அதன் பின்னரே அவளது பார்வைக்கான அர்த்தத்தைக் கண்டு கொண்டவனின் விழிகள் நொடி நேரத்திற்கும் குறைவான மின்னலை வெளியிட, சட்டென்று பின்னங்கழுத்தை வருடத் தொடங்கியவன், “ஹேய் மது. நான் ஆல்ரெடி தலையை துவட்டிட்டேன்.” என்று சொன்னாலும், பெண்ணவளின் செயலில் வெளிப்பட்ட அக்கறையை புறம் தள்ள இயலாது அவள் கரத்திலிருந்த துவாலையை தன் கரத்திற்கு இடம் பெயர்த்து இருந்தான் சிபிரஞ்சன்.
அவன் துவாலையை வாங்கியப் பின்னும் கூட அவள் பார்வை இன்னும் அவன் முகத்திலே நிலைத்திருக்க, அப்பார்வைக்கான அர்த்தத்தையும் சரியாகவே உணர்ந்து கொண்டவன் கரத்தில் இருந்த துவாலையை இப்பொழுது தலைக்குக் கொண்டு சென்று, அவன் சிகையில் எஞ்சியிருந்த நீர்த்துளிகளையும் மிச்சமின்றி துடைத்து இருந்தான்.
அப்படி அவனைச் செய்ய வைத்திருந்தது பெண்ணவளின் பார்வையும், அப்பார்வையில் இருந்த ஆடவன் மீதான அக்கறையும்.
இதுவரை அவனைப் பெற்ற அன்னையிடமிருந்து கூட இப்படி ஒரு அக்கறையை அனுபவித்து இராதவனுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நெஞ்சினோரம் துளிர்க்க, “தாங்க்ஸ் மது.” என்று கன்னம் சுருங்க ஒரு புன்னகையை உதிர்த்துக் கொண்டவன் துவாலையை மீண்டும் அவளிடம் கொடுக்கவும்…
“காலை நாஸ்ட்டா ரெடி ஆகிடுச்சு எல்லாரும் சாப்பிட வாங்க.” என்று மனோரமா அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது.
தங்கையின் சப்தம் தங்களை சமீபித்த பின்னேதான் அவனில் நின்றும் பார்வையை விலக்கிக் கொண்டவள், “வாங்க ரஞ்சன் சார். சாப்பிட போலாம்.” என்று அவனை உள்ளே அழைத்துச் செல்ல…
ஓடி வந்து தமக்கையின் கையைப் பற்றிக் கொண்ட மனோரமா, “அவர் தலையை துவட்டாம வர்றது என்ன. நீ அவருக்கு உன் துண்டையே கொடுக்குறது என்ன. அத்தான் கூட காலையிலே செம்ம ரொமான்ஸ் போல.” என்று அவள் காதோரம் கூறியவள், “ஏக்கா என்னிக்காச்சும் ஒருநாள் தப்பித் தவறி உன்னோட பொருளை நான் தொட்டுட்டா ஒருத்தரோட பொருளை இன்னொருத்தர் யூஸ் பண்ணக்கூடாதுன்னு என்கிட்ட எப்டி சண்டைக்கு வருவ. அத்தானுக்கு மட்டும் அந்த ரூல்ஸ்லாம் கிடையாதோ? ஓ… இதுதான் காதலோ?” என்று கழுத்தை வெட்டி நொடித்துக் கொண்ட மனோவின் செயலில் தான், சற்று முன்னர் தான் உபயோகித்த தன் துவாலையை அவன் தலை துவட்டக் கொடுத்தது அவளுக்கு சிந்தையிலே பதிந்தது.
