கல்கியின் கேள்வியில் அதிர்ச்சி என்பதை விடவும் உறவுக்காரப்பெண்ணுக்கு சிரஞ்சீவி பற்றி ஒன்றும் தெரியவில்லையா என்ற ஆச்சரிய உணர்வே பரத்வாஜிற்கு.
“என்னாச்சுண்ணா?” என்று கல்கி அவன் ப்ரேக் அடித்தவுடன் கேட்க, நல்லவேளையாக அது ஒரு ப்ரதான சாலை அல்ல. அதனால் வண்டியைக் கிளப்பியவன்
“இது மாதிரி யார்கிட்டவும் கேட்றாதீங்கமா, ஸார் ரொம்ப ரொம்ப ஹானஸ்ட், அந்த வார்த்தையைக் கூட ஸார் முன்னாடி யாரும் சொல்லிட முடியாது” என்றான். கல்கி தலையசைக்கவும்
“ஆனா ஒரு விஷயத்துல ஸார் உங்க ரிலேட்டிவ்னு நம்பலாம்” என்றதும் என்ன என்பதாய் அவள் பார்க்க
“அய்யோ அண்ணா, சொல்லக் கூடாத அளவு ஒரு சீக்ரெட் இல்லை. என் பெயர் கல்கி, ஊர் கும்பகோணம் பக்கத்துல. இப்போ இங்க ஜர்னலிஸம் ஜாய்ன் பண்ணியிருக்கேன்” என்றாள் உடனே.
“தூரமா இருந்த நெருங்கின சொந்தம்” என்றதும் அவன் இவளை யோசனையாகப் பார்க்க
“அது இத்தனை நாள் டச்ல இல்லை, அதான். அவர் என்னோட அத்தை பையன்” என்றாள்.
“ஓஹ், சரிம்மா. ஃபீவர்னு ஸார் சொன்னாங்க, பரவாயில்லையா?” என்று பரத்வாஜ் விசாரிக்க
“இஞ்செக்ஷன் போட்டு கொஞ்சம் பரவாயில்லைண்ணா” என்றாள்.
“உங்களுக்கு ஒரு மெடிசன் கிடைக்கலனு ஸார் சொன்னார், ப்ரஸ்க்ரிப்ஷன் கொடுத்தா நம்ம போற வழியில வாங்கிடலாம்” என்றவன் போகும் வழியில் இருந்த ஒரு மெடிக்கலில் நிறுத்தி விட்டுப்போன மாத்திரையை வாங்கி வந்தான்.
கல்கி அவளின் கார்டை எடுத்து வந்திருந்தாள், அதனை நீட்ட பரத்வாஜ் மறுத்துவிட்டான்.
“அண்ணா, உங்களுக்கு ஏன் வீண் செலவு?” கல்கி கேட்க அவனோ
“ஸார் விஷயத்தை சொல்லி, பணம் கொடுத்துட்டார்மா. எல்லாம் உங்க அத்தை பையன் பணம்தான்” என்று சொல்லி புன்னகை செய்ய
‘இத்தனை டென்ஷன்லயும் மாத்திரை வாங்குறதை மறக்காம காசெல்லாம் கொடுத்துட்டுப் போயிருக்காரே மிஸ்டர். சிங்காரம்’ என்று மனதினுள் நினைத்தாள். சின்சியர்ப்பா சிங்காரம் என்று பாராட்டை மனதில் கொடுத்தாள் பாவை.
வீடு வரவும் அவள் இறங்கும் முன்
“கல்கிம்மா, நீங்க அண்ணா சொல்றதால ஒரு விஷயம் சொல்றேன். அட்வைஸ்னே வைச்சிக்கோங்களே” என்றதும்
“சொல்லுங்கண்ணா” என்றாள் கல்கி.
“அது இப்படி ஸாரைப் பத்தி எங்கிட்ட கேட்ட மாதிரி வேற யார்கிட்டவும் கேட்காதீங்க, உங்களைப் பத்தியும் எல்லார்கிட்டவும் சொல்ல அவசியமில்லை” என்றான் அவள் நலன் கருதி.
