அந்த காலை வேளையில் தாய், தந்தையை பார்த்து மதுவுக்கும் அதிர்ச்சி தான். எதற்காக வந்திருக்கிறார்கள்… கணவன், மனைவி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்ட போதும், தயங்காமல் உபசரித்தார்கள்.
சம்மந்தி வீட்டை கண்ட கருப்பாயிக்கும் ஒரு எண்ணம் , சீர் செய்வது பற்றி பேச வந்திருப்பார்களோ என்று!…
வந்தவர்களும் கை நிறைய பழம், இனிப்பு என்று கொண்டு வந்திருக்க, தவறாக தோன்ற வில்லை.
ஆரம்பித்தார் மீனாட்சி, “அது ஒண்ணுமில்ல தம்பி. பாப்பாவ பார்த்துட்டு போகலாம்ன்னு தான் வந்தோம்… அத்தோட ஒரு யோசனை” என்று இழுத்தவர்.
“என்னன்னு சொல்லுங்க அத்தை?” என்றான் கரிகாலன். ஆனால் சொன்னது சுந்தரம்.
“அது வந்து கரிகாலன். இந்த ஊர் மலையோர கிராமம். உங்க வீடும் ஓட்டு வீடு, சரியா பாதுகாப்பு இல்லை. மதுகிட்ட அவ்வளவு நகை இருக்கு. காட்டு வேலைக்கு போறவங்க… பாப்பா தனியா இருக்கும். அதான் நகை எல்லாம் பேங்க்ல வைக்கலாம்ன்னு சொல்றோம். கைல வச்சு பயங்துட்டு இருக்குறதுக்கு, பேங்க் பாதுகாப்பா இருக்கும்…” என்று முடிக்க.
மீனாட்சியும் “ ஆமா தம்பி! இப்போலாம் யாரையும் நம்ப முடியாது. சொந்த்ம்ன்னு வீட்டுக்குள்ள விட்டா அவங்க புத்தியை காட்டுவாங்க. நாட்டுல பஞ்சமும் அதிகம், சங்கிலி போட்ட பிள்ளையை தான் குறி வைக்குறாங்க. நகையும் கொஞ்சமல்ல, கல்யாணத்துக்கு போட்டத எல்லாரும் பார்த்திருப்பாங்க. நாங்களே எம்பது பவுன் போட்டோம், சொந்ததுல வந்த சீரையும் மதுவுக்கே கொடுத்துட்டோம். நகைக்கு பாதுகாப்பு முக்கியம். உங்க மாமா சொன்ன மாதிரி செய்ங்க தம்பி. உங்க மாமாவுக்கு அனுபவம் அதிகம்…”என்று பொதுவாக கூறினார்.
ஆனால் பற்றி கொண்டது கருப்பாயிக்கு. “ஓட்டு வீடு, காட்டு வேலைக்கு போறவங்க, பாதுகாப்பு இல்லை, சொந்தம் சொல்லி ஏமாத்துவாங்க, யாரை சொல்கிறார்கள். மறைமுகமாக தன் கணவனையும், மகனையும் தான் சொல்கிறார்கள். ஒத்த பவுன் சங்கலிக்கு நாங்க வர மாட்டோமா… ஊமை மாதிரி இருந்துட்டு சிண்டு முடிஞ்சு விடுறா… இருக்கட்டும் கவனிச்சுகிறேன். நம்ம மாமனார், நம்ம மச்சான் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லையே. குடும்பத்து பெண் அனுசரித்து தான் செல்ல வேண்டும். தன்னிடம் கொஞ்சமும் கலக்காமல் பெத்தவங்கள வர சொல்லி போட்ட நகையை கேட்க வைக்கிறா கைகாறி… இவங்களும் வெட்கமில்லாம வாசல் வந்து நிக்குறாங்க. கட்டி குடுத்த பின் பொண்ணே சொந்தம் இல்லை, இதுல நகை மேல உரிமை கொண்டாடி வருவாங்களா…” உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தார்.
கரிகாலன் மனைவி முகம் தான் பார்த்தான், “உன் வேலையா?…”
“ஐயோ! இல்லை. நான் வாய் திறக்கவே இல்லை.” என்று கண்ணாலே பதிலும் சொல்லி விட்டாள்.
