“இதை நீ வந்ததும் சொல்லியிருக்கலாமே? கிளம்பு முதல்ல…” என்று சத்தம் போட்டு அழைத்து வந்தான் அரவிந்த்.
வீட்டிற்குள் நுழையும் பொழுதே சோபாவில் அமர்ந்து காபியை குடித்துகொண்டு இருந்தான் விஷ்வா.
முதலில் அரவிந்த் செல்ல அவனின் பின்னே லாங் குர்தியில் மேடிட்ட வயிற்றுடன் நுழைந்தாள் வர்ஷினி.
அவன் காண தவித்த கோலம். அவள் காட்ட மறுத்த வதனம். இன்று இருவரும் தங்கள் நிலையில், உணர்ச்சியின் பிடியில் அப்படியே இருக்க,
“வாங்க…” என்றாள் வைஷூ அரவிந்தை.
அப்போது தான் விஷ்வாவும் அவனை கவனித்தான். அவனும் வா என்று அழைத்துவிட்டு வர்ஷினியை பார்க்க அவள் விஷ்வாவிடம் எதுவும் பேசவில்லை.
நகர்ந்து உள்ளே சென்றுவிட்டாள் அவள். துர்காவும், வைஷ்ணவியும் இதனை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
அவனிடம் நலம் விசாரித்து வேலைகளை பற்றி பேசிய அரவிந்த் தன்னுடைய புதிய கம்பெனி பற்றி கூறலானான்.
“எங்க ஆபீஸ்ல இருந்து எல்லாரும் ரெண்டு நாள் ட்ரிப் போனோம், அப்பாவும் வேலை விஷயமா வெளியூர் போய்ட்டு காலையில தான் வந்தோம். அம்மாவுக்கு முடியலைன்னு தான் ரூபா அங்க வந்திருந்தா….” என்றதும்,
“அதனால என்ன அரவிந்த்? நோ இஷ்யூஸ்…” என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க அவனுமிருந்து சாப்பிட்டு விட்டே கிளம்பினான்.
வர்ஷினி குளித்து உடை மாற்றி வரவும் அவர்களும் உண்டு முடிக்க விஷ்வா வர்ஷினி இடத்தில் பேச்சுக்கள் இல்லை.
“வைஷூ லக்கேஜ் எடுத்துட்டு வா…” என்று துர்கா சொல்ல,
“என்ன ம்மீ? எதுக்கு லக்கேஜ்?…” என்றான் விஷ்வா.
“அதான் நீ வந்துட்டியேப்பா. நாங்க ஊருக்கு கிளம்பறோம். வந்து எத்தனை மாசம் ஆச்சு?…”
“அது புரியுது, ஆனா லக்கேஜ் எதுக்குன்னு கேட்கறேன். அது இருக்கட்டும். நீங்க மட்டும் கிளம்புங்க வர்ஷி டெலிவரி ஆனதும் வரும் போது யூஸ் பண்ணிக்கோங்க. அப்பறம் அதுக்கொருக்க லக்கேஜை எடுத்துட்டு வரனும்…” என்றான் விஷ்வா.
மகனின் பதிலில் துர்கா ஆவென்று பார்க்க வர்ஷினி தலையில் கைவைத்துவிட, வைஷூவிற்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை.
“நல்லவேளை ம்மீ நீங்க அண்ணா போக சொல்ல முன்ன கிளம்பினது. இல்லன்னா வெளில போங்கன்னு சொல்லிருப்பாங்க…” என வைஷூ கிண்டல் பேச,
“அதான் தெரியுமே?…” என்றார் துர்கா.
இதை எதையும் பெரிதாய் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல அமர்ந்திருந்தவன்,
“எப்படி போறீங்க? கார் எடுத்துட்டு போங்க ம்மீ…” என சொல்ல வர்ஷினி பல்லை கடித்தாள்.
‘எப்படி இப்படி பேசறான்? கொஞ்சம் கூட யோசிக்காம, இவனை’ என்று கடுப்புடன் பார்த்தவள்,
“ம்மா, நீங்க இங்க இன்னும் கொஞ்சநாள் இருங்க. ப்ளீஸ். எனக்கு தனியா இருக்கற மாதிரி பீலாகும்…” என சொல்லவும் அவளை பார்த்து சிரித்தார் துர்கா.
“ம்மீ, அதெல்லாம் ஒரு ஊருக்கு சமம் உங்க மகன். நான் பார்த்துப்பேன்னு சொல்லுங்க அவக்கிட்ட…” என்றான் விஷ்வா.
“ம்மா, நீங்க என் கூட இருங்க. நீங்க போனா நானும் என் அம்மா வீட்டுக்கு கிளம்பறேன்….” வர்ஷினி முரண்டு பிடிக்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நானும் கூட போறேன்…” அலட்டிக்கொள்ளாமல் அவன் சொல்லிய பதிலில் அத்தனைபேருக்கும் எங்காவது முட்டிக்கொள்ளலாம் என்றிருந்தது.
“ஆனாலும் அண்ணா டோட்டல் பிளாட் போல?…” வைஷூ கிண்டல் செய்ய,
“பிளாட் ஆனவர் தான் அங்க போய் மாசக்கணக்கா பிளாட் போட்டு வித்திட்டிருந்தாராக்கும்? உன் அண்ணன்னா நீ என்ன வேணா பேசுவியா? நம்பாத….” என்று வர்ஷினி பதில் குடுக்க,
“உங்களுக்காக தானே போனாங்க என் அண்ணன். அண்ணாவை இப்படி சொல்ல உங்களுக்கு எப்படிண்ணி மனசு வருது?…” என்று சண்டை போல விளையாட்டாய் வைஷ்ணவி பேச,
“அட நிறுத்துங்க ரெண்டுபேரும். வைஷூ நீ லக்கேஜை எடுத்து கார்ல வை. நம்ம ட்ரைவர் இருக்கார்ல. அவரை காரை எடுத்துட்டு போய் உங்களை விட்டு வர சொல்லிட்டு திரும்ப காரை குடுத்துவிடுங்க. இப்ப எனக்கு கார் அவசியமில்லை…” என்றவன்,
“ஊர்ல இருந்து கார் அனுப்ப சொல்லி கிளம்பனும்னா நாளைக்கு தான் போக முடியும்…” என்றான்.
