந்தி கல்யாணத்துக்கு அண்ணனையும் பங்கு போட சொன்னேன். அண்ணன் ஒத்துகல, பொண்ணை கட்டி குடுக்கிறது லேசா… நான் மூணு பிள்ளையை வச்சு கஷ்ட படுறேன். நீ வேலை பாக்குற, நீயே செய்ன்னு சொன்னாங்க. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன். வாக்கு வாதம் முத்த, பார்த்துட்டு இருந்த எங்கம்மா, அவங்க மேலையும், வசந்தி மேலையும் மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்த போயிட்டாங்க… நான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன். கடன வாங்கி தான் கல்யாணத்தை முடிச்சேன். கவர்மென்ட் வேலை, சம்பளத்தை வாங்கி ஈசியா கடன் கழிச்சுருவான்னு என்னை விட்டுட்டாங்க. ஆனா, இன்ன வரைக்கும் கடனுக்கு நான் வட்டி கட்டுறேன்.” என்றான் சோகமாக.
அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள். அவளை பார்த்தவன், “அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா தெரியல. நான் வரும் போதே எல்லாம் கை விட்டு போய்டுச்சு. வார்த்தையும் முத்த, ஆளுக்கொரு பேச்சு தான். யார சரிகட்ட, உங்கம்மாவும் பேசுறாங்க, எங்கம்மாவும் பேசுறாங்க. வாக்குவாதம் விபரீதமாக போய் கைகலப்புல முடிஞ்சு போகும்ன்னு பயம். எங்கண்ணன் மொரடன், எங்க பக்கம் ஆட்கள் அதிகமா இருந்தாங்க. உங்கப்பா மட்டும் திகைச்சு போய் நிக்குறாரு, உங்கம்மா சண்டைக்கு நிக்குறாங்க. யாரையும் கட்டுப்படுத்த முடியலை. யாருக்கு சாதகமா என்ன முடிவு எடுக்க முடியும். ஏதாவது விபரீதம் ஆகிபோச்சுன்னா எல்லா பழியையும் உம் மேல தான் தூக்கி போடுவாங்க… அந்த நேரம் நான் ஏதாவது பேசி இருந்தேன்.எங்கம்மா சாக போறேன்னு போவாங்க, எங்கண்ணன் உங்க அப்பா மேல கைய வச்சிருப்பான். நிலைமை கை மீறி போய்டும். நீ வந்துதான் குடும்பத்தை பிரிச்சுட்ட, ராசி இல்லை, நமக்கு பொருத்தம் இல்லைன்னு ஆயிரம் பேசுவாங்க. எனக்கு என்ன முடிவு எடுக்கன்னே தெரியலை. தனியாள யாரையும் கட்டுப்படுத்தவும் முடியலை. இந்த நிலையில் நீ இங்க இருந்தா சரியா வராதுன்னு நினைச்சேன். அப்போதைக்கு பிரச்சனையை முடிக்க தான் அப்படி சொல்ல வேண்டியது போச்சு. வேற எந்த பேச்சும், அந்த நேரம் எடுபடாது. எனக்கு கோபம் எல்லோர் மேலயும், நீங்க இதான எதிர்பார்த்திங்கன்னு. நானே, உன்னை போக சொல்லிட்டேன். உனக்கு, எங்க வீடு தான பிரச்சனை. உங்க வீட்டில எந்த பிரச்சனையும் உனக்கு வராதுன்னு நினைச்சேன். அங்கேயும் நீ கஷ்டபடுவன்னு நான் யோசிக்கவே இல்லை. அம்மா வீடு கஷ்டம் கொடுக்குமா?…”அவன் பக்க விளக்கத்தை கொடுக்க,
விரக்தியாக சிரித்து கொண்டாள், “ எனக்கு நாலு வருசமா வரன் பாக்குறாங்க. எதுவும் அமையலை. எல்லாமே இருந்தும் ராசி இல்லன்னு பேர் வாங்குனேன். கல்யாணம் தான் ஒரு பொண்ணுக்கு அடையாளம் போல, ஒரு வயசுக்கு மேல கழுத்துல தாலி இல்லாத நிலையில் இருந்தா, ஊருக்கு பாரம் போல. எல்லோர் வாய்லையும் விழுந்தேன். இன்னைக்கு இருக்குற தெளிவு, அன்னைக்கு இல்லை. தாலி தான் நமக்கான அடையாளம், யார் வந்தாலும் கழுத்தை நீட்டுற நிலை தான். ஆனா, இப்பத்தான் புரியுது. தாலி நம்மோட அடையாளம் கிடையாது. அந்த தாலியை கட்டுவன் தான் நம்மோட அடையாளம். அவனுக்கு இருக்குற மதிப்பும், மரியாதையும் தான் நமக்கானதுன்னு புரிய நாள் ஆச்சு. எனக்குள்ள ஒரு தெளிவு கண்ட பின்னாடி தான். உங்களை தேடி வந்தேன்…” என்றாள் மது தெளிவாக.
கொஞ்சம் தயங்கியவன், “மது, இப்ப நான் பெரிய நெருக்கடியில் இருக்கேன். நீ எதிர்பார்க்கிற வசதியான வாழ்க்கை என்கிட்ட இருக்காது. அத்தோடு, என் குடும்பம் சரியில்லை தான். ஆனா, அவங்களையும் என்னால விட முடியாது. நாம தனியா இருந்தாலும், அவங்களை விட்டு தள்ளி இருக்க முடியாது. அங்க நடக்குற எல்லாம் நம்மை சார்ந்து தான் நிக்கும். நம்ம வாழ்க்கை நடுத்தர வாழ்க்கை தான். சினிமா மாதிரி ஒரே பாட்டுல பணக்காரன்லாம் ஆக மாட்டேன். கஷ்டம் இருக்கும் மது…” என்ற கணவனை பார்த்தவள்.
“உங்க கூட கஷ்டப்பட நான் ரெடியா தான் இருக்கேன் கரிகாலன்…” என்றாள் மனைவி உறுதியாக.
அதிர்ந்து பார்த்தான் கரிகாலன், மனைவியை… இன்னும் அவளுக்கென்று அவன் எதுவும் செய்ய வில்லை. இத்தனைக்கும் அவளுக்காக நான் சிறு துரும்பும் அசைக்கவில்லை. இவ்வளவு நாள் நான் செய்ததை வாங்கிய இரத்த சொந்தங்கள் கூட இந்த வார்த்தையை சொல்லாது. வெறும் மூன்று மாத வாழ்வு, தன்னோடு கஷ்டப்பட தயாராக நிற்கிறது. மனைவி தான் கணவனின் சரிபாதி என்று சொல்வதன் அர்த்தம் விளங்கியது. மனம் கொஞ்சம் நெகிழ்ந்து போய் இருந்தான். உற்ற துணை தவிர, உலகில் சிறந்தது எது?அவள் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான். வாழ்க்கை, தங்களுக்கு நியாயம் செய்ததாக தோன்றியது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.