“இப்பதான் எல்லாம் கிளம்பினாங்க. நானும் மது அண்ணி, விஷ்ணு அண்ணாவும் மட்டும் இருக்கோம்…” என்று சொல்ல சற்று தள்ளி இளநீர் பருகியபடி காரில் சாய்ந்து நின்றிருந்தார்கள் அவர்கள் இருவரும்.
“ஓஹ்…” என்று அவர்களை எட்டி பார்த்தவன்,
“சரி வா. கோவிலுக்கு போகலாம்…” என்று உள்ளே செல்ல,
“ஹ்ம்ம், நான் அண்ணியை கூட்டிட்டு வரேன்….” என்று மதுவை அவள் அழைக்க செல்ல, கை பிடித்து நிறுத்தினான் குருஆர்யன்.
“அதான் அவங்க கும்பிட்டாச்சுல? அப்பறம் எதுக்கு? அங்கயே இருக்கட்டும்…” என்று மனைவியிடம் சொன்னதோடு நில்லாமல், மதுவையும் பார்த்து அங்கேயே இரு என்பதை போல கையை காண்பித்துவிட்டு நனியிதழை இழுத்துக்கொண்டு நடந்தான்.
“ப்ச், அதான் வரேன்ல. மெதுவா போங்க…” என்றதும் அவன் பிடியை லேசாய் தளர்த்தவும் தான் அவனுடன் நடந்தாள் நனியிதழ்.
“என்ன வேண்டிக்கிட்ட சாமிகிட்ட?…” என்று சந்நிதானத்தின் முன் வந்து நின்றதும் குருஆர்யன் கேட்க, அதற்குள் அவர்களுக்கு முன்னே சென்ற ஆனந்த் பூஜைக்கு தேவையானவற்றை கொண்டுவந்திருந்தான்.
“நான் வரேன்னு எப்படி தெரியும்?…” என்று கேட்க, அவள் ஆனந்தை பார்த்தாள்.
“பரத் ஸார் தான் மெசேஜ் பண்ணிருந்தார். எங்க இருக்கீங்கன்னு கேட்டு. அதான் நான் ரூட் சொன்னேன். அது மட்டும் தான் சொன்னேன்…” என ஆர்யா கேட்கும் முன்பே சொல்லி ஓட்டமெடுத்துவிட்டான் ஆனந்த்.
“இவனை…” என்று பல்லை கடித்தவன் முகம் கண்டு நனியிதழுக்கு அத்தனை சிரிப்பு.
“அவங்க சொல்ல போக தானே நான் இருக்க முடிஞ்சது? இல்லைன்னா கோவிலோட திரும்பியிருப்பீங்க நீங்க…” உச்சுக்கொட்டினாள்.
“அவ்வளோ பெருந்தன்மை…”
“அப்படின்னு நான் சொல்லலை…” என்று நனியிதழ் பதிலுக்கு பதில் பேச,
“போதும். சாமி கும்பிடு….” என்று சொல்லியவன் அமைதியாக இறைவனை பார்த்துவிட்டு நனியிதழையும் பார்க்க அவள் கண்மூடி கைகூப்பி நின்றிருந்தாள்.
எல்லாம் அவன் சரணம் என்பதை போல நிர்மலமான முகம். எவ்வித சஞ்சலங்களும் என்று எப்போதையும் போல அன்றலர்ந்த மலர் போல.
அருகில் தீபாராதனை வரவும் கவனத்தை அதன்பக்கம் திருப்பியவன் கற்பூரத்தை ஒற்றிக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டான்.
“முடிஞ்சதா? கிளம்பலாம்…” என்று அவன் நகர,
“பிரசாதம் வாங்க வேண்டாமா? இருங்க…” என்று இலையில் சர்க்கரை பொங்கலை வாங்கிக்கொண்டு ஆள் அரவமற்ற ஓரிடத்தில் அமர்ந்துவிட்டாள்.
