சதுரங்க ஆட்டத்தில் ராஜா தான் முக்கிய புள்ளி. அவரை வைத்து தான் ஆட்டம் தொடங்கும். ஆனால், அந்த ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பது ராணி தான். எட்டு திசையிலும் தொட்டு பறந்து ஆடும் ஆட்டம் ராணிக்கு உரியது.
பேச்சின் திசை மாறி விட்டதை மற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த ஒரு விசயம் அவர்கள் யோசனையில் கூட இல்லை. அதை உண்மையாக்குவது போல, சகுந்தலா…
“அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் சித்தப்பா. அவங்களையும் வீடு கட்ட சொல்லுங்க. முன் யோசனை இல்லாம ஆடம்பர கல்யாணம் பண்ணி அனுபவிக்கிறாங்க. செலவை குறைச்சு கூட வீட்டை கட்டனும். அதை விட்டு காச வாரி இறச்சுட்டு , எங்களை சொன்ன, நாங்க என்ன பண்ண முடியும். விரலுக்கு தக்க வீக்கம் இருக்கணும்…” பொழிந்து தள்ளினாள் சகுந்தலா.
“சகு, நீ மொத அமைதியா இரு…” என்றார் கருப்பாயி.
“ நான் ஏன் அமைதியா போகணும். அஞ்சு வயசுல தான் அண்ணன், தம்பி. பத்து வயசுல பங்காளி… அவங்களை வச்சு தான் நாங்க நிக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை” என்று தன் வார்த்தையில் சகுந்தலா நின்றாள்.
மது அமைதியாக தான் இருந்தாள். வாய் விடவில்லை. எல்லாவற்றையும் மெதுவாக அவதானித்தாள். சகுவோடு அவளுக்கு எந்த முன் விரோதமும் இல்லை. உண்மையில் பேச்சு வார்த்தை கூட கம்பி தான். ஆனால் ஏனோ சகுக்கு, மதுவை ஆரம்பம் தொட்டு பிடிக்க வில்லை. எல்லாம் அந்த பத்து பவுன் தாலி கொடியில் ஆரம்பித்தது தான்.
சின்ன மாயன் தற்போது தொடர்ந்தார், “ அஞ்சு வயசுல அண்ணன், தம்பி. பத்து வயசுல பங்காளின்னு நீ சொன்ன வார்த்தை நூத்துல ஒன்னு. அதே மாதிரி பங்காளி காச வைக்கலாமா?… ரொம்ப அசிங்கம் இல்லையா… நல்ல படியா திருப்பி குடுங்க. அதுக்கு முன்ன நீ சொன்ன பாரு விரலுக்கு தக்க வீக்கம். அதை உன் புருசன பார்த்து சொல்லு, அது தான் சரி. என்ன தான் அண்ணன், தம்பியா இருந்தாலும் வாயும், வயிறும் வேற தான். இவனுக்கு பசி எடுத்த, அவன் திங்க முடியுமா… அவன் கஷ்டத்தை அவன் தான் அனுபவிக்கனும். அதை கூட பிறந்தவன் தலையில ஏத்தி வைக்க கூடாது…” ஒரு கடுமையான விமர்சனம் தான்.
அப்போது தான் சாப்பிட்டு அமர்ந்த சொந்தமும், ஊர் மக்களும் பேச்சை கவனிக்க தொடங்கியது. மது, கணவன் பக்கம் பார்வையை திருப்ப கூட இல்லை. அங்கிருந்தோர் எல்லோரும் இவர்களையே பார்க்க, சங்கடமாக இருந்தது சகுந்தலாவிற்கு.
கருப்பாயி தான், “ தம்பி , இப்ப எதுக்கு இந்த பேச்சு. அண்ணன், தம்பின்னா ஆயிரம் இருக்கும். பொதுவுல ஒரு பேச்சு எதுக்கு. சின்னவன் ஒன்னு செஞ்சா, பெரியவன் ஒன்னு செய்வான். அப்ப இந்த குடும்பத்தை தாங்குனது பெரியவன் தானா…” என்று மேலோட்டமாக பூசி மொழுக பார்த்தார்.
