சகோதரன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலக்கப் போவதாகக் கூறிய நொடியில் இருந்தே ஸ்ரீரஞ்சனுக்கு மனதே ஒரு நிலையில் இல்லாது ஒருவிதமாய் தவிக்கத் தொடங்கியது.
அத்தனை தினங்கள் காதலிக்காக கூட கிராமத்திற்கு வருவதைப் பற்றி சிந்தியாது இருந்தவன், காலை சிபியுடன் அலைபேசியில் பேசிய கணமே கிராமத்திற்கு செல்வது என முடிவெடுத்து விட்டிருக்க,
அன்றே மருத்துவரிடம் சென்று தன் கால் பிரச்னைக்கான ஆலோசனையும் பெற்று ஆயத்தமாகி இருந்தவனுக்கு இடியாய் வந்து சேர்ந்தது சிபிரஞ்சனை மாடு முட்டி மருத்துவமனையில் சேர்த்து இருக்கும் செய்தி.
சகோதரனின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியில் ஏகமாய் பதறியவன் அடுத்த விமானத்திலே அரக்கப்பரக்க மதுரையில் வந்து இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தவன் அங்கு இடையைச் சுற்றி போடப்பட்டிருந்த வெள்ளை நிறக் கட்டோடு நின்ற சகோதரனைக் கண்டு தவித்துத் தான் போனான்.
வெகு நாட்கள் கழித்து தாயைக் கண்ட சிறுபிள்ளை போல சிறிதான தேம்பலோடு, “சிபி…” என்று ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவன், “சிபி… எப்டிடா இப்டி ஆச்சு?. எப்போ எது பண்ணாலும் கவனமா இருப்பியே?” என்று பாச மழை பொழியத் தொடங்க…
அச்சமயம் அவனை அங்கு எதிர்பாராது அதிர்ந்து மீண்ட சிபியும்,
“ஹேய் ஸ்ரீ… ரிலாக்ஸ்டா. எனக்கு ஒன்னும் இல்லை ஸ்ரீ. ஐம் ஓகே நவ்” என்று பதில் அணைப்பை வழங்கி விடுவித்தான்.
அதன் பின்னரே சற்றே முகம் தெளிந்தவனும், “இப்போ எப்டி இருக்கு சிபி? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கவலைக் குரலிலே வினாத் தொடுத்தவன் அப்பொழுது தான் அங்கிருந்த மதுரிமாவையே கவனித்தான்.
அவளைப் பார்த்ததும் சகோதரனின் இந்த நிலைக்கு அவள் தான் காரணம் என்ற ஆத்திரம் பெறுக, “இப்போ உனக்கு சந்தோசமா ரீமா. நான் உன்ன காதலிச்சேன்னு ஒரு காரணத்துக்காக நமக்கு உதவி பண்ண வந்தவனை இப்டி ஆஸ்பத்திரில கொண்டு வந்து படுக்க வச்சுட்டில்ல. இப்போ உனக்கு நிம்மதியா? அன்னிக்கு பெரிய இவளாட்டம் என் கிராமம் என் பாட்டின்னு அவ்ளோ பேசுன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியால இப்போ என் ப்ரோ குத்துப்பட்டு கிடக்குறானே இதுக்கு என்ன பதில் சொல்லப்போற?” என்று மதுவை நெருங்கியவாறே அவளை சரமாரியாகத் திட்டத் தொடங்கி இருந்தான்.
ஏற்கனவே சற்று முன் நடந்த நிகழ்வுகளில் ஏகத்துக்கும் கலங்கி இருந்தவளுக்கு ஸ்ரீரஞ்சனின் எதிர்பாராத வரவே இமாலய அதிர்ச்சியாக இருக்க, சகோதரனுக்கான அவனது கோப வார்த்தைகளில் அத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மொத்தம் அவள் கன்னங்களில் இறங்க ஆரம்பித்தது.
