மாதவன் ரம்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்ல, அதிர்ந்து நின்றவள்.
“நான் எங்க போவேன்…” என்று அழுதாள்.
“உங்க அம்மா வீட்டுக்கு போ…”என்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டான் மாதவன்.
எவ்வளவு ஆசையாக காதலித்து, கல்யாணம் செய்தான். அவள் சொல்வதை எல்லாம் கேட்டானே… நல்ல வேலை, சென்னையில் சொந்த வீடு, ஆண், பெண் என்று இரு குழந்தைகள். குறை சொல்ல முடியாத வாழ்க்கை தான். அதை வைத்து சந்தோசமாக வாழ தெரியவில்லையே.
மது… அவள் பட்ட கஷ்டத்தில் கொஞ்சமாவது இவள் அனுபவித்து இருப்பாளா?… ஆசை பட்ட கணவன், நிறைவான செல்வம், மரியாதையான வாழ்க்கை… வேற என்ன வேண்டும். அவளோடு ஏன் போட்டி போடுகிறாள். அவளிடத்தில் நின்று ஒரு நாள் அவள் வலியை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். வெளியே பகட்டாக காட்டி கொள்ளும் மக்களுக்கு, உள்ளுக்குள் இருக்கும் வலியை யார் அறிவார்.
ரம்யா வீட்டு நிலை படியை கெட்டியாக பிடித்து கொண்டு , “ என்னை விடுங்க நான் போக மாட்டேன். நீங்களும், பிள்ளைகளும் இல்லாம நான் மட்டும் எப்படி எங்க வீட்டுக்கு போறது. எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க?…” என்று கேட்க.
“ என்ன நினைப்பாங்க… இவ குணம் சரியில்லை. அதான் புருசன், பிள்ளைகளை புடிங்கிட்டு துரத்தி விட்டான்னு பேசுவாங்க. தப்பில்லை உண்மைதானா…” என்று கேட்க.
அவனை பாவமாக பார்த்தவள், “ உங்க தங்கச்சிய பத்தி நான் சொன்னது உண்மை. அதை விசாரிக்க வந்துட்டு … அதையும் கேட்காம, உங்களுக்கு சொத்து தராத பெத்தவங்களையும் தட்டி கேட்காம, என்னை வெளிய தள்ளுறீங்க. நம்ம நல்லதுக்கு தான் பேசினேன். சொந்த ஊர்ல, இம்புட்டு நாள் வாழ்ந்த வீடு இல்லை. கொஞ்சமும் ரோசபடாம நிக்குறீங்க…” என்று தன் தப்பை உணராமல், கணவன் தப்பு செய்தது போல் காட்ட…
அவளை முறைத்தவன், “இது நான் மட்டுமா வாழ்ந்த வீடு. மதுக்கும் இது தான வீடு. அவளை நீ வெளியேத்த நினைக்கல. அதுக்கு தான் நீ வெளிய நிக்கிற. என் தங்கச்சிய வாழ வெட்டி, புருசன் துரத்தி விட்டான், சூடு, சொரணை இல்லைன்னு சொன்னியாம்., இனி இந்த பேச்சை எல்லாம் நீ அனுபவி. அப்பவாது புத்தி வருதான்னு பார்ப்போம்…” என்று வெளியே தள்ளி, கதவை அடித்து சாத்தி விட்டு போனான்.
ரம்யாக்கு பெருத்த அவமானம் தான். அக்கம்பக்கம் பார்க்க வெளியே தள்ளி விட்டான். பிள்ளைகளை கூட உடன் அனுப்பவில்லை. ஒரே ஊர் பேச்சு பரவி விடும். இது எல்லாம் அவளுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. இந்த வீடு, அவள் கௌரவம். அது கை விட்டு போனது தான் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நிதானித்து மது பேச்சை தள்ளி போட்டாள். அவள் யாரோடோ ஓடி போய் விட்டாள். அதை அண்ணனாக தட்டி கேளுடா என்றால் என்னை வீட்டை விட்டு தள்ளி விட்டான் இந்த மானங்கெட்டவன். சரியான இத்த குடும்பம்.
“கொஞ்சம் அமைதியாக இரு ரம்யா. அவளை அம்மலப்படுத்துறேன் என்று உன் வாழ்வை நீ சூனியமாக்கி கொள்ளாதே. இப்போது கோபமாக இருக்கும் கணவன் ஒரு மாதம் சென்று உன்னை அழைத்து கொள்வான். அவனோடு வாழ்ந்து இரு பிள்ளைகளை பெற்றவள். எப்படியும் விட்டு விட மாட்டான். வயித்து பிள்ளையை மறைக்கவா முடியும். அது மாதிரி இவ ஓடி போன விசயமும் வெளி வரும். அப்போது நாக்கை பிடுங்கி கொண்டு தொங்கட்டும்…”என்று நினைத்த படி, தன் வீடு நோக்கி சென்றாள்.
கரிகாலன் வேக வேகமாக வந்து கொண்டு இருந்தான். நேரம் மாலை ஐந்தை நெருங்கி கொண்டு இருந்தது. மனைவியை தனியே விட்ட பயம் மிகுந்து இருக்க. வீட்டை நோக்கி நடையை எட்டி போட்டான்.
புது இடம் தனியாக மனைவி என்ன செய்வாள். கொஞ்சம் சீக்கிரமாக வந்து இருக்கலாம். பள்ளி நேரம் முடியாமல் வெளியேற முடியாது. என்ன சாப்பிட்டாள் என்று கூட தெரியவில்லை. இன்று வேலை அதிகம். தன் வண்டியில் வேகமாக வந்து இறங்கியவன். வேக நடை போட்டு மாடிக்கு வந்தான்.
