தூங்காநகரம் என்ற காரணப் பெயர் கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாடிப்பட்டி வட்டத்திற்குள் மதுரை விமான நிலையத்தில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் அமையப் பெற்றிருந்தது மதுரிமாவின் சொந்த ஊரான அலங்காநல்லூர் கிராமம்.
பச்சைப் பசும் வயல்வெளிகள், வாசம் வீசும் பூமரங்கள், அவைகளை செழித்துக் கொழிக்க வைக்கும் நீர்தடாகங்கள் என்று பார்ப்பதற்கு கிராமத்தின் மண்மணம் மாறாது அழகுற காட்சியளித்தாலும், மனிதனின் நாகரீக வளர்ச்சியாலும், அவனது தொழில் தொடர்புகளுக்கு ஏற்ற வகையிலும் பலவித கட்டிடங்களும் எழுப்பப்பட்டு தற்சமயம் வளர்ந்து வரும் கிராமம் என்ற வரையரைக்குள் சென்று இருந்த அலங்காநல்லூரை நோக்கித் தான் சென்று கொண்டிருந்தது அந்த கருமை வண்ண லம்போர்கினி அவென்டேட்டர் வாகனம். ஆம் சிபிரஞ்சனுடைய லம்போ தான்.
தமிழ்நாட்டில் புதிதாக கிளை ஆரம்பிக்க இருப்பதால், வாகனத்தின் தேவை உணர்ந்து அவனுக்கு மிகவும் பிடித்தமான அம்மகிழுந்தை மதுரை நகரிலிருந்து இணையவழி (ஆன்லைன் சாப்பிங்) மூலமாக புதிதாகவே வாங்கி விட்டிருந்தான் சிபிரஞ்சன்.
காதலித்தவனுக்கு பதிலாய் அவனது சகோதரனை அழைத்து வந்ததாலோ என்னவோ அவர்களை அழைத்துச் செல்ல வேண்டி விமான நிலையம் வருவதாய் அடம் பிடித்த வீட்டினரை தாங்களே வந்து விடுவதாகக் கூறி மதுரிமா தடுத்து இருக்க, மதுரை விமான நிலையத்தில் சோதனைகள் அனைத்தும் முடிந்து அவர்கள் வெளிவரும் பொழுதே அந்த புதிய லம்போ அவர்களுக்காகக் காத்து இருந்தது.
கடந்த ஐந்து மணி நேரப் பயணம் போல் இப்பொழுதும் தேவைக்கு மட்டுமே பேசிக் கொண்டவர்கள், வாகனத் திறப்போடு காத்திருந்த வாகனத்தின் விற்பனைப் பணியாளருக்கு ஒரு நன்றி கூறி அனுப்பிவிட்டு அமைதியாகவே அம்மகிழுந்தில் ஏறி அமரப்போக…
அவர்களோடு வந்திருந்த பி ஏ சுதிரோ, “பாஸ் நான் டிரைவ் பண்ணவா?” என்று கேட்டான்.
அவனுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே இருந்தாலும் சிபியிடம் மட்டும் அவனால் தன் விசுவாசத்தைக் காட்டாது இருக்க முடியவில்லை போல.
சுதிரின் கேள்விக்கு வழக்கம் போல், “நோ சுதிர். ஐ டிரைவ் மைசெல்ஃப்.” என்று வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், “கூகுள் மேப்ல உங்க வில்லேஜோட லொக்கேசன் போடு ரீமா.” என்று மட்டும் கூறி பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவளிடம் கைபேசியை நீட்டியவன் அவள் திருப்பிக் கொடுத்த கைபேசி காண்பித்த அலங்காநல்லூர் சாலையில் தன் லம்போவை இயக்கத் தொடங்கினான்.
அவன் சகோதரனுக்காகவும், அவள் காதலனுக்காகவும் மனமே இல்லாது இந்தப் பயணத்தில் கை கோர்த்து இருந்தாலும், ‘தாங்கள் இதற்கு ஒப்புக் கொண்டது சரிதானா? முறைதானா? தாங்கள் செய்யப் போகும் காரியத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பாசம் கொண்ட உறவுகளை ஏமாற்ற எண்ணுவது பெரிய தவறு அல்லவா?’ என்ற குழப்பத்திலும் கலக்கத்திலும் இருந்த இருவரையும் கண்ணோடு மனதையும் நிறைக்கும் அலங்காநல்லூரின் இயற்கை அழகினால் கூட திசை திருப்ப இயலாது போக, இனம் புரியா வெறுமை ஒன்றே அம்மகிழுந்தில் எஞ்சி இருந்தது.
