கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் முன்பு பம்பாய் என்றும் தற்பொழுது மும்பை என்றும் அழைக்கப்படும், இந்தியாவின் வர்த்தக நகரங்களில் முக்கிய நகரமான மும்பையின் மத்தியப் பகுதியில் பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்த உயர்ந்த கட்டிடம்.
ஐம்பது அடி உயரமும், பத்து தளங்களும் கொண்டு காண்போர் விழிகளை விரிய வைத்த அந்த பிரமாண்ட கட்டிடத்தின் முகப்புப் பகுதியில் “எஸ் ஆர் என் (SRN) டிசைனிங்ஸ்” என்ற நியான் எழுத்துக்கள் கொட்டை வடிவத்தில் மின்னிக் கொண்டிருக்க, அந்த மாலை மங்கிய வேளையிலும் பகல் பொழுதைப் போல் தோற்றம் அளித்த பரந்து விரிந்த பத்து தளங்களுமே மிகவும் பரபரப்பாக காட்சியளித்ததை பார்த்த உடனேயே கண்டு கொள்ள முடிந்தது.
அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தின் பின்னால் இருந்த வாகனம் தரிக்கும் இடத்திற்கு பல்லாயிரக் கணக்கான மகிழ்ந்துகள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருக்க, அந்த அகன்ற நுழைவாயிலின் இரு புறமும் நவ நாகரிக மங்கைகள் இருவர் கைகூப்பி நின்று வருவோருக்கும் போவோருக்கும் வணக்கமும் நன்றியும் உரைத்துக் கொண்டிருந்தனர் ஆங்கிலத்தில்.
அந்த நுழைவாயிலை ஒட்டி தற்காலிகமாக முளைத்திருந்த அலங்காரப் பலகை ஒன்றில், “எஸ் ஆர் என் டிசைனர்ஸ் இன் மோஸ்ட் பியூட்டிபுல் காஸ்ட்யூம்ஸஸ் சோ (ஆடைகள் கண்காட்சி)” என்ற வாக்கியமும் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற பல வண்ண விளக்குகளால் மாறி மாறி ஒளிர்ந்து அந்த வழியாக செல்லும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தது.
அவ்வாறு ஈரக்கப்பட்டே நூற்றுக் கணக்கான சகாக்கள் அந்த காட்சி படுத்துதலைப் பார்க்க அவ்வரங்கிற்குள் நுழைய முயற்சிக்க, அந்தோ பரிதாபம் முன்பதிவு இல்லாது எவரையும் உள்ளே அனுமதிக்க இயலாது என்று அங்கு ஆவலாகக் கேட்ட அனைவரிடமும் தன் தேன் குரலால் கூறிக் கொண்டிருந்தாள் ரீமா என்று அழைக்கப்படும் மதுரிமா.
அதில் அவளை ஏமாற்றமாகப் பார்த்த ஒரு ஆங்கிலப் பெண்ணோ, “ஃபேஷன் ஷோவின் டிக்கெட்டிற்கு உண்டான பணத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். உள்ளே விடுங்கள்” என்று தன் தாய் மொழியிலே கேட்க…
“ஓ…நோ சான்ஸ் மேம். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்.” என்று வருத்தமாகவே மறுத்தவள், “உங்களுடைய பெயரை அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சோவிற்கு வேண்டுமானால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் இதே கட்டிடத்தில் இருக்கும் எங்களது அலுவலகத்தில் இரண்டு தினங்கள் கழித்து எங்களது பாஸைச் சந்தியுங்கள். அவர் உங்களுக்கு பிரத்தியேகமாகவே ஆடைகள் வடிவமைத்துத் தருவார். இது எங்களுடைய கார்ட்.” என்று ஆங்கிலத்தில் கூறி ஒரு அட்டையையும் நீட்டியவள் அந்த பெண்ணை அங்கு நின்றிருந்த பணிப் பெண்ணோடு அலுவலகப் பகுதிக்கும் அனுப்பி வைத்தாள் மதுரிமா.
அங்கு நடந்து கொண்டிருக்கும் ஆடையகங்களின் கண்காட்சி நிரலுக்கு மட்டுமல்லாது அந்த எஸ் ஆர் என் டிசைனர்ஸ்க்கே தலைமைப் பொறுப்பாளினி.
