கரிகாலன் உடனடியாக வீடு செல்ல வேண்டும் என்று சொன்னதும் அதிர்ந்து விட்டாள் மது. அவளுக்கு ஒன்றும் புரிய வில்லை. நன்றாக தானே இருந்தான், இங்கு இவனுக்கு என்ன குறை. வீட்டின் ஒரே மாப்பிள்ளை என்று எல்லோரும் தாங்க தான் செய்கிறார்கள். திடீர் என்று எந்த சாமி புகுந்தது, உடனே செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, குழம்பி போனாள் மது.
சுந்தரமும் எடுத்து சொல்லி பார்க்க, யாரையும் செவி மடுக்க வில்லை கரிகாலன். இது அவனின் குணமும் கிடையாது தான். இந்த பிடிவாதம், அழுத்தம் எல்லாம் அவனுக்கு வராது. ஆனால், மாமியார் வீடு என்பது காலத்துக்கும் வரும் சொந்தம். தன் செயலால் மதிப்பிழந்தால் பரவாயில்லை, ஆனால் வசதியை காரணம் கொண்டு மதிக்காமல் போன உறவை கட்டி இழுக்க மனம் வரவில்லை.
ஆடம்பர வாழ்க்கையை தன்னால் கொடுக்க முடியாது தான். ஆனால், மதிப்பான வாழ்க்கையை கொடுக்க முடியும். என்ன ஒன்று அந்த மதிப்பை உணர தான் சில காலம் செல்லும். அதுவரை மனைவியிடம் தனக்கு மதிப்பு இருக்காது, பரவாயில்லை என் மனைவி தானே.
யார் சொல்லியும் கேட்காமல் கிளம்புவதில் குறியாக இருந்த கரிகாலனை சமாதானம் செய்ய இயல வில்லை. வேற வழயில்லாமல் தான் அனுப்பி வைத்தார்கள். சுந்தரதிற்க்கும் யோசனை தான், தான் ஒரு சொல் சொன்னால் மீறி நிற்பவன் கிடையாது கரிகாலன். அப்படியிருக்க, தற்போதைய பிடிவாதம் கொஞ்சம் உதைத்தது.
மீனாட்சி தான், கிளம்பி வந்த தம்பதிகளை பார்த்து, “தம்பி! பாப்பாவ பத்திரமா பார்த்துக்கப்பா, குடும்ப சூது தெரியாது. எந்த வேலையும் செய்யாமல் வளத்துட்டோம், நீ கூடமாட இருந்து பார்த்துக்கப்பா… பாப்பா, எதுவும் சிரமம்னா ஒரு போன் போடு, அம்மா ஓடி வந்துறேன். எனக்கும், அப்பாக்கும்… உன்னை பாகுறத விட வேற என்ன வேலை. துணி எல்லாம் துவச்சு கஷ்டபடாத… வாராவாரம் கண்ணன் தம்பியை அனுப்புதேன். உம் அழுக்கு துணியை குடுத்து விடு. இங்க துவச்சு, தேச்சு குடுத்து அனுப்புறேன்…” என்று ஆயிரம் பத்திரம் சொல்லி தான் அனுப்பி வைத்தார்.
மனதேயில்லை மீனாட்சிக்கு, “ பெரிய மைசூர் அரண்மனை கட்டின மாதிரி, எங்க வீட்டுக்கு போறேன்னு விடாப்பிடியாக கூட்டி போறான். பிள்ளை முகமே வாடி கிடக்கு…” என்ற புலம்பல் குறைய வில்லை.
வீட்டில் நடந்ததை தோண்டினார் சுந்தரம். காரணமில்லாமல் மற்றவரை வருத்தும் செயல் செய்யபவன் அல்ல கரிகாலன். ஒவ்வொன்றாக வெளி வர, கோபம் கனன்றது. தெரிந்த, பழக்கமான ஒருவராக இருந்தாலும், இந்த வீட்டின் மாப்பிள்ளை என்ற மரியாதையை கொடுக்க தானே வேண்டும்.
ஆரம்பத்திலே மனைவியை தட்டி வைத்திருக்க வேண்டுமோ!… பெற்றவள், ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறாள் என்று விட்டது தான், தைரியம் கூடி போச்சு. தன் அமைதி தான், என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற தைரியம் கொடுத்தது போல. மாமியாரை பார்த்து மருமகளும் பின் தொடர்ந்து விட்டாள்.
நிலவரம் புரிந்த பின், வைத்து வாங்கி விட்டார் மீனாட்சியை. கருத்து சொல்லவே விட வில்லை. மாமியாருக்கு விழுந்த வசவுகளை பார்த்த ரம்யா, வாயே திறக்கவில்லை. கணவன் பின் நின்று கொண்டாள்.
