நீரில் போட்டால் வெடித்துச் சிதறுமாம் கனகாம்பர விதை. தன் நேசத்தை யாருக்கும் தெரியாமல் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த முகிலன், மீராவின் ஈர விழி கண்டபோதெல்லாம் உள்ளுக்குள்ளே வெடித்துச் சிதறினான். பல நேரங்களில் பெரியவர்களுக்கு தெரிந்தால் தன்னை எப்படி நினைத்து விடுவார்களோ என்ற பயம், மீராவும் தன்னை போல் நினைக்கிறாளா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும் முதலில் படிப்பில் கவனம் தேவை என்பதை மந்திரமாய் உருபோட்டுக் கொண்டான். மீரா, நந்தனுக்கும் பாடங்கள் சொல்லித் தருவான்.
யாருக்கும் காத்திருக்காமல் வருடங்கள் ஓடிற்று. முகிலன் பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், நந்தன் ஓரளவு நல்ல மதிப்பெண்களுடனும் தேறினர். வசுந்தரா நிம்மதி அடைந்தார். வசுந்தராவை விட கிருஷ்ணனும் துளசியும் மீராவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஊரில் இருந்து வந்த வாடகை பணத்தை சேர்த்து வைத்ததில் முகிலன் விருப்பப்பட்ட பொறியியல் படிப்பில் சேர்த்து விடலாம் என்று வசுந்தரா நம்பிக்கை வைத்து இருந்தாள். அதற்கெல்லாம் வேலை வைக்காமல் முகிலனின் மதிப்பெண்ணிற்கு திருநெல்வேலி பொறியியல் கல்லூரியிலேயே கூப்பிட்டு இடம் கொடுத்தனர்.
“நீ என்னடா நந்தா படிக்கப்போற”, கிருஷ்ணன்.
“முகிலன் கிளாஸ்ல சேர்த்து விட்ருங்கப்பா”
“அவன் படிச்சு ப்ரோபெஸ்ஸர் ஆகப் போறானாம். சார் என்ன ஐடியா?”
“படிப்போம் ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலேன்னா..”
“ஆகலேன்னா?”
“”உங்க ஹார்ட்வேர் தொழில் ஆளில்லாம தான இருக்கு”
“”அடிங்க”
முகிலனும் நந்தனும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்து இருந்தனர்.
மனதிற்குள் ஆராதிக்கும் மீராவும், அவ்வப்போது நேரில் பார்க்கும் மீராவும் அவனை இம்சித்துக் கொண்டே இருந்தனர். தன்னை சமாளிக்கவே பெரிய பாடாக இருக்க, முழுக்க முழுக்க பிளேபாய் ஆக மாறியிருந்த நந்தனை சமாளிப்பது தான் முகிலனுக்கு பெரிய சவாலாய் இருந்தது. கல்லூரி வரும் வரை நந்தன் அமைதியாகத் தான் இருப்பான். அதற்கு பிறகு பெண்கள் கூட்டம் அவனை மொய்க்கும்.
“என்னடா பேசுவ. எல்லாப் பொண்ணுங்களும் உன்ட்ட தான் பேசுறாங்க”
“விடுறா.. அதெல்லாம் உனக்குப் புரியாது”
பேசிக் கொண்டிருக்கும் போதே, “நந்து, ஒரு சின்ன ஹெல்ப்”, என்று யாராவது ஒரு பெண் வருவாள்.
“போடா போடா”, சிரித்தபடியே வழி அனுப்புவான் முகிலன். ஆனாலும் அவன் போக்கை அவ்வப்போது கண்காணிப்பது, கண்டிப்பது, படிப்பு விஷயத்தில் கறார் காண்பிப்பது எல்லாம் முகிலன் வேலை.
இப்போது மீரா பத்தாம் வகுப்பில் இருந்தாள். படிப்பில் படு சுட்டி தான். அதைத் தவிர கவிதை, இயற்கை என அவளுக்கென்று சில தனிப்பட்ட ரசனைகள் இருந்தன.
“பொக்கிஷமான எதுவுமே நிலத்துல தங்கறது இல்ல .. இல்ல அத்தான். பாரு இந்த மழைத் தண்ணிய கைல பொத்தி தான் வச்சுக்க முடியுமா?”
“பக்கெட்ல புடிச்சுக்க வேண்டியது தான”, நந்தன்.
“அப்படி இல்ல நந்துண்ணா. அந்த குளிர்ச்சியோட அந்த தூய்மையோட ..”
“ஆள விடுமா தாயே”, என ஓடுவான் நந்தன்.
பண்டிகை விடுமுறை எனத் தொடர்ந்து மூன்று நாலு நாட்கள் விடுமுறை வர, மூன்று பிள்ளைகளும் அவ்வப்போது அரட்டை அடித்தபடி இருந்தனர். படிப்பதற்கு இருந்தால் மீரா நீங்க போங்க நான் நாளைக்கு வரேன் என்று சொல்லி விடுவாள்.
