இந்த சம்பவத்திற்கு பின் மீரா நந்தனிடம் எப்போதும் போல் பேசினாலும், நந்தன் ஒரு ஒதுக்கத்தை மீராவிடம் கடைபிடித்தான். அவளின் கண்டிப்பும், தன் மேல் குற்றம் சாற்றிய விதமும் அவள் மேல் அவனுக்கு ஒரு பயத்தை உருவாக்கத் தான் செய்தது. அவளுடன் அவன் கவுன்சிலிங் போகாமல் இருந்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று முகிலன் யூகித்தான். மீரா இதையெல்லாம் உணர்ந்து இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
முகிலன் எதிர்பார்த்தது போல் மீராவிற்கு முகிலன் – நந்தன் கல்லூரியிலேயே இடம் எளிதாக கிடைத்தது. அவர்கள் இருவரும் இறுதியாண்டிலும் , மீரா முதலாம் ஆண்டிலும் அடி எடுத்து வைக்கின்றனர். மீரா கணினிப் பிரிவு எடுத்திருந்தாள்.
கல்லூரி திறந்த பின் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. நந்தனும் முகிலனும் அவரவர் ப்ராஜெக்ட், இறுதியாண்டு பரீட்சைகள் என ஓடிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே ஏற்பட்டிருந்த ஒப்பந்தப்படி கல்லூரியில் ஒருவருக்கு ஒருவர் தெரியாத மாதிரியே நடந்து கொண்டனர்.
மீராவும் நந்தனும் தெரிந்தவர் போல் காண்பிக்காமல் இருக்க அவ்வளவு கஷ்டப்படவில்லை. மீராவும் முகிலனும் காதல் கயிற்றில் சிக்கி இருந்ததால் கண்டு கொள்ளாமல் போவதற்கு பெரு முயற்சி தேவையாக இருந்தது. மீராவின் விழிச் சுழலில் சிக்கித் தவித்தான் முகிலன் என்றால் முகிலனின் காந்த கண் பார்வையில் இருந்து விலக முடியாமல் தவித்தாள் மீரா. பெற்றவர் முன் இயல்பாக காட்டிக் கொண்ட இருவரும், கல்லூரி கூட்டத்தில் ஒருவரிடம் ஒருவர் சிக்கி தொலைந்து போயினர்.
மீராவை சுற்றியே இருக்கும் முகிலனின் பார்வை, மீராவின் ஒரு பார்வையில் உருகி விடுவான் முகிலன். மீரா பத்திரமாய் இருக்கிறாளா, கல்லூரிக்கு வந்து விட்டாளா, கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டாளா, கல்லூரியில் அவளுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே, தனது அறையில் இன்று என்ன செய்திருக்கிறாள் என்று முகிலன் விடும் மூச்செல்லாம் மீரா நாமமாகிற்று. மீராவிற்கு அவள் கண் பார்வை அகலாத எல்லைக்குள் முகிலன் இருப்பதே இனித்துப் போயிற்று.
முகிலனின் டைரியை படித்த பின் பித்து பிடித்தவள் போல் சிறிது நேரம் நின்று விட்டாள். உருகி உருகி மீராவை உள்ளுக்குள் ஊற்றி வைத்திருந்தான் முகிலன். இவ்வளவு நாள் இதையெல்லாம் தெரியாமல் விட்டு விட்டோமே என்று வருந்தினாள். எல்லாவற்றிக்கும் ஈடு கட்டுவது என்று முடிவு செய்தாள்.
அவனது டைரியில் மயிலிறகு நீட்டிக் கொண்டிருக்கும் பக்கத்தை திறந்தால், நீல நிறத்து கண்ணனும் ராதையும் நிற்கும் ஒரு படம் ஒட்டப்பட்டிருக்கும்.
“மயிற்பீலி கொண்டு மனம் மயக்கி
மீராவை ராதையாக்கினாய்..
உன் தோள் சாய்ந்து உருகும்
அந்நாளுக்குத் தான் இந்த பேதை
காத்துக் கொண்டிருக்கிறாள்..”,
என்று எழுதி இருப்பாள்.
