ஆடவன் கூறிய வார்த்தைகளோடு அவனது நெற்றி முத்தமும் தேனின் தித்திப்பாய் அவள் மனதினில் இறங்க, ‘என்ன தவம் செய்தேன் நான்? இப்படி ஒரு அன்பைப் பெறுவதற்கு?’ என்று திக்குமுக்காடித்தான் போனாள் மதுரிமா.
திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணின் அதிகபட்ச எதிர்பார்ப்பே தன் கணவனுக்கு தான்தான் முதன்மையானவளாக இருக்க வேண்டும் என்பதுதானே.
இன்னும் எத்துணையோ பெண்களின் வாழ்க்கையில் அது நிறைவேறாத ஆசையாகவே இருக்க, தன் மனைவி கேளாமலே அவளுக்கு அத்துணை உரிமையையும் இன்பத்தினையும் வாரி வாரி வழங்கி இருக்கிறான், இன்னும் வாழ்க்கை முழுதும் வழங்கிக் கொண்டே இருப்பான் சிபிரஞ்சன் என்று சொன்னால் அது துளியும் மிகை இல்லை.
கணவனின் அந்த வார்த்தைகளில் திக்குமுக்காடிப் போனவள் தன் இடையை வளைத்து அணைத்து இருந்தவனின் முதுகை வளைத்து இறுக்கி கால் பெருவிரலால் எம்பி,
“லவ் யூ சோ சோ மச் ரஞ்சன்” என்று அவன் அதரத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
பெண்ணின் அந்தச் செயலில் ஆணின் நாடி நரம்பெங்கும் நேசத்தீ பற்றி எரிய, “அம்மு காலங்காத்தால டெம்ட் பண்ணாதடி. இன்னும் டென் டேஸாவது உன்ன தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைக்கிறேன்” என்று ஈனஸ்வரத்தில் முனக…
அதைப்பார்த்து இதழ்களுக்குள்ளே சிரித்துக் கொண்டவள், “நீங்க என் வாழ்க்கைல வந்ததுக்கு நான் ரொம்ப ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும் ரஞ்சன். யூ ஆர் மை மேல்(male) ஏஞ்சல்.” என்று அவன் இதழ்களோடு தன் இதழ்களை உராய விட்டு உரைக்க, அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாதவன் அவள் வார்த்தையோடு சேர்த்து பெண்ணின் இதழ்களையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.
நொடிகள் பல நீண்ட அந்த வசப்படுத்தல், மணித்துளிகளின் முடிவில் ஒருவரை ஒருவர் வசியம் செய்து முடித்தே முடிவை எட்டியிருக்க,
இன்னுமின்னும் நீளாதா என்று ஏங்கிய கணங்கள் எல்லாம் தேவகணங்களாக அவர்களின் நேச பெட்டகத்தில் பத்திரமாய்ப் பதிய, மூச்சு வாங்க விலகிப் படுத்தவர்கள் முத்தத்தாலே தங்களை ஆசுவாசம் செய்து கொண்டனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னான அந்த இணைவு ஆணவனுக்கோ சொல்லொணாத பரவசத்தை அளித்திருக்க, பெண்ணுக்கோ சோர்வையும் வியர்வையும் அள்ளித் தெளித்திருக்க, “கொஞ்சம் முன்ன அவங்க பொண்டாட்டி நெத்தியில கொஞ்சூண்டு வேர்வை வந்ததுக்கே யாரோ அவ்ளோ ஃபீல் பண்ணாங்க. இப்போ அவங்களே என்ன வேர்வையிலே குளிக்க வச்சிருக்காங்க. இதெல்லாம் எந்த ஊர் நியாயமாம்?” என்று கணவனின் வெற்று மார்பில் வாகாக சாய்ந்து கொண்டே அவனைப் பார்த்து புருவத்தை ஏற்றினாள் மதுரிமா.
