“கண்டிப்பா சாய்ஸை நான் தப்புன்னே சொல்லமாட்டேன். அது மாதிரி காதல்ன்றது இரண்டு பேருக்கு இடையே இருக்க உணர்வு. அதை கமெண்ட் பண்ண நான் யார்?” என்றாள் கல்கி.
அவளின் பேச்சின் சாராம்சத்தை சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லை சிரஞ்சீவி. அவனின் அம்மாவை முன்பு பேசிய கல்கி இன்று அவரின் காதலுக்கு ஆதரவாகப் பேசுகிறாள் என்ற பெருமித உணர்வும் கர்வமும் சேர
“முன்னாடி நீதான் அவங்களை ரொம்ப பேசின கல்கி” என்றுவிட்டான். என்னவோ அவன் அம்மாவை அவள் பேசியதை ஏற்கமுடியவில்லை. கல்கியாகவே அம்மாவின் காதல் சரியென்று சொல்லவேண்டுமென மகனாய் அவனுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு. நம்மவர்களை மற்றவர் குறை சொன்னால் ஏற்கவே முடியாத மனப்பாங்கு அவனிடம்.
அதுவரை இயல்பாய்ப் போய்க்கொண்டிருந்த இருவரின் பேச்சில் ஒரு இறுக்கம்!
“ஆமா, அவங்க செஞ்சது தப்பு. முன்னாடி இல்லை இப்பவும் பேசுவேன்”
“அவங்க காதல் தப்புன்னு நான் சொல்லவரல, ஆனா அதை நிறைவேத்தின விதம் தப்பில்லையா?” என்று அவனிடம் திரும்பிக் கேட்டாள் கல்கி.
“காதலிச்சவங்களை ஏமாத்தி விட்டுட்டுப் போனதான் தப்பு. அந்த காதலை நிறைவேத்திக்கிட்டதுல என்ன தப்புன்னு கேட்கிறேன் நான்?” என்றான் கொஞ்சம் கோபமாக.
கல்கியோ அவனின் பேச்சுக்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அவள் நிலையில் நிலையெனவே நின்றாள்.
“எங்கப்பாவை ஏமாத்தினது தப்பில்லையா? தப்புன்றதை விட அது துரோகம். எங்கப்பா தங்கச்சியை அப்படி நம்பினார், புதுசா வந்த காதலுக்காக இத்தனை வருஷம் வளர்த்த அண்ணாவை உதறலாமா? தாத்தா மோசமானவர் நான் ஒத்துக்கிறேன். ஆனா என்னோட அப்பாவுக்கு அத்தை பண்ணினது துரோகம்” என்றாள் அழுத்தமாய்.
அந்த வார்த்தைகள் அவனைக் காயம் செய்தன. எல்லாவற்றிற்கும் நியாயம் அநியாயம் பார்ப்பவனால் அன்னை என்று வருகையில் அது முடியாமல் போனது.
“அவங்களோட லைஃப் மட்டும் நினைச்சாங்க, அவங்க முடிவால எத்தனை பேர் கஷ்டம் பட்டோம். நானே ஒருவருஷம் அதனால படிக்கல” என்றதும்
“எல்லாத்துக்கும் எங்கம்மாவையே ப்ளேம் செய்வியா நீ? உன்னோட அப்பா உன்னைப் படிக்க வைச்சிருக்கனும். அவருக்கு அவர் பசங்க மேல அக்கறை இல்லை அதுக்கு என் அம்மா என்ன செய்ய முடியும்?” என்றவனை முறைத்தாள் கல்கி.
“அந்த நம்பிக்கையை உடைச்சது உங்கம்மா, சும்மா எங்கப்பாவுக்கு அக்கறை இல்லைன்னு எல்லாம் நீங்க பேச வேண்டாம் ஒகே” என்றாள் கல்கி சூடாக.
