மழையில் நனைந்து,அழுது களைத்ததினாலோ என்னவோ மீரா அன்று அசதியில் சீக்கிரமே தூங்கி விட்டாள். நடு இரவில் திடீரென விழித்தவளுக்கு ஆற்றங்கரையில் முகிலனை நேருக்கு நேர் பார்த்தும் பேச முடியாமல் போனதை நினைத்து தொண்டை எல்லாம் அடைத்தது. அழுவதற்கும் தெம்பு இல்லை. எழுந்து தண்ணீர் குடிக்க சென்றவள் கிருஷ்ணன் அங்கே சோபாவில் அமர்ந்து புத்தகம் படிப்பதை பார்த்ததும், “தூங்கலயாப்பா”, என்று கண கண குரலில் கேட்டாள்.
அவளது முகத்தையும் குரலையும் கவனித்தவர் “தொண்டை ஏன் இப்படி இருக்கு. இரு வெந்நீர் வச்சு எடுத்துட்டு வரேன். இங்க உக்காரு”, என்றார்.
தெம்பே இல்லாமல் இருந்தவள் அங்கேயே அந்த சோபாவில் அமர்ந்தாள். வெந்நீர் வைத்து எடுத்து வந்த கிருஷ்ணன், “இத முதல்ல குடி”, என்று அருகில் அமர்ந்தார்.
அவள் குடித்து முடித்ததும், “என்னாச்சு மீரா”, என்று கேட்டார்.
இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் இருந்தவள், “உங்க மடில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமாப்பா, நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு”. சற்றே துணுக்குற்றவர் எதையும் காட்டிக் கொள்ளாமல் “தாராளமா”, என்று அவளை மடியில் படுக்க வைத்து தலை கோதினார்.
பெண் குழந்தைகளுக்கு அப்பா மடி தானே அடைக்கலம். மகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் முதல் மனிதன் அவளின் அப்பா தான். தன் பெண் கலங்கி இருக்கிறாள் என்ற பதட்டத்தையும் மீறி அவள் கேட்பதை முதலில் செய்ய விரும்பும் அப்பா மீராவுக்கு மட்டுமென்ன, எல்லா பெண் குழந்தைகளுக்கும் அலாதி தான். சத்தம் கேட்டு வந்த துளசியை கண்களாலேயே உள்ளே போக பனித்து விட்டு அங்கேயே அமர்ந்து இருந்தார். அவருக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சிறு வயதில் மீராவுக்கு பேருந்து பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்கேயாவது நீண்ட தொலைவு போய் வந்தால் கூட அப்பா அருகில் அதுவும் ஜன்னலோரத்தில் இடம் கிடைத்தால் தான் பேருந்தில் ஏற விடுவாள். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பவள் அப்படியே அவர் தோளில் சாய்ந்து தூங்கி விடுவாள்.
இறங்கும் போது எழுப்பி விடும் கிருஷ்ணனிடம், “ரொம்ப நேரம் தூங்கிட்டேனாப்பா, அது வரைக்கும் நீங்க அசையாமலே கஷ்டப்பட்டு உக்காந்து இருந்தீங்களா, அடுத்த தடவை தூங்க மாட்டேன்”, என்றெல்லாம் அப்பாவை பற்றி கவலைப் பட்ட குட்டி மீரா, இன்று அப்பா தூங்க வேண்டாமா என்று யோசிக்காமல் தன்னையும் மீறி இப்படித் தூங்குகிறாள் என்றால் அவளது வலி பெரியதாக இருக்க வேண்டும் என்று கணித்தார். மலையையே புரட்டும் அப்பாக்கள் தான் மகள்களின் கண்ணீருக்கு கலங்கிப் போய் விடுகின்றனர்.
கிருஷ்ணன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க துளசியின் குழைந்த வயிறு தன் மகளை எண்ணி எண்ணி குழம்பியது. மகனை விட மகளின் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர். எதுவானாலும் சமாளிக்கும் மீரா இப்படி கலங்கிப் போய் அவர் பார்த்ததில்லை.
எப்போதும் சற்று பக்குவமாக நடந்து கொள்ளும் மீரா முகிலனிடம் மட்டும் தான் குழந்தையாகி விடுவாள் என்பதை பல முறை கண்டிருக்கிறார் துளசி. எத்தனையோ முறை சரியாக சாப்பிடாமல் தன்னிடம் அடம் செய்பவள் முகிலனின் கண்டிப்பில் அடங்கிப் பார்த்திருக்கிறார். முகிலன் வந்தாலே ஒரு வெளிச்சம் பரவும் மீராவின் கண்களை பார்த்தே அவள் முகிலனை நேசிக்கிறாள் என்று மீராவுக்கு முன்பாகவே கணித்தவர். இன்று வீட்டுப் பிள்ளைகள் மூவருமே சரியாக இல்லை என்று கண்டறிந்தவர் பிரச்சனைக்கு எப்படியோ ஒரு விதத்தில் எப்போதும் போல் இயல்பாக இருக்கும் நந்தனும் கண்டிப்பாக முகிலனும் காரணம் என்று அனுமானித்தார். ஆனால் மூவரில் யாரை கேட்டாலும் விடை கிடைக்காது என்று அவருக்குப் புரிந்தது.
