சிபிரஞ்சன் அந்த அறையை விட்டு வெறியேறி வெகுநேரம் கழித்தும் கூட அவன் கூறிச்சென்ற வார்த்தைகளை ஏற்க இயலாது உறைந்து போய் நின்றிருந்தவள் வெளியே அவன் வாகனம் கிளப்பப்படும் சப்தத்தில் தான் தன்னிலை மீண்டிருந்தாள்.
அதில் அடித்து பிடித்து ஜன்னல் புறம் ஓடியவள், “ரஞ்சன்… என்ன விட்டு போயிட்டிங்களா ரஞ்சன். உங்க மதுவை விட்டுப் போக உங்களுக்கு எப்டி ரஞ்சன் மனசு வந்தது?. அப்போ அப்போ நான் நான் உங்களோட மது இல்லையா ரஞ்சன்?” என்று கேட்டபடியே அவன் வாகனம் சென்ற திசையையே கலக்கமாகப் பார்த்திருந்தவள் அப்பொழுது தான் அங்கிருந்த ஸ்ரீயையும் கவனித்து அவனிடம் விரைந்து வந்தாள்.
வந்த வேகத்திலே அவன் கரத்தினையும் பற்றிக் கொண்டவள், “ஸ்ரீ, ஸ்ரீ, நான் நான் பண்ணதெல்லாம் தப்பு தான் ஸ்ரீ. எனக்கு எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க ஸ்ரீ. ஆனா இப்போ இப்போ ரஞ்சனை மட்டும் எங்கையும் போக வேணாம்னு சொல்லுங்க ஸ்ரீ. குத்துப்பட்ட காயம் கூட இன்னும் முழுசா ஆறாம டிராவல் பண்றது நிச்சயம் அவருக்கு நல்லதில்ல ஸ்ரீ. ப்ளீஸ் அவரை தடுத்து நிறுத்துங்க ஸ்ரீ. நான் நான் நான் உங்களையே கல்யாணம் பண்ணிக்கிறேன் ஸ்ரீ” என்று பித்து பிடித்தவள் போல் கதறத் தொடங்கி இருந்தாள் மதுரிமா.
பெண்ணவளின் கதறல் எல்லாம் செவியில் விழுந்தாலும் சற்று முன்னர் நடந்ததை எதையும் ஜீரணிக்க இயலாது அமர்ந்து இருந்தவனுக்கு பெண்ணவளின் தற்போதைய கூற்றிலும் அவள் சிபிரஞ்சனின் மேல் எந்த அளவிற்கு நேசம் வைத்திருந்தால் இந்த அளவிற்கு துடித்துக் கரைந்திடுவாள் என்று புரியத் தொடங்க விழியில் தோன்றிய வலியோடு அவளையே வைத்த கண் வாங்காது பார்த்து இருந்தான் ஸ்ரீரஞ்சன்.
கூடவே, ‘அவள் மட்டுமா? சற்று முன்னர் தன் சகோதரனும் அவளுக்காக தன் சட்டையை ஆவேசமாக பற்றி உலுக்கியதோடு இத்துணை தினங்கள் இந்த கிராமத்தில் இருந்து அவளுக்காகச் செய்தவை எதுவும் சாதாரணமான காரியங்கள் அல்லவே. அப்படி என்றால் தன் சகோதரனும் மதுரிமாவை நேசிக்கிறானா? அப்படி மட்டும் இருந்தால் அய்யஹோ கடவுளே நான்தானே அவர்களின் இந்த நிலைமைக்கு காரணமாவேன். என் பேச்சைக் கேட்டுத்தானே அவர்கள் கிராமத்திற்கு வந்தார்கள். காதலர்களாக நடித்தார்கள்’ என்று மிகவும் தாமதமாகவே தன் தவறை உணரத் தொடங்கியிருந்தான்.
போதாததற்கு தன் தமையன் கூறிச் சென்றது போல் அனைத்தும் மறந்து எங்களது திருமணம் நடந்தாலும் கூட இப்பொழுது ரஞ்சன் மேல் கொண்டிருக்கும் பெண்ணவளின் இத்தகைய அன்பும் தனக்கானதாக மாறுமா என்ன??? என்றும் அவன் தனது சுயநல குணத்தால் இழந்து விட்டிருந்த பெண்ணவளின் நேசத்தின் மகிமையும் எண்ணி மனதிற்குள்ளேயே மருகித் தவித்ததில் பெண்ணவளின் கதறலுக்குக் கூட எதிர்வினை ஆற்றத் தோன்றாது சிலையென சமைத்திருந்தான் ஸ்ரீரஞ்சன்.