“உங்க ஸாருக்கு வேணும்னா உங்க மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம்ணா, எனக்கு உங்க மேல இருந்துச்சு. அதான் பேசினேன், இல்லைனா நான் பேசவே மாட்டான். நீங்க சொல்ல வரது புரியுதுண்ணா” என்றாள் தெளிவாக.
“அப்புறம் தயவு செஞ்சு உங்க ஸார்கிட்ட நான் அவரைப் பத்தி விசாரிச்சேன் சொல்லிடாதீங்க, சும்மா ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்” என்றதும்
“எங்க ஸார் மேல ரொம்ப பயமா?” என்று பரத்வாஜ் சிரிக்க
“பயமெல்லாம் கல்கிக்குக் கிடையாது, எதுக்கு வீணா வாயைக் கொடுக்கனும்?” என்று அவள் தோளைக் குலுக்க
“இந்த டேப்லெட்ஸ் எல்லாம் சாப்பிடுங்க, ஆல் தி பெஸ்ட் காலேஜ் போறதுக்கு” என்றவன்
“நீங்க தானே உங்க ஸார் ரொம்ப ஹானஸ்ட் சொன்னீங்க, ஒருவேளை எதிலாச்சும் நான் சிக்கி அவர் பெயரை யூஸ் பண்ணினா கோச்சுக்கிட்டா, அதான் ஒரு சேஃப்டிக்கு. இல்லைனாலும் அவர் பிசியா இருந்தா உங்களைக் காண்டாக்ட் செய்யலாம், இல்லையா ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் அண்ணா இருக்கார்னா எனக்குக் கொஞ்சம் கெத்துதானே?” என்றதும்
“எப்பா, பரவாயில்லை. எஸ்பி ஸார் மாதிரி ரொம்ப விவரம்தான்” என்ற பரத்வாஜ் அவன் நம்பரைக் கொடுத்த பின்னே தான் போனான்.
வீட்டிற்கு வந்த கல்கிக்கு கொஞ்சம் மனம் லேசாகியிருந்தது. உடலும் கூட மருந்தின் விளைவாய் வேர்த்து இருக்க, ஜூரம் கொஞ்சம் குறைந்திருந்தது. வசந்தி அக்கா அவளுக்கென தனியே ரசம் வைத்திருக்க அதை உண்டு மாத்திரைப் போட்டவள் உறங்கியும் போனாள்.
மாலை வேளையில் அவளுக்கு ஜெகதீஷிடம் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேசினாள். உறங்கி இருக்க குரலில் சோர்வு தெரிந்தது.
“என்னாச்சு டி டயர்டா இருக்கியா?” என்று ஜெகதீஷ் கேட்க
“ஆமா மாம்ஸ் ஃபீவர்” என்று அவள் சொல்லவும்
“எப்படி ஃபீவர் வந்துச்சு? இப்ப பரவாயில்லையா? டாக்டர்ட்ட போவோமா? நான் வரவா?” என்று அக்கறை மிகுதியில் அவன் வார்த்தைகள் வேகவேகமாய் வர
“அதெல்லாம் போயாச்சு மாமா, அத்தை சன் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனார், மாத்திரை எல்லாம் போட்டு இப்ப ஃபீவர் குறைஞ்சிடுச்சு, மாத்திரைப் போட்டதுதான் தூக்கமா வருது” என்றாள் கல்கி.
“ஒஹ் சரி சரி, நல்லா ரெஸ்ட் எடுடி. இன்னிக்குன்னு பார்த்து எனக்கு வேலை முடியல, நான் வீக்கெண்ட் உன்னைப் பார்க்க வரேன்” என்றவனுக்கு கல்கிக்கு உடல் நலமில்லை என்றதும் பொறுக்கவில்லை.
“கல்கி, நிஜமா நல்லா இருக்கதானே? இல்லை நான் நேர்ல வரவா?” என்று அவன் மனம் கேளாமல் மங்கையிடம் மீண்டும் கேட்க
“அய்யே, சாதாரண காய்ச்சல். அதெல்லாம் ஒன்னும் நீ வரவேண்டாம். எனக்கு டயர்டா இருக்கு, அப்புறம் பேசுறேன் மாமா” என்று வைத்துவிட்டாள்.
