மெதுவாக கண்விழித்தவன் தன் அன்னையின் முகத்தை அருகில் கண்டதும், “இப்ப தான் வழி தெரிஞ்சுதா உனக்கு. காலைல வந்து குதிச்சுட்டு தீபாவளின்னு கத்தினா நான் எழுந்து நீ சொன்னதெல்லாம் கேட்கணுமா”, என்று மீண்டும் தன் தூக்கத்தை தொடர முயற்சி செய்தான்.
“உனக்காக தானடா அம்மா கஷ்டப்பட்டு படியேறி போய் பழநி மலை முருகன்ட்ட வேண்டிட்டு வரேன், என்னய போய் இப்படி அலட்சியமா பேசுறியே. உனக்கெல்லாம் எப்படிடா இப்படி மனசு வருது”, என்று கண் கலங்கினார்.
“சீன் ஒட்டியே காலத்த தள்ளு”, என்று எழுந்து தன் அன்னையின் மடியில் தலை வைத்துக் கொண்டு, “சரி பானு எனக்கு என்ன வாங்கிட்டு வந்த”, என்றான்.
“ஏன்டா தள்ளாத வயசுல எனக்காக போய்ட்டு வந்தியே, என்ன வேண்டிகிட்ட, உனக்கு முட்டி வலி உண்டே, எப்படி படி ஏறின, உடம்புக்கு ஒண்ணும் இல்லையே – இப்படி ஏதாச்சு கேப்பேன்னு பாத்தா, சும்மா ஸ்கூல் போற பச்ச புள்ள மாதிரி அதக் கொண்டா இதக் கொண்டான்னு, தள்ளுடா எனக்கு தீபாவளி வேல இருக்கு”, என்று அவனை மடியில் இருந்து விலக்கினார்.
“சரி ஓவரா பண்ணாத, என்ன வேண்டிகிட்ட”, என்று கட்டிலில் இருந்து எழுந்தான்.
அமைதியாக அவனை பார்த்துக் கொண்டே அவன் அறையை விட்டு கிளம்பியபடி, “உனக்காக என்ன கேக்க முடியும்? என் புள்ளைக்கு அறிவையாச்சு கொடு ஆண்டவான்னு தான் கேக்க முடியும்”, என்று வெளியேறினார்.
முறைத்துக் கொண்டே குளியலறை செல்லத் திரும்பியவன், “பானு வந்துருச்சுன்னா கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும்டா சூர்யா”, என்றபடி தனது அலைபேசியை குளியலறைக்கு எடுத்து சென்றான்.
குளித்து விட்டு சமையலறை வந்தவன்,”உன் காபி தான்மா பெஸ்ட். வேணிம்மா வேலைக்கு வரலேன்னு வச்சுக்கோ சாப்பாடு கூட எனக்கு காலேஜ்ல கிடைச்சுரும். உன் ஹஸ்பண்ட் மிஸ்டர் கதிரவன் போடற காப்பிய வாயில வைக்க முடியல. வெந்நீர் கூட நல்லா இருக்கும்”, என்றான்.
“காலைலயே அவர திட்டலேன்னா உனக்கு முடியாதே”, என்றவள் தன் காபிக்கு அருகில் நான்கு பிஸ்கட்களை எடுத்து வைத்தார்.
“காசிக்குப் போனா பிடிச்ச எதையாச்சு விட்டுட்டு வருவாங்களாம். அது மாதிரி நீ என பழநி போய்ட்டு இந்த பழக்கத்த ஏன் விடக் கூடாது”, என்று பிஸ்கட்களை பார்த்தான்.
“என்னய வேண்டாம்னு கூட சொல்வ, இத விட மாட்டியே”, என்றவனிடம், “உன்னயெல்லாம் பிடிச்சா தான விடறதுக்கு”, என்று தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தார்.
“சுடர் கால் பண்ணவே இல்லையே”, என்றவாறு அவனை பார்த்தாள். சுடர் சூர்யாவின் மூத்த சகோதரி. திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறாள். சுடர், சூர்யா இருவரும் கதிரவன் பானுவின் பிள்ளைகள் தான் என்றாலும் இந்த வீட்டின் செல்ல பிள்ளை பானு தான். அதுவும் சூர்யாவும் பானுவும் பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை ஆரம்பித்து, அழுது புலம்பும் பானுவை யாராலும் சமாதானமே செய்ய முடியாது.
“பண்ணுவா பண்ணுவா. அத விடு, தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல், இன்னிக்காச்சு எதாவது செய்”, என்றவனின் அலைபேசி சிணுங்க, சட்டென்று ஒரு மின்னலுடன் அலைபேசியை எடுத்தவன், “சொல்லு மச்சான்”, என்றவாறு தோட்டத்தின் பக்கம் சென்றான்.