அதில், “கடவுளே என்ன காரியம் செய்து வைத்திருக்கிறேன். காதலித்தவனின் உருவில், அவன் இடத்தில் தற்பொழுது இவன் இருந்தாலும் என்னைப் பொறுத்த வரை அந்நிய ஆடவன்தானே இவன். இவனிடம் எப்படி எந்த தயக்கமும் இல்லாது என்னால் உரிமையோடு பழக முடிகிறது.’ என்று ஏதேதோ சிந்தித்தவளை, “என்னக்கா அதுக்குள்ள அத்தான்கூட டூயட் ஆட போய்ட்டியா? இனி இந்த துண்டை துவைக்காம வாசம் பிடிச்சிக்கிட்டே திரியப்போறியா? நான் எத்தனை சீரியல்ல பாத்துருப்பேன்.” என்று மென்மேலும் சீண்டிக் கொண்டே வந்தாள் மனோரமா.
ஏனோ மனோவின் அந்தப் பேச்சு அவளின் உள்ளம் முழுவதும் ஒருவித திகிலைப் பரவச் செய்ய, “ஹேய் கொஞ்ச நேரமாச்சும் பேசாம வா மனோ. சும்மா நொய் நொய்னுட்டு.” என்று எட்டுக்களை எட்டிப் போட்டு உணவுண்ணும் பகுதியை எட்டி இருந்தாள் மதுரிமா.
நல்லவேளையாக மனோரமா தங்களை நெருங்கிய சமயம் சுதிரின் அழைப்பில் சற்றே பின்தங்கிய சிபிரஞ்சன் அவனோடு வந்து கொண்டிருக்க, மிகவும் ஆசுவாசுமாக உணர்ந்தாள் பெண்ணவள்.
அவர்களைத் தொடர்ந்து வீட்டின் மற்ற உறுப்பினர்களும் காலை உணவிற்காக அப்பகுதியில் கூடத் தொடங்க, சற்று நேரத்தில் பட்டம்மாளும், அவர்களின் தொடுப்பான வீரா, மற்றும் அவன் அன்னையும் பந்திக்காக விரிக்கப்பட்டிருந்த பாயில் வந்து அமர்ந்தனர்.
சிபிரஞ்சன் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசதியில் ஆடம்பரப் பொருட்கள் அனைத்தும் அவ்வீட்டில் இருந்தாலும், மூன்று வேளை உணவையும் சம்மணமிட்டு பாயில் அமர்ந்து தான் உண்ண வேண்டும் என்கிற வழக்கம் அவ்வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருக்க, மதுரிமாவின் பின்னேயே வந்து அவளுக்கு அருகில் சிறு இடைவெளி விட்டு சற்று சிரமத்துடனே அமர்ந்து கொண்டான் சிபிரஞ்சன்.
ஒரு வாரகால வழக்கத்தில் ஓரளவு தரையில் அமரப் பழகி இருந்தாலும் பிறந்ததில் இருந்தே தரையில் கால் பாவாது வளர்ந்து வந்தவன், சம்மணமிட்டு அமர்வதற்கு இன்னுமே திணறிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த பெண்ணிற்கோ உள்ளம் பாகாய்க் கரைந்தது.
ஆனாலும் தாங்கள் இங்கு வந்த முதல்நாள் அவன் இப்படி சிரமப்படுவதை பார்த்து அவனை மட்டும் மேசையில் அமரச் சொன்னவளிடம், “நோ நோ மது. உன்னை சாக்காவச்சு நானும் வில்லேஜ் பழக்க வழக்கங்களை பழகிக்கிறேனே” என்று உறுதியாக மறுத்து விட்டிருக்க, பெண்ணவளால் வேறு எதுவும் செய்ய இயலாமல் தான் போனது.
அனைவரும் சாப்பிட அமரவும் மதுரிமாவின் சித்தி சாராதாவும், பணியாள் ஒருவரும் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.
எப்பொழுதும் சுவையாக உணவைத் தயாரிக்கும் சாரதா, அன்றும் இடியாப்பமும், நாட்டுக்கோழி வருவலும், தேங்காய்பாலும் என்று பதார்த்தங்களை அமர்க்களம் செய்திருக்க, பெரிய பெரிய உணவகங்களில் கூட உண்டிராத சுவையோடு இருந்த அந்த கிராமத்து சாப்பாட்டை மிகவுமே ரசித்து ருசித்து உண்ணத் தொடங்கினான் சிபிரஞ்சன்.
