ஐயர் தாலி கட்டக் கூறியும் இன்னும் கட்டாது இருப்பவனின் செயலில் என்னவானது என்று மெல்ல நிமிர்ந்து பார்த்தவளுக்கு சுதிர் கொண்டு வந்து வைத்த பெற்றோரின் புகைப்படத்தைப் பார்க்கவும், உடல் எல்லாம் ஒருவித இன்பச்சாரல் பரவ, விழியில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரோடு அங்கிருந்த தாத்தாவையும் பாட்டியையும் ஏறிட்டு நோக்கினாள் பெண்ணவள்.
தன்னவனோடு தன்னைச் சேர்த்து வைத்ததற்கான நன்றி உணர்வோடு என்னவனைப் பார்த்தீர்களா என்ற பெருமிதமும் அவளின் பூரித்த முகத்தில் பொங்கி வழிய பேத்தியின் அந்த பூரிப்பில் சிபியை பெருமையாக பார்த்துக் கொண்ட முதிர்ந்த கண்களும் கனிந்து சிரிக்க, “சந்தோசமா இருடா” என்பது போல் கண்ணை மூடி திறந்தனர் பட்டமாளும் சொக்கலிங்கமும்.
மணப்பெண்ணுக்கே உரிய சகல அம்சங்களோடும் மனநிலையோடும் ஆயத்தம் ஆகி அவன் அருகில் அமர்ந்து இருந்தவளுக்கு, தன் திருமண நிகழ்வுகளைப் பார்க்க தன் பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற நினைப்பும் அவள் உள்ளத்தின் ஓரம் உறுத்திக் கொண்டு தான் இருக்க, பெண்ணவளின் கனவுகளில் மட்டுமல்லாது அவள் நினைவுகளிலும் நிறைந்து இருப்பவனோ அவள் விழிகளைப் பார்த்தே பெண்ணின் தேடலுக்கு வடிவம் கொடுத்திருந்தான்.
சுதிர் புகைப்படத்தை வைத்து விட்டு நகரவும், நீர் திரையிட்ட விழிகளோடே நொடிகள் சில புகைப்பத்திலே பார்வை பதித்து இருந்தவள், பார்வையை மெதுவாகத் திருப்பி தன்னவனை நேசம் நெய்யப் பார்க்க,
பெண்ணவளின் அந்த ஆழி விழிகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்தவனும் அவள் புறம் நன்றாகவே சரிந்து குனிந்தவன், “என் இறுதி மூச்சு இருக்க வரை உனக்கு எல்லாமாவும் நான் இருப்பேன்டி அம்மு. சந்தோசமா தாலி வாங்கிக்கோடி” என்றுவிட்டு கையிலிருந்த மாங்கல்யத்தையும் அவள் கழுத்தைச் சுற்றிக் கொண்டு செல்ல…
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபகே த்வம் சஞ்சீவ சரத சதம்..” என்று ஐயர் திருமண உறுதிமொழியை உச்சரித்ததைத் தொடர்ந்து, உறவுகளின் அட்சதையும் அவர்கள் மீது கொட்டத் தொடங்கியது.
செவ்வந்திப்பூ இதழ்களும் அரிசியும் கலந்த அட்சதை மழையில் நனைந்தவாறே தன் வலப்புறம் அமர்ந்து இருந்த பெண்ணவளின் சங்குக் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து மூன்று முடிச்சுகளையும் தானே இட்டவன் அவளை தன்னின் சிறந்த பாதியாக ஆக்கிக் கொண்டான் சிபிரஞ்சன்.
அடுத்து ஐயர் குங்குமம் இடச்சொல்லி தட்டை நீட்ட…
அதை தன் நடுவிரலில் எடுத்தவன்.. மதுவின் நெற்றி வகிட்டிலும் இருபுருவங்களுக்கு மத்தியிலும் குங்குமத்தைத் தீட்டினான்.
