“புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல்
விளக்கம்
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…”
“போச்சா…வழக்கம் போல கல்யாணத்தை பத்திதேன் பொலம்பிருபாங் அதான?!”
“அதை விட்டுப்போட்டு அவுகளுக்கு வேற என்ன கவலை இருக்கப் போவுது.ஏன்தான் நீ இம்புட்டு பிடிவாதம் பிடிக்குறியோ தெரியல.”
“என்ட்றா நீயும் என்னையவே குத்தம் சொல்ற?!”
“பின்ன என்ன பண்றது?அது எப்பிட்றா பார்க்குற ஒரு புள்ளைய கூட புடிக்காம போவும்.உண்மையைச் சொல்லு காதல் கத்திரிக்கா எதுவுமிருக்கா?”
“உன் கூடயே தான சுத்திட்டு இருக்கேன் அப்பறமும் இப்படி ஒரு கேள்வியைக் கேக்குறியே உன்னையெல்லாம் என்ன பண்ணலாம்?”
“நல்லா வக்கணையா வாய்க்கு வாய் பேசு நீ..பாவம் டா அம்மாவும் அய்யனும்.”
“எனக்குத் தெரியாதாக்கும்..பாக்குற பொண்ணெல்லாம் ஹோட்டலா வைச்சுருக்கீங்னு ஒரு மாதிரி பார்க்குது.அதுவுமில்லைனா கல்யாணத்துக்குப் பிறவு தனிக்குடித்தனம் வருவீகளானு கேக்குது.
அதிலேயும் பொண்ணு சென்னையில வேலை பார்த்தா நானும் அங்கனயே போயிரோனுமாம்.இப்படி ஒத்துவராததா இருந்தா எங்கிருந்து சம்மதிக்க சொல்ற..
மொதல்ல ஐடி(IT) வேலை மட்டும் தான் வேலைனு நினைக்காத புள்ளையா கிடைக்கட்டும் அப்பறம் பார்ப்போம்.சரி கூட்டம் அதிகமாகுற நேரம் நான் சாயங்காலமா கூப்டுறேன் வைச்சுரட்டுமா..”,என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு வேலையைக் கவனித்தான்.
இப்படி பரபரப்பாய் வேலையில் மூழ்கியிருந்தவனைக் கலைத்தது அந்த குரல்.
“ஏனுங் இரண்டு இட்லி பார்சல் வேணும்ங்..”,நிமிர்ந்து பார்த்தவன் விழிகள் ஒரு நொடி ஆச்சரியத்தை அளித்து உதடுகள் புன்னகைத்து விரிந்தன.
“ஹே காயூ சௌக்கியமா?என்ன இந்தப்பக்கம்?!”
“பரவாயில்லையே ஓனருக்கு எங்களையும் கூட நியாபகம் இருக்குதாக்கும்?!”
“ரொம்ப பண்ணாத வா வா..சரவணா இரண்டு காபி..ப்ச்ச் ஒரு காபி ஒரு டீ குடுத்து விடு.நீ வா.”,என்றவன் புன்னகையோடு முன்னே செல்ல அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஆமோதிப்பாய் பின் தொடர்ந்தாள்.
“காலேஜ்ல பார்த்தது..அம்மா அப்பா எல்லாம் எப்படியிருக்காங்?சென்னை போயிட்டதா கேள்வி பட்டேனே!”
வெறும் புன்னகை மட்டும் அவனிடத்தில்.வெகு நாட்களுக்குப் பின் கல்லூரி சிநேகிதியைப் பார்த்த ஆர்வத்தில் பேசியிருந்தவனுக்கு அவர்களின் கடைசி உரையாடல் மெதுவாய் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
எம் பி ஏவின் இறுதி ஆண்டின் இறுதி நாள் அனைவரும் பிரிவின் சோகமும் கல்லூரியின் சந்தோஷமுமென சுற்றித்திரிய தனியே அமர்ந்திருந்த அன்புச் செல்வனைத் தேடி வந்தாள் காயத்ரி.
“அன்பு..”
“ஹே வா காயூ எதாவது சாப்டுறியா?வாங்கட்டுமா?”
“அதெல்லாம் வேண்டாம்.உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
“பேசுவோம் ஒரு காபி சாப்பிட்டுகிட்ட பேசினா ஒண்ணும் ஆகாது..”