அவன் வெளிநாட்டு செல்லும் முன்னரே ஊரில் இருந்து கார் ட்ரைவரை வரவழைத்து இருந்தான். வீட்டினர் அவசரத்திற்கு என்று அவர் அங்கேயே தான் இருந்தார்.
விஷ்வா அவர்களை பேக்கப் செய்வதிலேயே குறியாய் இருக்க வைஷூ இன்னும் கிண்டலாய் வர்ஷினியை பார்த்தாள்.
“கொஞ்சம் இரு வரேன்…” என்றவன் உள்ளே இருந்து ஒரு தனி ட்ராலியை உருட்டிக்கொண்டு வந்தான்.
“இந்த ட்ராலில உங்களுக்கு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிருக்கேன். இதையும் கொண்டு போ. அங்க வச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு…” என்றான்.
“ம்மா நீங்க இவரை பெத்தீங்களா செஞ்சீங்களான்னு எப்பவுமே எனக்கு ஒரு டவுட் இருக்கும். கண்டிப்பா உங்களுக்கு கோவில் கட்டி தான் கும்பிடனும்…” வர்ஷினி முணுமுணுக்க,
“எனக்கே அதுதான் புரியலை. எங்க இருந்து இதெல்லாம் யோசிக்கிறான், பேசறான்னு. எந்த வீட்டுலையாச்சும் இப்படி நடக்குமா?…” என்ற துர்கா,
“அடுத்த வாரம் வர்ஷினிக்கு செக்கப் இருக்கு. மறக்காம கூட்டிட்டு போகனும்…” என்று மகனிடம் சொல்ல தலையசைத்தவன் பார்வை வர்ஷினியிடம் அழுத்தமாய் பதிந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் துர்காவும், வைஷ்ணவியும் தூத்துக்குடி கிளம்பிவிட்டார்கள்.
கதவை சாற்றிக்கொண்டு வர அவன் வந்த வேகத்தில் வர்ஷினி தங்கள் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டாள்.
அவளின் கோபத்தை புன்னகையுடன் பார்த்தபடி கதவை தட்டவோ, திறக்கவோ முயற்சிக்காமல் சோபாவில் சென்று அமர கால்மணி நேரத்தில் மீண்டும் கதவை திறந்தவள் கையிலிருந்து ஒவ்வொன்றாய் பறந்து வந்தது.
“மேல்மாடி இங்க வாடா. எவ்வளவு தான் தூக்கி எறிவ?…” என்றவனின் அழைப்பில் அத்தனை அழுகையுடன் வந்தவள் அவனின் மார்பில் அடைக்கலமாக வெடித்து அழுதாள்.
“ஹேய் அறிவே, என்ன இத்தனை அழுகை? அதான் வந்துட்டேன்ல? அழாத…” என்று தலையை வருடிக்கொண்டே இருக்க அத்தனை நாள் கோபமும் கண்ணீராய் கரைந்தது.
“உங்க கூட பேசவே மாட்டேன்…” என்றாள் நெஞ்சில் குத்தியபடி.
“ஓகே, நான் பேசறேனே?…”
“உங்கள சுத்தமா பிடிக்கலை…”
“எனக்கு பிடிச்சிருக்கு வர்ஷி. அது போதும் நாம வாழ…”
“போங்க திரும்ப ஆபீஸ் ஆபீஸ்ன்னு அங்கயே போங்க…” என்று அரற்ற,
“ஓகே, வா சேர்ந்தே போவோம்…” என்றான் அவளின் உச்சந்தலையில் தன் தாடையை பதித்தபடி.
எல்லாவற்றிற்கும் அவன் அசராமல் பதில் கொடுக்க இன்னுமே வர்ஷினி அவனை நாடினாள்.
அவனின் விரலில் விரல்கள் கோர்த்து வலிக்க நெறித்தாள். மோதிரமிட்ட விரல் வலியை தந்தாலும் அவள் எத்தனை மனஉளைச்சலில் இருந்திருப்பாள் என்று புரிந்தது.
“போதுமா? இந்த கை…” என்று காண்பிக்க அதை கவனியாதவள் அந்த மோதிர விரலை மட்டும் எடுத்து அழுத்தமாய் முத்தமிட்டு தன் முகத்தோடு ஒற்றை,
“நீ சொன்னியா வர்ஷி?…” என்று எதிர் கேள்வி எழுப்பினான்.
“நீயும் சொல்லலை. என்னை பிடிக்கும்ன்னு இதுவரைக்கும் சொன்னதில்லை. அதையே சொல்லலை. இதை மட்டும் சொல்லிடவா போற?…” என்றவன் அவளின் கன்னம் பற்றி நிமிர்த்தினான்.
“ஆனா சொல்லனும்னு இல்லை. உனக்கு என்னை எவ்வளோ பிடிக்கும்ன்னு நான் உணர்ந்தேனே? உனக்கு ஏன் தோணலை?…” என்ற கேள்வியில் பேச்சற்று பார்த்தாள் அவனை.