அவன் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மென்மேலும் கலக்கம் கொண்டு தவித்தவள், “கடவுளே நான் நான் பெரிய தப்பு பண்ணிட்டேனே. என்ன காதலிச்சவருக்கும் உண்மையா இல்லாம, எனக்காக உயிர் வரை அர்ப்பணிக்கத் துணிஞ்சவரையும் காப்பாத்த முடியாத துர்திர்ஷ்டவதியா ஆகிட்டேனே. எதுக்காக இப்டி ஒரு இக்கட்டுல என்ன கொண்டு வந்து நிறுத்துன? தப்புன்னு தெரிஞ்சும் ஏன் இந்தக் காதல் எனக்குள்ள வந்துச்சு?” என்று நெற்றியில் அரைந்து கொண்டு அழுதவளின் சப்தத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மனோரமா நொடியும் தாமதியாது அறைக்குள்ளே ஓடி வந்திருந்தாள்.
அங்கோ ஸ்ரீரஞ்சன் ஒரு புறம் சிலை போல் அமர்ந்திருக்க, “ரஞ்சன், ரஞ்சன், ஏன் இப்டி பண்ணீங்க ரஞ்சன்?. ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க ரஞ்சன். நான் நான் ஸ்ரீயையே கட்டிக்கிறேன் ரஞ்சன்” என்று தரையில் அமர்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்த தமக்கையையும் பார்த்து உடல் தூக்கிவாரிப் போட்டவள் தமக்கையிடம் ஓடி, “மதுக்கா மதுக்கா. என்னாச்சு மதுக்கா? ஏன் இப்டி அழுதிட்டு இருக்க?” என்று ஏகமாய்ப் பதறினாள்.
ஆனால் ரஞ்சன் என்ற ஒருவன் தன்னை விட்டுப் போய்விட்டான் என்ற செய்தியிலே அவள் வாழ்வே சூனியம் ஆகிவிட்டதைப் போல் அழுது அரற்றிக் கொண்டிருந்தவளுக்கு தங்கையின் கேள்விகள் எல்லாம் சிந்தையிலே எட்டாது அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை பெண்ணவள்.
பெரியவளின் அந்த நிலையைக் கண்டு மென்மேலும் கலங்கிய சிறியவள் நொடியும் தாமதியாது அறையை விட்டு வெளியேறி வேகமாக ஓடிச் சென்று நின்றிருந்தது என்னவோ தன்னுடைய பட்டம்மாள் பாட்டியின் முன்னால் தான்.
பட்டு பாட்டி தான் அவளுக்கு மனோரமா என்ற பெயரை வைத்தார் என்று எப்பொழுதும் பாட்டியைக் கண்டால் பத்தடி தூரம் விலகி ஓடுவபவள் இன்றோ, “பாட்டி பாட்டி…” என்று ஓடிவந்து பெரியவரின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டு, “பாட்டி பாட்டி மதுக்கா மதுக்கா அங்க தரையில உக்காந்து அழுதிட்டு இருக்கா. ஏன் அழறன்னு கேட்டதுக்கும் எந்த பதிலும் சொல்லாம ஏதேதோ புலம்பறா. அங்க ஒரு மூளையில புதுசா வந்த மாமாவும் பிடிச்சி வச்ச பிள்ளையாராட்டம் உக்காந்து இருக்காங்க. எனக்கு என்னவோ ரொம்ப பதட்டமா இருக்கு பாட்டி” என்று தான் பார்த்தவை அனைத்தும் ஒன்றுவிடாது கூறி முடிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பெரிய பேத்தியின் முன்னே நின்றிருந்தார் பட்டம்மாள் பாட்டி.
அறைக்குள் நுழையும் பொழுதே அங்கு அசையாது அமர்ந்திருந்த ஸ்ரீரஞ்சனையும் அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே பேத்தியை நெருங்கி கீழே அமர்ந்து இருந்தவளின் தோளைப் பற்றித் தூக்கி நிறுத்தியவர், “ரஞ்சன் பேரர் எங்க மது?” என்று தான் கேட்டிருந்தார்.
பெரியவரின் பேரர் என்ற கூற்றிலே சிறிதளவு தன்னிலை மீண்டு அவரை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு அப்பொழுது தான் தாங்கள் செய்து வைத்திருக்கும் தவறும் விஸ்வரூபம் எடுக்க, அதை பாட்டியிடம் எப்படிக் கூறுவது என்று மருகியவள், “தப்பு பண்ணிட்டேன் பாட்டி… பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு அழுகத் தொடங்கினாள்.