அவள் விழியில் நீரைப் பார்க்கவும் பரிதவித்துப் போன சிபியும், “ஹேய் ஸ்ரீ. மதுவை ஏன்டா திட்டுற. அவ ஒரு தப்பும் பண்ணலை டா” என்று அவள் புறம் நெருங்கி வந்தவன் இடையில் ஏற்பட்ட வலியால், “ஸ்ஸ்ஆஆஆஆ” என்று கட்டிலிலே அமர்ந்து விட…
அதில் அனைத்தும் மறந்தவளாய், “ரஞ்சன்…” என்று அவனை நோக்கி ஓடியவள், “என்னாச்சு ரஞ்சன்? டாக்டரை கூப்பிடவா?” என்று ஏகமாய்ப் பதறினாள்.
பெண்ணவளின் அந்தப் பதற்றம் ஏனோ ஸ்ரீக்கு மென்மேலும் எரிச்சலைக் கொடுக்க,
“போதும் மது. நீயும் உன் குடும்பமும் எங்களுக்கு செஞ்சதெல்லாம் போதும். உன்னைப் பாத்தாலே கடுப்பா இருக்கு. தயவு செஞ்சு இடத்தைக் காலி பண்ணு. என் ப்ரோவை பாத்துக்க எனக்குத் தெரியும்” என்று அவன் தோள் பற்றி நின்றவளின் கரத்தையும் தட்டிவிட…
அதற்கு மேலும் அவ்விடத்தில் நிற்க இயலாதவள் அடிபட்ட மழலையாய் சிபியையே பார்த்தவாறு அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
தம்பியின் பேச்சை தடுக்க இயலாது, கூடவே வலியிலும், “ஸ்ரீ… வேணாண்டா” என்று ஈனஸ்வரத்தில் முணங்கியவன், பெண்ணின் ஓட்டத்தையும் நிறுத்த முடியாது ஓடிச் சென்றவளின் முதுகையே வெறித்து பார்த்தபடி அமர்ந்து விட, அறையை விட்டு வெளியேறி வந்தவளும் அங்கிருந்த தன் சிறிய தந்தையிடம் சிபியின் இரட்டை வந்திருப்பதாகவும், இனி சிபியை அவனே பார்த்துக் கொள்வான் என்றும் கூறி அவரோடு வீட்டிற்கும் விரைந்து விட்டாள்.
ஏற்கனவே சிபிக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கலக்கத்தில் இருந்தவளுக்கு, அவனோடான முதல் முதல் முத்தத்திலும் அவன் தன் காதலை ஏற்காததும், கூடவே ஸ்ரீயின் வரவும் அவனின் நியாயமில்லா குற்றச் சாட்டும் அனைத்தும் சேர்ந்து அவளைக் குற்ற உணர்வில் மூழ்கடித்து அறைக்குள்ளேயே முடங்கச் செய்திருக்க, அடுத்து வந்த நாட்களும் கூட அவள் மருத்துவமனைப் பக்கம் செல்லவே இல்லை.
சிபிரஞ்சன் மருத்துவமனையில் இருந்த ஒருவார காலமும் ஸ்ரீரஞ்சனே அவனுக்குத் துணையாக இருக்க, மதுவின் வீட்டினர் மட்டும் தினமும் சென்று பார்த்தபடி இருந்தனர்.
சிபியைப் பார்க்க வேண்டும் அவன் அருகிலேயே இருந்து, அவனுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று பெண்ணவளுக்கு ஊனும் உள்ளமும் வெகுவாகத் துடித்தாலும், பல்வேறு சிந்தனைகளில் உழன்று தவித்தவளுக்கு வீட்டினரிடம் கூட முகம் கொடுத்துப் பேச இயலாத நிலைதான்.