ஏற்கனவே அவளிடம் ஏகத்துக்கும் மயங்கிக் கிடப்பவன் தன் வார்த்தை கொண்டே தன்னை மடக்கிய மனைவியின் அந்தப் பேச்சில் இன்னுமின்னும் பித்தாகி, சப்தமிட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.
அதில் சற்றே பதறியவளோ, “அய்யோ ரஞ்சன் கீழ எல்லாரும் இருக்காங்க. மெதுவா சிரிங்க.” என்று அவன் வாயை மூடினாள்.
அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பற்றி ஒவ்வொரு விரலுக்காய் முத்தமிடத் தொடங்கியவன், “அந்த வியர்வையும் இந்த வியர்வையும் ஒன்னு இல்லடி அம்மு” என்று அவள் நாசியைப் பிடித்து ஆட்ட…
“அப்டி என்ன டிஃப்ரென்ட்டாம்?” என்று விடாது மல்லுக்கட்டினாள் அவன் மனையாள்.
மனைவியின் அந்த பாவத்தில், ‘இவ இன்னிக்கு என்ன ஒரு வழியாக்காம விடமாட்டா போல’ என்று முணுமுணுத்துக் கொண்டவன்
“அதெல்லாம் சொன்னாப் புரியாதுடி. செயல்லதான் காட்டணும்” என்று அவளை நன்றாக இழுத்து மேலே போட்டுக் கொண்டவன் அவள் கேட்டதற்கும் மேலேயே விளக்கம் கொடுத்து விலக…
நாணிச்சிவந்து அவன் மார்புக்குள்ளே தஞ்சம் ஆகினாள் மதுப் பெண்ணவள்.
பெண்ணின் அந்த நாணத்தில் ஆடவனின் விளக்கங்கள் மென்மேலும் விரிவுரையாகத் தொடர, “ரஞ்சன், விடுங்க ரஞ்சன்…” என்று பெண்ணவள் பிதற்றிய கூடல் மொழியைக் கேட்டு தந்தையிடமிருந்து தாயை காப்பாற்ற எண்ணினாளோ அவர்களின் பெண்ணரசி. அந்த அறையே அதிரும்படி அழத் தொடங்கி இருந்தாள்.
மகளின் அந்த சப்தத்திலே சட்டெனப் பிரிந்தவர்களுக்கு அப்பொழுது தான் இன்றைய விழா நாளும் சிந்தையில் உதிக்க, வேகமாக ஓடி மகளைத் தூக்கி அழுகையை நிறுத்தியவர்கள் ஒருவரைப் ஒருவர் பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்தவாறே குளித்து முடித்து ஆயத்தம் ஆகினார்கள்.
தங்களின் தவப்புதல்விக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு என்றே தயாரிக்கப்பட்டிருந்த ஆடை அணிகலன்களை அணிந்து தங்கள் வாழ்வின் மகிழ்வை தோற்றத்திலும் பிரதிபலித்தவர்கள் தங்களின் குட்டி தேவதையும் ஆயத்தமாக்கி கீழே இறங்கிச் செல்ல, உறவினர்கள் அனைவரும் அவர்களை வந்து சூழ்ந்து தங்கள் வீட்டு குட்டி தேவதையைக் கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
பெரியவர்கள் அனைவரும் கொஞ்சி முடிக்கவும், “குட்டிமாவை என்கிட்ட கொடு, என்கிட்ட கொடு” என்று மனோவும் மகிழனும் வழக்கமான சண்டையையும் துவங்கி இருக்க, அவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே பெரியவர்களை நெருங்கியவன்,
“சரியா ஃபைவ் ஓ கிளாக் குட்டிம்மாவை தொட்டில் போட்டா சரியா இருக்கும்ல பாட்டிம்மா?” என்றும், “நம்ம ஊர்ல இருக்க ரிலேசன் யாரும் விட்டுப் போயிடலைல்ல தாத்தா?” என்றும் மாலை நிகழவிருக்கும் பேர் சூட்டும் விழாவைப்பற்றிய தகவல்களையும் பெரியவர்களிடம் பரிமாறிக் கொண்டான்.