அதற்குள் பட்டம்மாளின் கண்காட்டலில் அவர்களை நெருங்கிய சாரதாவும், “இங்க மாங்கல்யத்திலையும் வைங்க தம்பி…” என்று மதுவின் மாங்கல்யத்தைத் தூக்கிக் காட்ட.. அங்கும் ஒரு துளி குங்குமத்தை வைத்து அழுத்தமாய் தன் உரிமையை நிலை நாட்டினான் ஆடவன்.
அவன் தாலியைக் கட்ட ஆரம்பிக்கும் பொழுது அவன் முகத்தில் பார்வை பதித்தவள், அவன் மாங்கல்யத்திலும் குங்குமம் வைத்து நிமிர்ந்த பொழுதும் கூட அவனையே அள்ளிப் பருகியவாறு பார்த்து இருக்க, தன்னாலே பின்னங்கழுத்தை வருடச் சென்றது ஆடவனின் வலக்கரம்.
பின் சுற்றுப்புறம் உணர்ந்து கையோடு மனதையும் கட்டுப்படுத்தி லேசாக தொண்டையைச் செருமியவன் சற்றே அவள் புறம் சாய்ந்து, “இப்டி ஏடாகூடாம பார்த்து வைக்க இது இடமில்லைடி பொண்டாட்டி. நைட்டு எவ்ளோ வேணா பாத்துக்கோ.” என்று அவள் சிந்தையைக் கலைத்தான்.
அதைக்கேட்டு சட்டென்று பார்வையை தழைத்துக் கொண்டவளுக்கு ஆடவனின் அந்த வார்த்தைகளில் பட்டாம்பூச்சிக் கூட்டமே மேனி எங்கும் படை எடுத்துக் கிளம்ப…
அதற்குள் இடையிட்ட ஐயரோ அவர்களை எழுந்து அக்கினியையும் வலம் வரக்கூறினார்.
அவர்களும் அவர் கூறியது போல் செய்து முடித்த தருணம் அவர்களை நோக்கி வந்து விட்டிருந்த ஸ்ரீரஞ்சனோ, “ஹேப்பி மேரீட் லைஃப் சிபி.” என்று சகோதரனின் கரத்தைப் பற்றிக் கொண்டவன் அருகில் இருந்த மதுவிடமும், “கங்கிராட்ஸ் ரீமா. ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருக்கணும்..” என்று முதல் திருமண வாழ்த்தை அவர்கள் இருவருக்கும் கூறினான்.
அதில் அவனை ஏறிட்டுப் பார்த்தவனுக்கும் அத்தனை நேரம் இருந்த இதம் சற்றே குறைந்து சிறிதான வருத்தமும் உற்பத்தியாக, சட்டென்று அவனை இறுக அணைத்துக் கொண்டவன் உள்ளார்ந்த உயிரிப்புடனே,
“தேங்க்யூ சோ மச் ஸ்ரீ.” என்று கூறியவன் அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்திருக்க, அங்கோ அவன் தேடியது போல எந்தவித உணர்வும் இல்லாது சகோதரனுக்கான புன்னகையும் சந்தோசமும் மட்டுமே கொட்டிக் கிடந்தது.
அதில் அவன் உழைப்பும் அதிகமாகவே இருந்ததை அந்த சகோதரனும் அறிந்து தான் இருந்தான்.
கணவனைத் தொடர்ந்து “நன்றி ஸ்ரீ” என்று புன்னகைக்க முயன்ற மதுரிமாவிற்கும் ஏனோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தெம்பெல்லாம் இல்லாது போக, எத்தனை நபர்கள் வந்து எத்துணை சமாதானம் கூறினாலும் அவள் அவனுக்குச் செய்தது அவளைப் பொருத்தவரை மிகப்பெரிய தவறு என்ற குற்ற உணர்வில் தான் இன்னமும் தவித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
பலவித உணர்ச்சிக் கலவையில் சட்டென்று அவள் விழியில் நீரும் துளிர்த்து விட்டிருக்க, தலையைக் குனிந்து அதை மறைக்க முயன்றவளின் மனதினை எப்படித்தான் கண்டு கொண்டானோ அவள் கணவனாகிப் போனவன்.