பெரிய யோசனை எல்லாம் கரிகாலனிடம் இல்லை. அவர்கள் கஷ்டபட்டு சம்பாரிச்சு , மகளுக்கு போட்ட நகை. அதை என்னவும் செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கு. அதற்கு தயக்கம் தேவை இல்லை என்று நினைத்தவன், சொல்லவும் செய்தான்.
“உங்க மகளுக்கு நீங்க போட்ட நகை. அதை உரிமையாவே கேட்கலாம், எதற்கு தயக்கம் சார்…” என்று சொன்னவன். மனைவியின் புறம் திரும்பி,
“ மது… நகையை எடுத்து வந்து கொடு. அப்புறம் உன் விருப்பம் என்னன்னு அத்தை கிட்டயும் சொல்லிடு…” என்று சாதரணமாக முடித்து விட்டான்.
மீனாட்சிக்கு ஆச்சரியம் தான். பெண்ணை கட்டி கொடுத்த இடத்தில் நகையை அவ்வளவு எளிதாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால், மருமகனே முன் வந்து கொடுப்பது, கொஞ்சம் நல்ல எண்ணம் தோன்றியது வீட்டு மாப்பிள்ளை மேல்.
மதுவும் பெரிதாக யோசிக்க வில்லை. அவர்கள் வீட்டில் இது சகஜம் தான். நகை பேங்கில் இருக்கும். தேவை பட்டால் எடுத்து கொள்வார்கள். அவர்கள் அப்பாவும் பேங்க் அதிகாரி என்பதால் வித்தியாசம் தெரிய வில்லை.
மீனாட்சியும் சிறிய நகை சிலதை வைத்து விட்டு, கனமான பெரிய நகைகளை மட்டுமே எடுத்து சென்றார்.
“ இங்க ஏதாவது விசேஷம் வந்த போட்டுக்க வேணும் மது. சிலது உன் கிட்ட இருக்கட்டும்” என்றார் மீனாட்சி.
அவர்கள் கிளம்பும் போது வழியனுப்ப வந்தவன், நேரடியாகவே கேட்டு விட்டான். மது சொல்ல வில்லை என்றாலும், மனதின் யூகத்திற்கு வழி விட விரும்ப வில்லை.
“ நகையை பேங்க்ல வைக்க இப்ப என்ன சார் அவசரம்” என்றவன். கொஞ்சம் தயங்கி, “ வேற எதுவும் சங்கடமா சார்?…” என்று மாணவனாகவே கேட்டு நின்றான் மாப்பிள்ளை என்று ஆன பின்னும்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லலை தம்பி. உங்க ஊர் மில்ட்ரி தனசேகரன் இருக்கார் தானே. எனக்கு ரொம்ப நெருக்கம். அவர் தான் சொன்னார். ரெண்டு நாள் முன்ன தனியா இருந்த பொண்ணு கிட்ட நகையை அடிக்க போய் பெரிய கலவரம் என்று, அந்த பொண்ணுக்கும் நல்ல அடியாம். அப்ப இருந்து மீனாட்சிக்கு மகளை நினைச்சு பயம். யோசிச்சா இது தான் சரின்னு தோணுச்சு, வந்துட்டோம். உனக்கு எதுவும் சங்கடம் இல்லையே!” என்று மாப்பிள்ளைக்கு உரிய மரியாதையை முகத்தில் கொண்டு வந்து கேட்டார் சுந்தரம்.
“ எனக்கு என்ன சார் சங்கடம். நகை எல்லாம் பெண்கள் விசயம்… மது கிட்ட தான் கேட்கணும்” என்று வேடிக்கையாகவே முடித்து விட்டான்.
“அப்புறம் கரிகாலன். நகையை நாங்க வாங்கி போக காரணம். நான் அங்க தான் வேலை பாக்குறேன். அத்தோடு வரவு, செலவு எல்லாம் அங்க தான். உங்க பேர்ல வைக்க, தனியா டெபாசிட் பண்ணனும். வீட்டு வேலை வேற நிக்குது. அதை பாருப்பா நீ… கூட, குறையா வேணும்னாலும் தயங்க வேண்டாம் கரிகாலன். நகையை வச்சுக்கலாம். பெத்தவங்க, நாங்க நகை போடுறது, எம் பொண்ணு முன்னேறத்துக்கு தான். என்ன மீனாட்சி நான் சொல்றது?…” என்று மனைவியிடம் முடிக்க.