அவர்கள் எண்ணியதற்கு பல மடங்கு அதிகமான மகிழ்ச்சியோடே தன்னவளுடனான காதல் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவன் தங்கள் உதிரத்தில் உதித்த முத்திற்கு இன்றுதான் பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருக்க, அதற்குத்தான் அவர்களின் மொத்த குடும்பமும் ஆயத்தம் ஆகி இருந்தது.
சிபியின் அழைப்பின் பேரில் அவனின் பெற்றோரும் ஸ்ரீயும் கூட மும்பையிலிருந்து வந்து கொண்டிருக்க, வெகு நாட்கள் கழித்து தம்பியைப் பார்க்கப் போகும் ஆவல் சிபியின் முத்திலும் அப்பட்டமாக வழிய, “சுதிர்…” என்று தன் காரியதரிசியிடம் சென்றவன், தன் உறவுகளின் வருகையோடு சேர்த்து தன் புதிய தொழில் விபரங்களும் கேட்டுக் கொண்டான்.
ஆறுமாதங்கள் முன்னர்தான் கட்டிட வேலை எல்லாம் முடிந்து தன் புதிய தொழிலையும் தொடங்கி விட்டிருந்தவன், தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல கால்பதிக்க ஆரம்பித்திருந்தான்.
மனைவியிடம் கொண்ட காதலுக்காக தமிழ்நாட்டையே வசிப்பிடமாக்கிக் கொண்டாலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மும்பைக்கும் சென்று தொழிலை கவனித்து வருபவன் இன்னும் சிறிது காலத்தில் அனைத்தும் தனியாக கவனிக்கும் வகையில் தம்பியையும் தயார்படுத்திக் கொண்டிருந்தான்.
அப்படியே பேச்சும் சிரிப்பும் ரகளையும், மாலை விழாவிற்கான ஆயத்தங்களுமாக நிமிடங்கள் பல கரைய, அச்சமயம் வாகனம் வந்து நின்ற சப்ததத்தைத் தொடர்ந்து கருப்பு வண்ண ஜீன்ஸும் லாவண்டர் வண்ண சட்டையும் டக்இன் செய்தபடி அணிந்து நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையுமாக வீட்டிற்குள் பிரவேசித்தான் ஸ்ரீரஞ்சன்.
அவனைப் பார்த்ததுமே சிபியும் மதுவும் மட்டுமல்லாது வீட்டில் இருந்த அனைவருக்குமே பரபரப்பும் சந்தோசமும் தொற்றிக்கொள்ள,
“ஸ்ரீ வாடா வா… எப்டி இருக்க?” என்று விரைந்து சென்று சகோதரனை அணைத்துக் கொண்டான் சிபிரஞ்சன்.
கணவனைத் தொடர்ந்து ஓடிய மதுரிமாவும் ஸ்ரீயையும் அவன் பின்னோடு வந்த மாமனார் மாமியாரையும், “வாங்க ஸ்ரீ, வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள்” இன்று வாய் நிறைய வரவேற்க… அவள் உறவுகளும் சிபியின் உறவுகளை மகிழ்ச்சியாகவே எதிர் கொண்டனர்.
தன்னை ஆவலாக அணைத்த தமையனை “ஹாய் ண்ணா. ஐம் ஃபைன். ஹவ் ஆர் யூ?” என்று அணைத்துக் கொண்டவனும், மதுவோடு சேர்த்து அனைவரிடமும் அளவாகவும் அழகாகவும் அளவளாவிக் கொள்ள, மாலினியும் ரகுபதியும் கூட தங்களை வரவேற்று உபசரித்தவர்களிடம் ஓரளவு இயல்பாகவே உரையாடியவர்கள் மிக மிக ஆசையாகவே பேத்தியையும் தூக்கிக் கொஞ்சத் தொடங்கினர்.
