கொஞ்சம் பயமும், தயக்கமும் தோன்ற தான் அறைக்கு சென்றான் கரிகால பாண்டியன். திருமணம் முடிந்த ஒரு நாளிலே, தான் உடன் இருந்தும், பல சங்கடங்களை கடந்து விட்டாள் என்ற கவலை பாண்டியனை அறித்தது. உள் நுழைந்து பார்க்க அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. கண் இமை வீங்கி இருக்க, அழுத தடம் தெரிந்தது.
அவள் அருகே சென்றவன், அவளை உரசாமல் நெருங்கி அமர்ந்து கொண்டான். தான் கொண்டு வந்திருந்த பையிலே தலை சாய்த்து, உடல் குறுக்கி உறங்கி கொண்டிருந்தாள். தனக்கு யாருமில்லை என்பது போல் ஒரு பாவமான தோற்றம். மனதை பிசைந்தது கரிகாலனுக்கு, முடிந்த அளவு மனைவியை ஒட்டி தான் நடந்தான், இருந்தும் அவள் காயப்படும் நிலை. யாரை சொல்ல…. தாயை கண்டிக்க முடியாது. ஏதேனும் சொன்னாலும் புது பொண்டாட்டி பவுசு என்று பேச்சு மாறும்…
அவனுக்கும் உணவு இறங்கவில்லை, அவளை ஒட்டியே சுவற்றில் தலை சாய்த்து கண் அசந்தான். ஆழ்ந்த உறக்கம் எல்லாம் இல்லை, அசதியில் வந்த சோர்வு மட்டும் தான். அவன் நினைவு மதுவை சுற்றியே வந்தது. திருமணம் முடிந்து ஒரு நாள் தான் கடந்தது என்று நம்ப கூட முடியவில்லை, வருடம் கடந்தது போல் ஒரு தோற்றம்.
மாலை ஐந்து மணிக்கு மேல் தான் கண் விழித்தாள் மதுமிதா. பின் கட்டிற்கு சென்று முகம் கழுவி துடைத்தவள், தன் சேலையை மாற்றினாள். தன்னில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவாள், நேர்த்தி என்பது மனதின் புத்துணர்வை தூண்டும் என்று நம்புவதால்… நடை, உடை, பாவனை என்று நேர்த்தியாக தான் இருப்பாள்.
கருநீலத்தில் தங்க பார்டர் வைத்த சேலை அணிந்து, குடை சிமிக்கியோடு, கை நிறைய வளையல் அடுக்கி, தன்னை அலங்கரித்தாள். கணவனின் பார்வையில் ஒரு மெச்சுதல் வந்தது. மதிய உணவை, இருவரும் உண்ண வில்லை என்று அறிந்தாலும், யாரும் கேட்டு கொள்ள வில்லை. கூட்டமாக இருக்கும் போது ஆளுக்கு ஒரு பேச்சு வரும், அது விரிசலை அதிக படுத்தும். சில நேரங்களில் எதுவும் நடக்காதது போல் கடந்து போவது தான் நல்லது. அதுவும், உறவுகள் இடையே வரும் உரசல்களை மனதில் நிற்காமல் செய்வது உத்தமம். அதன் பொருட்டு, மாலை முதல் மதுக்கு எந்த வேலையும் கொடுக்க வில்லை. ஆனால், தங்கள் பேச்சில் இணைத்து கொண்டார்கள்.
மதுவின் கண்கள் கணவனை தேட, அவன் தென்படவில்லை. வெளியில் ஏதோ விவாதம் போல் சத்தம் வர, என்னவென்று தெரியாமல் எழுந்து சென்றனர். மதுவுக்கும் புரியவில்லை தான், இருந்தும் உடன் சென்றாள். கரிகாலன் வீடு வரவில்லை என்பது, அவளை கொஞ்சம் கலவரப்படுத்தியது. வீட்டின் வாசலில் நின்று தான் ஒருவர் கத்தி கொண்டிருந்தார். பின் பக்கம் இருந்த ஆண்கள் கூட்டம் கூட வந்து விட்டது.