“ம்ம் காபி வேண்டாம் பிடிக்காது டீ சொல்லு.”,லேசாய் முறுவலித்தவன் அவளுக்கும் சேர்த்து வாங்கி வந்து எதிரில் அமர்ந்தான்.சில நொடிகள் குவளையின் நுனியையே தடவிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் மெதுவாய்,
“சொல்லு என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”
“அதெல்லாம் இல்லை..வந்து..ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ அன்பு”
“!!!”
“எப்போயிருந்துனு எல்லாம் தெரியாது.ஆனால் இப்போ இங்க பிரிய போறோம்னு நினைக்கும் போது சொல்லாம இருக்குறது தப்புனு தோணிச்சு.”
“ம்ம்..எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.நான் எந்த விதத்திலேயாவது உன் மனசை சஞ்சலப்படுத்திருந்தா ஐ அம் சாரி.”
“….”
“எனக்கு..எப்படி சொல்றது..நிறைய பொறுப்புகள் இருக்கு காயூ.நடுத்தர குடும்பம் என்னோடது உனக்கேத் தெரியும்.இதெல்லாம் ஒத்து வருமானு எனக்குத் தெரியலை.பெட்டர் உன் மனசை நீ மாத்திக்கோயேன்.”
“இதுதான் உன் பதிலா இருக்கும்னு நல்லாவே தெரியும்.இந்த இரண்டு வருசத்துல என்கிட்ட பேசின அளவு கூட நீ வேற பொண்ணுங்களோட பேசிப் பார்த்ததில்ல.
உனக்கு அவகாசமே தராம இப்படி சொன்னது தப்பு தான்.ஆனால் இத்தனை நாள் தைரியம் வரவே இல்ல..சரி இட்ஸ் ஓகே டேக் கேர்.”,என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.
இவனுக்கோ ஒன்றும் புரியாத நிலை,அவளாகவே வந்தாள் ஏதேதோ சொன்னாள் சென்றும் விட்டாள்.என்ன நடக்கிறது என்னைச் சுற்றி..யாரும் விளையாடுகிறார்களோ என்று கூட சுற்றும் முற்றும் பார்த்தான்.
அதன்பின் அவளைச் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலோ பேஸ்புக்கிலோ எதிலுமே அவள் கிடையாது.ஆண் நண்பர்களோடு மட்டும் தான் தொடர்பில் இருந்ததால் அவளைப் பற்றி யாரிடமும் கேட்கும் எண்ணமும் எழுந்ததில்லை.
ஒரு கட்டத்தில் அதெல்லாம் மறந்து போனாலும் அவ்வப்போது அந்த உரையாடல் மனக்கண்ணில் வந்து போகும்.
கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கிறான்.அவன் தனக்குள் அத்தனையையும் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவனையே தான் பார்த்திருந்தாள்.
சுயநினைவு பெற்றவனாய் பார்வைத் தடுமாற, அவனைக் காப்பாற்றுவதற்காகவே வந்தது போல் வேலை செய்யும் பையன் கையில் காபி மற்றும் டீயோடு வந்தான்.
“அன்பு..”
“ம்ம்..”
“நான் சொன்னதுக்கு எதாவது முடிவு பண்ணிருக்கியா??”
“என்ன???!!!!”
“என்ன?!”
“இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கல??!”
“ப்ச்..”,என்று அசால்ட்டாய் தோள் குலுக்கியவளைப் பார்த்தவனுக்கு இதயம் துடிப்பதே ஒரு நொடி நின்று விட்டதைப் போன்று இருந்தது.
“!!!”
“என்ன அப்பவும் இப்படி தான் முழிச்ச இப்போ அரைக்கிழம் ஆகி வந்து கேட்டாலும் அதே மாதிரி முழிக்குற?!”
“வேற என்ன பண்ண சொல்ற?ஆமா இத்தனை வருசம் நாம பேசிக்க கூட இல்ல..அப்பறமும் எப்படி?!”
“பிரிவு கூட சுகம் தான்.அது அனுபவிக்குறவங்களுக்கு மட்டும் தான் புரியும்.இத்தனை வருஷத்துல ஒரு நாள் உன் எண்ணமே வராம இருந்துட்டா மனசை மாத்திக்கலாம்னு நினைச்சேன் பட் அப்படி ஒண்ணு நடக்கவேயில்ல.”
“!!!”
“பசங்களுக்கு மட்டும்தான் அப்படிபட்ட காதல் எல்லாம் வருமா என்ன?!”
“உனக்கு பதில் சொல்றதுக்கு என்கிட்ட வார்த்தை இல்ல காயூ..”
