ரம்யா தைரியமாக தான் இருந்தாள். அவள் தப்பு செய்தாள், நான் தட்டி கேட்டேன். அவ்வளவு தான் சண்டை, உண்மை எனக்கு தெரிந்து விட்டது என்ற பயத்தில் தான் ஓடிவிட்டாள் என்று சொல்லி வீட்டு ஆட்களை சமாளிக்க திட்டம் வகுத்தாள். மது, தவறானவள் என்ற ஒன்றை கொண்டு, எல்லாவற்றையும் சரிகட்ட நினைத்தாள். அவர்களாக கேட்காத வரை வாய் திறக்க கூடாது என்று எண்ணியவள். மது வீட்டை விட்டு சென்றதை பற்றி மூச்சு விட வில்லை. எப்போதும் போல மாமனார் அறைக்கு சென்று, தேவையை கேட்டு விட்டு, தன் அறைக்கு வந்து அடைந்து கொண்டாள். என்ன தான் தன்னை திடப்படுத்தி கொண்டு படுத்தாலும் பொட்டு தூக்கம் இல்லை. நாளை என்ன நடக்குமோ என்ற பயம் மனதை கவ்வியது.
மது மனதில் கணக்கீடு செய்து கொண்டு இருந்தாள். ஒரே பஸ் என்ற போதும், கரிகாலன் இருக்கும் இடம் சென்று சேர மணி மூன்றை தொடும். கொஞ்சம் சோர்ந்து தெரிந்தாள்.
பஸ் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் பேச்சு கொடுத்தார். அவர் மனதில் ஒரு நெருடல், ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு துணை யாரும் இன்றி தனியாக கணவனை தேடி செல்லும் காரணம் என்ன?… பிரச்சனை பெரிதா… தயங்காமல் அவளிடம் கேட்டு விட்டார். அவர்கள் இருவருக்கும் நல்லதொரு பழக்கம் இருப்பதால் கேட்க.
மது தயக்கம் எல்லாம் காட்ட வில்லை. அவர் உதவி அவளுக்கு கண்டிப்பாக வேண்டும். தற்போதைய அவளின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் அவர் தான். அதனால், ஆதி முதல் அந்தம் வரை சொல்லி விட்டாள். ராமநாடு செல்ல மணி இரண்டு ஆகும். அங்கிருந்து எவ்வாறு விடத்த குளம் செல்வது. இதுவரை அறியாத இடம், குருட்டு நம்பிக்கையில் முன்னேற கூடாது அல்லவா. கணவனை சென்றடைய அவர் உதவி நிச்சயம் தேவை.
அவருக்கு ஆச்சர்யம் “பெத்தவங்களையே பார்க்காத இந்த காலத்தில கூட பிறந்தவர்கள் முதற்கொண்டு சரி காட்டுகிறான்…” என்று நினைத்தவர்,
“வெகுளியான பையன்னு தான் நினைச்சேன். இம்புட்டு நல்லவான இருக்கான். இந்த காலத்தில நல்லவனுக்கு ஏதுமா மதிப்பு… ஏமாந்தவன்னு முத்திரை குத்திருவானுங்க…” என்று மதுவிடம் சொல்ல, ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தாள்.
அதன் காரணம் அவளும் கணவனை அப்படி தான் நினைத்தாள்.
பேருந்து வேகமெடுக்க கண் மூடி சாய்ந்து கொண்டாள் பெண். கணவனோடு சேர போகிறோம் என்று நிம்மதி ஒரு புறம் இருந்தாலும், பிறந்த வீட்டை முற்றிலும் தொலைத்து விட்ட ஏக்கம் மனதில் இருந்தது.
இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என்ற சொல்லை தைரியமாக எதிற்கொண்டாலும், மனதளவில் உடைந்து போனாள். அந்த வீடு அவளுக்கு அவ்வளவு ஸ்பெஷல். அவளின் எட்டு வயதில் கட்ட தொடங்கிய வீடு. தன் குட்டி கைகளில் செங்கல் சுமந்து சென்று அடுக்கி வைப்பாள். தங்களின் சொந்த வீடு என்பதில் அவ்வளவு பெருமை. அவள் வளர வளர, வீட்டையும் எடுத்து கட்டினார் சுந்தரம். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இவள் விருப்பம் தான். ஊஞ்சல் தொடங்கி, நட்டு வைக்கும் செடி வரை அவள் ஆசை பட்ட படி தான். அவளின் முழு தேர்வு தான் அந்த வீடு. கிட்டத்தட்ட பதினெட்டு வருடம் அந்த வீட்டில் தான் வாழ்ந்து இருக்கிறாள். இன்று ஒரு நொடியில் அந்த வீட்டோடு அவளுக்கு தொடர்பில்லை என்றாகிவிட்டது.
பெண்ணாய் பிறந்தால் ரெண்டு வீடாம். எனக்கு ஒரு வீடு கூட நிலைக்க வில்லையே. என் வீடு என்ற ஒன்று எனக்கு இல்லாமல் போனது. மனம் வெறுமையாக எண்ணிய போது தான் மனதில் பளிச் என்று ஒளி வீசியது.
அட!… வீடு இல்லை என்று எப்படி யோசித்தேன். என் கணவன் தன் உழைப்பில் வாங்கிய எங்கள் சொந்த இடம் தான் இருக்கிறதே… அரைகுறையாக கிடந்தாலும், தங்களுக்கு சொந்தமானது அல்லவா… தகரம் போட்டு கூட குடி இருக்கலாம். குருவி கூடு மாதிரி என்றாலும், தனக்கு மட்டுமே சொந்தானது. அந்த வீட்டின் படி ஏறி வந்து தன்னை யாராவது வெளியேற்ற முடியுமா… மனதில் கணவனை எண்ணி பெருமை பூத்தது. இந்த பரந்த உலகில், தனக்கு மட்டும் தலைக்கு மேல் கூரை இல்லை என்று கவலைப்பட்டேனே… என் நிலையை மற்றவர்கள் முன் உயர்த்தி விட்டான் கணவன். மக்கு மது… இந்த யோசனை முன்னவே யோசிக்காமல் விட்டாயே… அந்த ரம்யாவ ஒரு வழி செய்திருக்கலாம். கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.
