நாளை திருமணம், இன்று அந்த திருமணத்திற்கான பரபரப்பு ஏதுமின்றி அமைதியாகவும், மிகுந்த அழுத்தம் நிறைந்ததாகவும் காணப்பட்டது அந்த வீடு. மதுரை தபால் தந்தி நகரில் தான் உள்ளது, ஓரளவு வசதி வாய்ந்த, மேல் தட்டு மக்கள் இருப்பிடம். அங்கு இருப்போர் பெரும்பாலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தான்.
அதில் ஒருவர் தான் சுந்தரம், கொட்டாம்பட்டி ஊராட்சியில் உள்ள மத்திய அரசு வங்கியில் பணிபுரிகிறார். அவரின் பெண் மதுமிதாவுக்கு தான் நாளை திருமணம். வீடு தான் பரபரப்பின்றி காணப்பட்டது. ஆனால், சுந்தரம் ரொம்பவும் பரபரப்பாக தான் காணப்பட்டார். பெண்ணை பெற்ற மனிதர், திருமணம் நல்ல படியாக முடியும் வரை ஓய்வு என்பதே கிடையாது. இத்தனைக்கும் ஆடம்பர திருமணம் என்றெல்லாம் இல்லை. மாப்பிள்ளை ஊரில், குல தெய்வக் கோவிலில் வைத்து தான் திருமணம். மிக நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தான் அழைப்பும்.
அப்படி இருக்க, அவரின் இந்த பரபரப்புக்கு காரணம் என்ன?.. வீட்டாரின் ஒத்துழைப்பு இல்லாதது தான். வீட்டார் என்றால் அவரது மனைவி, மகன் மட்டுமல்ல கல்யாண பெண் மதுமிதாவும் தான். மனைவி, மகன் மற்றும் மகள் என்று சொந்த குடும்பத்தையே எதிர்த்து ஏற்பாடு செய்த திருமணம். அந்தளவிற்கு மணமகன் சிறப்பானவன் என்றால், இல்லை என்று மீனாட்சி கோவிலில் வைத்து சத்தியம் செய்வார் அவரின் தர்மபத்தினி மீனாட்சி. அவரின் பெரிய வாதமே, மணமகன் சரியில்லை என்பது தான். மணமகன் வீட்டார் சரியில்லை என்றால் கூட விட்டு விடலாம். எல்லாம் நிறைவாக அமையாது இல்லயா !…
ஆனால், இங்கு குறையே மணமகன் தான். அவரின் கண்ணோட்டத்தில் மணமகன் குறைவானவன், சரியில்லை என்பது, தங்கள் மகள் மதுமிதாவுக்கு துளி கூட பெருத்தமில்லை என்பது தான். ஊர் சுத்த கிராமம், கூலி வேலை செய்யும் பெற்றோர், படிக்காத அண்ணன், உடன் ஒரு தங்கை, அவளின் பொறுப்பும் அண்ணன்கள் வசம், ஓட்டு வீடு மற்றும் அதை ஒட்டிய கொஞ்ச காணி. அதன் தொட்டு சுத்தமாக விருப்பம் இல்லை பெண் கொடுப்பதற்கு. ஆனால், என்ன செய்ய, எவ்வளவு வாதாடியும் கணவனிடம் தம் வாய் செல்லாமல் போக, கல்யாண விசயத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார் தாய் மீனாட்சி.
அவரின் ஒரே ஆறுதல் மாப்பிள்ளை அரசு பள்ளி ஆசிரியர் என்பது தான். ஆனால், அது தான் மணமகள் மதுவின் பெரிய குறையே!… வாத்தியார் அதுவும் தமிழ் வாத்தியார். மதுவின் சிறு வயதில் மாணவியாக இருக்கும் போதே, அவளுக்கும் வாத்தியார்க்கும் சுத்தமாக ஆகாது. அப்படி ஒரு சேட்டைகார மாணவி தான் மது. கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட், எப்போதும் அவுட் ஸ்டேடிங் தான். அதாவது, வகுப்பறை வெளியேவே நிற்கும் மாணவி. படிப்பில் சுட்டி என்றாலும் சேட்டையில் கெட்டி. எந்தளவிற்கு என்றால், கல்லூரி காலத்திலும் ஆசிரியரிடம் கொட்டு வாங்கும் அளவிற்கு. ஏதாவது ஒரு ஆசிரியரிடம் முட்டி கொண்டால் பரவாயில்லை எல்லா ஆசிரியரிடம் முட்டி கொள்ளும். “அராத்து” என்று பெயர் வாங்கிய பிரபலம் நம் மது. அப்படி பட்ட பெண்ணிற்கு தமிழ் வாத்தியார் மணமகன் என்ற போது மனம் சுணங்கி போனது.
