நாட்கள் நகர்ந்தன. அனைவரும் எதிர்பார்த்த மாதிரி தான் ஆகிற்று. மீரா ஸ்டேட் ரேங்க் வாங்கி இருந்தாள். முகிலன்-நந்தன் படிக்கும் கல்லூரியிலேயே சேர்த்து விடலாம் என முடிவு செய்தார் கிருஷ்ணன்.
“இங்க பாரு மீரா. நீ எங்க காலேஜ் வரதெல்லாம் சரி தான். நீ வர்றதா இருந்தா நான் தான் உன் அண்ணன்னோ முகிலன் தான் உன் அத்தான்னோ அங்க வந்து உளரக் கூடாது.”
“நீங்க தான் அண்ணன்னு சொல்ல மாட்டேன். அத்தான பத்தி சொன்னா உங்களுக்கென்ன நந்துண்ணா?”
“ஆனா நானும் முகிலனும் சொந்தக்காரங்கன்னு எங்க காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும். அதனால நீ என் சிஸ்டர்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிரும். அப்புறம் டெய்லி ஒரு பத்து பேர் உனக்கு நாத்தனார்னு வருவாங்க. பரவால்லயா. அத விட முக்கியம் அந்த சிஸ்டர்-இன்-லாஸ் பத்தி வீட்ல யாருக்கும் தெரியக் கூடாது. டீலா?”
“இதுக்கு நான் உங்க தங்கச்சின்னு சொல்லாம இருக்கறது தான் எனக்கு மரியாதை”
“அத தான் நான் எக்ஸ்ப்ளயின் பண்ணேன், இல்ல மச்சி?”
இதற்குள் மீராவின் பள்ளி ஆசிரியை அவளது மதிப்பெண்களுக்கு அவளுக்கு கட்டாயம் மருத்துவ படிப்பு கிடைக்கும். எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ட்ரைனிங் போனால் சீட் கிடைத்து விடும் என பல முறை அழுத்திச் சொன்னார்.
ஆரம்பம் முதலே மருத்துவ படிப்பில் பெரும் ஈடுபாடு இல்லாததால் மீராவிற்கு துளியும் விருப்பம் இல்லை. ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள ட்ரைனிங் சென்டரில் கிருஷ்ணன் கட்டணம் செலுத்தினார்.
“சும்மா ஒரு மாசம் தான. போய் அந்த அனுபவத்தையும் கத்துக்க. கிடைச்சா டாக்டர் இல்லைனா இன்ஜினீயர். சரியாடா?” , என்ற கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் திருவனந்தபுரம் கிளம்பினாள்.
“நேரத்துக்கு சாப்பிடு. ஒழுங்கா தூங்கு. புது பிரெண்ட்ஸ் தான் இருப்பாங்க. பாத்துப் பழகு. எதுன்னாலும் போன் பண்ணு. தலைவலி மருந்து எடுத்தியா? புக்ஸ் எடுத்து வச்சுட்டியா. கார்ல தான் போற. இருந்தாலும் குளுருச்சுன்னா விண்டோ ஏத்தி விட்டுக்க. வேடிக்கை பாக்றேன்னு திறந்தே வச்சுறாத. அப்புறம் …”
படபடத்தது முகிலனே தான்.
“நீ வேணும்னா கூட வரியா முகிலா”, கிருஷ்ணன் கேட்கவும் தான் கொஞ்சம் நிதானித்தான்.
“அதில்ல மாமா. முத தடவை வெளியூர் போய் தங்குறா, அதான்”, என வழிந்தது அவனுக்கே தெரிந்தது.
“நான் வேணா வரட்டுமாப்பா”, என்ற நந்தனிடம், “ஊர் சுத்தாம அம்மாவையும் அத்தையயும் பாத்துக்க”, என்றவாறு காரில் ஏறினார். பெரியவர்களிடம் தனித்தனியே சொல்லிவிட்டு, இவர்கள் இருவருக்கும் பொதுவாக தலையசைத்தபடி மீரா காரில் ஏறினாள்.
“பிள்ளை வீட்ல இல்லனா வீடே வெறிச்சோடிப் போகுது”, என்று அங்கலாய்த்தபடி இருந்தார் வசுந்தரா. “அண்ணி நல்ல வளத்துருக்காங்க மரியாதை தெரிஞ்ச பொண்ணு. வந்தா கலகலன்னு பேசும். நான் சமைச்சத ஆசையா சாப்பிடும். அண்ணனும் அண்ணிக்கும் ரொம்ப போர் அடிக்கும்”, என்று மீராவைச் சுற்றியே பேசிக் கொண்டிருந்தார் வசுந்தரா. கேட்பதற்கு சுகமாக இருந்தது முகிலனுக்கு. பகலில் கல்லூரி, இரவு நந்தனுடன் ஊர் சுற்றுவது, படிப்பது என நேரத்தை நெட்டித் தள்ளினான். எல்லா இடத்திலும் மீரா நிற்பது போன்றே தோன்றியது. இன்னும் கொஞ்ச நாள் தானே வந்து விடுவாள் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.
இரண்டு வாரம் முடிந்தவுடன் உடம்பு சரியில்லை என்று கூறி இரண்டு நாள் விடுப்பில் வந்திருந்தாள். ஆளே பாதியாகி, முகமெல்லாம் வாடிப் போய் இளைத்து வந்தாள். “போதும் நீ படிச்சது. உடம்ப தேத்தி இங்கயே சேந்துக்கலாம். மெடிக்கல்லாம் வேணாம்”, என்ற முடிவுக்கு வந்தார் துளசி.
“ரெண்டு நாள் போகட்டும். அப்புறம் பாக்கலாம்”, என்றார் கிருஷ்ணன்.