வீடு பூட்டி கிடந்தது. அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தவன். சுற்றும், முற்றும் பார்த்தான். எங்கும் தென்பட வில்லை. பின்னால் இருந்து மாமா என்று ஒரு சத்தம். திரும்பி பார்க்க, அவனிடம் படிக்கும் பையன் தான்.
“மாமா… அக்கா கடைக்கு போயிருக்காம். நீங்க வீட்டுக்கு வந்தா சாவியை குடுக்க சொல்லுச்சு…” என்று சாவியை நீட்ட, வாங்கி கொண்டான். சற்று தயங்கி நின்றவன். பின்
“மாமா… அக்கா தான், உனக்கு ஸ்கூல்ல தான் வாத்தியார். அத விட்டு வெளிய வந்தா மாமான்னு சொல்லு. நான் உனக்கு அக்கான்னா, அவங்க உனக்கு மாமான்னு சொன்னாங்க மாமா…” என்றான் சிறுவன். அவன் முகம் மலர்ந்து இருந்தது. தாங்கள் பயந்து ஒதுங்கும் தமிழ் வாத்தியாரை, சொந்தம் கொண்ட மகிழ்ச்சி.
ம்ம்… பையன் மேல் இடத்து சிபாரிசை பிடித்து விட்டான். அங்கீகரிக்க தான் வேண்டும். சிரிப்புடன் தலையாட்ட, துள்ளி கொண்டு ஓடினான் சிறுவன்.
கதவை திறந்து உள் சென்று அமர, வீட்டை தனக்கு தோதாக ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள் மது. பார்த்தாலே தெரிந்தது. பெண் பிள்ளை பராமரிப்பு தனி தான். மனைவி மேலே வரும் சத்தம் கேட்டது.
இரு கை நிறைய பைகளோடு மேல வந்தாள். அவள் கூடவே அம்பிகாவும் மேல வந்தாள். அவள் கையிலும் பை இருந்தது. கொடுத்து விட்டு சென்றாள். இது அவர்கள் வீடாகவே இருந்த போதும், மேல் மாடி எல்லாம் வரமாட்டாள். இன்று எல்லாம் சகஜமாக நடந்தது.
“நீங்க வரதுகுள்ள வந்துரலாம்ன்னு தான் நினைச்சேன். கொஞ்சம் லேட் ஆகி போச்சு. நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க…” என்று சொன்னவள். தான் கொண்டு வந்திருந்த பையில் எதையோ தேடினாள்.
“கரிகாலன், இந்த குட்டி தூக்கு வாங்கினேன். பால் வாங்க எதுவுமே இல்லை. எனக்கு காலையிலும், மாலையிலும் கண்டிப்பா டீ இருக்கணும். நீங்க ரெடி ஆகுங்க…” என்றவள் தூக்கோடு கிளம்ப.
“மது, எங்க போற?…”
“ நான் தான் சொன்னேன்ல டீ வேணும். பால் வாங்க போறேன்…”
‘உனக்கு தான் யாரையும் தெரியாதே மது…” தயங்கினான் கரிகாலன்.
“அதுனால என்ன வந்தது. எல்லாரையும் தெரிஞ்சுக்கிட்ட போச்சு…” என்று எளிதாக சொல்லி நடையை கட்டி விட்டாள்.
பால் வாங்கி வந்தவள். பரபரவென்று வேலையில் இறங்கி விட்டாள். வாங்கி வந்த பொருட்களை எடுத்தவள், வெங்காய பக்கோடா செய்ய தயார் செய்தாள். ஒரு பக்கம் டீயும், மறுபக்கம் பக்கோடாவும் தயாராகி கொண்டு இருந்தது. முகம் கழுவி வந்தவள், எல்லாவற்றையும் எடுத்து வெளி வராண்டாவில் வைத்தாள். நாலா பக்கமும் ஊர் நன்றாக தெரிந்தது. கரிகாலனும் கேட்க வேண்டிய கேள்வியை மனதில் அடுக்கி கொண்டு அமர, சுகந்தி மேல வந்தாள். அம்பிகாவின் பெண்.
“சித்தி… அம்மா தோச மாவு குடுத்து விட்டாங்க…” என்று கொடுக்க.
வாங்கி கொண்டவள். ஒரு டப்பாவில் வெங்காய பக்கோடா நிறைத்து கொடுத்தாள்.
“இன்னைக்கு முழுக்க, உங்கம்மா என் கூட தான் அலைஞ்சாங்க… உங்களுக்கு எதுவும் செய்ய நேரம் இருக்காது. அம்மா கிட்ட கொடுத்து சாப்பிடுங்க…” என்று மது சொல்ல.
சிரித்த முகமாக வாங்கி சென்றாள் சுகந்தி.
“சித்தியா” என்று அதிர்ந்து பார்த்தவன். இன்னும் என்னென்ன உறவுகளை பிடித்து வைத்து இருக்கிறாளோ…
நீண்ட நாள்களுக்கு பின் ஒரு சந்தோச மன நிலை. ஒரு பெண் வீட்டை நிறைவாக்குகிறாள். முழுதாக உணர்ந்து கொண்டான் கரிகாலன்.
“வாங்கி வந்த பொருட்களை அடிக்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க…” என்ற மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பாட்டு, உடன் சென்றான். அவன் மனதில் அடுக்கி வைத்த கேள்விக்கு எல்லாம் மது பதில் சொன்னாள்.