தந்தையிடம் எளிதில் பேச முடியாது. அதுவும் தன் மேல் தவற்றை வைத்து கொண்டு தந்தையிடம் என்ன பேச முடியும்!… மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று ஆரம்பித்த போதே, அதற்கான தகுதி உன்னிடம் இருக்கா? என்று கேட்க வில்லை பார்வையில் உணர்த்தி விட்டார். அதன் பின்பு நடப்பதை மூன்றாம் ஆளாக நின்று பார்க்க மட்டும் தான் முடிந்தது.
அப்படி என்ன தவறிழைத்து விட்டாள். மணமகன் தேர்வு என்பது பெண்ணின் அடிப்படை உரிமை. தன் வாழ்க்கை துணை மேல், பார்த்தவுடன் காதல் வராது தான்!… அதற்காக பிடித்தம் என்ற உணர்வு வராமல் திருமண பந்தத்தில் எவ்வாறு இணைவது. இது எல்லாம் மனதில் தோன்றும் கேள்வி தான், வாய் விட்டு கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் நீ என்ன ஒழுங்கு? என்று ஆயிரம் பேர் குற்றம் செல்ல தயாராக நிற்கையில், தன் மன குமுறல் மனதோடு தான்.
அப்படி என்ன தான் மது தவறு செய்தால் என்றால்!…. வேறென்ன “காதல்” தான். அதுவும், தான் கொண்ட காதலுக்காக சாக துணிந்து, போலீஸ் வரை சென்று பெரிய கலவரம் ஆகிவிட்டது. ஊர் முழுக்க மதுவின் பெயரும் பிரபலமாகி விட, அதிலிருந்து வெளியேறவே மூன்று வருடம் ஆனது.
இவளுக்கு கல்யாணமா!.. இவளையும் ஒருத்தன் சரின்னு சொல்லிட்டானா!… அழகா இருக்கா, அதான் தப்பு மறைஞ்சு போச்சு போ!… என்று பேசும் உறவுகளுக்கு மத்தியில் தன் விருப்பம் பேச முடியுமா!…
“காதல்” என்ற உணர்வே அலாதியானது. அதன் மகத்துவத்தை உணர தான் முடியும். கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தை ஒரு பெண் பார்க்கிறாள் என்றாள் அடித்து சொல்லலாம், அவள் வசம் காதல் உள்ளது என்று!… தன்னை அலங்கரிக்கவா கண்ணாடியை பார்ப்பார்கள்… ம்கூம், தான் அவ்வளவு அழகா! என்று தான் கண்ணாடியை பார்ப்பாள். தன்னையே ரசிக்கும் மனபான்பை வளர்வது காதலில் மட்டும் தான்.
பொதுவாக, பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வும், எதிர்கால சிந்தனையும் அதிகம் இருக்கும். சமூகம் அது சார்ந்த கட்டுப்பாடும், கலாச்சாரம், கடமை, வளர்ப்பு பற்றி ஆழ்ந்த அறிவும் இருக்கும். இத்தனையும் தள்ளி ஒரு காதலை பெண் ஏற்கிறாள் என்றால்,அந்த காதல் தான் எத்தனை சக்தி வாய்ந்தது, உண்மையுள்ளது, உயர்ந்தது, மதிப்பு மிக்கது. அத்தகைய காதலை சுமப்பவள் தான் எத்தனை மரியாதையானவள்.
நிச்சயம் மரியாதையானவள் தான்!… ஆனால், அது காதலில் வெற்றி பெற்றவர்களுக்கே பொருந்தும். அதுவே, அந்த காதலில் தோல்வியுற்றால்!… அதுவும் ஒரு பெண் காதலில் தோற்றால். அவள் மதிப்பு மிக்கவள் தானா? என்பதே கேள்வி குறி தான். அந்த காதலுக்காக சமூகத்தை எதிர்த்து போராடினால்….
மற்றவர்கள் பார்வையில் அனுதாபமோ, அரவணைப்போ கிடைக்க போவதில்லை. ஒரு பெண்ணின் ஒழுக்கம், வளர்ப்பு, பெற்றோர், தகுதி, அவளின் கல்வி நிலை முதற்கொண்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு குப்பையில் தூக்கி எறியப்படும் காகிதமாக கசக்கி தூக்கி எறிந்து விடுவார்கள்.