ஸ்ரீரஞ்சனின் திடீர் வருகையிலும், அவன் வந்ததிலிருந்தே பேத்தியின் அடைக்கோழி அவதாரத்திலும் பட்டம்மாளின் புருவங்களும் கேள்வியாகச் சுருங்க, அடுத்து வந்த இரு நாட்களில் மருத்துவமனை வாசம் முடிந்து ஒரு வழியாக சிபிரஞ்சனும் வீடு வந்து சேர்ந்து இருந்தான்.
அவன் வந்துவிட்டான் என்று அறிந்ததுமே அடித்து பிடித்து அவனைப் பார்க்க ஓடி வந்தவளின் பார்வை அவன் தலை முதல் கால்வரை அங்குலம் அங்குலமாக வருடிச்செல்ல, அப்பார்வையின் வீச்சை இருதயத்தில் உணர்ந்தாலும் சிபியின் விழிகளோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவே இல்லை.
தம்பியின் காதலியான அவளிடம் தான் அன்று வரம்பு மீறி நடந்து கொண்ட முறைமைக்கே அளவில்லாத குற்ற உணர்வில் தவித்திருப்பவன், தான் குத்துப்பட்ட செய்தியைக் கேட்ட உடனே அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்து, இத்தனை தினங்கள் மருத்துவமனையிலும் தன்னை கவனித்துக் கொண்ட தம்பியின் பாசத்தில் மென்மேலும் குன்றித்தான் போயிருந்தான்.
தங்கள் வீட்டுப் பெண்ணிற்காக ஜல்லிக்கட்டில் கலந்து குத்துபட்டு, மறுபிழைப்பு எடுத்து வந்திருப்பவனை பட்டம்மாளே முன் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றவர் அவன் இரட்டையையும் உபசரித்து, சிபியின் உடல்நிலை நன்கு தேறியதும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் மகிழ்ச்சி ததும்பக் கூறி அவன் பெற்றோரையும் வரவழைக்கச் சொன்னார்.
இவ்வளவு தினங்கள் எதற்காக நடிப்பு என்ற பெயரில் இப்படி ஒரு மாபாதகத்தில் இறங்கி இருந்தார்களோ அந்த திருமணத்திற்கான ஒப்புதல் பட்டாம்மாளிடம் இருந்து கிடைத்தும் கூட, அக்கணம் அவர்களுக்கு இருந்த மனநிலையில் மூவரின் முகத்திலுமே மகிழ்ச்சியின் சாயல் கூட துளியும் இல்லாமல் இருக்க, ஒருபடி மேலேவே சென்ற மதுரிமாவோ, “இது வேண்டாம்” என்பது போல் தலையை இடம் வலமாய் ஆட்டி சிபிரஞ்சனையே பார்த்திருந்தாள்.
அதைப்பார்த்த ஸ்ரீயின் முகத்திலோ குழப்ப ரேகைகள் படர, இளையவர்களின் அந்த அமைதியில் பட்டம்மாளும் அவர்களை கூர்மையாகப் பார்த்திருந்தார்.
அதில் சட்டென்று தன்னை சுதாகரித்த சிபிரஞ்சனோ, “ரொம்ப ரொம்ப சந்தோசம் பாட்டிமா. நான் உடனே ஃபோன் போட்டு மும்மாவையும் அப்பாவையும் வரவழைக்கிறேன்” என்று வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கூறி அறைக்குள் சென்று நுழைந்து கொண்டான்.
கணமும் தாமதியாது அவனைப் பின் தொடர்ந்த மதுரிமாவும்,
“ரஞ்சன்… ப்ளீஸ் ரஞ்சன்… இந்தக் கல்யாணம் வேண்டாம் ரஞ்சன்” என்று அவன் கையைப் பற்றி நிறுத்தியிருக்க…
பெண்ணவளின் அந்தச்செயலில் அவன் மட்டுமல்லாது அவர்களைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த ஸ்ரீரஞ்சனும் இருவரையுமே அதிர்ச்சியாகப் பார்த்திருந்தான்.