சரியாக இரண்டு மணிக்கு ராமநாடு பெரிய பேருந்து நிலையம் வந்து இறங்கியது பஸ். மெதுவாக இறங்கி போய் முகம் கழுவி, பாத்ரூம் போய் வந்தாள். டிரைவர் அண்ணா டீ குடிக்க சொல்லியும் மறுத்து விட்டாள். அவளுக்கு கணவனை பார்க்கணும் போல இருந்தது. நெஞ்சு நிறைய தைரியம் இருந்தும், அந்த இருள் கொஞ்சம் பயம் தான்.
டிரைவர் அண்ணா தான், அவருக்கு தெரிந்த வண்டி டிரைவர் கிட்ட பேசி விடத்த குளம் போக ஏற்பாடு செய்தது. அவர் மேல் நம்பிக்கை இருந்த போதும், மனதில் ஒரு பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஊர் போய் சேரும் வரை பொட்டு தூக்கம் இல்லை. இத்தனைக்கும் உடல் அவ்வளவு அசதி. அவள் மேற்கொண்ட பயண வேளையே தூக்கத்தை விரட்டியது. இரு பக்கமும் கருவேலமரம் நிறைந்து காணப்பட அப்படி ஒரு பயம். சிறு சிறு ஊர்கள் கூட கண்ணில் தென்பட வில்லை. போனை கையிலே வைத்து இருந்தாள்.
டிரைவர் நல்லவர் தான். சரியாக மூன்று மணிக்கு ஊர் வந்து விட்டார். விடத்த குளம் போடு பார்த்து தான் மதுக்கு உயிரே வந்தது. அங்கு வெளியே தூங்கி கொண்டு இருந்த ஒன்றிரண்டு பேர், வண்டி சத்தத்தில் முழித்து விசாரித்தார்கள். நல்லதா போச்சு, இல்லாவிட்டால் இந்த இருட்டில் கணவனை எங்கு போய் தேட…
“யாரு?… வாத்தியார் தம்பியா… மதுரகார பையன். நீங்க அவருக்கு என்ன வேணும். ஓ!.. வாத்தியார் சம்சாரமா… வாங்க வீட்டை காட்டுறேன்…” என்று அழைத்து சென்ற முதியவர்.
சற்று தள்ளி இருந்த வீட்டை காட்டினார். “ அந்த அங்க தான் மேல் வீடு. லைட் கூட எரியுது பாருங்க. தம்பி வேலை முடிஞ்சு, செத்த முன்ன தான் வந்துச்சு”… சொல்லிய முதியவருக்கு நன்றி சொல்லி, டிரைவர்க்கும் பணம் கொடுத்து நன்றி சொன்னாள். பின் மெதுவாக வீட்டை நோக்கி நடை போட்டாள். மாடி படி செல்லும் படியில் கால் வைக்கும் போதே மனதில் அப்படி ஒரு நிம்மதி. இத்தனை நேரம் இருந்த பயம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.
மேலே சென்று பார்த்த போது, வெளி லைட் எரிய ஒரு நாற்காலி போட்டு விடை தாள் திருத்தி கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் மது முகம் மலர்ந்தது. இந்த அலைச்சலுக்கு ஒரு பலன்.
யாரோ நிற்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவன். அரண்டு போய் எழுந்து நின்று விட்டான். அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சிரித்த முகமாக நின்று இருந்தது, அவன் மனைவியே தான்.
“ நீ” என்று புரியாமல் கரிகாலன் இழுக்க.
“நானா, மதுமிதா கரிகாலன்…” என்றாள் தெளிவாக.
“மது, நீ எப்படி?… என்னாச்சு… நைட் நான் பேசும் போது கூட சொல்லலையே… ஏதும் பிரச்சனையா?… நீ, எனக்கு தான போன் பண்ணி இருக்கணும். ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்து நிக்கிற. அதுவும் நடு ராத்திரி…”அவனுக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. இன்னும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. மனைவி தைரியமானவள் என்று தெரியும். அதற்காக இந்த குருட்டு தைரியம் ஆகாது.
“நான் கேக்குறேன்… நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் மது. இந்த நேரத்துல தனியா வரலாமா?… எனக்கு ஏன் போன் பண்ணலை?… நைட் நேரம் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்ன பிரச்சனை?…” என்று தொடர் கேள்விகள் கணவனிடமிருந்து வந்தது.
அவள் முகம் அப்பட்டமாக சோர்வை காட்ட. மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியனான் கரிகாலன். அவள் அங்கேயே நின்று இருக்க, வா என்று தலையசைத்தான். என்ன நடந்தது என்று புரியாத திகைப்பு அவனுக்கு, மனைவி அருகே சென்று பையை வாங்கியவன். அவளை அமர சொன்னான்.
“இல்லை கரிகாலன். நான் குளிச்சுட்டு, தூங்கணும்…” என்றாள் மது.
பாத்ரூம் வெளியே தான் இருந்தது. பேருந்து பயணம் கசகச என்று இருக்க குளிக்காமல் உறங்க முடியாது. தை மாதம், நடு ராத்திரி தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் உடம்பில் பட்டதுக்கே நடுங்கி போனாள். இதை எல்லாம் நீ பழகி தான் ஆகவேண்டும் மது என்று தனக்குத்தான் சமாதானம் சொல்லி கொண்டு, அவசர குளியலை முடித்து கொண்டு வந்தாள்.
கரிகாலன் சாதத்தை சூடு செய்து எள்ளு பொடி போட்டு தந்தான். வேகமாக வாங்கி சாப்பிட்டாள் மது. தண்ணியை சூடு செய்து கொடுத்தான். கொஞ்சம் இதமாக இருந்தது.
அவன் சொல்லாமலே அங்கிருந்த குட்டி கட்டிலில், இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டாள். தனக்காக தனியே பாய் விரித்தான் கரிகாலன். எட்டி பார்த்தவள்,
“கரிகாலன் ஐ நீட் யு…”
அதிர்ந்து போனவன், “மது…” என்றான் சத்தமில்லாமல்.
“ம்ச்…நான் கேட்டது வேற. நீங்க பக்கத்துல இருங்க கரிகாலன். மனசு அமைதியா இருக்க மாட்டாது. ஒரு நாள் நைட் போதும் மது தேறி வந்துறுவா…அதுக்கு மேல ஒரு விசயத்தை நினைச்சு கவலை படமாட்டேன்.”
மெதுவாக அவள் அருகே சென்று, ஒரு சாய்த்து படுத்தவன். மெல்ல அவளை அணைத்து கொண்டான்.