ஆடை வடிவமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர், இது போன்ற சிறப்பு நிகழ்வுகளில் மேற்பார்வையாளர் போன்ற பல பதவிகளை தன்னகத்தே கொண்டிருப்பவள்.
மதுரிமா ஐந்தரை அடி உயரத்தில் அழகிற்கே இலக்கணமான தோற்றத்தோடு பளிங்குப் பாவையாய் வலம் வருபவள். பெயரில் உள்ள மதுவின் கிறக்கத்தை அவளைக் காண்போரின் விழிகளுக்கும் பாரபட்சம் பார்க்காது பரிசளிக்கும் பால் வண்ணப் பாவை.
வான நீலமும் ரோஜாவின் சிவப்பும் கலந்த உயர்ரக மேலாடையும் (டாப்), வெளிர் நீலத்தினாலான டெனிம் ஜீன்சில் கால்சராயும் நேர்த்தியாக உடுத்தி இருந்தவள், வசிக்கும் ஊருக்கும் பார்க்கும் வேலைக்கும் பொறுத்தமான வகையில் சிறு சிறு ஆபரணங்களும் ஒப்பனைகளும் கொண்டு தன்னை நன்றாகவே அலங்கரித்திருக்க, கருப்பு நிற அருவியாய் அவள் தோள்களில் வழிந்து ஓடிய நெளிநெளிவான சிகை அழகோ பெண்ணவளின் முக வடிவைக் கூட அள்ளிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது துளியும் மிகையில்லை.
சற்று முன்னர் பேசி அனுப்பி வைத்த ஆங்கிலப் பெண் போலவே அந்தக் கண்காட்சியை கண்டு களிக்க ஆசைப்பட்ட மேலும் பலரையும் அதே போலக் கூறி முகம் கோணாத விதமாய் அனுப்பி வைத்தவள் இடையிடயே மணிக்கட்டில் தவழ்ந்திருந்த கைகடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருக்க…
அவளை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த ஒரு இளம் யுவதியோ, “ஹேய் ரீமா… நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க. உன்ன ஸ்ரீ சார் தேடுறாரு.” என்றாள்.
ஸ்ரீ என்ற பெயரைக் கேட்டதுமே அவளையும் அறியாது மெல்லிய புன்னகை ஒன்று அவள் இதழ்களில் ஒட்டிக்கொள்ள, “ஹான் ரூபா… நீ இங்க கிரௌட கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கோ. நான் போய் சாரைப் பாக்கறேன்” என்றவள் அவள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் மின்தூக்கியில் ஏறி பத்தாம் தளத்திற்கு விரைந்தாள்.
அங்கோ அருகருகே இருந்த இரு அலுவலக அறைகளில் ஒன்றின் முன்னால் “ஸ்ரீரஞ்சன் மேனேஜிங் டைரக்டர்” என்று பொறிக்கப்பட்டிருந்த கதவை இருமுறை தட்டிவிட்டு, அனுமதி வரவும் உள்ளே நுழைந்தவளைக் கண்டு, “வாவ்…! ரீமா… வாட் எ பியூட்டி!” என்று ஆர்ப்பரிக்கும் குரலோடு தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் ஸ்ரீரஞ்சன்.
அந்த எஸ் ஆர் என் டிசைனர்சின் உரிமையாளனுள் ஒருவன். இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தவன், கருமை வண்ண கோட் சூட் உடையில் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் கதாநாயகனைப் போல அழகும் ஆண்மையுமாகக் காட்சியளித்தான்.
ஆடவனின் அந்த புகழ்ச்சியில் அவளது உள்ளமும் ஏகமாய் குதூகலிக்க, “தேங்க் யூ சார்” என்று இதழ் மலரச் சொல்லி, “என்ன வரச் சொன்னதா ரூபா சொன்னா” என்க…
“எஸ் பேபி… இட் வாஸ் லைக் லூக்கிங் அட் யுவர் சைடு பிபோர் த ஷோ.” என்று ஒற்றை கண்ணை சிமிட்டியவன், “கால் மீ ஸ்ரீ பேபி” என்றுவிட்டு, “யூ லுக்ஸ் வெரி கார்ஜியஸ் பேபி. இந்த ட்ரெஸ்ல நீ செம்மையா இருக்க” என்று அவளை தலை முதல் கால்வரை ரசனையாகப் பார்த்தவன் விழிகளிலோ அத்துணை கிறக்கம்.
