ஸ்ரீரஞ்சன் இத்துணை விரைவில் கிளம்புவான் என்று எதிர்பாராத சிபியும் மதுவும் அவனைத் தேடி அறைக்குள்ளே வந்து விட்டவர்கள்,
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே ஸ்ரீ. ஏன் அதுக்குள்ள கிளம்பற” என்று தவிப்பாகக் கூற, “இல்லை சிபி. இங்கயும் அங்கயும் டிராவலிங்ல இருந்ததால ஒன் மந்த் எந்த ஒர்க்கும் சரியா பாக்கலை. இனியாவது ஒர்க்ல கான்ஸ்ட்ரேட் பண்ணணும்டா.” என்று தமையனை அணைத்து விடுவித்தவன் சிறிதே தயங்கி மதுவின் முகத்தையும் பார்த்து, “இன்னிக்கு உங்களுக்கே உங்களுக்கான நாள் ரீமா. என்ன பத்தி யோசிச்சு அந்த நாளோட இனிமையை மிஸ் பண்ணிடாதீங்க. எதுவுமே ஒருதரம் கையை விட்டுப் போய்ட்டா திரும்பக் கிடைக்காது” என்றும் கூறிவிட்டு சட்டென அங்கிருந்த குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான் ஸ்ரீரஞ்சன்.
தன்னுடைய துக்கத்தையும் கண்ணீரையும் யாரும் பார்ப்பதை ஆடவன் விரும்பவில்லை போலும்.
அவன் அப்படிக் கூறிச் செல்லவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களுக்கும் மனதினோரம் சுருக்கென்று வலித்தாலும் கடவுளின் சித்தம் இதுதான் எனும் பொழுது அவர்கள் செய்யவும் ஏதும் இல்லாது போக, காலம் அவன் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கையோடு அறையை விட்டு வெளியேறியிருக்க, சில நிமிடங்களின் பின்னரே முகத்தை நன்றாக அடித்துக் கழுவிவிட்டு ஸ்ரீரஞ்சன் வெளியே வந்த நேரம் அவனுக்காகக் காத்திருந்தாள் மனோரமா.
சற்று முன்னர் அறைவாயிலில் நின்று அங்கு நடந்ததை எல்லாம் கவனித்திருந்தவளுக்கு அவளையும் அறியாது அவ்வறைக்குள் நுழைந்திருந்தது பெண்ணவளின் கால்கள்.
அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர்பாராதவன், “ஹேய்… நீ நீ இங்க என்ன பண்ற?” என்று அதிர்ச்சியாகவே வினவ…
சட்டென்று தன் கையிலிருந்த ஒரு முயல்குட்டி பொம்மையை அவனிடம் நீட்டி இருந்தவள், “நமக்கு ஒரு விஷயம் நடக்காம கிடைக்காம தட்டிப் போச்சுன்னா, கொஞ்சம் நாள் கழிச்சு அதைவிட சிறப்பா அது நடக்கும்னு பாட்டி என்கிட்ட சொல்லிருக்காங்க. நீங்களும் அக்கா உங்களை கட்டிக்கலையேன்னு பீல் பண்ணாதீக. அவளை விட” என்று கூறிக்கொண்டே வந்தவள் சட்டென நிறுத்தி, “மதுக்காவை விட இல்லாட்டியும், மதுக்கா போலவே ஒரு அழகான அன்பான பொண்ணு உங்களைத்தான் கட்டிப்பேன்னு ஒருநாள் உங்க முன்ன வந்து நிக்கும். அதுவரை உங்களுக்கு எவ்ளோ மனசு கஷ்டம் வந்தாலும் இந்த பொம்மைய உங்க பெஸ்ட் ஃபிரண்டா நினைச்சு அதுகிட்ட சேர் பண்ணுங்க. நானும் அப்டித்தான் பண்ணுவேன். மனசு கொஞ்சம் லேசா மாறும்” என்று குரல் கரகரக்கக் கூறினாள் மனோரமா.
மஞ்சள் வண்ண பாவாடை தாவணியில், பட்டாம்பூச்சியாய் படபடக்கும் விழிகளோடும் புசுபுசுவென்ற கன்னங்களோடும், அவள் கையிலிருந்த முயல்குட்டி பொம்மைக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதபடி தன் முன்னே நின்று இருந்தவளைக் கண்டு அத்தனை நேரம் இருந்த துக்கம் எல்லாம் மறைந்தது போல் அவனையும் அறியாது ஆடவனின் அதரங்கள் சிறு புன்னகையை உற்பத்தி செய்தது.