இரவு உணவாக இட்லியும் சாம்பாரும் வசந்தி அக்கா செய்துவிட்டு போயிருக்க, ஏழு மணிபோல் வீட்டினுள் நுழைந்தான் சிரஞ்சீவி. கல்கி அறையில் போன் பேசிக்கொண்டிருந்தாள். தையல் நாயகி டீவியின் முன் உட்கார்ந்திருந்தார்.
“இப்ப பரவாயில்லப்பா, டாக்டர்ட்ட போய் சரியாச்சு” என்று கல்கி உதயமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தையல் நாயகி தினமும் வீட்டினருடன் மாலை நேரத்தில் பேசிவிடுவார், அதனால் கல்கி போன் செய்து கொடுத்தவள் தனக்குக் காய்ச்சல் இருப்பதை சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க, அவரா கேட்பார் எடுத்தவுடன் இதனை சொல்லிவிட வீட்டினருக்கு கவலையாகிப் போயிற்று.
உதயமூர்த்தியோ
“இதுக்குத்தான் இங்கேயே படின்னு சொன்னா கேட்டியா நீ? ஒரு ஜூரம்னா கூட உன்னைப் பக்கத்துல வைச்சிப் பார்க்க முடியல” என்று கிளம்பிவிட்டார்.
கல்கி சரியாகிவிட்டது, சிரஞ்சீவி டாக்டரிடம் அழைத்துப் போனான் என்று சொல்ல, அதற்கும் பிடித்துக்கொண்டார்.
“பாரு அடம்பிடிச்சு அங்க போய் உட்கார்ந்துட்டு அவங்களுக்கும் கஷ்டம் உன்னால” என்று உதயமூர்த்தி திட்ட
“நானா இங்க வரேன் சொன்னேன், பேசாம நான் ஹாஸ்டலுக்குப் போய்டவா ப்பா? நான் யாரையும் கஷ்டப்படுத்தல” என்று சொல்லும்போதே கண்கள் கலங்கிவிட்டது.
கிட்ட தட்ட ஒருவாரமாய் வீட்டை பிரிந்திருக்கிறாள், இதில் காய்ச்சல் வேறு. அவளின் அம்மா அங்கைக்குப் பிள்ளைகள்தான் உலகமே, அவர் கண்டிப்புடன் நடந்தாலும் தேவையற்ற கட்டுப்பாடுகளை தம்மக்கள் மீது விதிக்கமாட்டார். நாத்தனார் செய்த தவறுக்குத் தன் மகள்களைக் கட்டுப்படுத்துவதையும் பேசுவதையும் அவர் விரும்பமாட்டார், இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் முடிந்த மட்டும் பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்துதருவார்.
அதுவும் கல்கி அவள் அம்மாவை யார் பேசினாலும் வைத்து விளாசிவிடுவாள். தையல் நாயகி கூட மருமகளை ஏசிவிட முடியாது, அஞ்சனாவும் திருமணமாகி சென்ற பின் அம்மாவும் பெண்ணும்தானே? ஒருவருடமாய் வீட்டில் அம்மாவுடனே இருந்து பழகியவளுக்கு இந்த சுதந்திரம் பிடித்திருந்தாலும் தனிமை வாட்டியது.
இருந்தும் கண்ட கனவுக்காகவும் கொண்ட லட்சியத்துக்காகவும் அதை ஒதுக்கி அவள் தைரியமாய் இருக்க, அப்பாவின் பேச்சு அழுகையைத் தந்தது. காய்ச்சல் வருவதற்கெல்லாம் அவள் என்ன செய்திட முடியும்? இவர்களுடன் இருக்கிறேன் என்று அவளா சொன்னாள்? அதில் அவள் கோபமாய்ப் பேச
சிரஞ்சீவி கல்கியைப் பார்க்க வந்தவன் காதில் அவள் கடைசியாய்ப் பேசியது விழ, அவளிடமிருந்து போனை வாங்கியவன்
“மாமா, நான் சிரஞ்சீவி பேசுறேன்” என்றான்.