இயக்கு விசையை சற்று அழுத்தி மிதித்தால் சீறிப்பாயும் வாகனம் அதை, மும்பையின் சாலைகளில் பாயும் புலி போல் செலுத்திச் செல்லும் சிபி, அலங்காநல்லூரின் குண்டும் குழியுமான சாலையில் சற்று மிதமான வேகத்திலே செலுத்திக் கொண்டிருக்க, வழக்கமாக மதுரை மண்ணில் கால் பதித்து விட்டாலே தரையில் கால்பாவாது குதூகலித்து மகிழ்பவளும் இன்று மகிழுந்துக் கண்ணாடியையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மதுரிமா.
அலங்காநல்லூரை நெருங்குவதற்கு இன்னும் இரண்டு வளைவுகளே இருப்பதாக அவள் போட்டுக் கொடுத்த கூகுள் மேப் வழி காட்டிக் கொண்டிருக்க, கடந்த இரண்டு மணி நேரமாக ஒரே இடத்தையே வெறித்தபடி ஏதோ சிந்தனையில் அமர்ந்து இருந்தவளை கண்ணாடியூடே கவனித்து வந்தவன் லேசாக தொண்டையைச் செருமி, “ரீமா…” என்று அவள் சிந்தையைக் கலைத்திருந்தான்.
அதில், “ஹான்… சார்.” என்று அவன் புறம் திரும்பியவள் அவனைக் கேள்வியாக நோக்க…
அதன்பின்னர் தான் பாதையைக் கவனித்து தங்களின் ஊர் வந்து விட்டதையும் உணர்ந்தவள்,
“சாரி சார். ஏதோ யோசனையில கவனிக்கல.” என்றுவிட்டு தங்கள் வீடு செல்வதற்கான பாதையையும் கூற…
அவள் கூறிய வழியில் எல்லாம் சற்று சிரமத்துடனே அந்த லம்போவை ஒடித்து வளைத்து செலுத்தி வந்தவன், அவள் கை காட்டிய பெரிய வீட்டிற்கு இரண்டு வீடுகள் முன்னவே தன் வாகனத்தை நிறுத்தி சுதிரைத் திரும்பிப் பார்த்தான்.
அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட சுதிர், நொடியும் தாமதியாது மகிழுந்தை விட்டு இறங்கி சற்று தள்ளிப் போய் நின்று கொள்ள, “ஸ்ரீக்கு பதிலா நான் உன்னோட வர்றது உனக்குப் பிடிக்கலைன்னா இப்போக்கூட சொல்லிடு ரீமா, நாம வேற ஏதாவது பிளான் பண்ணலாம்?.” என்று நன்றாகத் திரும்பி பெண்ணவளின் முகத்தை நேருக்கு நேராய் பார்த்தான் சிபிரஞ்சன்.
அக்கூற்றில் அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து ஏறிட்டவளுக்கு அந்நேரம் அம்முகத்தில் தெரிந்த பெண்ணவளுக்கான அனுசரணையில் அவளையும் அறியாமல் அத்தனை நேரம் இருந்த கலக்கம் சிறிதே மட்டுப்பட்டது போல் இருக்க…
“இல்லை சிபி சார். பிடிக்காமலாம் இல்லை. ஆனா இப்போ நாம செய்யப்போற காரியம் சரிதானான்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு.” என்றவள், “ஆனா ஸ்ரீ இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறப்போ நமக்கு இதவிட்டா வேற ஆப்ச்சனும் இல்லையே.” என்றாள் கண்ணை எட்டாத முறுவலோடு.