சின்ன மாயனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தது. ஆனால், அதை வெளியில் காட்டாமல், “ சரிக்கா… இத அப்புறம் பார்ப்போம். நீ சொல்லு, உம் மருமக மாசமா இருக்க, உம் பெரிய மகன் தனியா கெடா வெட்டுறான். இன்னைக்கு நீ சொன்ன சொல்லு மாற கூடாது. நாளைக்கு எதுவும் ஒன்னுன்னா சின்ன பாண்டி கூட்டு கிடையாது. அவன் குடும்பம் தனி தான். அவனை எதுலையும் நீங்க யாரும் இழுக்க கூடாது. சரியா… நீ சொல்லுக்கா ஒரு வார்த்தை. இன்னைக்கு நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்களோ, அதே மாதிரி நாளைக்கு அவன் நிக்கட்டும். ஒத்த வீடு பெரிய விசயம் கிடையாது. ஆனா, உறவு அது பெரிய விசயம். அதை முறிக்க சுழி போட்டது நீ தான்கா… அப்ப அதுக்கான விளைவை நீ பார்த்து தான் ஆகணும். கேட்டுக்க சின்ன பாண்டி, நாளைக்கு உம் பொறுப்புல எது வந்தாலும் அது உன்னை சாராது…” என்று அவரை முடிக்க கூட விடாமல்,
“அது எப்படி மாய சரியாகும். சின்ன பாண்டி நான் பெத்த மகன். எம் மகன் என்னை தள்ளி நிப்பானா… என்னாலே எப்படி ஒதுக்க முடியும். கருப்பாயி பெத்தவன் தான் சின்ன பாண்டி…” என்று அழுத்தமாக சொல்ல,
“அப்புறம் நடக்குறது பார்த்தா அப்படி தெரியலையே. நீங்க எல்லாரும் சேர்ந்து அவனை ஒதுக்கி வைக்கிற மாதிரி தான் இருக்கு. அப்படி ஒதுக்கி வச்சா, அவன் ஒண்ணுமில்லாம போக மாட்டான். காலத்துக்கும் கை கொடுக்க வேலை இருக்கு, பொண்டாட்டி, பிள்ளைன்னு அவன் குடும்பஸ்தன் தான். நீ தான்கா பிள்ளையை விட்டு நிப்ப. உன் கூட பொறந்தவன் நான், இன்னைக்கும் உன் கூட தான் இருக்கேன். அப்ப பெத்த பிள்ளைய யோசி, யாருக்காகவும் நான் பேசலை. உண்மையில உனக்காக தான் பேசுறேன். நீ தள்ளி நில்லுக்கா, நான் பேசணும்…” அழுத்தமான குரலில் சொன்னவர். பெரிய பான்டியை பார்த்து,
“என்னடா காரியகார , அமைதியா நிக்குறவன். இம்புட்டுக்கும் நீ தான் காரணம். அப்ப நீ தான் மொத பேசணும். உன் தம்பி கிட்ட காசு வாங்கினையா?… இல்லையா?…” என்று குரல் உயர்த்தி கேட்க.
சுற்றும், முற்றும் பார்த்தான் பெரிய பாண்டி. அவ்வளவு சங்கடம். இந்த கெடா வெட்டு புது வீடு கட்டியதால் தான். இவரின் கேள்வி எல்லாம், அவன் பேசிய வீட்டு பெருமையை குறைக்கும் போல இருந்தது.
ஆனால், அவரின் விடா பிடியில் ஒத்து கொண்டான். பெரிய சங்கடம், தலைகுனிவு தான். மெளனமாக நின்று விட்டான்.
எப்பவும் போல மகனின் ஓய்ந்து தோற்றம் கண்டு பதறி போனார் கருப்பாயி. அவன் அருகே சென்று தோல் தொட்டு சமாதான படுத்தியவர்.
“மாய விடுடா… ஏதோ தப்பு செஞ்சா மாதிரி நிக்க வச்சு கேக்குறான் கேள்வி. பிள்ளை மருகி நிக்குறான் பாரு… ஒரு காலத்துல இவன் தான் இந்த குடும்பத்தை தாங்குனான். சின்னவன் படிக்க போனான். அன்னைக்கு பெரியவனால தான்…” என்று சொல்லி கொண்டே வந்தவரை கண்டு, “அக்கா” என்று பெரிய அதட்டல் போட்டார் சின்ன மாயன்.