“நான் கிளம்பனும்ன்னு சொன்னேன்…” குருஆர்யன் கைகளை கட்டியபடி அவள் முன் வந்து நிற்க,
“சாமி கும்பிட்டிருக்கோம். உடனே கிளம்பக்கூடாது…”
“நீ தான் ஏற்கனவே கும்பிட்டாச்சே? திரும்ப என்ன?…”
“அதான் திரும்பவும் கும்பிட வந்தேனே? அதனால தான் திரும்ப திரும்ப உக்கார்ந்துட்டு கிளம்பலாம்ன்னு சொல்றேன்…” என்று அவனுக்கு அலுக்காமல் பதில் சொல்ல அந்த தூணின் அருகிலிருந்த திண்ணையில் கால்களை தொங்கவிட்டு தானும் அமர்ந்துகொண்டான்.
வெளியே அப்படி வெயில் உரைக்க அடிக்க, கோவிலுக்குள் குளுமையாக இருந்தது.
மரங்களின் அசைவில் வெளிவரும் மெலிய காற்றோட்டத்துடன் அவ்விடமே தெய்வீக மணத்துடன் இருந்தது.
“நிஜமாவே எதுவும் வேண்டிக்கலையா நீ?…” என குருஆர்யன் மீண்டும் கேட்க,
“ம்ஹூம். எப்பவும் எதுவும் வேண்டிக்கமாட்டேன்…”
“ஆனா ரொம்ப தீவிரமா சாமி கும்பிட்ட மாதிரி இருந்துச்சே?…”
“ஆமா, எதுவும் கேட்கத்தான் அவ்வளோ தீவிரமா கும்பிடனுமா என்ன? இதுவரை தந்ததுக்கு நன்றி சொல்லலாம். இனி நம்மளை பார்த்துக்க போறதுக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு வந்த கஷ்டங்கள்ல இருந்து நாம கடந்து வர தைரியமா இருந்ததுக்கு, பாசிட்டிவ் அப்ரோச்சோட இருக்க வச்ச அந்த மாரல் சப்போர்ட்க்கு பெரிய நன்றி சொல்லலாமே?…” என்றாள் நீண்டதொரு விளக்கமாக.
“ஓஹ், இவ்வளோ இருக்கா?…”
“எதுவுமே நாம கேட்டு அவன் குடுக்க போறதில்லை. நமக்கு கிடைக்க போறதை யாரும் தடுக்கவும் போறதில்லை. இதுக்கு எதுக்கு கேட்டு கேட்டு கெஞ்சி நிக்க? எனக்கு கிடைச்ச எல்லாத்துக்கும் நன்றி. அவ்வளோ தான்…” என்று சொல்ல தலையை அசைத்துக்கொண்டவன்,
“வேலை இருக்குது தான். இருந்தாலும் ஒரு திங்கிங். பெரியவங்க பார்த்து நடத்தி வச்சது நம்ம கல்யாணம். என்னால இந்த சம்பிரதாயம் எல்லாம் உடைய வேண்டாம் பாரு. அதான் எல்லாரும் இருந்தா வரலாமேன்னு தான் வந்தேன்…” என்றவன்,
“இந்த பேரன்ட்ஸ்க்காக எவ்வளோ எல்லாம் சாக்ரிபைஸ் பண்ணவேண்டி இருக்கு இல்ல?…” என்றான் அவளிடம்.
“ஆமா, கண்டிப்பா. அவங்களுக்காக நாம வேற என்ன செஞ்சிட போறோம்?…” என்று அவன் வழியிலேயே அவள் செல்ல, அந்த பேச்சுக்களை அவன் விரும்பவில்லை.
அதற்குள் மது அவனின் எண்ணிற்கு அழைக்க முதலிரண்டுமுறை அழைப்பை துண்டித்தான்.
“இவ வேற…” என்றபடி.
“மது அண்ணியா?…” என்றவள் கூற, அவன் தலையசைக்கவும்,
“எனக்கும் கூப்பிடறாங்க…” என்றாள்.