அவன் மார்பில் முகம் புதைத்துக் கண் மூடினாள். தற்போது அவளுக்கு இது தான் தேவை என்பது போல… மனைவியை அணைத்த கையால், அவளின் கழுத்து, முதுகு என்று பிடித்து விட தொடங்கினான். நீண்ட நேர பேருந்து பயணம் அவன் அறியாததா… சற்று கீழ் இறங்கி அவளின் தொடை, கால் என்று பிடித்து விட்டவன். மீண்டும் அவளை அணைத்து கொண்டு உறங்கி போனான்.
காலையில் தாமதமாக தான் எழுந்து வந்தாள் மது. அப்போதே கரிகாலன் சமையல் வேலை எல்லாம் முடித்து வைத்து இருந்தான். தன் காலை கடன்களை முடித்து கொண்டு வந்தவள், அந்த வீட்டை சுற்றி பார்த்தாள்.
ஒற்றை அறை கொண்ட வீடு. இல்லை, இல்லை ஒற்றை அறை தான் வீடே. அதில் ஒரு பகுதி கட்டில், ஒரு பகுதியில் சமையல் மேடை இருந்தது. பாத்ரூம் வெளியே தான் இருந்தது. வெளி பக்கம் நல்ல விலாசாமாக, இடம் தாராளமாக கிடந்தது.
ஒரு அடுப்பு, சில பாத்திரம் தவிர சமையலுக்கு ஏதும் இல்லை. சுவரோடு ஒட்டிய பிரோ இருக்க, துணி அடிக்க பிரச்சனை இல்லை. மத்தபடி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர் என்று எதுவும் இல்லை. மிக்ஸி இருந்தது ஒரு ஆறுதல்.
அவளின் ஆராயும் பார்வையை பார்த்தவன், “இதுக்கு தான் உன்னை கூப்பிட்டுக்கவே இல்லை. பல சிரமம் இருக்கு. நீ ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்ட. உன் வசதிக்கு இது செட் ஆகாது. தண்ணி வசதி கிடையாது. குளிக்க, துவைக்க இறங்கி போய் எடுத்து வரணும். குடி தண்ணீர் பத்து நாள் ஒரு தடவை தான் வரும். நான் வெளிய தான் வாங்குவேன். உனக்கு மெத்தை, ஏ.சி இல்லாம தூக்கம் வராது. இங்க அது கிடையாது. அத்தோட என்னால இதையெல்லாம் இப்போதைக்கு செய்ய முடியாது. உன்னால அனுசரிச்சு இருக்க முடியுமா?…” என்றான் தெளிவாக.
அவளால் இங்கு இருக்க முடியாது என்று உறுதியாக நினைத்தான்.
இந்தளவுக்கு யோசனை எல்லாம் அவளிடம் இல்லை. இது எல்லாம் முன்பே அறிந்தது தான். அதனால் அவன் சொன்னதை கருத்தில் கொள்ள வில்லை. நேற்றைய இரவில், கணவன் என்ற ஒருவன் இல்லாவிட்டால், ரோடு தான் இருப்பிடமாக இருந்துருக்கும். அப்படி இல்லாமல் தலைக்கு மேல் ஒரு பாதுகாப்பான கூரை இருக்கு. அது போதும், தன்மானமாக வாழ…
“இனி உங்களோட தான் கரிகாலன். அது மாறாது. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா மட்டும் மேல சொல்லுங்க…” என்றாள் திடமாக.
“மது, என்னம்மா… ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற?… பிரச்சனை என்னன்னு சொல்லு மது. என்கிட்ட எதுக்கு மறைக்கிற, எதுவா இருந்தாலும் சொல்லு மதும்மா…”
“கரிகாலன் நடு ராத்திரி தனியா நான் வந்த போதே, உங்களுக்கு தெரிந்திருக்கும் ஏதோ பிரச்சனைன்னு, உண்மை தான். சண்டை போட்டு தான் வீட்டை விட்டு வந்துட்டேன். இனி அந்த பேச்சு வேண்டாம் கரிகாலன். எனக்கு கொஞ்சம் நிம்மதியா வாழணும். வசதிக்கும், நிம்மதிக்கு சம்பந்தமில்லை கரிகாலன்…” என்று தன் நிலையை சொல்லி விட்டாள் பெண்.
அவன் கையில் இருக்கும் போனை எடுத்தான். எவ்வளவு கேட்டும் என்ன நடந்தது என்று சொல்லவே மாட்டேன் என்கிறாள். நேரடியாக வீட்டிலே கேட்டு விடுவது என்று நினைத்து தான் போனை கையில் எடுத்தான்.
பார்த்து நின்றவள், பின் எதுவும் பேசாமல் தான் கொண்டு வந்திருந்த பையை தூக்கி கொண்டு வாயில் நோக்கி நடையை போட்டாள்.
பதறி போனவன், ஓடி வந்து அவள் கை பிடித்து தடுத்து நிறுத்தினான். அவன் கையை வேகமாக உதறி விட்டவள்,
“எம் புருசன், எனக்கான போக்கிடம், நான் முழுசா நம்பலாம்ன்னு நினைச்சு தான் உங்களை தேடி வந்தேன். இங்க வாரத்துக்கு பேசாம நான் சென்னை போன எம் பிரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. சந்தோசமாக கை கொடுப்பாங்க. எம் படிப்பு இருக்கு, என்னால வாழ முடியும். புருசன் வேணும்ன்னு நினைச்சு தான் வந்தேன். நீங்க, சுந்தரம் சார்க்கு விசுவாசியா இருக்காம, மதுவோட புருசனா அவ வலியை புரிஞ்சுக்க பாருங்க. இப்ப நான் சொல்றது தான். நீங்க, நான்… நாம மட்டும் தான். சரின்னா இருக்கேன். இல்லையா, என் வழில என்னை விடுங்க. அதை விட்டு என்னை தடுத்து சமாதானம் செய்ய நினைக்காதீங்க. எனக்கு கராத்தே தெரியும்…” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள்.
புரிந்து கொண்டான் கரிகாலன். நமக்கான வாழ்க்கை நிலைக்க, நாம சில நேரம் சுயநல முடிவு எடுக்க தான் வேணும். இந்த இடத்தில் மதுக்கு புருசனா நிக்க முடிவு செய்தான் கரிகாலன். சுந்தரம் சாரை நினைத்து கவலை வந்தது. யாரிடமும் சொல்லாமல் தான் வந்து இருப்பாள். இந்நேரம் அவர்கள் நிலை பாவம் தான். ஆனால், மது… அவள் அவர்களை விட பாவம் தானே. தனி ஒரு பெண்ணாக ராத்திரி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள் என்றாள். அங்கு அவள் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.