மனைவியை திட்டியவர், மருமகளை ஒன்றும் சொல்லாமல் மகன் அருகே சென்றார்.
“ நாலு வருசமா இந்த வீட்டோட உன் தொடர்பு இல்லை. நெஞ்சுல நெருப்பு வச்ச மாதிரி நீ செஞ்சுட்டு போன பின்னாடி உம் முகத்தை கூட பார்க்க விருப்பமில்லை” மெளனமாக தலை குனிந்தான் மாதவன்.
“உடன் பிறந்தவனா உந்தங்கச்சி குண்டு மணி தங்கம் கூட செய்யல. ஆனா, எங்கிட்ட என்ன சொன்ன, தங்கச்சி கல்யாணம் சொல்லி தான் மறுபடி ஒன்னு சேர்ந்த. அது எப்படி… தங்கச்சின்னு சொல்லி தான் வீட்டுக்குள்ள வந்த, மறந்திட்டையா?… எம் பொண்ணுக்காக தான் உன்னை உள்ள சேர்த்தேன். எம் பொண்ணுக்காக உன்னை வெளிய தள்ளவும் யோசிக்க மாட்டேன்” என்று நிதானமாக தெளிவாக சொன்னார்.
அதிர்ந்து போய் மாதவன் பார்க்க, பதறி போனார் மீனாட்சி.
“என்னங்க!… ஏன் இப்படி பேசுறீங்க. நம்ம மருமகன் முக்கியம் தான். அதுக்காக ஒத்த மகன், தலை மகன்… ஒதுக்கி வைப்பேன்னு சொல்றீங்க. புத்தி பிசகி போச்சா உங்களுக்கு…” ஆற்றாமையாக மனைவி கேட்க.
“ உனக்கு தான் பிசகி போச்சு மீனாட்சி. நடந்த எல்லாத்தையும் நீயும் மறந்திட்டையா?… தலை மகனா…. யாரு இவனா… பெத்த அப்பன் சாக கிடக்குறேன், கூட பொறந்த தங்கச்சி போலீஸ் ஸ்டேஷனில, ஒத்த பொம்பளையா தவிச்சு நின்னையே… வீட்டுக்கு தலை மகனா என்ன செஞ்சான் உம் புள்ளை?… ஊர விட்டு ஓடி போனான்” என்று காட்டமாக சொல்ல.
அவமானத்தில் தலை குனிந்தான் மாதவன். கணவனின் நிலை காண பொறுக்காத ரம்யா.
“மாமா… அப்ப எங்க நிலைமை அப்படி…” என்று ஏதோ சொல்ல வர. கை நீட்டி தடுத்தவ ர்.
“ போதும்மா… அவனாது எம் புள்ளை, மனசு ஆறாம பேசுறேன். நீ தலையீடாத… என்ன அப்படி பெரிய நிலைமை. நீங்களும் ஆணும், பெண்ணுமாக ரெண்டு பெத்து வச்சிருக்கீங்க தான… ஒருத்தருக்கொருத்தர் துணை நிப்பாங்கன்னு நம்பி தானே. ஆனா, உம் புருசன் என்ன பண்ணான்” என்க.
“அப்பா” என்றான் மாதவன் தொண்டை அடைக்க. தனக்கு பெண் பிள்ளை பிறந்த பின் தானே புத்தி வருது.
“வயசு பிள்ளை, உம் கூட பொறந்த பொண்ணு, உம் துணை தேடும் போது, சுயநலமாக ஓடி போனையே… எம் மகன்னு உன்னை எவ்ளோ நம்பினேன். வீட்டுல பொம்பளை பிள்ளை இருக்கும் போது மகனுக்கு கல்யாணம் செய்யாதன்னு சொந்த பந்தம் எல்லாம் சொல்லும் போது கூட உன்னை முழுசா நம்புனேன். அதுக்கு தான் எம் மூஞ்சில கரிய பூசிட்ட…” என்றார் வேதனையாக.
மீனாட்சிக்கும் கண்ணில் நீர் பெருகியது. என்றேனும் அந்த கொடுமையை மறக்க முடியுமா… பெத்த மனம், மகனை விட்டு கொடுக்க முடியாமல் தவித்தது.
“உம் சம்பாத்தியத்திலா பங்கு கேட்டோம். ஆண் மகனா துணை நிக்க தானே சொன்னோம். சுயநலவாதி… உம் மாமியார் வீடு, எம் மக ஒழுக்கத்தை குறை சொல்லும் போது கை கட்டி வேடிக்கை பார்த்தையே. நீ தான் உண்மையான உறவு. உம் இரத்த சொந்தம் துடிக்க விட்டு வேடிக்கை பார்த்தவன் நீ…, நான் பார்த்த மாப்பிள்ளைய குறை சொல்றியா…” என்று ஆங்காரமாக கேட்டவர். அத்தோடு விடவில்லை.
