சற்குணப்பாண்டியனுக்குக் காரியம் எல்லாம் முடிந்து, வீட்டினர் மட்டும் இருந்த நேரம். கல்கிக்காக மூன்று கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டான் ஜெகதீஷ், இன்னும் இரண்டு வாரத்தில் கல்லூரியில் சேர்க்கை நடைப்பெறும், நேரில் செல்ல வேண்டும். இப்போதே பேச ஆரம்பித்தால்தான் வீட்டில் அனுமதி பெற முடியும் என்று கல்கி நினைத்தாள். அதனால் ஜெகதீஷை அழைத்தவள்
“மாமா, சீக்கிரமே நம்ம விஷயம் பேசு இன்னிக்கு. அப்பா தனியா இருக்கும்போது இரண்டு பேரும் போய் பேசலாம்” என்றாள் ஆர்வமாக.
நம்ம விஷயம் என்றதும் ஜெகதீஷுக்குள் புத்துணர்வு, உற்சாக மன நிலையில்
“என்ன நம்ம விஷயம்?” என்றான்.
“ஹ்ம்ம், காலேஜ் போறதுதானே, நீதானே அப்பா கிட்ட இந்த டைம் பேசுறேன் சொன்ன, மாமாவையும் பேச சொல்றேன் சொன்னியே?” என்று கல்கி கேள்வியாய்ப் பார்த்தாள். ஜெகதீஷுக்கு சப்பென்று ஆகிப்போனது.
“இதானா?” என்றான் கொஞ்சம் சோர்ந்த மன நிலையுடன்.
“வேறென்ன?” என்றதும் தெளிந்தான் ஜெகதீஷ். கல்கிக்கும் காதலுக்கும் எட்டவே எட்டாது, காதல் என்று சொன்னால் காது கிழியும் அளவு அடிக்கக் கூட செய்வாள் என்ற பயம் அவனுக்கு. அதனால் சொல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
அதையும் தாண்டி யமுனாவின் காதலினால் தானே கல்கியால் படிக்க முடியவில்லை, ஆகையால் காதல் என்றாலே கசப்புதான் கல்கிக்கு.
இப்போது கல்கிக்கு முக்கியம் படிப்பு, அதை தான் நிறைவேற்றினால் கல்கிக்குத் தன் மேல் இருக்கும் அன்பானது பேரன்பாய் மாறக் கூடும் என்று நினைத்தான் ஜெகதீஷ். அதனையும் விட பத்தொன்பது வயது பெண் அவள். கல்லூரி படிப்பை முடிக்கட்டும் என்று நினைத்தவன்
“இல்லை, திடீர்னு கேட்கவும் மறந்துட்டேன்” என்றான்.
கல்கியோ “சரி சரி வா, அப்பா வீட்டுக்குள்ள இருக்கார். போவோம்” என்று அவசரப்படுத்தினாள். இருவருமாக உதயமூர்த்தியின் முன் நின்றனர். உதயமூர்த்தி இருவரையும் பார்க்க
“மாமா, கல்கி ஏற்கனவே ஒரு வருஷம் படிக்காம விட்டுட்டா” என்று ஜெகதீஷ் ஆரம்பித்தான்.
“நானா படிக்க வேண்டாம்னு சொன்னேன், இவளுக்குப் பிடிவாதம் ஜெகன், இங்க இருக்க படிப்பு படிச்சா என்ன?” என்று மகளைப் பார்த்தார்.