“இங்க தா…” என்று அவளின் அலைபேசியை வாங்கியவன் ‘எங்கே உள்ளே வந்துவிடுவாளோ?’ என்று எடுத்தான்.
“என்னக்கா? உனக்கு வேற வேலை இருந்தா, மாமா பிஸின்னா நீ கிளம்பு. நாங்க வரோம்…” என வேகமாய் சொல்ல,
“எதுக்கு? நீ பாதில அவளை வேலை இருக்குன்னு தனியா அனுப்பவா?…” என்றாள் மதுஸ்ரீ நக்கலுடன்.
“நேத்து தான் கல்யாணமாகி இருக்கு. இன்னைக்கு என்ன பேசற நீ?…” குருஆர்யன் அத்தனை கோபமாய் பேசினான்.
“உண்மையை சொன்னேன் தம்பி. இன்னைக்கு காலையில மட்டும் உனக்கு கல்யாணமாகி நாப்பது வருஷமா ஆகிடுச்சு. இப்ப நீ என்ன பேசற?…” என்றாள் மது.
“அடடா இதென்ன போன்ல சண்டை. என்கிட்ட குடு…” என்று விஷ்ணு வாங்கி,
“என்ன ஆரி?…” என்றான் அவனிடம்.
“கிளம்புங்கன்னு சொன்னேன் மாமா. நாங்க ரெண்டுபேரும் வரோம். அப்பறம் அவகிட்ட சொல்லிவைங்க. அப்பறமா நான் பேசிக்கறேன்…” என்றும் சேர்த்து சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
“வேலை இருக்கே உங்களுக்கு? நான் அண்ணி கூட கிளம்பறேன்…” நனியிதழும் அவன் பொறுமையை சோதிக்க,
“அந்த வேலை எல்லாம் எனக்கு தெரியும். வா என் கூட. உன்னை வேற எங்கயும் தூக்கிட்டு போயிட போறதில்லை. வீட்டுக்கு தான் போறோம்…” என்றவன் அவள் கையில் மடித்து வைத்திருந்த பொங்கலை பார்த்தான்.
“போலாம்…” என்று திண்ணையிலிருந்து நனியிதழ் இறங்கிக்கொள்ள அவனின் அந்தநேர கோபம் கூட பாதிக்காத ஒரு முகபாவனை அவளிடத்தில்.
‘ப்ச், அடக்கி வாசிடா ஆரி’ என தன்னை தானே மானசீகமாய் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதானது.
கொஞ்சமும் புன்னகை வாடவில்லை. ஆனால் அந்த விழிகளில் வந்துபோன மின்னல் நொடி உணர்வில் இவன் சிக்குண்டுவிட்டான்.
“உங்களுக்கு கிளம்ப மனசில்லையோ?…” என்று நனியிதழ் சிரிக்க,
“ப்ச், கொஞ்சம் டென்ஷனாகிருச்சு…” என்றான் அடங்கிவிட்ட குரலில் குருஆர்யன்.
நனியிதழுக்கு ஆச்சர்யம் தான். அவள் தெரிந்தவரை குருஆர்யனின் கோபமும் அவனுக்கான அடையாளமே.
“மனுஷன்னா டென்ஷன் ஆகாமலா?…” என்று சிரிப்புடன் சொல்லி முன்னே நடக்க,
“ஹ்ம்ம், உன்னோட டென்ஷன் கூட பார்த்திருக்கேனே? பட் முகத்துல காமிக்கிறதில்லை….” என பேசிக்கொண்டே கோவிலின் வாசலுக்கு வர மதுவும் விஷ்ணுவும் ஆனந்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.
“வா…” என்று அங்கே சென்றவன் மதுவை முறைத்துவிட்டு,
“கிளம்பலையா இன்னும்?…” என்றான்.
“என் புருஷன் நான் வராம கிளம்பமாட்டார்…” மது வீம்புக்கு பதில் கொடுக்க,