மீராவின் வீடு அதகளப்பட்டது.
“நீங்க மீராவ சென்னைக்கு தான கூட்டிட்டுப் போறீங்கன்னு சொன்னீங்க , இப்ப அமெரிக்காக்கு அனுப்பி வச்சுட்டேன்னு சொல்றீங்க. அதுவும் யாரோ பேர் தெரியாதவங்க கூட. உண்மையா சொல்றீங்களா பொய் சொல்றீங்களா? அவ போன் ஆப் பண்ணிருக்கா. இப்ப இங்க என்ன நடக்குதுன்னு தயவு செஞ்சு சொல்லுங்க. கட்டினவட்ட சொல்லணும்னு உங்களுக்கும் தோணல, பெத்தவட்ட சொல்லணும்னு அவளுக்கும் தோணல. அவ்ளோ தூரத்துக்கு என்ன நடந்துச்சு? நான் என்ன சொல்லிட்டேன். கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லுங்க”,என்று ருத்ர தாண்டவம் ஆடிய துளசியை எப்படி சமாதானம் செய்வது என்று கிருஷ்ணனுக்கு தெரியவில்லை.
“இல்ல துளசி. அவ உடஞ்சு போய் இங்க இருக்க மாட்டேன்னு கதறி அழறப்ப என்னால என்ன செய்ய முடியும்?”
“ஓஹோ, என்கிட்ட பேசிருக்கலாமே. என்ன செய்யன்னு கேட்டு இருக்கலாமே. சின்ன சின்ன விஷயத்துக்குலாம் துளசி தேவைப்பட்டா உங்களுக்கு, பெரிய விஷயத்துல நீங்களே முடிவு பண்ணிக்குவீங்க”
“அப்படி இல்ல துளசி, எனக்கும் அவள அனுப்பறது வருத்தம் தான். அவ இல்லாம.. “
“வாய மூடுங்க. உங்களுக்கு அவ்ளோ தான் தெரியும். அவ இல்லாம இருக்கறது ஒரு கஷ்டம் தான் உங்களுக்கு. வயசுப் பொண்ண தெரியாத ஊருக்கு தெரியாத ஆளோட அனுப்பறது, அங்க போய் அவ என்ன செய்வா, எங்க தங்குவா, கூட யாரு தங்குவா எந்தக் கவலையும் இல்ல.அனுப்பி வச்சதோட சரி. வயசுப் பொண்ணு அப்பா அம்மா கூட இருக்க மாட்டேன்னு சொந்த வீட்ட விட்டுப் போகணும்னு சொல்றான்னா அதுக்கு யார் காரணம், என்ன காரணம்? யோசிச்சீங்களா?”, என்ற துளசியின் ஊடுருவும் பார்வையை தவிர்க்க தலை குனிந்தான் முகிலன்.
கிருஷ்ணன் சற்று அதட்டலாக, “யார் கூட எங்க தங்குவா, என்ன செய்யப் போறா எல்லாத்தையும் விசாரிச்சுட்டு தான் அனுப்பி வச்சுருக்கேன். நீ ரொம்ப டென்ஷனாகி என்னையும் டென்ஷன் ஆக்காத”, என்றதும் கொதித்துப் போனார் துளசி.
“டென்ஷன் ஆக்குறேனா? நானா நீங்களா? எனக்கும் இந்த வீடு பிடிக்கல. என்ன எங்க அனுப்புவீங்க சொல்லுங்க. என் பொண்ணு இல்லாம நான் தவிச்சுப் போறேன் உங்களுக்குப் புரியலையா? ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானும் கூட போயிருப்பேனே”, என்ற அழ ஆரம்பித்தார்.
கோபமாக கத்திய துளசியை கண்டு கூட அசராத கிருஷ்ணன், அவர் அழ ஆரம்பித்ததும் மிரண்டு போனார். ஓடி வந்து கையை பிடித்துக் கொண்ட வசுந்தரா, “அழாதீங்க அண்ணி, அவ இறங்கின உடனே நாம பேசலாம். இப்படி நீங்களே உடஞ்சு போன எப்படி அண்ணி”, என்று தேற்றினார்.
சிறிது நேரம் நிலவிய அமைதியை பயன்படுத்திக் கொண்டு முகிலன் தன் வீட்டிற்கு சென்றான். நந்தன் சற்று அதிர்ச்சி அடைந்து இருந்தான் என்றே சொல்ல வேண்டும். தன்னால் தானா என்று யோசிக்க ஆரம்பித்தான். அவள் யாரிடமும் சொல்லாமல் இப்படி செல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
கண்ணை துடைத்துக் கொண்ட துளசியை அவர் அறைக்குள் விட்டு விட்டு என்ன சொல்வேதென்று தெரியாமல் வசுந்தரா தன் வீட்டிற்கு சென்றார்.
பல முறை மீராவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட சூர்யா அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது தெரிந்ததும் கிருஷ்ணனுக்கு அழைத்தான். அவர் இருந்த சூழ்நிலையில், “அவ கொஞ்ச நாள் சொந்தகாரங்க வீட்டுக்குப் போறேன்னு ஊருக்குப் போயிருக்காப்பா. அவ கூப்பிட்டா உனக்கு கூப்பிட சொல்றேன்’, என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
ஏற்கனவே வருத்தமாக இருந்த மீரா இப்போது எங்கு போயிருப்பாள் என்று யோசித்தவன் முகிலனை பிறகு சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். மீரா, பானு யாரும் இல்லாமல் சற்று எரிச்சலாக இருந்த சூர்யா மலைக்கோட்டைக்கு கிளம்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அதை கதிரவனிடம் கூறிய போது, “படிச்சு முடிச்சுட்டேன், வேலைக்குப் போறேன்னு சொல்லணும், இல்ல மேல படிக்க வைங்கன்னு சொல்லணும். திருச்சிக்குப் போறானாமே மைனரு. வீட்ல கெட. எனக்கு தான் காபி போட தெரியாது, சார் ஸ்டராங்கா போட்டுக் கொடுங்க எனக்கும் சமைச்சு வைக்கிற அந்த அக்காக்கும்”, என்று முறைத்தவாறே வெளியேறினார்.