“சொல்லுங்க தம்பி, கல்கியால உங்களுக்குத் தான் கஷ்டம்” என்று உதயமூர்த்தி அவனிடமும் அதையே சொன்னார். உதயமூர்த்திக்கு என்னதான் மகளைப் படிக்க அனுப்பிவிட்டாலும் ஒரு உறுத்தல், இத்தனை வருடம் தள்ளி வைத்த தங்கையின் வீட்டிற்கு அனுப்பிவிட்டோமே என்று. ஆனால் வெளியே மகளை விடவும் பயம்.
காய்ச்சல் என்றால் கல்கிக்குத் தாங்காது, இப்படி பிடிவாதம் பிடித்து தனியே போய் அவதிப்படுகிறாளே என்ற எண்ணத்தில் அவர் பேசிவிட
“மாமா, கல்கியால ஒரு கஷ்டமும் இல்லை எனக்கு. அவ பாட்டுக்கு அமைதியா இருக்கா. ஃபீவர் அவளுக்குக் க்ளைமேட் சரியில்லாம வந்துடுச்சு, அதுக்காக அவளைப் பேசுவீங்களா?” என்றவன் உதயமூர்த்திக்குப் பதில் பேச வாய்ப்பளிக்காமல்
“டாக்டருக்கு அழைச்சிட்டுப் போறதுல என்ன கஷ்டம் எனக்கு? அவ நல்லா இருக்கா, டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க. இப்போ சாப்பிட போறா, நீங்க நாளைக்கு அவகிட்ட பேசலாம்” என்றவன் அவரின் பதிலை கூட எதிர்ப்பார்க்காது போனை வைத்துவிட்டான்.
பேசிவிட்டு போனை நீட்டியபடி கல்கியைப் பார்த்தவன்
“டேப்லெட்ஸ் எல்லாம் கரெக்டா போய்ட்டியா கல்கி?” என்றான் கேள்வியாக.
“ம்ம்” என்று அவள் முனக
“எங்க காட்டு?” என்றான். சின்னப்பெண் ஏமாற்றிவிடுவாளோ என்று நினைத்து அதிலும் கூட அவன் போலீஸ் புத்தியைக் காண்பித்தான்.
அவள் மாத்திரையைக் காட்டவும்
“ஓகே குட், சாப்பிட வா” என்றான்.
அவன் உண்ண அழைக்கவும் அமைதியாக அவன் பின்னால் சென்றாள். இரண்டு இட்லியுடன் எழுந்தவள் மாத்திரை உண்டு படுத்துவிட்டாள். அப்பாவிடம் பேசிய பின் மீண்டும் மனக் குழப்பம், உளைச்சல். அது காய்ச்சலை ஏற்றிவிட்டது.
நள்ளிரவில் சிரஞ்சீவி கல்கியை வந்து பார்த்தான். அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க ஜூரம் இருந்தது. மாத்திரைப் போட்டு எத்தனை மணி நேரம் ஆகிறது என்று பார்த்தவன் லைட்டைப் போட்டு
“கல்கி, எழுந்திரு” என்றான்.
அவள் கண்களைத் திறக்க முடியாமல் இன்னும் இறுக்கினாள். வெளிச்சத்தில் விழிகள் கூசின. இவன் கல்கி கல்கி என்று அழைப்பது எங்கோ கனவில் நடப்பது போல் இருக்க
அவள் தோள் தொட்டு உலுக்க
“ம்மா, தூக்கமா வருதும்மா” என்றவள் கண்களைத் திறக்கவே இல்லை.
கல்கியின் தூக்கம் கலைக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அவளுக்கு ஜூரம் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன் விடாது எழுப்பினான். யமுனா அவனிடம் இரவு பேசும்போது சொல்லியிருந்தார்,
“பாவம்டா தனியா வந்து இருக்கா, எங்கம்மா வயசானவங்க ப்ரசாத். நீதான் அவளைப் பார்க்கனும். நைட் ஒருதடவ டெம்ரேச்சர் பாரு” என்றிருந்தார்.