“என்ன மூர்த்தி… பொழுசாய வீட்டு பக்கம் வந்துருக்க?.. வெளி வாசல்ல நின்னு எதுக்கு சத்தம்?..” என்று புரியாமல் கருப்பாயி கேட்க.
“புது மருமக வந்துருக்கு விருந்து வைங்க தப்பில்லை. ஆன, கறி எடுத்த காச குடுக்கணும்ல… காலையிலே தலை ஆடு, எலும்பு, கறின்னு வகையா வாங்கி போனாங்களே… காசை எண்ணி வைக்க வேணாம். நானும் கல்யாண வீடு, விளக்கு போட்ட பின்னாடி, வாசல்ல போய் நிக்க கூடாதுன்னு காத்திருந்தா … கையில இன்னும் துட்டு வந்து சேரல” என கறிக்கடை மூர்த்தி கேட்க.
வீட்டு பெண்களுக்கு ஒன்றும் புரியாமல் ஆண்களை பார்த்தார்கள். அவர்கள் விவரம் கேட்டனர். காலை விருந்துக்கு கறி எடுத்த கரிகாலன் காசை தரவில்லை. பிறகு தருவதாக சொல்லி வாங்கி சென்றவன் மணி ஆறாகியும் வரவில்லை என்றதும் வீடு வந்துவிட்டார்.
ஒருத்தருக்கொருத்தர் கரிகாலனை விமர்சனம் செய்தார்களே ஒழிய, காசை தர யாரும் முன் வரவில்லை. நொடியில் அவர்கள் வாயில் கரிகாலன் அரைபட, மதுவுக்கு தான் சங்கடமாகி போனது. மூர்த்தியும் காசை தராமல் நகர மாட்டேன் என்று நிக்க, நிலையும் அசௌகரியம் தான்.
கறி எடுத்து காய்ச்சி குடிச்சா மட்டும் பத்தாது, அதுக்கு காசை குடுக்க வேணாம்… என்று பேச்சு அவளை சுட, மெளனமாக உள்ளே சென்றாள். அவள் தந்தை குடுத்த காசு தான். புது இடம் என்பதால் ஒரு பாதுகாப்புக்கு தந்தது, தற்போது உதவியது.
அவள் காசை குடுக்கும் போது யாரும் தடுக்க வில்லை. புது பெண், பழக்கம் இல்லை, ஒரே குடும்பம் என்று கூட யாரும் தடுக்கவில்லை. வெகு இயல்பாக கணவன் சுமை மனைவியின் தோல் இறங்கியது.
இரவு வீடு வந்த கரிகாலனிடம் விசயம் பகிரப்பட, அவனுக்கு கோபம் தங்கள் வீட்டு ஆட்கள் மேல் தான். ஏதேனும் செலவுக்கு என்று தாயிடம், இவன் பணம் குடுத்திருக்க, வாய் திறக்காமல் நின்று விட்டாரே. மாப்பிள்ளை கூட அடுத்த வீடு … தன் தாய், அண்ணன் இருந்தார்கள் தானே. அவர்கள் கொடுத்தால், திரும்பி தராமாலா போவான்.
“ ஏம்மா! ஒரு மூவாயிரம் காசுக்கும் நான் பெறாம போனேனா… பெரியவன் குடுத்தா என்ன… நான் திரும்பி தர மாட்டேன். நேத்து வந்த பிள்ளையை குடுக்க விட்டுருக்க…” ரொம்பவும் சங்கடபட்டான் கரிகாலபாண்டியன்.
“ அதுனால என்னாலே சின்ன பாண்டி! உம் பொண்டாட்டி தானே, அவ கையில நியி காச குடுக்க போய் தானே அவ கடன் கழிச்சா… உங்க கல்யாண விருந்துக்கு பெரியவன் செலவு செய்வானா?….” என்று சாதரணமாக கருப்பாயி முடிக்க.