“ நான் தான் சரியில்லை, சரியான மாப்பிள்ளை பார்க்கல… நீ தான் தகுதி, அந்தஸ்து பாக்குறவன். நீ ஒரு மாப்பிள்ளை உந்தங்கச்சிக்கு பார்க்க வேண்டி தான… யாரு உன்னை தடுத்தா… நாலு வருஷம், கிட்டத்தட்ட நாலு வருசமா வரன் பாக்குறோம். எவ்ளோ பேரு கூட பழகுற, ஒரு மாப்பிள்ளை பார்த்தியா… நீ என்னடா எம் மாப்பிள்ளையை குறை சொல்றவன்…” என்று கோபமாக சொன்னவர். அதே கோபம் குறையாமல் மனைவி புறம் திரும்பி,
“நீ என்ன மைசூர் மகாராணியா… நீ அந்தஸ்து, கௌரவம் பார்த்த சொந்தம் யாராவது கூட நின்னுச்சா… நீ பெருசா பேசுற உம் சொந்தம், யாராவது நம்ம பொண்ணா கட்டிக்க தயாரா இருந்தாங்களா… நீ தாரேன்னு சொன்ன சீர்க்கு மேல தாரேன்னு சொல்லியும் ஒருத்தன் சரின்னு சொல்லலா… இது தான் நிதர்சனம்.ஆனா கரிகாலன்…உங்க பணம், காச பார்த்தா, சரின்னு சொன்னான். ம்ம்கூம், எம் மேல உள்ள மரியாதைக்காக… நான் என்ன செஞ்சேன். அவன படிக்க வச்சேன். அந்த ஒரு நன்றிக்காக, நான் பெத்த கடன… அவன் தூக்கி சுமக்குறான். இப்படி ஒரு மாப்பிள்ளைய நீங்க பார்க்க முடியும்மா!… கரிகாலன், நான் பார்த்து வச்ச மாப்பிள்ளை. அவனுக்கு மரியாதை தராத யாரும் இங்க இருக்கணும்ன்னு அவசியமில்லை…” என்றவர். பேச்சு முடிந்தது என்பது போல் உள்ளே செல்ல, அங்கிருந்த யார் முகத்திலும் ஈயாடவில்லை.
சுருங்கி போன முகத்தோடு தான் கணவன் உடன் வந்தாள் மதுமிதா. ஊர் எல்லையை தொடும் போதே, முகம் வாடியது. கொடைக்கானல் மலையடிவாரம் என்று தான் அந்த பகுதியை சொல்வார்கள். இங்கிருந்து தான் செழுமை தொடரும். அதை ரசிக்கும் மனநிலை தான் அவளுக்கு இல்லை.
சற்று பயமும் தான். காரணம் கணவன். திருமணம் முடித்த இந்த ஒரு மாதத்தில் கனிவு கொண்ட முகத்தை மட்டும் தான் பார்த்தாள். அந்த முகம் தற்போது இறுகி கிடந்தது. இந்த குடும்பத்தில் ஓரளவு ஒட்டுவது இவனுடன் தான். அவனும் முகத்தை திருப்ப, எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்தது.
“அய்யா பாண்டி… என்ன சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க…” என்ற தாய்க்கு பதில் சொல்லாமல் வெறும் தலையாட்டி உள்ளே சென்றான்.
காலை உண்ட உணவு, மதியம் தான் தள்ளி கொண்டு வந்து விட்டான். பசித்தது… தாங்கள் இருக்கும் போதே ஒரு குழம்பு தான் நாள் முழுக்க, தற்போது என்ன நிலையோ! மனம் கவலை பட்டது. மெதுவாக எழுந்து உள்ளே சென்றவள், மூடிய பாத்திரம் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். எல்லாம் கழுவி கவுத்து கிடந்தது, சோத்து பானையில் நீரோடு சோறு மட்டும் இருந்தது.
அவளை கவனித்த கருப்பாயி, “ ஏத்தா… வயித்துபசியா… நீங்க வர்றது தெரியலை. எனக்கும், உங்க மாமனுக்கும் மட்டும் தானே. தண்ணி சோறு, பச்சை மிளகாயை உப்பு போட்டு வதக்கி வச்சேன். பாண்டி ஒரு போன் போட்டிருந்தா… சுடு சோறு வடிச்சு வச்சுருப்பேன்…” என்றவர்.
“செத்த இரு மது. பெரிய பாண்டி வீட்டுல போய் உனக்கு மட்டும் சுடு சோறு வாங்கி வாரேன். பாண்டிக்கு தண்ணி சோறு பழக்கம் தான்” என்றவர் எழுந்து செல்ல.
தடுத்து விட்டான் பாண்டி.
“ஏம்லே… எல்லாம் ஒரு குடும்பம் தான்…” என்ற தாய்க்கு.
