மாலை நேர தென்றல் காற்றுடன் யேசுதாசும் பாடிக் கொண்டிருந்தார் முகிலனின் அலைபேசியில். பாட்டிலேயே கரைந்து உருகிக் கொண்டிருந்தான் முகிலன்.
காலையில் இருந்து எதுவுமே ஓடவில்லை. நாளை தான் இன்ஜினியரிங் கவுன்சிலிங். அதை முடித்துக் கிளம்பினால் மறுநாள் காலை தானே மீரா வருவாள். அதுவரை இந்த மொட்டை மாடியில் தவம் இருக்கலாம் மீராவிற்காக. ஏகாந்தமாய் அசை போடலாம் மீராவை பற்றி. அதுவரை …
என்ன பதில் சொன்னாலும் வாயைப் பிடுங்குவார்கள். அமைதியாக இருந்து விடலாம் என்று முகிலன் முடிவு செய்தான். பக்கத்து வீட்டு மீனாட்சி அம்மா சத்தம் கேட்கவே கீழே எட்டிப் பார்த்தாள் வசுந்தரா. வசுந்தரா முகிலனின் தாய். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த முகிலனை கண்ணிற்குள் காத்து வளர்த்தவள். முகிலனின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு அவனைக் கூப்பிட்டு கல்லூரியில் இடம் கொடுத்தப் பிறகு தான் கொஞ்சம் முகிலன் வாழ்க்கை பற்றிய கவலை குறைந்துள்ளது. தனது இறுக்கங்களை தளர்த்தி இயல்பாய் சிரிக்கிறாள். அதுவும் முகிலனை பொறுத்த வரை இப்போது ரொம்பவே வாய் அதிகமாகி விட்டது வசுந்தராவிற்கு.
என்ன மீனாட்சி அக்கா. நாய் குட்டியோட என்னத் தகராறு?
“அத ஏன் வசுந்தரா கேட்கிற. என் பொண்ணு வேலை விஷயமா ஊருக்குப் போனாலும் போனா. இந்த நாய்க்குட்டி அதிலேர்ந்து எதுவும் சாப்பிடல. இருந்த இடத்த விட்டு அசையலையே. அவ நாளன்னிக்கு வந்துருவான்னு அதுட்ட சொன்னா புரியவா போகுது?”
“விடுங்க அக்கா. தெரிஞ்சா மட்டும் அது சிரிச்சுட்டு சாப்பிடப் போகுதா என்ன? இதுங்கள சொல்லிக் குத்தமில்ல. நம்மள சொல்லணும்.”
இந்த இடிப்புரை தனக்குத் தான் என்று முகிலனுக்கு மட்டும் புரிந்து லேசாக ஒரு கீற்றுப் புன்னகை எட்டிப் பார்த்தது.
“ஏண்டா, இப்படி உருகுறயே. மீரா உன் மனசுல இருக்கானு மீராட்ட சொல்லிருக்கியா, இல்ல எப்போதும் போல மனசுக்குள்ளயே பூட்டி வச்சுருக்கியா”
தட்டிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான் முகிலன்.
ஆனா என் மருமக கண்டுபுடிச்சுருவா. உன்ன பத்தி உனக்கே தெரியாதது கூட அவளுக்குத் தெரியும்”.
தன்னை மீறி ஒரு வெட்க சிரிப்பை அவனே அறியாமல் உதிர்த்ததை வசுந்தரா குறித்துக் கொண்டாள்.
சாப்பாடு முடித்து அறைக்குள் நுழைந்தான் முகிலன்.
அம்மா சொன்னது உண்மை தான். என்னை பற்றி எனக்கே தெரியாதது எல்லாம் மீராவிற்குத் தெரியும். தனது வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனைகள் எல்லாம் அவளே உருவாக்கித் தந்தது. இந்த ஊரிலேயே தானும் அம்மாவும் நிரந்தரமாய் குடியேறுவோம் என்று நினைத்ததே இல்லை. அதற்கு காரணமாய் இருந்த குட்டி மீராவுக்கு வயது ஒன்பது.
