அம்மா கேட்டது நினைவுக்கு வந்தது. “மீரா உன் மனசுல இருக்கானு மீராட்ட சொல்லிருக்கியா” – சொல்லாமல் என்ன? தான் தவித்த தவிப்பை தன்னை விட மீரா புரிந்து கொண்டது தானே ஆச்சரியம். அந்த வயதில் அது காதலா, நேசமா என்றெல்லாம் புரியவில்லை இருவருக்கும்.
மீரா எட்டாம் வகுப்பும் முகிலன்-நந்தன் பதினோராம் வகுப்பு அரையாண்டு விடுமுறையிலும் இருந்த நேரம். அந்த விடுமுறையில் கொடைக்கானல் போயே ஆக வேண்டும் என்ற நந்தனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால் அதற்கு பதிலாக தங்களுக்கு தங்கச் செயின் வாங்கியாவது தர வேண்டும் என்று நந்தன் தனது அப்பாவிடம் பிடிவாதம் பிடிக்கவே, அனைவரும் நகைக் கடை சென்றனர்.
ஒன்று போல் மூன்று செயின்கள் எடுத்து முடித்த பின் டாலர் தாங்களே தேர்ந்தெடுப்போம் என்று ஆளுக்கு ஒன்றாகத் தூக்கிக் கொண்டு வந்தனர். பளபளவென சிங்கப் பல் போட்ட டாலரைத் தான் எடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்த நந்துவை மிரட்டிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.
“கொஞ்சம் சிம்பிள்ளா எடு. பெரிய ஜமீன் இவரு”
முகத்தைத் தூக்கிக் கொண்டே ஒரு நட்சத்திர வடிவம் கொண்ட டாலரை எடுத்து வந்தான். மீரா தனது ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தான “M” – கேப்பிடல் எழுத்தில் இருப்பது போலும், முகிலன் தனது ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தான “m” – சிறிய எழுத்தில் இருப்பது போலும் தேர்ந்து எடுத்தனர்.
“உனக்கு பிடிக்கும்ன்னு இத எடுத்தேன் அத்தான்’, என மீராவும், “உனக்குப் பிடிக்கும்னு நான் இத எடுத்தேன்”, என முகிலனும் பேசிக் கொள்ள “ம்க்கும் ரொம்ப தான்” என நந்தனும் சலித்துக் கொண்டே வீடு வந்தனர்.
மறுநாள் காலை கிரிக்கெட் ஆடி விட்டு வந்த முகிலனிடம், “நந்து எங்க முகிலா”, எனத் துளசிக் கேட்டார்.
“அவன் முடி வெட்டிட்டு வரேன்னு போயிருக்கான் அத்தை. நீங்களும் அம்மாவும் கோயிலுக்குப் போகணும் சீக்கிரம் வான்னு அம்மா சொல்லிருந்தாங்க அதான் நான் முதல்ல விளையாடிட்டு வந்துட்டேன்”
சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த முகிலன், மீரா வருவதை பார்த்ததும் சாவியை கொடுத்தான்.
“சாப்பிட சொல்ல சொல்லிருப்பாங்களே”, என்று சிரித்தவாறே மீரா வீட்டை நோக்கித் திரும்பினாள். ஏதோ உறுத்தவும் முகிலன் மீராவை நிறுத்தினான்.
“உள்ளே வா மீரா”, முகிலனின் இரும்புக் குரலில் வெளிறிப் போனாள் மீரா.
“என்ன அத்தான்”
உள்ளே ஒரே பதற்றம் உருவாயிற்று முகிலனுக்கு.
“இங்க உக்காரு மீராக் குட்டி,” முகிலன் மிக முக்கியமான நேரங்களில் தான் அப்படிக் கூப்பிடுவான். பொழுது சாயும் நேரம் மீரா விளையாடிக் கொண்டிருந்தால் வீட்டுக்கு போக சொல்லி கண்டிப்பு காட்டும் போதோ, கடினமான பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, துளசி மீராவை எதற்காவது திட்டும் போதோ தான் இந்த மீராக் குட்டி வெளியே வரும்.
சில நொடிகள் யோசித்தான். பதட்டமாகவே இருந்தான். கோபத்தை கூட வெளிப்படுத்தாத முகிலனை இப்படிப் பார்த்ததே இல்லை யாரும்.