“ஆமாங்க, நீங்க சொல்றது சரி தான். தம்பி, வீட்டு வேலைக்கு நகையை தாராளமா வச்சு செய்ங்க. எம் மக வீடு தானே. அதுவும் எம் பேர பிள்ளைகளுக்கு தான் போகும். பொதுவுல நீங்க செய்யல தானே…” என்று காரியமாக தான் முடித்தார்.
வீட்டு பெண்களின் கணக்கு ஆயிரம்.
இதில் முழுதாக அடிப்பட்டு போனது கருப்பாயி தான். “சம்மந்தி என்ற முறையிலும் தன்னை மதிக்க வில்லை, பெத்த தாய் என்று மகன் தன்னை ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா… மாமியார் என்ற பயம், இந்த அமுக்கினிக்கும் இல்லை” மனம் கொதிக்க வெளி வந்து விட்டார்.
கரிகாலன் தாயை உணர வில்லை, வசந்திக்கு தாங்கள் எதிர்பார்ப்பது போல் தானே, மதுக்கும் நினைப்பார்கள் அவள் பெற்றோர் என்பது அவன் எண்ணம். ஆனால், மாமியார் என்ற பதவி வேறல்லவா!… பையனை பெத்தவர்களுக்கு என்று ஒரு கௌரவம் உண்டுல்லவா!… அதை விரைவில் காட்டுவார் கருப்பாயி.
கணவன், மனைவிக்கான ஏகாந்த பொழுது துவங்கியது. தென்னை காற்றும், இரவின் குளுமையும், கயிற்று கட்டிலும் என்று தங்கள் இடம் வந்தமர்ந்தார்கள்.
தாலி கொடி தன் கழுத்தில் இருக்க, நகையை விட்டு கொடுத்த கணவன் மேல், ஒரு மதிப்பு வந்தது மனைவிக்கு.
தான் சொல்லி, அதை மதித்து மனைவி நடந்தாள் என்பதே இனிமையாக இருந்தது கரிகாலனுக்கு.
அப்புறம் என்ன கரிகாலன், பிராப்ளம் முடிஞ்சு போச்சு. அதை கொண்டாட நீங்க உங்க பாட்டை எடுத்து விடுங்க. உங்க குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு…” என்று உற்சாகமாக பேசியவளை பார்த்தான் கரிகாலன்.
அங்கிருந்த அத்தனை நாட்களில், ஒரு நாள் கூட இவ்வாறு தன்னை தேடவில்லை என்று தோன்றியது. ஆனால், இருக்கும் இனிமையை கெடுக்காமல், மனைவியை சங்கட படுத்தாமல், அந்த நாளிற்கு சுருதி சேர்த்தான் கரிகாலன்.
பூத்திருக்கும் வைரமணி
தாரகைகள் தான்…
இராத்திரியில் பார்த்ததும் உண்டோ…!
காத்திருக்கும் இராக்குருவி கண் உறங்காமல்
பாட்டிசைக்க கேட்டதும் உண்டோ…!
நீ வாழ்ந்த வளர்ந்த இடம் வேறு…!
நேரங்கள் உனக்கு இதற்கு ஏது…!
நீ இன்று நடக்கும் தடம் வேறு…!
நான் இன்றி உனக்கு துணை யாரு…?
நீ தடுத்தாலும்….
கால் கடுத்தாலும்…
நாள் முழுக்க நான் வருவேன்… மானே…!
மறுநாள் இருந்து தொடங்கியது மதுவுக்கு சோதனை. கரிகாலனை தவிர அந்த வீட்டில் யாருடனும் ஒட்ட வில்லை தான். ஆனால், ஒதுங்கி நிற்கும் எண்ணமும் இல்லை. கொஞ்சம் நேரம் தான் அவளுக்கு தேவை பட்டது.
ஆனால், அவர்கள் ஒதுங்கி கொண்டார்கள். நடுநிலை நிற்கும் வசந்தி கூட தந்தையை காரணம் கொண்டு ஒதுங்கி கொண்டாள். அதற்காக அண்ணனிடம் பேசாமல் இல்லை. மது மட்டுமே அவர்கள் வட்டத்தில் வேறு என்று ஆனாள்.