“மாமா, அதுதான் இவளுக்கு இஷ்டமில்லைன்னு சொல்றாளே, ஒருவருஷம் போனா கூட இஷ்டப்பட்டதைப் படிக்கனும்னு சொல்றான்னா அது அவளுக்கு எவ்வளவு பிடிக்கும், அதை யோசிங்க மாமா”
“அது இவளுக்குப் பிடிவாதம் ஜாஸ்தி டா, தான் நினைச்சது நடக்கனும்னு பிடிவாதம்”
“டேய் மாமா கிட்ட என்ன பேசுற?” என்று சண்டைக்கு வர, ஜெகதீஷின் அப்பா ஜெயராமன்
“நீ சும்மா இரு அங்கை, எல்லாரும் இப்ப புள்ளைங்களைப் படிக்க வைக்க வெளியூர் அனுப்பறதில்லையா? இவனே சென்னையிலதானே படிச்சான். அஞ்சனா ஏதோ சொல்றதைக் கேட்டுட்டா, இவ ஆசையை ஆச்சும் நிறைவேத்தினா என்ன?” என்றார் கொஞ்சம் கோபமாக.
“நீங்க ஒரு பொண்ணைப் பெத்திருந்தா என்னோட பயம் தெரியும் மச்சான்” உதயமூர்த்தியும் கோபமாய்ப் பேசினார்.
“என்ன பொண்ணா பெத்தா தெரியும் மாப்பிள்ளை? நம்ம ஊர்ல எத்தனை பொண்ணுங்க இப்போ வேற ஊர்ல போய் படிக்கிறாங்க, உங்க தங்கச்சி தப்பு செஞ்சா எல்லாரும் அப்படி இருப்பாங்களா? என் தங்கச்சி பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றதும்
உட்கார்ந்திருந்த உதயமூர்த்தி எழுந்தவர் “போதும் மச்சான், என் தங்கச்சி பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டது எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட அண்ணனின் அன்பில் யமுனாவின் வேதனை அதிகம் ஆனது. அவரின் நம்பிக்கையை உடைத்துவிட்டோமே என்ற உணர்வு அதிகமாகியது.
“மாமா, எது நல்லது அவளுக்கு? அவ என்ன செஞ்சா நம்பி அவளைப் படிக்க வைப்பீங்க சொல்லுங்க மாமா, நானும் சென்னையிலதானே இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்” என்று ஜெகதீஷ் எப்படியாவது கல்கியைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் பேசினான். கூடவே கல்கியை அவன் பார்த்துக் கொள்ளலாம், காதல் மனம் அப்படி யோசிக்க வைத்தது.
ஜெகதீஷ் அதையே பேச உதயமூர்த்தி கொதித்துவிட்டார்.
“என் பொண்ணை நீ பார்க்கத் தேவையில்லை, படிக்கனும்னு ஆசைப்பட்டா என்ன படிப்பா இருந்தாலும் படிக்கலாம்” என்று மகளைப் பார்த்து சொல்ல
ஜெயராமன்
“என்ன அவன் பார்க்கத் தேவையில்ல மாப்பிள்ளை? தாய்க்கு அப்புறம் தாய் மாமன்தான். கல்கி இஷ்டப்பட்டதை நாங்க படிக்க வைக்கிறோம்” என்று அவரும் உரிமையுடன் பேசினார்.
யமுனாவைப் பேசும்போதே சூர்யா இடையில் பேசப்போக, யமுனா தடுத்துவிட்டார். யமுனாவிற்கு என்ன செய்து அண்ணனை சம்மதிக்கவைக்கலாம் என்று யோசனைப் போனது, இந்த நேரத்தில் பேசினால் இன்னும் கோபம் கொள்வார் என்று அமைதிகாத்தார். அண்ணன் இப்படி பேசினால் கணவர் நிச்சயம் கோபம் கொள்வார் என்றுணர்ந்த அங்கை
“அண்ணன், இப்போ ஏன் இந்த பேச்சு விடு. அப்புறம் பேசலாம்” என்று தடுத்தார்.
ஜெகதீஷ் உடனே “இன்னும் பதினைஞ்சு நாள்ல அவ காலேஜ் போகனும், இப்போ பேசாம எப்போ பேச சொல்ற அத்தை? ஏற்கனவே ஒருவருஷம் போச்சு” என்று அவன் அங்கையைத் திட்டினான்.
