இரவு எது பகல் எது என்று தெரியாமல் மருத்துவமனையிலேயே தவம் கிடந்தனர் மீரா குடும்பமும் முகிலன் குடும்பமும். ஒருவராலும் ஒருவரையும் எதிர்கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனும் துளசியும் நந்தனை திட்டியதை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினர். அதனால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று உழன்றனர். மீரா, தான் ஓடாமல் நின்று இருந்தால் நந்து அண்ணாவை கவனித்து எப்படியாவது நிறுத்தி இருந்துருக்கலாமோ என்று வருந்தினாள். எல்லாரையும் விட குற்ற மனப்பான்மை அதிகமாக இருந்தது முகிலனுக்குத் தான். முகிலன் அழைக்காவிட்டால் நந்தன் வந்தே இருக்க மாட்டானே அந்த இடத்துக்கு என்று நொறுங்கிப் போனான்.
ஏன் நந்தன் தன்னை பார்த்த பின்பு நிறுத்தாமல் வேகத்தை அதிகமாக்கினான் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். நந்தன் விழுந்த நேரத்தில் அலறிய முகிலன் அதற்குப் பின் யாரிடமும் பேசவே இல்லை. நடந்ததை ஒரு நிமிடத்தில் கிரகித்துக் கொண்ட சூர்யா தான் செயல்பட்டான். கல்லூரி வேனில் அவசரமாக நந்தனை ஏற்றிக் கொண்டு திரும்பி பார்த்தால் மீரா மயங்கிக் கிடந்தாள். பிரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்த முகிலனை தட்டி மீராவை ஏற்றும்படி செய்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தான். போகும் போதே மீராவின் கன்னத்தில் தட்டி, “ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் தைரியமா இரு. நீயும் மயங்கிட்டா யாரன்னு நாங்க பாக்கிறது”, என்று அதட்டினான்.
மருத்துவமனையில் அனுமதித்த பின் கிருஷ்ணனுக்கு மீராவின் அலைபேசியில் இருந்து கூப்பிட்டு விபரத்தைக் கூறி தன்னுடைய தந்தையையும் துணைக்கு அழைத்து இருந்தான். இரவு முழுவதும் போராடிய மருத்துவர்கள் இன்னும் சில மணி நேரம் பார்த்து விட்டு தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறியதும் அனைவரும் திகிலடைந்தனர்.
ஒரு இரவு ஒரு பகல் முடிந்து அனைவரும் சற்றே மூச்சு விடும்படி நந்தன் அபாய கட்டத்தை தாண்டி விட்டான் என்று செவிலியர் வந்து கூறிய போது தான் வசுந்தரா தெளிந்தார். அப்போது தான் அங்கு நின்று கொண்டிருந்த சூர்யாவையும் அவன் தந்தையையும் பார்த்து யாரென்று தெரிந்து கொண்டு நன்றி கூறினார். கேண்டீன் சென்று அனைவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்.
சூர்யா பம்பரமாய் சுழன்றது முதல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கதிரவன், நந்தன் பிழைத்து விட்டான் என்றதும் கிருஷ்ணனிடம் வீடு வரை போய் வருவதாகக் கூறினார். இவ்வளவு நேரம் அவரும் அங்கே இருந்ததை அப்போது தான் சுதாரித்த கிருஷ்ணன் நன்றி கூறி தழுதழுத்தார்.
சூர்யாவையும் வீட்டுக்கு போய்விட்டு வரும்படி சொல்லியும் அவன் கிளம்பவில்லை.
“இல்ல அங்கிள், இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறேன். அப்பாவ கார்ல அனுப்பி வைச்சுட்டு வரேன்”, என்றவாறு கதிரவனுடன் நடந்தான். மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்ததும் தயங்கியவாறே நின்ற கதிரவன் சில நிமிடம் யோசித்து விட்டு, “தம்பி”, என்று அழைத்தார்.