உண்டதோடு மட்டுமல்லாது கடந்த ஒரு வார காலமாய் தன்னை சொந்தப் பிள்ளை போல் கவனித்து உணவு கொடுக்கும் சாராதாவை, “ஆன்ட்டி…” என்று வாய் நிறைய அழைத்தவன், “நானும் எத்தனையோ கன்ட்ரீஸ்ல எவ்ளவோ டிஸ்ஸஸ் சாப்பிட்டு இருக்கேன். ஆனா இவ்ளோ டேஸ்ட்டா சாப்பிட்டது இல்லை. உண்மையிலே ரொம்ப சூப்பரா சமைக்கிறீங்க. நான் இங்க இருந்து போன பின்ன கண்டிப்பா உங்க சாப்பாட்டை மிஸ் பண்ணுவேன்.” என்று மனம் குளிர பாராட்டினான்.
அதற்கு சாராதாவும், “நன்றிங்க தம்பி.” என்று வாயெல்லாம் பல்லாகக் கூறியவர், “ஃபீல் பண்ணாதீக தம்பி. கல்யாணத்துக்குள்ள மதுமாக்கு நானே சமயலை கத்துக் குடுத்துடுறேன். அப்றம் புள்ளை உங்களுக்கு செஞ்சு கொடுத்துட்டுப் போகுது.” என்றும் சேர்த்துக் கூற…
மதுவின் இடது புறம் அமர்ந்து இருந்த பட்டம்மாளோ, “சாராதா…” என்று மருமகளை கண்டனப் பார்வை பார்த்து வைக்க…
அவரோ, “ஆத்தி அத்தைய மறந்துட்டனே.” என்று அடித்துப் பிடித்து உள்ளே ஓடி இருந்தார்.
சித்தியின் அந்தப் பேச்சிலும் பட்டம்மாளின் அதட்டலிலும் அவளையும் அறியாது சிபிரஞ்சனை ஏறிட்ட மதுரிமாவிற்கு வாயில் இருந்த உணவாலும் புரையேறத் தொடங்க, பெண்ணவள் திரும்பிப் பார்த்ததில் அவளையே நோக்கி இருந்தவனும், “ஹேய் மது… பாத்து.” என்று பதறி அவள் தலையில் கையை வைத்தும் தட்டி இருந்தான்.
பேத்தி இருமத் தொடங்கவும் முறைப்பை விடுத்த பட்டம்மாளும் பதறிப் போய் அவள் தலையில் கையை வைத்துத் தட்ட முனைய, இம்முறை ஆடவன் முந்திக்கொண்டு அவள் தலையில் தட்டியதோடு அருகில் இருந்த நீரையும் எடுத்து தானே அவளுக்குப் புகட்டி இருந்தான்.
அருகில் இருக்கும் ஒரு சக மனிதனுக்கு செய்யும் உதவி போல் தான் இயல்பாக இருந்தது ஆடவனின் செயல்.
ஆனால் அவர்களைப் பார்த்து இருந்தவர்களுக்கு அது ஒரு காதலனின் பதட்டமாகவே காட்சி படுத்தப்பட்டிருக்க, அதில் சட்டென்று உண்ணுவதை விட்டு விட்டு எழுந்து நின்றிருந்தான் அவர்களுக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த வீரேந்திரன்.
அவன் பாதியிலே உண்ணாது எழவும் அவன் அன்னையும், கூடவே பட்டம்மாளும் அவன் பின்னோடே எழுந்து நிற்க, “என்னாச்சு வீரா? ஏன் பாதியிலே எழுந்துட்ட?” என்று பதட்டமாகவே வினவினார்கள் சொக்கலிங்கமும், மதுவின் சிறியதந்தை கணேசனும்.