“அதுக்கு என்ன செய்ய சொல்ற? இன்னிக்குத்தானே காரியம் முடிஞ்சது. அப்புறம் பேசிக்கலாம் டா, நீயும் ஏன் டா புரிஞ்சிக்காம நடக்கிற” என்று ஜெகதீஷைப் பேசியவர் அண்ணனிடம்
“இப்ப இதைப் பேச வேண்டாம்ணே” என்று சொல்ல அவர்களும் கிளம்பிவிட கல்கிக்குக் கண்களில் நீர் நிறைந்து விட்டது.
ஏதேனும் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் எப்போதோ படித்திருப்பாள், தனக்கு இருக்கும் தீவிரம் புரியவேண்டும் என்பதற்காகவே ஒருவருடம் போனாலும் பரவாயில்லை என்று வீட்டில் இருந்தாள். ஏதோ ஒரு படிப்பைப் படிக்க, மூன்று வருடங்களை வீணாக்குவாளா என்ன? இப்போதே அவளுடன் படித்தவர்கள் எல்லாம் ஒருவருட படிப்பு முடித்திருக்க கல்கிக்கு இந்தவருடமும் அப்படியே ஆகிவிடுமோ என்ற பயம் உருவாகியது.
அந்த பயம் பாவையைக் கலங்க செய்ய, கண்களில் நீருடன் அறைக்குள் போய் அடைந்துவிட்டாள். இரவு உணவுக்கும் அவள் வரவே இல்லை. அங்கை போய் அழைத்தார், அஞ்சனா கூட அழைக்க அவள் அசையவே இல்லை. அமைதியாய் ஒரு அழுகை.
“அப்பா கிட்ட நான் மனோவை பேச வைக்கிறேன் டி, அழாம வந்து சாப்பிடு” என்று அஞ்சனாவின் சமாதானத்தைக் கேட்டவள்
“போக்கா, அப்பா என்னைப் படிக்க அனுப்பினா அப்போ சாப்பிடுறேன். சாப்பிட்டு மட்டும் என்னவாகப்போகுது, இஷ்டப்பட்டதை செய்ய முடியல” அவள் விசும்ப
அங்கை மகளை அணைத்துக்கொண்டவர்
“இங்க பாரு அஞ்சுவை அப்பா படிக்க விடலன்னதும் வேற படிச்சு இப்போ சந்தோஷமா தானே இருக்கா?” என்று சொன்னவரை கல்கி முறைத்தாள்.
“எனக்கு நான் கேட்டதுதான் படிக்கனும்” குரலில் தீவிரத்துடன் சொல்ல யமுனா அறையின் வாசலில் நின்று இதையெல்லாம் பார்த்திருந்தார்.
“அப்பா படிக்க அனுப்பலன்னா எத்தனை நாள் பட்டினி கிடப்ப டி” அங்கை மனம் கேளாமல் பேச
“எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை, அப்படியே பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை, ஆசைப்பட்டதுக்குப் போராடி செத்தேன் நினைச்சிக்கிறேன்” என்றதும் அஞ்சனா தங்கையின் முதுகில் சுள்ளென்று அடிப்போட்டாள்.
“என்ன வயசு உனக்கு சாகப்போறேன்னு பேசுற?” என்று திட்ட, யமுனாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
“அஞ்சு, இதுக்குப் போய் சின்னப்பொண்ணை அடிப்பியா?” என்று கேட்க அங்கை உடனே
“வேறென்ன செய்ய சொல்ற யமுனா, அவரும் இவளும் சரிக்கு சரியாய்ப் பேசுறாங்க. அதுக்காக சாப்பிடாம இருப்பாளா?” என்று ஆதங்கத்தில் பேசினார்.