இப்படியாக கிருஷ்ணன் துளசி தம்பதியினருக்கு சிவராத்திரியான இரவு மெல்ல விடிந்தது. சற்றே தெளிந்து எழுந்த மீரா அங்கேயும் இங்கேயுமாய் நடந்து வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த துளசியிடம் மாட்டாமல் தப்பிக்க முடியாது என்று உணர்ந்தாள். துளசி அவள் பிரச்சனையை கண்டு கொள்ளும் முன் சமாளிக்க வேண்டும் என்பதற்காக தானே சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தாள்.
“துளசி மேடம், ஸ்ட்ராங்கா ஷுகர் தூக்கலா நல்ல சூடா ஒரு காபி கிடைக்குமா”
தாயறியாத சூலா என்ன? அவள் போக்கிலே போக எண்ணிய துளசி, சூடா ஸ்ட்ராங்கா நேத்து வெந்நீர் கொடுத்தவங்க, நைட் பூரா உன்ன மடில வச்சு தவம் கிடந்தவங்ககிட்டயே கேக்க வேண்டியது தான”
“இப்ப உனக்கு என் மேல பொறாமையா,அப்பா மேலயா”
“ஒரு ஆமையும் இல்ல. எல்லா ஆமையும் ஒட்டுக்குள்ள எவ்ளோ நாள் தான் சுருங்கி கிடக்குனு பாப்போம். சுருங்கிப் போனா வாழ்க்கையை எப்படி தான் எதிர் கொள்றது”, என்று கேட்ட நொடி மீராவிற்கு வாயடைத்து போயிற்று.
“நான் முகம் கழுவிட்டு வரேன்”, என்று தன் அறைக்கு சென்றாள்.
பேச்சு வார்த்தையை கவனித்த கிருஷ்ணன், எப்படியோ துளசி மீராவை வழிக்குக் கொண்டு வந்து விடுவாள் என்று நம்பி தூங்க சென்றார்.
“அதானே, நான் ஏன் சுருங்கிப் போகணும்? நான் என்ன தப்பு செஞ்சேன். ரெண்டு பேரை பிரிச்ச நந்துண்ணா வருத்தமே இல்லாமல் இருக்கான். கேட்ட உடனே கர்ண மகாராஜா மாதிரி சத்தியம் செஞ்ச அத்தான் அவர் வேலைய பாக்கிறார். நான் ஏன் அழணும்”, என்று தனக்கு தானே பேசிக் கொண்டாள்.
இன்று முகிலனை ஒரு வழி செய்து விட முடிவு செய்தாள். குளித்து முடித்து நேரே முகிலன் வீட்டிற்கு சென்றாள். அவளை பார்த்த வசுந்தரா, “வா வா, இப்ப தான் உன்னைய நினச்சேன்”, என்று சாப்பாட்டு மேஜைக்கு நடந்தார்.
அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த முகிலனை பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கினாலும், தான் எடுத்த முடிவை மாற்ற அவள் தயாராக இல்லை.
“நீங்களாச்சு நினைக்கிறீங்களே வசு அத்தை. அது போதும்”, என்று அவனுக்கு நேரெதிர் நாற்காலியில் அமர்ந்தாள். ஏற்கனவே அம்மாவிற்காக என்று கொறித்துக் கொண்டிருந்த முகிலனுக்கு தொண்டையிலேயே உணவு நின்றது.
“என்ன ஸ்பெஷல் அத்தை இன்னிக்கு”
“இன்னிக்கு ஆப்பமும் தேங்காய்ப்பாலும் இருக்கு. இரு உனக்கு எடுத்துட்டு வரேன்”, என்று உள்ளே சென்றார்.
சும்மா நின்றதற்கே கொல்லும் பார்வை பார்த்தவள், தட்டில் ஆப்பமும் தேங்காய்ப்பாலும் என அமர்க்களமாய் உட்கார்ந்து இருந்தவனை பார்த்ததும் அவள் பார்வையில் தீப்பொறி பறந்தது. இந்த மீராவை பார்த்தறியாத முகிலன் என்ன செய்வதென்று தடுமாறினான்.