அவளும் கண்டு கொள்ள வில்லை. கொஞ்சம் அமைதியாக, அடங்கி போனாள். தன் இயல்பு மீறி தான். என்ன செய்ய… புகுந்த வீடு என்பது பெண்களின் சில அனுசரணைக்கு உட்பட்டது தான். ஓரளவு மதுவுக்கும் புரிய, தன்னை காத்து கொண்டாள்.
இதுவரை தப்பித்தோம் என்று இருந்த சக்கு கூட அடிக்கடி மாமியார் வீடு வர ஆரம்பித்தாள். எனக்கும் இது தான் வீடு, மூத்த மருமகள் என்று கெத்து காண்பித்தாள். இருப்பது ஒரு அறை, மது முடங்கும் இடம் அது தான், முதலில் பறி போனது. சட்டமாக உள்வந்து சகுந்தலா படுத்து கொள்ள, மெளனமாக வெளியேறினாள் மது. அவளுக்கு அன்று மாத விலக்கு, உடல் ஓய்வு வேண்டியது. கால்களை மடக்கி கொஞ்சம் படுத்தால் தேவலை என்று இருக்க, கூட்டம் கூடி விட்டது.
எதுவும் சொல்ல முடியாது. கூட்டு குடும்பம் அப்படி தான். எதுவும் சொல்ல கூடாது. அதையும் மீறி தன் அசௌகரியம் வெளிப் படுத்தினால், “அவள் அந்த பக்கம் படுத்தால், நீ இந்த பக்கம் படு” என்ற பேச்சு தான் சுள்ளென்று வந்தது.
முகம் கொடுத்து கூட பேசாத ஒருவரோடு, ஒரே அறையில் எவ்வாறு இருக்க. வசந்தியும் பேச வில்லை. பின் பக்க கயிற்று கட்டில் இருப்பிடமாகி போனது.
விடுமுறை நாள் சொந்தங்கள் கூட, கறி விருந்து தான். ஆனால், ஒருவரும் இவளை சாப்பிட அழைக்க வில்லை. எல்லோருக்கும் இவள் மீது அதிருப்தி. குடும்ப விசயம் அடுத்த வீடு சென்றது பிடிக்க வில்லை. அதுவும் அவள் பெற்றோர் விமர்சனம் சுத்தமாக பிடிக்க வில்லை.
கரிகாலன் தந்தை முழு போதை தான். எதுவும் அறியாது அவருக்கு. வயிற்று வலி பிரட்டி எடுத்தது. பசியா, மாதம் தோறும் வரும் வலியா என்று அறிய முடியவில்லை. கணவன் உடன் இல்லை. போன் செய்து இளநீர் மட்டும் வாங்கி வர சொன்னாள்.
வசந்திக்கு தயக்கம், சின்ன பாண்டி கோவித்து கொள்வான் என்று… ஆனால், கருப்பாயி தான்.
“ நாம என்ன அவளை கையை புடுச்சா தடுத்தோம். பசிச்சா போட்டு திங்க வேண்டி தானா… மகாராணிய தாங்கணுமாக்கும். ஒத்த வேலை கூட மாட செய்றது இல்லை. போட்டு திங்க கௌரவம் பார்த்தா… கிடக்கட்டும்…” என்று எகத்தாளமாகவே சொல்லி விட்டார்.
சகுந்தலாக்கு நல்ல வேடிக்கை. “நகை, சீர் என்று எவ்வளவு ஆர்பாட்டம். தேவை தான் இவளுக்கு. கருப்பாயி பிள்ளையை பத்தி சரியா தெரியலை போல…” என்று மதுவுக்காக பரிதாப பட்டாள்.
கரிகாலன் மூன்று இளநீர் கொண்டு வந்தான். மனைவியை காணாமல் வெளி வாசல் வர, சுருண்டு கிடந்தாள்.
பதறி போய் விசாரிக்க, “நத்திங்க் கரிகாலன். ஸ்டமாக் பெயின். மந்திலி பிராப்ளம் தான்…” என்று சோர்வாக சொன்னாள்.
“ பயந்திட்டேன் மது. வேற என்னவோ என்று?… சாப்பிட்டையா?…” என்று கேட்க.
“இல்லை. எழும்பவே முடியலை”
“நீ படுத்துக்க. நான் கொண்டு வாரேன்…” என்று உள்ளே சென்றான்.