யமுனா பேசவும் கல்கிக்குக் கோபம் வர அதுவரை முட்டியில் முகம் புதைத்து அழுதவள் முகத்தை உயர்த்தி உஷ்ணத்துடன் அவரைப் பார்த்து
“எல்லாமே உங்களாலதான், உங்களைப் படிக்க அனுப்பின எங்க அப்பா நம்பிக்கையை உடைச்சிட்டீங்க, அதான் யாரையும் நம்ப மாட்டேங்கிறார். போங்க என் முன்னாடி யாரும் நிக்காதீங்க” என்று கத்தினாள்.
அவள் கத்தவும் இன்னும் இருந்தால் நிறைய பேசிவிடுவாள் என்று தெரிந்த அஞ்சனா
“அம்மா, அத்தை வாங்க போகலாம்” என்று இருவரையும் இழுத்துக்கொண்டு போனாள்.
“அவ என்னடி இவ்வளவு அடமா இருக்கா?” அங்கை பயந்து போய் பேசினார்.
“ம்மா, அவ பசி தாங்க மாட்டா, பசிச்சா தானா சாப்பிடுவா. எனக்குக் கூட அப்போ கஷ்டமாதானே இருந்துச்சு. அப்புறம் தானா சரியாப்போச்சு, நீ கவலைப்படாதம்மா” என்று அஞ்சனா ஆறுதல் சொல்ல கேட்டிருந்த யமுனாவிற்கு இன்னும் குற்றவுணர்வு அதிகமாகிப்போனது.
கூடவே கோபமும், தவறு செய்தது நானாக இருக்க இந்த பிள்ளைங்களை ஏன் தண்டிக்கின்றனர் என்ற வேகம். அவர் அமைதியாய் இருக்க, சூர்யா மனைவியிடம்
“நான் உன் அண்ணா கிட்ட பேசுறேன்மா” என்று சொல்ல
“நான் பேசிக்கிறேன், நீங்க நான் என்ன செஞ்சாலும் பேசாம அமைதியா இருங்க” என்று சொல்லிவிட்டார். இரவு உணவுக்கு எல்லாரும் நடுவீட்டில் கூடியிருக்க, யமுனாவை சாப்பிட அழைக்க
“சின்னவ எங்க? சாப்பிடாம எங்க போனா?” என்று கேட்டார். திண்ணையில் இவ்வளவு நேரம் அவர் இருந்திருக்க வீட்டினுள் நடந்த ஒன்றும் தெரியவில்லை, காதும் சற்று மந்தம் அவருக்கு.
“அவ அப்புறம் சாப்பிடுறாளாம் அப்பத்தா” என்று அஞ்சனா சொல்லிவிட எல்லாரும் உண்டு முடித்தனர். யமுனா இன்னும் உண்ணாமல் இருக்க
அஞ்சனா “அத்தை, சாப்பிட வாங்க” என்று அழைத்தாள்.
சூர்யாவும்
“லேட் பண்ணாதம்மா, அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்ல” என்று சொல்ல, யமுனா அஞ்சனாவிடம்
“எனக்கு சாப்பாடு வேண்டாம் அஞ்சு. பசியில்லை” என்று சொல்லி கல்கியின் அறைக்குள் போய்விட்டார். கல்கி மனோகரன் இல்லையென்பதால் அஞ்சனாவின் அறையில் அழுதபடி உறங்கிப்போனாள்.
அன்றிரவு கல்கியும் உண்ணவில்லை, யமுனாவும் உண்ணவில்லை, இது உதயமூர்த்திக்குத் தெரியவுமில்லை அடுத்த நாள் மதியம் வரை.
காலை உணவும் இருவரும் எடுக்கவில்லை, மதியமும் உண்ணமாட்டேன் என்று இருவரும் பிடிவாதம் பிடிக்க, வயலுக்கு சென்றிருந்த உதயமூர்த்தியை அஞ்சனா போன் செய்து வர சொல்லிவிட்டாள். சூர்யா எவ்வளவு சொல்லியும் யமுனா கேட்கவில்லை.