பெண்ணவளின் அந்த முறுவலுக்குப் பின்னிருக்கும் ஸ்ரீரஞ்சனின் மீதான அதிருப்தியை உணர்ந்தே இருந்தவன் அவனையும் அறியாமல் அவளிடம் ஒரு சிநேக புன்னகையை உதிர்த்து, “டோன்ட் வொர்ரி ரீமா. ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் சிச்சுவேஷன். ஐ வில் பினிஷ் தட்… ஒர்க்… அஸ்… சூன்… அஸ் பாஸ்ஸிபில் அண்ட் லீவ்.” என்றவன் மீண்டும் தன் லம்போவை இயக்கி, சுதிரும் ஏறிக் கொண்ட பின்னர் அங்கிருந்த பெரிய வீட்டின் வாயிற்கதவிற்குள் செலுத்தி வந்து அவர்கள் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தான்.
அந்த மிகப்பெரிய கிராமத்து வீட்டின் வாயிற்கேட்டிற்குள் ஒரு புதிய வாகனம் வந்து நின்றதைப் பார்த்ததுமே, அவர்களுக்காகவே முற்றத்தில் காத்து இருந்த சொக்கலிங்கமோ வீட்டிற்குள் திரும்பி, “ஹேய் பட்டுமா. பிள்ளைக வந்துட்டாகமா.” என்று கூவிவிட்டு குடுகுடுவென்று அவர்களை நோக்கி ஓடி வந்திருந்தார். தான் குடு குடு கிழவன் என்பதையும் மறந்து.
அதற்குள் மகிழுந்தின் கதவைத் திறந்து இறங்கியிருந்த மதுரிமாவிற்கும் சிறு பிள்ளை போல் ஓடி வந்த தன் தாத்தாவைப் பார்த்ததும் சிபி உட்பட மற்றவை எல்லாம் பின்னுக்குச் சென்றிருக்க, “கடாமீசை…” என்று துள்ளிக் குதித்து ஓடியவள் அந்த முதிய ஆணின் கைகளுக்குள் அடைக்கலமாகினாள்.
அவரும், “எப்டி இருக்க மதுக்கண்ணு? இந்தக் கிழவனைப் பாக்க இப்போ தான் வரத் தோணுச்சா உனக்கு?” என்று பேத்தியை பாசத்தோடு அணைத்துக் கொண்டார்.
அவர்கள் போட்ட சப்தத்திலே வீட்டினுள் இருந்த மற்ற உறவுகளும் ஓடி வந்து அவளைச் சூழ்ந்து கொள்ள, “சித்தப்பா, சித்தி, மனோ, மகி எல்லாரும் எப்டி இருக்கீக?” என்று அவளும் அவர்களோடு ஐக்கியமாகி மகிழ… “வந்துட்டீகளா மதுக்குட்டி.? பயணம்லாம் சுகமா இருந்ததா??” என்றபடி பேத்தியை நெருங்கி இருந்தார் பட்டம்மாள் பாட்டி.
எழுபது வயதைத் தாண்டி இருந்தாலும் நடையில் சிறு தளர்வு கூட இல்லாது ஒருவித கம்பீரத்தோடு வந்து நின்ற அந்த முதிய பெண்ணைப் பார்த்து,
“பட்டு பேபி…” என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்ட இளையவள், “டிராவலிங்க்லாம் சூப்பரா இருந்துச்சு பட்டு பேபி. நீங்க எப்டி இருக்கீக? உங்க கடாமீசை உங்களை நல்லா பாத்துக்கிறாரா?” என்று அவரின் முதிர்ந்த கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் மதுரிமா.
பேத்தியின் அந்தப் பேச்சிலும் செயலிலும், “பெரியவுகள மாரியாதையா பேசுன்னா கேக்கறதே இல்ல மதுக்குட்டி…?” என்றவர், “பம்பாய்ல நல்லா சாப்பிடுறியா? இல்ல டையட்டு டூயட்டுன்னு பச்சைக் காயை வெட்டி வெட்டி தான் உண்டியா? இப்டி எலும்பு தோளுமா வந்து நிக்கிறவ?” என்று பேத்தியின் செதுக்கி வைத்த சிலை போன்ற உடல்வாகைப் பார்த்து குறைப்பட்டுச் சொல்ல…
அவளோ, “நான் எலும்பு தோளுமா வந்து நிக்கிறது இருக்கட்டும். நீங்க எப்டி பட்டு பேபி இன்னமும் பேபி போலவே கியூட்டா இருக்கீக. உங்க இளமையின் ரகசியம் வழக்கம் போல உங்க மீசைக்காரரு தானா?” என்று அருகில் இருந்த தாத்தாவைக் காட்டி கண்ணடித்துக் கேட்டாள் பேத்தி.