ரெஸ்ட் எடுக்கட்டும் என்று வீட்டுக்கு வந்து விட்டான் முகிலன். கொஞ்ச நேரம் கழித்து யாரோ கதவை தட்ட, திறந்து பார்த்தால் மீரா நின்று கொண்டிருந்தாள்.
“வசு அத்தை இல்லையா”
“இல்ல அவங்க கோயம்பத்தூர் போயிருக்காங்க மீரா, என்ன வேணும்? உள்ள வா”
“இல்ல ஒன்னும் வேணாம். தனியா இருக்கும் போது வந்தேன்னு திட்டுவ”
சிரித்தபடி, “இல்ல, உள்ள வா”
அவளை அமரச் சொல்லி விட்டு மேஜை மேல் சாய்ந்து நின்றான் முகிலன்.
“என்னாச்சு மீரா? ஏன் டல்லா இருக்க? ஏதாச்சும் பிரச்னையா?”
குனிந்த தலை நிமிரவே இல்லை.
“மீரா”
விசும்பல் சத்தம் கேட்கவே என்னவோ ஏதோ என்று பயந்தபடி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“என்ன?”, என்று அவள் தாடையை பிடித்து நிமிர்த்த, கதறியபடி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் மீரா.
“இங்க பாரு. என்னனு சொல்லு. எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகுதுடா”, என்றவுடன் “என்னால அங்க இருக்க முடியல”, என்றுக் கேவினாள்.
“அது ஹோம் சிக். சரியாகிடும்”
“அதில்ல”, மறுப்பாய் தலையசைத்தாள், அப்போதும் அவன் கழுத்தை விடாமல். “உன்ன விட்டுட்டு இருக்க முடியல”.
முகிலனின் தலை முழுதும் மீரா பனிக்கட்டியை கொட்டிக் கவிழ்த்த நொடி அது. எப்படி பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து தடுமாறினான் இன்னும் அவள் கைப்பிடியிலேயே.
இவ்வளவு நாள் தவித்த தவிப்பெல்லாம் இந்த நிமிடத்தின் முன் ஒன்றுமே இல்லை என ஆகியது.
“சரி என்ன பண்ணலாம்”, சிரித்தபடி கேட்டான்.
“நான் உன்னோடயே இருந்துடறேன்”
“சரி இங்க பாரு”, என்று அவளை நிமிர்த்தி அவளை நேராகப் பார்த்தான்.
“திட்டப் போறியா”
“எதுக்கு”
“படிப்பு தான் முக்கியம் அப்படி இப்படினு”
புன்னகைத்துக் கொண்டே இருந்தான்.
திடீரென நினைவு வந்தவளாய், “நீயும் தேடினயா என்னய”
ஒன்றுமே சொல்லாமல் இருந்தான்.
“தொந்தரவு பண்றேனா உன்ன? எனக்கேத் தெரில என்ன பத்தி. ரொம்ப கஷ்டமா போச்சு. உன்னைய விட்டுட்டு இருக்க முடியல. எதுவும் யோசிக்க முடியல. இந்த செயின் மட்டும் இல்லைனா அவ்ளோ தான். உனக்கு என்னய பிடிக்குமா பிடிக்காத ஒண்ணுமே தெரில. உன்ன பாத்தா போதும்னு ஓடி வந்துட்டேன். இப்பயும் நான் செய்றது சரியா தப்பான்னு தெரில. நீ சொல்லு நான் என்ன செய்யட்டும்?”
இந்த மீரா புதிது அவனுக்கு. சட்டென்று முடிவு செய்ய தடுமாறுபவள் அவனது மீரா அல்லவே.
“வேணாம்னு நான் சொன்னா என்ன பண்ண போற”
“ஒதுங்கிடுவேன். உன்னைய கட்டாயப்படுத்த முடியாது என்னால. என் விருப்பத்த சொல்ல வந்தேன். மனசுக்குள்ள வச்சுட்டே இருந்தா மூச்சு முட்டுச்சு. இப்ப ரிலாக்ஸ் ஆகிட்டேன். நீ முடிவெடுத்துட்டு சொல்லு. பிடிக்கலேனாலும் சொல்லலாம். முகிலன் அத்தான் எது செஞ்சாலும் சரியா இருக்கும்”, என்றவாறே சிரித்தாள்.
இந்த சிரிப்பிற்கு மேல் தனக்கே தாங்காது என்று நினைத்து, “மக்கு மீரா”, என்றான்.
புதிராய் பார்த்தவளிடம், “இந்த செயின் போட்டதே நீ என்ன மிஸ் பண்ணாம இருக்கறதுக்கு தான. இதோ நீ போட்ட செயின். நான் கழட்டவே இல்ல பாத்தியா”
“அப்போவேவா?” விழி விரித்தாள்.
“ஆமா, இரண்டாவது தடவையா உன் முன்னாடி மண்டியிடுறேன். முத தடவை என் காதல சொல்லறதுக்கு, இப்போ உன் வாயால நம்ம காதல கேக்கறதுக்கு..”
சில நிமிடங்கள் அந்த வினாடிகளை இரண்டு பேரும் நினைத்து பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
“நீ ஏன் செயின் போட்டு விட்ட மீரா”
“உன்கிட்ட வந்து பேச முடியலைல. வெளிய விட மாட்டேன்னு வீட்ல சொல்லிட்டாங்க. அதான் நான் உன் கூட இல்லைனாலும் என் செயின்…”, அவளுக்குப் புரிந்தது.
“அதான் மக்கு மீரா”
“சாரி அத்தான். ரெண்டு வாரமே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. எத்தன வருஷம் நீ தவிச்சுருக்க”