தனது அறைக்குள் சென்றான். “தனது மீரா அல்லவா அவள்? இனிமேலும் தன்னிடம் பழைய மாதிரி நடந்து கொள்வாளா? அவள் பேசாவிட்டால் நான் என்ன ஆவேன்? பழைய முகிலனாகத் தன்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவனால். எதாவது செய்ய வேண்டும். தனக்குத் தான் அவள் என்பதை புரிய வைக்க அவள் இன்னும் குழந்தை தான். கொஞ்ச நாளில் புரிந்து கொள்வாள். புரியுமா? புரிந்தால், தான் நினைத்தபடி அவளும் நினைப்பாளா? இப்போதைக்கு அச்சாரமாய் ஏதாவது செய்ய வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்”, மூளையை கசக்கினான்.
மீரா உட்கார்ந்து இருக்கும் நாற்காலி பக்கம் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.
தனது கழுத்தில் கிடந்த “m” போட்ட டாலர் செயினை கழற்றி, மீராவிற்கு அணிவித்தான்.
“அம்மா இப்ப வந்துருவாங்க. பயப்படாத. இங்கேயே இரு”, என்று எட்டிப் பார்த்தான். மீரா அவனை குழப்பமாகவே பார்த்தாள்.
என்ன தான் மீரா தைரியமான பெண் தான் என்றாலும் இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வோளோ, அத்தை முதலிலேயே சொல்லிக் கொடுத்திருப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட்டான். அத்தை சீக்கிரம் வந்தா தான் நல்லது. அதுவரைக்கும்,
“டீ போட்டுத் தரேன் இரு”
படபடப்புக்கு அதிக சீனி சேர்த்து சூடாக குடிக்கவும்னு எங்கயோ யாரோ சொன்னது ஞாபகம் வரவே, மூன்று கரண்டி சீனி போட்டு மீராவிடம் கொடுத்தான்.
“அத்தான், நீ டீ போட்டுட்டியேன்னு தான் குடிக்க முயற்சி பண்ணேன். ஐயோ எவ்ளோ இனிப்பு. எனக்கு வேணாம்”
“படபடப்பா இருந்தா அப்படித் தான் குடிக்கணும்”
“முதல்ல நீ குடி. நானும் அப்போ இருந்து பாக்கறேன். நீ தான் குட்டி போட்ட பூனை மாதிரி அங்க போற, இங்க வர, தலைய பிடிச்சுக்குற. தயவு செஞ்சு என்னனு சொல்லு”
“… அதான் மீரா. பயப்படக்கூடாது”
“ப்ளீஸ் அத்தான்… மொக்க போடாத. என்ன விஷயம்”
“அதாவதுடா… “
ஒரு வேளை விஷயம் தெரியாமல் தான் தான் அவசரப்படுகிறோமோ. அப்படி இருக்காதோ. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்க இருந்த நிலையில் அங்கே தென்பட்ட இரண்டு பெரியவர்களின் தலை தெரிந்ததும், “இப்ப போ. இந்த செயினை எப்பவும் கழட்டக் கூடாது. யார்ட்டயும் எதுவும் சொல்லாத” என்றான்.
சிறிது நேரத்தில் தான் பூப்படைந்த செய்தி தெரிந்த மீரா, இதற்குத் தான் இவ்வளவு பதட்டப்பட்டானா முகிலன் எனத் தெரிந்ததும் சிரிப்பும், அவனுக்குத் தான் முதலில் தெரிந்தது என கூச்சமும் கொண்டாள். ஆனாலும் அவன் அதை அவளிடம் சொல்லாமல் அவளை எங்கும் செல்லவும் விடாமல், “பயப்படக் கூடாது”, எனத் தேற்றியதை நினைத்துப் பார்த்தாள். இதெல்லாம் இயல்பு தான் என்று அவளை நடத்தினான் என்றாலும் ஏனோ பதட்டம் கொண்டானே என சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
தான் முதலில் தெரிந்து கொண்டோமே, மீரா என்ன நினைத்திருப்பாள் என்றெல்லாம் முகிலனுக்குத் தோன்றவே இல்லை. இனிமேல் அவளை நம்முடன் பேச விடுவார்களா, அவள் சொந்தங்கள் நம்மை அவளிடம் நெருங்க விடுவார்களா என்றெல்லாம் நினைத்து இரவெல்லாம் தூக்கம் தொலைத்தான் முகிலன். அவள் இல்லாமல் தான் இல்லை என மெதுவாகப் புரிந்தது. இப்போது தான் இது புரிய வேண்டுமா? தவித்து போய் விட்டான் முகிலன்.