அன்று என்னவோ பகலெல்லாம் படித்து முடித்த களைப்பில் கொஞ்ச நேரம் மாடிக்கு வந்தாள். அங்கே ஏற்கனவே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் முகிலனும் நந்தனும். படிப்பு நேரம் தவிர முடிந்த அளவு அவளை தள்ளியே நிறுத்தி இருந்தான் முகிலன். இப்போது இயல்பாக மீரா முகிலன் அருகில் அமரவும், நெஞ்சம் தறி கெட்டு ஓடத் துவங்கியது. குளுகுளு காற்றும், நிலவும், மீராவும் முகிலனுக்கு அனாசயமாய் மூச்சு முட்டச் செய்தனர்.
“மச்சி, இந்த குளுகுளு காத்துல ரொமான்டிக்கா பீல் ஆகுது”,
“ஏன்டா”, கடுப்பாகினான் முகிலன்.
புன்னகைத்துக் கொண்டே இருந்தாள் மீரா.
“கீழ ஒரே போர். எப்பப் பாத்தாலும் எல்லாத்திலயும் மூக்க நீட்டும்ல அந்த அத்தை வந்திருக்கு. நந்துண்ணா, நீங்க சொல்லுங்க. உங்க லவ் ஸ்டோரிய”
“ஆள விடுங்கடா டேய்”, என்று சிரித்தபடி அவன் வீடு நோக்கிப் போனான் முகிலன்.
சிறியவர்கள் மூவருமே ஒரு வீட்டின் சொந்த பந்தம் வந்தது தெரிந்தால் தேவை இல்லாமல் பிரச்சனை வேண்டாம் என்று அங்கே வராமல் தவிர்த்து விடுவர். அப்படித் தான் கிளம்பினான் முகிலன். மீராவின் அருகாமை அவனை ஏதோ செய்யவே இதைக் காரணம் காட்டி இறங்கி விட்டான். மாடிப்படி இறங்கி வீட்டிற்குத் திரும்பும் நேரம் அந்த அத்தை பார்த்து விட்டார். வேண்டும் என்றே அவன் காது பட, ” வயசுக்கு வந்த பொம்பளப் பிள்ளை இருக்க வீடு மாதிரி தெரில இது, இந்த கிருஷ்ணன் யார் என்ன தரம்னு தெரியாம எல்லாத்தையும் உள்ள விடுறானே. வரவங்களுக்கும் அறிவில்ல”, என்றாள். அவள் பேசியதை வேறு யாரும் கேட்க இல்லை.
மனதெல்லாம் புண்ணாகி குத்தி குடைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டுமொரு காயம் பட்ட இரவு அவன் தூக்கம் கலைத்தது. சரி தானே, வயது வந்த பெண் ஒருத்தி இருக்கும் இடம் அல்லவா? மாமாவும் அத்தையும் இடம் கொடுத்ததால் தான் அதை உபயோகப்படுத்திக் கொள்கிறோமோ? நன்கு படித்து வேலைக்கு சென்றாலும் நம்மால் மாமாவிடம் பெண் கேட்க முடியுமா? மீராவுக்கு அப்படியொரு எண்ணம் நம் மேல் இருக்குமா? மீராவை நினைத்தால் மட்டும் அவன் நெஞ்சம் தளும்பி விடுகிறது. இன்றைய மாலைப் பொழுதின் மயக்கம் வேறு…
மறுநாள் நந்தன் மற்றும் சில நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வரும்போது முகிலன் அம்மா நந்தன் வீட்டில் இருந்தார். வசுந்தரா அங்கு இருந்ததால் நந்தன் வீட்டிற்கு வந்த உறவினர் ஊருக்கு போய் விட்டது புரிந்தது. இருந்தாலும் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பிய போது துளசி அனைவருக்கும் தட்டிலேயே முறுக்கும், தேநீரும் எடுத்து வந்தார். முகிலன் ஒன்றும் சொல்லாமல் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மீரா, அவன் தட்டில் இருந்த முறுக்கை எடுத்து, “பல் உடைஞ்சுருமாம்மா”, என்று சிரிக்க, “இங்க வா, உடைச்சு காமிக்கிறேன்”, என துளசியும் சிரித்துக் கொண்டிருந்தார்.
இவளால் தான் பாதிக்கபட்டிருக்கிறோம் என்பதே தெரியாத மீராவின் இயல்பான பேச்சு, முறுக்கினால் வந்த பழைய ஞாபகம், முன் தினம் வந்த உறவினர் பேசியது எல்லாம் சேர்ந்து முகிலனை எரிச்சலாக்கியது.