தம்பியின் அந்தப் பார்வையிலே அவள் கரத்தை அன்னிச்சையாக தட்டிவிட்டவனோ, “மது… என்ன உளறல் இது? இந்த நாளுக்காகத் தான் நீங்க இவ்ளோ நாளா காத்துட்டு இருக்கீங்க” என்று ஸ்ரீயையும் அவளையும் பார்த்தவாறு கூற…
“ஸ்ரீக்காக காத்துட்டு இருந்தது முன்ன எப்பவோ ரஞ்சன். இட்ஸ் பாஸ்ட்.” என்றவள், “இப்போ இந்த நிமிஷம் நீங்க மட்டும் தான் என் மனசு பூராம் நிறைஞ்சு இருக்கீங்க. அது உங்களுக்கு புரியலையா ரஞ்சன்?.” என்று அவன் விழிகளையே அசையாது ஏறிட்டாள் மதுரிமா.
அதில் உடல் விரைத்து நிமிர்ந்தவனும், தன் உள்ளத்தையே துளையிட முயன்ற பெண்ணவளின் விழிகளைப் பாராது தவிர்த்தவன்,
“நீ… ஸ்ரீகிட்ட பேசுறதா நினைச்சு என்கிட்ட பேசுறன்னு நினைக்கிறேன் மது” என்று கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைப் பூத்தவன், “ஸ்ரீ அங்க இருக்கான். அவன்கிட்ட பேசு” என்று ஸ்ரீயின் புறம் கைகாட்டி விட்டு பால்கணியின் பக்கம் செல்ல முயல…
அப்பொழுது தான் ஸ்ரீ என்று ஒருவன் அங்கு இருப்பதையே உணர்ந்தவள் போல் திரும்பி அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள், “என் உடல் பொருள் ஆவி எல்லாம் ரஞ்சன் ரஞ்சன்னு உங்க பேரை சொல்றப்போ நான் ஸ்ரீகிட்ட என்ன பேசட்டும் ரஞ்சன்? அதையும் நீங்களே சொல்லுங்க?” என்று மீண்டும் சிபியின் கையைப் பற்றி நிறுத்தியிருந்தாள் பெண்ணவள்.
அதில் மென்மேலும் அவஸ்தையாகி இருவரையும் ஏறிட்டவன், “மது, ப்ளீஸ்… நீ ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு நினைக்கிறேன். இப்போ மொதோ இங்கிருந்து கிளம்பு. நாம அப்புறம் பேசிக்கலாம்” என்று அவளை அனுப்ப முயல…
அவனை உதடுகள் துடிக்கப் பார்த்தவளும், “உங்க தம்பிக்காக என்ன நீங்க, இப்போ, இங்கயிருந்து அனுப்பிடலாம் ரஞ்சன். ஆனா என் மனசுல விழுதா படிஞ்சு போன உங்க மீதான நேசத்தை நான் செத்தாலும் அகற்ற முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் மதுரிமா.
அதுவரை அவர்கள் இருவரின் உரையாடலையும் குழப்பமாக பார்த்து இருந்த ஸ்ரீயும் மதுரிமாவின் நேசம் என்ற வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்தவன் வேகமாக சிபியை நெருங்கி,
“ரீமா என்ன சொல்றா சிபி?” என்று கேட்டவனின் குரல் முழுதும் இனம் புரியாத பதட்டமும் பீதியும் அப்பட்டமாகத் தெரிந்தது.