சகோதரனோடு உரையாடிக் கொண்டிருந்தவன் சட்டென மாலைக்குள் மறைவாக அவள் கரத்தினைப் பற்றி, “அம்மு ரிலாக்ஸ்டி.” என்று லேசாக அழுத்திக் கொடுத்து விழிகளையும் மூடித் திறக்க…
அக்கணத்தின் அத்தருணம்.. மதுவின் மனதில் மலைச்சாரலாய் சாமரம் வீசிச் சென்றது.
அத்தனை நேரம் அவள் மனதில் இருந்த கலங்கங்களும் குழப்பங்களும் தன்னவனின் நேசக் கரங்களின் கதகதப்பில் மெல்ல மெல்ல அவளை விட்டு விலகத் தொடங்கியது.
சிறிது நேரத்தில், “யூ போத் கேரிஆன்” என்று ஸ்ரீயும் அவர்களுக்கான தனிமை கொடுத்து விலகிச் செல்ல, அதன் பிறகு வந்த சிலமணி நேரங்கள் பல சாங்கியங்களும் சம்பிரதாயங்களும் புதுமணத் தம்பதிகளை இழுத்துக்கொண்டது.
பெரியவர்களின் வழிநடத்தலில் அனைத்தும் செய்து முடித்தவர்கள், பெரியவர்களிடம் ஆசீர்வாதங்களும் வாங்கி முடிக்க, அனைவருக்கும் விருந்துகளும் பரிமாறபட்டது.
இப்படியான அனைத்து வேலைகளிலும் மதுவின் உறவினர்களோடு அவனும் ஒரு உறவினனாய் ஸ்ரீரஞ்சனே முன்னின்று கவனிக்க, அவளையும் அறியாமல் அவ்வப்பொழுது ஆடவனிடம் சென்று சென்று மீண்டது மனோவின் கவனம்.
அன்று சிபிரஞ்சன் குத்துப்பட்ட அன்றே பட்டம்மாள் நேரிலே சென்று வீராவிடமும், அவன் அன்னையிடமும் கடும் மிரட்டல் விடுத்து வந்திருக்க, அதற்கு பின் அவர்களின் நிழல் கூட மதுவின் புறம் திரும்ப முயற்சிக்கவில்லை.
ஒரு வழியாக இறைவனின் நல்லாசியுடன் அவன் போட்டிருந்த கணக்குப்படி திருமண வைபவமும் இனிதாகவே நிறைவை எட்டி இருக்க, அடுத்த மூன்று மணி நேரத்தில் ரோஜாக்கள் சொருகப்பட்டிருந்த சிபியின் லம்போவில் மணமக்கள் இருவரும் மதுரிமாவின் வீட்டையும் அடைந்து இருந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்து வீட்டு ஆட்களும் கிளம்பியிருக்க…
முதலில் மதுரிமாவின் வீட்டிற்குச் சென்று கடவுளை வணங்கச் சொல்லி பால் பழம் அருந்தக் கொடுத்தவர்கள், பின்னர் மதுவிற்கு என்று வாங்கி நிறைத்திருந்த சீர் சினத்திகளோடு சிபியின் வீட்டிற்கு புதுமணத் தம்பதியரை அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தொடங்க இருக்கும் புதிய கிளை காரணமாக ஏற்கனவே இங்கும் ஒரு வசிப்பிடம் வாங்கும் முடிவில் இருந்தவன் தனக்கும் மதுவிற்கும் திருமணம் என்று முடிவான சில தினங்களிலே அவளையும் அழைத்துச் சென்று தங்களுக்கான ஒரு புதிய இல்லத்தை பெண்ணின் ரசனைக்கேற்ப வாங்கியும் விட்டிருந்தான்.