ஏன் வெளியே படுத்திருக்க என்று அவன் கேட்க வில்லை. வரும் போதே பார்த்திருந்தான் தன் வீட்டு பெண் மக்கள் உறங்குவதை. என்றோ! வருகிறார்கள் தடுக்க முடியாது.
இருவருக்கும் உணவு போட்டு கொண்டு வந்தவன், அவளை எழுப்பி உண்ண வைத்தான். தட்டையும் சுத்தம் செய்து எடுத்து வைக்க, பார்த்த கருப்பாயி “கோட்டி பைய….” என்று முணங்கி கொண்டார்.
கணவன் அருகில் இருக்கிறான் என்பதே அவளுக்கு ஒரு ஆறுதல் தர, சுகமாக கண் அயர்ந்தால்.
மாலை எழுந்ததும் அவள் கேட்டது இளநீர் தான். அவளுக்கு எப்போதும் இது தான் பழக்கம்.
கரிகாலன் சென்று பார்க்க, இளநீர் காண வில்லை. அவன் தாயிடம் கேட்க.
“இங்க தான்டா இருந்துச்சு… பிள்ளைக கிட்ட கேளு…”
மதுவும் கூடம் வந்து விட்டாள். விசயம் இதுதான், பிள்ளைகள் கேட்டார்கள் என்று வசந்தி எடுத்து கொடுத்து விட்டாள்.
“ஒரு இளநீர் கூட இல்லையா கரிகாலன். ம்ம்ச்…” என்று ஒரு சுணக்கம் தான். அவள் வலி அப்படி.
அதற்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ சகுந்தலாக்கு, வேகமாக சென்றவள் கடை குட்டி விஜி முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள்.
துடித்து போனாள் குழந்தை. மற்றவர்கள் பதறி போக,
“என்ன இழவுக்கு அதை தொட்ட. உங்கப்பன் ஒன்னுமே வாங்கி போடலையா… அப்படி என்ன வாய் உனக்கு… இப்ப தான திண்ண…” என்று தொடர்ந்து மற்ற பிள்ளைகளுக்கும் அடி கொடுக்க. குறுக்கே வந்து தடுத்தாள் வசந்தி.
“ மதினி… சின்ன பிள்ளைக கேட்டுச்சுன்னு நான் தான் எடுத்து குடுத்தேன். இதுல என்ன இருக்கு… பிள்ளைக தான… பெரியவங்க நாம வாயை கட்டுப்படுத்தலாம்.” என்றாள் சாடையாக.
மது குன்றி போனாள். கரிகாலன் தங்கையை அழுத்தமாக பார்க்க, முகம் திருப்பி கொண்டாள்.
“ நம்ம பிள்ளைக எல்லாம் ஒண்ணுதான்னு நாம் நினைப்போம். எல்லாரும் நினைப்பாங்களா… காலைல, அவங்க பொருளா தொட்டத்துக்கே சத்தம் போட்டாங்க…” என்று தானும் சாடை பேசினாள்.
மதுக்கு தலை வலித்தது. நிற்க முடிய வில்லை. என்ன என்ன பேசுகிறார்கள்… பிள்ளைகள், அவள் வைத்திருந்த கண்ணாடி பொருட்களை தொட்டார்கள். தொடாதே! என்று சொன்னாள், யாரும் சொல்வது தானே. அவர்கள் வீட்டில் உடையும் பொருட்களை தொட்டால், நம் பிள்ளை என்று கண்டிக்காமல் விடுவோமா! இதை பெரிசாக்கி, அவளை குற்றவாளியாக காட்ட வேண்டிய அவசியம் என்ன…
“ சின்ன பிள்ளைக எடுத்ததுக்கு கூடவா, உம் பொண்டாட்டி மூஞ்சியை தூக்குவா… நல்லதில்லை மகனே…” மாமியாரும் தன் பங்குக்கு பேச, மொத்தமாக வெறுத்து போனாள் மது.
சகுந்தலா உடனே பிள்ளைகளை அழைத்து கொண்டு கிளம்ப,கரிகாலன் தடுத்தும் கேட்காமல் சென்று விட்டாள். அதன் பின் வசந்தியும் நிற்க வில்லை. மது விரட்டி விட்டது போல ஒரு தோற்றம் கொடுக்க,
“ சின்ன பாண்டி… நாங்க இருக்குற வரை எம் மக்க, மருமகன், பேரன், பேத்தி வந்து போக தான் இருக்கும். உம் பொண்டாட்டி நேத்து வந்தவ… இந்த வீட்டுல உரிமை கொண்டாடிடுவாளா… இது பொது வீடு. அனுசரிச்சு, விட்டு குடுத்த தான் இருக்க முடியும். சொல்லி வை உம் பொண்டாட்டி கிட்ட” என்று நிதர்சனமாக சொல்லி விட.