கல்கி அப்படி சொல்லவும்
“முப்பது வருஷம் முன்னாடி எங்கம்மா செஞ்சதுக்காக உங்களைத் தண்டிச்சா அது உங்கப்பாவோட மிஸ்டேக். அவங்களோட ப்ரஸ்டீஜ், கேஸ்ட் அதைக் காப்பாத்திக்க நினைச்சு உங்களை வளர்த்திருக்காங்க. குடும்ப கௌரவம் பெண்கள் கிட்ட மட்டும் இருக்கா என்ன? உன் பேச்சுப்படி என் அம்மா தப்பு செஞ்சிருந்தாலும் செய்யாத தப்புக்கு உங்களைத் தண்டிச்சது உன்னோட அப்பா, உன்னோட தாத்தா. அவங்க நியாயமில்லாம நடந்ததுக்கு எங்கம்மாவை இன்னொரு முறை குறை சொல்லாத” என்றவன் கோபமாய் அவனறைக்குள் புகுந்துகொண்டான்.
இருவருக்குமான பேச்சு இதமாய்த் தொடங்கி இப்படி இறுகிய ஒன்றாய் மாறுமென கல்கி நினைக்கவே இல்லை. இப்போதும் கல்கிக்கு அத்தை மீது பாசமெல்லாம் இருக்கிறதுதான். ஆனால் அதற்காக அவரின் செயலை நியாயமென காயப்பட்ட அவள் மனம் ஏற்கவில்லை.
அவள் அப்படியே டீவியை வெறித்தபடி உட்கார்ந்திருக்க யமுனா வந்து பெல் அடிக்க, ஹோல் வழியே பார்த்தவள் கதவைத் திறந்தாள்.
“மாமா எங்கத்த?” என்று பின்னால் சூர்யாவைக் காணாது கல்கி கேட்க
“அவருக்குப் போன் வந்துச்சு, பேசிட்டு நிக்கிறார்டா” என்ற யமுனா
“ப்ரசாத் வந்துட்டான் போல” என்றார்.
“ம்ம், அப்பவே வந்துட்டார்” என்றவள் சோஃபாவில் சென்று உட்கார்ந்து கொண்டு வேண்டுமென்றே சீரியலுக்குள் தீவிரமாய் மூழ்கி இருந்த தையல் நாயகியிடம்
“அப்பத்தாவ்! மாமா வந்துட்டார்” என்றதும் அவர் கால்களை உடனே மடக்கி உட்கார யமுனா ப்ரசாதைப் பார்க்க அறைக்குள் போக இருந்தவர் இவள் பேச்சில் திரும்பினார்.
“கல்கி!” என்று செல்லமாய் அவளைக் கடிந்தவர்
தையல் நாயகியிடம் “ம்மா, நீ இப்படி பண்ணினியாக்க அவர் இங்க உட்காரவே மாட்டார். நீ உனக்கு வாகா காலை நீட்டியே உட்காரு. இப்படி செஞ்சா அவருக்குப் பிடிக்காது” என்று அழுத்தமாய் சொல்லி வைக்க
“எப்படி டி மருமக பிள்ளை முன்னாடி?” என்றவர் காலை மடக்கியே வைத்திருந்தார். இன்னும் சூர்யா வராமல் இருக்க
“பொய் சொன்னியா டி சின்னவளே?” என்று கல்கியைத் திட்டினார்.
“ஆமா! பின்ன இவங்க பேரன் உட்கார்ந்தா நான் அவருக்கு சரியாய் உட்காரக் கூடாதுன்னு சொல்றாங்க அத்த” என்றதும்
“கத்திப் பேசுடி, என் காதுல ஒன்னும் விழமாட்டேங்குது” என்று தையல் நாயகி காதினைக் குடைய
“விழுந்துட்ட மட்டும் விஞ்ஞானியாகிடுவியா?” என்று வம்பு செய்தாள் கல்கி.
கல்கி சொன்னதைக் கேட்டு யமுனாவோ
“இன்னமும் இதெல்லாம் விடலையா இவங்க? நீ உன்னிஷ்டம்போல இரு கல்கி” என்றார் அம்மாவை முறைத்துக்கொண்டு. மகனைப் பார்க்க அவனறைக்குள் யமுனா சென்றுவிட
“ஏட்டி! சின்ன சிறுக்கி என்னடி சொல்லிக் கொடுத்த எம்மவ என்னை முறைக்கிறா?” என்று தையல் நாயகி இவளிடம் திரும்ப
“அதை உன் மவ கிட்டயே கேட்டுக்கோ” என்றவள் அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டாள்.
