“என்ன அங்கின எல்லாத்தையும் செஞ்சு அனுப்பிட்டாவலா?…” என புதுமணமக்களை பற்றி கேட்க,
“ஆமாய்யா, அனுப்பிட்டுத்தேன் வந்தம்…” என பேசிக்கொண்டிருக்க கயாசத்தை ஆற்றியபடி மூக்கை உரிந்து விசும்பலுடன் உள்ளே வந்தார் சீனியம்மாள்.
“நீயி போ…” என தவராசன் சைகை காண்பித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.
எதிரே வந்த மகனை முறைத்துவிட்டு உள்ளே சென்று கசாயத்தை தவராசனின் முன்னால் நீட்டினார்.
அவரின் முகத்தில் சற்றே இலகுத்தன்மை தெரியவும் சீனியம்மாள் மனது மீண்டும் மகள் பக்கம் சாய லேசாய் இருமினார் தவராசன்.
மீண்டும் சீனியம்மாள் பதறி அவரை கவனித்து தைலம் தேய்த்து பார்த்துக்கொள்ள ஆரம்பிக்க தவராசன் மனதில் சீனியம்மாவின் மீதான இரக்கம் சுரந்தது.
————————————————————-
கதவை பூட்டிவிட்டு தார்சாவில், முன்னறையில் இருந்த விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு அடுத்த கதவையும் சாற்றி உள்ளே நடு கூடத்தில் வந்து நின்றான் தேனரசன்.
இதுவரை தான் மட்டுமே வசித்து வந்த வீட்டில் அவன் சரிபாதியான பெண்ணின் வாசனையை மூச்சுக்குழல் குளுமையாய் உள்வாங்கி சுவாசப்பையை நிறைத்தது.
தனக்கிருக்கும் இந்த படபடப்பு மனைவிக்கும் இருக்குமா என பார்க்க கூடத்தின் நடுவில் கிடந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தாள் வெண்மணி.
ஊஞ்சல் முழுவதும் பூக்களால் நிறைக்கப்பட்டிருக்க அதில் பட்டுடுத்தி அமர்ந்திருந்தவள் கண்கள் வெட்கத்தை சுமந்திருந்தாலும் கூடவே குறும்பாய் புன்னகையையும் அவளிதழ்கள் சூடி இருந்தது.
சட்டென பேசத்தான் வரவில்லையே தவிர ஒருவரை ஒருவர் பார்வையால் ஸ்பரிசிக்க சில நொடிகளுக்கு மேல் அதற்கும் முடியவில்லை.
தேனரசன் உள்ளே சென்று தண்ணீரை எடுத்து பருகிவிட்டு வந்தமர்ந்தான் வெண்மணி அருகில்.
அமரும் பொழுதே அவளை இடித்துக்கொண்டு ஊஞ்சலில் அமர இருவரின் தோள்கள் உரசலில் சட்டென விலகி மீண்டும் ஒட்டிக்கொண்டது.