சிறிது நேரம் பேசி சிரித்தவன் தன் முதுகை துளைக்கும் பார்வை உணர்ந்து அலைபேசியை அணைத்து, “என்ன”, என்றான்.
“ஒண்ணும் இல்லையே, காலைல என்ன வேணும் உனக்கு சாப்பிடறதுக்கு”
“அதெல்லாம் விடு, எதுக்கு என்னய உளவு பாக்கிற”
“ஆமா இவர் பெரிய ராணுவ வீரன், உளவு பாக்குறாங்க, போடா. ஒரு ஒன்றை அணா போன், அந்த சைடு போயும் போயும் உன்ன லவ் பண்ற பொண்ணா இருக்கும். இத தான் நான் ரொம்ப நாள் முன்னாடியே கண்டுபிடிச்சுட்டேனே. புதுசா ஏதாச்சு சொல்லு”
“ரொம்ப நாள் முன்னாடியா. எப்ப”, என்றவனின் குரலில் தொக்கியிருந்தது சந்தேகம்.
“ஏன் ஒரு மாசம் முன்னாடி இருக்கும். உங்க அப்பாகிட்ட கூட சொன்னேனே, இந்த பய கூட படிக்கிற பொண்ணு யாரையோ லவ்ஸ் பண்ணுறான்னு சொன்னேன்”
சந்தேகம் நிவர்த்தி ஆனது. கடும் கோபத்தில் வரும் அமைதி காத்தான்.
நக்கலாக பார்த்த பானு, “ஏன் இல்லையா, காலைல அந்த பொண்ணுக்கு சாப்பாடு எடுத்துட்டு போற. பைக்ல அந்த பொண்ணோட நானே ரெண்டு தடவை பார்த்தேன். அவங்க வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்த. அவங்க அண்ணனுக்கு உடம்பு முடியலைன்ன உடனே அங்கேயே தவம் கிடக்கிற. அது ..”
“வாய மூடு. நீயா எல்லாத்தையும் நினச்சுக்குவயா. என்கிட்ட ஒரு வார்த்தை கேக்க மாட்டியா. என்ன தப்பா நினச்சா பரவால்ல. உன் பையன் அப்படி தான் இருப்பேன். அடுத்த வீட்டு பொண்ண எப்படி அப்படி நினைக்கலாம். அந்த பொண்ணு என் ப்ரெண்ட். அவள பத்தி உன் வாய்க்கு வந்தபடி எல்லார்ட்டயும் சொல்லுவயா? வயசாச்சே தவிர அறிவில்ல”
“என்னடா வாய் நீளமா போகுது, நீ யாரையோ லவ் பண்றேன்னு நினச்சேன்”
“ஆமா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். ஆனா உண்மை தெரியாம மீராவ எப்படி நீ அந்த மாதிரி பேசலாம். எதுனாலும் என்கிட்ட கேட்ருக்கணும்”
“ஓஹோ அப்படின்னா நான் என் இஷ்டத்துக்குத் தான் பேசுவேன்”
“நீ என்னானாலும் பேசு. ஆனா மீராவ பேசறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்”
“நீ என்ன அனுமதிக்கறது. போடா”
ஆத்திரத்தின் உச்சியை அடைந்தான் சூர்யா.
“உன்னைய திருத்தவே முடியாது. உன் பொண்ணுன்னா அப்படி பேசுவியா. அடுத்த வீட்டு பொண்ணு தான”
“என்னடா ஓவரா பேசுற. நான் அந்த மாதிரி ஆளா”
“ஆமா ஆமா, நீ அப்படித்தான்”
“அப்ப அந்த மீரா தான் உனக்கு உசத்தி அப்படி தான?”
உற்று பார்த்து விட்டு, “ஆமா அவ தான் உசத்தி”, என்றவனை கடுப்பாகவும், யார் அந்த மீரா என்று வெறுப்பாகவும் யோசித்தார் பானு.
“இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத,என்கிட்ட பேசவும் செய்யாத”, என்று அவனை தாண்டி சிவந்த கண்களுடன் சென்ற அம்மாவை முறைத்துக் கொண்டே நின்றான் சூர்யா.
—
“அப்பா”, என்று சோர்ந்து வந்து அமர்ந்த மீராவை சிறிது கவலையுடன் பார்த்தார் கிருஷ்ணன். “உங்க கிட்ட தனியா பேசணும்”, என்ற போது சற்று தள்ளி நின்ற துளசி, அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் விடுவிடுவென்றுவெளியேறினார்.