இருவருமே தங்களுக்குள் நிகழ்ந்த வாக்குவாதத்தை யமுனாவிடம் சொல்லவில்லை. அன்றைய இரவு அப்படியே ஓடிவிட அடுத்த நாள் காலையில் கல்கி எழவில்லை, யமுனா எழும்போது ஆறு மணிக்குத்தான் எழுந்தாள்.
யமுனா காலையில் கிச்சனில் இருக்கும் சத்தம் கேட்கவும் எழுந்தவள்
“ச்ச, இன்னிக்கு லேட்டாச்சுத்த. எஸ்பி எங்க வாக்கிங் போய்ட்டாரா?” என்று கேட்டாள் கல்கி.
“அவன் எப்போ போனான்னே தெரியல, இன்னும் காணும். ஆமா உனக்கு லீவ்தானே? என்ன லேட்டுன்ற?” என்று கல்கியிடம் யமுனா கேட்க
“நானும் வாக்கிங் போவேனே, இன்னிக்கு அலாரம் வைக்க மறந்துட்டேன்”
“அவரோட போ மாட்டேன், நான் முன்னாடி போவேன் எஸ்பி என்னை ஃபாலோ பண்ணுவார்” என்றாள் கல்கி.
“என் பையன் உன்னை ஃபாலோ பண்றானா?” என்று யமுனா சிரித்துவிட
“ஆமா, அவர் கூட எல்லாம் நடக்கக் கூடாதாம், அவரால என்னைப் பாதுக்காக்க முடியாதாம். அபாடர்ட்மெண்ட் கேட் தாண்டினா அவர் யாரோ நான் யாரோ. ஜாலியா பேசிட்டுக் கூட நடக்க மாட்டார் தெரியுமா, செம போர்”
“அது உன்னோட நல்லதுக்குத்தான் பாப்பா” என்றபடி சூர்ய நாராயணன் அங்கு வந்தார்.
அவரை கண்ட கல்கி
“இருந்தாலும் அத்த இந்த மாமா ரொம்பத்தான் உங்களை ஃபாலோ பண்ணிட்டே இருக்கார். நம்ம இரண்டு பேருக்கும் ப்ரைவசியே இல்லை” என்று சூர்யாவை வம்பு செய்ய
“லேதம்மா, நான் இங்க பேச்சு சத்தம் கேட்டுச்சுன்னு வந்தேன். உன் அத்தைக்கிட்ட நீ பேசு, நான் ஹால்ல இருக்கேன்” என்று அவர் நகரப்போக
“சிரு இங்க எஸ்பியா இருக்கான். அவனுக்கு நிறைய பேரோட விரோதம் இருக்கும், உன்னோட அவனைப் பார்த்தாங்கன்னா உன்னை வைச்சு அவனை கார்னர் செய்வாங்க, கடத்துவாங்க. உன்னோட உயிருக்குக் கூட ஆபத்தா முடியும் கல்கிம்மா” என்றதும்
“என்னை கடத்தினா கடத்திட்டுப் போறானுங்கன்னு விட்டுடுவார் உங்க சிரு மாமா” என்று கல்கி சொல்ல
“கல்கி! அப்படி எல்லாம் சொல்லாத, அவனுக்கு அக்கறை இருக்கறதாலதான் உன்னை தனியா நடக்க சொல்லியிருக்கான். அதனால நீயும் ஜாக்கிரதையா இரு” என்றார் யமுனா.
“எஸ் கல்கி! எப்பவும் எஸ்பினு சிரு பத்தி எங்கேயும் சொல்லாத, அது உனக்கும் நல்லதில்லை, அவனுக்கும் நல்லதில்லை. அவனால் உனக்கும் உன்னால அவனுக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்று சூர்யா சொல்ல
“என்னத்த போலீஸ் இருக்க வீடு சேஃப்டின்னு எங்கம்மா அனுப்பி வைச்சா நீங்க இப்படி சொல்றீங்க?” என்றாள் கல்கி.