“சொல்லுங்கப்பா”
“உனக்கு மீராவ ரொம்ப பிடிக்குமாப்பா”
கதிரவன் முகம் பார்த்த சூர்யா கொஞ்சம் அதிர்ந்து, “கூட பொறக்காத பொறப்பு அவ. அவ்ளோ தான்பா”, என்றான்.
கொஞ்சம் அதிர்ச்சி ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல், “உன் மனசு படி நடக்கணும்ல அதான் கேட்டுக்கிறேன்”, என்று முடித்தார்.
நித்யாவை பற்றி சொல்லி விடலாமா என்று பரபரத்த சூர்யாவிற்கு அவன் நின்றிருந்த இடமும், இன்னும் முகிலன் மீராவை போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலும், சொல்ல வேண்டியதை தடுத்தது.
“சரிப்பா, வேற ஏதாச்சு வேணும்னா போன் பண்ணு. உனக்கு மீரா எப்படியோ எனக்கு கிருஷ்ணன் அப்படித் தான்”, என்று புன்னகைத்தார்.
சற்றே தெளிந்து இருந்த நந்தனை ஒவ்வொருத்தராக போய் பார்க்கலாம், ஆனால் அவனை வருத்தப்படவோ பதட்டப்படவோ விடக் கூடாது என்று அறிவுறுத்தி செவிலியர்கள் அனுப்பி வைத்தனர். எல்லாரையும் பார்த்து புன்னகைத்த நந்தன், மீரா உள்ளே சென்ற போது மீண்டும் மயக்கமுற்றது தற்செயலா இல்லையா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
வீட்டிற்கு சென்று குளித்து முடித்து வரச் சொல்லி ஆண்கள் இருவரையும் அனுப்பினார் துளசி. வீடு வந்து சேரும் வரை ஒன்றுமே பேசாமல் கிருஷ்ணனை இறக்கி விட்டான் முகிலன். “குளிச்சுட்டு ரெடி ஆகுறேன், நீயும் போய்ட்டு வா”, என்ற கிருஷ்ணனிடம் ஒன்றுமே பேசாமல் சென்றான். சிறிது நேரம் கழித்து, “போலாமா”, என்று வந்த முகிலனை அருகில் அமரச் செய்தார் கிருஷ்ணன்.
“கடவுள் அருளால அவனுக்கு சரியா போய்ட்டுதே முகிலா, இன்னும் ஏன் ஒரு மாதிரி இருக்க”, என்று கேட்டார்.
சிறிது நேர அமைதிக்குப் பின்,”நான் தான் மாமா இதுக்கெல்லாம் காரணம். அவன போன் பண்ணி நான் தான் வர சொன்னேன். இல்லைன்னா அவனுக்கு இப்படி ஆகியிருக்காது எல்லாம் என்னால தான்.”, என்று வறண்ட குரலில் கூறினான்..
ஒரு பெருமூச்சுடன், “முகிலா, இது நடந்து தான் ஆகணும்னா ஆகி தான் இருக்கும். உன் பக்கத்துல நடந்ததால உடனே காப்பாத்த முடிஞ்சுது. தெரிஞ்சவங்க யாருமே இல்லாத இடத்துல நடந்து இருந்தா என்னவாகி இருக்கும். தவிர அவனுக்கு மனசளவுல உன்னால கெட்டது நினைக்க முடியாது முகிலா. எதையாவது யோசிச்சு குழப்பிட்டே இருக்காத”, என்று முடித்தார்.
சற்று இயல்பான முகிலன், “சரி மாமா, நீங்க இருங்க. அவனக் கூட இருந்து நான் பாத்துக்கிறேன்”, என்றவுடன் சிரித்துக் கொண்டே, “அதுவும் சரி தான். அங்க நான் இருந்தா இன்னும் கொஞ்சம் அவன் டென்ஷன் தான் ஆவான். நீ போய் அவங்கள எல்லாத்தையும் ஒரு ஆட்டோ பிடிச்சு அனுப்பு. கொஞ்ச நேரம் கழிச்சு நான் துளசிய மட்டும் கூட்டிட்டு வரேன். மீராவும் வசுவும் எதுக்கு அங்கேயே இருந்துட்டு”, என்று முடித்தார்.
கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் கண்ட நந்தனின் நிலைமை எல்லாரையும் ஆசுவாசப்படுத்தியது. நந்தன் சாதாரணமாகப் பேசத் தொடங்கி விட்டான். கொஞ்சம் தலையில் அடி என்பதால் கவனமாகக் கையாள வேண்டி இருந்தது. வலி மாத்திரையின் வீரியத்தால் அவ்வப்போது தூங்கி எழுந்த நந்தன் ஒவ்வொரு முறையும் அங்கேயே முகிலனைக் கண்ட போது நெகிழ்ந்து போனான்.
“மச்சி நீ கெளம்பு. நான் சரியாகிட்டேன்”
“இல்ல நந்தா. உன்னைய கூட்டிட்டுத் தான் நான் வீட்டுக்கு வருவேன்னு அம்மாட்ட சொல்லிட்டேன். நேத்துலேர்ந்து ஸ்டடி லீவு தான். நீ தூங்கு”
“அம்மா அப்பாலாம் வீட்டுக்குப் போய்ட்டாங்களா”
“ஆமா நான் தான் அனுப்பி வச்சேன். எல்லாரும் வந்து வந்து பார்த்துட்டுப் போறாங்க. நீ தூங்கிட்டு இருந்த. மீரா கூட நேத்து காலேஜ் முடிச்சுட்டு ரொம்ப நேரம் உன்கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணா.”
“ம்ம்”
“ஆமா நந்தா, நீ ஏன் திடீர்னு அவ்ளோ வேகமா வந்த”
உள்ளே வந்த செவிலியர் நந்தன் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து விட்டு முகிலனிடம், “கொஞ்சம் இந்த மருந்து வாங்கிட்டு வாங்க”, என்று முகிலனை அழைத்துச் சென்றார்.
“சார், கவனமா கேளுங்க. அவருக்கு இன்னும் முழுக்க சரியாகல. காயம்லாம் ஆறணும், நீங்க அவர டென்ஷன் ஆக்குற மாதிரி எதுவும் பேசாதீங்க. நடந்த அந்த சம்பவம் பத்தி பேசினா அவர் டென்ஷன் ஆகுறார் பாருங்க. காலைல வரைக்கும் ரத்த அழுத்தம் நார்மலா தான் இருந்தது. இப்ப நீங்க பேசிட்டு இருக்கறப்ப எடுத்தேன், ரொம்ப அதிகமா இருக்கு. கூடிய வரை அவர் டென்ஷன் ஆகாம பாத்துக்கங்க”, என்று சொல்லிவிட்டு சென்றார்.
நந்தனும் முகிலனும் இல்லாமல் வீடே வெறிச்சோடியது போல் இருந்தது அனைவருக்கும். அவ்வப்போது வந்த சூர்யா தான் வீட்டை கலகலப்பாக்கினான்.
“ஐயோ ஆண்ட்டி , எப்படி இவ்ளோ நல்லா சமைக்கிறீங்க”, என்று துளசியிடம் கேட்டான் ஒரு முறை.
“கிண்டல் பண்றியா சூர்யா”, என்றார் துளசி.
“ஐய்யயோ இல்ல ஆண்ட்டி, இவள மாதிரி ஆளுக்கெல்லாம் நல்லா சமைச்சுக் கொடுக்குறீங்களே. அவ பாதி நேரம் என்கிட்டே கொடுத்து கான்டீன் போயிருவா”, என்ற உண்மையை உடைத்தான்.
முறைத்த துளசியிடம், “சும்மா சொல்லறான்மா அப்படியெல்லாம் இல்ல”, என்று விட்டு “வா சூர்யா, நந்துண்ணாவ பாத்துட்டு வரலாம். நான் அவங்ககிட்ட பேசியே ரொம்ப நாளாச்சு. நான் போறப்ப எல்லாம் அவங்க தூங்கிட்டு இருக்காங்க”, என்று அழைத்தாள்.