துளசியிடம், “அம்மா நீ வைக்கிற காலை சாப்பாடு போர் அடிக்குது, நான் வசு அத்தை வீட்டில் சாப்பிட போறேன்”, என்று காலையிலேயே முகிலனை காண ஓடி வருவாள். சிரிப்பும் அரட்டையுமாக மீராவை காணும் போது அம்மா பிள்ளை இருவருக்குமே மனம் நிறைந்து போகும். சில நேரம் செல்லச் சிணுங்கலோடு வசுவை ஊட்டித் தர சொல்லுகையில், முகிலனின் இட்லித் துண்டுகள் சிவபெருமான் விழுங்கிய ஆலகால விஷம் போல் தொண்டையிலேயே நின்று விடும்.
“ஏன் இட்லி அவ்ளோ மோசமாவா இருக்கு, சாருக்கு தொண்டைல இறங்க மாட்டேங்குதே”, என்று வசுந்தரா பாடும் அங்கலாய்ப்புக்கு, “நீங்க எனக்கு மட்டும் ஊட்டி விடறீங்கல்ல, அதான் வசு அத்தை கடுப்பு அத்தானுக்கு. எவ்ளோ பஞ்சு மாதிரி இருக்கு”, என்று கூறியவாறே அவனை பார்த்து கண் சிமிட்டுவாள். என்னவோ செய்யும் மனதை அடக்க வழி தெரியாமலும், அவனின் அடங்காத மனதை அசாதாரணமாக அடக்கி ஆளும் அவனின் தேவதையும் முகிலனின் வாழ்க்கையை வண்ணமயமாகிக் கொண்டிருந்தனர்.
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
திடீரென்று ஒரு நாள் ஒரு தேவாரப் பாடலை எடுத்து வந்து அவனிடம், “இந்த பாட்டப் பாத்தியா அத்தான், மாணிக்கவாசகர் சிவபெருமானை நினைச்சு எப்படி உருகி இருக்காரு பாரேன். அவர ஒரு பொண்ணா கற்பனை செஞ்சு சிவன் மேல பைத்தியமாகிட்டேன்னு சொல்லுறார். பிச்சினா பைத்தியம் தானே அத்தான்? நான் கூட முகிலனின் பிச்சி ஆனேன்ல”, என்று விழிவிரித்து கேட்கும் போது, “நீயா பிச்சி, என்னய பித்தனாக்கிக் கொண்டிருக்கும் ராட்சசி நீ”, என்று மனதுக்குள் மயங்குவான் முகிலன்.
இப்படியாக நாட்கள் உருண்டோடி நந்தனும் முகிலனும் இறுதியாண்டை முடிக்க சில மாதங்களே இருந்தன. அவர்களது வகுப்பில் பயின்ற அவர்களின் தோழர் தோழிகள் ஒரு முறை இவர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் வகுப்புத் தோழிகள் நந்தனிடம் பேசும் முறையில் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியாத பெரியவர்கள் மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அவ்வப்போது அனுமானித்தபடி மீரா நந்தனின் தங்கை என்று ஊர்ஜிதப்படுத்திய அவர்கள் மீராவிடம், “நந்தன் தான் உன் அண்ணன்னு தெரிஞ்சுருந்தா உனக்கு பெரிய அளவுல மரியாதை கிடைச்சுருக்குமே மீரா காலேஜ்ல, ஏன் சொல்லல”, என்று கேட்டனர். சிரித்தபடியே, “வீட்ல அவங்கள படுத்துறது போதும்னு எனக்கே தோணிருச்சு, அதான் சொல்லல. மத்தபடி எங்க நந்துண்ணா எவ்ளோ பெரிய ஆள்னு எனக்குத் தெரியாதா,” என்று அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டாள் மீரா. நந்தனுக்கு பெருமை பிடிபடவில்லை. இத்தனை நாள் இருந்த ஒதுக்கம் மறைந்து இயல்பாக அவள் கையை பற்றிக் கொண்டான். நீண்ட நாள் கழித்து அண்ணன் தங்கையை அப்படி பார்த்த முகிலனுக்கு சந்தோஷமாக இருந்தது.