அதிர்ந்து போய் எல்லோரும் அவரை பார்க்க, எழுந்து நின்று விட்டார்.
“எதுக்கு இப்ப சரி கட்ட பாக்குற… உன் நினைப்பு என்ன?… ஏலே! சின்ன பாண்டி… நீ உம் பொண்டாட்டிய கூட்டி ஊருக்கு போ, நீ கொடுத்த காசு கோவில் உண்டியல்ல போட்டா மாதிரி, அன்னதானம் விட்ட மாதிரி நினைச்சுக்கோ, அத்தோட ஈஸ்வர பாண்டியனுக்கு சாட்சி வச்சுட்டு போங்க. நியாயம் என்னன்னு சாமி கேட்கட்டும்…” என்று கடுப்பாக தான் சொன்னார். வேற என்ன செய்ய, சொந்த வீட்டிலே வாங்குன காசை ஒத்து கொள்ளாமல், சரிகட்ட பார்ப்பவர்கள் மேல் கோபம் வந்தது.
கருப்பாயி, சகுந்தலா முதற்கொண்டு பதறி விட்டார்கள். “ ஏலே மாயா… என்னாலே பேசுற. உம் பேச்சு மனசுல ஒப்பலை. சாமி கிட்ட கேக்க சொல்ற… ஆமா, பெரியவன் காசு வாங்குனான். நான் தான் சாட்சி. சின்னவன் வீடு கட்ட வச்சுருந்த லோன் காச தான் பெரியவன் கேட்டான். இது எம் புருசன், பிள்ளை, மக, மருமகள் எல்லோருக்கும் தெரியும். யாருக்கும் ஒளிச்சு நாங்க செய்யலை. அவன் நல்லா இருந்தா திரும்ப குடுத்திருப்பான், அவனே இப்ப மூணு பிள்ளைகளை வச்சு கஷ்ட படுறான். என்னைக்கா இருந்தாலும் திருப்பி குடுப்பான். உன் கூட பொறந்த ஒத்த அண்ணனை சபையில் வச்சு அசிங்க படுத்தலாமா சின்ன பாண்டி. உனக்கு எம்புட்டு செஞ்சான்… உன்னை படிக்க அனுப்பி, அவன் வேலைக்கு போனான். எல்லாத்தையும் மறந்துட்டு…” என்ன சொல்லி இருப்பாரோ…
“போதும் நிறுத்து. ஒரு வார்த்தை பேசாத நீ… உன் வாய் தாட்டியம் உன் சமத்து… நீ சொன்ன உடனே, ஆமா அப்படித்தான்னு நாங்க போகணுமாக்கும். எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சயா… அவனுக்கு படிப்பு வரலை, நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். படிப்பு வரல, வேலைக்கு தான் போவேன்னு போனான். சின்ன பாண்டி படிச்சான் தான். ஆனா, பணம் கட்டியா படிக்க வச்சீங்க. உம் பெரிய மகன் என்ன செஞ்சான். யார படிக்க வச்சான். அவன் தான் குடும்பத்தை காப்பாத்துனான்னு ஒரு வார்த்தை சொல்லியே, வசந்தி கல்யாணம் முழுக்க சின்ன பாண்டி தான் பார்த்தான். ஒத்த ரூபாய் உன் பெரிய மகன் குடுத்தானா… அப்புறம் குடும்ப பாரம் முழுக்க அவன் தலையில தன் விழுந்துச்சு. இன்ன வரைக்கும் கட்டி காக்குறான். மாசமாசம் இவன் கிட்ட காசு வாங்குற மாதிரி, பெரிய மகன் கிட்ட வாங்க வேண்டிய தானா… அவன் கஷ்டபடுறான், இவன் கவர்ட்மென்ட் வேலை. இதை சொல்லியே, எத்தனை நாளைக்கு சரி கட்டுவ… நம்ம கூட பிறந்தவன்னு நினைப்பு உம் பெரிய மகனுக்கும் இருக்கணும் தான… இவன் மட்டுமே இழுத்து போக வேண்டிய அவசியம் என்ன இருக்கு…” என்று சொன்னவர். சகுந்தலாவை பார்த்தார்,
“நீ தான் சொல்லணும் சகு. உனக்கும் தெரிஞ்சது தான… உன் வீடு, உம் பிள்ளைக, உம் பொழப்பு எல்லாம் சரிதான். வாங்குன காச குடுத்தா, உன்னை ஏன் கேக்க போறாங்க. நீயும், உம் புருசனும் தான் பொறுப்பு. எப்ப காச தர போறீங்க. ஒரு தேதி சொல்லுங்க. அக்கா சொல்ற மாதிரி நீங்க கஷ்டபடுறீங்க, இப்ப இல்லாட்டியும் எப்ப தருவீங்க. ஊர் பெரிய மனுசங்க, நம்ம சொந்தமும் நிக்குது. ஒரு பதில சொல்லுங்க…” கிடுக்கு பிடி போட்டு விட்டார்.