“பயபுள்ள போட்டு விட்ருச்சு போல”, என்று முனகிக் கொண்டே அறைக்கு சென்றான்.
வீட்டிற்குள் வந்த வசுந்தரா அமைதியாக சோபாவில் போய் அமர்ந்தார். ஒன்றுமே புரியவில்லை அவருக்கு. எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று இவர்களை வெறுப்பேற்றிய மீரா, மனம் தாங்காமல் எங்கோ போய் விட்டாளா? அவ்வளவு பக்குவம் இல்லாதவள் இல்லையே அவள். என்ன நடந்து இருக்கும். துளசி என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் யோசித்தவர், முகிலன் எங்கே என்று தேடினார். இவனுக்குத் தெரியாமலா இருக்கும்?
“முகிலா”, என்று அழைத்தவர் சத்தம் இல்லாமல் போகவே அவன் அறைக்குள் சென்று பார்த்தார். வெறிக்க வெறிக்க தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் சென்று அவன் தோளைத் தட்டினார்.
“என்னம்மா”
அவன் பக்கத்தில் அமர்ந்தவர், “என்னாச்சு முகிலா. மீரா எங்க”
“அதான் சொன்னாங்களே அமெரிக்கா போய்ட்டானு”, என்ற வறண்ட குரல் வசுந்தராவை தவிக்க வைத்தது.
“ஏன்”
அமைதியாக அமர்ந்து இருந்தான் முகிலன்.
“சொல்லு முகிலா. உங்களுக்குள்ள ஏதாச்சு பிரச்சனையா? அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பாளா? அண்ணி அழறத பாக்கவே முடியல எனக்கு. அப்படி என்ன ஒரு அவசர முடிவு அவளுக்கு. வீட்ல இவ்ளோ பேர் இருக்கோம், என்ன பிரச்சனைன்னு சொன்னா என்ன? அப்படியே பிரச்சினைனாலும் ஓடிருவாளா. சரி தான், நமக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்டா. வேற பொண்ணு பாத்துக்கலாம். நாள பின்ன இப்படி ஏதாச்சு எக்கு தப்பா முடிவெடுத்தா நம்மள தான் யாராச்சு ஏதாச்சு சொல்வாங்க. தப்பிச்சுட்ட முகிலா”, என்று வசுந்தரா போட்ட தூண்டிலில் மீன் விழுவேனா என்று அடம் பிடித்தது.
இன்னும் சற்றே ஆழமாக தூண்டிலைப் போட முயற்சித்தார் வசுந்தரா.
“அது என்ன தான்தோன்றித் தனம்? அப்பப்பா இப்படி ஒரு பொண்ண நான் பாத்ததே இல்ல. எனக்கெல்லாம் அவ மருமகளா வந்தா அவ கால உடச்சு..”
“நிறுத்துமா. அவ என்னால தான் அமெரிக்கா போயிட்டா”
“உன்னாலன்னா? சொல்றத முழுசா சொல்லு”
மீரா இவ்வளவு பெரிய முடிவு எடுப்பாள் என்று அறிந்திராத முகிலனுக்கும் யாரிடமாவது அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்று தோன்றியது. நடந்ததை மறைக்காமல் வசுந்தராவிடம் சொன்னான்.
கடைசியில் குரல் தழுதழுக்க, “அதனால தான் அவ கெளம்பிட்டா”, என்று முடித்த முகிலனை பரிதாபமாக பார்த்தார் வசுந்தரா.
“மீரா பாவம் தான முகிலா, ஏன் அப்படி சத்தியம் பண்ணி கொடுத்த”
“நான் அப்படி செய்யலேன்னா நந்தன் அன்னிக்கு கண்ட்ரோல் ஆகிருக்க மாட்டானேம்மா. அவனுக்கு பிரஷர் ரொம்ப ஏறிடுச்சு. மாமா என்ன பாத்து என் பையன இப்படி பண்ணிட்டேயேன்னு கேக்கக் கூடாதுல்லம்மா, அதான் சத்தியம் பண்ணேன்”
“சரி அந்த நேரத்துக்கு பண்ணிட்ட, அப்புறமா போய் அவகிட்ட பேசி சமாதானம் செய்ய வேண்டியது தான”
“மீரா பத்தி தெரியும்மா எனக்கு. அவளுக்கு எல்லாமே புரிஞ்சுருக்கு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் என்ன செய்யன்னு தெரில. இங்க இருந்து நேரா பாத்து அவஸ்தை பட வேண்டாம்னு கெளம்பிட்டா”, என்று தொண்டை அடைக்கக் கூறியவன், “என்ன தான் அவங்க அண்ணனுக்கு தான் சத்தியம் பண்ணினேனாலும் அவ வேண்டாம்னு தான சத்தியம் பண்ணிருக்கேன். நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டயா அத்தான்னு அவ கேட்டா நான் உடஞ்சு போயிருவேனேம்மா”, என்று குழந்தை போல் தேம்பி அழும் ஆளுமை நிறைந்த தன் மகனை தேற்ற வழியற்று விக்கித்து நின்றார் வசுந்தரா.
“வறண்டு கிடக்கிறது என் காடு
உன் விழிநீரையாவது சிந்திவிட்டு போ
எனக்காக விழும் உன் கண்ணீராவது
இரக்கம் கொள்ளாதா என்று தவித்துப் போகிறேன்”