“என்ன வசு அத்தை? என்ன இன்னிக்கு ஆப்பம்”
“சும்மா தான்டா. கொஞ்ச நாளா இவன் சரியா சாப்பிடறதே இல்ல. சரி ஏதாச்சு தினுசா செஞ்சா சாப்பிடறானான்னு பாப்போம்னு தான்”
“நான் கூட ஏதோ விசேஷம்னு நினச்சேன்”
“என்ன பெரிய விசேஷம் இங்க, ஒண்ணும் பிரமாதமா இல்ல”
“எங்க வீட்ல விசேஷம் அத்தை”
“ஹே மீராகுட்டி.. இன்னிக்கு என்ன, யார் பொறந்த நாளும் இல்ல, அண்ணி கல்யாண நாள் கூட இல்லையே”
“ஏன் வசு அத்தை, நான் ஒரு வயசுப் பொண்ணு வந்து விசேஷம்னு சொன்னா என்ன அர்த்தம்”
மீராவின் நக்கலும், முகிலனின் அமைதியும் இப்போது தான் வசுந்தராவின் கவனத்தில் வந்தது.
துணுக்குற்ற வசுந்தரா முகிலனை திரும்பி பார்த்தார். பாறை போல் அமர்ந்து இருந்த முகிலன், கோயம்பத்தூரில் இருந்த முகிலனை நினைவு படுத்தவே கலங்கிப் போனார்.
“அதான் அத்தை. இத நினச்சு குழப்பிக்காதீங்க. சீக்கிரமே பாருங்கப்பா. ஆனா இங்க உள்ள மாப்பிளைங்க யாரும் வேணாம். வெளியூர்ல பாருங்க. அப்போ தான் எனக்கும் அடிக்கடி அப்பா வீடுன்னு வந்து போக முடியும்னு சொல்லிட்டேன்”, என்று சிரித்தவாறு சொன்ன மீராவை அதிர்ச்சியுடன் பார்த்தார் வசுந்தரா.
“சரி வசு அத்தை. எனக்கு உங்ககிட்ட பேசினதே வயிறு நிறைஞ்சு போச்சு. கிளம்பறேன்”, என்று முகிலனை பார்த்துக் கொண்டே கிளம்பினாள்.
முகிலனின் அசைவு, அசைவின்மை இரண்டுமே வசுந்தராவிற்கு பதட்டத்தை கொடுத்தது. பிள்ளைகள் இருவரும் இயல்பாக இல்லை என்று தெரிந்ததும் தவித்துப் போனார். ஏனென்றால் இருவருமே யாரையும் காயப்படுத்தும் பழக்கம் இல்லாதவர்கள். இப்போது இவள் சொல்லி செல்வதை பார்த்தால் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று தெரியவில்லை. இவன் பேசினாலே ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி கல் போல் இருப்பவனிடம் ஒன்றும் கறக்க முடியாது என்று புரிந்து கொண்டார்.
பிள்ளைகள் வெளியே கிளம்பியதும் அவசரமாய் சென்று துளசியிடம் நடந்ததை கூறினார். துளசியும் அதிர்ச்சி அடைந்தார். கிருஷ்ணனிடம் இது பற்றி பெரிதாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் இது பிள்ளைகளுக்குண்டான சண்டையாக இருக்கும் என்றும் வசுந்தராவை தேற்றினார்.
இரவில் மீராவின் அறைக்கு சென்ற துளசி, “வசுட்ட என்ன சொன்ன”, என்று வினவினார். பதிலே இல்லை மீராவிடம்.
“நீ குழந்தை இல்ல மீரா. உன்னைய நான் இதுவர திட்டினது கூட கிடையாது. உனக்கு எது வேணும் வேணாம்னு நீ தான் முடிவு எடுக்கணும். இப்ப ஏதாச்சு குழப்பம்னா அமைதியா இரு. நேரம் வர்றப்ப பாத்துக்கலாம். தேவை இல்லாம எல்லார்கிட்டயும் எதையாச்சு பேசி உன்ன பெரிய ஆளா காட்டணும்னு அவசியம் இல்ல. அவங்க ரெண்டு பேரும் எங்கள நம்பி வந்து இருக்காங்க. நம்மளால ஒரு கஷ்டம்னா கெளம்பிருவாங்க. அந்த மாதிரி ஏதாச்சு நடக்க இருந்தா எங்களுக்கு உன்ன விட அவங்க தான் முக்கியம்னு முடிவு எடுக்க வேண்டி வரும். பாத்து நடந்துக்கோ” , என்று சென்றவரை வெறித்து பார்த்தாள் மீரா.
தான் யாருக்குத் தான் இங்கு முக்கியம் – அம்மா அப்பாவிற்கு, நந்தனுக்கு, அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த முகிலனுக்கு – யாருக்கும் முக்கியம் இல்லையா? இவ்வளவு பேசி அழுது கரைந்த பின்னும் எதுவுமே செய்யாமல் இருக்கும் முகிலன் மேல் ஒரு வகையில் கோபமும், இன்று அவனை சீண்டியதும் விறைத்துப் போய் உட்கார்ந்து இருந்த பாவமும் அவளுக்கு தன் மேலயே வெறுப்பைக் கொண்டு வந்தது.
யாரையும் பிடிக்கவில்லை. இங்கே இருக்க பிடிக்கவில்லை. இங்கே இருந்தால் தன் இயல்பு மாறி விடுமோ என்ற அச்சம் பிறந்தது. எங்கே போகலாம்?