தம்பியின் அந்தக் குரலிலே சிபியின் நிலை இன்னுமின்னும் மோசமாக, “ஸ்ரீ… அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. அவ ஏதோ குழப்பத்துல அப்டிப் பேசுறா.” என்று சமாதானம் செய்தவன், “மதுமா… ப்ளீஸ். கொஞ்சம் நேரம் பேசாம இருயேன்” என்று மதுவிடமும் கெஞ்ச…
“என்ன மன்னிச்சுடுங்க ஸ்ரீ. நான் நான் ரஞ்சனைதான் லவ் பண்ணுறேன். எப்போ எப்படி அவர் எனக்குள்ள வந்தார்னு தெரியல ஸ்ரீ. என்ன காதலிச்ச நீங்க கூட என்னோட கிராமத்துக்கு வர்றதுக்கு யோசிச்சப்போ என்கூடவே இருந்து எனக்கு எல்லாம் பாத்து பாத்து செஞ்ச ரஞ்சன் தான் இப்போ இந்த நிமிஷம் என் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்காரு. வாழ்வோ சாவோ எதுவா இருந்தாலும் எனக்கு ரஞ்சன் மட்டும் போதும் ஸ்ரீ. ப்ளீஸ் நீங்க இங்கிருந்து போயிடுங்க” என்று கைகளைக் கூப்பிக் கெஞ்சியவளின் வார்த்தையில் அப்படியே அங்கிருந்த நீள்விருக்கையில் பொத்தென்று அமர்ந்து விட்டான் ஸ்ரீரஞ்சன்.
எந்த ஒரு காதலனும் தன் காதலியிடமிருந்து கேட்க விரும்பிடாத வார்த்தைகளை அல்லவோ அவன் காதலி அவனிடம் உதிர்த்து இருக்கிறாள்.
அவன் தங்கள் காதலுக்காகவும் காதலிக்காகவும் பெரிதான சாகசங்கள் எதுவும் செய்யாதவனாக இருக்கலாம், ஆனால் இன்று இக்கணம் இந்த நிமிடம் வரை விழியால் கூட வேறு ஒருவளைத் தீண்டியிராது மதுவிடம் கூறிய காதல் என்ற வார்த்தைக்கும், அதை ஏற்று அவளும் தன்னை நேசிப்பதாக கூறிய காதலுக்கும் உண்மையாகத்தானே இருந்து வருகிறான்.
ஆனால் இத்தனை தினங்கள் தன் காதலி என்று எண்ணியிருந்தவள் இக்கணம் உன் சகோதரனைத்தான் காதலிக்கிறேன், அவன் இல்லாது எனக்கு வாழ்க்கையே இல்லை என்று அவன் தலையில் இறக்கி வைத்த அணுகுண்டால் ஒரு காதலனாய் துடிதுடித்துப் போனவன் விழிகள் ரத்தமனச் சிவக்க சிபிரஞ்சனை ஏறிட்டுப் பார்த்தான்.
அவனின் அந்த அடிபட்ட பார்வையிலே உள்ளம் நைந்து போன சிபியும், “ஸ்ரீ, ஸ்ரீ அப்டி பாக்காதடா. நீ, நீ, நீ நினைக்கிற போலல்லாம் எதுவும் இல்லைடா. அவளுக்காக நான் இங்க எல்லாம் செஞ்சதுல என்மேல ஏதோ சின்னதா ஒரு அஃபெக்சன் தான். உங்க கல்யாணம் நடந்தா எல்லாம் சரியாப் போயிடும் ஸ்ரீ. மது மது ப்ளீஸ் சொல்லு மது. நீ இப்போ பேசுனதெல்லாம் சும்மானு சொல்லு மது.” என்று இருவரிடமும் மாறி மாறி அல்லாடத் தொடங்கினான் சிபிரஞ்சன்.
சகோதரனின் அந்த அல்லாடலிலே ஸ்ரீரஞ்சனுக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, மெதுவாக நிமிர்ந்து மதுரிமாவை ஏறிட்டு நோக்கியவன், “அப்போ உன்னோட அகராதில காதலனா இருக்கத்துக்குத் தகுதி உங்க வில்லேஜ்ல வந்து வேலை பார்க்கிறதும், கடைக்கி போய் உனக்கு நாப்கின்ஸ் வாங்குறதும் தானா? நான் உன்னோட உன் வில்லேஜ்கு வரலைன்னு சொன்னதும் என்மேல இருந்த காதல் சொல்லாம கொள்ளாம ஓடிடுச்சா?” என்று குரல் கரகரக்கக் கேட்டவனுக்கு மதுரிமாவின் துரோகத்தால் ஆத்திரமும் ஆதங்கமும் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.