முகிலனின் தந்தை நெடுமாறன் இறந்த போது முகிலனுக்கு வயது பன்னிரண்டு தான். கோயம்பத்தூரில் வசித்து வந்த நெடுமாறன்- வசுந்தராவிற்கு முகிலன் ஒரே மகன். ஓரளவு வசதியான குடும்பம். துணிக்கடை வியாபாரம் செய்து கொண்டிருந்த நெடுமாறன் திடிரென்று மாரடைப்பால் இறந்து விடுவார் என்று யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. நெடுமாறனுக்குப் பிறகு வியாபாரம் கை மாறிப் போக, அவருக்கு சொந்தமான இரண்டு வீட்டு வாடகைகளில் வசுந்தரா குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டிருந்தார். தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கும் சொந்தங்களை சற்றுத் தள்ளியே நிறுத்தி வைத்துக் கொண்டார். இருப்பினும், அவர்களின் கடுமையான சொற்களும் நடவடிக்கைகளும் வசுந்தராவை விட பன்னிரண்டு வயது முகிலனைக் கடுமையாக பாதித்தது. தனக்குள்ளே இறுகி இறுகி இரும்பாகிப் போனான். பதின் பருவ சிரிப்பும் உற்சாகமும் தொலைந்து போயிற்று. நாளாக நாளாக சரியாகி விடும் என்ற வசுந்தராவின் கணிப்பு தவறாகிப் போயிற்று. சிரிப்பையே தொலைத்தான் முகிலன்.
முகிலனின் வாழ்வு இப்படியே ஆகி விடக் கூடாது என்று கவலை வசுந்தராவை வாட்டியது. நெடுமாறன் இறந்த போது தனக்கு மிக ஆறுதலாய் இருந்த நெடுமாறனின் நண்பர் கிருஷ்ணனும் துளசியும் ஞாபகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அங்கே போய் ஒரு இரண்டு நாள் தங்கி விட்டு வந்தால் முகிலனுக்கு மட்டுமல்லாமல் தனக்குமே ஒரு மாறுதலும் தைரியமும் வரும் என்று முடிவு செய்தார் வசுந்தரா. கிருஷ்ணன் அண்ணனிடம் முகிலனின் மாற்றங்களுக்கு கட்டாயம் நல்ல தீர்வு இருக்கும் என்று திருநெல்வேலி வந்து சேர்ந்தார்.
அவர்கள் வந்து இறங்கிய நேரம் கிருஷ்ணன் தோட்டத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். அவரது செல்ல மகள் மீரா தந்தைக்கு உதவுகிறேன் என்று மண்ணைக் கொத்தி கிளறி, மிக முக்கியமான வேலை செய்வது போல் முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். வசுந்தராவை பார்த்த அடுத்த நொடி, “தங்கச்சி, வா வா”, என்றும் “துளசி, இங்க ஓடி வா”, என்றும், “முகிலா” என்று அவனது கையைப் பற்றுவதுமாக பரபரப்பாக இருந்தார் கிருஷ்ணன். எப்போதும் நிதானமாக இருக்கும் தனது தந்தையின் பரபரப்பு மீராவை விழி விரித்து நிற்க வைத்தது.
என்னவோ ஏதோ என்று பதறிய படி ஓடி வந்த துளசி, “வசு, முகிலா” , என்று வாஞ்சையாய் அவர்களது கையை பற்றினார். நெடுமாறன் மறைவுக்குப் பின் தனக்கும் தன் அன்னைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கும் மனிதர்களை முகிலனுமே வியப்பாக பார்த்தான்.
உள்ளே சென்று குளித்து, காலை உணவெல்லாம் ஆன பிறகு சாவகாசமாகப் பேசத் தொடங்கினர்.
“எங்க, வந்ததுல இருந்து நந்துவக் காணோம்”.
“அவனுக்கு இன்னிக்கு கராத்தேல ஏதோ பெல்ட் கொடுக்கறாங்களாம். காலைல ஆறு மணிக்கு நான் தான் கொண்டு போய் விட்டேன் தங்கச்சி. ஒரு பத்து மணிக்கு முடியும், பிரெண்ட்ஸ் கூட வந்துறேன்னு சொன்னான். முகிலன பாத்தா சந்தோஷமா விளையாடுவான். மீராவ நல்லா பாத்துப்பான் ஆனாலும் சண்ட வந்துரும்”.
“மீராக் குட்டி முகத்த பாத்தா சண்ட போட மனசு வருமா என்ன? சமத்து அண்ணா என் மருமக. இங்க வாடா மீரா. முகிலா அந்த பண்டத்த எல்லாம் எடுத்துக் கொடு மீராக்கு”.
முகிலன் பைக்குள் இருந்து எடுத்து வந்த பார்சல்களை தயங்காமல் வாங்கிக் கொண்ட மீரா, “உங்கள நா எப்படி கூப்பிடணும்” எனவும் எல்லாரும் சிரித்தனர்.
“முகில்னு கூப்பிடு” என்றான் முகிலன்.