அங்கை நாத்தனாரிடமும் மகளிடம் போராடி ஓய்ந்துவிட்டார் “என்ன யமுனா நீ? சின்னப்பொண்ணு அவதான் அடம் பிடிக்கிறா, நீயும் இப்படி செய்ற” என்று கத்தியே விட்டார்.
தையல் நாயகி பேத்தியிடம் கெஞ்சினார். என்ன பேசினாலும் திட்டினாலும் அவருக்கு கல்கி என்றால் மிகவும் இஷ்டம். ஆண்மகனாய் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் சுட்டித்தனமாய் இருக்கும் கல்கி மீது நிறைய பிரியம். அவள் வாயைப் பார்த்து ஊரே சின்ன நாயகி என்றுதான் சொல்லும்.
“எதுக்குடி பட்டினி கிடக்குற, உங்கப்பனை நான் பேசுறேன். சாப்பிடு” என்று கெஞ்சிப்பார்க்க கல்கி அசையவில்லை. யமுனாவும் பிடிவாதம் பிடிக்க
“அத்தை, நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. உங்களை மாதிரிதான் அவளும் இருக்கா போல, சின்னப்பொண்ணுக்குப் புத்தி சொல்லாம இப்படி செய்யாதீங்க” அஞ்சனாவும் யமுனாவைத் திட்டிவிட்டாள்.
இருந்தும் பிடிவாதம் கொண்ட இருவரும் அசைந்துகொடுக்கவே இல்லை, கல்கிக்குப் படிக்க வேண்டும் என்ற பிடிவாதம், கல்கியை அவள் அவா கொண்டபடி படிக்க வைக்க வேண்டும் என்று யமுனாவிற்குப் பிடிவாதம். மதியம் வந்த உதயமூர்த்தி இப்போது நேரடியாய் மகளிடம்
“என்ன வேணும் கல்கி உனக்கு?” என்று கேட்க
“எனக்கு மாஸ் கம்யூனிகேஷன் இல்லை ஜர்னலிஸம் படிக்கனும்பா” என்றாள் உறுதியாக.
அண்ணன் பேச ஆரம்பிக்கவும் யமுனா கூட சேர்ந்து
“நான் செஞ்சது தப்புன்னா என்னைப் பேசுண்ணா, இவளைக் கஷ்டப்படுத்தாத” என்று சொன்னார்.
“யமுனா, இதுக்கும் உனக்கும் சம்மந்தமில்லை. நீ தலையீடாம போய் சாப்பிடுற வழியைப் பாரு” என்று தங்கையிடம் கத்தினார்.
“என்ன சம்மந்தமில்லை, நான் படிக்கப்போன இடத்துல இவரை விரும்பிட்டேன்னுதானே இவளைப் படிக்க அனுப்ப மாட்டேங்கிற? நான் உன்னோட நம்பிக்கையை உடைச்சா இவளும் அப்படி இருப்பாளா? இப்ப கொஞ்ச நாளா பார்க்கிற எனக்கே இவளுக்குப் படிப்பு மேல உள்ள ஆர்வம் புரியுது. உன் பொண்ணை நீ நம்ப மாட்டியாண்ணா?” என்றார் யமுனாவும் ஆதங்கத்துடன்.
“உன்னையும் என் தங்கச்சின்னு நம்பினேன்மா” என்ற உதயமூர்த்தியின் வார்த்தைகளில் அவ்வளவு வலி, அந்த வலியை அப்படியே வீட்டினர் உணர்ந்தனர். யமுனாவிற்குக் கண்கள் கலங்கி கன்னம் நனைந்தது இத்தனை நாள் இதையெல்லாம் பேசும் சூழல் இல்லை, இன்று பேசவும் கனத்த மௌனம்.
உதயமூர்த்தி அத்துடன் விடவில்லை “உன் மேல வைச்ச நம்பிக்கையை நீ காப்பாத்தல, அதனால எனக்கு யார் மேலவும் நம்பிக்கை வைக்க முடியல யமுனா ” என்றது இன்னும் இன்னும் குத்தியது யமுனாவை.