அதில் ஏற்கனவே முறுக்கேறி இருந்த மீசையை இன்னும் கொஞ்சம் முறுக்கி விட்ட சொக்கலிங்கமோ, “பின்ன இல்லியா மதுப்பொண்ணு. நான் இருக்கவர என் பட்டு எப்பவும் பட்டு போலத்தான் ஜொலிப்பா.” என்று பார்வையாலே மணவாட்டியைப் பருக…
அதைக்கேட்டு, “ஹோ ஹோ… நீங்க காதல் மன்னன் தான் கடாமீசை.” என்று கைத்தட்டிச் சிரித்த பேத்தியின் செயலிலும் கணவனின் பேச்சிலும் அந்த வயதிலும் சட்டென்று முகம் சிவந்த பேரிளம் பெண்ணோ, “தாத்தாவும் பேத்தியும் வந்ததும் ஆரம்பிச்சுட்டிகளா?” என்று செல்லமாக சலித்துக் கொண்டவர், “இன்னும் பச்சப்புள்ள போலவே இருக்க மதுக்குட்டி. பாம்பேக்கு போய் வாயும் அதிகமாகிப் போச்சு.” என்று வழக்கமான தோரணைக் குரலிலே பேத்தியை அதட்டத் தொடங்கியவரின் குரல் அவரையும் அறியாது நெகிழ்வாகவே வெளிப்பட்டது.
வீட்டிலும் சரி வெளியிலும் சரி அனைவரையும் அட்டன்சனில் நிற்க வைக்கும் பட்டம்மாளின் கணீர் குரல், மதுவிடம் மட்டும் இத்துணை கனிவாக மாறிப் போகும் மாயத்தை உணர்ந்தவர்கள் போல் அவர்களையே வாஞ்சையாகப் பார்த்த, மதுவின் சித்தப்பாவும் சித்தியும், “நல்லா இருக்கியா பாப்பா? வேலை எல்லாம் எப்டிப் போகுது?” என்று விசாரிப்பில் இறங்கி இருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, “எப்டி இருக்க மதுக்கா?” என்று அளவளாவிய அவள் தங்கையும், “எப்பவும் ரீல்ஸ் வர்ற மேல்ஸ் வாய்ஸ் போல மனோரமா, மனோரமான்னு ஏலம் போடுற கிழவியோட வாய்ஸ் உன்ன பாத்ததும் மட்டும் எப்டிக்கா பூனக்குட்டி மாதிரி பம்முது?” என்று மதுவிடமே கேட்டு வைத்தவளை, “மனோ… பாட்டிய அப்டிலாம் சொல்லாதடி” என்று மதுரிமா செல்லமாக முறைத்தவள் அவளிடம் வீட்டு நிலவரத்தையும் விசாரித்துக் கொண்டாள்.
அவர்கள் சாம்பாசனையைக் கேட்டபடியே, “எப்டி இருக்கீங்க மதுக்கா? அரபிக் ஓசியன் எப்டி இருக்கு?” என்று பெரியவளின் கையை பற்றிக் கொண்ட மகிழனும், “நம்ம பாட்டி பூனையா மாறுதோ, இல்ல பானையா மாறுதோ… ஆனா மதுக்கா இருக்கவர நம்ம கண்ணுல விரலை விட்டு ஆட்டுற பூதக் கண்ணாடியா மட்டும் மாறாதுன்னு மட்டும் நல்லா தெரியும். அதனால லெட்ஸ் என்ஜாய்” என்று சகோதரிகள் இருவரையும் பார்த்து கண் சிமிட்டிக் கூறியவன் அப்பொழுது தான் அங்கிருந்த கருமை வண்ண லம்போவையும், அதில் சாய்ந்து நின்று தங்களையே பார்த்து இருந்த சிபிரஞ்சனையும் கண்டு விழிகளை விரித்தான்.