கூடவே அவள் இன்னும் நீட்டிக்கொண்டே நின்றிருந்த பொம்மையையும் மறுக்கத் தோணாது கையில் எடுத்துப் பார்த்தவனுக்கு கோடாகப் பிரிந்த அதரங்கள் பற்கள் தெரியும் அளவு பெரிதாக விரிய…
ஒரு பொம்மையைப் போய் தோழனாக எண்ணிக்கொள் என்று கூறிய பெண்ணவளின் மழலைப் பேச்சில் அவளை ஆர்வம் கூட்டிப் பார்த்தவனோ, “எல்லாம் சரிதான். ஆனா உன்னோட பெஸ்ட் ஃப்ரண்டை என்கிட்ட கொடுத்திட்டின்னா அப்றம் நீ ஃபீல் பண்ண மாட்டியா மனோரமா?” என்றான் சிறிதே குறும்பு எட்டிப் பார்க்கும் குரலில்.
அதைக்கேட்டு ஒரு கணம் திருதிருவென்று விழித்தவள்,
“அது, அது, நான் யாருக்கோ கொடுத்தாதான் பீல் பண்ணுவேன். ஆனா உங்களுக்குதானே கொடுத்திருக்கேன். அதனால பரவாயில்லை.” என்று புன்னகை முகமாகவே கூறியவளின் பேச்சில்,
“நான் அப்டி என்ன ஸ்பெஷல் உனக்கு?” என்று வினவினான் ஸ்ரீரஞ்சன். சற்று முன்னர் பார்வையில் இருந்த ஆர்வம் இப்பொழுது குரலிலும் வெளிப்பட்டதோ.
ஆடவனின் அந்தக் கேள்விக்கும் அவளிடத்தில் சரியான பதில் இல்லாது போக, “நீங்க, நீங்க, நீங்க என் அத்தானோட ட்வின் பிரதர். பாக்கவும் அவகளைப் போலவே இருக்கீக. அப்போ எனக்கு ஸ்பெஷல்தானே?” என்று கேட்டவள்,
“இந்த பொம்மையை எப்பவும் உங்க கூடவே வச்சுக்கோங்க. உங்களுக்கு இனிமேல் எல்லாம் நல்லதாவே நடக்கும். சரியா?” என்று ஆரூடமும் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறப் போக…
மதுவின் உறவுகள் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் சிபிரஞ்சனுக்கான இடத்தை எண்ணி மலைத்துப் போனவன் அவனிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று விழிகளையும் மூடித் திறந்தான்.
பின் பெண்ணவளின் புறம் திரும்பி, “ஹேய் மனோரமா” என்று அவளைத் தடுத்து நிறுத்தியவன் என்ன நினைத்தானோ, சட்டென தன் உடைகள் வைத்திருக்கும் பைக்குள் இருந்து ஒரு புதிய தங்கச் சங்கிலியை வெளியே எடுத்தவன் அதில் தொங்கிய பதக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த M என்ற ஆங்கில எழுத்தையே ஒருகணம் வெறித்துப் பார்த்து விட்டு, “உன்னோட பெஸ்ட் ஃபிரண்டையே எனக்காக கொடுத்ததுக்கு பதிலா இது என்னோட கிஃப்ட் மனோரமா. வாங்கிக்கோ” என்று அச்சங்கிலியை அவளிடம் நீட்டினான்.
அவன் நீட்டிய சங்கிலியில் இருந்த ஆங்கில எழுத்தை வைத்தே அது யாருக்காக வாங்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டவளுக்கு அதை தான் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்கிற தயக்கம் இருந்தாலும் சற்று முன்னர் அதைக் காணும் பொழுது ஆடவனின் விழிகள் வெளிப்படுத்திய பாவத்தில் அவள் கரங்கள் அன்னிச்சையாக நீண்டு அதை பெற்றுக் கொண்டதோடு,
“தேங்க்ஸ் சின்னத்தான். பாத்து பத்திரமா ஊருக்கு போய்ட்டு வாங்க” என்றும் கூறியவள் அவன் கொடுத்த சங்கிலியோடே ஓடி மகிழனோடு சேர்ந்து கொண்டாள்.