அதில் அவர்களைப் பார்த்து ஒரு முறைப்பைச் சிந்திவிட்டு பட்டம்மாளிடம் சென்றவன்,
“யாரோ ஒரு மும்பைக்காரன் உங்க முன்னாடியே நம்ம மதுகிட்ட கட்டிகிட்டவன் போல உரிமையா நடந்துக்கிறான். நீங்க ஏன் அம்மாச்சி அவனை எதுவும் சொல்லாம இருக்கீக?” என்று அளவில்லா ஆதங்கத்தோடு கேட்டவன், “உங்க பேத்தி மாதிரியே நீங்களும் பணத்துக்கும் பகட்டுக்கும் முன்னுரிமை கொடுக்கப்போறீகளா அம்மாச்சி?” என்றும் உள்ளே போன குரலிலே கேட்க…
அடுத்த வார்த்தை அவனைப் பேச விடாது, “சாரதா…” என்று உரக்க அழைத்திருந்தார் பட்டம்மாள் பாட்டி.
பட்டம்மாளின் அந்த சப்தத்தில் உணவருந்திக் கொண்டிருந்த மற்றயவர்களும் அதிர்ச்சியாகி எழுந்து நிற்க, “அத்தை…” என்று ஓடி வந்து அவர் அருகில் நின்ற மருமகளிடம் எதையோ எடுத்து வரப் பணித்தவர், “மதுக்குட்டி, அந்தத் தம்பிய இங்க கூட்டிட்டு வா.” என்று பேத்தியையும் அழைத்திருந்தார்.
அதைக் கேட்டு மதுரிமா சிபிரஞ்சனிடம் திரும்பும் முன்னவே,
“சொல்லுங்க பாட்டிம்மா?” என்று ஆடவன் அவர் முன்னே வந்து நின்றிருக்க…
அந்தப் பாட்டிம்மாவில் ஒரு தரம் அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு வீராவையும் பார்த்துக் கொண்டவர், சாராதா கொண்டு வந்து கொடுத்த காலிப் பையை வாங்கி சிபியிடம் கொடுத்தார்.
அதில் சிபியோடு வீராவுமே பெரியவரை குழப்பமாகப் பார்த்திருக்க, “என் பேத்தி மட்டுமில்ல எந்த ஒரு பொண்ணும் புருஷனை பணத்தின் அடிப்படையிலோ, பகட்டைப் பாத்தோ தேர்ந்தெடுக்க மாட்டா. காசு பணத்தால எதையும் சாதிக்க முடியும்னு இங்க யாரும் நினைச்சிருந்தா அந்த நினைப்பை இப்போவே குழி தோண்டி புதைச்சுடுங்க.” என்று ஒருவித கட்டளையோடு தொடங்கியவரின் கூற்றில் உடல் விரைத்து நிமிர்ந்த சிபியை கண்டு கொள்ளாது தொடர்ந்தவர்,
“ஒரு கணவன் கிட்ட இருந்து மனைவியோட அதிக பட்ச எதிர்பார்ப்பே முக்கியமான ரெண்டு பொருளாதான் இருக்கும். ஒன்னு அவ மேல உள்ள ஆசையில அவனா வாங்கிட்டு வர்றது. இன்னொன்னு அவளுக்கான அக்கறையில அவள் தேவைக்கு வாங்கித் தர்றது.” என்று சிபியோடு வீராவையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டவர், “யாரோட உதவியும் இல்லாம அந்த ரெண்டு பொருளையும் கண்டுபிடிச்சி வாங்கிட்டு வாங்க. அப்றம் பேசிக்கலாம்” என்று மட்டும் கூறியவர் விறுவிறுவென்று தன் அறை நோக்கியும் சென்று விட…
கையிலிருந்த பையையும் எதிரில் இருந்த பொண்ணையும் மாறி மாறி பார்த்திருந்தான், மழைக்குக் கூட கடைத்தெருவின் பக்கம் ஒதுங்கி இராத தி கிரேட் சிபிரஞ்சன்.