ஆடவனின் அந்த வார்த்தைகள் ஈட்டியை பாய்ச்சுவது போல் அவள் நெஞ்சைத் துளைத்தாலும் சலனமே இல்லாது அவனை நிமிர்ந்து நோக்கியவள்,
“நீங்க என்னோட வில்லேஜ்கு வந்து ரஞ்சன் செஞ்சதை எல்லாம் செஞ்சிருந்தாலும் கூட நம்மளோட இந்தக் காதலுக்கு ஆயுசு ரொம்பவுமே கம்மியா தான் இருந்திருக்கும் ஸ்ரீ” என்றவள், “ஏன்னா நமக்கு இடையில் இருந்தது காதலே இல்ல ஸ்ரீ. காதலே இல்லை. ஆனா ரஞ்சன் ரஞ்சன் மேல வந்துருக்க இந்த உணர்வு… அதான் உண்மையான நேசம்னு எனக்கு நல்லாவே புரியுது ஸ்ரீ. அவர் இல்லன்னா என் வாழ்க்கைல எதுவுமே இல்லைன்னு எனக்கு ரொம்பவே தோணுது ஸ்ரீ. மனசு முழுக்க அவரை வச்சுட்டு எப்டி நான் உங்களோட வாழ முடியும். ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறியவளைப் பார்த்து சிபிரஞ்சனுக்கும் கண்கள் கலங்கி கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.
இப்படி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று தானே, இப்படி ஒரு இக்கட்டில் பெண்ணவளை நிறுத்தி விடக்கூடாது என்று தானே அவன் தன் உள்ளத்தின் நேசத்தையும் உணர்வுகளையும் அத்தனை தூரம் அடக்கி ஆண்டு கொண்டு இருந்தான்.
ஆனால் பெண்ணவள் மேல் அவன் கொண்ட நேசமும் காதலும் அவன் கட்டுப்பாடுகள் அனைத்தும் தவிடு பொடியாக்கி அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து விட்டதே என்று ஏகத்துக்கும் கலங்கியவன், “ஸ்ரீ…” என்று ஏதோ சொல்ல முனைய…
“நீ பேசாத.” என்று அவனைத் தடுத்து இருந்தவன், “உன்கிட்ட நான் அப்றம் பேசிக்கிறேன்” என்று விட்டு மதுவின் புறம் திரும்பி அவளை அற்பமாகப் பார்த்தவன், “அன்னிக்கு நான் ஏதோ சின்னதா பொய் சொல்லிட்டேன்னு இவ்ளோ நாளா என் நம்பரையே பிளாக் பண்ணி வச்சுருந்தியே. நீ இப்போ என்ன பண்ணி வச்சுருக்க ரீமா?. உன்னையே நம்பி இருந்த எனக்கு பச்சை துரோகம் பண்ணியிருக்க. உனக்காக ஒருத்தன் அதிகமா ரெண்டு விஷயம் செஞ்சுட்டா முன்ன காதலிச்சவனை விட்டுட்டு அவன் பின்னாடி போயிருவியா?” என்று கேட்டவனின் வார்த்தையில், “ஸ்ரீ… வேணாண்டா அவளை அப்டிப் பேசாத. அவ அப்டியாப்பட்ட பொண்ணு இல்லைடா” என்று ஸ்ரீயின் கரத்தைப் பற்றிக் கொண்டு கண்ணீர் வழியக் கெஞ்சியவனுக்கு, தன் தம்பியின் முன்னால் கூனிக்குறுகி நின்றிருந்தவளைப் பார்க்க பார்க்க ஹிருதயத்தில் இருந்து ரத்தமே வடியத் தொடங்கியது.