“போலீஸால மத்தவங்களுக்கு சேஃப்டிதான் பாப்பா, ஆனா போலீஸுக்கு ஸேஃப்டின்றதெல்லாம் கிடையாது. நாங்கதான் எங்களைப் பார்க்கனும், சிரு சின்ன வயசுல இருந்தே இப்படி சிட்டிவேஷன்ஸ் நிறைய பார்த்துட்டான், எனக்குக் கூட நிறைய த்ரெட்ஸ் வரும். ஸோ எப்பவும் கவனமா இருக்கறது நல்லது கல்கிம்மா. அவன் சொல்றான்னா கோச்சிக்காம இந்த விஷயத்துல கேட்டுக்கோ. வீட்டுக்குள்ள எப்படி வேணும்னாலும் இரு, புரியுதுதானே பாப்பா?” என்று சூர்யா கேட்க
“அப்போ இந்த சினிமாவுல காட்டுற மாதிரி அட்டாக்ஸ்லாம் நடக்குமா மாமா?” என்று கல்கி கேட்க சிரித்த சூர்யா
“ம்ம், நடக்கும் கல்கி. ப்ரசாத் நைன்த் படிக்கும்போது இவருக்கு நக்சல்ஸ் நிறைய இருக்க ஏரியாவுல போஸ்டிங், அந்த ஊர் கலெக்டரைக் கடத்திட்டுப் போய்ட்டாங்க. இவரோட டீம்தான் காப்பாத்தினாங்க, அதுல இவரை சுட்டுட்டாங்க. நல்ல வேளை கையில பட்டுச்சு” என்று பெருமூச்சுவிட்டார் யமுனா.
“ப்ரியத்தம்மா, நான் இப்போ நல்லாதானே இருக்கேன். அதை விடு. நீ கவனமா இருக்கத்தான் இதெல்லாம் சொல்றோம் கல்கி, பயப்படாத டா” என்று சூர்யா சொல்ல
“இவளா பயப்படுறா? அதெல்லாம் ரொம்ப தைரியம்தான்” என்று கல்கியைப் பார்த்து புன்னகை செய்தார் யமுனா.
மணி ஏழாகிவிட, யமுனா தையல் நாயகியை காஃபி கொடுத்து எழுப்பினார். சூர்யா ஹாலில் டீவி பார்க்க, கல்கி அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். தையல் நாயகி பேத்தி மருமகனிடம் சரிக்கு சரியாய் உட்கார்ந்து பேசுவதைப் பார்த்து முறைக்க
அதனைக் கண்ட யமுனா “ம்மா, அவளை ஏன் அப்படி பார்க்குற? அவர் முன்னாடி எதையும் பேசி வைக்காத” என்று கண்டித்து சொல்ல தையல் நாயகி அமைதியாக கீழே உட்கார்ந்தார்.
அப்போதும் விடாமல் கல்கியை அங்கிருந்து கிளப்பும் பொருட்டு,
“ஏய் கல்கி! இங்க வந்த நாள்தொட்டு நீ இன்னும் எண்ணெய்த் தேய்ச்சு தலைக்குக் குளிக்கல, காலையில ஒழுங்கா எந்திரிச்சு போய் எண்ணெயை சூடு பண்ணீயா போ” என்று விரட்ட
கல்கியோ “அய்யோ ஆத்தா! இங்க வந்தும் படுத்தாத. எனக்கு வேண்டாம் போ” என்று மறுத்தாள்.
தையல் நாயகி விடவில்லை.
“ஏன் டி யமுனா தலைக்கு எண்ணெய் வைச்சதானே சூடு குறையும். இங்க வந்து ரொம்பத்தான் ஆடுறா இவ” என்று பேத்தியைத் திட்ட கல்கி அவரைக் கடுப்புடன் பார்க்க
“போங்கத்த, எண்ணெய்த் தேய்க்கிறேன்னு சொல்லி மூஞ்சி முழுக்க எண்ணெய் ஆக்கிவிட்டுடும் இந்த ஆத்தா. அது போறதுக்கே ஒரு வாரம் ஆகும். இங்க நான் காலேஜ் வேற போறேன் அதெல்லாம் முடியாது” என்று கல்கி மறுத்துவிட்டாள்.