அவன் வார்த்தையில் உள்ளூற மகிழ்ந்தாலும், அவன் பார்வையில் சற்றே நெளிந்தவள், “கிரிடிட்ஸ் பாஃர் சிபி சார் ஸ்ரீ. அவங்க டிசைன் பண்ண ட்ரெஸ் தான் இது. இன்னிக்கு வியர் பண்றதுக்குனு ஸ்டாஃப்ஸ்கு கொடுத்த போனஸ் ட்ரெஸ்ல எனக்கு இதான் ரொம்பப் பிடிச்சது” என்று மகிழ்ச்சியாகவே கூறியவள், “நீங்களும் இந்த பிளாக் கோட் சூட்ல செம்ம ஹாண்ட்ஸமா இருக்கீங்க. ஸ்ரீ.” என்று குரல் குழையக் கூறினாள்.
பெண்ணவளின் அந்தக் குரலில்,
“ஓ… ரியலி? தங்கியூ சோ மச் பேபி” என்று அவளை சற்றே நெருங்கி வந்தவன், “இஃப் சோ, கிவ் மீ எ கிஸ் டியர்.” என்று அப்பட்டமான மயக்கக் குரலில் கேட்க…
முத்தம் என்ற வார்த்தையில் தன்னையும் அறியாது அவனை விட்டு பின்னோக்கிச் சென்றவள், “இல்லை ஸ்ரீ. ப்ளீஸ், கிஸ் எல்லாம் ஆஃப்ட்டர் மேரேஜ் தர்றேனே” என்று அவஸ்தையாகப் புன்னகைத்தாள் மதுரிமா.
அதைக்கேட்டு, “ஹோ ந்நோ” என்று ஏமாற்றத்தைப் பூசிக் கொண்டவன்,
“என்னதான் நீ இங்க வந்து த்ரீ இயர்ஸ் ஆனாலும், வில்லேஜ் கேர்ள்ங்கறத அப்பப்போ காட்டிடுற பேபி. சோ சேட்” என்று செல்லமாக சலித்துக் கொண்டவன், “ஓகே ஸ்வீட் ஹார்ட்… ஐ லைக் தட் கல்ச்சர்.” என்று தோள்களை குலுக்கிவிட்டு,
“சரி, உங்க வீட்ல எப்போ சொல்லப்போற பேபி? அவங்க ஓகே சொல்லிடுவாங்க தானே?” என்று அவள்மீது மூச்சுக்காற்று படும் தூரத்தில் நின்றே கேட்டான் ஸ்ரீரஞ்சன்.
ஆடவனின் அந்தக் கேள்வியில் சற்றே எச்சில் கூட்டி விழுங்கியவளுக்கு, “நீ இவ்ளோ ஆசைப்பட்டு கேக்குறதால தான் உன்ன கடல் கடந்து அனுப்புறோம் மதுக்குட்டி. எந்த வேலைக்கு போறியோ அந்த வேலையை மட்டும் பாத்துட்டு, பத்தரமா வீடு வந்து சேரணும்” என்ற அவளது பாட்டி பட்டம்மாளின் கண்டிப்பும் கனிவும் கலந்த கணீர் குரல் அவள் செவியில் வந்து மோத, “அது அது கொஞ்சம் கஷ்டம் தான் ஸ்ரீ. த்ரீ இயர்ஸ் முன்ன என்ன இங்க வேலைக்கு அனுப்பவே ரொம்ப யோசிச்சாங்க. அதனால தான் உங்களோட லவ்வ அக்சப்ட் பண்ணவும் நான் அவ்ளோ டைம் எடுத்துக்கிட்டேன்” என்று அவன் முகம் பார்த்தவள், அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்து, “ஆனாலும் என்னோட ஃபேமிலி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஸ்ரீ. அத்தோட உங்களைப்போல ஒரு ஜெண்டில்மேன யாரும் வேணான்னு சொல்ல மாட்டாங்க.” என்று இதழ் விரிந்த புன்னகையோடு கூறி ஆடவனின் முகத்திலும் மலர்ந்த புன்னகையை தவழ விட்டிருந்தாள் மதுரிமா.