“ வீட்டில காய் எதுவும் இல்லை. மளிகை பொருளும் காணம். அது கொஞ்சம், ஒரு வாரத்துக்கு தக்க வாங்கினேன். அப்புறம் இது தோசை தவா, இது இட்லி சட்டி, ஒரு குக்கர் வாங்கினேன். அது கண்டிப்பா வேணும். சுண்டல், கிழங்கு வேக வைக்க , அப்புறம் பிரியாணி செய்ய தேவை தான். இது பிளாஸ்டிக் டப்பா மளிகை போட்டு வைக்க…” என்று சொல்லி மூச்சு விட்டாள்.
“அப்புறம் கரிகாலன் ஒரு விசயம். நீங்க நைட் வேலைக்கு போங்க, ஆனா நேரத்தை மட்டும் மாத்திகோங்க. ஏழு டூ பத்து போனா போதும். ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க… அப்புறம் ஒரு முக்கியமான விசயம் நான் டியூசனுக்கு சொல்லி இருக்கேன். பத்து வரை மட்டும் தான். எனக்கு கணக்கு, இங்கிலீஷ் ரெண்டுமே நல்லா வரும். இங்கே அதுக்கு ஆள் கிடைக்கலையாம். அம்பிகா அக்கா மூலம் தான் சொல்லி வச்சேன். ஏழு மணிக்கு தொடங்கி ஒன்பது மணி வரை. பத்து பேரு வாராங்க. அடுத்தடுத்து சேருவாங்க…” என்று மனைவி சொல்ல. அவனுக்கு புரிந்தது. தனது இரண்டு மணி நேர வேலையை, அவளின் இரண்டு மணி நேர வேலையாக மாற்றி கொண்டு,தனக்கு ஓய்வுக்கு வழி வகுத்து கொடுத்து உள்ளாள்.
“உங்களோடு கஷ்டபட தயாராக இருக்கிறேன் கரிகாலன்” என்ற வார்த்தையின் உண்மை தன்மையை நிரூபித்து விட்டாள். தன் கணவனின் பாரத்தில் பங்கெடுக்க மனைவி தயாராகி விட்டாள். நீ ஒரு சரியான ஆண் மகன் இல்லை கரிகால பாண்டியன், உள்மனது குத்தியது.
“நீ கஷ்ட பட வேண்டாம் மது. எனக்கு ஒரு வருச டைம் கொடு, எல்லாத்தையும் சரி செஞ்சு, பொறுப்பை உன் கையில கொடுக்குறேன். டியூசன் எதுக்கு மது. குடும்ப கஷ்டத்துக்கு நான் உன்னை வேலைக்கு அனுப்பலை…” என்றான் தெளிவாக.
“ஒரு பொண்ணு வேலைக்கு போனா, குடும்ப கஷ்டதுக்கு தான் போகணுமா… விருப்பப்பட்டு போக கூடாதா, நான் படிச்சு இருக்கேன். அதை ஏன் வீண் ஆக்கணும். என் குடும்பத்துக்கு தேவை இருக்கு, அதுக்கான வழி தெரியும் போது, ஏன் விடணும் கரிகாலன். ஒரு பெண் குடும்பத்திற்கு உதவி செய்தால் தான் என்ன?… ஆண் மட்டுமே தூக்கி சுமக்கும் பாரம் அல்ல குடும்பம், பெண்களும் துணை நிக்கலாம். உங்க பாரத்தை நான் சுமக்கிறேன்னு சொல்லவே இல்லையே. அது என்னால செய்யவும் முடியாது. துணை நிக்குறேன்னு தான் சொல்றேன். பெருசா வருமானம் வராது. ஆனா, நம்ம செலவுக்கு அடங்கும்…” என்று தெளிவாக விளக்க, மேற்கொண்டு என்ன பேச என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் கரிகாலன். அவன் சுபாவம் அது தான்.
எல்லாவற்றையும் பிரித்து அடுக்கியவள், இரவு உணவுக்கு தயாரானாள். கணவன் வேலைக்கு செல்ல வேண்டுமே… அவனுக்கு சற்று தயக்கம். அடுத்தவர் கொடுத்த பொருட்களை உண்பதில் சிறு சங்கடம் இருந்தது.
“மது… அடுத்த வீட்டுல வாங்குன சாப்பாடு எதுக்கு?… அது மாதிரி எல்லாம் வேண்டாமே…” பெருத்த தயக்கத்துடன் தான் சொன்னான்.
மது தன் நெற்றி கண்ணை திறந்து விட்டாள்.
“ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு பாடம் சொல்லி கொடுக்குற வாத்தியார். அந்த ஜாதியை தலை மேல் தூக்கி வைக்கிறது என்ன?…” என்று ஆவேசமாக மது கேட்க.
அதிர்ந்து போனவன், “ஐயோ மது!… நான அப்படி, நீயா நினைக்கிற… நான் அந்த அர்த்ததுல சொல்லல மது. தயவு செஞ்சு என்னை நம்பு. பொதுவாகவே எனக்கு யார்டையும் சாப்பாடு வாங்கி சாப்பிட பிடிக்காது மது. அது என் ஏழ்மையை பார்த்து பரிதாப படுற ஒரு ஃபீல். அதான் யார்டையும் எதுவும் வாங்க மாட்டேன். வீட்டுல கூலி வேலை தான், நல்ல சாப்பாடு கிடைக்காது. எங்களுக்கு யாராவது உணவு கொடுத்தா, அது எங்க வறுமைய சொல்லி தான். அப்ப ஒதுங்குனேன். அப்புறம் அதுவே பழகி போச்சு. யார்டையும் எதுவும் வாங்க ஒப்பவில்லை மது…” என்று தன் நிலையை சொன்னான்.