“மதினி அளவா தான் போட்டு ஆக்கும். அங்கயும் மூணு பிள்ளைக இருக்கு. நான் பார்த்து கிடுதேன். நீ போ…” என்று அனுப்பி வைத்தான்.
சாதத்தை தண்ணி இல்லாமல் பிழிந்து… வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கொஞ்சம் மட்டன் மசால் சாதத்தோடு சேர்த்து சூடு செய்து கொடுத்தான்.
பழைய சாதம் என்பதால் தயக்கத்தோடு தான் வாங்கினாள். ஆனால், மோசம் என்று இல்லாமல் பரவாயில்லை என்ற ரகம் தான். நல்ல பசியும் இருக்க தயங்காமல் சாப்பிட்டாள்.
மனைவி மீது கொஞ்சம் கோபமும், நிறைய வருத்தமும் இருக்கிறது தான்.அதற்காக, பசியோடு பாத்திரத்தை திறந்து பார்த்து, ஒன்றும் இல்லை என்றதும் சுருங்கிய முகத்தோடு வந்தவளை கண்டு மனம் பொறுக்காமல் தான் சூடு செய்து கொடுத்தான்.
நல்லா சாப்பிட்டு முடித்த மது கணவனை பார்க்க, சட்டி நிறைய சோறு போட்டு பத்து பச்சை மிளகாயை எடுத்து அமர்ந்தான். அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள் மது. இதுவரை மிளகாய் எல்லாம் உண்டதில்லை. அவன் அசால்டாக வெறும் வாயிலே உப்பு மிளகாய் போட்டு மெல்ல, இவளுக்கு தான் புல்லரித்தது.
“ஏதோ பிரியாணி கிடைச்ச மாதிரி ஃபுல் கட்டு கட்றான் காட்டான்” என்று தான் மது பார்த்தாள்.
நீர் குடித்து திருப்தி கண்டவன். ஒரு பாய் விரித்து படுத்து கொண்டான். அவளின் சௌகரியம் காணவில்லை.
“ என்ன கண்டுக்காம தூங்கிட்டான்… எனக்கு படுக்கை விரிக்கல… நான் எப்படி தூங்க “ யோசனையாக கணவனை பார்க்க. நொடியில் உறக்கத்திற்கு சென்றான் கரிகாலன்.
அவனை முறைத்து பார்த்து கொண்டே, தான் கொண்டு வந்த பேக்கில் தலை சாய்த்து உறங்க முயற்சித்தாள்.
மாலை நான்கு மணி இருக்கும் போது, நல்ல தூக்கத்தில் இருந்த கரிகாலனை எழுப்பி கொண்டிருந்தாள் மது. தன்னை தொட்டு எழுப்பிய மனைவியை புரியாமல் பார்த்தவன், என்னவென்று கேட்க. கண் காட்டி உள்ளே வருமாறு அழைப்பு விடுத்தாள்.
யோசனையாக உள்ளே சென்றான் கரிகாலன். அறையின் கதவை அடைத்த மது, கணவனை பார்த்து,
“கரிகாலன் …. என் கை ஜெயின் காணம்…” என்க.
அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து கொண்டான் கரிகாலன். ஜெயின் காணாம… என்ன சொல்கிறாள் …
“ என்ன மது சொல்ற… என்ன ஜெயின்…. எனக்கு புரியலை. தெளிவா சொல்லு…” என்றான் படபடப்பாக.
“கை ஜெயின் கரிகாலன். குட்டியா இருக்கும். ஒரு பவுன் வரும் . ரொம்ப ஆசையா வாங்குன ஜெயின், எங்க போனாலும் கொண்டு போவேன். ரொம்ப பிடிக்கும்….” என்று வாடிய முகத்தோடு மனைவி சொல்ல.
“அங்க, மதுரைல வச்சுட்டு வந்துருப்பா….”
“ இல்லை கரிகாலன். அங்க கொண்டு போகவே இல்லை. என் சேலைக்கு நடுவுல வச்சேனா, போற அவசரத்தில் விட்டுட்டு போய்ட்டேன்… இப்ப தான் நினைச்சு தேடி பார்த்தா… காணாம போச்சு…”
யாரையும் குற்றம் சொல்ல வில்லை. நகை காண வில்லை என்ற வாட்டம் தான் முகத்தில்.
கரிகாலனுக்கு யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. கேட்டால் வீட்டில் உள்ளவர்களை தான் கேட்க வேண்டும். அம்மா, அப்பா மட்டும் கிடையாது. அண்ணன் குடும்பம், தங்கச்சி வீடு என்ற அடிக்கடி வருவார்கள். சொந்தத்தில் யாரையும் கை நீட்ட முடியாது. எதார்த்தமான கேள்வியாக கேட்டாலும், சடவாக எடுத்து கொள்வார்கள். மண்டை காய்ந்தது. தங்கம்… பத்திரமாக வைக்க வேணாமா… இவளோட, என் விதியை தான் நொந்துகணும். அம்மா அடிக்கடி சொல்வார்களே….