பெண்ணின் முற்பாதி பேச்சில் முகம் சுணங்கினாலும் அவளின் பிற்பாதி பேச்சு உற்சாகத்தை அளிக்க, “ஓகே ஸ்வீட் ஹார்ட். நீ சொன்னா சரியாதான் இருக்கும். டாக் அட் ஹோம் சூன்.” என்றவன் அவள் கைகளைப் பற்றப்போன சமயம் அந்த அறைக்கதவு மெலிதாகத் தட்டப்பட்டது.
அதில் கையை தன்புறம் இழுத்துக் கொண்டவன், “எஸ் கமின்” என…
“சார்…” என்று அழைத்தபடி உள்ளே வந்தான் சுதிர். மதுரிமாவைப் போலவே அந்த எஸ் ஆர் என் நிறுவனத்தின் மிக முக்கியப் பணியாள்.
உள்ளே வந்தவன், “குட் மார்னிங் சார். பாஸ்… நீங்க ரெடியானு பாக்க சொன்னாங்க.” என்று சொல்ல…
ஒரு தலையசைப்போடு அவன் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவனும், “எஸ் சுதிர். ஐம் ரெடி. சிபி ரெடியாகிட்டானா?” என்றான்.
அதற்கு, “பாஸும் அப்போவே கிளம்பிட்டாங்க. ஆனா ஒரு இம்போர்ட்டண்ட் கால் வந்துடுச்சி. பேசிட்டு இருக்காங்க. நீங்க ரெடின்னா வரச் சொன்னாங்க.” என்று சொன்னவன், அங்கிருந்த மதுரிமாவின் புறமும் திரும்பி, “ரீமா உங்களையும் தான்.” என்று கூறிவிட்டு வெளியேறி இருந்தான்.
அதன் பின்னரே நேரத்தைப் பார்த்த இருவரும், “சோ… ஸ்டார்ட் பண்ண டைம் ஆகிடுச்சு.” என்று சொல்லிக்கொண்டே வெளியே வர… அவ்வறையை ஒட்டியிருந்த மற்றுமொரு அறைக்குள் இருந்து சுதிர் பின்தொடர ஒருவன் வெளியேறி வந்தான். அவன் சிபிரஞ்சன்.
பார்ப்பதற்கு அப்படியே ஸ்ரீரஞ்சனைப் போலவே இருந்தவன், அவனைப் போலவே கருப்பு வண்ண கோட்சூட் அணிந்து இருந்தாலும் ஸ்ரீயை விட ஒரு இன்ச் உயரம் அதிகமான வளர்த்தி கொண்டவனுக்கு அவனே தேர்ந்தெடுத்து வடிவமைத்திருந்த அந்த உடை அத்துணை கம்பீரத்தைக் கொடுத்திருந்தது.
வலது கை மணிக்கட்டில் ஒரு உயர்ரக கடிகாரம் அமர்ந்து அவன் கம்பீரத்திற்கு மென்மேலும் களை சேர்க்க, இடது கரத்தை தன்னுடைய கால்சராய் பைக்குள் நுழைத்திருந்தவனின் விழிகள் கனிவற்றதாகவும், இதழ்கள் புன்னகைக்க கூலி கேட்பதாகவும் இருந்தது கூட அவனது அழகை கூட்டித்தான் காட்டியது.
ஆனால் அவனுக்கு முற்றிலும் மாறாக அவனைக் கண்ட ஸ்ரீரஞ்சனின் இதழ்கள், “ஹாய் சிபி…” என்று அகன்ற புன்னகையை பரிசளிக்க…
அதற்கு எதிர்வினையாக இதழ் பிரிக்காது சிரித்து, “ரெடியா ஸ்ரீ?” என்று தன் இரட்டையை நோக்கியவனின் கூர் விழிகள் அவனுக்கு வெகு அருகில் நின்றிருந்த மதுரிமாவிடமும் ஒரு நொடி பாய்ந்து திரும்பியது.
சிபிரஞ்சன், ஸ்ரீரஞ்சனுக்கு பத்து நிமிடங்கள் முந்திப் பிறந்தவன். இருவரும் ஒரே போல் இருக்கும் இரட்டையர்கள்.
மும்பையைச் சேர்ந்த குஜராத்திய தாய்க்கும், அவரை நேசித்து மணந்து கொண்ட தமிழ் தந்தைக்கும் பிறந்து வளர்ந்தவர்கள் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்தும் தாய்வழி தாத்தாவுடைய ஆதரவில் மும்பையிலே முடித்து, அவரது ஆடைகள் வடிவமைப்புத் தொழிலிலே ஆர்வம் கொண்டு புகுந்தவர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் தங்களுக்கென்று தனி இடத்தையும் பிடித்திருந்தனர்.