“உங்களுக்கும் நந்து அண்ணாக்கும் ஒரே வயசாம், அம்மா சொன்னாங்க. பேர் சொல்லி கூப்பிட்டா அண்ணா அடிப்பான்”
“அப்படினா” என்று முகிலன் தொடங்குவதற்குள், “எங்க சித்ரா அத்தை வீட்ல உங்கள மாதிரி ஒருத்தர் இருப்பாங்க. அவங்கள மாணிக்க அத்தான்னு சொல்வேன். உங்கள அதே மாதிரி அத்தான்னே சொல்றேன்”, விடை கண்டுபிடித்த பெருமையுடன் சிரித்தாள்.
சட்டென்று பூத்துப் போனது கிருஷ்ணன் மனது. சிரித்துக் கொண்டே வந்த துளசி, “நல்லா வாய் பேசு. அத்தான கூட்டிட்டுப் போய் விளையாடு. நந்து வந்தா சொல்லு”, என்று அனுப்பி வைத்தாள்.
தனக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை பெருமையுடன் நிறைவேற்ற குட்டி மீரா, முகிலன் கை பற்றி தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றாள்.
“அதான் அண்ணி உங்க ரெண்டு பேர்கிட்ட பேசலாம்னு வந்தேன். தொழில் ஒரு பக்கம் சொந்தம் ஒரு பக்கம்னு போராடின நேரத்தில இவன பாக்காம விட்டுட்டேன். ஆனா எல்லாம் புரிஞ்சுக்கிற வயசு தான அண்ணி. வாடி போய்ட்டான். யார்ட்டயும் பேச மாட்டான். இப்ப தொழிலும் இல்ல சொந்தமும் இல்லனு புரிஞ்சு போச்சு அவனுக்கு. வீட்ல இருக்கறப்ப படிப்பான், தனியா உட்காந்துப்பான். ஏதாச்சு கேட்டா பதில் சொல்வான். கஷ்டமா இருக்கு இவன பாக்க. ஹாஸ்டல்னு ஏதாச்சு சேக்க மனசு வரல. அதான் அண்ணன்ட்ட யோசனை கேட்கலாம். இவனும் கொஞ்சம் வெளியூர் வந்தா எப்படி இருக்கான்னு பாக்கலாம் னு வந்தேன்”
பேசிக் கொண்டிருக்கும் போதே மீரா ஒரு தட்டில் முறுக்கும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
பேச்சு வார்த்தைக்கு நடுவினில் எழுந்து போக வேண்டாம் என்று யோசித்த துளசி, கிருஷ்ணனும் வசுந்தராவும் முகிலனை பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் வெளியே சென்று பார்த்தார்.
“நினச்சேன். நீ இதான் பண்ணுவன்னு. அன்னிக்கே சொன்னேன்ல இத செய்யாதன்னு.”
பதறியபடி எழுந்து நின்றான் முகிலன்.
“நீ உக்காரு முகிலா. சாப்பிடு”
சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணன் முகத்தில் முகம் கொள்ளாத புன்னகை.
“என்னாச்சு அண்ணி? மீராக் குட்டி என்ன பண்ண?” என்று மீராவின் கன்னம் பிடித்து கொஞ்சியபடியே கேட்டார் வசுந்தரா. உதட்டை பிதுக்கி துளசியை முறைத்தபடி, “இல்ல வசு அத்த. நான் இந்த முறுக்கு சாப்பிட்டப்ப என் பல்லு விழுந்துருச்சு. அப்போ தான் எல்லாரும் முறுக்க காப்பில முக்கி சாப்பிடறத பாத்தேன். அத்தானுக்கு பல்லு விழுந்துடக் கூடாதுல்ல. கிச்சன்ல காப்பி இல்ல அதனால அத்தானுக்கு தண்ணி கொடுத்தேன் முக்கி சாப்பிட”.
“இதே தான் வேலை இவளுக்கு. இவ பல்லு விழற மாதிரி இருந்துச்சு. ஊரு பூரா போய் விழுந்த பல்லுக்கு நான் சுட்ட முறுக்கு தான் காரணம்னு சொல்லிருக்கா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வசுந்தராவிடம் இருந்து தள்ளி நின்ற துளசி பக்கத்தில் வந்தாள் மீரா. தனது வாய்க்குள் கை விட்டு, வாயில் இருந்த பாதி முறுக்கையும், இப்போது சாப்பிட்ட முறுக்கினால் உடைந்த தனது மற்றொரு பல்லையும் எடுத்து காண்பித்ததும், வெடித்துச் சிரித்தான் முகிலன்.
“உன் கை பிடித்து என்னை நீ இழுத்துச் சென்ற அந்நாளில் தான்
வாழ்க்கை முழுவதும் உன் கை பற்றி நடக்க முடிவு செய்தேன்”