என்ன தான் ஊர் சுற்றினாலும், அரட்டை அடித்தாலும் வேலை என்று வந்து விட்டால் நந்தன் கொஞ்சம் ஒழுங்காகவே நடந்து கொண்டான். வேலையில் சேரும் முன்னரே கிருஷ்ணன் நந்தனை தனியாக கூப்பிட்டு சொல்லி விட்டார், ” இங்க பாரு நந்தா, உன் பழைய கதையெல்லாம் எனக்குத் தேவை இல்ல. நீ என்ஜினீயரிங்கே படிச்சுருந்தாலும் நீ எனக்கு கத்துக்குட்டி தான். நீயும் அப்படி தான் நினச்சு வேலை கத்துக்கணும், இது உன் தாத்தா காலத்து சொத்துலாம் கிடையாது. நானே கஷ்டப்பட்டு ஆரம்பிச்ச கடை. ஹார்ட்வேர்னா என்ன ஏதுன்னு கொஞ்ச கொஞ்சமா கத்துக்க. உன் வேலை சரியில்லேன்னா எல்லார் முன்னாடி திட்ட தான் செய்வேன். அதையெல்லாம் பொறுத்துகிட்டு வேலைக்கு வர்றதா இருந்தா வா. இல்லைன்னா உனக்கு பிடிச்ச மாதிரி வேற வேலை தேடிக்க”, என்று சிறிது கடுமையாகவே எச்சரித்து இருந்தார்.
எப்படியாவது கிருஷ்ணனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று நந்தனும், பாராட்டி விட்டால் இவன் தலையில் ஏறி விடுவான் என்று கிருஷ்ணனும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். பழைய சேஷ்டைகளை கை விட்டு நந்தனுமே தொழிலில் முழுதாய் இறங்கி விட்டான். முகிலனே நந்தனை பார்க்க கடைக்கு தான் வர வேண்டியதாகிற்று. அடிக்கடி வந்தால் அவன் வேலை கெட்டு விடும் என்று எப்போதாவது வருவான்.
நடுவில் மீரா தன் நண்பர்களை அழைத்து வந்த போது கூட நந்தன் வீட்டில் இல்லை. முகிலனிடம் மட்டும் மூவரை அறிமுகப்படுத்தினாள். “அத்தான், இது வந்து அமுதா, இது ஆராதனா அப்புறம் இவன் பேர் சூர்யா. அமுதா, ஆராதனா ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்து வராங்க. சூர்யா நம்ம ஊர் தான் அத்தான். நம்ம அப்பாவோட ஃபிரெண்ட் கதிரவன் மாமா பாத்துருக்கீங்களா, அவர் பையன். காலேஜ்ல பாத்தப்ப தான் தெரிய வந்துச்சு. இவன் ஸ்கூல்லயும் கம்ப்யூட்டர் குரூப் தான் அத்தான், அதனால எனக்கு இவன் தான் பேசிக் எல்லாம் சொல்லி கொடுத்தான்”.
அமுதாவும் ஆராதனாவும் மீராவுடன் வீடெல்லாம் சுற்றி பார்க்கையில் சூர்யா முகிலனுடன் பேசிக் கொண்டிருந்தான். “மீரா படிப்புல புலி அண்ணா, மீரா கவிதை எழுதினா நாங்க எல்லாரும் ரொம்ப பாராட்டுவோம், மீரா ப்ரோக்ராம் எழுதினா ஒரு மிஸ்டேக் இருக்காதுண்ணா”, என்று மீரா புராணம் பாடிய சூர்யாவை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன். அப்போது தான் வீட்டிற்கு வந்த நந்தனிடம் சூர்யாவை அறிமுகப்படுத்தினான்.
மூன்று பேரும் கிளம்பும் போது சூர்யா மீராவின் காதருகில் சென்று,”இந்த மீரா மயங்குற மன்னன் முகிலன் அண்ணா தான”, என்று கேட்ட போது மீரா அதிர்ச்சியும் வியப்புமாய் அவனை பார்த்தாள். “எப்படிடா”, என்று கேட்ட மீராவிடம், “இந்த லூசு அக்கா எங்கயோ மாட்டிருச்சுனு முன்னாடியே தெரியும், அது இங்க தான்னு இன்னிக்குத் தான் கண்டுபிடிச்சேன். முகிலன் அண்ணாவ பார்த்த உடனே எக்கச்சக்க பூக்கள் பூக்குதே உன் முகத்தில”, என்ற சூர்யாவை “போடா”, என்று வெட்க சிவப்புடன் சிரித்த மீரா நந்தனுக்கும் முகிலனுக்கும் புதிது.
அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி சூர்யா என்ன சொன்னான் என்று முகிலனிடம் சொல்ல ஓடி வந்த மீராவை, “நில்லு மீரா, எனக்கு என்னமோ பெருசா அட்வைஸ் பண்ணின. இப்ப என்ன அந்த சூர்யா கூட இவ்ளோ பேர் முன்னாடி தனியா அரட்டை. உன் லிமிட்ல நின்னுக்கோ”, என்று மிரட்டி விட்டுப் போன நந்தனை அதிர்ச்சியாய் பார்த்தாள் மீரா. நந்தனின் கடுமை சற்று அதிகம் என்று உணர்ந்த முகிலன், “விடு மீரா, அவன் எப்பயும் அப்படி தான, யோசிக்காம பேசிட்டான். உடனே தாமிரபரணிய திறந்து விட்டுறாத”, என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.
