அப்படியே நாட்கள் சில கடந்திருக்க, அன்று மாலை, “பைத்தான் கூட ஈஸிதான் அத்தான். இந்த சி பிளஸ் பிளஸ் தான் என்ன ரொம்பவே சுத்தல்ல விடுது.” என்று தன் மிகப்பெரிய பாடப்புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அழாத குறையாய் சிபியின் முன்னே அமர்ந்திருந்தான் மகிழன்.
அதில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டவனும், “படிப்பும் ஸ்போர்ட்ஸ் மாதிரிதான் மகி. கொஞ்சம் லவ், கொஞ்சம் கான்சன்ட்ரேஷன் பண்ணி கத்துக்கிட்டின்னா எல்லாமே ஈஸிதான்.” என்று அவன் கரத்தில் இருந்த புத்தகத்தை வாங்கி அவனுக்கு பாடத்தைக் கற்பிக்க ஆயத்தம் ஆகினான் சிபிரஞ்சன்.
மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் கணினி பொறியாளர் (csc) படிப்பின் இரண்டாவது வருடத்தின் ஆரம்பத்தில் இருந்த மகிழனுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் அவ்வளவாக படிப்பில் இல்லாமல் தான் இருந்தது.
விளையாட்டைப் பற்றி அன்று சிபிரஞ்சன் கற்றுக் கொடுத்ததில் இருந்தே அவனை தன் ஆஸ்தான நாயகனாக ஏற்றுக் கொண்டவன், அவனிடம் அடுத்தடுத்த நாட்களிலும் ஏதேதோ விளையாட்டுக்களைப் பற்றியே கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டிருக்க, அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவன் படிப்பைப் பற்றிக் கேட்டு இருந்தான் சிபிரஞ்சன்.
அதில் பீதியான இளையவனோ,
“அது வந்து அத்தான். அதெல்லாம் க்ளாஸ் டாப்பர்தான் நானு.” என்று அவனிடமிருந்து நழுவிக் கொள்ளப் பார்க்க…
“அடப்பாவி, ஆகாசப் புழுவி” என்று அவர்களை நெருங்கிய மனோரமா, “அத்தான் அவன் ஃபர்ஸ்ட் இயர்லயே மூனு பேப்பர் அரியர். அப்பாகிட்ட கூட அடி வாங்கி மூனு நாளா மூக்கு வீங்கித் திரிஞ்சான்.” என்று அவனது வீரபராக்கிரமங்களை புட்டு புட்டு வைத்திருந்தாள்.
அவளும் பதிலுக்கு ஏதேதோ பேச என்று இருவருக்கும் மூன்றாம் உலகப்போரே நிகழத் தொடங்கியது.
என்னதான் அவனும் ஸ்ரீயும் இரட்டையாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாலோ என்னவோ இப்படி எல்லாம் செல்லச் சண்டைகள் போட்டதாக துளிகூட ஞாபகம் இல்லாது போக, கள்ளம் கபடமற்ற அந்த உடன்பிறப்புகளின் ஊடலை ஆசையாகப் பார்த்து இருந்தவன், “மகி உன் புக்ஸ் எடுத்துட்டு என்னோட வா” என்று அன்றிலிருந்து அவனுக்கு படிப்பிலும் குருவாக மாறி இருந்தான்.
தன் தந்தை எத்துணையோ பாடசாலைகளில் (டியூசன்) சேர்த்து விட்டபோதும் எதிலும் கவனம் செலுத்தாது சுற்றி வந்தவனுக்கு ஏனோ சிபிரஞ்சனின் வார்த்தைகளை மட்டும் தட்ட முடியாது போனது.
சோகமாக முகத்தை வைத்து இருந்தாலும், அவன் அழைத்த உடனே புத்தகத்தோடு வந்து அவன் முன்னே அமர்ந்து விட்டவனுக்கு தினமும் மாலையில் பாடம் கற்றுக் கொடுப்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கி இருந்தான் சிபிரஞ்சன்.
அன்றைய நாளுக்குப் பிறகு பட்டம்மாள் பாட்டியும் அவனிடம் பெரிதாக முறைப்பைக் காட்டாது இருப்பதால், அந்த பெரிய வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தே சிபிரஞ்சன் மகிழனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு நேர் எதிரில் அமர்ந்து தன் மடிக்கணினியில் ஏதோ பணி செய்து கொண்டிருந்த மதுரிமாவின் செவிகளோ ஆடவனின் ஆழ்ந்த குரலை மனதிற்கு பிடித்த பாடலைப் போல் சிறு புன்னகையோடு ரசித்து இருந்தது.