“வேலையத்த மாமியா, மருமகனை போட்டு தூரி ஆட்டுனாளாம். அந்த மாதிரி சும்மா இருக்க முடியாம, ஒரு கல்யாணத்தை பண்ணி எம் பாடு பெரும் பாடு” என்று சகட்டு மேனிக்கு தன்னையே திட்டி கொண்டான். இன்னும் படப்போவது அதிகம் என்று அறியாமல்.
“கூட்டும் போது எங்கேயும் தொலைஞ்சு போச்சா” என்றான் யோசனையாக.
“வாய்ப்பில்லை கரிகாலன். நான் என் சாரிஸ் நடுவுல தான் வச்சுட்டு போனேன்…” என்றாள் மெதுவாக.
“ என்ன சொல்ல வாற மது…” என்றான் யோசனையாக.
“என் பேக்க திறந்து, சாரிஸ் நடுவுல வச்ச அது மட்டும் எப்படி மிஸ் ஆகும். அதோட வச்ச தோடு, மோதிரம் எல்லாம் இருக்கு…” என்று புரியவைக்க.
பதாட்டமானான் கரிகாலன். என்ன சொல்ல வருகிறாள். திருட்டு என்றா!… நொடியில் முகம் இறுக. பயந்து போனாள் பெண்.
“ யாரையும் தப்பா சொல்லல கரிகாலன். இதை தாண்டி வெளிய போகாது. உங்க அம்மா கிட்ட கேளுங்க… ரூம் க்ளீன் பண்ணும் போது எடுத்து வச்சுருக்காலாம்” என்று பொதுவாக சொல்லி விட்டாள். ஆனால், அவள் மனம் திருடு போய்விட்டதாக தான் நினைத்தது. கணவனிடம் ஓப்பனாக சொல்ல முடியவில்லை.
வெளியில் வந்து வேப்ப மர அடியில் அமர்ந்தான். அருகில் தாய் அரிசி புடைத்து கொண்டிருக்க, பேசாமல் பார்த்து கொண்டிருந்தான். ஏதேனும் கேள்வி கேட்டால் தப்பாக அர்த்தம் கொள்ள வாய்ப்பு அதிகம் என்பதால் அமைதியா பார்த்து இருந்தான். ஆனால், மனதில் புயல் அடித்தது.
“என்ன கருப்பாயி சாவகாசமாக உக்காந்திருக்க… குழுவுக்கு போகலையா?…” என்று காமாயி அப்பத்தா கேட்க.
“குழு கடன் அடச்சாச்சு அயித்த… பொழுதுக்கும் வீட்டுக்கு வாராங்கன்னு உம் மகன் தான் ஆறாயிரம் கொடுத்து மொத்தமா அடச்சு விட்டாச்சு…” என்று கருப்பாயி பதில் சொல்லி கொண்டிருக்க, விசயம் புரிந்து அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து கொண்டான் கரிகால பாண்டியன்.
உள்ளங்கை நெல்லிக்கனியாக விசயம் பிடிபட்டது. வேலைக்கு செல்லாமல், பொழுதுக்கும் குடித்து விட்டு வீட்டோடு இருப்பவர் இவன் தந்தை. அவருக்கு ஏது அவ்வளவு பணம்.
“அம்மா… அப்பா எப்போ பணம் குடுத்தாரு ?…
“நேத்து பொழு சாய. ஏலே சின்ன பாண்டி?..”
மெதுவாக விசயத்தை சொல்லி விட்டான். முதலில் கோபம் தான் வந்தது கருப்பாயிக்கு.
“நல்லவன் தாண்டா நீ. உன்னை பெத்து வளத்ததுக்கு உங்கப்பருக்கு நல்ல பேரு குடுத்துட்ட. ஏதோ கொஞ்சம் குடிப்பான் கடன்காரன். அதுக்கு மருமக சங்கிலிய எடுத்து போய்டான்னு சொல்லுவியாலே!… திருட்டு பட்டம் குடுக்குற…” என்று எகிறி கொண்டு வந்தார் கருப்பாயி.
“அம்மா… அப்படி சொல்லல. அப்பா கிட்ட கூப்பிடு கேளு…” அவனுக்கு நிச்சயம் தெரிந்தது. இது தந்தை செயல் தான் என்று. முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் காசை தான் எடுத்து செல்வார். இப்போது நகையை…
“ நான் சொல்றேன் பாண்டி. உங்கப்பன், அப்படில்லாம் செய்ய மாட்டாக…” என்று வாதாடும் போதே வந்து விட்டார் கரிகாலனின் தந்தை.