தன் பிறந்த வீட்டு சொந்தம் முன் கண்களில் நீர் பெருக அவமானத்தில் நின்று இருந்தாள் சகுந்தலா. அவளுக்கு இதெல்லாம் மறந்து நாளாகி போச்சு, இப்படி ஒன்று வரும் என கனவில் கூட நினைக்க வில்லை. பெரிய பாண்டிக்கு என்ன செய்வது என்று யோசனை இல்லை. தம்பி கையில் இருந்து வாங்கும் போது தெரியாத பண கணக்கு, தன் கையில் இருந்து தம்பிக்கு போகும் போது தெரிந்தது. அவ்வளவு பெரிய தொகை, தூக்கி குடுக்க மனம் வரவில்லை. அவன் சமாளித்து விடுவான் என்று தான் நினைத்தார்கள். இப்படி சபையில் வைத்து ஒரு சொல் வரும் என்று எண்ணவில்லை.
பார்த்திருந்த மற்றவர்களும் தங்களுக்குள் பேச துவங்க, ஒரு மாதிரியான சூழல் உருவாகியது. ஊர் முழுக்க மருமகள் தான் சரியில்லை என்று சொல்லி வைத்திருக்கிறார். இன்று இப்படி ஒரு வாதம் தங்களை எவ்வாறு காட்டும். மருகி நின்றார் கருப்பாயி. சின்ன மாயன் விடவில்லை.
“ வீடு கட்ட வச்சிருந்த காச தான் உன் பெரிய மகன் வாங்கி போயிருக்கான். அவன் காச வாங்கி வீட்டை கட்டிட்டு, கடைசில அவனுக்கு ஒரு நாள் தங்க இடமில்லைன்னு சொல்லிட்டீங்க. நீ தாண்ட உண்மையான உடன் பிறப்பு. இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சு தான் நடக்குதாக்கா… சின்ன பாண்டி வீடு கட்டாதனால தான, அவன் மாமனார் வீடு சீர் குடுக்கல. அதை வச்சு நீங்க எவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணிங்க. நீங்க எல்லாம் நல்லா தான் இருந்தீங்க. சுயநலமா வாழ தெரியாம, சம்சாரத்தை பிரிஞ்சி நின்னது சின்ன பாண்டி தான… அவனை பத்தி கூட கொஞ்சமும் யோசிக்கலை. சீர் கொண்டு வராத அவன் பொண்டாட்டிய ஒதுக்கி வைக்க சொன்னீங்க தான. அப்படி பார்த்தா வாங்குன காசை குடுக்காத உம் பெரிய மகனையும் ஒதுக்கி தான் வைக்கணும்… ஒரு பதில் சொல்லாம நீங்க யாரும் நகர முடியாது…”
வேற வழியில்லாமல் சின்ன பாண்டியிடம் தான் பேச சென்றார் கருப்பாயி. சின்ன மாயனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. இன்னும் இவனையே முட்டாள் ஆக்குகிறார்களே…
“அக்கா… சொன்னது சின்ன பாண்டி இல்லை. அவன் சம்சாரம் தான். வீட்டுக்கு பெரியவங்க நீங்க நியாயத்தை கேளுங்க, குடுத்த காசை தராம இழுத்து அடிக்கிறங்கன்னு சொல்லி அந்த பிள்ளை தான் நியாயம் கேட்டுச்சு…” என்று காட்டமாக சொல்ல
அதிர்ந்து போனார் கருப்பாயி. மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். கருப்பாயிக்கு நெஞ்சு கொதித்தது, எவ்வளவு சாமர்த்தியமாக தங்களை சாய்த்து விட்டாள். ஊமை மாதிரி இருந்து, மொத்தமாக கவுத்து விட்டாள். இவள் யார் எங்களை கேள்வி கேட்க. இவள் அப்பன் வீட்டு பணமா…