அப்படி தூக்கி எறியப்பட்ட காகிதம் தான் மதுமிதா. ஒற்றை காதலில் கடுமையான விமர்சனங்களை தாராளமாக எதிர்கொண்டாள் பெண். மனம் கெட்டவள் மானம் கெட்டவள் தான் என்ற சமூகத்தின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டு, தான் உயிர் கொண்ட காதலனை கரம் பிடிக்க முடியாமல் போன வலியையும் வலிக்க, வலிக்க கடந்து, ஆற்றின் நீரோடு அடித்து செல்ல படும் மீனாக இல்லாமல், எதிர்நீச்சல் போட்டு தன்னை நிலை படுத்தி கொண்டாள்.
கல்லறையில் பூக்கும் பூக்கள் வீண் தான், யாரின் பாதத்தையும் அலங்கரிக்க முடியாதல்லவா!…
அத்தகைய பூக்களை மாலையாக கோர்த்து மார்பில் அலங்கரிக்க வந்தவன் தான் கரிகால பாண்டியன். தமிழ் வாத்தியார். பார்க்கும் போதே தெரிந்து விடும் கிராமத்து காளை என்று, தென் தமிழக நிறமும், கிராமத்து உடல்வாகும் கொண்டவன். இரு புருவங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல், கட்டை மீசையுடன், சிவந்த கண்களுமாக தான் காணப்படுவான்.
அவனை பார்க்கும் போதே, தன்னை போல் உடம்பில் ஒரு உதறல் தோன்றும் மதுமிதாவுக்கு. கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவனை பார்த்தவுடன் ,பழைய படங்களில் பெண்களை கதற கதற தூக்கி செல்லும் வில்லனை நினைவு படுத்தியது பாண்டியன் முகம். எந்த கோணத்தில் பார்த்தாலும் மென்மை என்பது கிஞ்சித்தும் இல்லை. அவனின் ஒரு கை பிடி போதும் மதுவை சுருட்டி விடுவான். அவனோடு சுத்தமாக ஒட்டவில்லை. எப்படி காலத்திற்கும் ஓட்ட!.. அது தான் மதுவின் பெரிய கவலையே.
“பிச்சைக்காரன் தகுதி பார்த்த கையேந்துவான். அந்த மாதிரி, ஊர் முழுக்க உன் மக பேர் கெட்டு போச்சு. இந்த ரெண்டு வருசமா சல்லடை போட்டு தேடியும், ஒருத்தன் கூட நமக்கு தக்க கிடைக்கல. பாண்டியன் ரொம்ப நல்ல பையன். எம் மேல வச்ச மரியாதைக்காக, நொடி தாமதிக்காமா, சார் பொண்ணா சரிதான்ன்னு ஒத்தை சொல்லுல எனக்கு நிம்மதியா குடுத்துட்டான். எதுவும் பேசாம அம்மாவும், பொண்ணும் கல்யாணத்துக்கு தயார் ஆகுங்க. உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்குறத இருந்தா… இந்த வீட்டுல ஆம்பிளை இல்லன்னு நினைச்சு செய்ங்க!” என்று ஒரு பேச்சில் சுந்தரம் முடித்து விட்டார்.
அதன் பின் மீறுவது யார்…. அடுத்தடுத்த காரியங்கள் நடந்தேற, நாளை திருமணம் என்றளவில் வந்து விட்டது.
ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து அமர்ந்தாள் மது. நடு இரவு, தூக்கம் பொட்டுக்கும் இல்லை. இது, அவளுக்கு பழக்கம் தான். ஆனால், சூழ்நிலை தான் வேறு…
அங்கிருந்த சன்னல் வழியே வீதியை பார்த்தாள் பெண். பார்வை மட்டும் தான் அங்கு, சிந்தனை எல்லாம் பாண்டியன் தான். நாளை முதல் எல்லாம் மாறி விடும். தன் வீடு, தன் அறை, பிடித்த பால்கனி, விருப்பமான பூந்தோட்டம் எல்லாம் வேறாகி, எங்கோ இருக்கும் வீடு தன் வீடு. அங்கிருக்கும் மனிதர்கள் தான் தன் குடும்பம். அந்த முரட்டு மீசை தான், தன் வாழ்க்கை, எதிர்காலம், எனக்கு அனைத்துமனவன். இனி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கால் போன போக்கில் பாதை, விதி போன போக்கில் வாழ்க்கை.
தன்னால் இதற்கு மேலும் போராட முடியாது என்ற ஒரு நிலை வரும் போது, தன் பிடியில் உள்ள அனைத்து கயிறுகளையும் விட்டு விட வேண்டும். வாழ்க்கை ஓடம் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு!… அத்தகைய நம்பிக்கையை துணை கொண்டு, மனதை திடப்படுத்தி திருமணத்திற்கு தயாரானாள் மதுமிதா.