அந்த கூட்டத்தில் செல்வி என்னும் பெண்ணிடம் ஏதோ வித்தியாசம் இருப்பதை மீரா உணர்ந்த தருணம், நந்தன் அவளை ஏதோ கண் மூடி நிதானமாக இருக்கும்படி சைகை செய்தான்.
எல்லாரும் காபி அருந்திக் கொண்டிருக்கும் வேளையில், வசுந்தரா அவர்கள் வீட்டிற்கு சென்று சிற்றுண்டி எடுக்க மீராவையும் அழைத்துச் சென்றாள்.
பாதியில் அவளை நிறுத்திய செல்வியும் அவளது தோழியும், “மீர்ஸ், முகில்ஸ் இங்கே எவ்ளோ வருஷமா இருக்காரு. அவங்க அம்மா எப்படி? ரொம்ப முரடா”, என்றெல்லாம் சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். இந்த மீர்ஸ், முகில்ஸில் கடுப்பான மீரா வசுந்தரா முரடா என்றவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்றாள். எனினும் விருந்தினரிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்று கிருஷ்ணன் அடிக்கடி உபேதேசித்து இருந்ததால் அமைதியாக, “இந்த விளக்கமெல்லாம் எதுக்கு உங்களுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா, அதுவும் அத்தானோட வரலாறு எல்லாம் கேட்குறீங்க?” என்றாள்.
“ஹே, நீ என்ன முகில அத்தான்னு சொல்ற, கட்டிக்கப்போற செல்வி இருக்கும் போதே”, என்று அருகில் இருந்த பெண் கேட்டவுடன் மீராவிற்கு ஒரு நிமிடம் வாயடைத்து போயிற்று. அதற்குள் அங்கு வந்த நந்தன் என்னவென்று கேட்பதற்குள், “ஓ அப்படியா, அத்தானுக்கு யார பிடிக்குமோ அவங்கள தான கல்யாணம் பண்ணிப்பாங்க. அப்போ பாத்துக்கலாம்”, என்றவாறே அங்கிருந்து நீங்கினாள்.
அதற்குள் வசுந்தராவும் வந்து விடவே சிற்றுண்டி படலம் ஆரம்பித்தது. அந்த செல்வி சம்பவம் தவிர்த்து எல்லாமே இனிமையாகவே முடிந்து அனைவரும் கிளம்பினர்.
பெரியவர்கள் களைப்பில் உறங்க செல்லவே சிறியவர்கள் மூவரும் தனித்து விடப்பட்டனர். மீராவின் முகம் சிறிது வாடி இருப்பதைக் கண்ட நந்தன் மீராவிடம், “அவ காலேஜ்லயே எல்லார்கிட்டயும் அப்படி தான் சொல்லிட்டு இருக்காடா. முகிலனுக்கே ரொம்ப தெரியாது அவள பத்தி. ஆனா நீ நல்ல பதில் சொல்லிட்டேல, அப்புறம் என்ன”, என்று தேற்றினான். இது எதுவுமே தெரியாமல் கிருஷ்ணனுடன் நின்று தன் நண்பர்களை அறிமுகப்படுத்தி மேற்படிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்த முகிலனுக்கு எதுவுமே புரியவில்லை.
நந்தன் விளக்கியவுடன், “ஏன்டா, என்னய கூப்பிட்டு இருக்கலாமே நீ. இப்படி எல்லாம் பேசிட்டு
இருக்காளா. நான் அவகிட்ட பேசினது கூட கிடையாதேடா”, என்றான்.
“மீரா,அது தான் சரியா பேசிட்டயே, நீ இதுக்கெல்லாமா வருத்தப்படற”, என்று மீராவையும் கேட்கத் தவறவில்லை.