“ சின்ன பாண்டி என்னமோ சொல்றான். என்னான்னு நீயே விளக்கம் சொல்லு…” என்றார் கருப்பாயி கணவனை பார்த்து.
“ சின்ன பாண்டி … என்ன விவரம். உங்க அம்மை என்ன சாடுறா?…” என்று கேட்க.
கொஞ்சம் தயக்கமாக தான் ஆரம்பித்தான். “ எப்பா… அது… நம்ம மது சங்கிலிய காணாம…” என்று ஆரம்பிக்கும் போதே…
“அது மருமவ சங்கிலியா… அப்பவே நினைச்சேன், புதுசா தெரியுதேன்னு…” என்று பாண்டி ஆரம்பிக்க.
“ ஐயோ… குடிகார பயலே. இப்படியா வீட்டுக்கு வந்த மருமவ நகையை எடுப்ப… எம் மவன்ன கேவலப்படுத்திட்டையே… போ… எங்கேயாவது போய் ஒழிஞ்சு போ… உனக்கு வாக்கப்பட்ட நாள் தொட்டு எம் பொழப்பு இது தானா…” என்று தலையில் அடித்து கருப்பாயி புலம்ப.
“ஏட்டி… சும்மா சலம்பாத. நான் குடிக்கவா எடுத்தேன். எம் மருமகளுக்காக தான்…” என்று நியாயம் பேசினார்.
“ நெசந்தான் கருப்பு. தினக்கி குழுவுக்கு காசு கேட்டு ஆள் வருது, வீட்டுக்கு வந்த மருமக முன்னுக்க அசிங்கம்ன்னு நீதானா புலம்புன… நேத்து ரெண்டு பேரு வந்து காசு தந்தா தான் ஆச்சுன்னு சொல்லிட்டாங்க. உங்கம்மைக்கு அழுகையை தவிர என்ன தெரியும். நீ எங்கேயும் காசு வச்சுட்டு போயிருக்கியான்னு பாக்க தான் போனேன். சங்கிலி தான் தட்டு பட்டது. சரி… நம்ம மருமக, ஒரே வீடு, நம்ம கஷ்டத்தில் அதுக்கும் பங்கு இருக்குல… அதான் எடுத்து போய் அடகு வச்சேன்…” என்று வக்கணை பேசினார்.
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் கரிகாலன். இவரிடம் யார் சொல்வது ஒரே வீட்டில் இருந்தாலும் எல்லோரும் ஒன்று கிடையாது. அதுவும் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் மருமகளின் எண்ணம், செயல், யோசனை எல்லாம் வேறு தான்.
இவர்கள் வாங்கி வைத்த கடனை மருமகள் வந்து அடைக்க வேண்டுமா!… எந்த ஊர் நியாயம். புரிய வைத்தாலும் புரியாமல் தான் பேசுவார், சொல்வது வீண்.
கருப்பாயிக்கு மகள் மீது கொள்ளை பாசம். சீர் வரிசை முறையாக செய்தாலும், இப்படி கிராம குழு லோன் எடுத்து மகளுக்கு பணமாக, பொருளாக கொடுத்து விடுவார். தனியார் பள்ளியில் வேலை செய்யும் மருமகன் என்பதால், மகள் கஷ்ட படுவாள் என்று ஒரு எண்ணம்.
கரிகாலன் சத்தம் போடுவான், “ வீணாக்க கடனை இழுக்காதீர்கள்” என்று. ஏதேனும் விசேஷ நாளுக்கு தான் என்று தாய் சமாளித்து விடுவார். ஆனால், தமிழ் குடி மக்களுக்கு மாசத்துக்கு ஒரு விசேஷம் வரும். ஆடி, புரட்டாசி, கார்த்திகை தீபம், தீபாவளி , பொங்கல், மாசி கோவில், சித்திரை திருவிழா, வைகாசி நாற்று எடுப்பு என்று தொடர் நல்ல நாள் தான்.பெண் மக்களுக்கு தவறாமல் சீரும் செல்ல. கரிகாலன் வீட்டில் மட்டும் கிராம குழு ஓயாது.
“ ஆறாயிரம் தான் பாண்டி. மருமக சங்கிலி, குடிக்க எடுக்க மாட்டேன்…” என்று நியாயம் சொன்னார்.
ஒரு பெரு மூச்சு விட்டவன், “ ரசீது குடுங்க. திருப்பி கொண்டு போய் மது கிட்ட கொடுக்கணும்…” என்றான் கரிகாலன்.
“ நான் அடகு வைக்கல பாண்டி. பெரிய பாண்டி கிட்ட குடுத்து தான் அடகு வச்சேன்…” என்ற தந்தையின் மேல் கட்டுகடங்காமல் கோபம் வந்தது. பெரிய பாண்டி, தந்தையின் நகல் மாதிரி. என்ன செய்து வச்சானோ… பயம் நெஞ்சை கவ்வியது. உடனே அண்ணனுக்கு போன் செய்து வர சொல்லி விட்டான்.