“கல்கி! நானே உனக்குத் தேய்ச்சுவிடுறேன். பாரு உனக்கு நல்ல முடி, இங்க சென்னையில இருக்க தூசுக்கும் வெயிலுக்கும் அப்படியே ஷேம்பூ போட்டா நல்லதில்லை. நீ எண்ணெய் சூடு பண்ணி எடுத்துட்டு வா நான் தேய்க்கிறேன்” என்று யமுனா சொல்ல மறுக்க முடியாமல் கல்கி எண்ணெய் சூடு செய்து வந்தாள்.
நல்லெண்ணெயில் பூண்டு மூன்று பல் சேர்த்து அரை காய்ந்த மிளகாய்ப் போட்டு மிதமான சூட்டில் இருந்த எண்ணெயை யமுனாவிடம் தந்த கல்கி அறைக்குள் சென்று பழைய துண்டுகள் இரண்டு எடுத்து வந்தாள். ஒன்றை கீழே போட்டு அதன் மேல் உட்கார்ந்தாள். சுற்றிலும் எண்ணெய் சிந்தாமல் இருக்க பழைய செய்தித்தாள்களை விரித்தவள் யமுனாவின் மடியில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு
“ம்ம், ஆரம்பிங்கத்த” என்று சொல்ல
“சமத்து பிள்ளை கல்கி நீ. எங்கேயும் இப்போ எண்ணெய் சிந்தாது” என்றவர் மெதுவாய் அவள் சிகைக்குள் எண்ணெய்யைத் தேய்த்துவிட கல்கிக்கு அவரின் கரம் தன் கார்குழலில் செய்யும் மாயத்தில் இதமாய் உணர்ந்தாள்.
டீவி பார்த்துக் கொண்டு இருந்த தையல் நாயகியைக் கத்தி அழைத்தவள்
“நானே பொம்பள புள்ள வேணும்னு அந்த பொது ஆவுடையாரை வேண்டிக்கிட்டு பொறந்தவ டி என் பொண்ணு, என்ன பேச்சு பேசுற நீ?” என்று கடிந்தார். மருமகன் இருப்பதால் குரல் கொஞ்சம் கம்மியாகவே வந்தது.
“இல்லை நீ யானை மிதிக்கற மாதிரி தலையைத் தேய்ப்ப, அத்தை பாரு பூனைக்குட்டி முடி எப்படி பொசுபொசுன்னு இருக்கும் அப்படி அழகா தேய்ச்சு விடுறாங்க. செம அத்தை” என்று பாராட்டினாள் பாவை.
யமுனா அண்ணன் மகளுக்கு ரசித்தவண்ணம் மெதுவாய் அவளுக்கு வலிக்காது எண்ணெய் வைக்க, சிரஞ்சீவி வரப்ரசாத் அப்போதுதான் உள்ளே வந்தான்.
மகன் உள்ளே வரவும்
“என்ன ப்ரசாத், வாக்கிங் போன நீ இப்போதான் வர?” என்று யமுனா கேட்க
“வேற ஒரு வொர்க் இருந்துச்சும்மா, அதான்” என்று சொல்லி வரப்ரசாத் அறைக்குள் போனான்.
“உனக்குக் காஃபி ப்ளாஸ்கில இருக்கு ப்ரசாத் எடுத்துக்கோ” யமுனா குரல் கொடுக்க
“ஓகேம்மா” என்றவன் கிச்சனுக்குள் சென்று காஃபியை எடுத்துக்கொண்டு அப்பாவின் அருகே வந்து அமர்ந்தான். அப்போதுதான் அம்மாவின் கீழே நன்றாய் சாய்ந்து உட்கார்ந்து அவர் வருடலில் லயித்திருந்த கல்கியைக் கண்டான்.