பிடிக்காத மருமகள் பெற்ற குழந்தையாக இருந்தாலும் மதுவின் அழகும், சிபியும் சாயலும் கலந்து தங்க விக்கிரகம் போல் இருந்த பேத்தியின் வரவு அவர்களிடம் இனிதான மாற்றத்தைக் கொண்டு வந்து இருந்தது.
ஆரம்பகட்ட நலம் விசாரிப்புகள் முடிந்து, “குட்டிமா… சித்துகிட்ட வாங்க” என்று தமையனின் மகளையும் வாங்கி கொஞ்சிக் கொண்டவன், பின் மற்ற விஷயங்களைப் பற்றியும் சகோதரனிடம் உரையாடலைத் தொடங்கினான்.
சிபியை ஒத்த உயரத்தில் ஒரு கையை கால்சராயின் பைக்குள் நுழைத்தபடி விழிகளை எட்டாத புன்னகையோடும், ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியோடும் கருநிற புற்கள் போல் கன்னங்களை மறைத்திருந்த நான்கு நாள் தாடியோடும் கடந்த இரண்டு வருட காலத்தில் அதிகப்படியான உருவ மாற்றத்தைக் கொண்டு இருந்தவன் மிக மிகக் குறைவாகவே வார்த்தைகளையும் உதிர்த்துக் கொண்டிருக்க, ஆடவனின் இந்த அதீத மாற்றத்தில் அங்கிருந்த அனைவருமே பாசத்தோடு பரிதாபமும் கலந்து அவனைப் பார்த்து இருந்தனர்.
ஆனால் அவன் வீட்டிற்குள் நுழைந்த கணம் தொட்டே அவனை ஆவலாகத் தழுவிக் கொண்ட மனோரமாவின் விழிகளுக்கு மட்டும் ஆடவனின் இந்தத் தோற்றம் அவள் விழிகளின் ரசனையைக் கூட்டி இருக்க, “சின்னத்தான்க்கு இந்த ஹேர்ஸ்டெய்லும் தாடியும் செம்மையா இருக்குள்ள மகி?” என்று தம்பியின் செவியைக் கடித்தாள்.
அவள் கூற்றை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிக் கொண்ட மகிழனும், “ஆமா மனோ. த்ரீ இயர்ஸ் முன்ன பெரியத்தான பஸ்ட் பஸ்ட் பாத்தோம்ல அதுபோலவே ஃபீல் ஆகுது எனக்கு” என்று தமக்கையோடு சேர்ந்து அவனும் ஸ்ரீரஞ்சனை ஆவென்று பார்க்க, அவர்கள் யாருடைய பார்வைக்குமே எந்தவித அலட்டலும் எதிர்வினையும் ஆற்றாது மிக மிக இயல்பாகவே வளைய வந்தவன் மாலை பேர்சூட்டு விழாவிலும் மகிழ்ச்சியாகவே கலந்து கொண்டிருந்தான்.
தங்கள் தவப்புதல்விக்கான பெயர் சூட்டு விழாவிற்கு தங்களின் வீட்டிலேயே ஏற்பாடுகள் செய்திருந்த சிபிரஞ்சன் அன்னை தந்தை உறவுகள் முதற்கொண்டு, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரோடு மதுரிமாவின் சொந்தங்களையும் முறைப்படி அழைத்து இருக்க, விழா நிகழ்வுகளுக்கே உரிய பரபரப்போடு, பேச்சுக்களாலும் சிரிப்புகளாலும் ஆரவாரங்களாலும் களைகட்டி இருந்தது சிபிரஞ்சனின் வீடு.
மாலை ஐந்து மணி போல பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புத்தம் புதிய தொட்டிலதில், சிவப்பு வண்ண ரோஜாப்பூக்கள் பூத்திருப்பது போல் தன் தந்தையே தயாரித்து இருந்த அழகிய ஆடையதில் தங்க விக்கிரகமாய் ஜொலித்த தங்களின் பெண்ணரசியை மென்மையிலும் மென்மையாகக் கிடத்தியவன், “தாத்தா பாட்டிம்மா வந்து உங்க பேத்திக்கு பேரை வைங்க” என்று கூறினான் அவனின் வழக்கமான குணத்தோடு.