அவள் சென்று மறையவும் அவள் கொடுத்துச் சென்ற பொம்மையிடம் ஆடவனின் பார்வை குவிய,
“இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்ற பெண்ணவளின் குரலே ஏதோ தேவதைகள் தத்தாஸ்து பாடியதைப் போல் அவன் செவிகளில் ஒலிக்கத் துவங்கியது.
அதில், “தேங்க்ஸ் ஏஞ்சல்” என்று மெலிதாகச் சிரித்தபடி அந்த முயல் பொம்மையை தன் பைக்குள் பத்திரப்படுத்தியவன், புன்னகை முகமாகவே அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றிருக்க, ஆடவனின் முகத்தில் அப்புன்னகையைப் பார்த்த பின்னர்தான் மதுவின் ஒட்டு மொத்த குடும்பத்திற்குமே மனதில் ஒருவித நிம்மதியும் பரவியது.
அந்த கிராமத்துச் சூழலில் அதற்கு மேல் இருக்க முடியாத இரட்டையரின் பெற்றோரும் மூத்த மகனிடம் விடைபெற்றுக் கொண்டவர்கள் இளைய மகனோடு கிளம்பி இருக்க, இரவு வரை இருந்து புதுமணத் தம்பதியரை இரவு சடங்கிற்கும் ஆயத்தம் செய்து அவர்களை ஆசீர்வதித்து விட்டே மதுவின் உறவுகளும் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றனர்.
தங்களுக்கே தங்களுக்கான புத்தம் புதிய வீட்டில், தங்கள் வாழ்வைத் தொடங்கும் இனிய இரவிற்கான சூழலில் தனித்து விடப்பட்டனர் சிபிரஞ்சனும் மதுரிமாவும்.
சாராதாவின் கை வண்ணத்தில் காலையில் அணிந்து இருந்த பட்டுப் புடவையை மாற்றி குளித்துவிட்டு அழகான ஷிபான் புடவை ஒன்றில் பூஉடலை மறைத்து இருந்தவள், தலை கொள்ளா மல்லிகைப் பூவும், மெலிதான ஒப்பனையும் செய்து, சாரதா பிளாஸ்கில் ஊற்றி வைத்திருந்த பாலையும் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைய, அங்கோ அலைபேசியில் சுதிரிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தவன் கதவு திறக்கப்படும் சப்தத்தில் மெல்லத் திரும்பிப் பார்த்துவிட்டு மறுமொழி பேசாது கைபேசியை (சுவிட்ச் ஆப்)செயலிழக்கச் செய்து தூர வைத்திருந்தான் சிபிரஞ்சன்.
ஆடவனின் அந்தச் செயலில், அத்துணை நேரம் அவன் கூறிய விஷயங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த சுதிரோ “பாஸ் என்னாச்சு பாஸ்…? எங்க போனீங்க?” என்று அந்தப்புறம் கத்திக் கொண்டிருக்க, இவன் பார்வை மட்டுமல்லாது உடல் பொருள் ஆவி அனைத்துமே எப்பொழுதோ பெண்ணின் வசம் சென்று விட்டு இருந்தது.
அறைக்குள் நுழைந்த கணத்தில் இருந்தே ஆடவனின் பார்வையும் செயலையும் அவதானித்தபடி இருந்தாலும், பெண்ணவளின் தலை மட்டும் குனிந்தவாக்கிலே இருக்க, காலையில் இருந்து நடந்து முடிந்த திருமண நிகழ்வுகளிலும் அடுத்தது என்ன? அதை நாம் எப்படி எதிர்கொள்வது என்ற இனம் விளங்கா கேள்விகளிலும் பெண்ணவளின் உடலிலும் கூட சிறிதான நடுக்கமும் தோன்றிவிட்டு இருந்தது.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று அது தன்னிடம் வைத்திருக்கும் ரகசியத்தை தன் இணையின் துணையோடு அறிந்து கொள்ள விழையும் பெண்ணினத்திற்கே உரிய இயல்பான நடுக்கம் அது.