இங்கு அடி பட்டது கரிகாலன் தான். என்ன சொல்கிறார் தாய். யாரை அனுசரிக்க… இங்கு தவறாக எதுவும் நடக்க வில்லையே. மதுவுக்கு இடமில்லையா அல்லது தங்களுக்கு இடமில்லையா… கொஞ்சம் புரிந்தது. முகம் கசங்க மனைவியை பார்த்தான்.
இவனும் தன்னை ஏதேனும் சொல்லி விடுவானோ என்று அஞ்சி பய பார்வை மனைவி கொடுக்க.
பதறினான் கணவன். “ஐயோ! நான் உன் சாபாமாகி போவேனா பெண்ணே!…”
அதன் பின் வீட்டை உற்று நோக்க தொடங்கினான். குடும்ப அரசியல் பிடிபட. ஆச்சரியம் தான். வசந்தியை நினைத்து புலம்பும் தாயா, அவ்வாறு நடந்து கொள்வது. மாமியார் என்ற பதவி என்ன அவ்வளவு உயர்வு.
இந்த கலவரத்தின் பின், கரிகாலன் மனைவியை விட்டு தனியே எங்கும் செல்வதில்லை. பொழுதுக்கும் கூடவே இருந்தான். வெளி வேலையை சுருக்கி காவல் காத்தான். உண்மையில் அப்படி தான் சொல்ல வேண்டும்.
மதுவும், அதன் பின் கணவனுடன் மட்டுமே ஒட்டி கொண்டாள். ரெண்டு நாட்களுக்கு பின் சகு, வசந்தி, பிள்ளைகள் என்று வந்து விட்டார்கள். தங்கள் வீடு, நீ நேற்று வந்தவள். நாங்கள் எல்லோரும் சொந்தம், நீ தனி என்பது போல் தான் நடந்து கொள்வார்கள். பிள்ளைகள் கூட சேர்ந்து உற்சாகமா சிரித்து விளையாட, தன்னை பாதிக்கவில்லை என்பது போல் எவ்வளவு நேரம் காட்ட. தன்னை போல் சிறு ஏக்கம் தோன்றும்.
பிள்ளைகள் கூட இவளிடம் முகம் கொடுத்து பேச வில்லை. இவள் முகம் கண்டு சிரித்தாலும், ஒதுங்கி கொண்டார்கள். சொல்லி கொடுத்து வைத்திருப்பார்கள் போல… மதுவும் தன் வட்டத்தை கரிகாலன் மட்டும் என்று சுருக்கி கொண்டாள்.
அவளின் சிரிப்பு, சந்தோசம், கோபம், பொழுது போக்கு, உரிமை, உரை எல்லாம் அவள் கணவன் மட்டும் தான். அதற்கு தக்க, அவனும், மனைவியை இழுத்து கொண்டான். நடந்த நல்ல காரியம் இது தான். ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து, தெளிவு கண்டார்கள்.
மதுவும் கண்டு கொண்டாள், கரிகாலன் தன் கணவன் ஒரு நேர்மைவாதி என்று. வெகுளி, நேர் சிந்தனை கொண்டவன், சிறந்த பண்பாளன், பொறுமையானவன், அமைதியானவன் ஆனால் அழுத்காரன், சிரித்த முகம் கொண்டவன். அத்தோடு, முத்தாய்ப்பாக தமிழ் ரசிகன்… ஆம், தமிழ் ரசிகன் தான். அவ்வளவு புடிக்கும் அவனுக்கு தமிழ் மொழியை. அதன் இனிமையை நாள் முழுக்க பேசி கொண்டே இருப்பான்.
அன்று ஒரு நாள், மது தன் கணவனிடம்.