சொல்லாமல் வந்து விட்டாள், ஊர் என்ன பேசும். என் கணவன் இடம் தான் போகிறேன் என்று சொல்லி விட்டாவது வந்து இருக்கலாம். மது சொல்வது போல் தங்களுக்கான ஒரு வாழ்வை வாழ்ந்தால் என்ன… எனக்கான மனைவி, என் குடும்பம், எங்கள் வாழ்க்கை… ஒரு முடிவு எடுத்த பின் தான் மனைவியை சமாதானம் செய்தான். தான் மட்டும் போதும் என்று தன்னை தேடி வந்தவளை, நல்ல முறையில் வரவேற்க வில்லையே.
காலை உணவு பருப்பு சாதமும்,உருளை கிழங்கு வறுவல் தான். கரிகாலன் தான் செய்தான். இன்னும் மதுக்கு இடம் பிடிபடவில்லை.
“மது, திடீர்ன்னு லீவு தர மாட்டாங்க. நான் வேலைக்கு போய் தான் ஆகணும். நீ வீட்டுல இருந்துப்ப தான?…” என்ற கணவனின் கேள்விக்கு.
“அது ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் இருந்துப்பேன் கரிகாலன். ரொம்ப அசதி, தூங்கணும்…” என சொல்ல.
சரி என்று தலையசைத்தாவன், வேலைக்கு கிளம்பினான். வழியனுப்ப உடன் வந்த மது, மெருன் நிற சுடிதார் போட்டு இருந்தாள். அவர்கள் வெளியே வந்த சமயம், வேகமாக ஒரு பெண் அடுத்த வீட்டினுள் சென்றாள். புரியாமல் பார்த்தவள், பின் கண்டு கொள்ள வில்லை.
கணவன் சென்ற பின், மது செய்த முதல் வேலை, அவள் தந்தைக்கும், மாதவனுக்கும் அழைத்து மீனாட்சி, ரம்யா செய்ததை ஒன்று விடாமல் சொல்லி விட்டாள். ஆனால், கரிகாலன் பற்றியோ, தான் இருக்கும் இடம் பற்றியோ அவள் சொல்ல வில்லை. என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லி முடித்து கொண்டாள். மேற்கொண்டு அவர்கள் பேச அனுமதிக்கவே இல்லை.
எல்லாவற்றையும் எடுத்து ஒதுங்க வைக்க, வாசலில் ஒரு சத்தம். எட்டி பார்க்க, காலையில் அவள் பார்த்த பெண். அவர்களை பார்த்து சிரித்தவள்,
“உள்ள வாங்க…” என்று உபசரித்தாள்.
வந்தது இரு பெண்கள். சேர் எடுத்து போட்டு அமர சொன்னவள். கேள்வியாக முகத்தை பார்த்தாள்.
“நான் அம்பிகா, இந்த வீடு எங்க வீடு தான். கீழ இருக்கோம். இவ சுமதி பக்கத்து வீடு. வாத்தியார் பொண்டாட்டி வந்துருக்குன்னு, எங்க வீட்டு ஆம்பளை சொன்னாக. அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்…” என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டார்கள்.
“நான் மதுமிதா. மதுரை தான் சொந்த ஊர். நீங்க பார்க்க வந்த வாத்தியார் பொண்டாட்டி நான் தான்…” என்று மதுவும் தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்.
“இம்புட்டு அழகா பொண்டாட்டி இருக்கவும் தான் வாத்தியார் யாரையும் நிமிர்ந்து பார்க்கல போல…ரதி மாதிரி இருக்க…” என்றாள் சுமதி.
“வயசு புள்ளைகளை விடு. நாம அக்கா, தங்கச்சி மாதிரி. நம்ம கிட்டையாச்சும் ஒரு நாள் முகம் கொடுத்து பேசி இருப்பாரா…” என்று சொன்ன அம்பிகா. மதுவிடம் திரும்பி,
“உம் புருசனை குறை சொல்றோம்ன்னு நினைக்காத மது. வாத்தியார் குடி வந்து ஆறு வருசம் ஆச்சு. நடத்தைல ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனா, பழக்கவழக்கம் சுத்தமா கிடையாது. மதுரைகாரவகன்னு சொன்ன நம்ப முடியலை. யரோடையும் சிரிச்சு பேச மாட்டாக…” என்று அம்பிகா சடவு சொல்ல.
“அவர் கொஞ்சம் மூடி டைப், ரொம்ப அமைதி அதான்…” என்றாள் மது.
“சும்மா அக்கான்னு சொல்லு மது. நீங்க ஆளுக பார்த்து தான் பழகுவீங்களா…” என்று அம்பிகா கேட்க.
என்ன என்று யோசித்தவள் அதிர்ந்து போனாள்.
“சேசே, நாங்க அப்படி எல்லாம் கிடையாது. என்ன இப்படி கேள்வி கேக்குறீங்க…” மதுக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
“வாத்தியாரு பாப்பாரு…” என்க.
“என்ன சொல்றீங்க…” அதிர்ந்து போய் கேட்டால் மது.
“நெசம் தான். குடி வந்த புதுசுல எதுவும் கொண்டு வரலை. சரி, நம்ம வீட்டுக்கு தான வந்தாங்க, முத நாள் எதுவும் சரியா அமையாதுன்னு, சோறு பொங்கி கொண்டு போய் குடுத்தேன். தூக்கி கீழ போட்டாங்க. என்ன இது, நாம தம்பியகெனக்கா நினைச்சு செய்ய, தூக்கி போட்ட கோபம் எனக்கு… உடம்பு சுகமில்லாம இருந்தப்ப டீ போட்டு குடுக்க, கீழ ஊத்திட்டாங்க…” என்று அம்பிகா சொல்ல
“அப்புறம் ஒரு நாள், உங்க கல்யாணத்துக்கு முந்தி தான். நல்ல காத்து, மழையும் அடிச்சு ஊத்துது. உங்க வீட்டுல சிலீண்டர் வேற தீர்ந்து போச்சு. வாத்தியார் அல்லாடி போய்ட்டார். எம்புட்டு நேரம் பார்க்காத மாதிரியே இருக்கிறது. ஒரு நாள் முழுக்க உண்ணாம கிடந்தாக. மனசு கேக்கல, சோறு கொண்டு போய் வச்சா, சுள்ளுன்னு மூஞ்சிய காட்டிட்டாங்க. நாங்களும் சும்மா விடலை சண்டைய கட்டி ஏறிட்டோம். பின்னே, நாங்க என்ன சொத்தா கேட்டோம். மக்க மனுசர்ன்னு பழகுனா என்னவாம். ஒரு நல்லது, விசேஷம், கோவில் எதுக்கும் தலைய காட்ட மாட்டாங்க. அத்தோட நாங்களும் ஒதுங்கிட்டோம். உங்க கல்யாணத்துக்கு கூட எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லல….” என்று சுமதி சடவு சொல்ல.