“இவ யாரு நம்ம குடும்ப விசயத்தில் தலையிட. நேத்து வந்தவளுக்கு அம்புட்டு உரிமை இருந்தா… எம் மகன் கூட பொறந்தவன், அவனுக்கு இல்லாத உரிமையா… அண்ணன் , தம்பின்னா குடுக்க, வாங்க ஆயிரம் இருக்கும். இவளுக்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கு அவனுக்கு ஒண்ணுன்னா இவன் தான் மொத போய் நிப்பான். அதெல்லாம் இரத்த சொந்தம் , இவ யாரு?…” பழைய கருப்பாயி திரும்பி இருந்தார். அவருக்கு, மருமகள் ஒரு பொருட்டே அல்ல… மதுமிதாவை தெரிய வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இனி யோசிக்க என்ன இருக்கு. கணவனிடம் விட்டால் எல்லாம் போய் விடும், பயன் இல்லை. நேரடியாக புகுந்து விட வேண்டிய தான், களத்தில் இறங்கி விட்டாள் மதுமிதா…
“சரிங்க சித்தப்பா… நான் நேத்து வந்தவ தான். இவங்க எல்லாம் ஒரே குடும்பம். அப்புறம் ஏன் எல்லாம் பிரிக்கணும். சொத்து, கடன் எல்லாத்தையும் பொதுவில் வைங்க… ஒரே வீடு, இரத்த சொந்தம், ஒண்ணுக்குள்ள ஒண்ணு… அப்புறம் என்ன?… சின்ன பாண்டிக்கு , நான் கழிச்ச கடன் ஏழு லட்சம். அதையும் எனக்கு தந்திர சொல்லுங்க…” என்று மது முடித்து விட…
பதறி போனாள் சகுந்தலா, “ஏதே!… வெறும் நாலு சுவரு வச்ச உன் வீடும், காச இறச்சு கட்டுன என் வீடும் எப்படி ஒன்னாகும். வெறும் ஏழு லட்சத்துக்கு முழு சொத்த கேக்குற… நல்லா இருக்கே உன் நியாயம். உன் புருசன் கடன் , நீ தான் அடைக்கணும்…” என்றாள் எகத்தாளமாக.
“ நல்லா இருக்கே உங்க நியாயம். எம் புருசன் காசு மேல எனக்கு உரிமை இல்லை, அவர் கடன் மேல மட்டும் உரிமை இருக்கா… சுத்தி இருக்குற அத்தனை பேரும் பார்த்து தான் நிக்குறாங்க, அவங்க ஒரு நியாயம் சொல்லட்டும். ஒன்னு எங்க காச குடுங்க இல்லையா எல்லாத்தையும் பொதுவுல வைங்க… வேற எதுக்கும் நான் ஒத்து வர மாட்டேன்…” என்றாள் ஒரே முடிவாக மது.
“அதை சொல்ல நீ யார். உம்ம சொல்லு எடுபடாது. பத்து மாசத்துக்கு முந்தி ஊரா விட்டு ஓடி போனதை மறந்திட்டையா… அதே கருப்பாயி தான் இருக்கேன். என்கிட்ட வச்சுக்காத ஆமா… எங்க குடும்ப பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம். உன் சோழி கழுத்தைய மட்டும் பாரு… திருட்டு தனமா குடும்பம் நடத்திட்டு உரிமை பேசி வாரயா…” கடுமையாக விமர்சித்தால் அவள் வாயடைத்து போவாள் என்று ஒரு எண்ணம்.
கோபமாக கரிகாலன் ஏதோ சொல்ல வர, அதை தடுத்தால் மது. அவருக்கு, மது தான் பதில் சொல்ல நினைத்தாள். அத்தோடு, கணவன் கோபமாக ஏதேனும் பேசினால். அதை வைத்தே அழுது, சாக போகிறேன் என்று பிரச்சனையை திசை மாற்றி தப்பை தங்கள் பக்கம் திருப்பி விடுவார்.