“அவமான படுத்தப்படும் குழந்தைகள் வெட்கத்தோடும், மற்றவர்கள் முன் தண்டிக்கபடும் குழந்தைகள் குற்ற உணர்வோடும் தான் வளருவாங்க. இது சைக்காலஜி தாட் கரிகாலன். ஆனா, அம்பிகா, சுமதி அக்கா எல்லாம் வேற சொன்னாங்களே…” முடிக்காமல் நிறுத்தினாள்.
“அது… எனக்கு யாரோடவும் ஒட்டாது ஒரு பக்கம். முன்ன நான் வேலை பார்த்த ஊர்ல, ஒரு வீட்டுல தான் சாப்பிடுவேன். அதை தொட்டு நிறைய பிரச்சனை. பொண்ணு பிரச்சனை தான். இது ஒரு கிராமம். அப்படி எல்லாம் எளிதா யாரும் எடுக்க மாட்டாங்க. ரெண்டு பேரும் எனக்கு பெரியவங்க தான். நான் சாப்பாட்டுக்கு கஷ்ட படுறேன்னு தான் உதவ வந்தாங்க. ஊருக்குள்ள ஏதாவது கதை கட்டி விட்டா, அவ்வளவு தான். நான் வாத்தியார்… எம் பிள்ளைகளுக்கு எப்படி வாழணும்ன்னு கத்து கொடுக்குறவன். எம் பேரு கெட்டு போக கூடாது.அதே போல, அவங்க பேரும் கெட கூடாது. நான் கல்யாணம் ஆகாமல் இருந்தேன். அடிக்கடி அவங்க மாடிக்கு வந்து போனா… ஊர் பேச்சு தடுக்க முடியாது. தப்பா போய்டும். அத்தோட எனக்கு யார்டையும் சாப்பாடு வாங்க பிடிக்காது. அது ஒரு மாதிரி… எனக்கு சொல்ல தெரியலை. ஆனா அப்படித்தான்…” என்று தெளிவாக தன் நிலையை விளக்கி விட்டான்.
அவனையே பார்த்தவள், “கரிகாலன் , இங்க உணவு ரொம்ப பெரிய விசயம். நாம நேரடியா பாதிக்க படாத வரை, அதோட மதிப்பு தெரியலை. நீங்களும் ஒரு வகை ஒதுக்கத்தை தான் காண்பிக்கிறிங்க. அதை உணரல, அவ்வளவு தான் வித்தியாசம். இங்க யாரும் பெரிய பணக்காரங்க கடையாது , தாராளமா நமக்கு செய்றதுக்கு. எல்லோரும் நடுத்தர மக்கள் தான். நாமளும் பணக்காரங்க கிடையாது. நம்ம கூட பழகுறது பைசா பிரோஜனம் கிடையாது. அக்கம் பக்கம் இருக்கோம், ஒருத்தருக்கொருத்தர் துணை அவ்வளவு தான். சுயநல மில்லாத அன்பு எங்கேயாவது கிடைச்சா, விட்டுட கூடாது பச்சக்குன்னு ஒட்டிக்கணும். வெள்ளந்தியான மனசு கரிகாலன். நாள் முழுக்க என் கூட தான் கடைக்கு அலஞ்சாங்க. நான் தைரியமான ஆள் தான், இருந்தும் அந்த இடம் பழக்கமான ஒருத்தர் கூட இருந்தது தான் நல்லது. எனக்கு எதையும் பார்த்து வாங்க தெரியலை. பேரம் பேசி வாங்கி கொடுத்தாங்க. நமக்கு ரேசன் கார்டு இல்லை. நேத்து நைட் நான் வரும் போது, வீட்டை காமிச்சு குடுத்தாங்க ஒரு தாத்தா. அவங்க பையன் ரேசன் கடையில தான் வேலை பாக்குறாங்க, நமக்கு சீனி, கோதுமை, பருப்பு எல்லாம் கம்மி பண்ணி தாராங்களாம். சுமதி அக்காகிட்ட எக்ஸ்ட்ர சிலிண்டர் இருக்காம், நாம ஒன்னு தான வச்சு இருக்கோம். தேவைக்கு மாத்திக சொன்னாங்க.பால், காய், கீரைக்கு அம்பிகா அக்காகிட்ட சொல்லியாச்சு. காலைல நாலு மணிக்கு தான் பால் வருமாம். அதாவது, தண்ணி கலக்காத பால். நமக்கும் சேர்த்து வாங்கி தாரேன்னு சொன்னாங்க. பின்னாடி, வாலை , தென்னை, காய் போட்டு இருக்காங்களாம் தேவைக்கு எடுத்துக்க சொன்னாங்க… நீங்க நாள் முழுக்க வேலைக்கு போறீங்க, நான் வீட்டிலே இருக்கேன். எனக்கு ஆயிரம் தேவை இருக்கு, ஒவ்வொண்ணுக்கும் நீங்க வர வரை நான் காத்திட்டு இருக்க முடியாது. தனியாவே நான் என்ன செய்வேன்… எங்க வீட்டுல நான் இருக்கும் போது, விதவிதமா சமைச்சும் சாப்பிட சொல்ல ஆள் இல்லை. இவங்க எனக்கு யாரோ?… எம் புருசன் கூட தான் நான் இருக்கேன். எனக்கு என்ன தேவை இருக்க போது… யாரோ நமக்கு என்னன்னு ஒதுங்கி போகாம. சாப்பாடு கொண்டு வந்து பார்த்தாங்க. அவங்களை மாதிரி உறவு கிடைக்கிறது அபூர்வம். நான் ஏன் ஒதுக்கணும். உங்களை மாதிரி மண்டை மேல, கொண்டை வச்சிருக்க ஆள நான் மதிக்கிறது இல்லை. ஏன்னா எனக்கு மண்டை மேல கொண்டை இல்லை…” என்று கடைசி வரியை காட்டமாக சொல்ல,
“மண்டை மேல கொண்டையா… அப்படின்னா தலை கணமா… நான் அப்படி இல்லை…” என்று ஏதோ சொல்ல வர,
“ நீ அப்படி தாண்டா… வெள்ளம், சுனாமி தான் நம்ம பக்கம் அதிகமா வருது. அவங்க கிட்ட போய் கேளு… ஒரு வேலை சாப்பாடு, ஒரு டம்ளர் பால் மதிப்பை. அப்ப கிடைக்கிற சாப்பாட்டுல யார் சமைச்சா, யார் குடுத்தாங்க, எந்த ஊரு, எப்படி வந்ததுன்னு ஆராய்ச்சி இருக்காது. பசி மட்டும் தான் இருக்கும். இன்னைக்கு இத தான் நீங்க சாப்பிடணும். மரியாதையா சாப்பிடுங்க…” என்று கோபமாக சொன்னவள் தோசை ஊத்த தயாரானாள்.