‘பேசுறது எல்லாம் பேசிட்டு எப்படி ஜம்முன்னு உட்கார்ந்திருக்கா பாரு’ என்று நினைத்தபடி அவன் காஃபியைப் பருக
“யமுனா இவளுக்குத் தேய்ச்சது போதும், பேரனுக்கும் கொஞ்சம் தேய்ச்சு விடு. நாள் முழுக்க அலையறது பேரனுக்கு சூடு சேர்ந்துக்கும், நீயும் கூட தேய்டி” என்றார் தையல் நாயகி.
“அவன் எல்லாம் தேய்ச்சுக்க மாட்டான்ம்மா, நீ சும்மா இரு. எனக்கு சளிப்பிடிக்கும், ஒத்துக்காது” என்று யமுனா சொல்ல
“என்னடி நீ? நல்லதுக்குக் கூட வாய்த் திறக்கக் கூடாதா? அய்யா நீயாச்சும் அம்மாச்சி பேச்சைக் கேளுய்யா. மாசத்துக்கு ஒரு தடவ எண்ணெய் வைச்சா நல்லது, கொஞ்சுண்டு உச்சில வைச்சா உடம்பே குளிர்ந்து போகும். பாரு இவளாம் வைச்சிக்கிறா” என்று கல்கியைக் காட்டினார்.
அவளோ
“அத்தை செம சூப்பர், அப்படியே மசாஜ் மாதிரி இருக்கு. இனிமே நீங்கதான் எனக்குத் தேய்ச்சுவிடனும்” என்று சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
சிரஞ்சீவிக்கு அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கல்கியைக் கண்டு எரிந்தது. ஒற்றை மகனாய் வளர்ந்தவனுக்குத் தன் பெற்றோரிடம் இன்னொருத்தி உரிமை எடுப்பது பிடிக்கவில்லை. அவளை முறைத்தபடி இருக்க மாமியாரின் பேச்சைக் கேட்ட சூர்யா
“பாட்டி சொல்றாங்க இல்ல பங்காரம், கொஞ்சம் வைச்சிக்கோ” என்று மகனிடம் சொல்ல
“ம்மா, ஏமிம்மா?” என்று அவன் அம்மாவைப் பார்த்தான்.
“ஏமி இல்ல எண்ணெய்” என்று கல்கி சொல்ல
சிரஞ்சீவி சத்தமாய்”என்ன?” என்றான் அவளிடம்.
அவளும் “எண்ணெய்தான்” என்று வம்பிழுத்தாள். வந்ததில் இருந்து அவனின் பார்வைகளைத்தானே பாவை பார்க்கிறாள், அதில் பெருகி வழியும் பொறாமை உணர்வு இவள் கண்களுக்குத் தப்பாமல் விழ வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.
கல்கி அவனைக் கிண்டல் செய்யவும் சூர்யாவும் யமுனாவும் அவளின் குறும்பில் சிரித்துவிட
“ம்மா, சரி தேய்ச்சு விடுங்க” என்று அவர் அருகே வர
“அத்தை! நான் குளிக்கப் போறவரைக்கும் நீங்க எனக்கு மசாஜ் பண்ணி விடனும். நீங்க செய்றீங்கனுதானே நான் வந்தேன்” என்று கல்கி சொல்லிவிட சின்னப்பெண் அத்தையிடம் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை.
“விடு யமுனா, சிரு அப்பா தேய்ச்சு விடுறேன் வா” என்று சொல்லி மகனை கீழே உட்கார வைத்து சூர்யா தேய்க்க, கல்கியைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளையே சிரஞ்சீவி பார்க்க அவனைப் பார்த்துக் கிண்டலாய்க் கண்ணடித்தாள் கல்கி. அதில் அவன் லேசாய் சிரித்தும்விட்டான்.
“எஸ்பி சாருக்கு ரொம்ப சூடுதான். இங்க வர அனல் அடிக்குது. பார்த்து தேய்ங்க மாமா உங்க கை சுட்டுடபோது” என்று அவன் பொறாமையுணர்வை கேலி செய்தாள் கல்கி.