கால்கள் இரண்டையும் எக்ஸ் போன்ற தோற்றத்தில் ஒன்று மேல் ஒன்றை வைத்து, கைகள் இரண்டும் மார்புக்கு குறுக்காய் கட்டியவாறு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவர்களையே நோக்கியிருந்தவனைப் பார்த்தவுடன், “இவக தான் மும்பை அத்தானா மதுக்கா? செம்ம ஹான்சமா இருக்காக.” என்று பெண்களின் சிந்தையை களைத்திருந்தான் மகிழன்.
அதில் பேச்சை நிறுத்தி அவன் கை காட்டிய திசையில் பார்த்த மனோரமாவும், “அடி ஆத்தி. நீ போன்ல சொன்னப்ப கூட நான் நம்பல மதுக்கா. அத்தான் சாருக்கானை விட அழகாதான் இருக்காக.” என்று வாயில் விரல் வைத்துக் கொள்ள…
இளையவர்களின் அலப்பறையில் தான் சிபியின் ஞாபகமே வந்து அவன் புறம் திரும்பியவள்,
‘அச்சோ சிபிசாரை எப்டி மறந்தேன்?’ என்று காதோரம் தொங்கிய குழல் கற்றையை இழுத்து வாயில் வைத்து கடித்துக் கொண்டே நொடியும் தாமதியாது அனைவரிடமிருந்தும் விலகி ஓடியவள்,
“சாரி… சாரி சிபி சார்… ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் பாத்துத்துல நீங்க வந்ததையே மறந்துட்டேன்.” என்று மன்னிப்பு வேண்டும் பாவனையில் கூறினாள்.
அதற்குள் அவளைத் தொடர்ந்து அவனை நெருங்கிய உறவுகளின் பார்வையும் கடலை மிட்டாயை மொய்க்கும் எறும்பு போல சிபிரஞ்சனை ஆர்வத்தோடு மொய்க்க, மதுரிமாவைப் போலவே விருந்தோம்பலை மறந்து விட்டோமே என்று லேசாக அசடு வழிந்து சிரித்தவர், “வாங்க வாங்க பேரரே… பல மாசம் கடந்து மதுக்குட்டிய நேர்ல பாக்குறோம். அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதுல உங்களை கவனிக்கல.” என்று சிபிரஞ்சனின் கையைப் பற்றி வாய்நிறைய வரவேற்றார் சொக்கலிங்கம்.
அவரைத் தொடர்ந்து மதுவின் சித்தப்பாவும் சித்தியும் கூட, “வாங்க தம்பி. உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம். நல்லா இருக்கீகளா?. பயணத்தில் எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று நொடியில் நெருங்கிய சொந்தம் போல் அவனிடம் உரிமையோடு அளவளாவினர்.
அனைவருக்கும் பொதுவாக “இட்ஸ் ஓகே சார். ஐம் ஃபைன்.” என்று சொல்லிக்கொண்டவன், தவறு செய்தவளாய் தன் முகம் பார்த்து நின்ற பெண்ணவளிடமும், ‘நோ பிராப்லம் ரீமா’ என்பது போல் விழிகளை மூடித் திறக்க… அதன் பின்னரே தன் வாயில் கடித்துக் கொண்டிருந்த குழல் கற்றைகளுக்கு விடுதலை கொடுத்தாள் பெண்.
அதுவரை அவனையே பார்த்திருந்த மகிழனுக்கோ ஆடவனின் தோற்றத்தோடு அவனது பேச்சும் பாவனையும் இன்னுமே பிடித்து விட,
“ஹாய் அத்தான். ஐம் மகிழன். உங்க உட்பியோட பிரதர்.” என்று அவன் முன்னே கையை நீட்டியவனை அவனுக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போக, அன்னிச்சையாக அவன் கரங்களைப் பற்றிக் குலுக்கியவனுக்கு அவனது உட்பி என்ற வார்த்தையில் அவனையும் அறியாது மதுரிமாவின் முகத்தைச் சூழ்ந்தன ஆடவனின் விழிகள்.