கூடவே அன்னிச்சை செயலாக பெண்ணவளின் விழிகளும் சில நிமிடங்களுக்கு ஒரு முறை நிமிர்ந்து நோக்கி ஆடவனின் அழுத்தமான முக வடிவையும் தீண்டித் தீண்டி தித்தித்துக் கொண்டிருந்தது.
அப்படிப் பார்த்த அந்த விழிகளில் ஒருவித நன்றி உணர்ச்சியே கரைகட்டி நின்றிருக்க, ‘அங்கு மும்பையில் எத்துணை பெரிய பணம் பதவியோடு வாழ்ந்து கொண்டிருப்பவனால், இந்த சிறிய கிராமத்தில் வந்து, அனைவரோடும் எப்படி இத்தனை இணக்கமாக பழக முடிகிறது?’ என்ற வழக்கமான ஆச்சர்யமும் பெண்ணவள் விழியின் ஒளிர்வைக் கூட்டியது.
ஆனால் சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்த வெளிச்சம், ‘இவன் இடத்தில் ஸ்ரீரஞ்சன் இருந்திருந்தால் இப்படி எல்லாம் இணக்கமாக இருப்பானா?’ என்று சிறிது சிறிதாக மங்கிக் கொண்டே செல்ல, இன்று மட்டுமல்லாது அன்று பட்டம்மாளின் கூற்றிற்கு இணங்க கடைத்தெருவிற்கு சென்று அவன் பூக்கள் வாங்கி வந்த தினத்தில் இருந்தே தொட்டதற்கு எல்லாம் இருவரையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்து இருந்தது பூவையின் பூ மனது.
நிமிடங்கள் பல கரைவதையும் உணராது கணினித் திரையையே வெறித்து இருந்தவள் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான சப்தத்தில் அதை எடுத்துப் பார்க்க, ஸ்ரீரஞ்சன் தான் ஏதோ காதல் கவிதை எழுதப்பட்டிருந்த அழகிய புகைப்படம் ஒன்றை அவளுக்கு அனுப்பி இருந்தவன்,
“ஐ மிஸ் யூ சோ மச், ஸ்வீட் ஹார்ட்”
என்ற குறுஞ்செய்தியையும் அதனோடு அனுப்பி இருந்தான்.
வெறும் வார்த்தைகளாலும், கவிதைகளாலும் மட்டுமே காதலை காட்டத் தெரிந்தவன் போலும்.
அதில் தலையை உலுக்கி தன்னை மீட்டுக் கொண்டவளும்,
‘ச்சே, எனக்கு என்னதான் ஆச்சு?. நான் ஏன் இப்போல்லாம் ஸ்ரீயோட சிபி சார கம்பேர் பண்ணி பாக்கறேன்?’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள், ஸ்ரீயின் செய்திக்கு, “நானும் தான் மிஸ் பண்றேன் ஸ்ரீ.” என்ற பதிலையும் அனுப்பி இருந்தாள்.
அதைப் பார்த்து, “சும்மா சொல்லாத பேபி.” என்று அனுப்பியவன், “இப்போல்லாம் நான் போன் பண்ணாக் கூட நீ எடுக்கறதே இல்லை. மெசேஜ் கூட நானா பண்ணாதான் ரிப்ளை பண்ற. ஊருக்கு போனதுல இருந்தே நீ ரொம்ப மாறிட்ட.” என்று குறைப்பட்டுக் கொள்ள…
அவளுக்கோ, ‘இவனுக்கு என் நிலை புரியவே இல்லியா?’ என்று ஆயாசமாகத்தான் இருந்தது.
அதில் லேசாக தலையை ஆட்டி, “எனக்கு மட்டும் உங்ககூட பேச ஆசை இல்லியா என்ன?” என்றவள், “ஆனா இப்டி ஒரு சூழ்நிலையை எனக்கு கொடுத்துருக்கதே நீங்க தான் ஸ்ரீ.” என…
அவனோ, “என்ன பேபி சொல்ற? நான் என்ன செஞ்சேன்?” என்றான்.