“இப்படி எத்தனை நாளைக்குத் தான் அத்தான் விடறது, அந்த சூர்யா என்னய அவனோட அக்கா மாதிரி இருக்கறதா அடிக்கடி சொல்லுவான். அவங்க அக்கா கல்யாணம் ஆகி துபாய்ல இருக்காங்க, அவங்களுக்கு பதிலா என்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லுவான். அவன்கிட்ட பேசறத போய் திட்டிட்டாங்க நந்துண்ணா. என்ன ஏதுன்னு விசாரிக்கக் கூட மாட்டாங்க”, என்றவாறே மூக்கை உறிஞ்சினாள்.
இப்படியே விட்டால் அழுது விடுவாள் என்றுணர்ந்த முகிலன் அதற்கு அணை கட்ட முடிவு செய்தான்.
“சரி, அக்காவும் தம்பியும் என்ன ரகசியம் பேசினீங்க”
அந்த அக்கா தம்பியில் நிம்மதி அடைந்த மீரா,”ஒண்ணுமில்ல அத்தான், அவன் நான் யாரோயோ விரும்புறேன்னு கெஸ் பண்ணிருக்கான், இன்னிக்கு உன்ன பாத்த உடனே சரியா கண்டுபிடிச்சுட்டான். என் மூஞ்சிய பாத்தா அப்படியா தெரியுது”?
“உன் மூஞ்சிய பாத்தா எனக்கு என்னமெல்லாமோ தெரியுது மீரா”, என்று சொல்ல நினைத்தவன் அவள் ஏற்கனவே நந்தன் தப்பாக நினைத்து விட்டான் என்று தவித்துப் போயிருக்கிறாள் என்பதால் அமைதி காத்தான்.
“அக்காக்கு அறிவு கம்மின்னா கூட தம்பி கொஞ்சம் ஷார்ப் தான் போல”, எனவும் சிரித்தபடியே “கம்மி தான், கம்மி தான், அதான் மிஸ்ஸஸ் மீரா முகிலனாக முயற்சி பண்றேன் போல”, என்று கலகலத்தாள்.
“அடிங்க”, என்று அவள் தலையில் செல்லமாக குட்டிய அவன், “சரிடா, நேரமாகுது போய் தூங்கு”, என்று அங்கிருந்து அகன்றான். அவன் வீட்டுக்குள் போகும் வரை வைத்த விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் முகிலனின் மான் விழியாள்.
மறுநாள் கல்லூரியில் சூர்யாவை பார்த்த மீராவிற்கு ஒரே உற்சாகம். முகிலன் சொன்னதை எல்லாம் அவனிடம் அப்படியே ஒப்பித்தாள். “அத்தான், அத்தான்”, என்று ஒவ்வொரு முறை அவள் விழி விரித்து சொல்லும் போதெல்லாம் சிவந்தவளை கேலி செய்தான் சூர்யா.
“பாத்தியா, தம்பி தம்பின்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய் நானா கண்டுபிடிச்ச உடனே தான் உண்மைய சொல்லிருக்க, இல்லைனா எதுவும் சொல்லிருக்க மாட்ட. அப்படி தான சகோ”.
தொழில் ரீதியாக நந்தனை சென்னை அனுப்பி வியாபாரம் கற்றுத் தர முடிவு செய்தார் கிருஷ்ணன். பத்து நாள் குடும்பத்தை பிரிந்து பழக்கம் இல்லாத நந்தனை அனுப்பி வைக்க துளசிக்கும் மீராவிற்கும் சங்கடமாகவே இருந்தது. என்ன தான் சண்டையிட்டாலும் அவன் ஒரு விவரம் தெரியாத குழந்தை என்றே பெண் மனங்கள் புரிந்து வைத்திருந்தன. வசுந்தராவுக்குமே தன் பிள்ளையை மீட்டுத் தந்த தனயன் என்று நந்தன் மேல் தனிப் பாசம் உண்டு. முகிலனுக்கு அவன் கிருஷ்ணனுடன் இருக்கிறான் என்ற நிம்மதி போய் வெளியூருக்கு இவனை தனியே அனுப்புவதா என்ற பதற்றம். சென்னை செல்ல இரண்டு நாள் இருக்கையில், நந்தன் வீட்டில் இல்லாத நேரம் கிருஷ்ணனிடம் துளசி மெதுவாக ஆரம்பித்தார். வசுந்தராவையும் முகிலனையும் பேச்சு வார்த்தைக்கு துணைக்கு அழைத்திருந்தார்.
“இல்லைங்க, நம்ம நந்துக்கு இன்னும் விவரம் அவ்வளவா பத்தாது, அவன தனியா……”
பதிலே இல்லை அவரிடம்.