தேவையில்லாமல் மது வெளியே வரமாட்டாள் என்பதால் பயம் இல்லை. பெரிய பாண்டியும் வந்து விட, கேட்டு வாங்கி பார்த்தான் ரசீதை. வர சொல்லிய காரணம் தெரிந்து தான் ரசீது உடன் வந்திருக்கிறான் போலும்…
அடகு வைத்த ரசீதை திறந்து பார்த்தவன், மீண்டும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய்க்கு அடகு வைக்க பட்டு இருந்தது. கேள்வியாக அண்ணனை பார்க்க.
“தட்ட முடியாத விசேஷம் பாண்டி. கண்டிப்பா மொய் செஞ்சு தான் ஆகணும். இல்லைனா வீட்டுக்கே வந்து அசிங்க படுத்துவான்… மருந்த தான் குடிக்கணும். அம்புட்டு கஷ்டம், வேலையும் கிடைக்கல…” என்று பாவமாக பேச, பதறி போனார்கள் பெற்றவர்கள்.
தலை மகனாக வீட்டை தாங்கியவன் மருக, மனம் தாங்க வில்லை தாய்க்கு.
“ ஐயா! பெரிய பாண்டி… என்னாலே பேச்சு இது. மருந்து குடிக்க போறேன்னு… தம்பி பொண்டாட்டி சங்கிலி தான. அதுவும் ஒரு பவுன். ஒரு கஷ்டத்தில் உதவாத சொந்தம் எதுக்கு… உம் கூட பொறந்தவன், உனக்கு நிக்க மாட்டானா… அதெல்லாம் சின்ன பாண்டி சமாளிப்பான்…” என்று அவராகவே வாக்கு குடுத்து, பெரிய மகனை கூட்டி சென்றார். அரசாங்க வேலை பார்க்கும் மகன், கை நிறைய காசு வைத்திருப்பான் என்று ஒரு எண்ணம்.
“ ஏதோ அடகு மட்டும் வைத்தார்களே. மொத்தமாக வித்து இருந்தால். பெரிய பாண்டி சொல்வது போல், மருந்தை நான் தான் வாங்கி குடிக்கணும்…” கேலியாக எண்ணி கொண்ட கரிகாலன் அவசரமாக தன் பேங்க் பேலன்ஸ் செக் செய்தான். அதில் வெறும் எட்டாயிரம் தான் இருந்தது. சம்பளம் வர பத்து நாள் ஆகும். வீட்டு லோன் போக முப்பது தான் வரும். அதை கொண்டு நகை திருப்பினால், அடுத்த மாச செலவு திண்டாட்டம் தான். இதில் மதுவை வேற கூட்டி செல்லனும், சீர் தராததால் வீட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்களையாவது வாங்கணும், கடனுக்கு வட்டி கட்டனும், வண்டிக்கு பெட்ரோல், தினமும் சாப்பாட்டுக்கு என்று பலதும் இருக்கே. மண்டை காய்ந்தது…
ஏற்கனவே கடன் இருக்க, மீண்டும் கடன் சரி வராது. மனம் வலித்தது. இயலாமையில் கோபம் வரும், இவனுக்கோ அழுகை வந்தது. மாமனாரிடம் சொன்னால் சரி செய்வார், அதுவும் நொடியில். ஆனால், அதற்கான விலை என்பது ஒரு ஆண் மகனின் தன்மானம்.
முதல் இதை மதுவிடம் சொல்ல வேண்டும் என்று யோசிக்கும் போதே. குதர்க்கமாக மனம் ஒரு யோசனை சொன்னது. நகை காணாமல் போய்விட்டது என்று தானே மது அறிவாள். தந்தை எடுத்ததோ, அண்ணன் அடகு வைத்ததோ மனைவிக்கு தெரியாது. அவன் மட்டுமே அறிவான். அவனும் மறைத்து விட்டால் நொடியில் எல்லாம் மாறிவிடும். அடுத்த மாதம் கை கடிப்பு இருக்காது. கரிகாலன் நல்லவன், ஒரு பொய் சொன்னால் என்ன…
ம்கூம், நல்லவனாக நடிக்க எல்லாம் தெரியாது. நல்லவனாக வாழ தான் தெரியும். மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லி மனம் சாவதை விட, இந்தா என்று முதுகை காட்டி நாலு அடி வாங்கி கொள்ளலாம். தலைகுனிந்தாலும் எனக்குள் நான் நிமிர்ந்து நிற்பேன்.