பேத்தியின் அந்தச் செயலிலே பெரியவரின் உள்ளத்தில் மென்மேலும் பதட்டம் அதிகரிக்க, அதற்குள் விஷயம் அறிந்த வீட்டினர் அனைவரும் அங்கே கூடி இருக்க, அனைவரையும் முந்திக் கொண்டு முன்னே வந்திருந்த சொக்கலிங்கமோ பேத்தியின் அழுது கலங்கிய கோலத்தில் ஏகத்துக்கும் பதறிப் போனவர், “மதுக்கண்ணு… என்னடா ஆச்சு?” என்று பெண்ணவளை நெருங்கினார்.
தன் தாதாத்தாவைப் பார்த்ததும் இன்னுமின்னும் கலங்கித் தவித்த மதுரிமாவோ, “கடா மீசை… நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். சின்னப் பிள்ளையிலிருந்து என்ன தூக்கி வளர்த்த உங்களுக்கும் உண்மையா இல்லாம, என்ன காதலிக்கிறேன்னு சொன்னவருக்கும் துரோகம் பண்ணி, எனக்கு உதவி பண்ண வந்தவரையும் வீட்டை விட்டுத் தொரத்தி பெரிய தப்பு பண்ணிட்டேன் கடா மீசை. ரஞ்சன் ரஞ்சன் காயம் பட்ட உடம்போட வீட்டை விட்டு வீட்டை விட்டு” என்று அதற்கு மேல் பேச இயலாது கதறித் துடித்தவளின் பேச்சில், இத்தனை தினங்கள் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த உணர்வுக்கு விடை கிடைத்தது போல் அதிர்ச்சியின் உச்சமாக அவளை ஏறிட்டு நோக்கினார் பட்டம்மாள் பாட்டி.
அவள் திக்கித் தினறிக் கூறியதால் மற்ற யாவருக்கும் அவள் கூற வந்த விஷயங்கள் புரியாது போனாலும், திடீரென வீட்டை விட்டுச் சென்றுவிட்ட சிபிரஞ்சனின் செயலிலும் அங்கிருந்த ஸ்ரீரஞ்சனின் நிலையிலும் ஒன்றும் ஒன்றும் மூன்று என்று பிரச்னையின் ஆணிவேரைப் பிடித்து விட்டவர், “அப்போ இவ்ளோ நாளா இவனுக்கு பதிலாதான் அவன் இங்க உன் காதலனா இருந்தானா?” என்று ஸ்ரீரஞ்சனைக் கைகாட்டி பேத்தியை நோக்கி நேரடியாகவே வினவி இருந்தார்.
பெரியவரின் அந்தக் கூற்றில் அங்கிருந்த அனைவருக்குமே இதயம் தொண்டை குழிக்குள் வந்து துடிக்க…
மனைவி கூற வருவதை நம்ப முடியாத சொக்கலிங்கமோ, “பட்டுமா…” என்று மனைவியின் கரத்தைப் பற்றினார்.
அங்கிருந்த யாருடைய முகத்தையும் ஏறிட்டு பார்க்க இயலாது முகத்தை மூடிக்கொண்டவள், “என்ன மன்னிச்சுடுங்க பாட்டி. வேற வழி தெரியாம நான்தான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்” என்று மென்மேலும் கதறத் தொடங்கியவள், “ரஞ்சன் ரஞ்சன் அவரை மட்டும் ஊருக்கு போக விடாம தடுத்து நிறுத்துங்க பாட்டி. அவருக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் பாட்டி. நீங்க யாரைக் கட்டிக்க சொன்னாலும் கூட கட்டிக்கிறேன் பாட்டி. அவரு நல்லா இருந்தா போதும் பாட்டி” என்று பாட்டியின் கரங்களையும் பற்றிக் கொண்டு மாலை மாலையாக கண்ணீர் வடித்தாள் மதுரிமா.
மதுவின் அந்தக் கதறலிலே அங்கிருந்த அனைவருக்குமே நடந்து முடிந்த விஷயங்கள் ஓரளவுக்கு புரிந்து போக, அவளது கடைசிக் கூற்றும் அவள் கன்னங்களில் இருந்து இறங்கிய கண்ணீர்த் துளிகளுமே ஆடவன் மேல் அவள் கொண்ட நேசத்தை அப்பட்டமாக எடுத்துரைக்க, சரேலெனத் திரும்பி அங்கிருந்த ஸ்ரீரஞ்சனை தீப்பார்வை பார்த்தவர் மீண்டும் பேத்தியின் புறம் திரும்பி தன் கையை பற்றி நின்றிருந்த பேத்தியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார்.