அதில் ஒரு பகுதியாகத்தான் கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் நிறுவனம் வடிவமைப்பு செய்திருந்த அனைத்து விதமான ஆடை வகைகளையும் மூன்று நாட்களாக காட்சிக்கு வைத்திருந்தனர்.
இப்படிக் காட்சி படுத்துதல் அவர்களின் இரண்டரை வருட வழக்கமாக இருக்க, அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ மூன்று வருடங்கள் முன்பு மிகவும் ஆசைப்பட்டு அவர்கள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்திருந்த மதுரிமா தான்.
மதுரிமா மதுரையை ஒட்டியுள்ள ஒரு வளர்ந்து வரும் கிராமத்தைச் சேர்ந்தவள்.
மதுரையிலே முதன்மைக் கல்லூரி ஒன்றில் மிகவும் விரும்பியே பேஷன் டிசைனிங் படித்து முடித்தவள் படிக்கும் சமயம் மும்பைக்கு ஒரு பாடச் சுற்றுலா சென்று வந்த பொழுதில் இருந்தே அங்கு அறிமுகமான எஸ் ஆர் என் டிசைனர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தாள்.
படிப்பு முடிந்து ஒரு வருடம் மதுரையில் பணியாற்றியவள், அந்த நிறுவனம் கொடுத்திருந்த ஆள் சேர்க்கை விளம்பரத்தை பார்த்ததிலிருந்து, தன் வீட்டினரிடமும் அடம் பிடித்து மிகவும் சிரமேற்கொண்டே மும்பைக்கு வந்து அந்நிறுவனத்திலும் இடம் பிடித்து இருந்தாள்.
நகரத்துப் பெண்ணும் இல்லாது கிராமத்தின் கட்டுபெட்டித் தனமும் இல்லாது காண்போரை நின்று ரசிக்க வைக்கும் தோற்றம் கொண்ட அழகுப் பெண்ணவளை பார்த்த முதல் நாளிலே ஸ்ரீரஞ்சனுக்குப் பிடித்து விட, அத்துறையின் மேல் அவளுக்கு இருந்த ஆர்வமும், அதனால் விளைந்த திறமையும் நாளடைவில் சிபிரஞ்சனிடமும் அவளைத் தனித்துக் காட்டி இருந்தது.
கடந்த மூன்று வருடங்களில் எஸ் ஆர் என் டிசைனர்ஸ் நிறுவனத்தில் அவளும் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போனவள், சில மாதங்கள் முன்னர் ஸ்ரீரஞ்சனின் காதலையும் பெற்று, வீட்டினரை எண்ணிய தயக்கத்தோடே சம்மதமும் கூறியிருந்தாள்.
இன்று மட்டுமல்லாது கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீக்கும் மதுரிமாவிற்கும் இடையில் இருக்கும் சிறிதான நெருக்கத்தை அறிந்தே இருந்தவன், வழக்கம் போல் அதை கண்டும் காணாது ஒதுக்கி, “வீ ஆர் கெட்டிங் லேட் ஸ்ரீ. ஹர்ரி அப்” என்று தன் இரட்டையிடம் சொன்னவன், “எல்லாம் ஓகே தானே ரீமா?” என்று தலைமைப் பொறுப்பாளினி என்ற முறையில் மதுரிமாவிடமும் கேட்டுக் கொண்டான்.
அதற்கு, “ஐம் ரெடி சிபி.” என்று ஸ்ரீரஞ்சன் தலையசைத்துக் கொள்ள… ஆடவனின் அந்த ஆழ்ந்த குரலில் அவளையும் அறியாமல் ஸ்ரீரஞ்சனை விட்டு சற்றே தள்ளி வந்து நின்ற மதுரிமா, “எல்லா மாடல்சும் ரெடியா இருக்காங்க சார். நாம போனதும் ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்றாள்.
இருவருக்குமே பொதுவாக ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன், இன்னும் பூட்டாது விட்டிருந்த தன் மேல்கோட்டின் பித்தான்களை பூட்டியவாறே அங்கிருந்த மின்தூக்கியை நோக்கி விறுவிறுவென நடக்க, அவனை முந்திக் கொண்டு ஓடியிருந்த அவனது காரியதரிசி சுதிரோ மின்தூக்கியை இயக்க, சிபியோடு மற்றயவர்களும் அந்த மின் தூக்கியிலே ஏறிக்கொண்டனர்.