“எங்க வீட்டு ஆம்பளை தான். ஒழுக்கமான பையன் ஒரு குறை சொல்ல முடியாது. எந்த தொந்தரவும் தராத பையன். நல்லவன். நீங்க தள்ளி நில்லுங்க. வேற, வேற ஊரு, ஒட்ட வேணாம் தள்ளி நிப்போம்ன்னு கூட எண்ணுவாங்களா இருக்கும். அப்படின்னு எங்க வீட்டு ஆளு சொன்னாங்க. நாங்களும் அமைதியா ஒதுங்கிட்டோம். காலையில உன்னை பார்த்து தான் வாத்தியார் பொண்டாட்டி வந்தது தெரியும்…” என்று சொன்னதோடு, கையில் இருக்கும் தூக்கை அருகில் வைத்தார்.
“புதுசா இருக்கு எதுவும் சிரமம் தான். வாத்தியாரு பல நாள் ஓட்டல் தான். டீ, காபி என்னைக்கும் வீட்டுல போட்டது இல்லை. நம்ம பொம்பளைக ஓ ட்டலுக்கு போக மனசு வராது. எல்லாம் வாங்கி சாமாளிக்கிற வர, நாங்க செய்றோம். வாத்தியார் மாதிரி எங்களை ஒதுக்காதீக. இது மீன் குழம்பு, நம்மாவூருக்கு கடல் மீன் தான் பேமஸ். அது இல்லாம ஒரு உரண்டை கஞ்சி இறங்காது. கொஞ்சம் சீனி, டீ தூள், பால்,உப்பு, குழம்பு மசால் எல்லாம் இருக்கு. ராத்திரிக்கு தோச மாவு கொண்டு வந்து தாரேன். கடைக்கு, பாலுக்கு தேவை இருந்தா ஒரு குரல் கொடு மது…” என்றார்.
மது மறுக்காமல் வாங்கி கொண்டவள். சிறு தட்டுகளில் பக்கோடா, பால் கேக் எடுத்து வைத்து கொடுக்க, அவர்களும் வாங்கி கொண்டார்கள்.
“நானும், உங்களை மாதிரி தான். ரெண்டு நாள் நல்லா பழகின, வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவேன்… எதுவும் என்னை கட்டுப்படுத்தாது…” என்று சொல்லி அந்த கூட்டணியில் இணைந்து கொண்டாள் மது.
“நீயா செஞ்சா?… நல்ல கை மனம் புள்ள உனக்கு. அம்சமா இருக்கு…” அப்படியே பேச்சுக்கள் நீள, மதுக்கு ஒரு நட்பு வட்டம் சிக்கியது.
அங்கு ரம்யா ஒரு நாடகமே நடத்தி கொண்டு இருந்தாள். தனக்கு எதுவும் தெரியாது என்று அடித்து சாதித்தாள். எல்லாம் தெரிந்து தான் தன்னிடம் கேட்கிறார்கள் என்று பாவம் அவள் அறியவில்லை. காலையிலே மாதவன் வந்து விட்டான். தங்கையை விசாரிக்க தான். ஆனால், அவள் தான் அங்கு இல்லை.
மது வீட்டில் இல்லை என்றதும் வீடு பரபரப்பாக இருந்தது. நேற்று வரை நன்றாக இருந்த மகள் எங்கு சென்று இருப்பாள். ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்க, வேற ஏதும் பிரச்சனையா?… மீனாட்சி அழுகையிலே கரைந்தார்.
“எம் பொண்ணு வாழ்க்கை இப்படி பட்ட மரமா போச்சுன்னு நினைச்சு கூட, குறையா வார்த்தையை விடுவேன். அதுக்கா கோவிச்சுக்கு போனா…” என்று அழுக.
சற்று நிதானித்தார் சுந்தரம், “ என்ன சொல்ற மீனாட்சி. பாப்பாவ என்ன சொன்ன?… அதுவும் வீட்டை விட்டு போற அளவுக்கு…”
“நான் என்னத்த சொல்ல, சும்மா எப்பவும் புலம்புற மாதிரி தான். என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கு கோபமும் படலை. நான் சத்தம் போட்டதும் அமைதியா தான் போனா… ஆனா, மனசுல வெளியேற திட்டம் வச்சு இருந்துருக்கா. நம்ம அம்மாவே, நமக்காக பேசலன்னு மனசு வெறுத்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கா. ஐயோ!… நான் பெத்த மக, எங்க என்ன கஷ்டபடுதோ, பசி தாங்காத தங்கத்துக்கு…” என்று நெஞ்சில் அடித்து கொண்டு மீனாட்சி அழுகையை கூட்ட,
கை, கால் நடுங்க பார்த்து நின்றாள் ரம்யா. அவளுக்கு மது வீட்டை விட்டு போகணும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. தனக்கு அடங்கி இருக்கணும் என்ற எண்ணம் தான். அவளை தான் அந்த வீட்டின் செல்ல குட்டி என்பார்கள். இனி தன் மக்களை அந்த வீட்டின் வாரிசாக அங்கீகரிக்க நினைத்தாள். ஆனால், ரோசம் கொண்டு மது வீட்டை விட்டு வெளியேறி செல்வாள் என்று எண்ண வில்லை. கணவனும் உடன் இல்லாத போது எங்கு போவாள். தான் என்ன செய்தாலும் பொறுத்து போவாள் என்று தான் நினைத்தாள் ரம்யா. ஆனால், மது தான் வேற மாதிரி என்று காட்டி விட்டாள். மாமியாரை நம்பி வார்த்தையை விட்டு இருக்க, அவரோ ஒரு நொடியில் தன் மகள் என்று கட்சி மாறி விட்டார்.