அவன் தன்னவன், தனக்கே தனக்காகப் பிறந்தவன் என்ற அவன் மீதான நேசம் ஒருபுறம் மலையளவு குவிந்து இருந்தாலும், அவன் தனக்கே தனக்காக மட்டும் தான் என்னை திருமணம் செய்து தன்னவளாக ஆக்கிக் கொண்டானா?’ என்ற இமாலையக் கேள்வி ஒன்றும் அவள் உள்ளத்தின் ஓரம் குடைந்து கொண்டே இருந்ததில், நிமிர்ந்து ஆடவனின் விழிகளைச் சந்திக்கும் திராணி இல்லாது குனிந்தவாக்கிலே கையிலிருந்த பிளாஸ்கை அங்கிருந்த மேசையில் வைத்திருந்தாள்.
பின்னர் என்ன செய்வது என்று புரியாது சில நொடிகள் நின்றவளுக்கு சாரதா கூறிய விடயங்களில் ஒன்று ஞாபகம் வந்திருக்க, அந்த பிளாஸ்கில் இருந்த பாலை டம்ளரில் ஊற்றியவள் அன்னமென நடந்து சென்று அவன் முன்னே நீட்டி, “இந்தாங்க பால்” என்றாள். மெலிதான குரலில்.
அவள் தங்கள் அறைக்குள் நுழைந்து நிமிடங்கள் பல கழிந்தும் இன்னும் தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பாராத பெண்ணவளின் செயலிலும் அவளது வெறுமையான விளிப்பிலும் சற்றே உடல் விரைத்து நிமிர்ந்தவன் அவள் நீட்டிய பாலை வாங்காது கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்.
நிமிடங்கள் சில கரைந்தும் அவன் பாலை வாங்காமலே நின்று இருப்பதைக் கண்டு மெல்ல நிமிர்ந்து கணவனின் முகத்தை ஏறிட்டு நோக்கியவள், “ரஞ்சன்…” என்று அழைக்க…
அதன் பின்னரே விழிகள் ஒளிர அவளை ஏறிட்டு நோக்கியவன், “இவ்ளோ நேரமாடி உன் ரஞ்சனைக் கூப்பிட?” என்று கைகள் இரண்டையும் மார்பில் இருந்து எடுத்து அவளை நோக்கி விரித்தான்.
அவன், “வா…” என்பது போல் கரங்களிரண்டும் விரிக்கவும் அதுவரை இருந்த துணுக்கம் எல்லாம் விலகி பால்டம்ளரை அங்கிருந்த மேசையில் வைத்தவள் ஓடோடிச் சென்று அவன் மார்புக்குள் புகுந்து கொள்ள, காற்றுக்கூடப் புகாதவாறு அவளை இறுக அணைத்துக் கொண்டவனோ, “நமக்குள்ள எதுக்கு அம்மு இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்?” என்று பால்டம்ளரைக் கண்காட்டியவன்,
“என்னவாம் இந்த முகத்துல? என்ன குழப்பம் என் மதுவோட மனசுல?” என்று அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தினான்.
ஆடவனின் அந்த அணைப்பினிலே அவள் மனக்குழப்பத்தில் பாதி கரைந்து காணாமல் போயிருக்க,
தன் முகத்தைப் பார்த்தே மனதைப் புரியும் அந்த நேசக்காரனின் அன்பில் அவள் விழிகளில் இருந்து நீரும் துளிர்த்தது.
பெண்ணவளின் விழிகளில் நீர்ப் படலத்தைப் பார்க்கவும், “மதுமா என்னடி? என்னாச்சு?” என்று சற்றே பதறி அங்கிருந்த கட்டிலில் அவளை அமர வைத்தவன், “என்னடி அம்மு? என்ன குழப்பம் உனக்கு?” என்று மென்மையாக வினவினான்.