ஆனால் பெண்ணவள் செய்ததாக நினைக்கும் துரோகத்தில் ஸ்ரீரஞ்சனின் உள்ளேயும் எரிமலைக் குழம்புகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறி ஆடவனை அதல பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்க, “நீ பேசாம இரு சிபி. ஒரு ஆம்பிளையா நீயே அவமேல ஆசை பட்டிருந்தாக்கூட ஒரு கிராமத்துப் பொண்ணான இவ என்ன பண்ணிருக்கணும்?. அவள நேசிச்ச எனக்கு மனசலவுல கூட மாறு செய்யாம வாழறது தானே நம்ம தமிழ்ப் பெண்களோட பண்பாடு. ஆனா இவ என்ன பண்ணி வச்சுருக்கா பாத்தியா? துரோகம், துரோகம் பச்சை துரோகம்” என்று சீறலாகக் கேட்டவன்…
“சிபி உனக்காக கடை கன்னிக்கு போனான். காளையை அடக்கி குத்து பட்டு கிடந்தான்னு அவன் மேல காதல் வந்துருச்சுன்னு சொல்றியே. நாளைக்கே எவனோ ஒருத்தன் புதுசா வந்து இதைவிட பெருசா ஏதாவது பண்ணா இவனை விட்டு நீ அவனோட போயிருவியா? ச்சீ நீலாம் ஒரு பொம்பளையா? உன்னைப் போயா நான் காதலிச்சேன்னு நினைக்கிறப்போவே எனக்கு அருவருப்பா இருக்கு.” என்று பேசிக்கொண்டே சென்றவனை,
“ஸ்ரீ….” என்ற ஒற்றை கர்ஜனையில் ஊமையாக்கி நிறுத்தியிருந்தான் சிபிரஞ்சன்.
இதுவரை கேட்டே இராத அளவு செவிப்பரையையே கிழித்துச் செல்வது போன்ற ஆடவனின் அந்தக் குரலில் அங்கு தலை குனிந்து அமர்ந்திருந்த மதுரிமாவே அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க, இதுவரை விளையாட்டுக்குக் கூட தம்பியிடம் சினம் காட்டிப் பேசி இராதவன், “போதும் ஸ்ரீ. இத்தோட நிறுத்திக்கோ” என்று அவன் சட்டையைப் பிடித்தும் உலுக்கி இருந்தான்.
அதில் பேச்சோடு மூச்சு விடவும் மறந்து போய் நின்றிருந்தவனின் முன் எச்சரிக்கை செய்வது போல் சுட்டு விரலை நீட்டிக் காட்டியவன், “இன்னும் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா பேசுனா இங்க நடக்கிறதே வேற ஸ்ரீ” என்று உறுமலாகக் கூறியவன், “உனக்கு என்னடா தெரியும் அவளைப்பத்தி. அவளை காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றியே. அந்த காதலுக்காக இதுவரை என்னடா செஞ்சிருக்க நீ. அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அவளோட விருப்பு வெறுப்புகள்ள உனக்கு ஏதாச்சும் அக்கறை இருக்கா? அவளோட இறந்து போன அப்பா அம்மாவைப் பத்தி எப்போவாவது அவகிட்ட கேட்டுறிக்கியா? அவவீட்டுல யார் யார் இருக்காங்க, அவங்கள்ளாம் அவளுக்கு என்ன உறவுன்னு இதுவரை தெரிஞ்சிட்டு இருக்கியா? இல்லை அவளோட தம்பி தங்கைகள் மேல அவ உயிரையே வச்சுருக்கன்னாவது தெரியுமா உனக்கு?.” என்று ஆத்திரமாகக் கேட்டவன், “பெரிய ஆம்பளை பொம்பளைன்னு வியாக்கியானம் எல்லாம் பேசுற. காதல் கல்யாணம் கற்பு எல்லாத்திலையும் ஆம்பளை என்ன பொம்பளை என்னடா எல்லாருக்குமே ஒரே