கரிகாலனுக்கு அவள் மனநிலை புரிந்தது. அவளின் காதல் தவம் கை கூடாமல் போனது, சாதியை தூக்கி பிடிக்கும் கூட்டத்தால் தான். அதனால் தான், அதை வன்மையாக எதிர்க்க செய்கிறாள்.
பேசாமல் மது ஊத்தி குடுத்து தோசை, மீன் குழம்பை மறுப்பு சொல்லாமல் சாப்பிட்டான். அவளும் சாப்பிட்டு முடித்ததும், ஒரு குட்டி குளியல் போட்டு வந்தாள். டியூசனுக்கு தயாராகிறாள் என்று புரிந்தது.
வெளியே பாய் விரித்து அமர்ந்தாள்.கரிகாலன் இரவு வேலைக்கு தயாரானான். பிள்ளைகள் ஒவ்வொருவராக வர தொடங்கினர். கரிகாலன் வெளியே வந்தான். தங்களின் தமிழ் வாத்தியாரை பார்த்து, பிள்ளைகள் தயங்கி, பின் புன்னகை புரிந்தார்கள்.
மனைவியை நிமிர்ந்து பார்த்தான் கரிகாலன். அவள் கண்டு கொள்ளவே இல்லை. வைலட் கலர் பட்டியால போட்டு இருந்தாள். அவளையே பார்த்து நின்றான் கரிகாலன். கணவன் தன்னை பார்ப்பதை அறிந்தும், அவள் நிமிர்ந்து பார்க்க வில்லை.
“மது கொஞ்சம் தண்ணி கொண்டு வா…” என்றவனை புரியாமல் பார்த்தவள். உள்ளே எழுந்து சென்றாள்.
கையில் தண்ணியை எடுத்து திரும்ப, பட்டென்று அவளை அணைத்து, உதட்டில் முத்தமிட்டு வெளியே ஓடி விட்டான் கரிகாலன். என்ன நடந்தது என்று புரியவே நிமிடம் கடந்தது. வேகமாக வெளியே வர, அவன் வண்டியில் ஏறி விட்டான். பிள்ளைகளும் வாத்தியார் குதித்து ஓடுவதை வேடிக்கையாக பார்த்தார்கள்.
மேலே இருந்தே இடுப்பில் கை வைத்து முறைக்க, ஒரு வெட்க சிரிப்பை சிந்தி விட்டு பறந்து விட்டான். அதன் பின்னர் தான் பிள்ளைகள் தங்களை கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தாள். ஒரு அசட்டு சிரிப்போடு பாடம் சொல்ல அமர்ந்து விட்டாள்.
பாட வேளை முடிந்த பின், அம்பிகா துணைக்கு அமர்ந்து கொண்டாள். மது சொல்லியும் கேட்க வில்லை. இரவு பத்து மணிக்கு மேல் தான் கரிகாலன் வீடு வந்தான்.
அதிசியமாக கரிகாலன், அம்பிகாவை பார்த்து தலையசைக்க, ஆச்சர்யமாக பார்த்தாள் அவள். திரும்பி மதுவை பார்க்க, அவள் எப்பவும் போல தான் இருந்தாள். கரிகாலன் ஒன்றை புரிந்து கொண்டான், தனிமனிதனாக இருந்த வரை, தேவை என்னவென்று புரியவில்லை. குடும்பம் என்று வந்த பின் பலதும் புரிந்தது. சுற்றத்தார் எவ்வளவு முக்கியம்.
மது எவ்வளவு அழகாக உறவு சொல்லி அழைக்கிறாள். அம்பிகாவின் கணவரை மாமா என்று மது அழைக்க, ஆச்சர்யம் தான் கரிகாலனுக்கு. அவனுக்கு இப்படி எல்லாம் சட்டென்று ஒட்ட வராது. உறவு சொல்லி அழைப்பது எல்லாம் சுட்டு போட்டாலும் வராது. ஒரு பார்வை, சின்ன சிரிப்பு அவ்வளவு தான் கரிகாலன். மது, அவனுக்கு நேர் எதிர். யாரோடையும் நம்பிக்கையுடன் பழகி கொள்வாள். அது தான் இந்த ஊரில் அவளை நிலை நிறுத்துகிறது.