சுந்தரம் நெஞ்சில் கை வைத்து சாய்ந்து விட்டார். திரும்பவும் தன் மகள் வாழ்க்கையில் தப்பு செய்து விட்டோம். என் உடல் நிலையும் பொருட்படுத்தாமல் என் பிள்ளையை நான் பார்த்திருக்க வேண்டும். பெற்றவர்கள் மட்டுமே போதும் என்று வந்த பிள்ளையை துரத்தி விட்டோமே… மனம் அடித்து கொண்டது. தங்கள் பங்குக்கு காயத்தை கொடுத்து விட்டோம் என்று புரிந்தது. தொலைந்தது குழந்தையால்லா தேடி கண்டு பிடிக்க, வளர்ந்த எல்லாம் தெரிந்த பெண். திட்டமிட்டு சென்று இருக்க, எங்கு போய் தேட…
சுந்தரம், மீனாட்சி இருவரும் அறையிலே முடங்கி கிடக்க, வந்து விட்டான் மாதவன். ரம்யா அறைக்கு வெளியவே நின்று கொள்ள, மாதவன் மட்டுமே பெற்றோரை பார்க்க சென்றான்.
சரியாக அந்த நேரம் மதுவிடம் இருந்து போன் வர, யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லாம் பிடிபட்டது. அவ்வளவு கோபம் ரம்யா மீது வந்தது. மீனாட்சி எதுவும் பேசவில்லை. மகள் வீட்டை விட்டு செல்ல தன் நடத்தையும் ஒரு காரணம் என்று அறிந்த பின் எதுவும் பேசவில்லை. அழுவதை தவிர அவருக்கு ஒன்றும் தோன்ற வில்லை.
மாதவன் கோபமாக வெளியே வர, ரம்யா பயந்து பின்னால் நகர்ந்தாள். “ எவ்வளவு தைரியம் இருந்தா, நான் அவ்வளவு சொல்லியும் எந்தங்கச்சி கூட பிரச்சனை பண்ணுவ?… அப்ப நெஞ்சுல உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லன்னு தான அர்த்தம்… இவன் என்ன பண்ணிருவான்னு நினைச்சுருக்க…” என்று மாதவன் மனைவியை அடிக்க கையை ஓங்க…
தடுத்த சுந்தரம், “மாதவா உன் குடும்பத்தை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போ… இங்கிருந்து நீ வெளிய போன பின்னாடி என்னவும் பண்ணிக்க. இப்ப நீங்க யாரும் இங்க இருக்க கூடாது. அப்படியே, உங்கம்மாவையும் சேர்த்து கூட்டி போ…” என்று தயவு சிறிதும் இன்றி கூறிவிட்டார்.
எல்லோரும் அதிர்ந்து போய் அவரையே பார்த்து நிக்க.
“எம் பொண்ணுக்கு இடமில்லாத வீட்டுல, யாருக்கும் இடமில்லை. அது எனக்கும் தான். நானும் அப்படியே எங்கேயாவது போறேன்… நானும் தப்பு பண்ணியவன் தான்…” என்று விரக்தியாக சொன்னார்.
அப்பா… என்று மாதவன் தாங்கி கொண்டான்.
“நான் தான் சரியில்லை மாதவா. மது வீட்டை விட்டு வெளியே போனதுக்கு முழு முதற் காரணம் நான் தான். என்னால நல்ல தகப்பனா இருக்க முடியலை. எம் பிள்ளையை கவனிக்காம, அது வாழ்க்கைய நினைச்சு நொந்து போறதுல என்ன பயன். இன்னைக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு போய்டுச்சு. நான் யார போய் கேட்பேன், எங்க போய் பார்ப்பேன். எம்புட்டு ஆசையா வளத்தேன். என்னென்ன கனவு கண்டேன். இப்படி யாருமே இல்லாத மாதிரி தனியா போய்டுச்சு. இந்த வீட்டை விட்டு வெளியேறி போகும் போது மனசு எப்படி துடிச்சு இருக்கும். என்ன பாடு பாட்டுச்சோ, பெத்தவங்களை நம்பி இனி நமக்கு ஒன்னும் ஆகாதுன்னு மனசு வெறுத்து தான் எம் பிள்ளை எங்களை விட்டு தள்ளி போய்டுச்சு. மனசு வலிக்குது மாதவா…” என்று கண்ணீர் விட.
மாதவனுக்கும் அழுகை வந்தது. தந்தை அழுது ஒரு நாளும் அவன் பார்த்தது இல்லை. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்த போதும் கலங்காமல் நின்ன மனிதர் குழந்தை போல் அழுவதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
தன் மருமகளை பார்த்தவர். நேராகவே கேட்டார், “ உனக்கு என்ன வேணும்மா?… ஏன் எங்களுக்கு இப்படி ஒரு அநியாயத்தை பண்ணுன?… உங்க வாழ்க்கையில் நாங்க தலையிடவே இல்லையே. எங்களோடு சேர்ந்து நிக்க முடியாதுன்னு நீங்க முடிவு எடுத்தப்ப… மகன் வாழ்க்கைய யோசிச்சு நல்ல முறையில் உங்களை அனுப்பி தான் வச்சோம். எங்க சுமைய நாங்க தான் சுமந்தோம். உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லையே. காசு, பணம், பெத்த கடமைன்னு எதுக்கும் உங்களை நாங்க இழுக்கவே இல்லை.அப்புறம் மது மேல உனக்கு என்ன கோபம்…” தெளிவாக கேட்டார் சுந்தரம். அவருக்கு பதில் தெரிய வேண்டி இருந்தது. தன் பிள்ளை பட்ட வேதனைக்கு முக்கிய பங்கு வகித்தது மருமகள் தானே… அவளிடமே காரணத்தை கேட்டார்.
“வீட்டிற்கு தலை மகன். அவனை விட்டுவிட கூடாதுன்னு நினைச்சதுக்கு எம் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சு விட்டீங்க…” மனதாங்களாய் சுந்தரம் சொல்ல.
“நீங்க எங்களுக்கான உரிமைய மதுக்கு கொடுத்தீங்க…” பட்டேன்று சொல்லி விட்டாள் ரம்யா. மாமனார் பேச பேச பார்த்து நின்றவள். அவர் கேட்டதும் ஒரு ஆவேசத்தில் சொல்லி விட்டாள்.