பட்ட அடிகளினால் பக்குவப்பட்ட தன்னை விட, எல்லாம் கிடைத்தும் அவள் பக்குவமாய் இருப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அழகான கவிதை அவள். அவளது நிமிர்ந்த சுபாவமும் எதையும் சமாளிக்கும் திறனும் முகிலனுக்கு அவளை நிரம்பவே பிடித்துப் போயிற்று. ஆனாலும் நேற்றைய தருணத்தில் தான், அவள் இல்லாமல் தன்னால் இயங்க முடியாது, அவள் மேல் அவ்வளவு நேசம் கொண்டிருக்கிறோம் என்றே புரிந்து இருக்கிறது. இதெல்லாம் அவளுக்குப் புரிந்து இருக்காது. புரிந்தாலும் அமைதியாக இருந்து விடுவாள். இப்போதைக்கு இந்த அமைதி தான் தனக்கும் தேவை என்று உணர்ந்தான்.
பெரியவர்களை ஒரு நிமிடம் யோசித்தான். இப்போதைக்கு மனதை கட்டுக்குள் வைத்திருப்பது – மீதி காலத்தின் கையில் என்று முடிவு செய்தான். விரிந்த தன் இலைகளை தானே மூடும் அதிசய தொட்டாச்சிணுங்கியாய் குழம்பியது மனது. இரவு முழுவதும் ஒரு வித பரவசமும் குற்ற மனப்பான்மையும் அவனை ஆட்கொண்டன.
தாமதமாய் எழுந்த முகிலனை, கிருஷ்ணன் இரண்டு முறை வந்து தேடித் போனதாக வசுந்தரா கூறவே, கலைந்த தலையும் சிவந்த விழிகளுமாய் போய் நின்றான். “ஒண்ணுமில்ல முகிலா. நந்து குளிச்சுட்டு இருக்கான், அவன் வந்த உடனே அவன கூட்டிட்டு கொஞ்சம் கடைக்கெல்லாம் போயிட்டு வரியா, லிஸ்ட் அத்தைட்ட வாங்கிக்க, சாப்டுட்டு போ, நான் சடங்குக்கு நாள் குறிச்சுட்டு வரேன்,” எனவும் தலை ஆட்டியபடி உள்ளே சென்றான். இன்னும் விருந்தாளிகள் வந்திராத நிலையில் துளசி சமையலறையில் வேலையாக இருந்தார்.
“கை கழுவிட்டு வா முகிலா. இன்னிக்கு சமைக்க வேணாம்னு வசுகிட்ட சொல்லிருக்கேன். ரெண்டு பேருக்கும் இன்னிக்கு இங்க தான் சாப்பாடு. நீ முதல்ல சாப்பிடு. அப்புறமா லிஸ்ட் எடுத்துத் தரேன்”, என்றார் துளசி.
தன்னை மீறி யாரையோத் தேடி அலையும் கண்களை அடக்கி கை கழுவ பின்கட்டிற்கு சென்றான். அங்கே துணி காயப் போட்டு கொண்டிருந்த மீரா, எப்போதும் போல் அவனை பார்த்து மென்மையாய் சிரித்தாள். தயங்கியபடியே கை கழுவிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து, தனது கைகளில் பொத்தி வைத்திருந்த “M” போட்ட செயினை அவன் கழுத்தில் மாட்டியபடி, “கண்ணெல்லாம் எப்படி செவந்து இருக்கு. ஒழுங்காத் தூங்கு அத்தான். , எனக் கூறவும் வார்த்தை இழந்து அவளை பார்த்தபடி நின்றான்.
“போய் சாப்பிடு. இன்னும் பத்து நாள் வீட்ட விட்டு எங்கயும் போகக் கூடாதாம். அப்புறம் உங்க வீட்டுக்கு எப்பயும் போல ஓடி வந்துருவேன்”.
கண்களை உருட்டியபடி அக்கம் பக்கம் பார்த்து விட்டு, அவன் தலைமுடியை கலைத்து, “யாரையும் தொடக் கூடாதாம். அம்மா சொல்லிருக்காங்க, வேணும்னா போய் குளிச்சுக்கோ அத்தான்”, என்று சொல்லியவாறே குறும்பாய் சிரித்து விட்டு உள்ளே ஓடினாள்.
தான் தூங்கவில்லை என்பதை உணர்ந்து மறு அச்சாரமாய் அந்தச் சங்கிலியை போட்டு விட்டாளா எனவும் தெரியவில்லை. எல்லாம் புரிந்து பேசுகிறாளா, இல்லை இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளா? எதுவும் புரியவில்லை. ஆனாலும் இனிமையாக இருந்தது இந்த உணர்வு. நாட்கள் செல்ல வேண்டும். இன்னும் நாம் இரண்டு பேரும் வளர வேண்டும். அதுவரை எனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாய் இருக்கட்டும் இந்த நேசம்.