தம்பதிகளின் தனி குடுத்தன வாழ்வு சந்தோசமாக துவங்கியது. மது எப்படி மற்றொரு பரிமாணத்தை கணவனுக்கு காட்டினாளோ… அதே போல் அவனின் மற்றொரு பரிமாணத்தை பார்க்கவும் செய்தாள். அதில் இளவரசன் தான் கரிகாலன். அவனின் செல்ல சீண்டல்கள், குட்டி முத்தம், அணைப்பு என்று எல்லாவற்றையும் ஏற்க தொடங்கினாள்.
கொஞ்சம், கொஞ்சமாக மிக்ஸியில் மாவாட்ட கற்று கொண்டாள். கிரைண்டர், ஃப்ரிட்ஜ், டிவி என்று எதுவும் தனக்காக வாங்கி கொள்ள வில்லை. அவனையும் தடுத்து விட்டாள். கணவனின் கடன் சுமை அவளுக்கு நன்கு தெரிந்தது.
ஒரு லட்சத்துக்கு மூவாயிரம் வட்டி. அப்போ ஏழு லட்சத்துக்கு … அவனின் பாதி சம்பாத்தியம் வட்டிக்கு தான். மீதி வீட்டு லோன்… இதில் தாய், தந்தைக்கு போக மிஞ்சும் தொகை தான் இவர்கள் குடும்பத்திற்கு. மதுவின் டியூசன் பணம் கை கொடுக்கா விட்டால் திண்டாட்டம் தான். மது தினமும் ஐம்பது ரூபாய் மிச்சம் பிடிக்கிறாள். அதுவும், கணவனுக்கு தெரியாமல், அவனுக்காக தான்.
தினமும் மாலை ஆறு மணிக்கு கணவன் உடன் கொஞ்ச தூரம் நடப்பாள். கிராமம் என்பதால் போக்குவரத்து இருக்காது, பேசிய படியே கை கோர்த்து நடந்து போவாள். தற்போது எல்லாம் இரவு உணவை கொடுத்து தான் கணவனை வேலைக்கு அனுப்புவது. அதில் அவனுக்கு பரம திருப்தி. ஏதோ ஒன்று வயிற்றை நிறைத்து தான் விடுவாள்.
இந்த மது அவனுக்கு மிகவும் புதிது. ரொம்ப பிடித்தும் இருந்தது. எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்து போறவன் தான் கரிகாலன். அவன் குடும்ப சூழல் அவ்வாறு, யாரையும் எதிர்க்காமல் ஒதுங்கி கொள்வான். ஆனால், மது அப்படி கிடையாது. நேர்கொண்டு நிமிர்ந்து தான் நிற்பாள். மனஉறுதி அதிகம். அதனால் மட்டுமே தன் நிலை கடந்தும் நிமிர்ந்து நிற்கிறாள். உண்மையில் அந்த நிமிர்வு அவனுக்கு பிடித்தது. அவளை போல் தன்னால் கூட இருக்க முடியாது தான். ஒத்து கொள்வான்.
அந்த கிராமத்தில் என்ன எளிதாக, விலை குறைவாக இருக்கும் என்பதை பார்த்து, வீட்டுக்கு வாங்கி வைப்பாள். வேர்க்கடலை, கொய்யா, வெள்ளரி, தட்டை பயறு, பச்சை பயறு,சுண்டல், கிழங்கு என்று ஏதேனும் ஒன்றை மாலை சிற்றுண்டியாக கொடுத்து விடுவாள்.பர்க்கர் அவளுக்கு மிக பிடித்த உணவு. ஆனால் மறந்து நாள் ஆகி விட்டது.
காய்கறி பற்றி பிரச்சினையே இல்லை. இருவர் மட்டும் தான் என்பதால் செலவு இழுக்காது. அத்தோடு அவள் நட்பு வட்டமும் விடாது. வீட்டின் பின் புறம் என்ன காய் என்றாலும் அதில் ஒன்று மதுக்கு வந்து விடும். புதிதான ஊர், அவர்கள் இருவரை விட சிறியவள் என்பதால், கொஞ்சம் செல்லம் அதிகம் தான்.
வீட்டின் பின் புறம் இருக்கும் கத்தரி செடியில் இருந்து இரண்டு காய், அங்கு தொங்கும் இரண்டு அவரை, சற்று தள்ளி இருக்கும் முருங்கையில் ஒன்று என எடுத்தாலும் அன்று சாம்பார் தயார். முருங்கை பூ அதிகம் இருக்க, ஏன் விட வேண்டும் அன்றைய கூட்டும் ரெடி, கீரையும் தயார் தான். செலவை ரொம்ப கச்சித படுத்தி விடுவாள்.
அம்பிகா, சுமதி என்று இருவர் வீட்டு கொள்ளையிலும் இருக்கும் எல்லாவற்றிலும் இவளுக்கு சுதந்திரம் உண்டு. எதில் எல்லாம் மிச்சம் பிடிக்க முடியுமோ… அதில் எல்லாம் மிச்சம் பிடித்து ஒரு ஐம்பதாயிரம் கடனாவது அடைக்க பாடு படுகிறாள். அவள் வீட்டில் இருந்து அவள் படிப்பு சம்மந்த பட்ட எதையும் எடுத்து வர வில்லை. உண்மையில் அவள் கோபம் ரம்யா மீது அல்ல… அவள் பெற்றோர் மீது தான்.