மதுரையின் முக்கிய நகருக்குள், ஒரு மணி நேரப் பயணத்தில் வீற்றிருக்கும் அவர்களின் புதிய வீட்டிற்குத் தான் அனைவரும் மணமக்களோடு சென்று இருக்க, அவர்கள் கொண்டு வந்த சீர் பொருட்களை மட்டும் ஒரேயடியாக மறுத்து விட்டிருந்தான் சிபிரஞ்சன்.
அதில், “என்ன பேரரே… இப்டிச் சொல்றீக? எங்க பேத்திக்குன்னு அப்போ நாங்க எதுவும் செய்யக்கூடாதா?” என்று பெரியவர்கள் மனத்தாங்கலாக வினவ…
“தாராளமா செய்ங்க தாத்தா. உங்களுக்கு அவளையும் அவளுக்கு உங்களையும் பாக்கணும்னு தோணுறப்போ குடுகுடுன்னு ஓடிவந்து பேத்தி கூடவே இருங்க. நீங்க எப்போ விருப்பப்பட்டாலும் நம்ம வீட்டுக்கு மதுவை அழைச்சிட்டு போய் நாள் கணக்கா வச்சி சீராட்டுங்க. யாரு வேணாம்ணு சொன்னா.” என்றவன், “ஆனா உங்களோட அன்பை இப்டி பொருட்களைக் கொடுத்து தான் காட்டணும்ணு இல்லை தாத்தா. அப்டியே ஏதும் தேவைப்பட்டா உங்ககிட்டதான் முதல்ல கேப்போம்” என்று கூறியவன், “சரிதானே அம்மு?” என்று மனைவியையும் துணைக்கு அழைத்தான்.
இனிவரும் காலம் எல்லாம் எப்படி ஒரு சூழலிலும் என் இணை நீயே என்று சொல்லாது சொல்லியது ஆடவனின் சரிதானே அம்மு.
ஏற்கனவே தன்னவனின் அன்பிலும் அருகாமையிலும் நெகிழ்ந்து இருப்பவளின் தலை அந்த அம்முவிலே, ‘ஆமாம்’ என்பது போல் அன்னிச்சையாக அசைந்து,
“கடா மீசை பட்டு பேபி. இதெல்லாம் நம்ம வீட்லயே இருக்கட்டும். தேவைப்படும் போது நாங்களே வந்து எடுத்துக்கறோம்” என்று அவன் கூற்றிற்கு ஒப்புதல் வழங்கி இருக்க, இருவரின் அந்த அந்நியோன்யத்தில் பெரியவர்களோடு இணைந்து ஸ்ரீரஞ்சனின் பார்வையும் அவர்களிடம் ஆச்சர்யமாகக் குவிந்தது.
காதல் பார்வையும், குழைந்த பேச்சுக்களும், விலையுயர்ந்த பரிசுகளும் தான் நேசத்தின் வெளிப்பாடு என்று இத்தனை தினங்கள் அவன் எண்ணியிருந்ததற்கு முற்றிலும் மாறாக துணையின் விழியைப் பார்த்தே மனதைப் படிக்கும் வித்தையும், நமக்குப் பிடித்த ஒன்றைக்கூட துணைக்காக விட்டுக்கொடுக்கும் பண்பும் தான், காதலைக் காத்து நிற்கும் இரு தூண்கள் என்று கண்டு கொண்டவனுக்கு, இது போன்ற ஒரு நேசம் நம் வாழ்விலும் கிட்டுமா என்ற ஏக்கமே தோன்றி இருந்தது.
காலத்தின் போக்கில் நடந்ததை எல்லாம் மறந்து அவன் மனம் வேறு ஒரு துணையை நாடினால் கூட அத்துணையோடு இதுபோல ஒரு காதல் வாழ்வை தன்னால் வாழ இயலுமா??? என்ற விடையறியாக் கேள்வியும் அவன் உள்ளத்தைக் கசக்க, இனியும் தான் இங்கு அதிக்கப்படி என்று உணர்ந்தவன் தனது ஊரான மும்பைக்கு கிளம்ப ஆயத்தம் ஆகினான் ஸ்ரீரஞ்சன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.