“அத்தான், கொஞ்சம் மேத்ஸ் சொல்லித்தரியா.. இங்க எல்லாம் மொக்கைப் போட்டுட்டு இருக்காங்க. உங்க வீட்டுக்குப் போய்டலாம், ஸ்கூல் திறந்த உடனே எக்ஸாம் எனக்கு…”
“அவளே படிச்சுக்கணும்னா எதுக்குடா டீச்சர்ஸ், அதுவுமில்லாம நீ ப்ரொபெஸர் தான ஆகப் போற, ட்ரைனிங் எடுத்துக்க மச்சி”, என்று நந்தன் சிரிக்கவே, பட்டென்று வெடித்தான் முகிலன்.
“ப்ரொபெஸர் ஆனா கிளாஸ் ரூம்ல தான சொல்லிக் கொடுப்பேன்.. தனியா என்ன ட்யூஷன் அவளுக்கு. வயசு தான் ஆகுதுல்ல. அவளையே படிக்கச் சொல்லுங்க”, வெளியேறினான் முகிலன்.
கனத்த அமைதி நிலவியது.
இரண்டு நாள் யாரும் யாரோடும் பேசவில்லை. தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று முகிலனுக்கே புரியவில்லை. வீட்டின் செல்ல பெண் மீரா. அதற்காக எப்போதும் எல்லை தாண்டி நடப்பவளும் அல்ல. இப்போதும் அவள் மேல் தவறு எதுவும் இல்லை. தன் இறுக்கங்கள், உறவினர் பேசியது எல்லாம் சேர்ந்து தன்னால் தான் இப்படி ஆகி விட்டது எனப் புரிந்தது. பெரியவர்களோ, ஏன் நந்து கூட இது பற்றி அவனிடம் எதுவும் கேட்காமல் இருந்தது அவனை உறுத்தியது. மீரா எப்படி இருக்கிறாள் என்றே தெரியவில்லை. அவள் தன்னை விட அழுத்தமாய் இருப்பாள் என்பது அவனை மிகவும் வருத்தியது. சின்னப் பெண்ணை வருத்தி விட்டோமே என தன் மீதே கோபம் கொண்டான். ஒவ்வொரு முறையும் அடுத்தவர்கள் இறங்கி வருவார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. தன் தவறினை தானே சரி செய்யலாம் என்று அங்கே சென்றான்.
“முகிலனக் காணோமே, என்னாச்சு நந்தா”, எனக் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தார். “இப்படியே விட்டுறதா, நீ பேசலாம்ல நந்தா அவன்கிட்ட. பாவம் பிள்ளை வருத்தப் படப் போகுது”.
“இல்லப்பா. அவன் யார்ட்டயும் இப்படி இதுவரை கோவப்பட்டது இல்ல. அவன் செஞ்சா எல்லாம் சரியா தான் இருக்கும். அவன்ட்ட கேள்வி கேக்கற அளவு எனக்குத தெரிலப்பா, மீரா தான் வாடி போச்சு”
இவர்கள் பேசியது முகிலனை மேலும் குற்ற மனப்பான்மைக்குள்ளாக்கியது.
உள்ளே நுழைந்த அவனை பார்த்து தலையசைத்து புன்னைகைத்தனர் இருவரும்.
“மீரா எங்க”, முகிலன் கேட்டான்.
“ஹால்ல உக்காந்து எதோ படிச்சுட்டு இருக்கா முகிலா. கூப்பிடவா”, எனக் கேட்டான் நந்தன்.
“இல்ல நீயும் வா. அவகிட்ட சாரி கேக்கணும்”
“இல்ல இல்ல நீ எதுக்கு சாரி … “
“நீ வாடா”, என அவனை இழுத்துச் சென்றான். புன்னைகைத்தார் கிருஷ்ணன். அங்கே துளசியும் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்தார்.
“மீரா”
“சொல்லு அத்தான்”
அழுத்தக்காரி.. கோபம் இருந்தாலும் காண்பிக்கறாளா பார்.
“எதோ சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னியே”
“இல்ல வேணாம்”, சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் வழிந்தது. முகிலனுக்கு ரத்தம் வடிந்தது.
“கண்ணத் துடையேன் ப்ளீஸ்”, கெஞ்சினான் முகிலன்.
சட்டென்று துடைத்து அழகாய் சிரித்தாள். வடிந்த ரத்தம் இப்போது உள்ளே கெமிக்கல் ரியாக்சன் நடத்தத் துடித்தது. அணை கட்டினான் முகிலன்.
“சாரி மீராகுட்டி, நான் சொன்னா அதுல ஏதாச்சு நல்லது இருக்கும் தான. இங்க பாரு. நான் சொல்லித் தர மாட்டேன்னு சொல்லல. தனியா வேணாம். ஊர்ல யாராச்சு ஏதாச்சும் சொல்வாங்க. இப்போ அம்மா அப்பா இருக்காங்க, இப்ப நான் சொல்லித்தரேன்”, கொஞ்சம் புரிவது போல் கண்களை சுருக்கினாள் மீரா.