“உங்களுக்கு என்ன உரிமை…” என்று சுந்தரம் கேட்க.
“நான் தான் இந்த வீட்டுக்கு மருமகள். மது இன்னொரு வீட்டு மருமகள். இது எனக்கான வீடு. எம் பிள்ளைகளுக்கு உரிமையான வீடு. ஆனா, இங்க பூக்குற பூ தொடங்கி வீட்டுக்கு அடிக்கிற பெயிண்ட் வர எல்லாம் அவ விருப்பம் தான். எனக்கு என்ன உரிமை இருக்கு. என்னை எதுல மதிச்சீங்க. உங்க எல்லாருக்கும் அவ தான் உசத்தி. அவ சொல்றது தான் சட்டம். நான் பத்து மாசம் சுமந்து பிள்ளை பெற, அவ பேரு வைக்கிறா… என் குழந்தை மேல எனக்கு உரிமை இல்லையா… இந்த வீட்டுக்கு வாரிசா எம் பிள்ளைக வந்த பின்னாடி, அவ தான் வாரிசுன்னு தூக்கி தலையில வைக்குறீங்க. எம் புருசனுக்கு அப்படி ஒன்னும் நீங்க முக்கியத்துவம் தரலை. உங்களுக்கு உங்க மக மட்டும் தான் முக்கியம். பெத்த பிள்ளைக மேல உங்களுக்கு வேறுபாடு இருக்கு… நான் ஒன்னும் அவளை வீட்டை விட்டு போக சொல்லலை. இந்த வீட்டுல அவ இடம் எதுன்னு காட்ட தான் நினைச்சேன்…”என்று தான் உணர்ந்த குற்றங்களை அள்ளி வீசினாள்.
அவளை வெறுமையாக பார்த்தவர், மாதவனை ஒரு பார்வை பார்த்தார். அவன் மெளனமாக தலை குனிந்தான். குற்ற உணர்வு கொன்றது.
“நீ இந்த வீட்டு மருமகள் தான். மது இன்னொரு வீட்டு மருமகள் தான். உம் பிள்ளைக எங்க பேர பசங்க தான். இதுல எதுவும் மாறாது. அதே போல மது எங்க வாரிசு தான். அதுவும் மாறாது. நாங்க பெத்த பிள்ளையை, நாங்க தலையில தூக்கி வைக்கிறோம். இதுல உனக்கு ஏன் கோபம் வரணும். நாங்க பெத்தது ரெண்டு பிள்ளைக. அப்ப ரெண்டு பேருமே எங்க வாரிசு தான். மாதவனுக்கு என்ன செய்றமோ, அது தவறாம மதுக்கும் செய்வோம். மாதவன் ஏழு வயசுல மது பிறந்ததால மது எங்க எல்லாருக்கும் செல்லம் தான். சென்னையில் வீடு வாங்கி இருக்கீங்க. அந்த வீட்டுல மது உரிமை கொண்டாட வந்தா நீ பேசு, இது என் வீடு எம் பிள்ளைக்கு மட்டும் தான் உனக்கு இல்லை. உம் பிள்ளைகளுக்கு நீங்க தான் சம்பாரிக்கணும். உன் உரிமை போன நீ கேளு. எங்க பிள்ளைக்கு நாங்க செய்றத நீ கேட்க கூடாது…” என்று தெளிவாக சொன்னார்.
மாதவன் மெளனமாக பார்த்து தான் நின்றான். தன் தந்தையை தவிர, மனைவிக்கு தெளிவாக புத்தி சொல்ல கூடியவர் யாரும் இல்லை. நான் என்றாள் கை நீட்டுவேன், தாய் கத்துவார். தந்தை மட்டுமே நிதானத்தை கையில் எடுப்பார்.
“பிள்ளைக மேல நானா வேறுபாடு காட்டுறேன். உம் வயசு தான மதுக்கு, வீட்டுல தங்கச்சி இருக்க, உன் கூட காதல்ன்னு வந்தான். பொம்பளை பிள்ளையை வச்சுகிட்டு மகனுக்கு கல்யாணம் பண்ண கூடாதுன்னு நான் நினைக்கல. எம் மகளுக்கு நான் இருக்கேன். இப்போ மகன் வாழ்க்கைய பார்ப்போம்ன்னு தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சேன். சென்னையில வேலை, நல்ல சம்பளம் தான். ஒரு நாளாவது பெத்தவங்கன்னு ஏதாவது செஞ்சு இருப்பானா… நான் இதய நோயாளி, எம் மனைவி சுகர் பேசன்ட். எப்பவாவது மகன் கைய எதிர்பார்த்து இருப்போம்மா… அவன் தங்கச்சி சுமைய தான் அவன் தலையில தூக்கி வச்சோம்மா… இந்த வீடு என் சம்பாத்தியம். எம் பிள்ளைகளுக்கு உரிமையான வீடு. தனிப்பட்டு யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் கஷ்டபட்டு கட்டுன வீடு எம் பிள்ளைக்கு தான். அதுவும் மதுக்கு மட்டும் தான்…” என்று மூச்சு வாங்க சொன்னவர்.
“கரிகாலன் உனக்கு தெரியும் தானா… அவனுக்கு சொந்த வீடு கூட பெத்தவங்க தேடி வைக்கல. படிப்பு கூட கவர்மென்ட் சீட் தான். கஷ்டம் தெரிஞ்ச பையன், தன் கைய ஊனி தானா எழுந்தான். எதுவுமே செய்யாத பெத்தவங்களை இப்ப வரை பாக்குறான். கூட பிறந்த அண்ணன், தங்கச்சிக்கு பிரிக்காம செய்றான். அவன் தவறுன ஒரே இடம் எம் பொண்ணு விசயத்தில் தான். இந்த மாதிரி உம் புருசனுக்கு நாங்க எந்த தொந்தரவும் கொடுக்கல. நாங்க ஒண்ணே ஒண்ணு தான் அவன் கிட்ட எதிர்பார்த்தோம். மதுக்கு துணை நிப்பான்னு நம்புனோம். அதுவும் இல்லை. எங்குடும்பம் எனக்கு முக்கியம்னு ஒதுங்கிடான். சரி, நம்ம பெத்த பிள்ளை தான நல்லா இருக்கட்டும்ன்னு மனச தேத்தி ஒதுங்கி தான் நின்னோம்… இதுல, எங்க பிள்ளைக நடுவுல வேறுபாடு காட்டினோம்…” என்று சொன்னதோடு அல்லாமல், உள்ளே சென்றவர் ஒரு பத்திரத்தோடு வந்தார்.