“இங்க நம்ம ஊர் காலேஜ்ல அந்த கோர்ஸ்லாம் இல்லையேப்பா, அப்படியே இருந்தாலும் நிறைய பேர் படிக்கறதில்லை. ப்பா, இவ நேத்து மதியம் சாப்பிட்டதுப்பா. படிக்கனும்னு தானே கேட்கிறா பாவம்பா” என்று சொல்லும்போதே அஞ்சனாவிற்குக் கண்கள் கலங்கிப்போனது.
அதுவரை அமைதியாய் இருந்த சூர்யா “பாப்பா இவ்வளவு ஆசைப்படுறா இல்லையா, நீங்க யமுனாவுக்காக குழந்தைங்க படிப்பை வேண்டாம் சொல்லாதீங்க ப்ளீஸ், நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்றதும் உதயமூர்த்தி
“உங்க மேல எனக்கு எந்த கோவமுமில்லை மாப்பிள்ளை. இவ காதலிச்சிருவான்ற பயமெல்லாம் இல்லை எனக்கு. ஆன நாட்டுல நடக்குறதெல்லாம் பார்க்கும்போது எப்படி படிக்க அனுப்புறது சொல்லுங்க, நீங்க பையனைப் பெத்தவங்க உங்களுக்கு என்னோட பயம் புரியாது” என்றார்.
“என்ன செஞ்சா நீ இவளைப் படிக்க அனுப்பவ அண்ணா? ஆயிரம் பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்திருப்பேன், என்னோட அண்ணன் பசங்க படிக்காம இருக்க நான் காரணமாகிட்டேன்றது எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா?” என்று அண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுகையுடன் யமுனா பேசினார்.
கல்கிக்காக அனைவரும் பேச, ஒரு பக்கம் அத்தை அப்பாவின் கையைப் பற்றியிருக்க, இன்னொரு பக்கம் அவரின் கையைப் பிடித்த கல்கி
“முன்னாடி தாத்தா பேச்சு கேட்டு அக்காவைப் படிக்கவைக்கல, இப்போதான் தாத்தா கூட இல்லையே. நான் லவ் எல்லாம் பண்ண மாட்டேன்ப்பா, ஒழுங்கா படிப்பேன்ப்பா. என்னை நம்புங்க” என்று உத்திரவாதம் கொடுத்தாள்.
அந்த உத்திரவாதம் பின்னாட்களில் தன் உயிர் வலிக்கச் செய்யப்போவதை அறியவில்லை கல்கி.
கல்கியின் தலையைக் கோதிக் கொடுத்தவர்
“நீ லவ் பண்ணிடுவேன்னு எல்லாம் பயமில்லைடா, அப்பாவுக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அப்பாவோட பயம் வேற, உன்னைத் தனியா அவ்வளவு தூரம் விட்டுட்டு அப்பாவால நிம்மதியா இருக்க முடியாது” என்று உதயமூர்த்தி மனம் திறந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உதயமூர்த்தியின் நெருங்கிய நண்பர் மகள் சென்னையில் படித்துக்கொண்டிருக்கும்போது, கல்லூரியில் அவளைக் காதலிப்பதாய் ஒருவன் தொந்தரவு கொடுத்து, ஒரு கட்டத்தில் அவன் அவளை கொன்றே விட்டான். அதை எல்லாம் அருகே இருந்து பார்த்த பின், மகள் தன் கண்முன் இருப்பதுதான் பாதுகாப்பு என்று முடிவு செய்துவிட்டார். அதனையும் உதயமூர்த்தி மகளிடம் இப்போது சொல்லி
“உன்னைத் தனியா அனுப்பிட்டு தெனைக்கும் பயந்துட்டே இருக்க முடியுமா சொல்லு, இங்க படிச்சு முடி. அப்புறம் கல்யாணம் ஆனதும் பெரிய படிப்பா படிக்கலாம், அப்போ உனக்கு உன் வீட்டுக்காரன் பாதுகாப்பா இருப்பான்” என்று சொல்ல, கல்கிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
உண்மைதான்! நாட்டில் எத்தனையோ நடக்கிறது. ஆனால் அதற்காக வீட்டினுள் முடங்கிட முடியுமா? அதே நேரம் அப்பாவை மீறவும் முடியவிலை.