“அம்மா! நான் கறி காசை, அய்யா கிட்ட குடுத்து விட்டேன். அவர் தான் மூர்த்தி அண்ணன் கடைல குடுக்கல… எப்பவும் போல சாராய கடையை தேடி ஓடியச்சு. அடுத்தாளுக்கு கொடுக்க வேண்டிய காசு, தப்பு செய்ய மாட்டார்ன்னு நெனச்சேன். தப்பு எம் மேல தான், எம் கல்யாணத்துக்கு நான் தான் முன்ன நிண்ணு பாக்கணும் …” என்று சொன்னவன், வேற ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றான்.
மதுவின் அருகில் அமர்ந்து, அவள் கையில் காசை வைத்தான்.
நிமிர்ந்து பார்த்தவள், “வேண்டாம் கரிகாலன்” என்று அவன் கையிலே திணிக்க.
“இது நீ குடுத்த காசு இல்லை மது. உம் செலவுக்கு உம் புருசன் தாரது… நேத்து தான கல்யாணம் ஆச்சு, வெளிய எங்கேயும் போனா தர நினைச்சேன்” என்று பணத்தை கையில் திணித்தவன்.
அங்கிருந்த பையில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து காண்பித்தான், “மது… இதுல கொஞ்சம் பணம் இருக்கு. நான் வீட்டுல இல்லாத போது, எதுவும் செலவு வந்த, நீயே பாரு”… என்று சொல்லிய கணவனுக்கு , சரி என்று தலையசைத்தாள்.
பின் மனதில் உறுத்தியதை கேட்டும் விட்டாள். “ ஏன் கரிகாலன்… கறி எடுத்து எல்லாரும் தான் சாப்பிட்டோம். ஆன, காசை மட்டும் உங்களை தான் தர சொன்னாங்க. நீங்க இருந்திருந்தா வேற… நீங்களும் இல்லை. உங்க அண்ணன், அம்மா அவ்வளவு ஏன் வசந்தி கணவர் வரை வாய் திறக்கவில்லை. வெறும் மூவாயிரம் பணம், யாருமே மூவாயிரத்துக்கு செலவு செய்யவே மாட்டாங்களா … ஒரு நல்ல ஹோட்டல் போனாவே மூவாயிரம் வந்துருமே… இதை பெருசா யோசிக்க என்ன இருக்குங்க?…” என்று சாதாரண கேள்வியாக தான் கேட்டாள். உள் குத்து என்று எதுவும் இல்லை. யாரையும் குறைவாக சொல்வது போலவும் கேட்கவில்லை.
அது கணவனுக்கும் புரிய, “ மது! மூவாயிரன்றது உனக்கு ஒரு ஹோட்டல் போற செலவா இருக்கலாம். ஆன, எங்களுக்கு அப்படி ஈசியா செலவு செய்யிற காசு இல்லை. அத்தோடு, யாருக்கு செலவு செய்றோம்ன்னும் இருக்கு தானா… தன் குடும்பத்துக்கு செய்றது வேற, பொதுவுல செலவு செய்றது வேற…” என்று கணவன் புரிய வைக்க.
“அப்போ அந்த குடும்பத்துல நீங்க இல்லையா கரிகாலன்” என்ற மனைவியின் கேள்விக்கு. அவன் பதில் சொல்ல வில்லை. ஏனெனில், அவனுக்கும் தெரியவில்லை.