அதைக்கேட்டு மதுரிமாவும் மற்றவர்களும் மகிழ்ந்து சிரித்தாலும், மகன் தங்களை விட மனைவி வீட்டு ஆட்களுக்கு அதிக உரிமை கொடுப்பதை ஏற்க இயலாத மாலினியும் ரகுபதியும் சற்றே முகத்தைச் சுருக்கினர்.
இளையவர்களுக்கு எல்லாம் அவர்களின் அந்த முகச்சுருக்கம் பெரிதாகத் தெரியாது இருந்தாலும், அவர்களின் வயதை அனுபவமாகக் கொண்ட பெரியவர்களோ அங்கிருந்த தேன்கிண்ணத்தை எடுத்து மாலினியின் கையில் கொடுத்தவர்கள், “மாப்பிள்ளையை நீங்க இவ்ளோ குணக்காரரா பெத்து வளத்தது போல, உங்க பேத்தியும் சீரும் சிறப்புமா வளரணும், வாழணும்னு ஆசீர்வாதத்தோட பேத்திக்கு பேர் வைங்க சம்மந்தி” என்று கூறி, விட்டுக்கொடுத்தலின் மகத்துவத்தை அங்கிருந்த அனைவருக்கும் பறைசாற்றினார் பட்டம்மாள் பாட்டி.
தங்கள் மகன்கூட கொடுக்காத உரிமையதை பெரியவர்கள் தங்களுக்குக் கொடுக்கவும், அதிலும் மகனைப் பற்றிய பாராட்டிலும் உள்ளம் மகிழ்ந்து போனவர்கள்,
“இல்ல பெரியம்மா… இங்கே இருக்க எல்லாரையும் விடவும் வயசுலயும் அனுபவித்தலையும் நீங்கதான் மூத்தவங்க. நீங்களே முதல்ல வைங்க” என்று அவர்களும் பதிலுக்கு விட்டுக் கொடுக்க, அதன்பின்னரே பட்டம்மாள் பாட்டி தன் செல்லப் பேத்தி பெற்ற கொல்லுப் பேத்திக்கு வாயில் தேனை தொட்டு வைத்து பெயரையும் சூட்டினார்.
இருவீட்டுப் பெரியவர்களும் பெயர் சூட்டி முடித்ததும், மனைவியின் கரத்தைப் பற்றியவாறே மகளிடம் சென்றவன் அவளின் செந்தூரச் செவியோரம் குனிந்து, “மதுரரஞ்சனி, மதுரரஞ்சனி, மதுரரஞ்சனி” என்று தானும் மனைவியும் இணைந்து தேர்ந்தெடுத்திருந்த பெயரை மூன்று முறை உச்சரித்தவன் துளித்தேனையும் எடுத்து அவள் வாயினில் வைத்து விட, அதை சப்புக் கொட்டி விழுங்கிய அவனின் பெண்ணரசியோ அவனைப் பார்த்து பொக்கைவாயைப் பிரித்துச் சிரிக்க, அவர்களை விழி எடுக்காது ரசித்தப்படியே மதுரிமாவும் தன் மகளுக்கு பெயரைச்சூட்டி முடித்தாள்.
அதன்பின்னர் ஸ்ரீரஞ்சன் மனோ மகி சாரதா அவர் கணவர் என்று அனைவருமே அந்த குட்டி தேவதைக்கு பெயரை வைத்து முடித்ததைத் தொடர்ந்து இரவு உணவுகளும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அப்படியே மணித்துளிகளின் நகர்வில் விழா நிகழ்வுகளும் முடிவை எட்டியிருக்க, அனைவரும் சென்று வீடே அமைதியாக மாறவும்,
“சிபி கண்ணா…” என்று முதல் மகனை நெருங்கிய மாலினியோ, “இந்த ஸ்ரீ கல்யாணத்துக்கே பிடி கொடுக்க மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் என்னன்னு கேளேன்” என்று மூக்கை உரியத் தொடங்கினார். அங்கிருந்த ஸ்ரீரஞ்சனைக் கைகாட்டி.