‘அன்பை விட பெரிய விலங்கும் வேலியும் உலகில் இல்லை’
சிலர் அந்த வேலியை உடைத்துவிடுகின்றனர் யமுனாவைப் போல, கல்கியைப் போல் சிலரால் அது முடிவதில்லை.!
வீட்டினரை மீறி சென்றிட எண்ணமிருந்திருந்தால் கல்கி என்றோ அதை செய்திருப்பாள். குடும்பத்தின் மீது கொண்ட பிணைப்பு அவளை பிடித்து வைத்திருக்க, பிடித்தம் செய்யும் பிடிவாதமும் கூடவே இருக்க திணறிப்போனாள் பெண்.
கல்கி கலவையான உணர்வோடு அப்பாவைப் பார்க்க, யமுனாவிற்கு அண்ணனின் மன நிலைப் புரிந்தது. உலகம் அப்போது இருந்தது போல் இப்போது இல்லை, வாழ்க்கையில் எத்தனையோ முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்த வக்கிரங்களும் கூடிக்கொண்டேதானே போகிறது. கல்கியின் கலக்கம் அவரைப் பெரிதாய்ப் பாதிக்க
“அவ தனியா தெரியாத ஊர்ல இருப்பான்றதுதான் உண்மையில உன்னோட பிரச்சனையா ண்ணா?” என்று அழுத்தமாய்க் கேட்டார் யமுனா.
“ஆமா” என்று உதயமூர்த்தி சொன்னார். அதுவும் ஒரு காரணம் அவருக்கு.
“அப்போ அவ எங்களோட இருக்கட்டும், சென்னையில தானே ப்ரசாத் இருக்கான். அவன் பார்த்துப்பான்” என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சியாகவும் ஒவ்வொரு மன நிலையிலும் பார்த்தார்கள்.
அங்கை “தனியா இருக்க ஒரு பையன் கூட எப்படி பொண்ணை அனுப்பி வைக்கறது?” என்று அவர் கவலையை சொல்ல
“அத்தை வீட்ல மாமா வீட்ல தங்கிப் படிக்கிற பசங்க எல்லாம் இருக்காங்க தானே அண்ணி, உங்களுக்கு அதுதான் கஷ்டம்னா நான் என்னோட வேலையை ரிசைன் பண்ணிடுறேன்” என்றதும் மனைவியை சூர்யா அதிர்ச்சியாகிப் பார்த்தார்.
“நானும் சென்னையில வந்து இருக்கிறேன், இன்னும் ஒரு மூணு நாலு மாசம் இந்த செம் முடிஞ்சதும் நான் ரிசைன் பண்ணிடுறேன். இப்ப கல்கியைப் படிக்க அனுப்பிவீங்களா?” என்று கேட்டார்.
உதயமூர்த்திக்கோ பெரும் குழப்பங்கள், இத்தனை வருடம் ஒட்டும் உறவும் இல்லாது இருந்துவிட்டு தன் பெண்ணை அங்கே அனுப்புவதா என்று யோசித்தார். கல்கிக்கோ படிப்பில் மீது ஆர்வமிருந்தாலும் இவர்கள் வீட்டுக்குப் போக வேண்டுமா என்று யோசனை.
ஆசைக்கும் ரோஷத்திற்குமிடையே ஒரு போராட்டம் அப்பாவிற்கும் மகளுக்கும்.