அவனையே பார்த்து இருந்தவளுக்கும் தம்பியின் கூற்றும், அதைத் தொடர்ந்த சிபியின் பார்வையும் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கத்தை உள்ளம் எங்கும் வியாபிக்கச் செய்ய, அதைப் பரவ விடாது மகிழனைத் தொடர்ந்த மனோவும் சற்றே மதுவின் பின்னே நின்றவாறு, “வணக்கம் அத்தான்.” என்று கையை கூப்பி அவனை வரவேற்க…
அதற்குள், “ஹேய் மனோரமா… இன்னும் மதுமாக்கு பூ கூட வைக்கல. அதுக்குள்ள என்ன புள்ள அத்தான் பொத்தான்னுட்டு. எல்லாரும் உள்ள போங்க.” என்று அதட்டியவர், “மொதோ உங்கள சொல்லணும். பேரராம் பேரர்.” என்று கணவரையும் முறைத்து விட்டு, “மதுக்குட்டி. அந்த தம்பிய கூட்டிட்டு உள்ள வா. எவ்ளோ நேரம் வெளிய நின்னே பேசுவீக” என்று கூறி அவர் பாட்டில் உள்ளே சென்று விட்டார் பட்டம்மாள் பாட்டி. தமிழ்நாட்டின் வரவேற்பு பண்பையும் மறந்து.
அவர் போட்ட அதட்டலிலே அவரது மகன் குடும்பம் மொத்தம் வீட்டிற்குள் ஓடிவிட, பட்டம்மாளின் அந்தச் செயல் அவரது கணவருக்கும் பேத்திக்குமே அதிருப்தியைக் கொடுத்தது.
அதுவரை அமைதியாக நின்று அனைத்தும் பார்த்திருந்த சுதிருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாது போக, “என்ன பாஸ் இது. இந்த பாட்டி உங்களை உள்ள வாங்கன்னு கூட கூப்பிடாம இப்டி பேசிட்டு போறாங்க. நீங்க அவசியம் இந்த வீட்டுக்குள்ள போய் தான் ஆகணுமா பாஸ்?” என்றான் தன் வழக்கமான விசுவாசத்தோடு.
அத்தனை பெரும் நகரமான மும்பையிலே எத்துணை பெரிய தொழில் அதிபன் அவன், எவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி எத்துணை ஆயிரம் தொழிலாளர்களுக்கு படி அளப்பவன். பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் பற்பல அதிகாரிகளைக் கூட தன் ஒற்றைப் பார்வையிலே ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டவனை பட்டம்மாள் வா என்று கூட அழைக்காததை அவனால் சிறிதும் ஏற்க இயலவில்லை.
பாட்டியின் செயலிலும் சுதிரின் வார்த்தையிலும், ‘தன்னால் தானே எல்லாம்’ என்று மதுரிமாவின் விழிகளும் சிபியை மருகலாகப் பார்த்திருக்க, பேத்தியின் அந்த பார்வை தாளாது மீண்டும் சிபியின் கையைப் பற்றிய சொக்கலிங்கம், “பட்டுமா… கொஞ்சம் பட்டு பட்டுனு பேசுற சுபாவம் தம்பி. அத்தோட இந்த காதல் விவகாரம் எல்லாம் அவளுக்கு சுத்தமா பிடிக்காது. அதான் கொஞ்சம் கோவமா இருக்கா. நீங்க தப்பா எடுத்துக்காம உள்ள வாங்க. இனிமேல் இது உங்களுக்கும் சொந்தமான வீடுதான்.” என்று நெகிழ்ந்த குரலில் கூறினார்.
தனக்கு இருபுறமும் நின்ற சுதிரையும் தாத்தாவையும் ஏறிட்டு நோக்கி, “நான் யாரோட வரவேற்பையும் எதிர்பார்த்து இங்க வரல.” என்றவனின் பார்வை அங்கிருந்த மதுரிமாவில் அழுத்தமாகப் படிய, ஒரு நெடுமூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “கம் லெட்ஸ் கோ… சுதிர்.” என்று மட்டும் கூறி அனைவரையும் முந்திக் கொண்டு விறுவிறுவென்று வீட்டினுள்ளும் சென்று விட்டான் சிபிரஞ்சன்.