“என்ன இருந்தாலும் எங்கத்தை மாதிரி யாராலும் தேய்க்க முடியாது” என்று வேண்டுமென்றே ப்ரசாத்தை உசுப்பேற்ற அவனோ இவள் விளையாட்டு புரிந்து
“இன்னும் மூணு வருஷம்தான், அப்புறம் யார்கிட்ட மேடம் தலையை நீட்டுவ?” என்று கேட்க
“ஏன்? நான் ஞாயித்துக்கிழமைன்னா எங்கத்த வீட்டுக்கு வருவேன். என்னத்த?” என்று யமுனாவை இழுத்தாள். (Xanax)
“அதானே, நீ எப்போனாலும் வாடாம்மா” என்று யமுனா அவளுக்குத் திருஷ்டி எடுத்தார்.
“மாமா, நீங்க ரொம்ப மோசம்” என்று அடுத்து கல்கி சூர்யாவிடம் சொல்ல
“ஏன்ட்டிம்மா நானா?” என்று அவர் பாவமாய்ப் பார்க்க
“ஆமா, எங்கத்தை இத்தனை வருஷம் அழைச்சிட்டு வராம போனதால இந்த அப்பத்தா கிட்ட என் தலையைக் கொடுத்து எவ்வளவு குட்டு தெரியுமா?” என்று புலம்பினாள். தலைத் தேய்க்கும்போது அசைந்தால் அவ்வளவுதான் தையல் நாயகி நறுக்கென்று கொட்டிவிடுவார்.
இவளின் அலப்பறையில் எல்லாருக்குமே புன்னகை.
குளித்த பின் சிரஞ்சீவி வெளியே சென்றுவிட, கல்கி நாள் முழுக்க யமுனாவுடன் சுற்றிக்கொண்டு இருந்தாள். அன்றிரவு அவர்கள் விஜயவாடா செல்ல வேண்டும். அதனால் சிரஞ்சீவி மாலையில் சீக்கிரமே வந்துவிட கல்கியுடன் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டு வீடே கலகலவென இருந்தது.
இரவு அவர்கள் கிளம்பும் நேரம் கல்கிக்கு மனதே கேட்கவில்லை. இத்தனை வருடமாய் வீட்டில் ஆட்களுடன் இருந்து பழக்கப்பட்டவள். இங்கு வந்த பின் தையல் நாயகி மட்டும் இருந்தாலும் தனிமை மிகவும் வாட்டியது. சிரஞ்சீவியும் தேவைக்குப் பேச உள்ளுக்குள் ஊரைப் பற்றி வீட்டினைப் பற்றி நிறைய ஏக்கமிருந்தும் பகிரவில்லை பெண். இரண்டு நாட்களாய் சூர்யாவும் யமுனாவும் உடனிருந்தது அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க இப்போது போகிறார்கள் என்றதும் கலங்கிப்போனாள்.
“சமத்தா இருக்கனும் டா, அத்தை அடுத்து லீவ் விட்டதும் வரேன். நீ நல்லா படிக்கனும்” என்றவர் தையல் நாயகியிடம்
“சும்மா இவளைத் திட்டாம புள்ளையை ஒழுங்கா பார்த்துக்கோம்மா” என்றார்.
சூர்யாவும்
“பாப்பா, மாமா சொன்னது ஞாபகமிருக்கட்டும். பார்த்து இருக்கனும், நல்லா படி” என்று சொல்ல
“லீவ் விட்டதுமே இரண்டு பேரும் வந்துடனும்” என்றாள் கல்கி.
இதனைப் பார்த்த சிரஞ்சீவி
“ஏமிரா இதி? ம்மா, நானும் இங்க இருக்கேன். இத்தனை தடவ என்னை விட்டுப்போகும்போது ஒரு சொட்டு கண்ணீர் விடலையே” என்று கிண்டலாய் சொல்ல கல்கி அவனை முறைத்தாள். முறைத்த அவள் விழிகளிலும் கண்ணீர் கோர்த்திருந்தது ப்ரசாதின் கண்களுக்குத் தப்பவில்லை.