அடுத்த பத்தாவது நிமிடம் ஆடைகள் காட்சி படுத்தும் இடமான தரை தளத்தினுள் அவர்கள் அனைவரும் நுழைந்து இருக்க, அங்கோ அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த ஆண் பெண் மாடல்கள் பலரும் அவர்களின் தயாரிப்புகளை அணிந்தபடி ஆயத்தம் ஆகி இருந்தனர்.
அதற்கு முன்பே நெகிழிப் பொம்மைகள் அணிந்து இருந்த ஆடை வகைகள் அந்த அரங்கு முழுதும் கணக்கில்லாது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க,
“கோ அஹெட்…” என்ற சகோதரர்களின் அனுமதியின் பின்னர் அங்கே இருந்த பெரிய அரங்கில் குழுமி இருந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கு மத்தியில் தயார் செய்திருந்த மேடையில் ஒரு ஒரு மாடலாக பூனை நடை போட்டு வலம் வரத் தொடங்க, அவர்கள் அணிந்து வந்த ஒவ்வொரு ஆடையுமே அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அத்துணை தனித்துவமாக இருந்தது.
பொதுவாக இதுபோல நடக்கும் ஆடைகள் அணிவகுப்பில், நவ நாகரீகம் என்ற பெயரில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் ஆடைக்குறைப்பு என்கின்ற புற்று வியாதிக்கு சிறிதும் இடமளிக்காது அனைத்து ஆடைகளும் கண்ணியம் காக்கும் தயாரிப்புகளாகவே இருக்க,
“ட்ரெஸ்ஸஸ் எல்லாம் டிரண்டியாவும், ஒபிஸ்ஸினிட்டி இல்லாமையும் ரொம்பவே அழகா இருக்குல்லடி.” என்று தன் அருகில் இருந்த ஒரு தோழியிடம் கூறிக்கொண்டிருந்த பெண்ணிற்கு, “ஆமாடி இதுபோல நிறைய சோஸ் பாத்துருக்கேன். ட்ரெஸ் பாக்க நல்லா இருந்தா உடுத்த கவரச்சியா இருக்கும். நீட்டான ட்ரெஸ்ஸா தேடுனா பாட்டிக போடுற போல ஓல்ட் மாடலா இருக்கும். ஆனா இங்க அப்டி இல்லை. இனிமேல் இவங்க கிட்டையே நான் என்னோட ட்ரெஸ்ஸஸ் எல்லாம் ரெடி பண்ணி வாங்கிக்க போறேன் டி.” என்று பதில் கூறிக் கொண்டிருந்தாள் அந்தத் தோழி.
அவர்களின் பின்னே நின்று அந்த இரு பெண்களின் கூற்றையும் செவிமடுத்த மதுரிமாவிற்கு, அவளையும் அறியாமல் மேடையின் அருகில் நின்றிருந்த சிபிரஞ்சனின் புறம் பார்வை படிய, அவள் இங்கு பணியில் சேர்ந்த சமயம், “தி டிரஸ் வீ ஆர் ப்ரீப்பேரிங் ஷுல்ட் பிரிங் கான்பிடென்ஸ் அண்ட் ரெஸ்பெக்ட் டு தி பர்சன் ஹூ இஸ் வியரிங். (நாம் தயாரிக்கும் உடை அதை அணிபவருக்கு எப்பொழுதும் தன்னம்பிக்கையும் மரியாதையும் தேடித் தருவதாக இருக்க வேண்டும்)” என்று அவன் கூறிய வார்த்தைகள் இப்பொழுதும் அவள் செவிகளில் எதிரொலித்து பெண்ணவளின் பார்வையில் மரியாதையைக் கூட்டி இருந்தது.
ஸ்ரீரஞ்சன் பழகுவதற்கு இனிமையானவன் என்றால் சிபிரஞ்சனோ அனைத்திலும் புதுமையாக விளங்க, தன் வழக்கமான வழக்கமாய் அந்த எஸ் ஆர் என் சகோதரர்களையே ஆச்சர்யப் பார்வை பார்த்து நின்றாள் மதுரிமா.