அவ்வளவு நேரமும் எங்கே தன் பாட்டியின் செயலை அவமதிப்பாக எண்ணி வீட்டிற்குள் வராது சென்று விடுவானோ அவன் என்ற பரிதவிப்பில் இருந்தவளுக்கு அவன் வீட்டினுள் செல்லவும் தான் மூச்சுக் காற்றே சீராக வெளிவர, “தாத்தா…” என்று முதியவரின் கரத்தை பற்றிக் கொண்டவளும் அவரோடு இணைந்தே தன் வீட்டிற்குள் ஓடினாள்.
அங்கும் அவர்களின் பெரிய வீட்டின் நடுக்கூடத்தில் அவனை உட்காரக் கூடச் சொல்லாது அவனுக்கு நேர் எதிராக தானும் நின்றிருந்த பட்டம்மாள், “ம்ம்ம்… வாங்க… நீங்க தான் எங்க மதுக்குட்டி மனசுல காதல் கீதல்னு கண்ட நினைப்பையும் உண்டு பண்ணவரோ?” என்றார் நக்கலும் சினமும் கலந்த குரலில்.
முதிய பெண்ணின் அக்கேள்வியில் அவனையும் மீறிக் கொண்டு புருவங்கள் நெறிந்தாலும், சிறிதான புன்னகையே அவருக்கு பதிலாகக் கொடுத்தவன், “காதல்ங்கறது ஒரு அழகான உணர்வுங்க. அது யாரும் யார்மேலையும் வல்லுக்கட்டாயமாலாம் உண்டு பண்ண முடியாதுங்க.” என்றான் மிக மிக நிதானமாக.
அதைக்கேட்டிருந்த மற்றவர்கள் எல்லாம் அவனை மெச்சுதலாகப் பார்த்திருக்க, “ம்ம்ம் பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா வேலை லட்சியம்ன்னு அவ்ளோ தொலைவு வந்த பொண்ண காதல்ங்கற பேர்ல ஆசை காட்டி மயக்கிருக்க செயல் ஒன்னும் மெச்சும்படி இல்லியே” என்றார் பட்டம்மாள் அப்பொழுதும் விடாது.
அவரையே பார்த்திருந்தவனின் கை முஷ்டிகள் சினத்தில் இறுக…
தான் காதலித்தவன் சொகுசாக மும்பையில் இருக்க, தங்களுக்கு உதவி செய்ய வந்தவனை குற்றவாளி போல் நிறுத்தியிருந்த பாட்டியின் பேச்சில், “பாட்டி…” என்று அவர் கரத்தைப் பற்றிய மதுரிமாவின் விழிகளோ மென்மேலும் தவிப்பைக் காட்டியது.
பெண்ணவளின் அத்தவிப்பில் அவனது இறுகிய கரங்கள் தன்னாலே தளர, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னைக் கட்டுப்படுத்தியவன், “உங்க வீட்டுப் பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஆசை காட்டி மயக்கி கைவிட்டுப் போக நினைச்சிருந்தா என் செயல் மெச்சக்கூடியதா இல்லைன்னு நீங்க தாராளமா சொல்லலாம். ஆனா எங்கையோ இருக்க மும்பைல இருந்து இவ்ளோ தூரம் உங்க பொண்ணைக் கேட்டு வந்து இப்டி உங்க முன்ன நின்னு பொறுமையா பேசிட்டு இருக்க என்னோட செயல்ல என்ன தப்ப கண்டுபிடிச்சீங்க?” என்று பொறுமை என்ற வார்த்தையில் சற்றே அழுத்தம் கொடுத்து கேட்டவனின் கூற்றில், பட பட பட்டம்மாளே ஒரு கணம் திகைத்து விழிக்க…
“நீ மும்பைல இருந்து பொண்ணு கேட்டு வந்தா ‘இந்தா பங்காளி பொண்ணுனு’ உடனே உனக்கு தூக்கிக் கொடுத்துற நாங்க என்ன சொம்பைகளாடா?” என்ற உரத்த குரலில் கேட்டபடி, சிபிரஞ்சனை அடித்து வீழ்த்தும் வெறியோடு அவனை நோக்கி விரைந்து வந்தான் வீரா என்கிற வீரேந்திரன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.