“ஹே, நீ நந்துண்ணாவை பாக்கப் போறியா, இல்ல எங்க முகிலண்ணாவையா”, என்று சட்டென்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்தான்.
தரதரவென இழுத்துச் சென்ற மீரா, “அறிவு இருக்கா உனக்கு. அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது. தெரிய வேண்டிய நேரமா இது. அறிவே கிடையாது சூர்யா”, என்று திட்டினாள்.
“சாரி மீரா. தெரியாம..”
“சரி விடு. வா போகலாம்”, என்றவாறு காரில் ஏறினாள்.
அமைதியாக சென்று கொண்டிருந்தனர் இருவரும்.
“ஆனா சொன்னது ஒரு வகைல நல்லது தான் மீரா”, என்று தன் தந்தை நினைத்ததை சொன்னான்.
மீண்டும் அறைக்கு வந்த முகிலனிடம், “அன்னிக்கு ஏன் அப்படி வந்தேன் தெரியுமா”, என்று இறுகிப் போன குரலில் கேட்டான் நந்தன்.
பதறிய முகிலன், “அது எதுக்குடா விடு”, என்று சமாளித்தான்.
“இல்ல நீ தெரிஞ்சுக்கணும். நான் அன்னிக்கே மீராவ திட்டினேன், அந்த கூட படிக்கற பையன்கிட்ட பேசாதன்னு. அவ கேக்கல, அவங்கப்பா வந்து அவங்க பையனும் மீராவும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்கன்னு சொல்லி எங்கப்பாட்ட பொண்ணு கேட்டார் முகிலா. ஆத்திரமா வந்துச்சு”, என்று நிறுத்தினான்.
ஏதோ குளறுபடி நடந்து இருக்கிறது என்று யூகித்த முகிலன், அதை பற்றியெல்லாம் இந்த நேரத்தில் விவரிக்க வேண்டாம் என்று, “நீ விடு நந்தா. எனக்குத் தெரியும் எல்லாம். அப்புறமா பேசலாம்”, என்று அவனை அமைதியாக்க முயன்றான்.
“உனக்குத் தெரியுமா, அதான் நீ வீட்டுக்கேப் போகாம இங்க இருக்கியா”, என்று தப்பு தப்பாய் புரிந்து கொண்டு கையை தலையணையில் ஓங்கி குத்தும் நந்தனை சமாளிக்க முயன்று தோற்று கொண்டிருந்தான் முகிலன். செவிலியர் கூறியது வேறு முகிலனை இன்னும் பதட்டப்படுத்தியது.
மருத்துவமனை வந்ததும் இறங்கி நடந்த சூர்யா, “நானும் இது வரை நந்து அண்ணாகிட்ட பேசினதே இல்லை. இன்னிக்கு முழிச்சு இருந்தா ஒரு ஹாய் சொல்லலாம் பாப்போம்”
“ஆமா இவர் பெரிய கலெக்டர். இவர் பேசலன்னு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க”, என்று சிரித்தவாறே வந்த மீராவின் காதுகளில், “இனிமே அந்த மீராகிட்ட எந்த காரணத்துக்காகவும் பேசமாட்ட, பழக மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணிக் கொடு முகிலா”, என்ற நந்தனின் வெறுப்புக் குரலும், முகம் முழுக்க வியர்த்துக் கொட்டி தயங்கித் தயங்கி நந்தனின் கை மேல் தன் கையை வைத்த முகிலனும் அவளை வாழ்க்கை சிகரத்தின் மேல் இருந்து தலைகுப்புற தள்ளிக் கொண்டிருந்தனர்.
“அழுது அழுது மரத்துப் போன மனது அவன் பெயர் கேட்டால் மட்டும் உணர்வு பெறுகிறது”