அதில் அண்ணன் மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனின் உடல் இறுகி விரைக்க,
“மும்மா… இப்போ எதுக்கு இந்தப் பேச்சு? எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்று அடிக்குரலில் சீறினான்.
அதில் மென்மேலும் அழுகையை அதிகப் படுத்தியவர், “இப்போ என்ன அவசரம்னா வேற எப்போ மேரேஜ் பண்ணப்போற ஸ்ரீ?” என்றவர்,
“நீயும் அவனும் ட்வின்ஸ் தானே சிபி. நீ கால காலத்தில கல்யாணம் பண்ணி உன்னோட பிள்ளைக்கு பேரே வச்சிட்ட. இவன் என்னன்னா இப்டி மொட்டையா சுத்திட்டு இருக்கான்” என்று மூத்த மகனிடமே முறையீடலைத் தொடர்ந்தார்.
தாயின் அந்தக் கூற்றில் தம்பியை தர்மசங்கடமாகப் பார்த்த சிபிரஞ்சனுக்கும் அவன் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், அவன் காதலித்த பெண்ணை தானே தட்டிப் பறித்து விட்டு எப்படி திருமணம் பற்றி அவனிடம் பேசுவது என்று இத்தனை தினங்கள் தவித்து இருந்தவன் இப்பொழுது அன்னையின் முன்னிலையில் வேறு வழியில்லாது, “ஸ்ரீ… ப்ளீஸ்… மும்மாக்காகவாச்சும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாமே?” என்று கெஞ்சலாகவே கேட்டான்.
அந்த தாய் மகன்களின் உரையாடலைக் கேட்டிருந்த மதுவின் உறவுகளின் ஆசையும் கூட ஸ்ரீரஞ்சனை விரைவில் ஜோடியாகப் பார்க்க வேண்டும் என்பதாகவே இருக்க, “ஆமா தம்பி. எவ்ளோ நாளைக்கு இப்டி ஒத்தையாவே இருப்பீக? வயசும் ஏறிட்டே போகுதுள்ள” என்று அவரவருக்குத்தக்க வார்த்தைகளை போட்டுக் கூறினர்.
தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வீட்டு மூத்த பெண்ணால் ஏமாற்றத்தை அடைந்தவனுக்கு தங்கள் வீட்டு இளைய பெண்ணான மனோவை கொண்டு நியாயம் செய்து விட்டால் என்ன என்று கூட அவர்கள் அனைவரின் உள்ளத்தில் ஒரு ஆசை இருந்தாலும், மனோவின் வயதை எண்ணியும், இரட்டையரின் பெற்றோரை நினைத்தும் இத்தனை தினங்கள் அமைதியாக இருந்து விட்டவர்கள், “நீங்க மட்டும் ரெடின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க இளைய பேரரே. பொண்ணுகூட தயாரா இருக்கு” என்று சந்தோஷ குரலிலே கூறிய சொக்கலிங்கத்தின் பார்வை மனோவின் மீதே நிலைத்து இருந்தது.
அதைப்பார்த்து மென்மேலும் அதிர்ந்தவன், “தயவு செஞ்சு எல்லாரும் என்ன புரிஞ்சுக்கோங்க நான் இப்போ கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில் இல்ல. எனக்கு மேரேஜ் மன்னிக்கணும்னு தோணுறப்போ நான் உங்ககிட்ட வரேன். அதுவரை என்ன தொல்லை பண்ணாதீங்க. ப்ளீஸ்” என்று கையெத்து கும்பிட்டு விட்டு தோட்டப்பக்கம் சென்று விட்டான் ஸ்ரீரஞ்சன்.