முடிவு செய்தவன். எதையும் மறைக்காமல் சொல்லி விட்டான் மனைவியிடம். முதலில் பதில் சொல்லாமல் அவதானித்தாள். அவள் முகம் பல பாவனை காட்டியது. “இது தான உன் குடும்பம். ஒரு பெண்ணின் அதுவும் மருமகளின் நகையை அவளுக்கே தெரியாமல் எடுப்பது தான் உன் குடும்ப வளமையா… உன் குடும்பம் மீதான என் மதிப்பு குறைந்து விட்டது. இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…” அவள் முகத்தையே பார்த்தவனுக்கு புரிந்தாலும், நிமிர்ந்தே நின்றான்.
“அடுத்த ஒன்னாம் தேதி திருப்பி குடுத்துருவேன் மது…” என்றான் தயவாக.
“சரிங்க கரிகாலன். ஆனாலும் இது தப்பு தான… எங்க வீட்டுல யாரும் கேட்காம எடுக்க மாட்டோம். அம்மா கிட்ட இருக்கும் பணம் அப்பா குடுத்தது தான். ஆனா, கேட்காம அப்பா கூட எடுக்க மாட்டாங்க. பணமே கேட்காம தொட மாட்டோம், இதுல நகை எல்லாம்… நாங்க அடகே வச்சதில்லை. அதுவும் இவ்ளோ சின்ன பொருள். அவ்ளோ பண கஷ்டமா? … எங்க வீட்டுல கூட கேட்டு இருக்கலாம்…” என்று பொதுவாக சொன்னவள்.
“ எதுவா இருந்தாலும், இது தப்பு. ரொம்ப ரொம்ப தப்பு. எனக்கு சுத்தமா பிடிக்கல…” என்றாள் முக வேறுபாட்டை காட்டி.
“நான் காசு வச்ருப்பேன்னு நினைச்சு, தெரியாம உன்ன…” என்று கரிகாலன் ஆரம்பிக்கும் போதே.
“இல்லை கரிகாலன் தெரியாம எல்லாம் இல்லை தெரிஞ்சு தான் எடுத்துருக்காங்க. என்னது தான்னு நல்லாவே தெரிந்தும் எடுத்துருக்காங்க… நான் கொண்டு வந்த பைல, என் சாரிஸ் நடுவுல மறைச்சு வச்ச ஒரு பொருள் தேடி எடுத்து போறாங்க. இது என்ன பழக்கம்? ஒரு பொண்ணோட பையை சோதனை போடுறது. நான் இல்லாம… எம் பெர்மிஷன் இல்லாம… என் திங்க்ஸ எடுக்குறது எனக்கு பிடிக்காது கரிகாலன். நல்ல நடப்பு கிடையாது. உங்களுக்காக நான் அமைதியா போறேன்…” என்றாள் காட்டமா.
மதுக்கும் கோபம் தான் . இது மாதிரி எல்லாம் அவள் வாழ்வில் கடந்ததே இல்லை. ஒரு பெண் தனக்கான தனிப்பட்ட பையில் என்னவும் இருக்கும். கொஞ்சமும் கூசாமல் எப்படி தோண்ட தோன்றியது. உள்ளாடை, ஹேர் ரிமோவர், மாதவிடாய் சார்ந்த பொருள் என்று எவ்வளவோ தனிப்பட்டு இருக்கும். என்ன மனிதர்களோ… இப்படி வந்து மாட்டி கொண்டேனே.
கரிகாலன் தயங்கி நிற்க.
“ என்ன கரிகாலன்?” என்ற மனைவிக்கு.
“மது … அது வந்து… இந்த விசயம் நமக்குள்ள இருக்கட்டும். வெளிய தெரிஞ்சா, நமக்கு தான் அசிங்கம். இதுவும் உன் குடும்பம் மாதிரி தான். பிளீஸ் மது தயவு செஞ்சு யார்ட்டையும் சொல்லாத… உன் ஜெயின் கைக்கு வரும் . நான் பொறுப்பு…” என்று நயந்து, பவ்யமாக கேட்டான்.
சிறிது யோசித்தாள், பின், “ ஓகே கரிகாலன்” என்று முடித்து கொண்டவள். அவன் நகரும் பொழுது “ரப்பிஷ்” என்று முணங்க.
குன்றி போனான் கரிகாலன். ஆனால், காதில் கேட்காதது போல் நடந்து கொண்டான்.
மது யாரோடும் பேச வில்லை. பேச பிடிக்க வில்லை. முக்கியமாக யாரின் மீதும் மரியாதை இல்லை.
பொழுது விடிந்து காலை உணவு உண்ணும் முன்னே, வாசலில் கார் வந்து நின்று விட்டது. காரில் இருந்து சுந்தரமும், மீனாட்சியும் இறங்க. நெஞ்சில் நீர் வற்றி போனது கரிகால பாண்டியனுக்கு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.