“இத நினச்சு வருத்தப்படல. மனசுக்கு ஏதோ போல இருக்கு அத்தான். நீங்க பேசிட்டு இருங்க, நான் போறேன்”, என்று கிளம்பிய மீராவை, “இன்னிக்குத் தான் என் மீரு குட்டி என்னய பெருமையா பேசுச்சுன்னு சந்தோஷப்பட்டேன், அதுக்குள்ள யார் கண்ணோ பட்டிருச்சு. நீ தான மச்சி, என்னய பாத்து பொறாமை பட்டது?”, என்ற நந்தனை பார்த்து சிரித்தாள் மீரா.
நிம்மதி பெருமூச்சு விட்ட முகிலனும், “இதெல்லாம் நல்லா பேசு, நீ முதலாளி ஆகப் போறத மீராகிட்ட சொன்னியா இல்லையா என்றான்”.
திடுக்கிட்ட நந்தன், “ஏன்டா எங்கப்பா காதுல விழப் போகுது. ஏற்கனவே எனக்கு யாரும் வேலை தரலேன்னு தான் அவரு ஐயோ பாவம்னு அவர் கடைல வேலை தரேன்னு சொல்லிருக்கார். அதையும் கெடுத்துறாத”, என்றவுடன் மீராவும் முகிலனும் சேர்ந்தே சிரித்தனர். முகிலன் அதே கல்லூரியில் மேற்படிப்பும், நந்தன் கிருஷ்ணன் கடையில் வேலை பழகவும் முடிவு செய்யப்பட்டது இப்படித்தான்.
“ஏன் மீரா, எங்க நட்பூக்கள் எல்லாம் இன்னிக்கு வந்துச்சே, உன் நண்பர்கள எப்ப கூட்டிட்டு வர்ற”, என்ற நந்தனிடம், “ஒரு நாள் கூட்டிட்டு வரேன் நந்துண்ணா, மொத்தம் ஒரு நாலஞ்சு பேர் தான் ரொம்ப பழக்கம்”, என்றாள்.
“ஆனா மச்சி, உலகத்த பாத்தியா, ராமனா இருந்த என்னய சந்தேக பட்டுச்சு, ஊமை மாதிரி இருந்த உன்னைய இன்னிக்கு ஒரு பொண்ணு தேடி வந்துருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது? நல்லதுக்கே காலமில்லை”.
சிரித்தபடி ,”ஓவரா பண்ணாதடா, போய் தூங்கு”, என்று அவன் முதுகில் தட்டினான் முகிலன்.
“மீரா, உனக்கு அண்ணின்னும் துளசி மேடம் எப்படினும் கேட்டு யாராச்சு கேட்டு வந்தாங்கன்னா என்னடா சொல்லுவ”,
“எங்க அம்மா பத்தி ஏன் விசாரிக்கிறீங்க, முதல்ல பையன பத்தி சரியா விசாரிங்கன்னு சொல்லிடுவேன் நந்துண்ணா”, என்ற மீராவை முறைத்தவாறு சென்றான் நந்தன்.
“ஏதாச்சு யோசிச்சுட்டே இருக்காத மீரா, இந்த மாதிரி இனிமே நடக்காம நான் பாத்துக்கிறேன். நீ போய் தூங்கு”, என்ற முகிலனை கலங்கிய விழிகளில் ஏறிட்ட மீரா, “உன்ன விட்டு இருக்கவே முடியாது அத்தான், அப்படி நினச்சு பாக்கவே பயமா இருக்கு”, என்று உடைந்த குரலில் கூற, இதை சற்றும் எதிர்பார்க்காத முகிலன், “அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீ இப்படி உடைஞ்சு போறது தான் என்னய கஷ்டப்படுத்துது மீரா”, என்றான்.
கண்ணில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே, “இல்ல அத்தான், இனி அழ மாட்டேன், ப்ராமிஸ்”, என்று கூறி புன்னைகைத்த மீராவின் ஈர விழி கண்டு உள்ளுக்குள் பதறிப் போனான் முகிலன்.
“உன்புன்னகைக்கு நான் காரணமாகும் போதெல்லாம் சிலிர்த்துப் போகும் என் இதயம்,
உன் கண்ணீருக்கு மட்டும் சத்தமே இல்லாமல் சில்லு சில்லாய் நொறுங்கிப் போகிறது “