ஆடவனின் அந்தக்குரலிலே அவள் கேட்கப்போகும் கேள்வி பொருளற்றது என்று தோன்றத் தொடங்கி இருந்தாலும் அன்று பிரச்சனை நடந்த அன்று அவளை அவன் நேசிக்கவே இல்லை என்று கூறிவிட்டு விமான நிலையம் வரை சென்று இருந்தவனின் வார்த்தையும் செயலும் பெண்ணின் மனதைக் குடைந்து கொண்டே இருக்க, “அன்னிக்கு அன்னிக்கு பாட்டி வந்து உங்களை கூட்டிட்டு வராட்டி உண்மையிலே என்ன விட்டுப் போயிருப்பீங்களா ரஞ்சன்? என்மேல என்மேல உங்களுக்கு தனிப்பட்டு எந்த ஆசையும் இல்லியா? நான் நான் நான்தான் உங்கமேல ஆசை வச்சி உங்களை எல்லார் முன்னயும் குற்றவாளி ஆக்கிட்டேனா? என்னால ஸ்ரீயோட சேர்த்து உங்களுக்கும் எவ்ளோ கஷ்டம்ல ரஞ்சன்?” என்று தொண்டை அடைக்கக் கேட்டவளின் கன்னங்கள் இரண்டையும் சட்டென்று தன் கரத்தில் ஏந்தியவன், “ம்ஹும் அம்மு… எனக்கு மட்டுமில்ல உன்னால எப்பவும் யாருக்குமே கஷ்டம் கொடுக்க முடியாதுடி. நீ என் தேவதைடி. இனிமேல் இப்டிலாம் பேசாத” என்று அவள் பிறை நெற்றியின் மையத்தில் தன் இதழ்களையும் ஒற்றி எடுத்தான்.
மரத்தில் இருந்து உதிரும் இலையானது எத்துணை மிருதுவாக பூமியை முத்தமிட்டுத் தழுவுமோ அதுபோல மென்மையாக இதழ் ஒற்றல் செய்தவனின் அந்த முத்தத்தில் அவள் விழிகளும் கிறக்கமாக மூடிவிட்டுத் திறக்க அவள் விழிகளையே ஆழ்ந்து பார்த்தவன், “ஸ்ரீ விஷயத்தில நானும்தான் அம்மு உனக்கு ஈக்குவலா தப்பு பண்ணிருக்கேன். நம்ம ரெண்டு பேரோட இந்தத் தப்பால ஸ்ரீக்கு இப்போதைக்கு கஷ்டமா இருந்தாலும் பின்னாடி அவன் தேறிக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன்னா அவன் என்னைவிட நல்லவன். ஆனா நீ அன்னிக்கு சொன்ன போல என்ன மனசில நினைச்சுட்டு அவனை நீ மேரேஜ் பண்ணிருக்கன்னு பின்னாடி எப்போவாவது அவனுக்குத் தெரிய வந்தா அவன் உயிரையே வெறுத்துப் போயிருப்பான் அம்மு. அப்டி எதுவும் நடக்காம நம்ம மூனு பேர் லைப்பையும் சேவ் பண்ணினதுக்கு உனக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும். ஆனா அன்னிக்கு ஸ்ரீ முன்ன நீ நின்ன நிலைமையில எனக்கு எனக்கு வேற வழியே தெரியாம தான் நான் உன்னைவிட்டுப் போனேன். நீ தப்பே பண்ணவளா நின்ன போதும், ஸ்ரீ என் தம்பியாவே இருந்தாலும் அவன் உன்ன பேசுனது எதையும் என்னால கேட்டுட்டு அங்க நிக்க முடியலடி.” என்று குரல் கரகரக்கக் கூறியவன், “அன்னிக்கு பாட்டி ஏர்போர்ட் வந்து என்னை அழைச்சிட்டு வராட்டி கண்டிப்பா நான் மும்பைக்கு போயிருப்பேன்டி.” என்று அவள் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தவன், “ஆனா… ஃபியூ மந்த்ஸ் முன்ன உன்னோட வந்த முழுமையான சிபிரஞ்சனா நான் ரிட்டர்ன் ஆகிருக்க மாட்டேன். இந்த மதுவோட ரஞ்சனா என் இதயம் மனசு உடல் பொருள் ஆவி எல்லாம் உன் காலடியில விட்டுட்டு வெறும் கூடு மட்டும் தான் அம்மு மும்பை மண்ணுல கால் பதிச்சிருக்கும். அன்னிக்கு பாட்டி சொன்னபோல நீயும் உன்னோட நேசமும் என் கையை விட்டுப் போயிருந்தா நான் நான் செத்த பொணத்துக்கு சமமா தான் டி வாழ்ந்துட்டு இருந்துருப்பேன்.” என்று அவன் கண்கள் கலங்க கூறி முடிக்க, “ரஞ்சன்… லவ் யூ சோ மச் ரஞ்சன்” என்ற கேவலோடு அவன் அதரங்களை தன் இதழ்கள் கொண்டு மூடி இருந்தாள் மதுரிமா.