“ சித்தப்பா, ஊர் பஞ்சாயத்தை கூட்டுங்க. நியாயத்தை அவங்க சொல்லட்டும். வேற எதுவும் இவங்க கிட்ட பேச முடியாது. கடைசி வரை இப்படி ஏதாவது சொல்லியே எல்லாரையும் ஓச்சு விட்டுடுவாங்க. இவங்களுக்கு ஊர் பஞ்சாயத்து தான் சரி…” என்று சொன்னவள்.
மாமியார் புறம் திரும்பி, “நான் யாருன்னு ஊர் சொல்லட்டும். நீங்க சொல்ல வேண்டாம்… உங்களுக்கு சாதகமான நாலு பேர்கிட்ட நியாயம் கேட்காதீங்க. ஊர் சொல்லட்டும், நான் யார்ன்னு… புருசன் சம்பாத்தியம் பொண்டாட்டி கேட்க கூடாது, புருசன் கிட்ட பொண்டாட்டிக்கு உரிமை இல்லன்னு ஊர் சொல்லுமா?… என் புருசன் கடன எனக்கு பங்கு பிரிச்சு விட்டீங்க தான, அப்ப சொத்துல நான் பங்கு கேட்க தான் செய்வேன். யார் என்னை தடுக்க முடியும்…” என்று மது அவேசமாக பேச, வாயடைத்து போனார் கருப்பாயி. மது விடவில்லை, இனி ஒரு முறை தன்னை பற்றி பொது வெளியில் பேச வாய் வர கூடாது அல்லவா!…
“அப்புறம் என்ன சொன்னீங்க, திருட்டு தனமா குடும்பம் நடத்துனன, என் புருசன் கூட நான் வாழ்றது எப்படி திருட்டு தனம் ஆகும். நான் கரிகாலன் பொண்டாட்டின்னு இங்க யாருக்கும் தெரியாத?… ரெண்டு பஸ் புடிச்சு வந்து எனக்கு நிச்சயம் பண்ணது நீங்க தான?… நீங்க பெருமை பேசுற உங்க பிறந்த வீட்டு சொந்தம், புகுந்த வீட்டு சொந்தம் எல்லாரையும் கூட்டி வந்து, கரிகாலன் பொண்டாட்டி நான் தான்னு சொல்லி தான, உங்க பொண்ணு என் கழுத்துல தாலி கொடி போட்டாங்க… இந்த ஊர் பார்க்க, இந்த குலதெய்வ கோவில்ல வச்சு தான எங்க கல்யாணம் நடந்தது… இந்த ஊர் பார்க்க மூணு மாசம் இவர் கூட தான் குடும்பம் பண்ணினேன். அப்புறம் எப்படி எங்க வாழ்க்கை திருட்டுத்தனமாகும்…” என்று பொட்டில் அடித்தது போல் மது கேட்க.
வார்த்தை வர வில்லை கருப்பாயிக்கு. அன்று அவ்வளவு பேசிய போதும் , ஒரு வார்த்தை எதுத்து பேசாமல் அழுது கொண்டே அப்பா பின் சென்ற மதுமிதாவை தான் அவருக்கு தெரியும். இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவர் யோசனை கூடசெய்ய வில்லை.