“ஷ்! ப்ரசாத். நீ எங்கடா வீட்ல இருப்ப? கல்கி எங்களோடவே இருந்தா அதான் குழந்தை எங்களை மிஸ் பண்ணுவா. நீ கல்கியைப் பத்திரமா பார்த்துக்கோ” என்று யமுனா சொல்ல அவனும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டான்.
சிரஞ்சீவிக்கு ஒன்று நன்றாய்ப் புரிந்தது. கல்கிக்கு அம்மாவின் மீது அன்பு இருக்கிறது, ஊரில் இருந்த போது அம்மாவைப் பேசியதுடன் சரி, இங்கு வந்த பின் அம்மாவை அவள் காயம் செய்யவில்லை. இவனாக அதனைப் பற்றி பேசினால் மட்டுமே அவளும் கோபம் கொண்டு பேசுகிறாள் என்று புரிந்தவன் அவளிடம் இனி அது போல் பேசக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.
வீட்டிற்கு வந்தவன் கல்கியிடம்
“தேங்க்ஸ், அம்மாவைப் பேசாம இருந்ததுக்கு” என்று அவளிடம் சொல்ல
“ஹலோ நீங்க என்ன தேங்க்ஸ் சொல்றது? அவங்க என்னோட அத்தை” என்று சொல்ல அவன் முகத்தில் புன்னகை. அவன் புரிதல் சரிதான் என்று தெளிந்து கொண்டான். அதனால் அவள் பதிலில் மெல்ல புன்னகைத்தவன் ஒன்றும் பேசவில்லை.
அடுத்து வந்த நாட்கள் அமைதியாய்க் கழிய அந்த வார புதன்கிழமை கல்கி கல்லூரி விட்டு எப்போதும் வரும் நேரம் வரவில்லை. புத்தகம் வாங்க செல்கிறேன் என்று இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். ஆனால் மாலை ஆறு மணிக்கு சிரஞ்சீவி வீடு வந்த போது அவள் இல்லை. ஆறரை மணி போல்தான் வந்தாள்.
வந்தவுடன்
“என்னாச்சு கல்கி? ஏன் லேட்?” என்று சாதாரணமாகத்தான் சிரஞ்சீவியின் கேள்வி இருந்தது. ஆனால் அவன் இன்னும் சீருடை மாற்றாமல் இருக்க, அவனின் தோரணை விசாரணையைப் போலவே கல்கிக்கு இருக்க டென்ஷனாகிவிட்டாள்.
“புக்ஸ் கிடைக்கல, இரண்டுதான் வாங்கினேன். அதான் லேட்” என்றவள் தனது பர்ஸைத் திறந்து
“இங்க பாருங்க, புக் வாங்கத்தான் போனேன். அதோட பில், பஸ் டிக்கெட்” என்று எல்லாம் காட்டினாள்.
“ப்ச், என்ன கல்கி நீ? நான் உன்னை நம்புறேன். ஏன் இப்படி எவிடன்ஸ் மாதிரி எல்லாம் காட்டுற? லேட்டுன்னுதான் கேட்டேன்” என்றான் வரப்ரசாத் பொறுமையாகவே.
கல்கி உடனே
“நீங்க போலீஸ் மாதிரி கேள்வி கேட்டா நான் எவிடன்ஸ் தான் தர முடியும்” என்றாள்.
“என்ன நான் போலீஸ் மாதிரி உங்கிட்ட நடந்துக்கிறேனா? நான் நார்மலாத்தான் கல்கி இருக்கேன்” என்று அவன் சொல்ல
“தெரியல, நீங்க இந்த யுனிஃபார்ம் போட்டு என்கிட்ட பேசும்போது எனக்கு அப்படிதான் ஃபீல் ஆகுது. நீங்க எப்படி நடந்தாலும் எனக்கு என்ன ஃபீல் ஆகுதோ அதைத்தானே நான் சொல்ல முடியும்” என்று கல்கி சொல்ல திகைத்துதான் போனான் சிரஞ்சீவி வரப்ரசாத்.