துளசி கண் காட்டவும், முகிலன் கிருஷ்ணன் அருகில் சென்று, “இல்ல மாமா, அவன் தொழில நல்லா பாத்துக்கிற அளவு பக்குவப்படுத்திட்டீங்க. இருந்தாலும் வெளியூருக்கு அனுப்புறப்ப ஒரு தடவை அவன் கூட நீங்களோ அத்தையோ போய்ட்டு வந்தா நல்லா இருக்கும். அவனுக்கு நேரத்துக்கு சாப்பிட கூடத் தெரியாது. புது ஊரு…”.
“அதனால தான் முகிலா அவன அனுப்புறேன். இன்னும் சில பேரோட எப்படி பேசணும்னு பக்குவம் வரணும் அவனுக்கு. கூட பொறந்த பொறப்புக்கு என் பொண்ணு சமாளிக்கிறா. வீட்டுக்கு வரப்போற பொண்ணு காலம் தள்ளணுமே முகிலா அவனோட.”, என்றவுடன் நந்தன் மீராவை பேசியதில் எதுவோ அவர் காதில் விழுந்து இருக்கிறது என்று உணர்ந்தனர் மீராவும் முகிலனும்.
“காலேஜ் முடிக்கிற வரைக்கும் நீ பொத்தி பொத்தி வளத்த, வீட்ல இந்த அம்மாமாரும் தங்கச்சியும் பாத்துக்குறாங்க, தொழில்ல நான் கூட இருக்கேன். இப்ப அவன் எப்படி தான் முன்னேறுவான்? சட்டு சட்டுன்னு கோவம் வருது அவனுக்கு. அதெல்லாம் சரியாகணும். நாள பின்ன தங்கச்சிய கட்டி கொடுத்தா அங்க படக்குனு பேச முடியுமா? என் காலத்துக்குள்ள அவன் நல்லபடியா வரணும் முகிலா. அதான் என் கவலை. உங்க எல்லார் கவலையும் விட எனக்கு அது தான் முக்கியம்”.
பதில் பேச முடியாமல் அம்மாக்கள் அங்கிருந்து சென்றனர்.
“எப்படி பேசுறாங்க பாரு வசு உங்க அண்ணன்”, என்று முணுமுணுத்தவாறே சென்றார் துளசி. முகிலனும் மீராவும் அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்தனர்.
“அவன் குழந்தை மாதிரி மாமா, அவன போய் கோச்சுக்காதீங்க”, என்று முகிலனும், “நீங்க நினைக்கற மாதிரி நந்துண்ணாவ நான் கஷ்டப்பட்டெல்லாம் சமாளிக்கிற அளவு அவங்க என்கிட்டே கோவிச்சுக்குலேயே அப்பா”, என்றவர்களை மறித்து, “பொம்பள பிள்ளைய வாய்க்கு வந்தபடி பேசறது தப்பு. யாரு என்னனு கேக்கணும், நம்ம தங்கச்சி அப்படி செய்வாளான்னு யோசிக்கணும், சட்டுன்னு அப்படி பேசுறது தப்பு. தங்கச்சி எப்படின்னு அவனுக்கு இன்னும் புரியலேன்னா எப்படி? எதையும் சீர் தூக்கி பாத்துட்டு முடிவு பண்ணனும். அது கிடையாது. அதுக்கு முன்னாடியே வாயில வந்தத பேச வேண்டியது. எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசினா எப்படி?.
அவன அங்கேயே கண்டிக்கணும்னு நினச்சேன். ஆனா அவன் உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்னு அதுக்கும் சண்ட போடுவான். அவனுக்கா தெரியட்டும். அப்புறம் நானும் அவன தெரிஞ்ச இடத்துக்கு தான் அனுப்புறேன். அது அவனுக்கு தெரிய வேண்டாம்”, என்று சொல்லி விட்டு, “எனக்கும் அவன பத்தி அக்கறை இருக்கு”, என்பதை மட்டும் துளசிக்கு கேட்குமாறு சற்று உரத்த குரலில் கூறவே மீராவும் முகிலனும் சிரித்துக் கொண்டனர்.
இரண்டு நாள் கழித்து மாலை ரயிலில் கிளம்பிய நந்தனை சிவந்த கண்களோடு விடை கொடுத்தார் துளசி. நீண்ட நாள் பிரிந்து இருக்குப் போவதாலோ என்னவோ கிளம்பும் போது நந்தன், “போய்ட்டு வரேன்டா”, என்று தங்கையிடமும் “பாத்துக்கோடா” என்று முகிலனிடமும் கூறினான். அவன் பாசமாகத் தான் இருக்கிறான் பாருங்கள் என்று கண்களாலேயே தகப்பனாரிடம் சமிஞ்சை செய்தாள் மீரா. அனைவருக்கும் மனது ஒரு மாதிரி இருக்கவே இரவு சிறிது நேரம் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டிருக்க, நமது இளங்கிளிகள் கண்களால் காவியம் படைத்துக் கொண்டிருந்தனர்.
உன் ஈர விழி என்னைக் கண்டு சிறகடிக்கும் போது
காட்டாற்று வெள்ளமொன்று இதயத்துள் பாய்ந்து ஓடுகிறது..!