இதுவரை விளையாட்டாகக் கூட பேத்தியை அடித்திராதவர் தன் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் பதியும்படி ஓங்கி அறைந்ததோடு நில்லாது, “மூனு பேரும் சேர்ந்து என்ன காரியம் பண்ணி வச்சுருக்கீங்க? காதல், கல்யாணம், கணவன் மனைவி பந்தம் இதெல்லாம் உங்களுக்கு அவ்ளோ விளையாட்டாப் போயிடுச்சா?” என்றும் உறுமலாகக் கேட்டு பேத்தியை அங்கிருந்த நீள் இருக்கையில் உதறித் தள்ளியவர், “ராஜசேகரு உடனே வண்டியை எடுடா. ஏர்போர்ட்டுக்கு போகணும்” என்று கத்தியவாறே வீட்டை விட்டும் வெளியேறி இருந்தார்.
அவர் பேத்தியை அறைந்து தள்ளியதிலே அது தனக்கு விழ வேண்டிய அறை என்பது போல் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்ட ஸ்ரீரஞ்சன் எழுந்து நின்றிருக்க, அவர் போட்ட சப்தத்திலே அவரது மகன் மட்டுமல்லாது சொக்கலிங்கமும் அடித்து பிடித்து ஓடி வாகனத்தில் ஏறி அமர, அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்திற்குள் நுழைந்து இருந்தனர் மூவரும்.
அங்கோ அடுத்து புறப்படவிற்கும் விமானத்தில் செல்லும் பயணிகள் எல்லாம் அமர வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் ஒன்றில் வலது கரத்தை எடுத்து கண்களை மறைத்து வைத்தபடி தொய்ந்து போய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சிபிரஞ்சன்.
அவனுக்கு அருகில் இருந்த இருக்கையிலே அமர்ந்து இருந்த சுதிரின் கரத்திலோ அவர்களுக்கான விமானச் சீட்டும், பயணப்பையும் தயாராக இருக்க, அவர்கள் கிராமத்தில் வந்து இறங்கிய கணம் தொட்டே, “உங்களுக்கு ஏன் பாஸ் இந்த வேண்டாத வேலை?” என்று அவன் இங்கு வந்ததற்காக குறைப்பட்டுக் கொண்டிருப்பவன், இக்கணம் சிபியின் தொய்ந்து போன தோற்றத்தைப் பார்க்க இயலாது, “பாஸ்…ப்ளீஸ் பாஸ். நாம திரும்பி வீட்டுக்கே போயிடலாம் பாஸ். அங்க யாரோட கைல கால்ல விழுந்தாவது ரீமாவையும் உங்க கூட கூட்டிட்டு வந்துடலாம் பாஸ். என்னால உங்களை இப்டி பாக்க முடியல பாஸ்” என்று அவனது காதலுக்காக அவனிடமே கெஞ்சிக் கொண்டிருந்தான் அந்த விசுவாசி.
அவனது வார்த்தைகள் எல்லாம் செவியில் விழுவதற்கு அடையாளமாக அவ்வப்பொழுது கை விரல்களை மட்டும் மூடி மூடித் திறந்தபடி இருந்தவன், அவனது ஒரு வார்த்தைக்குக் கூட மறுமொழியே கூறாது இறுகிப் போய்தான் அமர்ந்து இருந்தான்.
அவன் கூறியது போல் அத்துணை சுலபமாக நிறைவேறக்கூடிய விஷயத்திற்கா அவன் ஆசைப்பட்டு இருக்கின்றான்.
‘தன்மேல் கொண்ட நம்பிக்கையில் தன்னுடைய காதலையே தன்னிடம் ஒப்படைத்து இருந்த தம்பிக்கே அல்லவா பெரும் துரோகம் செய்து விட்டு வந்திருக்கின்றேன்’ என்று தனது செயலை எண்ணி தனக்குத் தானே உள்ளூற நொந்து போய் அமர்ந்திருந்தவனின் அருகில் ஆவேசமாக நெருங்கி இருந்த பட்டம்மாள் பாட்டியோ அது விமான நிலையம் என்றும் பாராமல் சுற்றி அத்தனை நபர்கள் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், அவன் சட்டையைப் பற்றி இழுத்து எழும்ப வைத்திருந்தார்.