தனித்தனி என்று கிடையாது. கூட்டு குடும்பம் தான். தற்போது தான் அண்ணன் வீடு கட்டி தனியே சென்றது. சில நாள் முன்பு வரை ஒரே வீடு தான். குடும்பத்தில் நடக்கும் மூன்றாவது திருமணம். அது எவ்வாறு தனி என்று ஆகும். அவன் அண்ணன், தங்கை திருமணத்தில் வரவு, செலவு எல்லாம் ஒன்று தான். அவன் திருமணம் மட்டும் எப்படி தனி என்று ஆகும். அதுவும், மூவாயிரம் ரூபாயில்… கல்யாண செலவுக்கு என்று தாயின் கையில் தனி பணம் குடுத்தும் ஏன்?…
இரவு உணவுக்கு கவனமாக மது வெளியே வரவில்லை. கரிகாலனும் கண்டு கொள்ள வில்லை. சகஜமாக மற்றவர்களுடன் கலந்தான். நாளை காலை, உறவுகள் ஊர் திரும்புவதால் கொஞ்சம் கலகலப்பாக இருந்தது. மது அறை வரை சத்தம் கேட்டாலும், தான் தனியோ! என்ற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. தன் போனோடு ஐக்கியமாகி விட்டாள். காரணம் எதுவுமில்லாமலே மச்சான் மனைவியுடன் சடவு, காரணமாக மாமியாருடன் சடவு. அதனால் தள்ளி நின்று கொண்டாள். அது நீடிப்பதும், முடிப்பதும் உறவு செல்லும் பாதையில்…
கரிகாலனுக்கு, மனைவி மட்டும் தள்ளி நிற்பது உறுத்தியது. உரிமையாக அழைக்கவும் முடியாது, வரமாட்டேன் என்று சொல்லி விட்டால் உறவுகள் மத்தியில் சங்கடம். தானும் செல்ல முடியாது, கூடத்தில் தான் அனைவரும் இருக்கிறார்கள். சிறு பிள்ளைகள், பெண்கள் என கூடத்தில் நிக்க. தான் உள்ளே சென்று கதவடைக்க முடியாது. அது வேற மாதிரி யூகம் கொடுக்கும். அனைவரும் இருக்க, தாங்கள் மட்டும் உள் சென்று காதவடைத்து கொண்டால் எப்படி!… அதனால், மற்றவர்கள் உறங்க செல்லும் வரை உடன் நின்றான். வீடும் சிறியது தான். அவளுக்கு உணவும் எடுத்து செல்ல வில்லை. அவனில் வேறொரு எண்ணம் உள்ளது. அதன் பொருட்டு தான் தாமதம்.
மதுவுக்கு பசி கிறக்கம் அதிகரித்தது. காலை உணவும் சரி இல்லை, மதியம் உணவும் உண்ண வில்லை, இரவு உணவுக்கு யாரும் அழைக்க வில்லை, பசி தாங்கியும் பழமில்லை என்பதால் அழுகை வந்தது. கொஞ்சம் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள். அவமானமாக போய் விடும் என்று… இன்னும் உரிமையாக உணவு கேட்டு பழகவில்லை. தான் பசியில் கிடக்க, கணவனின் சிரிப்பு சத்தம் கேட்டதும் முதல் கண்ணீர் துளி வந்து விட்டது.
மாமியார் வந்து சமாதானம் செய்வது எல்லாம் குதிரை கொம்பு என்று தெரியும் அளவுக்கு மது விவரம் தான். ஆனால், மனம் எதிர்பார்த்தது கணவன் சமாதானத்தை, அதன் பொருட்டு கெஞ்சல் சொற்களை தான். ஆனால், அவனோ கண்டு கொள்ளாமல் இருக்க, தற்போது உணர்ந்தாள் தனிமையை…
இரவு பத்து மணிக்கு அனைவரும் படுக்கையை போட. மெதுவாக, அடுப்படி சென்று பார்த்தான் கரிகாலன். இரவு உணவு காலியாகி இருந்தது. அவன் எதிர்பார்த்தது இது தானே… மனதில் ஒரு சுணக்கம் தான். மது சாப்பிட வரவில்லை என்றதும், தான் பார்த்து கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை தான் விட்டான் கரிகாலன். அவ்வளவு தான், பின் யாரும் அவளை கண்டு கொள்ள வில்லை. அவரவர் உண்டு,சென்று விட்டார்கள்.
மதியம், அவளுக்கு எடுத்து வைத்த கோழி குழம்பு அப்படியே இருந்தது. அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடு செய்தவன், தோசை சுட்டான். அடுப்படியில் பாத்திர சத்தம் கேட்டு, அப்போது தான் கண்ணசந்த கருப்பாயி எழுந்து வந்தார்.