“சத்தியமா அப்போ இருந்த நாணம் அச்சம் மடம் எல்லாம் எனக்கு இல்ல அன்பு..இரண்டு வருஷம் உன்னோட ப்ரண்டா பழகின நாட்கள் என்னை அறியாம என் துணையா உன்னை நினைக்க வைச்சுடுச்சு.
உன்னோட இந்த நிதானமான குணம் கூட அதுக்கு காரணமா இருக்கலாம்.
இன்னதுனு காரணம் சொல்லி எல்லாம் காதல் வராது இல்லையா ஆனாலும் என்னையே சமாதானப்படுத்திக்க சொல்லிக்குறது தான் நான் சொன்னது.
இத்தனை வருஷத்துல உன் மேல ஏற்பட்ட அந்த உணர்வு வேற யார் மேலேயும் வரல.அதான் சரினு பார்க்குறதுக்கு வந்துட்டேன்.”,லேசாய் புன்னகை அவனிடத்தில்.
“ஹே எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன் சிரிக்குற நீ?!”
“வேற என்ன பண்ண சொல்ற..சரி இத்தனை வருஷமும் என்ன பண்ணிட்டு இருந்த வீட்ல எப்படி உன்னை ஒண்ணும் கேட்காம விட்டாங்க?”
“வேலை சென்னைல இங்க ட்ரான்ஸ்வர் ஆகி வந்து ஒரு வாரம் ஆகுது..இன்னைக்கு லீவ் சோ உன்னை பார்த்து பேசிடலாம்னு வந்துட்டேன்.”
“ஓ..எங்க வேலை பார்க்குற?இது என் ஹோட்டல்னு தெரியுமா?!”
“உன்னைப் பத்தி தெரிஞ்சுக்காம…அப்பறம் நான்..டெப்யூடி சூப்பரிண்டெண்ட் ஆப் போலீஸ்..”,என்றவள் மென்னகைக்க,
“வாட்??!!”
“ஹே..நீ ஷாக் ஆவனு தெரியும் பட்..”
“!!!”
“உனக்கு இந்த தொழில் பிடிச்சுருக்கு இல்ல..அதே மாதிரி தான் சின்ன வயசில் இருந்து என்னோட கனவு இந்த வேலை..அதனாலயே உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க பெருசா கஷ்டப்படல..உனக்கு கல்யாணம் ஆகிருந்தா கூட திரும்ப வந்துருக்க மாட்டேன்..ஆனால் அது நடக்காததுனால..”
“???!!!”
“உனக்காக தான் வேலையை இங்க மாத்திட்டு வந்தேன்..”
அன்புச்செல்வனோ வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான்.என்ன மாதிரியான பெண் இவள்.ஒரு ஆண் தன் காதலனாய் என்னவெல்லாம் பண்ண வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்குமோ அதையெல்லாம் அவள் தனக்காக செய்து கொண்டு இருக்கிறாள்.
“ஓய் என்னாச்சு?!”
“உனக்கு எல்லாமே சாதாரணமா தெரியுதா! நீ பண்றதெல்லாம் இந்த உலகத்துல எந்த பொண்ணும் அதுவும் என்னை மாதிரி சாதாரண ஒருத்தனுக்காக பண்ணவே பண்ணாது..”
“ப்பா பரவாயில்லை இவ்வளவு புரியுதுல அது போதும்.என்னை புரிஞ்சுக்குற மாதிரியான ஒரு பையன் இந்த உலகத்துல இருக்கானானு தெரியாது.
ஆனால் உன்னை புரிஞ்சுக்க உன்னை அளவுக்கு அதிகமா காதலிக்க நான் மட்டும் இருக்கேன் அன்பு.யோசிச்சு சொல்லு..கண்டிப்பா உன்னை வாழ்க்கை மொத்தமும் சந்தோஷமா பார்த்துப்பேன்.”,என்றவள் மனதிலிருப்பதை கூறிவிட்ட திருப்தியோடு உதடு குவித்து மூச்சு விட்டபடி,
உன் நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுக்குறேன் நம்பர் சேவ் பண்ணிக்கோ இரண்டு நாள்ல உன் முடிவைச் சொல்லு..நான் கிளம்பட்டுமா?”
கண்களின் ஆச்சரியம் துளியும் குறையாமல் அவளோடு சேர்ந்து எழுந்து கொண்டவன் ஆமோதிப்பாய் தலையசைக்க புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள் காயத்ரி.