அச்சமயம் அவரை அங்கு எதிர்பாராது தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவன், “பாட்டிம்மா…” என்று திணறலாக அழைத்திருக்க…
“அப்டிக் கூப்பிடாத” என்று சீறியவர், “இன்னும் ஒரு மணி நேரம் உனக்கு அவகாசம். நான் அங்க வீடு போய் சேர்றதுக்குள்ள உன்னோட காரு நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கணும். இல்லன்னா நடக்குறதே வேற” என்றும் உறுமிவிட்டு வந்தது போலவே தன் வாகனத்தில் ஏறி விரைந்து விட்டிருந்தார்.
பாட்டியின் அந்த வரவிலும், அவர் செயலில் வெளிப்பட்ட ஆத்திரத்திலுமே அவருக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதை உணர்ந்து, பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் பெரியவரின் வார்த்தைகளையும் மீறும் சக்தியற்று அவர் கூறியது போலவே அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் அலங்காநல்லூர் மண்ணில் கால் பதித்து இருந்தான்.
அன்று முதல்முதலில் அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது அத்துணை கம்பீரமாக நுழைந்து இருந்தவன், இன்றோ தவறு செய்து விட்ட குற்றவுணர்வில் தளர்ந்து போய் தலை குனிந்தவாறு நுழைந்து இருக்க, “நில்லு அங்கையே” என்று அவனை வரவேற்பு அறையிலே நிறுத்தி இருந்தவர், “அன்னிக்கு முதன் முதல்ல நீ என் வீட்டுல காலடி எடுத்து வச்சப்போ உன் கண்ணுல இருந்த ஒரு ஒளியைப் பார்த்து நீ ரொம்ப ரொம்ப புத்திசாலி, தைரியமானவன், நேர்மையாளன்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன். ஆனா இந்தக் காலத்துப் பிள்ளைக போல நீயும் ஒரு கோழைன்னு நிரூபிச்சிட்ட. என் பேத்தி ஆசைப்பட்டான்னு ஒரு காரணத்துக்காக முன்னபின்ன பாத்து அறியாத உன்ன என் வீட்டுக்குள்ள விட்டு, பேரர் பேரர்னு உனக்கு உபச்சாரம் நடத்தினதுக்கு நீ ரொம்பவே அருமையான பிரதி உபகாரம் செஞ்சிட்ட. காதல், கல்யாணம், திருமண பந்தம்லாம் உங்களுக்கு அவ்ளோ சாதாரணமா ஆகிடுச்சா?” என்று கேட்டவர் தொடர்ந்து…
“காதல்ங்கறதுங்கறது ஒரு அழகான உணர்வுன்னு என்ன பாத்து அன்னிக்கு நீ சொன்னியே. காதல்ங்கறது அழகான உணர்வு மட்டுமில்ல. புனிதமான உணர்வும் கூடன்னு உனக்குத் தெரியுமா?
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில உருவாகுற அந்த உணர்வு அவங்க இறுதி மூச்சுவரை பூஜிக்கப்பட வேண்டியதுன்னு உனக்கு நான் சொல்லணுமா?. அப்டியாப்பட்ட ஒரு உணர்வை சின்ன பசங்க போல எவ்ளோ விளையாட்டா எடுத்து என்னவெல்லாம் பண்ணி இருக்கீங்க?. உனக்கும் உன் தம்பிக்கும் பொழுது போகாம விளையாட என் பேத்தியோட வாழ்க்கைதான் கிடைச்சதா? இப்டி எல்லாம் எந்தக் குழப்பமும் வந்துடக் கூடாதுன்னு தான பெரியவங்க வயது வந்த தங்களோட பிள்ளைகளுக்கு சில பல கட்டுப்பாடுகள் விதிக்கிறாங்க. ஆனா அதெல்லாம் மதிக்கிறீங்களா இந்தக் காலத்துத் தலைமுறை? கட்டி வச்சிருக்க படகு கரையில நின்னாலும் தண்ணிக்குள்ள தான் நின்னுட்டு இருக்கும். ஆனா கட்டுப்பாடுகள் இல்லாத படகு கரையவே பாக்க முடியாம கடலுக்குள்ளயே சிக்கி சின்னா பின்னமா ஆகிடும்னு சொன்னாப் புரியுதா உங்களுக்கெல்லாம்?” என்று அவன் பதிலே கூற முடியாதபடிக்கு கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார் பட்டம்மாள் பாட்டி.