மழை நின்ற பின் வரும் தூறலும் நிற்க, வெளி வந்து விட்டனர் தம்பதிகள். கரிகாலன் , கயிற்று கட்டிலை தூக்கி வெளியே போட்டான். நடு ராத்திரி என்பதால் அவர்கள் ஒட்டி கொள்ளவும், உரசவும் சுதந்திரம் கிடைத்தது. இப்பொழுதெல்லாம் கரிகாலனை விட மது தான் அதிகம் பாடுகிறாள். குரல்வளம் என்றெல்லாம் கிடையாது. அவள் பாடுவதை கணவன் ரசிக்கிறான், உடன் சேர்ந்து பாடுகிறான். அது மட்டும் தான். கணவனுக்கு பிடிக்கும் என்பது போய், கணவனுக்காக என்று மாறி போனது.
சொக்கி நின்றாள் இந்த சொக்கனின் மீனாள்…
ஆஹா… அஹா… அஹா…. அஹா….
சூடி கொண்டாள் என்னை சொர்க்கத்தில் ஆண்டாள்…
ம்ம் …ம்ம் … ம்ம்.. ம்ம்ம்…
வாரி கொண்டாடும் கண் ஜாடை.., வஞ்சி நீராடும் பொன்னோடை…
கோதை பொன் பேணி பூ மேடை.., மேடைக்கு நான் தான் பொன்னாடை…
நீ தொட்ட பாகங்கள் தேன் மொட்டு கோலங்கள்…
மதுக்கு எப்போதும் அவனின் மார்பில் ஒளிந்து கொண்டு பாடுவது தான் பிடிக்கும். முகம் பார்த்து ஒரு நாளும் பாட வராது. அவனின் கண்களில் தெரியும் ரசனையை தாண்டி வார்த்தை சுத்தமாக வராது. ஆடம்பர வீடும், சுக மெத்தையும் தேவையே இல்லை. அவன் மார்பில் ஒன்றி தூங்கும் உறக்கம் தான் வேண்டும். அவனின் அழுத்தமான கைகளின் அணைப்பு தரும் பாதுகாப்பு வேற எதிலும் இல்லை.
பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தான் கரிகாலன். அவன் தேவையை அவனே பார்த்து கொள்வான் தான். ஆனால், மது வந்த பின் அவள் விட வில்லை. கணவனை கவனித்து கொள்வதில் ஒரு சந்தோசம். அவன் போடும் சட்டை கூட அவள் தான் தேர்வு செய்ய வேண்டும். என்றேனும் அவசரத்தில் அவன் ஒன்றை எடுத்து மாட்டினான். அவ்வளவு தான், அன்று முழுக்க முகத்தை தூக்கி கொண்டு தான் அலைவாள்.
சாப்பிட்ட தட்டை கூட அவனை எடுக்க விட மாட்டாள். அவன் பை, சாப்பாட்டு பையை கூட அவள் தான் எடுத்து வருவாள். ஆரம்பத்தில் அவனுக்கு இது எல்லாம் வித்தியாசமாக, சங்கடத்தை கொடுத்தது. தடுத்தாலும் கேட்காத மனைவியை வைத்து கொண்டு என்ன செய்ய, உன் விருப்பம் என்று விட்டு விட்டான்.
வேக நடையில், முன் உச்சி முடி அசைய கணவன் இறங்குவதை பார்க்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். பின்னாடி அவன் பையோடு மது இறங்க. வாசலில் அம்பிகாவும், சுமதியும் உட்கார்ந்து கீரை ஆய்ந்து கொண்டு இருந்தார்கள்.
கரிகாலன் இறங்கும் போது, “ ஏட்டி சுமதி, நேத்து பாட்டு கச்சேரி போட்டாங்களாம்…” என்று ஆரம்பிக்க.
வந்த சிரிப்பை அடக்கி, “அப்படியா!… எனக்கு தெரியாதே?… எந்த ஊர்ல?…” என்றாள் சுமதி.
கரிகாலன் தம்பதிக்கு புரிந்து போனது. அவன் சங்கடமாக தலையை குனிந்து கொள்ள, இருவரையும் மது செல்லமாக முறைத்தாள்.
“ அடியே… நம்ம ஊர்ல தான்…”
“நம்ம ஊரா?… நான் பாக்கலையே… எந்த தெருவு?…”
“அடி குறுகெட்டவளே… நம்ம தெரு தான்”
“நம்ம தெருவா, எங்கே?…”
“ எம் வீட்டுல தான்…”
“உன் வீட்டுலையா?… யாரு எங்க மாமனா பாடுனது?…”
“இல்லை. கொழுந்தன்…” என்று கரிகாலனை பார்த்து சொல்ல. நிற்பான அவன் வண்டியில் ஏறி விட்டான்.
“வீட்டு கச்சேரி வீதி வந்ததென்ன என் கொழுந்தனே…” என்று ராகமாக அம்பிகா இழுக்க, சிரித்து விட்டாள் மது.மனைவியிடம் கூட சொல்லி கொள்ள வில்லை. மூன்று பெண்கள் சிரிக்க, அவன் என்ன செய்வான். வண்டியை எடுக்கும் நேரத்தை கூட வீணாக்காமல், சற்று தள்ளி உருட்டி கொண்டே சென்று தான் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
வண்டி மறையும் வரை பார்த்து நின்றாள் மது. எப்போதும் அப்படித்தான், கணவன் கண் விட்டு மறையும் வரை இடத்தை விட்டு நகரமாட்டாள். அவனின் வண்டி முக்கு தெருவில் வளையும் போது கை காட்டி செல்வான். பார்வை கூட இருக்காது. ஆனால், அதற்காக காத்து நிற்பாள்.