‘என்ன தான் செய்யல?’ என்று கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்தியவளும், “இங்க நீங்க இருக்க வேண்டிய இடத்தில, என் லவ்வரா சிபி சார் இருக்கப்போ, நான் எப்டி ஸ்ரீ உங்ககிட்ட அடிக்கடி பேச முடியும். அப்டிப் பேசுனா என்ன… யார்கிட்ட பேசுறன்னு என் வீட்ல இருக்கவங்க எல்லாம் என் தலையை உருட்டிட மாட்டாங்களா?” என்று அவனை மடக்கியவளுக்கு…
“ஹோ காட். உன்னோட இந்த வில்லேஜ் பீப்பிள்ஸ் ஏன் தான் இப்டி இருக்காங்களோ? இட்ஸ் இரிடேட்டிங்க்.” என்று எரிச்சலைக் காட்டும் எமோஜியோடு அனுப்பினான் ஸ்ரீரஞ்சன்.
தெரிந்தோ தெரியாமலோ ஒரு கிராமத்துப் பெண்ணை காதலித்த பாவத்திற்கு நாள் கணக்காய் சம்மதம் கூறாது இழுத்தடிப்பதோடு தன் இரட்டையையும் கிராமத்தில் கொண்டு போய் அமர வைத்திருக்கும் மதுரிமாவின் உறவுகள் மேல் மிகுந்த அதிருப்தியில் இருந்தவன் யோசிக்காமலே வார்த்தைகளை வீசி இருக்க…
‘எரிச்சல் படுத்துற அளவு என் உறவுகள் இவர அப்படி என்னதான் செஞ்சாங்களாம்?’ என்ற அளவில்லா மனத்தாங்கலில், “நானும் கூட வில்லேஜ் பீப்பில் தான் ஸ்ரீ. இரிடேட்டிங்கா இருந்தா ஏன் என்னோட பேசறீங்க?” என்று அவளும் காட்டமாகவே பதில் அனுப்பியிருந்தாள்.
பெண்ணின் அந்த பதிலில் சற்றே நிதானித்தவன், “ஹேய் கியூட்டி. என்னடா கோச்சிகிட்டியா? நினைச்ச நேரம் உன்னோட பேச முடியலயேன்னு பீலிங்லதான் சும்மா சொன்னேன்டா.” என்று சமாதானத்தில் இறங்கியவன், அடுத்தடுத்து என்னென்னவோ அவளுக்குப் பிடித்த வகையில் பேசிச் சிரித்து, குழைந்து, வழிந்தும் கூட ஐந்து நிமிடத்திற்கு மேல் அந்த உரையாடலை அவளால் தொடர இயலாமல் தான் போனது.
இன்று மட்டுமல்ல, தங்கள் திருமண விஷயமாக அவனை கிராமத்திற்கு அழைத்து அவன் மறுத்த நாள் தொட்டே, அவர்களின் உரையாடல் எப்படி தொடங்கினாலும் இது போன்ற மனஸ்தாபத்திலே வந்து முடிய, அதற்கு மேல் அவன் பேச்சோடு ஒன்ற முடியாது, “ஓகே ஸ்ரீ கொஞ்சம் ஒர்க் இருக்கு. அப்றம் பேசறேனே.” என்று கைபேசியின் வலைப்பின்னலை (இன்டர்நெட்) மூடி வைத்தவள் ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
பேச்சும் கவனமும் மகிழனிடம் இருந்தாலும் தனக்கு கை எட்டும் தூரத்தில் அமர்ந்து இருந்தவளின் முக மாற்றத்தையும் நொடியில் கண்டு கொண்டவன் ஏதோ பிரச்சனை போல என்று எண்ணி, லேசாகத் தொண்டையைச் செருமினான் சிபிரஞ்சன்.
அச்செறுமலில் நிமிர்ந்து பார்த்தவளிடம், “வாட் ஹேப்பன்ட் மது?” என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்கிய ஆடவனின் எதிர்பாராத செயலில் அத்துணை நேரம் இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து விழிகளை விரித்தவள்,
“இத்துணை நேரம் இவர் என்னை கவனித்து இருந்தாரா என்ன?” என்ற இனம் விளங்கா இதம் ஒன்றையும் உள்ளத்தின் ஓரம் உணர்ந்தாள்.
பெண்ணின் அந்தப் பார்வையில் மேலும் நெற்றியைச் சுருக்கியவன்,
“ஆர் யூ ஓகே?” என்று தலையையும் அசைத்திருக்க, அதில் முழுதாகவே தன் வசம் மீண்டவளும், “ஐம் ஓகே…” என்பது போல் பதிலுக்கு தலையை ஆட்டி வைத்தாள்.
அதைப்பார்த்து சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்தவன் இப்பொழுது கண்களை லேசாக உருட்டி அவள் முன்னே இருந்த மடிக்கணினியைச் சுட்டி, “வேலை முடிந்ததா?” என்பது போல் உதடுகளை அசைக்க…
“இது என்ன விழி விளையாட்டு?” என்று ஏகமாய் அதிர்ந்து விரிந்தது பெண்ணவளின் ஆழி விழிகள்.