“பாட்டு மேல ஏன் உங்களுக்கு அவ்வளவு ஆசை கரிகாலன்?…”
“ தமிழ் மேல ஆசை மது. ஊண் உருக்கி குடிக்கும் அளவுக்கு ஆசை மது. சொன்ன புரியாது. அதை உணரணும். தன்னை மறந்து தேடி, திளைக்கணும் மது. ஒரு மொழி இனிக்குமா?…”
“இனிப்பா… என்ன சொல்றீங்க கரிகாலன்…”
“ஆமா மது. தமிழ் மொழி இனிக்கும். உச்சரிக்கும் போது அதன் இனிமையை உணர முடியும். நம்ம முகத்தை முழுசா அசைக்கும் தமிழ் உச்சரிப்பு. இப்ப யாரும் சரியா உச்சரிக்கிறது இல்லை. அதான், அதன் இனிமையை உணரல்லை” என்று சொல்ல.
“ எப்படி கரிகாலன் உணர?” என்றாள். அவனின் முக பாவனை, ரசணை, கனிவு அவளையும் தூண்டி விட்டது.
“ பாட்டு தான் மது. பழைய பாட்டை கேட்காத, கவனி. அதோட உச்சரிப்பை உத்து பாரு. நீயே சொல்லி பழகு. தன்னாலே புரியும்…”
“எப்படி?… நீங்க எதை உணர்ந்தீங்க கரிகாலன்…”
“ அதுவா… ல், ள், ழ். இது தான் எனக்கு பிடிச்சது. ரொம்ப பிடிக்கும். பாடுறேன் கவனி…” என்று வாத்தியாராக அவன் மாற, கவனிக்கும் மாணவியாக இல்லாமல், ரசிக்கும் மாணவியாக மாறினாள் அவள். அதாவது, அவள் கணவனை…
கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே…
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாமே…
வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொள்ளுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
என் காதல் கண்கள் போகும் பல்லக்கிலே…
தேனோடை ஓரமே… நீராடும் நேரமே…
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி…
ராஜராஜ சோழன் நான்…
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்…
“ வாவ்…. சூப்பர் கரிகாலன். அமேசிங்… நான் இப்படிலாம் ரசிச்சது இல்லை. நீங்க பாடும் போது நிஜமா ரசிக்கிறேன். நான் நியூ சாங்ஸ் தான் கேட்டு இருக்கேன். இதை கேட்டாலும், இந்த மாறி ஃபீல் பண்ணல. யூ ஆர் கிரேட் கரிகாலன்” என்று புகழ்ந்து தள்ள,
கொஞ்சம் வெட்கம் கூட வந்தது அவனுக்கு. நிறைய ரசிச்சு, அனுபவிச்சு இருக்கானே ஒழிய, பாடி காட்டிய தில்லை. மனம் திறந்த ஒரு பாராட்டு, அவனை பறக்க செய்தது.
“மது… காமத்தை வெளிப்படையா, எந்த ஒளிவு மறைவின்றி அப்படியே விரசம் இல்லாம சொல்ல முடியுமா என்றா… கண்டிப்பா தமிழ் சொல்லும். எந்த மேப்பூச்சும் இல்லாம, தாம்பத்திய அந்தரங்கத்தை அப்படியே சொல்லும்…” என்றவன்.
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றயரியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள”
“இது என்ன தெரியுமா!… ஒரு திருக்குறள். காமத்து பால்ல வரும், ஆயிரத்து நூத்தி ஒனன்னாவது குறள். நிறைய பேருக்கு புரியாது. அதனோட அர்த்தம் என்னனு தெரியுமா…”
“கண்ணால பார்த்து, காதால கேட்டு, நாக்கால சுவச்சு, முக்கால முகர்ந்து, உடம்பால தொட்டு அனுபவிக்க கூடிய எல்லா சுகமும் ஒரு பொண்ணு கிட்ட இருக்கு. இது தான் பொருள். பொதுவா சொல்லும் போது காமம் தான் தெரியும். ஆனால், தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த ஒரு கணவன், தன் மனைவி கிட்ட சொல்லும் போது… அது காதல் தான… காமத்தோடு சேர்ந்த காதல் தான் திருமணம். நம்ம நாட்டுல கல்யாணத்துக்கு பின்ன தான் பலர் காமத்தை அறிகிறோம். அப்ப, இது ஒரு கணவன், மனைவிக்கு உரியது தானே… களவியல் ஒதுக்க கூடியது இல்லை. இதுவும் இயற்கைய போல ரசனைக்கு உட்பட்டது தான்… அதை ஆச்சு பிசராமல் சொல்வது தான் தமிழ் மொழி” என்று ஒரு வித லகிப்போடு சொல்ல
அவனின் மற்றொரு பரிமாணத்தை வியந்து தான் பார்த்தாள் மது. அவளை பொறுத்த வரை கரிகாலன் என்பவன் ஒரு அப்பாவி, முட்டாள், சாம்பார் சாதம், கிராமத்து காட்டான், நாகரீகம் தெரியாதவன்” என்று தான் அவள் நினைத்திருக்க, அவள் கணிப்பை பொய்யாக்கி, தான் ஒரு தனித்தன்மை வாய்ந்தவன் என்று காட்டினான்.