“என் புருசன் கஷ்டப்படும் போது, நான் ஏன் உங்களை எல்லாம் யோசிக்கணும். நீங்க யாரும் எங்களை யோசிக்கவே இல்லையே… உங்க பெரிய மகன், வீட்டுக்கு மூத்தவர் தான, கூட்டு குடும்பத்தை இழுத்து போகணும் தான… என் புருசனுக்கு கூட பிறந்தவரா எங்கேயாவது துணை நின்னாரா?… காச விடுங்க, அது ரெண்டாவது… உறவு அது தான முக்கியம். அவர் சொந்த தம்பி பொண்டாட்டி தான நான், இதுவரை எங்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? அன்னைக்கு அவ்வளவு சண்டை வந்துச்சு, என் புருசன் என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டார்… சரிதான், வீட்டுக்கு மூத்த மகன இவர் வந்து பேசி இருக்கலாம், உங்களை, இவரை சத்தம் போட்டு சண்டையை குறைச்சு விடலாம் தானா, இவர் என்ன செஞ்சார், எனக்கு என்னன்னு ஒதுங்கிட்டார்… அதுக்கு அப்புறமாது தம்பியா வச்சு பேசலாம்தான, அத்து விடுற அளவுக்கு பேச்சு வந்துச்சு. எதுக்குமே தலையிடல, அவங்க, அவங்க குடும்பம்ன்னு ஒதுங்கிட்டாங்க. அவருக்காக ஏழு லட்சம் கடன் சுமந்த தம்பிக்கு, ஒரு நாள் அவர் வீட்டுல தங்க இடம் தரல… அவ்வளவு நல்ல மனசு. இதையெல்லாம் கூட விடுங்க, நேத்து ராத்திரி முழுக்க என் புருசன் இங்க தான் வேலை பாக்குறார். நான் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு, மாசம இருக்கேன் இன்னும் எங்களை ஒரு வார்த்தை யாரும் சாப்பிட சொல்லலை. அவங்க பொண்டாட்டியோட சித்தப்பா பசங்க வரை கூட்டி போய் சாப்பிட வைக்கிறாங்க. ஆனா, சொந்த தம்பிய ஒரு ஆள கூட மதிக்கலை. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கணக்கு பாக்குற இவங்களுக்காக நாங்க ஏன் ஏழு லட்சம் கடன எங்க தலையில சுமக்கும். இந்த மாதிரி சுய நலமான சொந்தத்தை இழுத்து பிடிச்சு எங்களுக்கு என்ன ஆகப்போகுது. இங்க யாருக்கும் கஷ்டத்தில உதவி செய்ற உறவு கிடைக்கிறதில்லை. அப்படி ஒரு உறவை உங்களுக்கு மதிக்க தெரியலை. உங்களுக்கு ஒன்னுன்னா காசு கொடுத்து உதவி செய்யிற தம்பி நல்லவன். அதே அவங்க கஷ்டத்துக்கு கொடுத்த காச கேட்டா, அவன் கெட்டவன். உங்களுக்கு உதவி செய்யிறது பெருசு இல்லை. அத அவங்க கடமையா நினைக்கிறீங்க, அதே கடமை உங்களுக்கும் இருக்கு தானா… எந்த விகல்பமும் இல்லாம தான் இந்த வீட்டுக்கு வந்தேன். எனக்கு சூது சொல்லி குடுத்ததே உங்க குடும்பம் தான். அடுத்தவங்க காசை வாங்கி கழுத்துல நகை செய்யிற ஆசை எனக்கு இல்லை. எம் புருசனுக்காக தான் தாலி கொடியை கலாட்டாம கழுத்துல இறுக்கி பிடிச்சேன், இன்னைக்கும் எம் புதுசனுக்காக மட்டும் தான் தாலி கொடியை கலட்டியும் வச்சேன். மதிப்பு எம் புருசனுக்கு மட்டும் தான். கழுத்துல கிடக்கிற நகைய நான் பெருசா நினைக்கிறது இல்லை… இனி நீங்க ஊர் முழுக்க என்னை என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நாங்க தான் உங்க குடும்பமே கிடையாதே…” சென்று விட்டாள் மது. முகம் கறுக்க நின்று விட்டாள் சகுந்தலா…
தன்னை தாண்டி போகும் மருமகளையே பார்த்தார் கருப்பாயி. பசப்பி, ஆள் மயக்கி… ரொம்ப தந்திரமா தன் இடத்தை பிடிச்சுட்டு, யாரும் மறுப்பு சொல்லா முடியாம தன்னை நிலை நிறுத்திக் கொண்டாளே!…
மெதுவாக மகனை நோக்கி நகர்ந்தார்.
“ ஏலே சின்ன பாண்டி…” என்றா கருப்பாயி கண்களில் நீர் நிறைந்தது.
அவன் நிமிர்ந்து தாயை பார்த்தான் , “ நம்ம குடும்பம் தானே, அவங்களுக்காக கஷ்டப்பட்டா பரவாயில்லைன்னு தான் நினைச்சேன்… இன்னைக்கு என் குடும்பம் எம் பொண்டாட்டியும், பிள்ளையும் தான்…” என்று சொன்னவன், நில்லாமல் மனைவியின் பின் சென்று விட்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.