“என்னடா”
“எனக்கு என்னையே பிடிக்கலப்பா. நான் எங்கேயாச்சு கொஞ்ச நாள் போகட்டுமா”
“எங்க போகணும், ஏன் பிடிக்கல. உன்னய தான் எல்லாருக்குமே பிடிக்குமேடா”, என்றவரை சற்று இயலாமையுடன் பார்த்தவள், “ப்ளீஸ் பா. நீங்க கேள்வியா கேக்காதீங்கப்பா. எனக்கு உங்ககிட்ட எல்லாத்தையும் கேக்கற உரிமை இருக்கு அப்படின்னு நினைச்சுட்டு தான் வந்தேன். எங்கேயாச்சு என்னய அனுப்பி வச்சுருங்கப்பா. எங்க வேணும்னாலும் போறேன். ஆனா யாருக்கும் நான் எங்க இருக்கேன்னு சொல்ல வேணாம். அப்படியே தெரிஞ்சாலும் என்னய அவங்க தொடர்பு கொள்ளாத மாதிரி பாத்துக்கங்கப்பா”, என்றவளை வியப்போடும் வலியோடும் பார்த்தவர், “ஏதாச்சு ரொம்ப கஷ்டமா இருக்காடா”, என்று அவள் தலையை கோதினார்.
கஷ்டமா இருக்கா என்று யாருமே அவளிடம் இதுவரை கேட்டிராத அந்த அக்கறையான வார்த்தையிலும், சிறு தலை கோதலிலும் அடக்கி வைத்திருந்த துக்கம் ஆறாக, அவர் மடியிலேயே படுத்து அழ ஆரம்பித்தாள். இன்னமும் அவள் எதையும் சொல்லவில்லை என்பதும், அவர் தன் பெண்ணிடம் இதுவரை கண்டிராத கண்ணீரும் அவரை முடிவெடுக்க வைத்தன.
“சரிடா மீரா, கொஞ்சம் டைம் கொடு அப்பாக்கு. பத்திரமா இடம் பாக்கறேன். ஆனா தாங்க முடியாத கஷ்டம்னா அப்பாட்ட ஓடி வந்துரணும்”, என்றார். விசித்துக் கொண்டே தலையாட்டினாள் மீரா.
விமானத்தில் அருகருகே அமர்ந்திருந்த இரு பெண்களும் முதன் முதலாய் அமெரிக்கா செல்லும் பயணிகள் போல் அல்லாமல் கல் முகத்துடன் அமர்ந்து இருந்தனர். அழுது முகமெல்லாம் சிவந்து இருந்த பெண் விமான நிலையம் உள்ளே வரும்போது தன் தந்தை கூறியதை நினைத்து பார்த்தாள், “இங்க பாருடா. நீ கேட்டேன்னு தான் உன்னைய அனுப்பி வைக்கிறேன். அம்மாகிட்ட அத்தைகிட்ட கூட எங்க போற என்னனு சொல்லல. வீட்டுக்குப் போனா அவங்ககிட்ட என்ன சொல்லன்னு தெரியல. பாப்போம்”, என்ற பெருமூச்சுடன், “அவங்கள விடு, நான் என்ன பண்ண போறனோ நீ இங்க இல்லாம”, என்று கண்கலங்கினார். மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருந்தவளை திரும்பி பார்த்தார் பக்கத்தில் அமர்ந்து இருந்த முதிய பெண்மணி.
—-
விமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருக்கும் நேரம், அந்த முதிய பெண்மணியின் அலைபேசி ஒலித்தது. அதை எடுத்து “என்ன”, என்றவரிடம், “ஏர்போர்ட்டுக்கு நான் வரேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிட்ட, என் ப்ரெண்ட் உன்ன நம்பி தான் அவன் பொண்ண அனுப்புறான், உன் கூட தான் தங்க போகுது அந்த பொண்ணுன்னு சொல்லிருக்கேன், அவன நீ பாக்கவே இல்ல போல. ரெண்டு பேருக்கும் நான் தான் டிக்கெட் போட்டேன். பக்கத்துல தான் உக்காந்து இருக்கு?”, எனக் கேட்டார்.
“ஆமா ஆமா, இங்க தான் இருக்கு”, என்றவர், “உங்க ப்ரெண்ட் பேர் ஒண்ணும் வைக்கலயா அதுக்கு”, என்று கேட்டவரிடம், “வைக்காமலா இருப்பான். பானுன்னு ஒரு மோசமான பேர் மாதிரி இல்லாம அழகா மீரான்னு வச்சிருக்கான்”, என்று சொன்னதை கேட்டதும் பதட்டத்தில் தவறியது சூர்யாவின் அன்னையின் அலைபேசி.
“மைல்களுக்கு அப்பால் உடல் தான் பயணிக்கிறது;
மனம் அந்த வேப்ப மரத்தின் அடியில் உன் காலடி சத்தத்துக்காய்