“இந்த வீடு மது வீடு. மது பேர்ல வீட்டை எழுதி வச்சு நாலு வருசம் ஆச்சு…” என்று தீர்க்கமாக சுந்தரம் சொல்ல. ரம்யா அதிர்ந்து போய் கணவனை பார்த்தாள். அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்று அவன் முகம் காட்டியது. மீனாட்சிக்கும் இது அதிர்ச்சி தான்.
“இது எப்படி… இவர் தான் உங்க மகன்…” என்று திக்கினாள் ரம்யா.
“இவன் மகன்னா, மது எம் மக.ரெண்டு பேரும் எம் வாரிசு தான். எனக்கும் முதல்ல இந்த வீட்டை மகனுக்கு கொடுக்குற எண்ணம் தான். ஆனா, என்னைக்கு கூட பிறந்த பிறப்புக்கு ஒரு ஆபத்துன்னு சொல்லியும், அவன் சுகம் தான் பெருசுன்னு ஊரை விட்டு ஓடி போனானோ… அப்பவே முடிவு பண்ணிட்டேன். இந்த வீடு எம் மகளுக்கு மட்டும் தான்…” என்று சுந்தரம் சொல்ல,
ஏமாந்து போன வலி ரம்யா முகத்தில், “ அப்ப நாங்க… எங்களுக்கு?…” என்று ஆத்திரமாக ரம்யா கேட்க.
“சென்னையில் வீடு வாங்க ஆசைபட்டிங்க தான… நான் வேணாம்னு தான் சொன்னேன். மாதவன் தான் எனக்கு சொத்தே வேணாம், எல்லாம் மதுக்கே குடுங்க. நான் வேலை பாக்குற ஊர்ல வீடு மட்டும் வாங்கி கொடுங்கன்னு கேட்டான். உனக்கும் தெரியும் தானா… மதுக்கு சேர்த்து வச்சு இருந்த பணத்தை எல்லாம் போட்டு தான் மாதவனுக்கு வீடு வாங்கி கொடுத்தேன். அப்பவே சொல்லிட்டேன், வீடு மதுக்கு மட்டும் தான், யாரும் உரிமை கொண்டாட கூடாதுன்னு… சரின்னு சொல்லி தான காசு வாங்கி போனீங்க. இப்ப என்ன உரிமை…” என்று காட்டமாகவே சுந்தரம் கேட்டார்.
ரம்யாக்கு இது பெருத்த அடி… அவள் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. சொத்து முழுதாக மதுக்கு போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பொதுவாக நம்ம பக்கம், சொத்து என்பது ஆண் வாரிசுக்கு மட்டும் தான். பெண் பிள்ளைகள் சீரோடு தான் போவார்கள். பெண் மக்கள் சாகும் போது கூட பிறந்த வீட்டு கோடி துணி தான் முதலில் போடுவார்கள். சாகும் வரை சீர் செய்யும் ஆண் மக்களுக்கு தான் சொத்து என்பது நடைமுறை வழக்கம். ஆனால், தற்போது காலம் எவ்வளவோ மாறி விட்டதே… தங்கள் குடும்பத்தை பேணுவதே சிரமமாக இருக்கும் இந்த காலத்தில், சாகும் வரை பெண்களுக்கு சீர் செய்வது யாரு?…
ரம்யாவும் நகை மட்டும் தான் மதுக்கு, அதை மீறி செய்தால் பணம், பொருளாக தான் செய்வார்கள் என்று எண்ணி இருந்தாள். மதுரை வீட்டை அவள் யோசிக்கவே இல்லை. என்ன இருந்தாலும் பூர்வீக வீடு மகனுக்கு கொடுக்க தான் நினைப்பார்கள் என்று நினைத்தாள். அதனால் தான் அதை பற்றி பெரிதாக ஆராய வில்லை. அன்று சென்னையில் வீடு என்பது முக்கியமாக பட்டது. ஆனால்,மதுரை வீட்டை கௌரவமாக நினைத்தாள். இருவர் சொந்த ஊரும் மதுரை தான். சொந்தபந்தம் அதிகம். இது பெண் பிள்ளை சொத்து என்று தெரிந்தால் எவ்வளவு அசிங்கம். நாளை நம் பிள்ளைகள் வரை பாதிக்கும்.
“நீங்க சொத்தை எழுதி வைக்கும் அளவுக்கு உங்க மக நல்லவ கிடையாது. இப்ப மூனாவதா யாரையோ பிடிச்சுட்டா… அது எனக்கு தெரியவும். அவன் கூட தான் ஓடி போனா…” பயம் மறந்து சொல்லியே விட்டாள் ரம்யா. அவளுக்கு வீடு கை விட்டு போன கோபம். அவர்கள் செல்ல மகள் தகுதியை வெளிச்சம் போட்டு காட்ட எண்ணினாள்.
“அடியே நாசமா போறவளே… நல்ல இருப்பியா… நீயும் ஒரு பிள்ளை பெத்த வச்சிருக்க மறந்திறாத, அபண்டமா பழி போட்ட, உம் தலையில தான் வந்து விடியும். எனக்கு மகனே வேண்டாம். இனி ஒரு நிமிசம் நீங்க யாரும் இங்க இருக்க கூடாது. வெளிய போங்க…” என்று வெறி வந்து கத்த தொடங்கினார் மீனாட்சி.
சுந்தரம் அழுத்தமாக மகனை ஒரு பார்வை பார்க்க, விட்டான் ரெண்டு அறை ரெண்டு கன்னம் பழுக்கும் அளவுக்கு. தடுமாறி விழுந்தவள்…
“உண்மைய தான் சொல்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்க மக டப்பா, டப்பாவா செஞ்சு எடுத்து போறாளே… எங்க?… ராமநாதபுரம் பஸ்ஸில யாருக்கோ அனுப்பி வைக்குறா… அவன் தான் இப்ப அவ ஆளு… இவன் கூட எம்புட்டு…” என்று சொல்லி கொண்டு வந்தவள், பேச்சை நிறுத்தி மற்றவர்கள் பார்வையை பார்த்தாள்.
எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். ராமநாதபுரத்தில் யார் இருக்கிறார் என்று ரம்யாக்கு தெரியாது. ஆனா, மற்றவர்களுக்கு தெரியுமே…