“ ம்ம்… நாங்களும் ஒத்த பிள்ளை வர வரை, நிலைபடிய புடிச்சு நிலையா நின்னவக தான். என்னைக்கு கையில ஒன்னும், இடுப்புல ஒன்னும் வந்துச்சுசோ, அன்னைக்கே எல்லாம் போச்சு. இப்ப என்னை கட்டுன மனுசன் வாரதும் தெரியலை, போறதும் தெரியலை. நான் கண்டுக்கிறதும் இல்லை…” என்று சுமதி சொல்ல.
“வாத்தியாரை கேலி பேசிக்கே இருங்க. ஒருநாள் திரும்ப பதில் கொடுக்க போறாங்க…” என்று மது முறுக்கி கொள்ள.
“அப்படியாவது கொழுந்தன் வாய் திறக்கட்டும். முத்து உதிர்ந்த நான் எடுத்து வைக்கிறேன்…” என்று அம்பிகா கேலி பேச,
“அட, நீங்க வேற… என் கொழுந்தனுக்கு பல்லு ஒன்னு தான் வெள்ளையா இருக்கு. அதையும் நீங்க கேட்டா, என் தங்கச்சி பாவம் தான…” என்று சுமதி ஆரம்பிக்க.
“அப்புறம், எங்க மாமன் மட்டும் லெமன் கலராக்கும்…” என்று மது பதில் கொடுக்க.
“அடி சக்க!… மதுரகாரியா கொக்கா…” என்று அம்பிகா ஒரு பக்கம் ஏத்தி விட.
“உம் புருசனுக்கு அண்ணன் தான, அப்புறம் வேற என்னத்த எதிர் பார்க்க முடியும். நம்ம புருசன யாரும் கிண்டல் பண்ண கூடாது…” சொன்னது சுமதி.
“ஏன்?…” இது மது.
“அப்புறம் , நாம எதுக்கு இருக்கோம்?…” இது அம்பிகா.
“அதான, துணி துவைச்சு, சமையல் பண்ணி, பிள்ளைகளை பார்த்து, வீட்டு வேலை எல்லாம் நாம தான். யாருக்காக?… புருசனுக்காக தான். அப்ப நாம பேசாம யார் பேசுவா…” என்று மது சொல்ல.
சுமதி மெல்ல, “முதுகு வேற தேய்ச்சு விடணும்…” என்று சொல்ல.
மதுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, “இது எப்போ?…”
“கொஞ்ச நாளாக தான். இளந்தாரி மாதிரி துள்ளி திரியிறான் உன் மாமன்…” என்று சுமதி சொல்ல.
“அப்போ பாட்டு கச்சேரி எங்க வீட்டுல மட்டும் இல்ல போல… சுமதி அக்கா வீட்டில பாத்ரூம் கச்சேரியா…” என்று மது கேலி பேச.
“போதும் பேச்சு…” என்று பெரியவராக மேல செல்ல விடாமல் தட்டிய அம்பிகா.
“மது, நேத்து வாழ பூ வாங்குன தான. பிரிச்சு வச்சுட்டியா…” என்க.
“ இல்லகா, எனக்கு சரியா பார்த்து எடுக்க தெரியலை…”
“அப்ப போய் எடுத்து வா… அந்த வேலையை முடிப்போம்…”
வாழ பூ எடுத்து வந்த மது, “அக்கா இந்தாங்க சீட்டு காசு…” என்று கொடுக்க.
“ஏட்டி மது… வாத்தியாருக்கு தெரியாம சீட்டு போடுற, பார்த்துக்க. நாளைக்கு ஒரு சொல்லு வந்துரும். கூடவே சுத்துற இவங்க கூட ஒரு சொல்லு சொல்லன்னு வாத்தியார் சொன்னா, பழக்கம் கெட்டு போகும். ஒத்த வார்த்தை கட்டுனவனுக்கு சொன்னா தான் என்னவாம். நாம என்ன தப்பா பண்ணுறோம்…” என்று அம்பிகா எடுத்து சொல்ல.
“வேண்டாங்கா… அவருக்கு தெரிஞ்சா, வீட்டு செலவுக்கு கொடுத்த காச ஏன் சீட்டு கட்டுறேன்னு சத்தம் போடுவாங்க. இன்னும் ஒரு பத்து மாசம் தான, இழுத்து புடிச்சு கட்டிடா, ரெண்டு லட்சம் கடனாவது கழியும். வேற எப்படியும் கழிக்க முடியாது…” என்று மது சொல்ல.
அவள் நிலை இருவருக்கும் புரிந்தது. இவர்களும் இந்த மாதிரி கஷ்டத்தை கடந்து வந்தவர்கள் தானே…
அன்றைய இரவு வேலை அதிகம் என்பதால் தாமதமாக தான் கரிகாலன் வந்தான். வந்த உடன் குளிக்க போகிறேன் என்று போனுடன் சென்று விட்டான்.
மது, கணவனை ஒரு மாதிரி பார்த்தாள். போன் எடுத்து கொண்டு குளிக்க யார் போவார்கள். அவன் பின்னோடு சென்று பார்க்க, யார் உடனோ தீவிரமாக பேசி கொண்டு இருந்தான். மிக அருகே செல்ல, தெரிந்து விட்டது. அது அவள் தந்தை சுந்தரம்.
ஆக, கணவன் திருந்த வில்லை. திருந்தவும் மாட்டான். படிப்பு கொடுத்தவரிடம் தன் மானத்தை மொத்தமாக அடகு வைத்து விட்டான்.
வேகமாக சென்றவள், அவன் கையில் இருந்த போனை பிடிங்கி, தன் காதில் வைத்து கத்த தொடங்கினாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.