ரூல்ஸ் தான். பொம்பளைன்னா அவங்களுக்கு எந்தவித உணர்ச்சியும் இருக்காதுன்னு நினைச்சியா?. நீ பாட்டுக்கு உன்னோட சுயநலத்துக்காக என்ன அவளோட லவ்வரா நடிக்க அனுப்பிட்டு மும்பையில் ஜாலியா இருந்துட்ட, இங்க ஒவ்வொரு நாளும் அவளோட சொந்தக்காரங்க முன்னாடி என்னோட ஒட்டவும் முடியாம விலகவும் முடியாம அவ தவிச்ச தவிப்பு என்னன்னு தெரியுமாடா உனக்கு?” என்று தம்பியை அடித்து விடுபவன் போல் எகிறிக் கொண்டு வந்தவன், “காதல்ங்கறது வெறும் அலங்கார வார்த்தை இல்லை ஸ்ரீ, அது ஒரு அழகான உணர்வு. ஒரு பொண்ணு மேல காதலை வச்சிட்டா கடைசிவரை அவளோட சுக தூக்கங்கள் எல்லாத்திலையும் பக்க பலமா நிக்கிறவன் தான் உண்மையான ஆம்பளை. அதைவிட்டு அவளை அன்னிக்கு என்னோட அனுப்பிட்டு, இப்போ வந்து அவளைக் கண்டபடி பேசுறவன் கையாளாகதவன் செய்யற வேலை” என்றவன், “நீ அவளை காதலிக்கிறியோ இல்லியோ, இனிமேல் எந்தப் பொண்ணையும் இப்டி நாக்குல நரம்பில்லாமப் பேசாத” என்று கரங்களை இறுக்க மூடித் திறந்து தன் சினத்தைக் கட்டுப்படுத்தியவன் மெல்ல நடந்து தம்பியின் அருகில் சென்று அவன் தலையினையும் மெதுவாக வருடி விட்டான்.
பின், “சாரிடா… ஏதோ ஒரு கோபத்துல கத்திட்டேன்.” என்றவன், “மது… மது… ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடா. அவளோட நேசம் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். இன்னும் உலகம் அறியாத சின்னப் பொண்ணு. ஏதோ ஒரு குழப்பத்துல அப்படி எல்லாம் பேசிருச்சு. தயவு செஞ்சு அதெல்லாம் பெருசா எடுக்காத” என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,
“என்னால வந்த இந்தப் பிரச்னையை நானே சரி செய்யறேன் ஸ்ரீ. இனிமேல் உங்களுக்கிடையில நான் எப்பவும் வரமாட்டேன். நான் வரவே மாட்டேன். இப்போவே இங்க இருந்து போயர்றேன். இந்தக் கல்யாணம், பாட்டி குறிக்கிற நேரத்தில எந்த தடங்களும் இல்லாம நல்லபடியா நடக்கணும் ஸ்ரீ. ப்ளீஸ் இதுவரை நடந்ததை எல்லாம் ரெண்டு பேருமே கெட்ட கனவா நினைச்சு மறந்திட்டு, உங்களோட கல்யாண வாழ்க்கையை சந்தோசமா ஆரம்பிங்க. குட்லக்” என்று இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியவன் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஊரை விட்டும் வெளியேறி இருந்தான்.
சில மாதங்கள் முன்பு எப்படி ஒரு மனநிலையில் இந்த கிராமத்தில் வந்து இறங்கினானோ அதைவிட பல மடங்கு மோசமான மனநிலையில், விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தவனைச் சுமந்து கொண்டு, மதுரை விமானம் நிலையத்தை நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது சிபிரஞ்சனின் கருமை நிற லம்போ.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.