அப்படியே மணித்துளிகள் பல கரைய அந்த ஆடைகள் காட்சி படுத்தலும் முடிவுக்கு வந்த நேரம் சகோதரர்களும் மேடையில் தோன்றி அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றுக் கொள்ள, அனைவரும் களைந்து சென்றபின்னர் அவர்கள் வீட்டிற்குக் கிளம்பவே இரவு ஒன்பது மணியைத் தாண்டி விட்டிருந்தது.
அதுவரை மதுரிமாவும் அங்கேயே இருந்ததால், அவளைத் தன் வாகனத்திலே அழைத்துச் சென்று அவளிடத்தில் விடுவதாக முன்பே கூறி இருந்த ஸ்ரீரஞ்சன் வாகனத்தைக் கிளப்பப் போன சமயம் அவனது அலைபேசி ஒளிர்ந்து, அவனது நண்பன் ஒருவன் அவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லி ஒரு கேளிக்கை விடுதிக்கு உடனே அழைக்க…
அவனோ, “கம் நௌ…?” என்று இழுத்து அருகில் இருந்த மதுரிமாவைப் பார்த்தான்.
அவன் ஸ்பீக்கரில் வைத்தே பேசி இருந்ததால் அனைத்தும் கேட்டிருந்த மதுரிமாவும், “பரவாயில்லை ஸ்ரீ. நீங்க உங்க ஃபிரண்ட்டை மீட் பண்ண போங்க. நான் (cab)கேப் புக் பண்ணி போய்க்கறேன்” என்று சொல்லி வாகனத்தில் நின்றும் இறங்கினாள்.
“கேப் புக் பண்ணாலும் வர்றதுக்கு டிலே ஆகுமே பேபி.” என்றபடியே அவனும் இறங்கியவன், “இப்போ என்ன செய்யறது? ஹீ இஸ் மை க்ளோஸ் ஃபிரண்ட். போகலைன்னா கோச்சிப்பானே?” என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம், தன் காரியதரி சுதிரிடம் ஏதோ பேசியபடி தன் வாகனத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் சிபிரஞ்சன்.
அங்கோ கருமை வண்ண லம்போர்கினி அவென்டேடர் மகிழுந்து ஒன்று அவனுக்காகக் காத்திருக்க, வாகனத்தை நெருங்கி ரிமோட் லாக்கை ரிவில் செய்தவன், தன் பின்னோடே ஓடி வந்து தனக்குக் கதவையும் திறந்து விட்ட சுதிருக்கு தலை அசைத்து அவனை அனுப்பிவிட்டே உள்ளே ஏறி அமர்ந்தான்.
அப்பொழுது தான் வீட்டிற்குக் கிளம்பி இருந்த தன் இரட்டையைப் பார்த்ததும் ஸ்ரீயின் முகமோ முழுமதியாய் ஒளிர, வேகமாக சிபியிடம் ஓடியவன், “ஹேய் சிபி, சிபி ப்ளீஸ்டா… ரீமாவை அவ ஹாஸ்டல்ல கொஞ்சம் ட்ராப் பண்ணிடேன். ஐ ஆம் கோயிங் டு மீட் மை ஃபிரண்ட்.” என்று கெஞ்சல் போலவே கேட்க…
அதைக்கேட்டு, ‘சிபி சார் கூடவா?’ என்று அதிர்ந்த ரீமா, “இல்லை ஸ்ரீ பரவாயில்லை. நானே போய்க்கறேன்” என்று உள்ளே போன குரலிலே மறுத்தாள்.
அவள் மறுப்பை கவனியாத சிபிரஞ்சனும், “ய்யா ஸ்ரீ… கெட் இன் ஹெர் இன்சைடு.” என்று மட்டும் கூறி தன் வாகனத்தின் கதவை அகலத் திறக்க, “வெரி வெரி தேங்க்ஸ் சிபி” என்று அவனுக்கு ஒரு முத்தம் வைத்தவன், “நைட் டைம் நீ தனியா போக வேண்டாம். சிபி கூடவே போயிடு பேபி. சாரி பாஃர் த ட்ரபுள்.” என்று காதலியிடமும் கூறிவிட்டு சிட்டாகப் பறந்து விட்ட ஸ்ரீரஞ்சனின் செயலில் செய்வதறியாது திகைத்து நின்றாள் மதுரிமா.