பார்த்த உடன் பிடிக்கும் தோற்றம் இல்லை தான். ஆனால், அவனின் குணம் கட்டி இழுக்கும். அவளையும் இழுத்தது. விரும்பியே அவனோடு நேரம் செலவிட்டாள்.
கிணற்றடியில் பெண்கள் துவைத்து கொண்டு இருக்க. மலையடிவார பகுதியை மனைவிக்கு சுற்றி காண்பித்து அழைத்து வந்தான் கரிகாலன். வரும் போதே கண்டு கொண்டான், கருப்பாயி, சகுந்தலா, அத்தை கலா என்று சில பெண்கள் துவைத்து கொண்டு இருப்பதை பார்த்து, அவர்களோடு ஒட்டாமல் சுற்றியே அழைத்து வர, மதுவும் ஒதுங்கியே வந்தாள்.
“அதை ஏன் கேக்குற… ஏதோ பொட்ட கோழி அடை காக்குற மாதிரி, கைகுள்ளே வச்சு இருக்கான்…” என்று சடவாக மாமியார் பேச.
“துணி கூட மருமகன் தான் துவைக்குதாம். வெள்ளை தோல்… அதான் மயங்கி கிடக்கான்…” என்று தேவி சொல்ல.
“ மத்தியானம் அவ உறங்குன கூட, இந்த பைய காலடியில தான் தவம் கிடக்கான்… ஏதோ கோழி குஞ்ச காக்க தூக்கிட்டு போற மாதிரி காவல்…” கருப்பாயி குரலில் வெறுப்பு மண்டி கிடந்தது.
“ இல்லாம என்ன… கால் புடிச்சு விட ஆள் வேணாமா…” என்று சொல்லி சகு சிரிக்க. மற்ற பெண்களும் சிரித்தார்கள்.
அத்தோடு, “ குடுத்து வச்ச மகராசி!… தரேன்னு சொன்ன சீரும் இல்லை, போட்டு வந்த நகையும் இல்லை. ஆனாலும், தாங்குற புருசன், பயந்துக்கு வேலை செய்யுற மாமியார்…” என்று பெருமூச்சு விட.
பற்றி கொண்டது கருப்பாயிக்கு. “அதானே மதினி! சும்மா கட்டி வந்த மாதிரி தான அவளை கூட்டி வந்து இருக்கீங்க. இதுல அவளுக்கு சேவகம் செய்ய வேற வேணுமா!… நீங்க தான் அமைதியா போறீங்க மதினி. வேற வீடா இருந்த பிள்ளையை திருப்பி அனுப்பி வச்சுடுவாங்க…” என்று தேவி சொன்னார்.
கருப்பாயி முகம் உக்கிரமாக மாறி போனது.
“ஒத்த பவுன் கூட போட்டு வரல. எல்லாம் கண் துடைப்பு. போடுற மாதிரி போட்டு, வாங்கிட்டு போய்டாங்க . இதுல, நாம பத்து பவுன் தாலி கொடி போட்டு விட்டோம். ஏமாளி தான் பாண்டி வீடு” என்று சமயம் பார்த்து வன்மத்தை இறக்கி வைத்தாள் சகுந்தலா.
மற்றவர்கள் சொல்ல, சொல்ல தாங்கள் ஏமாந்து விட்டோம் என்ற நினைப்பு தான் கருப்பாயிக்கு.
அங்கு கணவன் , மனைவி இருவரும் ஏதோ பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள். மதுவின் நாள் சுவாரஸ்யம் தான் கணவன் உடன், இது தான் தாங்கள் சேர்ந்து இருக்க போகும் கடைசி நாள் என்று அறியாமல் தான் போனார்கள்.