அதனால் விழிப்பு வரவும் இவளிடம் வர, இவள் விழிக்காமல் இருக்க அவளின் கன்னத்தை தட்டினான்.
“கல்கி, எழுந்திரு” என்று சத்தமாய் சொல்ல அந்த அதிகார குரலில்தான் விழித்தாள் பெண்.
“என்னாச்சு?” என்று அவள் பதறிக் கேட்க
“ஒன்னுமில்ல, உனக்கு ஃபீவரா இருக்கு. டேப்லெட் போட்டுத் தூங்கு” என்றவன் தண்ணீரை நீட்டினான். அவளும் மாத்திரையைப் போட்டு உறங்கிவிட சிரஞ்சீவியும் அவன் அறைக்குச் சென்றான்.
காலையில் சிரஞ்சீவி டியுட்டிக்கு கிளம்பி வெளியே வந்தபோது தையல் நாயகி ராசி பலன் பார்க்க, கல்கி சோஃபாவில் சாய்ந்து கண்மூடியிருந்தாள்.
“கல்கி!” என்று இவன் அழைக்க அவள் விழித்து இவனைப் பார்த்தாள்.
“ஃபீவர் போச்சா?” என்று விசாரிக்க
“ம்ம், சரியாச்சு” என்றாள்.
“அப்புறம் ஏன் டல்லா பேசுற?” இவன் அவளின் குரல் வேறுபாடு உணர்ந்து கேட்க
“இல்லையே நல்லாதான் பேசுறேன்” என்றாள்.
“நல்லா இருந்தா நீ இப்படி எங்கிட்ட பொறுமையா பேச மாட்டியே கல்கி?” என்று கிண்டலாய் அவன் கேட்க கல்கி முறைத்துப் பார்க்க
“எனக்கு டைம் ஆச்சு, உனக்குத் திரும்ப முடியலன்னா கூப்பிடு. வீணா டென்ஷன் ஆகி உடம்பைக் கெடுத்துக்காத, ஃப்ரீ டைம்ல உன்னை நானே டிரைவிங் ஸ்கூல், பேக்கிங் க்ளாஸ் எல்லாம் சேர்த்து விடுறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
அடுத்த இரண்டு நாளில் கல்கிக்குக் கல்லூரி திறந்துவிட, தன் கனவு நனவாகும் முதல் நாள். எல்லாருக்குமே கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது வண்ண வண்ண கனவுகள் தோன்றும். அதுவும் ஒரு வருடம் காத்திருந்த கல்கிக்கு அந்த நாள் மிக மிக முக்கியமானதாக இருந்தது.
இரவெல்லாம் இந்த இனிய பரபரப்பில் அவள் விழிகள் ஓய்வெடுக்கவில்லை. எத்தனை நாள் நிறைவேறுமா என்று நினைத்தே ஆகாய நீலத்தை தன் உறக்கத்தைத் தொலைத்து வெறித்திருந்திருப்பாள். பறக்கும் பறவையைப் பார்த்து உன்னைப்போல் என்று பறப்பேனோ என்று எண்ணி கழித்த இரவுகளும் பொழுதுகளும் எத்தனை எத்தனை?
காலையில் அவள் நாலரைக்கெல்லாம் எழுந்து ஐந்து மணிக்கே புது சுடிதார் அணிந்து தயாராகிவிட்டாள். யமுனாவும் கல்லூரிக்கு கிளம்ப சீக்கிரமே எழுந்தவர் கல்கிக்கு அழைத்து வாழ்த்து சொல்ல, அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி, சூர்யாவும்
“பாப்பா, ஆல் தி பெஸ்ட். உன்னோட டிடர்மினேஷன் மாமாவுக்குத் தெரியும், அது மாதிரி படிச்சிடுடா. காட் ப்ள்ஸ் யூ கல்கி” என்று அவரும் வாழ்த்துச் சொன்னார்.