“என்னாலே சின்ன பாண்டி!.. ராத்தியிலே பாத்திரம் உருட்டுறவன். என்ன வேணும்?” என்று கேட்க.
“ மதுக்கு தாம்மா… அவ இன்னும் சாப்பிடல. ராத்திரி வச்ச எதுவும் காணம். அதான் தோசை ஊத்துறேன்..” என்ற மகனின் பதில் மறை பொருள் இருந்ததோ…
மகனை ஆழ்ந்து பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். பின் கட்டில் கயிற்று கட்டிலை தூக்கி போட்டவன், உணவை கொண்டு போய் வைத்தான்.
பின் மெதுவாக மனைவியை எழுப்பி கூட்டி வர, தூக்கி வைத்த முகத்தோடு தான் மனைவி வந்தாள். அங்கிருந்த தோசை, கோழி குழம்பு வாசம் பசியை மேலும் தூண்டினாலும், முறுக்கி கொண்டாள் பெண். தனக்கு இன்னும் சமாதான வார்த்தை வேண்டும் என்பது போல… செயலில் எவ்வளவு செய்தாலும், வாய் வார்த்தையாக கெஞ்சல் வேண்டும் தானே. அது இயல்பாக கணவனிடம்… மனைவி எதிர்பார்க்கும் செயல் அல்லவா…
கொஞ்சம் பிகு பண்ணி கொண்டு தான் உட்கார்ந்தாள். கணவன் முகத்தை கூட பார்க்கவில்லை. கெத்து காட்டனுமே… அவன் ஒன்றும் சொல்ல வில்லை. மெதுவாக தோசையை எடுத்து குழம்பில் முக்கி, அவள் வாயருகே கொண்டு சென்றான். வேற எந்த சமாதான வார்த்தையும் சொல்ல வில்லை.
ஆனால், மது புரிந்து கொண்டாள். மூன்று வேளையும் சோறு சாப்பிடும் இவர்களில் யார் தனக்காக தோசை சுடுவது. அதுவும் இரவு தூங்கும் நேரத்தில்… கணவனின் தனக்கான அனுசரணை மனம் கவர. சின்ன சிரிப்போடு வாங்கி கொண்டவள், அடுத்து வாய் திறக்கவில்லை. கேள்வியாக பார்த்தவனுக்கு,
“ உங்க கட்டை குரல்ல பாடுற, மோசமான பாட்டு வேணும்” என்றாள். கலாய்ப்பது போல அவனின் பாடலில் தன் ரசனையை எடுத்து சொன்னாள். புரிந்து கொண்டவன், விரிந்த புன்னகையோடு மனைவிக்கு ஊட்டி விட்டபடி பாட தொடங்கினான்.
இன்னும் என்னை
வெகு தூரம்
கூட்டிச் செல்லடி…!
பண்ணியசையில்
பாடங்கள்
மாற்றிக் சொல்லடி…!
கன்னி உந்தன்
மணக்கூண்டில்
என்னைத் தள்ளடி…!
கண்ணசைத்து அங்கேயே
வைத்து கொள்ளடி…!
மந்திரத்தை மாற்றாமல்
கற்று கொடுத்தால்…
விந்தைகள் ஏராளம்
சொல்லி தருவேன்…
உந்தன் செல்ல மொழியினிலே….
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்….
துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன்…
உன்னை காண வேண்டும்…
கூட வேண்டும்….
வாராயோ… வாராயோ….
கண்ணம்மா… காதல் எனும் கவிதை சொல்லடி….!
மதுவுக்கு, அவனின் பாட்டின் ராகம் விட, அதன் வார்த்தை அழுத்தம் ரொம்ப பிடிக்கும். கருவாயன் ரசனைகாரன் தான். என்னம்மா கவுக்குறான்… ஆள் மயக்கி…. என்று மனதோடு செல்ல திட்டு விழுந்தது கணவனுக்கு.