போதாதற்கு, “முடிந்ததா?” என்பது போல் அசைந்த ஆடவனின் உதடுகள் வேறு கோவைப்பழம் போல் சிவந்து குவிய, “ஒரு மென்னோட லிப்ஸ் இவ்ளோ பிங்க்கா இருக்குமா?” என்று அவன் உதடுகளையே உற்றுப் பார்த்தவளுக்கு, ‘ஸ்ரீ போல ஸ்மோக்கிங் ஹாபிட் எதுவும் சார்கு இல்லை போல.’ என்று இருவரையும் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கிய மனதோடு விழிகளையும் அடக்குவதற்குள் அரும்பாடு பட்டுப் போனாள் பெண்ணவள்.
வீட்டின் கூடத்தில் இருந்ததாலோ, அருகில் படித்துக் கொண்டிருக்கும் மகிழனின் கவனத்தை திசை திருப்பக்கூடாது என்றோ ஆடவன் தன் விழிகளாலே வினாத் தொடுத்துக் கொண்டிருக்க, இதுவரை கட்டளைகளை மட்டுமே பெறப்பட்ட அக்கூர்விழிகளின் கவர்ச்சியானது இன்றோ பெண்ணவளின் விழியோடு மொழியையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள, இன்றுதான் அவனை முதன்முதலாய் பார்ப்பது போல் அவன் கேள்விக்கு பதில் கூட உரைக்காது அமர்ந்திருந்தாள் மதுரிமா.
அப்படியே சில நொடிகள் கழிந்ததின் பின்னர் ஒருவழியாக பாடமும் முடிந்து, “தேங்க்ஸ் அத்தான்.” என்று மகிழனும் விளையாடக் கிளம்பி இருக்க, “மது…” என்று அழுத்தமாக அழைத்து பெண்ணவளின் சிந்தனையை களைத்திருந்தான் சிபிரஞ்சன்.
அதில், “சார்…” என்று நிமிர்ந்தவள் கனவில் இருந்து விழித்தவள் போல் இமைகளை பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க, அதில் லேசாக தொண்டையைச் செருமிக் கொண்டவன், “டிசைன்ஸ் எல்லாம் ஃபில்ட்டர் பண்ணிட்டியா மது?” என்றவாறே தன் பின்னங்கழுத்தையும் வருடத் தொடங்கினான்.
அக்கேள்விக்கு பதிலாய், “ஹான் பண்ணிட்டேன் சார். பண்ணிட்டேன்.” என்று படபடப்பாகவே பதில் கூறியவள், “எல்லாத்தையும் உங்களோட மெயில்கு அனுப்பிடவா?” என்று வினவ…
“நோ மது. இப்டியே செக் பண்ணிடுறேன்.” என்றவன் அவள் நகர்த்தி வைத்த மடிக்கணினியில் பார்வைகளை ஓட்டியவாறு அவள் கூறிய விளக்கங்களையும் செவிமடுத்துக் கொண்டான்.
அவர்கள் நினைத்து வந்ததற்கு மாறாக அதிக நாட்கள் கிராமத்தில் தங்கும் சூழல் ஏற்பட்டுப் போனதால், மடிக்கணினியின் உதவி மூலம் இங்கிருந்தே தங்கள் பணிகளை செய்யத் தொடங்கி இருந்தார்கள் சிபிரஞ்சனும் மதுரிமாவும்.
அதைப் பார்த்து முறைப்பைச் சிந்திய பட்டம்மாளையும் மதுரிமா கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்திருக்க, காலையும் மாலையும் சில மணி நேரங்கள் சிபியின் அருகில், அவளுக்கு பிடித்த பணியில் இனிமையாகவே கழியத் தொடங்கி இருந்தது மதுரிமாவின் நாட்கள்.
என்னதான் மும்பையில் ஸ்ரீயும் தலைமை பொறுப்பாளர்களும் கவனித்துக் கொண்டாலும் சிபி மட்டுமே பார்க்க வேண்டிய பணிகளும் ஏராளம் இருக்க, அடுத்த ஒரு மணித் தியாலங்கள் இருவருக்குமே தொழில் முறைப் பேச்சுக்களும், செயல்களுமாக நகர்ந்த சமயம், “பாஸ்…” என்று அழைத்தபடி அவ்விடம் வந்திருந்தான் சுதிர்.