அடுத்து ஜெகதீஷ், அஞ்சனா, அம்மா, அப்பா என்று எல்லாரும் வாழ்த்து சொன்னார்கள்.
வசந்தி அக்கா சீக்கிரமே வந்தவர் அவளுக்குக் காலை உணவை செய்து முடித்து விட்டார். அவரும் வாழ்த்திட, தையல் நாயகியிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.
சிரஞ்சீவி இவள் கிளம்பும்வரை காத்திருந்தவன்
“போகலாமா கல்கி?” என்று கேட்க
“நானே போய்ப்பேன், எனக்கு ரூட் தெரியும். ஷேர் ஆட்டோ இருக்கே” என்று மறுக்க
“ஃப்ர்ஸ்ட் டே அலைஞ்சிட்டுப் போக வேண்டாம் கல்கி, நானே ட்ராப் பண்றேன் வா” என்று சொன்னவன் அவள் யோசிப்பதுக் கண்டு
“நீ தனியா மதியம் திரும்பி வரலாம், இப்போ வா” என்று சொல்ல, கல்கியும் அவனுடன் காரில் பயணப்பட்டாள்.
இதமான காலை வேளை, கார் ஜன்னல் திறந்திருக்க அந்த சுதந்திர காற்றை சுவாசித்தவளுக்கு மனமெல்லாம் ஒரு நிறைவு. வானில் வட்டமடித்த பறவைகளைப் பார்த்தவள்
’பாருங்க உங்களை மாதிரி நானும் பறக்க ரெடியாகிட்டேன்’ என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
கார் அவள் கல்லூரியை நெருங்கவும்
“கல்கி! ஆல் தி பெஸ்ட். நல்லா படி, காலேஜ் லைஃப் எஞ்சாய் பண்ணு” என்று சிரஞ்சீவி வாழ்த்தினான்.
“தேங்க்ஸ்” என்று இவளும் புன்னகையுடன் சொல்ல
“அண்ட் ஒன் மோர் திங், நான் யார் என்ன, நீ எங்க தங்கியிருக்க எல்லாம் யார்கிட்டவும் சொல்லாத, ஓகே?” என்றதும் அவள்
“ஏன் சொன்னா என்ன?” என்று திரும்பக் கேள்வி கேட்க
“சொல்லாத சொன்னா ஒபை பண்ணக் கத்துக்கோ” என்று அவன் கொஞ்சம் அழுத்திச் சொல்ல
“இப்போ என்ன? நீங்க எஸ்பின்னு யார்கிட்டவும் சொல்லக் கூடாது அதானே? சொல்லல போதுமா?” கல்கி கடுப்பாய்ப் பேச
முதல் நாள் இவளை டென்ஷன் செய்ய வேண்டாம் என்று நினைத்தவன்
அவளைப் போலவே “இப்போ என்ன எஸ்பி சிரஞ்சீவி வரப்ரசாத் உன்னோட அத்தை பையன்னு எல்லார்கிட்டவும் சொல்லனுமா சொல்லிக்கோ” அவன் கிண்டலாய் சொல்ல
“ஒரு சின்ன திருத்தம்?” என்ற கல்கியை அவன் கேள்வியாய்ப் பார்க்க
“அந்த திரும்புனமேனியாவை விட்டீங்களே” என்றதும் அவன் முறைத்தான். இவளுக்குக் கொழுப்பு அதிகம் என்று நினைத்தான்.
காரை விட்டு இறங்கிய கல்கி “உங்க பெயரை எங்கேயும் நான் யூஸ் பண்ண மாட்டேன், ஓகே. எனக்கு என்னோட அடையாளம் போதும். தேங்க்ஸ் ட்ராப் பண்ணினதுக்கு” என்று அவள் நடந்துவிட
சிரஞ்சீவிக்கோ எதற்கு சொல்கிறோம் என்று புரியாமல், கேட்கும் பொறுமை இல்லாத பெண்ணாய் இருக்கிறாளே என்று நினைத்தான்.